1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தது மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கி இருந்தனர். அப்போது தேசிய கட்சி, பெரிய கட்சி எல்லாம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியை தவிர மக்களுக்கு வேறு எந்தக் கட்சியையும் தெரியாது. இளைஞர்கள், படித்தவர்கள் மத்தியில் பேசும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. காங்கிரஸ் கட்சி ஜமீன்தார்கள், பண்ணையார்கள், மிராசுதாரர்களின் கட்சியாக இருந்தது. கம்யூனிஸ்டு ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், கட்சியாக செயல்பட்டது. இதற்கிடையில் திராவிடர் கழகம் ஒருபக்கம் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த இயக்கமாக செயல்பட்டது.
இப்போது அங்கே தான் விரிசல் தொடங்கிவிட்டது ஆமாம் ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை “துக்க நாளாக” அறிவித்தார் பெரியார். இதை அவர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளரிடம் கூட ஆலோசிக்காமல் அறிவித்தது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பொதுச்செயலாளர் அண்ணா பெரும் வேதனை அடைந்தார் மற்ற தலைவர்களுடன் ஆலோசித்தார் அண்ணா. முடிவில் சுதந்திர தினம் “துக்க நாள் அல்ல இன்ப நாள்” என அறிக்கை விடுத்தார் அண்ணா.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. அண்ணா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் பெரியாரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள் “என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் என் கருத்துக்களை அஞ்சாமல் கூறுவேன்” என்று முழங்கினார் அண்ணா.
இனி அண்ணாவும், பெரியாரும் இணைய வாய்ப்பு இல்லை எதிரிகள் பெருமூச்சு விட்டனர். அது நீடிக்கவில்லை 1948 முதலமைச்சர் ஓமந்தூரார் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் இனி உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி பாடம் இடம்பெறும் கல்வி அமைச்சராக இருந்தவர் அவிநாசிலிங்கம் செட்டியார். பொறுக்குமா திராவிடர் கழகம் பொங்கி எழுந்தது ஈரோட்டில் பெரியாரும் அண்ணாவும் ஒரே மேடையில்.
ஈரோட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஊர்வலம் அலங்கார வண்டியில் அண்ணாவை அமரவைத்து நடந்தே வந்தார் பெரியார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாநாட்டில் அறிவித்தார் பெரியார் அண்ணா தலைமை தாங்குவார் என்று. போராட்டம் நடத்த தடை விதித்தது ஓமந்தூரார் அரசு தடையை மீறி நடத்தப்பட்டது போராட்டம். அந்த போராட்டம் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் ராஜிநாமாவில் வந்து முடிந்தது இந்தித்திணிப்பு கைவிடப்பட்டது.
அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரால் அண்ணா பெரியார் இணைந்தனர். “திராவிடர் கழகத்தின் பெட்டி சாவியை அண்ணாவிடம் ஒப்படைப்பேன்” என்றார் பெரியார் “சாவி என்னிடமே இருந்தாலும் அவரிடம் தான் இருக்கும்” என்றார் அண்ணா. தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி அதுவும் கொஞ்ச நாள் தான்.
பெரியார்- மணியம்மை திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஈவிகே சம்பத் (பெரியாரின் அண்ணன் மகன்) விடுதலை பத்திரிகையின் அலுவலக பொறுப்பை கவனித்து வந்தார் திருமணத்திற்கு தனது எதிர்ப்பினை காட்டும் விதமாக திராவிடர் கழகத்தை விட்டு விலகினார். குத்தூசி குருசாமி, அரங்கண்ணல் என படிப்படியாக பலர் திராவிடர் கழகத்தை விட்டு விலகினர் திருமணம் வேண்டாம் நல்லெண்ண குழு அமைக்கப்பட்டு ஏற்காட்டில் தங்கியிருந்த பெரியாரை சந்தித்து பேசியது. பெரியார் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார்.
9.7 1949 திராவிடர் கழக பிரமுகர் சிபி நாயகத்தின் இல்லத்தில் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தேறியது. அப்போது பெரியாருக்கு வயது 70 மணியம்மைக்கு வயது 30. இனி வெளியேறுவது தான் ஒரே வழி அண்ணா முடிவெடுத்தார் திராவிடர் கழகத்தைக் கைப்பற்றுங்கள், கழகத்தின் நிர்வாக குழுவை கூட்டுங்கள், திராவிடர் கழகத்தின் தலைவராக அண்ணாவை கொண்டு வாருங்கள், அறிவித்தவர் யாரும் இல்லை “புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்”.
கழகத்தை விட்டு வெளியேறுவது என அண்ணா முடிவெடுத்துவிட்டார். தனி வழி காண்போம் அண்ணாவின் இந்த அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு கண்ணீர் துளிகளுடன் வெளியேறுவதாக அண்ணா அறிவித்தார். பின்னர் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியே திமுகவை “கண்ணீர் துளிகள் கட்சி” என்று விமர்சித்தார் பெரியார்.
செப்டம்பர் 17 1949 சென்னை பவழக்கார தெரு, ஏழாம் எண்ணில் உள்ள ஒரு வீட்டில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறியவர்கள் அண்ணா தலைமையில் புதிய அமைப்பு ஒன்றை தொடங்குவது பெயர் “திராவிட முன்னேற்றக் கழகம்” என தீர்மானிக்கப்பட்டது. கொடியின் நிறம் மேலே கருப்பும் சிவப்பும் என முடிவானது. கொள்கை வடிவம் திராவிடர் கழகத்திற்கும் திமுகவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை திராவிடநாடு, தமிழ், சுயமரியாதை, பகுத்தறிவு என சமமான கொள்கைகளே திகவுக்கும் திமுகவுக்கும். இனி இரண்டு இயக்கங்களும் இரட்டை குழல் துப்பாக்கி ஆக செயல்படும் என அண்ணா அறிவித்தார்.
கட்சி, கொடி, கொள்கை உருவானது. அண்ணா, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், மதியழகன், அன்பழகன்,என்.வி. நடராஜன், மு கருணாநிதி உள்ளிட்ட 110 பேர் கொண்ட பொதுக் குழு அமைக்கப்பட்டது.
திமுகவின் தொடக்க விழா அன்று மாலையே சென்னை ராபின்சன் பூங்கா மைதானத்தில் நடந்தது அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், கருணாநிதி மேடையில் அமர்ந்திருந்தனர் கூட்டத்திற்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
அண்ணா பேசினார் திராவிட முன்னேற்றக் கழகம் திராவிடர் கழகத்திற்கு போட்டி இயக்கமல்ல திராவிடர் கழகத்தின் கொள்கை அடிப்படையிலேயே தோற்றுவிக்கப்பட்டது. அன்றும், இன்றும், என்றும் பெரியார் தான் என் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவர் பதவி கிடையாது பொதுச் செயலாளர் பதவி தான். தலைவர் பதவி என்றைக்கும் பெரியாருக்காக காலியாக இருக்கும் என்றார் அண்ணா.
சென்னை மாகான அரசியலுக்கு திமுக புதுவரவு. ஏற்கனவே இருந்த காங்கிரசுக்கு தலைவலி, புதிதாக உருவெடுத்த கம்யூனிஸ்டுகளுக்கு நெருக்கடி, சுதந்திர இந்தியாவின் மீதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் அதன் கொள்கைகள் மீதும் விருப்பமில்லாத கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஆயுதப் போராட்டம் மூலம் நேருவின் ஆட்சியை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைத்திருந்தது கம்யூனிஸ்டு கட்சி. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரச்சனை பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். கல்யாணசுந்தரம், ஜீவானந்தம், ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து கட்சியை வழி நடத்தினர்.
தமிழக கம்யூனிஸ்டுகள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர் தோழர் ஜீவானந்தம். இளம்வயதில் காந்தியின் கொள்கை மீது ஆர்வம் காரணமாக காங்கிரஸ் கட்சியின் மீது ஈடுபாடு .1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர் சிறையில் இருந்து கம்யூனிஸ்டாக வெளியே வந்தவர் எளிமையாக வாழ்ந்தவர் ஜீவா.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படத் துவங்கியது கம்யூனிஸ்ட் கட்சி. 1948ல் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தார் நேரு.கட்சி தடை செய்யப்பட்ட பிறகு இலங்கைக்கு சென்று அங்கிருந்து செயல்பட்டார் ஜீவா. சமதர்மம், அறிவு, ஜனசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்து சிவப்பு சிந்தனைகளை விதைத்தார் இளைஞர்களிடம் ஜீவா.
இந்த நிலையில் திமுக தமிழகத்தில் தோன்றியது கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கலகலக்க செய்தது அண்ணாவின் பேச்சில் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் பலர் திமுகவில் அங்கம் வகிக்க தொடங்கினர். 1950 ஜனவரி 26 இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள் மக்கள் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளே மக்களை ஆளும் அமைப்பு. ஆம் இந்தியா குடியரசு ஆனது. காங்கிரஸார் குடியரசு நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கம்யூனிஸ்டுகளும் இதே நிலைப்பாட்டில் இருந்தனர் ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது தென்னகத்தை அடிமைப்படுத்தும் நாளே குடியரசு நாள் ஜனவரி 26 ஆகவே அது துக்கநாள் என்றார் பெரியார்.
திமுகவுக்கு இங்குதான் சிக்கல் ஆகஸ்ட் 15 இன்பநாள் என சொன்ன அண்ணா ஜனவரி 26 ஐ சொல்லமுடியவில்லை. இந்தியாவுக்கு என்று புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாகிவிட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை திமுக முன்வைத்த நிலையில் குடியரசு நாள் ஏற்க முடியாத நாள் ஆகிப்போனது திமுகவிற்கு. திராவிட நாட்டின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் இந்த நாளை “அதிர்ப்திக்குறியநாள்” என்று அறிவித்தார் அண்ணா.
திமுக வளருமா என்று சந்தேகப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் காங்கிரஸ்காரர்கள். எதிர்காலத்தில் திமுக எதிர்ப்பு சக்தியாக வரும் என காங்கிரஸ் நினைக்கவில்லை.
அண்ணாவின் பேச்சும் எழுத்தும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தன தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் மேடைக்கு மேடை இலக்கணம் வகுத்தவர் என புகழ்பெற்றார் அண்ணா.
1952 தேர்தல் அறிவிப்பு வெளியானது இந்தியாவின் குடியரசு விற்கு பிறகான முதல் தேர்தல். சட்ட மன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும். காங்கிரஸ் கட்சி தயாராக இருந்தது தமிழகத்தில். அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி தயாராகிக்கொண்டிருந்தது. அந்த காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் அரிசிப் பஞ்சம் இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. மக்களை சந்திப்பதற்கு.ஒரு குடும்பத்திற்கு ஆறு அவுன்ஸ் அரிசி மட்டுமே வழங்கப்படும் என்று குமாரசாமி ராஜா அரசு அறிவித்தது. காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி வீசத்தொடங்கியது. இந்தப் பிரச்சனை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சாதகமானது தேர்தலை சந்திக்க. இருபத்தி ஒரு வயதான ஆண் பெண் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகத்தில் சில பகுதிகள் மற்றும் மலபார் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம். இந்த தேர்தல்தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு முதல் தேர்தல்.
தேர்தலில் போட்டியிடுவதற்கும் பணம் செலவு செய்வதற்கும் காங்கிரஸ் தயாராக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை மட்டுமே பலம் போதாத குறைக்கு பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆட்சி அதிகாரத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக அமர்ந்து காங்கிரசை ஆட்டிப் படைக்கலாம் என்ற எண்ணம் உண்டு. பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சம்மதித்தார் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிக்க வேண்டும் என்று பெரியார் எண்ணினார்.
இன்னும் சில கட்சிகள் பகுதிக்கு தகுந்தார்போல் விழுப்புரம் ,கடலூர், சிதம்பரம் இந்த பகுதிகளில் வன்னியர் ஆதிக்கம் உள்ள பகுதிகள் அவர்கள் தங்களுக்கென சில பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நினைத்தனர் அதன் தலைவர்கள் ராமசாமி படையாட்சி, ஏ கோவிந்தசாமி, போன்றவர்கள் “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி” என பெயரிட்டு கட்சியை தொடங்கினார். வட ஆற்காடு மாவட்ட வன்னியர்கள் “காமன்வீல்” என்ற கட்சியை உருவாக்கி செயல்படத் தொடங்கினர். தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முத்துராமலிங்கத்தேவர் “பார்வர்ட் பிளாக் “கட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்க தயாரானார்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கொஞ்சம் சறுக்கல் தான் எதிர்க்கட்சிகளால். எல்லோருடைய எதிர்பார்ப்பும் இந்தத் தேர்தலில் திமுக என்ன செய்யப்போகிறது என்பதுதான் இருந்தது திமுக தொடங்கப்பட்டு முதல் தேர்தல் நீண்ட யோசனைக்குப் பிறகு திமுகவை முடிவை அறிவித்தது. இந்தத் தேர்தலில் திமுக போட்டியிட போவதில்லை. அப்போ யாருக்கு வாக்களிப்பது காங்கிரஸ் அல்லாத கட்சி என்று அறிவித்தார் அண்ணா அண்ணாவின் அறிவிப்பு கம்யூனிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்தது
தமிழ்நாடு ஆந்திரா ஆகியவை அடங்கிய சென்னை மாகாணத்தில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் அதற்கு பலமான எதிர்க்கட்சியாக விளங்கியது கம்யூனிஸ்ட் கட்சிதான் அதன் தலைமையில் ஐக்கிய முன்னணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள. சில நிபந்தனைகளோடு திமுக ஐக்கிய முன்னணியை ஆதரித்தது. ஆனால் திமுக சில நிபந்தனைகளை விதித்தது திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன், சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ உறுப்பினர்கள் திமுக கொள்கைக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் இதுதான் நிபந்தனை. கம்யூனிஸ்ட் பின்வாங்கியது விழுப்புரம் ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி ஆகியன திமுக நிபந்தனைப் பத்திரத்தில் கையெழுத்திட்டது.
நிபந்தனைக்கு ஒத்துவராத போதும் திமுக சில இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தது.
தேர்தல் என்றால் இப்போது இருப்பது போல மின்னணு வாக்குப் பெட்டியோ, இதற்கு முன் இருந்த வாக்குச்சீட்டு முறையை அப்போது இல்லை எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் அத்தனை ஓட்டுப் பெட்டிகள் மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். வேட்பாளர்களின் சின்னங்கள் அந்தந்த பெட்டிகளில் ஒட்டியிருக்கும் ஓட்டுச் சீட்டுகளை அந்த சின்னம் ஒட்டப்பட்ட பெட்டியில் போட வேண்டும் அதன் பின்னர்தான் சின்னங்கள் பொறித்த ஓட்டு சீட்டு முறை நடைமுறைக்கு வந்தது.
பாராளுமன்றத்திற்கும் சட்ட மன்றத்திற்கும் நடந்த தேர்தல் அது தமிழக சட்டமன்றத்திற்கு மொத்தம் 375 தொகுதிகள். இந்த தேர்தலில் இரட்டை உறுப்பினர் ,அதாவது இரட்டை வாக்குரிமை இரட்டை உறுப்பினர் என்றால் தற்போது தனி தொகுதி என்று இருக்கிறது அல்லவா அதே தொகுதியில் ஒரு பொது வேட்பாளரும் நிறுத்தப்படுவார் அந்த தொகுதியில் உள்ள தலித் வாக்காளர்கள் இரண்டு வாக்களிப்பார்கள். மற்றவர்கள் பொது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை போல நிறுத்தப்பட்டிருக்கும் அந்த வேட்பாளருக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள் 1961ஆம் ஆண்டு இந்த இரட்டை வாக்குரிமை முறை நீக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானது இந்த முறை காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டி கிடைக்கவில்லை 152 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் காமன்வீல் கட்சி 6 இடங்களிலும் மக்கள் கட்சி 35 இடங்களிலும் சோஷலிஸ்டுகள் 13 இடங்களிலும் பிற கட்சிகள் என 62 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா, பி ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, எம் கல்யாண சுந்தரம் போன்றோர் வெற்றி பெற்றிருந்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அருப்புகோட்டை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பின்னர் ராஜினாமா செய்தார்.
இந்த தேர்தலில் தான் திருக்குறள் முனுசாமி போட்டியிட்டார். திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதி தற்போதைய விழுப்புரம் மாவட்டம். காங்கிரஸ் கட்சி வன்னியர்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் தரவில்லை என முடிவு செய்த நேரத்தில் ராமசாமி படையாட்சியார் தோற்றுவித்த தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வேட்பாளராக திருக்குறள் முனுசாமி போட்டியிட்டார்.
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ராமசாமி படையாட்சியார் தலைவராகவும் ஏ கோவிந்தசாமி செயலாளராகவும் செயல்பட்டனர். 1952 முதல் தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி நாடாளுமன்றம் சட்டமன்றம் இரண்டு தேர்தலில் போட்டியிட்டது ராமசாமி படையாட்சி கோவிந்தசாமி போன்றோர் சட்டமன்றத் இருக்கும் திருக்குறள் முனுசாமி நாடாளுமன்றத்திற்கும் போட்டியிட்டனர் வெற்றியும் பெற்றனர் அண்ணாவிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு தேர்தலை சந்தித்தால் இவர்களுக்கு திமுக ஆதரவு கிடைத்தது வெற்றிக்கும் அதுவே காரணமானது.
இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த ராமசாமி படையாட்சியார் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர் அதனால் ராமசாமி படையாட்சியாருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆனால் ஏ.கோவிந்தசாமி திமுகவிற்கு விசுவாசமாக செயல்பட்டார் இன்னும் சொல்லப்போனால் சட்டமன்றத்தில் அவர் திமுக-வின் குரலாகவே ஒலித்தார்.
இப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் திருக்குறள் முனுசாமி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யாருமில்லை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதலாளி ராம்நாத் கோயங்கா. ஹெலிகாப்டரில் ஓட்டு கேட்டு நோட்டீஸ் போட்டுள்ளார். திருக்குறள் முனுசாமி சைக்கிள் ரிக்ஷாவில் சென்று ஓட்டு கேட்டுள்ளார் தேர்தல் முடிவுகள் வெளியான திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதியில் திருக்குறள் முனுசாமி வெற்றி பெற்றிருந்தார் அதுவும் சாதாரண வெற்றியல்ல கோயங்காவை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி அது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.