Aran Sei

வலதுசாரி ஊடக வலையில் சிக்கியிருப்பவர்கள் யார், யார்? – பகுதி 7 (நிறைவு)

பெருகும் நிதி ஆதாரம்

அச்சு வகுப்புவாதம், அச்சு முதலாளித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், கீதா பிரஸ் முதலான ஊடகங்கள், குடும்பத்தின் நேரடி செயலாக்கத்திலோ அல்லது அறக்கட்டளைகள் போன்ற அமைப்புகளின் பொறுப்புகளிலோ, பெரும்பாலும் சுய முதலீடுகளுடன், நிதி இலாப நோக்கில்லாமல், கருத்தியல் ரீதியான தாக்கத்தை விளைவிக்க இயங்கும் போக்கு நீடித்தாலும், நிதி இலாபத்தை ஈட்டும் வழிகளையும் கண்டறிந்த ஊடகங்களும் இருக்கின்றன. மத, தேசிய கருத்தியல் அணித்திரட்சியால் நாடுகள் கடந்த பரந்துபட்ட வலைப்பின்னல்களின் நன்கொடைகளும் இவற்றுக்கு ஆதாரங்களாகின்றன.

சார்லஸ் கோச் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்க சமூகத்தை தீவிர வலதுசாரி நோக்கில் திருப்பி, தாராளமயத்தின் சொர்க்கபுரியாக, வரிகளற்ற, சட்டக் கட்டுப்பாடுகளற்ற ஒன்றாக மாற்றம் பெறச்செய்து அதன் மூலம் தன்னைப் போன்ற பெருந்தனவந்தர்கள் சூழலை அழித்து, உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச்சுரண்டி, பெரும் லாபத்தைஈட்ட வேண்டும் என்ற நீண்ட கனவை நிறைவேற்றுவதற்கு வேலை செய்ய உறுதி பூண்டவர். 1970களில் அவரது முதன்மை வியூக வகுப்பாளர் ரிச்சர்டு ஃபின்க், நன்கொடைகளைஆயுதங்களாக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இடங்களில் முதலீடு செய்து சிறிது சிறிதாக தீவிர வலதுசாரி பொருளாதார சிந்தனைகளை அமெரிக்க மையநீரோட்டத்திற்கு கொண்டுவருவதை, சமூகமாற்றத்திற்கான கட்டுமானத் (The Structure for Social Change) திட்டமாக முன்வைத்தார்.

முதலாவது, பல்கலைக்கழகங்களில் கட்டற்ற சந்தைக்கான படிப்புகளுக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் தாராளவாத கொள்கைகளுக்கான அறிவுபூர்வமான மூலப்பொருட்களை உற்பத்திசெய்தல். இரண்டாவது, சிந்தனைக் குழுக்களுக்கும், கொள்கை வடிவமைப்பாளர்களுக்கும் நிதி ஆதாரங்களை வழங்கி கல்விநிலையங்களில் இருந்து வரும் ஆய்வுகளை பயன்படுத்தக்கூடிய திட்ட மற்றும் கொள்கை எடுத்துரைப்புகளாக மாற்றுவது. மூன்றாவது, வழக்கறிஞர் குழுக்களுக்கு நிதி ஆதாரம் வழங்கி அவ்வெடுத்துரைப்புகளை அரசுச்செயலாளர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் எடுத்துச்செல்வது.

ஊடக மற்றும் ஜனநாயகத்திற்கான அரங்கம் (PRWatch-CMD) எனப்படும் ஊடக புலனாய்வுத்தளத்தின் அறிக்கையின்படி, 2015-18 ஆண்டுகளுக்கு உட்பட்ட நான்காண்டு காலத்தில் 21 வலதுசாரி நன்கொடையாளர்கள், வெகு சில வலதுசாரி ஊடகங்களுக்கு, கிட்டத்தட்ட 750 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளன. இந்நன்கொடைகளைப் பெற்றுக்கொண்ட ஊடகங்களும் ஊடகக் குழுக்களும் தமது நன்கொடையாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்துள்ளன.

சூழலியல் மாற்றங்கள் உலகை அழிக்க வல்லவை என்னும் கருதுகோள் ஒரு மாயை என நிறுவும் ஆய்வு, கட்டற்ற சந்தை முதலாளித்துவ விமர்சகர்கள் மீதான எதிர்ப்பு, முதலாளித்துவத்தின் வியப்புகள் குறித்த விவரணைகள், பெர்னி சாணடர்ஸின் பொருளாதார ஜனரஞ்சகத்திற்கு எதிரான விமர்சனப் பரப்புரைகள், சட்ட ஒழுங்குமுறைகளைச் சாடும் திரைப்படங்கள், குழந்தைகளுக்கான கட்டற்ற சந்தைப் பொருளாதார விழுமியங்கள், சோசலிசம், சூழல் அறிவியல், சமூக மருத்துவம், இடதுசாரியம் ஆகியவற்றை எதிர்க்கும் 5 நிமிடக் காணொளிகள் என இவ்வூடக நிறுவனங்கள் உள்ளடக்கங்களைத் தயாரித்து பரப்பியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில், பல்கிப்பெருகியுள்ள வலதுசாரி ஊடகங்கள் செய்திகள் மட்டுமல்லாது பொழுதுபோக்கு அம்சங்களையும் தம்மகத்தே கொண்டுள்ளமையால் ஒருவர் தன் நாளின் 24 மணிநேரத்தையும் இவ்வூடகங்களுக்கு இடையேயே செலவிடும் வாய்ப்பு சாத்தியமாகியுள்ளது. நேயர்களைத் தக்கவைத்து விளம்பரங்களின் மூலமாக வருவாய் ஈட்டுவதும், நீண்டகால வருவாய் ஒப்பந்தங்களும் நன்கொடை தவிர்த்த சட்டபூர்வ நிதி ஆதாரங்களாக அமைகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியும் தொடரும் எளிமைப்படுத்தப்பட்ட பயன்பாட்டுப் பொறிகளும், தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கு இணையாக தனிநபர்களும் ஊடகமாக இயங்கும் சாத்தியத்தை வழங்கியிருப்பது, வலதுசாரி போக்கில் புனைவுகள், போலிச் செய்திகள், போலி வரலாறு/அறிவியல் தயாரிப்புகள் சிறு முதலீட்டில் பலவித பதிப்புகளாக உருவாக்கம் பெற வாய்ப்பளித்துள்ளது.

மையநீரோட்ட ஊடகங்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு வலதுசாரி தயாரிப்புகளை ஒளிபரப்பும் போக்கு வழமையாக உள்ளதென்றாலும், பண்டமாக்கலின் நீட்சியாக பெருநிறுவனங்கள் தாங்கள் வாங்க முடிகிற மையநீரோட்ட ஊடகங்களை வாங்கிக் குவித்து, குழுக்களாக்கி தம் வலதுசாரி கருத்தாக்கப் பரப்புரைகளுக்காகவும், அரசியல் காய் நகர்த்தல்களுக்காகவும், வர்த்தகப் போட்டிகளில் வெற்றிபெறவும் பயன்படுத்தும் போக்கு முன்னெப்போதையும் விட இப்பொழுது அதிகப்படியாக நிகழ்கின்றது.

வலதுசாரி ஊடகங்களின் வெற்றி

வியாழக்கிழமைகளில் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் சாய்பாபா புகைப்படங்கள், பணமதிப்பு நீக்கத்துக்கான, ஜிஎஸ்.டிக்கான, கொரோனிலுக்கான ஆதரவு கருத்துக்களுடன் குடும்ப, உறவினர், நண்பர் குழுக்களில் பாபாவின் நேரடி ஆசிகள் கிடைக்குமென பகிரப்படுவது, ஏனைய ஊடகவெளிகளின் நுகர்வுச்சிக்கலில் இருந்து விடுபட்டு, கைக்கடக்கமான ஒரு கருவியில் கருத்தியலை கொண்டு சேர்க்கும் வலதுசாரி இணைய ஊடகங்களின் வெற்றி. இருப்பினும் இப்பரப்புரைகளுக்கான உள்ளடக்கம் ஏனைய வெளிகளில் இருந்தே பெரிதும் பெறப்படுவதனால், கூட்டியக்கத்தையும் ஒத்திசைவையும் நிகழ்த்த இயலும் போக்கின் வெற்றியாகப் பார்க்கலாம். உற்பத்தியாளர்-நுகர்வாளர் என்ற அமைப்பில் இவ்வூடகங்களின் அபிமானிகள் அவர்களது பாத்திரத்திற்கு மீறிய பங்களிப்பின் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு இணையான முக்கியத்துவம் பெறுகின்றனர்.

ஹைதி ஷுல்ஸ், ஜெர்மனியின் மியூனிக் பல்கலைக்கழகத்தில் (எல்.எம்.யூ) ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையின் முனைவர் பட்டமேற்படிப்பு ஆய்வாளர், தமது ‘யார் மாற்று-வலதுசாரி இணைய ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்? அவர்களின் பண்புகளை அறிந்துகொள்ளும் முயற்சி’ (‘Who Uses Right-Wing Alternative Online Media? An Exploration of Audience Characteristics’) என்னும் ஆய்வுக்கட்டுரையில் வலதுசாரி இணைய ஊடகப் பயன்பாட்டாளர்களின் பண்புகள் பற்றிய அனுமானங்களை, மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளார். அவையாவன;

  • அரசியல் தலைப்புகள் மீதான ஆர்வமும், அந்நியர்கள் மீதான விமர்சன நோக்கும், சமூக ஊடகங்களை செய்தி வசிப்பிற்கான மூலமாகக் கொண்டிருப்பதும், பொதுவாகச் செய்திகளின் தரத்தின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பதும், ஒருவரை வலதுசாரி இணைய ஊடகங்களுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளை அதிகமாக்குகின்றன.
  • நேரடி ஜனநாயகத்தின் மீதான ஆர்வமோ, வலதுசாரி பக்கச் சார்பு மட்டுமோ இருந்தால், வலதுசாரி இணைய ஊடகங்களுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது.
  • பொதுவாக, மையநீரோட்ட ஊடகங்கள் மீதும் அரசு ஒளிபரப்புச் சேவைகளின் மீதும் நம்பிக்கையிழக்கும் போது, அதனால் ஒருவரை வலதுசாரி இணைய ஊடகங்களுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன.
  • வலதுசாரி இணைய ஊடகப் பயன்பாட்டாளர்கள் அவற்றை பெரிதும் சமூக ஊடகவெளிகளின் மூலமாகவே கண்டடைகின்றனர். மேலும் அவர்கள் அவ்வூடகங்களின் கருத்தாக்கங்களை, நேரடியாக அவை சென்று சேரவே வாய்ப்பில்லாதவர்களுக்கும் உடனடி செய்தி சேவை செயலிகள் மூலம் கொண்டு சென்று சேர்ப்பிக்கும் அணில்களாகவும் செயல்படுகின்றனர்.

இம்முடிவுகள், உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுப்படையாகப் பொருந்தும் எனக் கூற இயலாவிட்டாலும், நம்பிக்கைக்குப் பற்றான ஒற்றைக் காரணிக்கான கூக்குரலும், ஏற்கனவே விதைக்கப்பட்டிருக்கும் எதிர்மறை எண்ணங்களும், சமூக ஊடகவெளியும், அணிதிரட்டலுக்கும், ஆதரவு தெறிக்கும் வலதுசாரி ஜனரஞ்சகமாக உருவாகவும் வழிவகுக்கும் என்பது தினசரி நிகழ்வுகளில் கண்கூடாகக் காண்கிறோம். ஹைதி தனது கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிடுவது போல, வலதுசாரி இணைய ஊடகங்களையும், அதன் ஆதரவாளர்களையும் புறவய நிகழ்வாக எண்ணிக் கடந்துவிட முடியாது என்பது தெளிவு.

புதுப்பித்துக்கொள்ளும் நிரந்தர அச்சம்

சில நாட்களுக்கு முன் அரண்செய் இணைய காட்சி செய்தி ஊடகத்தின் நேர்காணலில் (‘டிரம்ப்: அமெரிக்க வரலாற்றின் அவமானம்’) முன்னாள் கலிஃபோர்னியா மாகாண ஃபிரீமான்ட் நகர குழு உறுப்பினர் அனு நடராஜன், அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலில் இந்தியர்களின் பங்கேற்பு பற்றிய கேள்விக்கான தனது பதிலில் – “மோடி ஆதரவாளர்கள் அவரது நண்பராக அறியப்பட்ட டிரம்பிற்கு ஆதரவளிப்பது இயல்பான ஒன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தாலும், களத்தில் அமெரிக்க குடிமக்களாக இருப்பவர்கள், குடியரசுக் கட்சியின் வரி தொடர்பான கோட்பாடுகளை விரும்பி அதனை ஏற்றுக் கொண்டோர் உள்ளனர். ஆனால் டிரம்பின் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு உமிழ்வு, தங்களையும் சேர்த்தது என்ற புரிதலுடன் ஆதரவளிக்கிறார்களா என்பது தெரியவில்லையென்றும், இந்திய பெண்கள், டிரம்பின் பெண்கள் மீதான பார்வையினை தெரிந்தும் எவ்வாறு அவரை ஆதரிக்கின்றனர் என்பது புரியாத புதிராக இருக்கின்றது” என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு நேரடியான பதிலாக இல்லையென்றாலும், ஏன் வலதுசாரி ஊடகங்களால் வெற்றிகரமாகச் செயல்படமுடிகிறது என்ற ஒரு கேள்விக்கு எம்.எஸ்.என்.பி.சியின் இடதுசாரி அரசியல் விமர்சகர் ரேச்சல் மேடோவ் அளித்த ரகளையான பதிலுடன் அந்த அறிமுகம் நிறைவுறுகிறது.

வலதுசாரி ஊடகத் தொகுப்பாளரின் நேயர்களுக்காக வழக்கமான உரை –

“நான் சொல்வதைக் கொள்ளுங்கள்.
நான் தான் உங்கள் வழியில் உள்ள உண்மையின் ஒளி.
நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
நீங்கள் வேறு யார் சொல்வதையும் கேட்காதீர்கள், அவர்கள் உங்களைக் கொல்ல முயற்சிப்பவர்கள்.
வேறு எதையும் பார்க்காதீர்கள்,
அவை உங்கள் மூளையைச் சிதைத்துவிடும்.
நான் இங்கே உங்களைக் காப்பதற்காக இருக்கிறேன்.
அவர்கள் அனைவரும் உங்களைக் கொல்ல முயற்சிக்கின்றனர்.”

வலதுசாரி ஊடகவியலாளர்களால் மட்டுமே இவ்வாறு பேசவியலும். ஏனையோர் அவ்வாறு கூறுவதில்லை. இதுவே அவ்வூடககங்களின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு காரணமாக நான் கருதுகிறேன்

(அரங்கில் அச்சமற்ற சிரிப்பொலி ஆமோதித்தது)

(முற்றும்)

எச்சரிக்கை: இரண்டு ரூபாய் துவக்க விலை கொண்ட போர்டுகளையும், தீவிர வலதுசாரி இணையப் பரப்புரையாளர்களையும், வலதுசாரி ஊடகவியலாளர்களாக இக்கட்டுரையில் பரவலாகச் சமன்படுத்திச் சுட்டியிருப்பது, செய்தியாளர் ஜீவசகாப்தன் அரண்செய் நேர்காணலில் (‘லிபெர்ட்டி தமிழ் நிறுவனர் ஜீவசகாப்தன் நேர்காணல்’) குறிப்பிட்டிருந்தது போன்று “அவர்களுடன்” பழகிப் பழகி கட்டுரையாளரின் மூளை “அவர்களுக்கு ஃபிரென்ட்” ஆகியிருப்பதைச் சுட்டுகிறது.

(கட்டுரையாளர் விக்ரம் கௌதம், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி

ஆறாம் பகுதி

வலதுசாரி ஊடக வலையில் சிக்கியிருப்பவர்கள் யார், யார்? – பகுதி 7 (நிறைவு)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்