காட்சி ஊடகங்களில் துவங்கிய விவாத அரங்குகள்
1968-ம் ஆண்டுவாக்கில் NBC, CBS, ABC ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே காட்சி செய்தி ஊடகங்களாக இருந்தன. ABC தவிர்த்த மற்ற இரு ஊடகங்களும் அதிபர் தேர்தலுக்கான பெரிய கட்சிகளின் வேட்பாளர் தேர்வு மாநாடுகளை இரண்டு நாட்கள் முழுமையாக ஒளிபரப்பும் வளம் பெற்றிருந்தன. பொருட்செலவுகள் அதிகம் செய்ய இயலாத நிலையில் இருந்த ABC, அரசியல் சூழலில் இருதுருவங்களாக இருந்த தீவிர வலதுசாரி ஊடகவியலாளர் வில்லியம் பக்லியையும், முற்போக்காளர் என முழுமையாக மதிப்பிடவியலாத கோர் விடாலையும் விவாதத்திற்கு அழைத்தது. அவர்கள் உணர்ச்சி பொங்க சரமாரியாக வார்த்தைகளால் தாக்கிக் கொள்ளும் விவாத நிகழ்ச்சியின் மூலம் தன் நேயர்களை அதிகரித்துக்கொண்டது.
இவ்விவாதங்களே, காட்சி செய்தி ஊடகங்களில் அரசியல் அனல் பறக்கும் முதல் விவாதங்கள் எனவும், காரமிருந்தாலும் விவாதங்களின் உள்ளடக்கம் பார்வையாளர்களை இந்த விவாதங்களுக்கு ஈர்த்தது எனவும், அரசியல் சார் காட்சி ஊடகங்களை முற்றிலும் மாற்றம் அடையச் செய்தது எனவும் அவ்விவாதங்கள் பற்றிய ஆவணப்படத்தை (Best of Enemies) இயக்கியிருக்கும் ராபர்ட் கார்டன் குறிப்பிடுகிறார்.
கருத்தியல் பரவலுக்கான வேர்மட்ட இயக்கங்களின் உருவாக்கம்
‘சுதந்திரத்திற்கான அமெரிக்க வாலிபர்கள்’, ‘இடைநிலை மாணவர் நிலையம்’ போன்ற அடிமட்ட அமைப்புகளை வலதுசாரி ஊடகங்கள் உருவாக்கின. அதன் மூலம், தேசியம், வலதுசாரி விழுமியங்கள், செயல்பாடு என ஊடகத்தையும் அரசியலையும், சரிவிகித அளவில் கலந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை அமைப்பாகக் கட்ட முடிந்தது. இது அதுவரை வேறு எந்த வலதுசாரி அமைப்பாலும் இயலாத ஒன்றாக இருந்தது.
இருப்பினும் ஜான் பிர்ச் சொசைட்டி போன்ற தீவிர வலதுசாரி பொதுவுடைமை எதிர்ப்பு இயக்கங்களுடன் வலதுசாரி அமைப்புகள் இணைத்து பார்க்கப்பட்டதால் தேசிய அளவில் இவ்வியக்கங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இப்பின்னடைவில் மையநீரோட்ட ஊடகங்களின் பிரதிபலிப்பும் அரசின் கொள்கை முடிவுகளும் என இரண்டுமே காரணிகளாகப் பார்க்கப்படுகின்றது.
தாமே நசுக்கிக்கொண்ட குரல்வளை
இப்பின்னனியில், 1949-ம் ஆண்டு அமெரிக்க தகவல்தொடர்பு ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நியாயக் கோட்பாட்டினை அவ்வாணையம் மீண்டும் வலியுறுத்தியது. எனவே, பல வானொலி நிலையங்கள் மேனியன், அவரது நண்பர் டேன் ஸ்மூட் ஆகியோரின் நிகழ்ச்சிகளைத் தவிர்த்தன.
அந்நிகழ்ச்சிகள் அவர்களது கருத்துக்களுக்காகத் தவிர்க்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்குரிய தகவல்களை நேர்மையாக, பாரபட்சமில்லாமல், சமநிலையுடன் ஒளிபரப்பவேண்டும் என்பதுவே கோட்பாடு. எனவே, இவ்வூடகங்கள் சர்ச்சைக்குரிய வலதுசாரி கருத்தாக்கங்களை தவிர்த்ததற்கான காரணம், இவற்றை ஒளிபரப்பினால் அதற்கு இணையான நேரத்தினை இடதுசாரிகளுக்கும் வழங்க வேண்டிய நிர்பந்தத்தை தவிர்ப்பதே என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனவு அதிபரும் கையறு நிலையும்
ரிச்சர்ட் நிக்சன், வலதுசாரி ஊடகங்களை ஈர்க்க நினைத்த முதல் அதிபர் வேட்பாளர். ஆனால் இவரது வருகை, இவ்வூடகங்கள் மத்தியிலேயே ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், அவர் குறிப்பிடத்தகுந்த வலதுசாரி ஊடக ஆதரவுடன் 1968 தேர்தலில் வெற்றிபெற்றார். அவரது ஆட்சியின் போது பெரிதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த அந்த ஊடகங்களுக்கு நிக்சனின் சீனப் பயணம் பெரும் கசப்பைத் தந்தது.
அதனால் 1972-ம் ஆண்டு குடியரசுக் கட்சிக்கான அதிபர் வேட்பாளர் நியமனத்தின் முதற்சுற்று போட்டியில் ஒஹாயோ மாநில நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆஷ் ப்ரூக்கிற்கு அவர்கள் ஆதரவளித்தனர். ஆனால் ஆஷ் ப்ரூக் படுதோல்வியுற்றார்.
1970-க்குப் பிந்தைய நாட்டின் அரசியல் சூழல், வலதுசாரி ஊடகங்களிடம் பெருங்கோபத்தினை விதைத்திருந்தது. ஆனால், என்ன செய்வது என்று தெரிந்திருந்தாலும், மக்களின் ஜனரஞ்சகக் கோபத்திலிருந்தும், வாஷிங்டனில் அதிகார மையத்தில் செயல்படுபவர்களிடமிருந்தும் தூர விலகியிருந்ததால், குடியரசுக் கட்சி அதிபர் பதவியில் இருந்தும் எதுவும் சாதிக்க இயலவில்லை.
முதல் தலைமுறையின் சாதனை
அச்சு ஊடக வாசகர்களையும், வானொலி நேயர்களையும், காட்சி செய்தி ஊடகப் பார்வையாளர்களையும் – வாக்காளர்களாகவும், வலதுசாரி இயக்கங்களின் அமைப்பாளர்களாகவும் மாற்றம் அடையச் செய்ததை இத்தலைமுறையின் சாதனையாகக் கொள்ளலாம். அவர்களுக்கு பின் வந்தவர்கள் இந்தச் சாதனையை பயன்படுத்தும் போக்கிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை
1980 முதல் வெகுஜன இணைய பயன்பாட்டுக் காலமான 2000 வரையிலான காலகட்டம் இரண்டாம் தலைமுறையின் காலமாகவும், அதன் பின்னிருந்து இன்று வரையிலான காலம் மூன்றாம் தலைமுறை காலமாகவும் பார்க்கப்படுகின்றது.
தொலைக் காட்சியிலிருந்து உதித்த அதிபர்
1970-களின் இறுதியிலும், 1980-களின் தொடக்கத்திலும் செயல்பட்ட ரிச்சர்ட் விகேரி, டெர்ரி டோலன், ஹவர்ட் பிலிப்ஸ், ஜெர்ரி ஃபால்வேல் ஆகியோர் அரசியல் எதிர்ப்பு, கருத்தடை எதிர்ப்பு, துப்பாக்கி ஆதரவு நிலைப்பாட்டின் மூலம் ரொனால்ட் ரீகன் அதிபராக ஆட்சி அதிகாரம் அடையத் துணைபுரிந்த இரண்டாம் தலைமுறை வலதுசாரி ஊடகவியலாளர்கள். இவர்கள், முதலில் ரீகன் ஆதரவு நிலைப்பாடு கொண்டிருந்தாலும் பின்னர் ரீகன் எதிர்ப்பு நிலை கொண்டது, முதல் தலைமுறை ஊடகவியலாளர்களை புகைச்சல் அடையச் செய்தது. முதல் தலைமுறையாளர்களின் கனவு அதிபரான ரீகனை இரண்டாம் தலைமுறையினர் பரிகசித்ததை எதிர்க்க முடியாமல் அவர்கள் நிராயுதபாணியாக நின்றனர்.
வலதுசாரி மத ஊடகவியலாளர்கள்
நிக்கோல் தனது புத்தகத்தில் வலதுசாரி மத வானொலியாளர்களான கார்ல் மெக்கின்டைர், பில்லி ஜேம்ஸ் ஹர்கீஸ் போன்றோரைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடவில்லை. வலதுசாரி மத ஊடகவியலாளர்களைப் பற்றியும் தகவல்களையும் கொடுத்திருந்தால் முழுமையான புத்தகமாக இருந்திருக்கும்.
காற்றில் தொடரும் வெறுப்பலை
1987-ம் ஆண்டில் தகவல்தொடர்பு ஆணையம் நியாயக் கோட்பாட்டினை ரத்து செய்தது. இதனைக் கட்சி சார்பற்று அனைவரும் எதிர்த்தனர். இந்த நிகழ்வு இரண்டாம் தலைமுறையின் தாக்கத்தைக் கூட்டிய ரஷ் லிம்பாவிற்கு வலதுசாரி கருத்தியலைப் பரப்புவதற்கான பெருவாய்ப்பாகத் தெரிந்தது.
லிம்பா, மேனியனைப் போன்றே சர்ச்சைக்குரிய வானொலி ஊடகவியலாளர். தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், பொழுதுபோக்கு அம்சங்களைக் கூட்டும் திறனாலும் நேயர்களை மணிக்கணக்கில் தினசரி தன்னுடன் செலவழிக்க வைத்தவர், வைப்பவர். இசை ஒளிபரப்பும் வானொலிகள் எப்.எம். அலைவரிசைகளுக்கு மாறிவிட, கைவிடப்பட்ட ஏ.எம். வானொலிகளைத் தன் நிகழ்ச்சிகளை வழங்க அவர் பயன்படுத்திக்கொண்டார்.
முழுநேர வலதுசாரி பரப்புரைக்கான சாத்தியம், தேர்தல் வெற்றிகளுக்கும் செயற்பாட்டாளர்களை தொடர்ந்து ஊக்கத்துடன் வைத்துக்கொள்ளவும் பெருமளவில் உதவியது. இதனை தேசத்திற்கான பெரும் சேவையாகப் போற்றி முன்னாள் அதிபர் ரீகன் 1992-ம் ஆண்டு லிம்பாவிற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார். கிளியர் சேனல் கம்யூனிகேஷன்ஸ் (Clear Channel Communications) நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டில் எட்டு வருட ஒப்பந்தமாக கிட்டத்தட்ட 2000 கோடி டாலர்களை லிம்பாவிற்கு வழங்கியுள்ளது. டிசம்பர் 2019-ல் தினசரி ஒன்றரை கோடி வாசகர்கள் கேட்கும் வானொலி என்ற நிலையில் அவரது வானொலி இருந்தது.
மூளைச்சலவையெனும் தொற்று
நிக்கோல், தனது நூலின் முகவுரையில் – “வலதுசாரி ஆதரவாளரான எனது தந்தையின் 2004-ம் ஆண்டிற்கான குறிக்கோள் என்னை எப்படியாவது ஜார்ஜ் புஷ்ஷிற்கு வாக்களிக்கச் செய்து விட வேண்டும் என்பதே. எங்கள் சந்திப்பின் ஒரு நாள் முழுமையும் லிம்பாவின் வானொலியைக் கேட்பதும், விளம்பர இடைவெளிகளில் விவாதிப்பதும் எனத் தொடர்ந்தது. நாங்கள் எதிரெதிர் அரசியல் நிலைப்பாட்டில் இருந்தாலும் இந்த விவாதம் எங்களுக்கிடையேயான புரிதலையும் அன்பையும் கூட்டியது.” எனக் குறிப்பிடுகிறார்.
தன் தந்தை குறித்து மற்றொரு மகள் எடுத்துள்ள ஆவணப்படத்தைப் (The Brainwashing of My Dad) பற்றிய தகவலையும் ஒப்புநோக்கி பார்க்கலாம். ஜென் சென்கோவின் தந்தை, மனிதம் நிறைந்த மனிதராக இருந்து, வெறுப்புணர்ச்சியின் உச்சத்திற்கு சென்று, மீண்டும் அன்பு துளிர்க்கும் மனிதராக மாறுவது ஆவணப் படத்தின் திரைக்கதை. யதார்த்தத்தில் நிகழ்ந்ததும் அதுவே. முதல் மாற்றத்திற்கான காரணியாக வலதுசாரி ஊடகங்களை, குறிப்பாக லிம்பாவை அனுதினம் கேட்டதும், ஃபாக்ஸ் நியூசை பார்த்ததும் என ஜென் சென்கோ பதிவு செய்துள்ளார். இரண்டாவது மாற்றம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுக்கையில் முடங்கியபொழுது, அவரது இணையர், தொலைக்காட்சியில் சேனலை மாற்றி விட்டதால் நடந்தது.
வரிசைகட்டி நிற்கும் வானொலித் தொகுப்பாளர்கள்
இன்று அச்சு, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய அனைத்து ஊடகவெளிகளிலும் வலதுசாரி ஊடகங்கள் பல்கிப்பெருகி வளர்ந்துள்ளன. இருப்பினும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் வலதுசாரி கட்டமைப்பை நீளச் செய்ததில் பெரும்பங்கு வகிக்கின்றனர். லிம்பாவின் சமகாலத்தவரான ஹியூக் ஹெவிட் 2000 ஆண்டிலிருந்து கிளென் பெக், தனது 17-வது வயதிலிருந்து பென் ஷபிரோ எனத் தொடரும் தொகுப்பாளர்கள் தங்கள் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.
செய்திகளுக்கும் கருத்துகளுக்குமிடையேயான வேற்றுமை அழிப்பு
ஆஸ்திரேலிய-அமெரிக்க ஊடகப் பெருநிறுவனர் ரூபர்ட் முர்டாக் வலதுசாரி ஆதரவாளர்களைக் கவரும் பொருட்டு ஃபாக்ஸ் நியூஸ் என்னும் காட்சி செய்தி ஊடகத்தை உருவாக்கினார். முன்னாள் குடியரசுக் கட்சியின் ஊடக ஆலோசகரும், சிஎன்பிசி ஊடகத்தின் செயல் அலுவலருமான ரோஜர் அய்ல்ஸை அதன் நிறுவன தலைமைச் செயல் அலுவலராக நியமித்தார். ஜனநாயகக் கட்சியை எதிர்மறையான வெளிச்சத்தில் சித்தரித்து குடியரசுக் கட்சியின் வலதுசாரி கருத்துக்களுக்கு ஆதரவான பக்கச்சார்புடைய அறிக்கைகளை வெளியிட்டது ஃபாக்ஸ் நியூஸ். பல தேர்தல்களில் வெளிப்படையாக வலதுசாரிகளுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ளும் ஊடகமாக விளங்கியது, அது.
ஊடகக் கட்டமைப்பில் ஆற்றிய பங்கு, செய்திகளை உருவாக்கும் நேர்த்தி, பார்வையாளர்களைக் கவரும் திறன் ஆகியன அய்ல்ஸை பலம்பொருந்திய நபராக உயர்த்தியது. இணைய ஊடகங்கள் பெருகும் வரையிலும் தொலைக்காட்சி ஊடகத்தின் செயல்பாடு வலதுசாரிகளுக்கு பெரிதும் இன்றியமையாததாக இருந்தது. தமது ஊடகத்தில் செய்திப்பிரிவும் கருத்துப்பிரிவும் தனித்தனியே இயங்குவதாகவும் இவ்விரண்டிற்கும் இடையிலொரு சீனப்பெருஞ்சுவர் இருப்பதாகவும், ஆதலால் தாங்கள் நேர்மையாக நடுநிலையுடன் செய்திகளை வழங்குவதாகவும் அய்ல்ஸ் தெரிவித்திருந்தார்.
ஃபாக்ஸ் நியூஸ் அக்டோபர் 7, 1996 அன்று 1.7 கோடி தொலைகாட்சி சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1990-களின் பிற்பகுதியிலும் 2000-களின் முற்பகுதியிலும் ஃபாக்ஸ் நியூஸ் வளர்ந்து அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் சந்தா செய்தி வலையமைப்பாக மாறியது. செப்டம்பர் 2018 நிலவரப்படி, சுமார் 8.7 கோடி அமெரிக்கக் குடும்பங்கள் (தொலைக்காட்சி சந்தாதாரர்களில் 90.8%) ஃபாக்ஸ் நியூஸைப் பெறுகின்றன. 2019-ம் ஆண்டில், ஃபாக்ஸ் நியூஸ் சராசரியாக 25 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட ஊடகமாக இருந்தது.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலத்தில், ஃபாக்ஸ் நியூஸ், அரசின் செயலாக்கத்திற்கு ஒரு “ஊதுகுழலாக” வெளிப்படையாகப் பணியாற்றி, டிரம்பிற்கு “இடையறா பரப்புரையை”யும் “பின்னூட்ட வளையத்தையும்” வழங்கி, ஒரு அரசு தொலைகாட்சி போல செயல்பட்டது.
இணையத்தில் பதிந்த முதற்தடம்
1990களின் தொடக்கத்திலிருந்தே தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் இணையத்தை செயற்பாட்டுக் களமாகப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டியுள்ளனர். தங்கள் கருத்துக்களைச் செய்திகளாக வடிப்பதற்கும், பகிர்வதற்கும் தொலைதொடர்பு கட்டமைப்புகளைத் தீவிரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
1995-ல் ஸ்டார்ம்பிரென்ட் (Stormfront) என்னும் வெள்ளை மேலாதிக்க, யூத எதிர்ப்பு இணையதளம் கட்டமைக்கப்பட்டது. தொடர்ச்சியாக, தீவிர வலதுசாரி குழுக்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இணைப்பதிலும், இணையத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நிரல்களை அமைப்பதிலும், குறிப்பிட்ட நபர்கள் அல்லது குழுக்களை குறிவைத்து பரிகசிக்கும் வலைப்பின்னல் படைப்பிரிவுகள் (Troll Army) உருவாக்கத்திலும் ஈடுபட்டனர்.
டிரம்ப்பின் இரைச்சல் இயந்திரம்
2008-ம் ஆண்டு துவங்கிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், தோல்வியுற்ற சிக்கனக் கொள்கைகளைத் தொடர்ந்து, பெருநிறுவன தன்னலக்குழுக்களை கேள்விகள் ஏதும் கேட்காமல், நெருக்கடியை புகலிடம் கோரும் புலம்பெயர்ந்தோர் மீதான வெறுப்பாகக் கட்டமைத்ததில் வலதுசாரி ஊடகங்களின் பங்கு பெருமளவில் இருந்தது.
சமூக-பொருளாதார இன்னல்களை இனரீதியான மற்றும் இனவெறி வெறுப்பாக மாற்றியது பிரெக்சிட் [பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது] வெற்றிக்கும் டிரம்ப் பரப்புரைகளின் (2016) வெற்றிக்கும் மையமாக இருந்தது. 2016-ம் ஆண்டுக்கான குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் நியமனம் பெற்ற பிறகு டிரம்ப், மேனியனைப் போன்ற தன்மையுடைய Brietbart என்னும் தீவிர வலதுசாரி சதி வலை பின்னும் இணைய தளத்தின் சர்ச்சைக்குரிய நிறுவனர் ஸ்டீவ் பேனனை தனது தலைமைப் பரப்புரை மேலாளராக நியமித்தார்.
வேட்பாளர் நியமனம் பெறுவோமா என்ற சந்தேகத்துக்குரிய நிலையிலிருந்து, நியமனம் பெற்று, அமெரிக்கா இரண்டாகப் பிளவு பெற்று நிற்குமளவு வெறுப்பு பரப்புரை மேற்கொண்டு, தேர்தலையும் வென்றார். பின்னர் ஆட்சி அதிகாரத்திலும் பங்குபெற்று, வலதுசாரி ஊடகங்கள் பேனனின் நகலாக மாற விரும்பும் உருவமாக மாறினார். பேனனின் ஏற்றத்தில் அய்ல்ஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற ஜனநாயகத்தை வளர்க்கும் கருவிகள் எனக் கூறப்பட்ட இணைய சமூக ஊடகத் தளங்கள் சதிக் கோட்பாடுகள் “தெளிவான” பொய், புனைவு மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கான வளமான களங்களாக மாறின. ஆனால் இந்த பரப்புரைகள் வெறுமனே வெகுஜன மக்கள் கோபத்தின் ஜனநாயக வெளிப்பாடுகளாக இருக்கவில்லை. மாறாக, ஸ்டீவ் பேனன் பெருந்தனவந்தர் ராபர்ட் மெர்சர் போன்றவர்களின் திட்டமிட்ட செயல்பாடுகளால் தூண்டப்பட்டவையாகவே இருந்தன. தற்போது செயல் முடக்கப்பட்டு விட்ட அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்பட்ட அரசியல் விளம்பரங்களை பரப்பி வலதுசாரிகளின் “கலாச்சாரப் போரை” முன்னேற்றியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
(தொடரும்)
(கட்டுரையாளர் விக்ரம் கௌதம், மென்பொருள் பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.