முந்தைய பகுதியில் போதையின் பத்துப் படிகளில் ஆரம்ப நிலைகளைப் பார்த்தோம். இந்தவாரம் அடுத்த ஐந்து.
ஆட்டக்காரர்
இணைய மேடையேறி அரிதாரம் பூசி ஆட்டம்போட்டு பங்குகொள்வதுதான் இந்தப் படிநிலைகளில் முக்கியமான கட்டம். 100% அடிமையாவதன் முதல் படி அதுதான். நாம் வேடிக்கை பார்க்கும் வரை கொஞ்சமாவது நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிற சமூகவலைதளங்கள், கேமிங் தளங்கள், வாட்ஸ் அப் முதலான குழு மெசேஞ்சர்கள் வரை எல்லாம் நாம் பங்கேற்பாளராக மாறும்போது எதையாவது பகிர்ந்துகொள்ள முற்படும்போது முழுமையாக நம்மை ஆட்கொள்கின்றன.
இதற்கான தூண்டில்கள் மூன்று. முதலாவது நம் கண் எதிரே உருவாகி வரும் சமூகவலைதள வெற்றியாளர்கள். அடுத்து எண்கள். அந்த எண்களால் நாமாகவே மனதில் உருவாக்கிக்கொள்கிற பிரமாண்ட அங்கீகாரம். (அதிக லைக்ஸ் வாங்குகிறவர் புகழ்பெற்றவர் உயர்ந்தவர் என்கிற மனநிலை!)
யூடியூப் மூலம் பிரபலமாகி பல லட்சம் சம்பாதித்து சினிமாவில் நடித்த சிலர் உண்டு. ஃபேஸ்புக் மூலம் பிரபலமாகி டிவியில் தோன்றியவர்கள். டிக்டாக் மூலம் பிரபலமாகி பள்ளிகளில் கொடியேற்றி மிட்டாய் கொடுத்தவர்கள் எனச் சமூகவலைத்தளங்களால் உயர்ந்தோர் பட்டியல் மிகப் பெரியது. ஆனால் இப்படி பிரபலமானவர்கள் எல்லாம் நம்மைப்போலவே சாதாரண பொதுஜனங்கள் என்கிற ஒரு எண்ணம் எப்போதும் நமக்கு உண்டு. மதன்கௌரி என்கிற ஒருவர் நமக்குத் தெரிந்த அதே தகவல்களைதான் யூடியூபில் சொல்கிறார். அவரே இவ்ளோ பிரபலமாக இருக்கும்போது அவரைவிட அதிகம் தெரிந்த நம்மால் ஆகமுடியாதா என்கிற எண்ணம் ஓர் உதாரணம்!
இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென்றால், இப்படி பிரபலமானவர்கள் சமூகவலைத்தளங்களுக்கு வருவதற்கு முன்பே பாட்டுப் பாடக் கற்றுக்கொண்டவர்களாக இருக்கலாம், மேடை நிகழ்ச்சி செய்தவராக இருக்கலாம், பத்திரிகைகளில் எழுதியவராக இருக்கலாம், போட்டோகிராபியைக் கரைத்துக் குடித்தவராக இருக்கலாம். ஆனால் நமக்கு தெரிவதெல்லாம் எதுவுமே தெரியாத ஒரு அமெச்சூர் திடீரென சோஸியல் மீடியாவில் பிரபலமாகிவிட்டார் என்பதுதான்!
அதனாலேயே ‘அவனால முடியுது நம்மால முடியாதா’ என்கிற எண்ணமும் நம்மிடம் அதிகரிக்கத்தொடங்குகிறது. எவ்வளவு நாளைக்குதான் வாழ்க வாழ்க என லைக்கு போட்டு தொண்டரடிபொடியாய் வாழ்வது. நமக்கும் நாலு லைக் வரவேண்டாமா…
இணையத்தின் பலமே இங்கு கட்டற்ற சுதந்திரம் கொண்டு இணையத்தில் யாராலும் பங்குகொள்ள முடியும் என்பதுதான். யாரும் ஸ்மூலில் கச்சேரி பண்ணலாம். யூடியூபில் சமையல் வீடியோபோடலாம். நாமும் ஒரே இரவில் மனுஷ்யபுத்திரனாக மாறி நாலு கவிதைகளை எழுதி அவரோடு போட்டிபோடலாம். புகைப்படங்களில் ஆர்வமுள்ள ஒருவர் ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை வாங்கிக்கொண்டு விச்சுக்ளிஸ் எனப் பக்கம் தொடங்கிவிடலாம். இதில் தவறொன்றும் இல்லை. எல்லோரும் இணையநாட்டு மன்னர்களே.
ஆனால் இப்படி யார் யாரோ டேலன்டே இல்லாத பசங்கள்லாம் ஃபேமஸ் ஆகுறாங்க எனக்கென்ன குறைச்சல் என்கிற நம்பிக்கை பிறக்க… ஒரு நாயகன் உருவாகும்போதுதான் ஆபத்தும் உருவாகிறது. சூதாட்ட மனநிலையும் பிறக்கிறது.
தோல்விகளும் வெற்றிகளும்
சூதாடுகிற எல்லாருமே வெற்றிபெறுவதில்லை. சூதாட்ட விடுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் பெரிய வெற்றியாளனாக வெளியே வருவது அந்த விடுதிகளை நடத்துகிற முதலாளி மட்டும்தான். அப்படித்தான் இணையமும். இங்கே சூதாட்ட விடுதிகளை நடத்துகிற மார்க் சக்கர்பெர்க்கும் ஜெப் பெஜாஸும்தான் பெரிய வெற்றியாளர்கள். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக நேரம் இணையத்தில் பலியாய்க் கிடக்கிறோமோ அவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் இந்த முதலாளிகள். இங்கே எல்லாமே இலவச சேவை என்பதாக அறியப்பட்டாலும் அதற்காக நாம் தருகிற விலை நம்முடைய பொன்னான நேரம்தான்!
இணையத்தில் எல்லாமே எண்கள்தான். ஆமாம் வெறும் எண்கள்தான். இங்கே வெற்றி தோல்விகள் எண்களால் அறியப்படும். அதிகமான வ்யூஸ், அதிகமான லைக்ஸ், அதிகமான ஷேர்ஸ், அதிகமான அதிகமான எல்லாமே இங்கே வெற்றிதான். வேடிக்கை பார்ப்பவராக இருக்கும்வரை இந்த எண்கள் நம்மைத் தொந்தரவு செய்வதில்லை.
ஆனால் கோதாவில் இறங்கி மல்லுக்கட்ட தொடங்கும் நாளில் இருந்து படைப்புகளுக்குப் பதிலாக அதிகமும் இந்த எண்களுக்கு ஏங்கத்தொடங்குகிறோம். நமக்கு விழும் முதல் லைக்குகள் நம்மை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன. பத்து ரீட்விட் வந்தால் மகிழ்ச்சி அதிகமாகிறது. ஆயிரம் சப்ஸ்க்ரைபர்களுக்கு ஆனந்தம் பிறக்கிறது. ஆத்தா நான் பாஸாயிட்டேன் என உரக்கச் சொல்கிறோம்!
காதலியின் முதல் முத்தம் எந்த அளவுக்கு நம் உடலில் ஹார்மோன் புயலை உண்டாக்குமோ அதே அளவு சூறாவளியைச் சில லைக்குகளும் கமென்டுகளும் ஷேர்களும் தருகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை கூடக் கூட இதயதுடிப்புகள் எகிறும். வானத்தில் பறப்பது போலவே இருக்கும். எல்லாமே எண்கள்தான். அதே சமயம் எதிர்பார்த்த எண்களை எட்டமுடியாமல் போனால் அல்லது எண்களே இல்லாமல் போகும்போது ஏமாற்றமடைகிறோம். வெறுப்போடு இருக்கிறோம். ஹார்மோன் ஊற்றுக்காக ஏங்குகிறோம். நோடிஃபிகேஷனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். எப்படி அதிக பார்வையாளர்களைப் பெறுவது, அதிக லைக்குகளைப் பெறுவது, கமென்ட்களைப் பெறுவது என்பதையெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.
வெற்றிபெறுகிற விஷயத்தை மேலும் மேலும் இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பதில் நம் கவனம் குவிகிறது. அன்றாட வாழ்வில் இந்த லைக்ஸுக்காக எதையும் செய்ய ஆரம்பிக்கிறோம். தண்டவாளத்தில் தலைவைத்து வீடியோ போடுகிறவனின் மனநிலையும், செல்ஃபி எடுக்க முயற்சி செய்து பாதாளத்தில் விழுந்து சாகிறவனின் மனநிலையும் அதுதான். கவன ஈர்ப்பு… எதையாவது செய்து எப்படியாவது பத்து லைக்குகளைக் கூட்ட வேண்டும். எல்லோரும் தன்னைக் கவனிக்க வேண்டும் என்கிற எண்ணம் வெறியாக உள்ளுக்குள் மாறத்தொடங்குகிறது.
நேர்மையான வழியில் எழுதியோ படம் போட்டோ லைக் வாங்க முடியாது என ஒருவன் நினைத்தால் ஏதோ ஒருபடத்தைப் போட்டு ‘’இந்த ராணுவ வீரனுக்கு எத்தனை லைக்ஸ் பிரண்ட்ஸ்’’ எனப் போட்டு லைக்ஸ் வெறியைத் தீர்த்துக்கொள்கிறான். ஆபாசப்படங்கள் பகிரப்படுகின்றன. மோசமான வசவுகள் உருவாகின்றன.
இந்த எண்களின் ஆட்டம் சிக்கலான ஒன்று. இணையத்தில் இந்த எண்களுக்குத் தீர்மானமான ஒரு இலக்கு கிடையாது. புதிதாக ஆடத்தொடங்குபவர் முதலில் இந்த எண்கள் விஷயத்தில் ஓர் இலக்கு வைத்து ஆடத்தொடங்குகிறார். 500 லைக்கு வந்தா போதும்ங்க… என்று ஆரம்பிக்கிற ஆட்டம்… 1000 வந்தா போதும்… 1500 வந்தா போதும் என புதிய இலக்குகளை எட்டியதும் அடுத்த இலக்குக்குத் தவிக்க ஆரம்பிக்கிறது. அதையும் எட்டியபிறகு அடுத்தடுத்த நிலைகளுக்குத் தாவுகிறோம். ஆனால் எந்த வெற்றியும் திருப்தியை அளிப்பதில்லை. அது திருப்தியை அளிக்காத வகையில்தான் உருவாக்கப்படுகின்றன.
சூதாட்டத்தில் வெல்லுகிற ஒருவனுடைய மனநிலை அல்லவா இது. ஆமாம் சமூகவலைத்தளங்கள் நம்மைச் சூதாடிகளாகத்தான் மாற்றுகின்றன. வெற்றிபெற்றால் மேலும் மேலும் வெற்றிக்காக ஏங்குகிறோம். தோல்வியடைந்தால் விட்டதைப் பிடிக்க மேலும் மேலும் நம் நேரத்தைப் பணயமாக வைக்கத்தொடங்குகிறோம். இவ்வகையில்தான் நாம் முழுமையான அடிமைகளாக மாறுகிறோம். வென்றாலும் அடிமைதான். தோற்றாலும் அடிமைதான்.
தோல்வியாளர்
எது தோற்றாலும் அடிமைதானா… இணையத்தில் வெற்றிபெறுகிறவர்கள் மட்டும்தான் அடிமை ஆகிறார்களா… அப்படிதான் அடிமைகள் ஆவார்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அடிமைகள்தானே உலகிலேயே இருக்க முடியும். ஆனால் நிலைமை அப்படி இல்லையே கோடிக்கணக்கில் அல்லவா அடிமைகள் இருக்கிறார்கள் எப்படி?
ஆரம்பத்தில் பங்கேற்பாளராக இருக்கிறவர்கள் முதலில் வெற்றிக்காக வேலை பார்க்க தொடங்குகிறார்கள். பிறகு அந்தப்போராட்டமே அவர்களை முழுமையான அடிமையாக மாற்றிவிடுகிறது. வெற்றியாளர்கள் ஆகிறார்களோ இல்லையோ அடிமையாகிவிடுகிறார்கள்.
இதனால் பெரும்பான்மையானவர்களுக்குத் தோல்வியாளர் என்கிற நிலையே இறுதி நிலையாக மாறுகிறது. அப்படி தோல்வியாளர் நிலையில் இருக்கிறவர்கள் இரண்டு விதமாக மாறுகிறார்கள். இந்தப்பழம் புளிக்கும் என்கிற நிலை மனதில் வந்துவிடுகிறது. இந்த நபர் இணையத்தில் ஒருவிதமான விலகலோடு சுற்றிக்கொண்டிருக்கிறார். Abusive மற்றும் வெறுப்பு மனநிலை அதிமாகிறது. அனைத்தையும் திட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் இணையத்தை வலம்வருகிறார். அவருக்கு லைக்ஸ் மீதான ஆர்வம் குறைந்துவிடுகிறது. இருப்பினும் பங்கேற்கிறார். எதையாவது சலிப்போடு பகிர்கிறார். இணைய புகழெல்லாம் ஒரு புகழா இதெல்லாம் மனுஷனுக்கு அஞ்சு காசுக்கு யூஸ் ஆகுமா என்று சொல்லிக்கொண்டே அங்கேயே சுற்றுகிறார். ஆனால் அவரால் அங்கிருந்து வெளியேற இயலவில்லை.
இன்னொரு நபர் இன்று இல்லாவிட்டாலும் தன்னுடைய திறமைக்குச் சரியான அங்கீகாரம் என்றைக்காவது கிடைக்கும் என்கிற ஏக்கத்தோடு காத்திருக்கிறார். அதற்காக விதவிதமான வழிகளில் போராடிக்கொண்டே இருக்கிறார். இல்லாத பொக்கிஷம் ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறவனைப் போல அவன் வாழ்நாளெல்லாம் தோண்டுகிறான்.
டிக் டாக் இதுபோன்ற தோல்வியாளர்களைச் சரியான முறையில் கையாண்டது. வ்யூஸ் வரவில்லை என்கிற ஏக்கத்தோடு இருக்கிறவர்களுக்குத் திடீரென ஒருநாள் முக்கிய டைம்லைனில் ஒரு இடத்தைக் கொடுப்பார்கள். திடீரென லைக்ஸ்களை அள்ளி வழங்குவார்கள். வெளியேறிவிட நினைப்பவரையும் பிடித்துவைக்கிற டெக்னிக் இது. லாட்டரி போல என்றைக்காவது மீண்டும் நமக்கு அதே அளவு லைக்ஸ் கிடைக்கும் எனத் தோல்வியாளர்கள் காத்திருக்கத் தொடங்குகிறார்கள்! ஆனால் கடைசிவரை நேரம் மட்டும் செலவாகிக்கொண்டே இருக்கும்!
விழிப்புணர்வு நிலை
பத்தாவது நிலை இதிலிருந்து மீளவேண்டும் என்கிற எண்ணம். அதற்கு முக்கியக் காரணம் புறச்சூழல்கள். நம்முடைய Productivity பாதிப்படைகிறது. நம்முடைய Personal Life பாதிப்பைச் சந்திக்கிறது. நம்முடைய நேரம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்கிற நிலை வரும்போது நாமாகவே இந்தச் சமூகவலைத்தளங்களில் இருந்து வெளியேற எத்தனிக்கிறோம். நம்முடைய மூளை தப்பிவிடு என எச்சரிக்கை கொடுக்கவும் தொடங்கிவிடுகிறது. அப்போதிருந்து இந்த வலைப்பின்னலில் இருந்து வெளியேறும் வழிகளைத் தேடத்தொடங்குவோம்… இதுதான் இறுதி நிலை…
ஆனால் அப்படியெல்லாம் ஞானம் வந்ததும் யாரும் திருந்திவிடுவதில்லை. திருந்தவும் விடாது உங்கள் மூளையும் வலைத்தளங்களும். உங்களை அது விரட்டிக்கொண்டேயிருக்கும். நிறைய வழிகளை முயற்சி செய்வோம். ஆனால் மீண்டும் மீண்டும் இணையத்தின் வாசல்களில் கைநடுக்கத்தோடு காத்திருப்போம்! டாஸ்மாக் கடை வாசலில் நிற்கிற குடிகாரனின் அதே மனநிலையோடு. சரி எப்படி மீள்வது. அதை வரும்வாரங்களில் பார்க்கலாம்.
அதற்குமுன்னால் இந்தப் போதைகளுக்கு அடிப்படையான ஒரு போதை இருக்கிறது. அதுதான் தகவல் போதை. Information Addiction. சமூகவலைத்தள அடிமைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிற பயங்கர எதிரி அதுதான்!
– விலங்குகள் உடைப்போம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.