வலதுசாரி ஊடகங்களின் இயங்கியல் கூறுகள் – இருப்பிற்கான தேவை
தீவிர சமத்துவவாதி, பகுப்பாய்வு மார்க்சியர் என்று அறியப்பட்ட அரசியல் தத்துவவியலாளர் ஜி ஏ கோஹென் தம் வாழ்வின் இறுதியில், தன்னுடைய அறிவார்ந்த வீடு, மதிப்பிற்குரிய ஆக்ஸ்போர்டு கல்லூரி உட்பட, தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஏன் பாதுகாக்க விரும்புகிறார் என்று தன்னைத்தானே வினவிக் கொண்டார். கூடவே, “வெதுவெதுப்பான பியரின் மீதும், தேவாலயத்திற்கு சைக்கிளில் செல்லும் பணிப்பெண்களின் மீதும் பழிபோட்டுவிட்டு, வால்மார்ட்டிற்கு தங்கள் ராஜ்ஜியத்தின் சாவிகளை ஒப்படைக்கும் பலம்பொருந்திய அரசியல் வலதுசாரிகளிடமிருந்து, வலதுசாரியத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய உண்மைகள் என எதுவும் இருக்கின்றனவா?” எனவும் கேட்டுக்கொண்டார்.
இக்கட்டுரை பதிவு செய்துள்ள காலகட்டங்கள் அனைத்திலும், வலதுசாரி ஊடகங்கள் தங்கள் இருப்பிற்கான நோக்கமாகக் குறிப்பிடுபவை, என்றுமே மாறாத ஒற்றை வாதமாகவே நீள்கின்றன. மையநீரோட்ட ஊடகங்கள் தாராளவாதச் சார்புடையவை, அவற்றில் பணிபுரிபவர்கள் இடதுசாரி சிந்தனைச் சார்புடையவர்களாதலால் நடுநிலை அற்றவர்கள், மக்களிடமிருந்து விலகியிருக்கும் மோசடிக்கார மேல்தட்டு வர்க்கத்தினர், வலதுசாரிகளின் குரல்வளையை நசுக்குபவர்கள் – ஆதலால் மாற்று வகையில் ஆதாரங்களைச் சீர்தூக்கிப்பார்க்கவும், மாற்றுவகையில் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கும், மாற்று உண்மைகளை நேர்த்தியாகவும் துல்லியமாகவும் மக்களுக்குத் தெரிவிக்கவும் தங்களின் இருப்பும் பரப்புரையும் அவசியம் என்பதுவே அவ்வாதம்.
2019-ம் ஆண்டு முன்னாள் தமிழக மாநில பா.ஜ.க தலைவராகப் பொறுப்பு வகித்த Dr. தமிழிசை சவுந்தரராஜன் “சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அறிக்கை வெளியிட்டதும் அதன் பின்னர் நிகழ்ந்த நாடகங்களும் நினைவில் இருக்கலாம்.
எட்வர்ட் ஹெர்மனும் நோம் சாம்ஸ்கியும் பிரதான ஊடகங்களுக்கு தாராளவாத சார்பு உள்ளது என்ற கருத்தினை கட்டுக்கதை என நிறுவுகின்றனர். விரிவான அனுபவ ஆராய்ச்சியை வரைந்து, உண்மையில் செய்தி ஊடகங்கள் பெருநிறுவன நலன்களுக்கு அடிபணிந்து விட்டமையால், அவை தன்னியல்பில் வலதுசாரிகளாகவே இருக்கின்றனர் என்று ‘ஒப்புதலை உற்பத்தி செய்தல்’ (Manufacturing Consent) எனும் நூலில் அவர்கள் சுட்டுகின்றனர். இது அமெரிக்காவைப் பற்றிய அவர்களின் கருத்து என்றாலும், இந்தியா போன்ற நாடுகளில் தாராளவாத சார்புடன் சமூக பழமைவாதத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.
பண்பாட்டு மேலாதிக்கம்
ஊடகவெளியில், வலதுசாரி ஜனரஞ்சகம் கவர்ச்சியான ஈர்ப்பைக் கொடுக்கவல்லது. அரசியல் மற்றும் பொருளாதார நிலையின்மை காலங்களில் அது தீவிர வளர்ச்சி காண்கிறது. பொதுப்படையாக நிலவும் அச்சத்தையும் பதற்றத்தையும் கொண்டு, தீவிர தேசியவாதம், வெறுப்புணர்ச்சி, சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு சர்வாதிகாரத் தீர்வு என்னும் பண்பாட்டு ஆதரவைக் கட்டமைக்கின்றது.
செயல்முறையில், தேர்தல்களில் வெற்றி பெற்று, அரசியல் அதிகாரத்தைப் பெறுவதில் துவங்கி அத்துடனேயே முடிவடையாது. தீவிரவாதக கண்ணோட்டங்களை இயல்பாக்குவதன் மூலம், மையநீரோட்ட ஊடகங்களையும், கலாச்சாரத்தையும், மேலும் பிற்போக்கு திசைகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளையும் செவ்வனே செய்கின்றது. எதிர்தரப்பைச் சீண்டாமல், குறியீட்டு மற்றும் சங்கேத மொழிகளில், குறிப்பிட்ட சமூகங்களின் ஆதரவைத் திரட்டும் உத்தியை அனைத்துத் தளங்களிலும் பயன்படுத்துகின்றது.
வெளிப்படையான புனைகதைகளையும், தவறான தகவல்களையும், தீவிரவாதக் கருத்துக்களையும் சுதந்திரமாகப் பரப்புகின்ற வலதுசாரி ஊடகங்கள், வலதுசாரி ஜனரஞ்சக ஆளுமைகளைக் கட்டமைப்பது மட்டுமல்லாமல், நிறுவப்பட்ட மையநீரோட்ட ஊடகங்களிலும் இக்கருத்தாக்கங்கள் நுழைய வழிவகுக்கின்றன. மையநீரோட்ட ஊடகங்களில் ஏற்கனவே விரவியிருக்கும் அந்நியர் மீதான அச்சத்தையும், எளிய வர்க்கத்தினர் மீதான எதிர்மறையான எண்ணங்களையும், தீவிர வலதுசாரிகள் தமது நம்பிக்கைகளை முன்நகர்த்துவதற்கான திசையனாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆளும் வர்க்கத்திற்கு சேவை புரியும் நம்பிக்கைகளானவை, வெகுஜன சமூக இயல்புகளாக – ஊடகங்களிலும் கல்வி நிலையங்களிலும் பொதுக்கலாச்சாரத்திலும் சித்தரிக்கப்படுகின்றன. சற்றே முரணாக, இந்த அரசியல் போக்கினை கிராம்சியின் ‘மெட்டா-பாலிடிக்ஸ்’ (Metapolitics) கோட்பாட்டின்படி நீண்டகால பண்பாட்டுத் தாக்கத்திற்கான தங்கள் காய்நகர்த்தலாகவும் சில தீவிர வலதுசாரியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெறுப்பை இயல்பாக மாற்றுதல்
அரச வன்முறைகள், இனப்படுகொலைகள், சாதிய-வர்க்க வன்கொடுமைகள், புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் போன்ற எளிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் சம்பவங்கள் வலதுசாரி ஊடகங்களில் சித்தரிக்கப்படும் பாங்கு அவற்றிற்கு நியாயம் கற்பிப்பதைக் கடந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் நீடித்த அச்சத்தையும், குற்றம் புரிந்தவர்களுக்கு மகுடம் சூட்டுபவையாகவும் அமைகின்றது. தொடர்ச்சியாக, தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் இந்த கருத்தாக்கங்களுக்கு தமது சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து விருப்பம் தெரிவித்து, பரந்த சமூகத்திற்கு கொண்டுசெல்கின்றனர்.
செய்தியாளர் மிஹிர் ஸ்ரீவாஸ்தவாவும் அவரது புகைப்படக்கலைஞர் ரவுல் இரானியும் லவ் ஜிஹாத் தடுப்பு என்னும் கொடுங்கோன்மைச் சட்டம் இயற்றப்பட்டுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை ‘லவ் ஜிஹாத்: மேற்கு உத்தர பிரதேசத்தின் இதயத்தினூடே ஒரு திறந்த மனதுடனான பயணம்’ (Love Jihadis: An open-minded journey into the heart of Western Uttar Pradesh) எனும் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளனர்.
அதில் “ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் விஷயங்களை சித்தரிக்கின்றன, யதார்த்தத்தை கையாளுகின்றன. களத்தில் லவ் ஜிஹாத் என்று எதுவும் இல்லை, இது தேர்தல் ஆதாயத்துக்கான பிரச்சாரம் மட்டுமே. தேசியப் பாதுகாப்பு முகமையால் (NIA) கூட இதுவரை எதையும் நிரூபிக்க முடியவில்லை. இந்த செயல்பாட்டில், ஒரு சில இளம் தம்பதிகள் குறிவைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை அழிக்கப்படும். ஊடகங்களின் கண் கூசும் வெளிச்சத்தில் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கஷ்டப்படுவார்கள், முழு தேசமும் அந்தக் காட்சியைக் காண்பார்கள்.” என்று குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் ஊடகம் என்று பொதுப்படையாகத் தெரிவித்திருப்பதை மையநீரோட்ட ஊடகங்களில் வலதுசாரி கருத்துப்பரவலின் நீட்சியாகக் காணலாம்.
பாசாங்கான மேல்தட்டு எதிர்ப்பு
ஒரு பிற்போக்குத்தனமான, ஆபத்தான அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான, மேல்தட்டு எதிர்ப்பு உணர்வின் பயன்பாடு, வலதுசாரி ஊடகங்களின் சிறப்பியல்பு.
டிரம்பின் முன்னாள் பரப்புரை மேலாளர் ஸ்டீவ் பேனன், இடதுசாரி விமர்சகர்களைப் போலவே – நவதாராளமயம், உலகமயமாக்கல், முதலாளித்துவம், அதிகரிக்கும் சமத்துவமின்மை போன்றவற்றினால் நிகழும் பாதிப்புகளை எதிரொலித்தாலும், அவர் முன்வைக்கும் தீர்வுகளாவன – புலம்பெயர்வோருக்கு எதிராக சுவர் எழுப்புவது, தேசியவாதத்தினைத் தூக்கிப்பிடிப்பது, இஸ்லாமியர்களுக்கும் சீனர்களுக்கும் எதிராக சிலுவை யுத்தம் தொடர்வது மற்றும் முற்போக்கு அரசியலை முடக்குவது.
அமெரிக்க ஊடகவியலாளர் டேவிட் நெய்வெர்ட், வலதுசாரி ஜனரஞ்சகம், “உற்பத்திவாதத்தின்” ஒரு கூற்றினைச் சுற்றி கட்டமைக்கப்படுவது எனக் கூறுகின்றார். அந்தக் கூற்றின்படி, “கடினமான உழைப்பைச் செலுத்தும் உற்பத்தியாளர்கள், இரு தரப்பு எதிரிகளால் சூழப்படுகின்றனர், ஒன்று மோசமான மேல்தட்டினர் மேலே இருந்து அவர்களை அடக்குகின்றனர், இரண்டாவது அரசாங்கத்தின் நலன்களை உறிஞ்சி வாழும் ஏனைய ‘மற்றவர்களின்’ ஒட்டுண்ணி அடித்தட்டு”. வலதுசாரிகள், “தாராளவாத மேல்தட்டினர்” மற்றும் “பாசாங்குத்தனமான கல்வி வல்லுநர்கள்” ஆகியோரால் ஆதிக்கம் செலுத்தப்படுவோம் என்று கற்பனை செய்யப்படும்போது அதிகாரத்தை இழிவுபடுத்துகிறார்கள், ஆனால் உலகின் தீமைகளுக்கு தாங்கள் குற்றம் சாட்டும் குழுக்களை தண்டிக்கும் அதிகாரம் தங்களுக்கு வேண்டும் என்று நீண்டகாலமாக விரும்புகிறார்கள் – சீரழிந்த இடதுசாரிகளும், புலம்பெயர்ந்தோரும் ஒவ்வொரு மூலையிலும் பதுங்கியிருப்பது போல கற்பனை செய்துகொள்கின்றனர்.
அமெரிக்க வரலாற்றாசிரியர் டாம் ஃபிராங்க், தனது ‘மக்கள்: இல்லை’ (‘The People, No’) எனும் நூலில், “ஜனரஞ்சகம்” என்ற சொல்லாடல் பெரும்பாலும் வெகுஜன மக்களின், ஜனநாயக எதிர்பார்ப்புகளை இழிவுபடுத்த, மேல்தட்டினரால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார். இந்தக்கூற்றினை வலதுசாரி ஊடகவியலாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப திரித்து, இடதுசாரிகள் முன்வைக்கும் மாற்றத்திற்கான அரசியல் கோரிக்கைகளையும், ட்ரம்பிசத்தையும் கூட பிரித்துப் பார்க்கவியலாதவாறு சித்தரிக்கின்றனர். இதன்மூலம் டிரம்ப், போரிஸ் ஜான்சன் போன்றவர்கள், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினர் என்பதைத் திரையிட்டு, உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதிநிதியாகக் கட்டமைத்து விடுவது, ஃபிராங்க் பின்னொரு தருணத்தில் குறிப்பிடுவது போன்று, ‘ரொட்டித் துண்டிற்காக வரிசையில் நிற்பவர், சொகுசுக்கப்பலில் உல்லாசமாய் ஓய்வெடுப்பவருக்காக அழுகிறார்’ என்பதை நிதர்சனமாக்கி விடுகிறது.
தன்வயப்படுத்துதலில் தேர்ந்த வலது, இத்தகைய பாசாங்கின் மூலம் இடதுசாரிக் கருத்தாக்கங்களையும் கட்டமைப்புகளையும் ஊடுருவுகின்றது என அமெரிக்க வரலாற்றாசிரியர் அலெக்ஸ்சாண்டர் ராஸ் கூறுகின்றார். இது 1920 மற்றும் 30 களில் பாசிசவாதிகளும் நாஜிக்களும் உழைக்கும் மக்களை போற்றுவோம், உழைக்கும் மக்களை வணங்குகிறோம், என்று ஊடகங்களில் கூறிக்கொண்டே, தொழிற்சங்கங்களை ஆக்கிரமித்ததையும், சங்க நிதிகளைக் கைப்பற்றியதையும், அதன் தலைவர்களை முகாம்களுக்கு அனுப்பியதையும் நினைவு கூறுகின்றார். பாசாங்கான மேல்தட்டு முதலாளித்துவ எதிர்ப்பே, இனப்படுகொலை நிகழ போதுமானதாக இருந்தது.
பெண்ணிய எதிர்ப்பு
நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில், துப்பாக்கி ஏந்திய வலதுசாரி தீவிரவாதி, 51 உயிர்களைச் சுட்டுக் கொன்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, பிரிட்டன் பெண்கள் சமத்துவக் கட்சியின் முன்னாள் தலைவர், சோபி வாக்கர் ஒரு ட்வீட் (“வெகுஜன துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஆண்களே.”) செய்திருந்தார். அவர் அதனுடன் ஒரு தரவினையும் இணைத்திருந்தார். மதர் ஜோன்ஸ் செய்தி நிறுவனம், 1982 முதல் 2020-ம் ஆண்டுவரை அமெரிக்காவில் நிகழ்ந்த கொலைவெறித் தாக்குதல்களை, தன் விசாரணை அடிப்படையில் தொகுத்துள்ளது. அத்தரவுகளின் மூலம் தெரிய வருவது என்னவென்றால், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 96.5% (111) ஆண்கள் மற்றும் 3.5% (04) பெண்கள் என்னும் தகவல். இந்நேரத்தில் இதனை பால் சார்ந்த ஒன்றாக பேசுவது சரியா எனத் தெரியவில்லை என்று ஒரு பி.பி.சி. (BBC) செய்தியாளர் கூறினார். அதற்கு தான் இத்தருணத்தில் பாலினை வலிந்து விவாதமாக்கவில்லை என்றும், கொலைவெறித்ததாக்குதல் தடத்தியவர்களே அதனைப் பதிவு செய்துள்ளனர் என்றும் சோபி வாக்கர் கூறினார்.
“பெண்ணியம் மோசமானது, அது நாகரிகத்தைச் சிதைக்கின்றது. பெண்களின் இயற்கையான பங்கு குழந்தைகளைப் பெற்று பராமரிப்பதே. உலகை வன்முறையில் இருந்து காக்க பலம்வாய்ந்த ஆண்கள் தேவை.” – இது போன்ற கருத்துக்கள் தீவிர வலதுசாரி இணையதளங்களிலும், கொலைவெறித் தாக்குதலாளர்களின் வார்த்தைகளிலும் மலிந்து கிடக்கின்றன. இது போன்ற பெண்ணிய எதிர்ப்பு சொல்லாட்சியே வெள்ளை தேசியவாதம் போன்ற மேலாதிக்க மனோபாவத்திற்கு சக்திவாய்ந்த திறப்பாக அமைகிறது என்று இப்போக்கினை 2013-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆராய்ந்து எழுதிவரும் தி அட்லான்டிக் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஹானா லூயிஸ் தெரிவிக்கிறார்.
பிரெஞ்சு வலதுசாரி சதிக்கோட்பாட்டாளர் ரெனாட் காம்யூ பிரபலப்படுத்திய, “வெள்ளையர்களைத் தவிர்த்த ஏனைய இனத்தவர்களின் பிறப்புவிகிதம் அதிகமாக உள்ளதால் ஏற்படப்போகும் மக்கள்தொகை மாற்றம் ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது” என்ற ஒரு கோட்பாடு, தீவிர வலதுசாரி இணைய ஊடகங்கள் மூலம் மீம்களாக பகிரப்பட்டு பலதரப்புகளையும் உசுப்பேற்றியுள்ளது. இவரது புத்தகத்தின் சுருக்கமான வடிவமாக கனடிய வலதுசாரி செயற்பாட்டாளர் லாரா சதர்ன் பதிவேற்றிய யூடியூப் காணொளி மட்டுமே ஆறு லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. இவர் டிரம்பினால் ரீட்வீட் செய்யப்படுபவர். அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தின் எல் பாசோ நகரில் 22 லத்தீன் அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கும், விர்ஜினியா மாகாணத்தின் சார்லட்ஸ்வில் நகரில் நவநாஜிகள் கொக்கரிப்பதற்கும், நியூசிலாந்தில் நிகழ்ந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கொலைவெறித் தாக்குதலுக்கும் அடிநாதமாக அமைந்துள்ளது.
பெண்களின் பாலியல் சுதந்திரத்தையும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரத்தையும் நாகரிகத்திற்கு எதிரானதாக கட்டமைக்கும் போக்கும் அதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று செய்யப்படும் பரப்புரைகளும் கீதா பிரஸ்ஸின் ஸ்திரீ தர்ம பிரஸ்னோத்தாரி, ரெனாட் காம்யூவின் ‘மாபெரும் பதிலிடக் கோட்பாடு’, இஸ்லாமிய கேலிஃபேட் உருவாக்க முனைந்திட்ட ஐஸிஸ்-சின் கருத்தியல் என அனைத்தும் கண்ணாடி பிம்பமாக ஒத்துப்போவதை காணலாம்.
“சமூக ஊடக வெளிகளில் பொதுவாகவே அதிகரித்துள்ள வெறுப்புப்பேச்சு, இகழ்ச்சி, அவமதிப்பு, துஷ்பிரயோகம் ஆகியன இணைய உரையாடல்களை காரமாக்கியதோடு மட்டுமல்லாமல் அரசியல் விவாதங்களுக்கான நுழைவுத் தடைகளையும் குறைத்துள்ளன. இவற்றில் ஏற்படும் சறுக்கல்கள் வெளிப்படையான அச்சுறுத்தலாக வீழ்ச்சியடைகின்றன்ற. இத்தகைய கலாச்சாரம் விரவியுள்ள இணைய மக்கள் மன்றங்கள் வலதுசாரி உணர்வுகளை பெருக்கும் களங்களாக மாறியுள்ளன.” என்ற சஹானாவின் கூற்றையும், ஹானா லூயிஸின் கூற்றையும் இணைத்துப் பார்க்கையில், பெண்ணிய எதிர்ப்பு என்னும் வலைப்பொறியில் சிக்கும் போக்கு வலதுசாரி இணைய ஊடகங்களுக்கான ஆதரவுப் பெருக்கத்தை அவை விவரிப்பதையும் காணலாம்.
(தொடரும்)
(கட்டுரையாளர் விக்ரம் கௌதம், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.