Aran Sei

`டான்’ – லும்பன் கலாச்சாரம், மாணவர் அரசியல், முதல் தலைமுறை பட்டதாரிகள் – ஒரு பார்வை

மிழ் சினிமாவின் சமகால கமர்ஷியல் திரைப்பட இயக்குநர்கள் பலருக்கும் கதாநாயகர்கள் மைக் பிடித்து பேசுவதற்கான மேடை, நீதிமன்றம், பிரஸ் மீட் முதலானவை இல்லாமல் ஒரு கருத்தைக் காட்சிகளின் மூலமாக சொல்லத் தெரிவதில்லை. இது தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடந்து வருகிறது. அதில் `டான்’ விதிவிலக்கல்ல. ஆனால் அது மேடையில் வலிந்து பேசியிருக்கும் விவகாரம் முக்கியமானது.

சமீப காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி குழு மோதல்களிலும், வன்முறையிலும் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். அது ஹீரோயிசம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் விதைத்ததில் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்குண்டு. அதனை உடைக்கும் விதமாக சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். `தேவர்மகன்’ பாணியிலான `புள்ள குட்டிங்கள படிக்க வையுங்கடா’ டெம்ப்ளேட் தான் என்ற போதும், `டான்’ முக்கியமான இந்த விவகாரத்தைப் பேசியிருக்கிறது. வாட்சாப் ஸ்டேட்டஸ்களில் அந்த மேடைப் பேச்சு பகிரப்படலாம்; பகிரப்பட்டால் அதுவே படத்தின் வெற்றி.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த கல்வியறிவு பெறாத தந்தைகளுக்குச் சமர்ப்பணம் போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், தமிழக குடும்பங்களின் அன்றாடம் நிகழும் சிக்கல்களைப் பேசுகிறது. பட்டதாரியாக மகனை உருவாக்க நினைக்கும் தந்தை, கல்வி மீது வெறுப்பு கொள்ளும் மகன் என்ற ரீதியில் ஹீரோயிசம் உருவாக்கப்பட்டிருந்தாலும், இறுதிக் காட்சியில் அதற்கு நேரெதிர் உணர்வை உருவாக்கியுள்ளது `டான்’. கோடை விடுமுறையில் குடும்பங்களால் இந்தக் கதைக்களங்கள் பெரிதும் கொண்டாடப்படும்.

உலகமயமாக்கலுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பொறியியல் பட்டப்படிப்பை அனைவரும் படிக்கும் விதமாக திறந்து கொடுத்தது திராவிட இயக்கம். அடிப்படையில் கடும் சுரண்டலை மேற்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கூலிப் பணியாளர்களை உருவாக்கும் படிப்பு என்ற போதும், அதில் சுயமரியாதை இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியது. தொடர்ந்து, உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் பொறியியல் பட்டதாரிகளை வேலையில்லா பட்டதாரிகளாக மாற்றியது. பொறியியல் படிப்பைக் கலாய்ப்பது, எஞ்சினியர்கள் என்றாலே அப்படித்தான் போன்ற சித்தரிப்புகள் தொடங்கி, தற்போது பட்டப்படிப்புகளுக்கு நேரெதிராக புகைப்படம், சினிமா போன்ற கலைகள் முன்வைக்கப்பட்டு, அதிலும் வெற்றி பெறுபவர்களின் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. யதார்த்தத்தில் கலைத்துறைகளில் சாதித்தவர்களை விட, பொறியியல் பட்டப்படிப்பு பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகள் பலர் தங்கள் குடும்பங்களை முன்னேற்றியிருக்கிறார்கள். இதனைப் பேசுபொருளாக்க திரைப்படங்கள் முன்வர வேண்டும். இவற்றைப் பேசும் திரைப்படங்கள் பெரும்பாலும் கலாச்சார அதிர்ச்சி மதிப்பீடுகளை உருவாக்கும் ஆண் – பெண் உறவுகளுக்குள் சுருங்கி விடுகின்றன.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

அடுத்ததாக, `டான்’ எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களம் கல்லூரியின் அடிப்படையிலானது. மாணவர் சக்தி என்பது திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சொத்து. ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது, என் மாணவர் ஒருவர் திமுகவில் இணைந்திருந்ததோடு, கல்லூரியில் அதுகுறித்து பிரசாரமும் மேற்கொள்வார். என் வகுப்பில் அவரைப் பல முறை ஊக்குவித்திருக்கிறேன். ஆனால் அவரது அரசியல் என்பது வெள்ளைச் சட்டை அணிந்து, பொதுக்கூட்டங்களுக்குச் செல்வது, கட்சி பிரமுகர்கள் வரும்போது நலத்திட்ட உதவிகள் செய்வது, அதற்கு தன் தெருவைச் சேர்ந்த மக்களை அழைத்து வருவது, தேர்தல் பிரசாரத்தின்போது கொடி பிடித்து நோட்டீஸ் விநியோகிப்பது என்பதோடு சுருங்கிய அரசியல். சமீபத்தில் திமுகவின் இளைஞரணி மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, மதுரை, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிருத உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களால் நடத்தப்பட்டு, மாணவர்களால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இயக்கத்தின் நிலை இப்படியாகியிருப்பதன் பின்னணியில் உலகமயமாக்கல் என்ற கொள்கை இருந்தாலும், அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் மாணவர் சமூகத்தை ஆட்சியாளர்களே விரும்பவில்லை என்பது தான்.

சகுந்தலா தேவிக்கு ஒரு நீதி, அய்யன் மணிக்கு ஒரு நீதி – ர.முகமது இல்யாஸ் 

காந்தி படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு, மாணவர்களை வைத்து அபினவ் பாரத் வித்யார்த்தி பரிஷத் அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பு இந்தியா முழுவதும் சங் பரிவாரின் மாணவர் அமைப்பாக, கல்வி நிறுவனங்களில் முதன்முறையாக நுழையும் ஒரு தலைமுறையையே சீரழித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது இந்த அமைப்பு. வலதுசாரி அமைப்புகள் ஒருபக்கம் இருக்க, தமிழ்நாட்டில் சில அரசு கல்வி நிறுவனங்களில் இடதுசாரி அமைப்புகள் பணியாற்றுகின்றன. ஆனால் அவற்றின் எல்லை என்பது மிகக்குறைவு. பலம்வாய்ந்த அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் அவற்றின் தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசுபவையாக மாறியிருப்பதும், அவற்றைக் குறித்து திராவிட இயக்கத் தலைமைகளுக்குப் போதிய வருத்தம் இல்லாமல் இருப்பதும் நம் காலத்து துயரம். மாணவர்கள் சீமான், கமல் ஹாசன் போன்றோரை மாற்றாக கருதுவதே இதன் சான்று.

`டான்’ படத்தின் இந்த மாணவர் சமூகத்தின் ஆற்றலை வைத்து, ஆசிரியர்கள் தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் என்பது போன்ற விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெஸ்ட் எஞ்சினீயரிங் கல்லூரி Since 1980 என்று எம்ஜிஆர் காலத்து ரெஃபரன்ஸ், எம்ஜிஆர் பாணியிலான கல்வித் தந்தையாக ராதாரவி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது ஆகியவை ஈர்த்தன.

பெரியார் : இந்துத்துவத்திற்கு எதிரான பாதுகாப்பு அரண் – ர.முகமது இல்யாஸ்

தற்போதைய கல்லூரிகளில் ஆண் – பெண் மாணவர்கள் இடையிலான உரையாடல்களுக்குத் தடை, `காதல்’ என்ற உணர்வின் மீதான கல்வி நிறுவனங்களின் `ஒழுங்கு’ நடவடிக்கை என அட்டகாசமான கதைக்களம் இருந்தும், அதனைப் பேசத் தவறியிருப்பதோடு, முழுவதுமாக கோட்டை விட்டிருக்கிறார்கள். அதே போல மீண்டும் stalking என்பதையே காதலாக மாற்றுவோருக்கு, இந்த சென்சிபிளான விவகாரங்கள் நிச்சயம் பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஷங்கரின் அசிஸ்டெண்ட் அட்லீயின் அசிஸ்டெண்ட் சிபி சக்ரவர்த்தி தான் படித்த சத்தியமங்கலத்தின் பிரபலமான கல்லூரியைக் கலாய்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. அவரது முன்னோடிகளின் பிரம்மாண்ட பம்மாத்து ஆங்காங்கே தெரிந்தாலும், மொத்தமாக `டான்’ கவர்கிறது. `குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்று ஃபேமிலி ஆடியன்ஸ் தலையில் கட்டத் தேவையில்லை, ஏனெனில் `டான்’ குறி வைத்திருப்பதே அவர்களைத்தான்.

கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். 

******************                         ****************************                      *******************************

டான் திரைப்படம் விமர்சனம்

 

 

`டான்’ – லும்பன் கலாச்சாரம், மாணவர் அரசியல், முதல் தலைமுறை பட்டதாரிகள் – ஒரு பார்வை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்