Aran Sei

பாஜக “நாகரீகம் இருக்க வேண்டிய இடத்தில் வக்கிரத்தை” வைத்திருக்கிறது – உத்தவ் தாக்ரே

பாஜக “நாகரீகம் இருக்க வேண்டிய இடத்தில் வக்கிரத்தை” வைத்திருக்கும் போது, எப்படி எதிர்காலத்தில் அவர்களோடு கூட்டணி வைக்க முடியும் என மஹாராஷ்டிரா முதலமைச்சரும், சிவ சேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மஹாராஷ்டிராவின் முத்தரப்பு கூட்டணியான மஹா விகாஸ் அகாதி அரசு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இதையொட்டி எடுக்கப்பட்ட பேட்டியில், “எங்கள் பதில் நாகரீகமானதாகவே இருக்கும். இதை நான் மிகத் தெளிவாக சொல்கிறேன். நாகரீகம் , வக்கிரம் எனும் இரண்டு பக்கங்களுக்கு மத்தியில் ஒரு பிரச்சினை இருக்கும் போது, எப்போதுமே நாகரீகம் தான் வென்றிருக்கிறது என்பதை வரலாறு நமக்கு காண்பித்திருக்கிறது” என்கிறார் உத்தவ் தாக்ரே.

2019, நவம்பர் 28 அன்று, சற்றும் எதிர்பார்க்காத விதத்தில், மஹாராஷ்டிராவின் முதல்வராக தாக்ரே பதவியேற்றார். பாஜகவோடு நெடுங்காலமாக கூட்டணியில் இருந்த சிவ சேனா, அதிலிருந்து விலகி காங்கிரஸுடனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்தது. சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து தான் அரசை கட்டுபடுத்த வேண்டும் எனும், சிவ சேனாவில் கொள்கையை உடைத்து அரசில் பதவி ஏற்றிருக்கும் முதல் நபர் உத்தவ் தாக்ரே தான்.

நிர்வாகத்தை கையாள்வதில் அனுபவம் இல்லாதவர் என பார்க்கப்பட்ட உத்தவ் தாக்ரே, முதல்வரான முதல் வருடத்திலேயே கொரோனா பெருந்தொற்று எனும் சவாலை சந்தித்தார். எதிர்க்கட்சி பாஜகவால் தொடர்ந்து தாக்கப்பட்டு கொண்டு, இரண்டு கூட்டணி கட்சிகளை கையாண்டு கொண்டும், முத்தரப்பு கூட்டணி நவம்பர் 28 அன்று ஓராண்டை நிறைவு செய்தது. தி ஹிந்துவின் அலோக் தேஷ்பாண்டே, உத்தவ் தாக்கரேவின் அனுபவமின்மை, பாஜகவின் தொடர் தாக்குதல்கள், அரசை நிலைகுலையச் செய்வதற்கான முயற்சிகள் குறித்தும், உத்தவ் தாக்கரே முழுமையாக ஐந்தாண்டுகள் முதல்வராக தொடர்வரா என்பது குறித்தும் அவரிடம் பேசினார்.

முத்தரப்பு எம்.வி.ஏ கூட்டணி ஆட்சியமைத்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு சாத்தியமில்லாதிருந்த ஒரு கூட்டணி அமைத்தது தொடங்கி முதல் முறையாக சட்டமன்ற பதவியேற்றது வரை, ஒரு வருடம் உங்களுக்கு எப்படி போனது?

எதிர்ப்பார்க்கப்படாத இந்த அரசை அமைத்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. யாருமே இப்படி ஒரு அரசு அமைக்கப்படும் என கற்பனை கூட செய்தது இல்லை; அரசமைந்ததும், இது செயல்படுமா என்பதில் பல சந்தேகங்கள் இருந்தன. எனக்கு அரசு நிர்வாக அனுபவம் இல்லததால், என்னால் இதை செய்ய முடியுமா என பலர் சந்தேகப்பட்டனர். சரத் பவாருக்கும், சோனியா காந்திக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் ஆட்சி செய்தோம். இந்த பரிசோதனையை மக்கள் பேருவகையோடு வரவேற்றார்கள். பெருந்தொற்று இருந்தாலுமே, ஒரு கூட்டு முயற்சியாக இந்த அரசு அதன் கடமைகளை செய்தது.

உங்களுக்கு அரசு நிர்வாக அனுபவம் இல்லை என்று குறிப்பிட்டீர்கள். ஒரு கூட்டணி அரசை நடத்துவது எவ்வளவு சிரமமாக இருந்தது?

நான் இதற்கு முன் முதல்வராக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எனக்கு அதிகாரம் என்றால் என்ன, அது எப்படி இயங்கும் என்பது தெரியும். நான் இந்த நாற்காலியில் இருக்கும் போது இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், பிறரிடம் கோரிக்கைகள் வைக்காமல் நானே முடிவுகளை எடுக்கிறேன். நான் எப்போதுமே குழு முயற்சியை நம்புபவன். இது எதிர்காலத்திலும் தொடரும். நான் என்னுடைய இரண்டு கூட்டணி கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்தில் மாட்டிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் சொல்வதை கேட்பது அழுத்தம் அல்ல. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் படை ஒன்று என்னை சூழ்ந்திருப்பதற்காக நான் விமர்சிக்கப்படுவதை கேள்விப்பட்டேன். என்னை சூழ்ந்திருப்பதை தவிர அவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? அவர்களுடைய ஒத்துழைப்பை வைத்து தான் நாம் அரசை நடத்த வேண்டும். அதிகாரிகள் என்னை முதல் நாளில் இருந்தே ஆதரித்து தான் வருகிறார்கள்

முதலமைச்சராகவும், சிவ சேனா தலைவராகவும் தொடர்ந்து பாஜகவின் தாக்குதலுக்கு ஆளாகிறீர்கள். உங்களுடைய மகன் ஆதித்திய தாக்கரேவையும், மனைவு ராஷ்மியையும் கூட பாஜக தாக்கி பேசியிருக்கிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?

நாங்கள் எப்போதுமே வக்கிரமான அரசியலை செய்தது இல்லை; எதிர்க்கட்சியினரின் உறுப்பினர்களின் குடும்பங்கள், மகன்கள், மனைவிகள் குறித்து தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் நடத்தவில்லை; அவர்களுடையை வாழ்க்கையை அழிக்க வேண்டும் என முயற்சித்ததில்லை. மோடியையும், அமித் ஷாவையும் அவர்கள் கொள்கைகளுக்காகவே குறி வைத்து பேசினேனே தவிர, தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக இல்லை. இது என்னுடைய இந்துத்துவா இல்லை. என்னுடைய இந்துத்துவா நாகரீகமானது. இப்படியான வக்கிரத்தை அனுமதிக்கும் கட்சி இந்துத்துவாவை குறித்து பேசக் கூடாது. என்னுடைய தாத்தாவின், அப்பாவின் இந்துத்துவாவை தான் நான் பின்பற்றுகிறேன். பாஜக செய்வது இந்துத்துவா அல்ல மோசடி. அவர்கள் இந்துத்துவாவின் மீதிருக்கும் கறை.

இதற்கு நீங்கள் நிரந்தரமாகவே பாஜகவுடன் ஆன உறவுகளை முறித்துக் கொண்டீர்கள் என்று பொருளா?

நான்கு வருடங்கள் கழித்து நடப்பதை குறித்து நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். இப்படி ஒரு வக்கிரமான கட்சியோடு எப்படி நாங்கள் இருபத்தைந்து வருடங்கள் நட்பாக இருந்தோம் என ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களிடம் நாகரீகத்திற்கு பதிலாக வக்கிரம் இருந்தால் எப்படி கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்?

நடக்கவிருக்கின்ற பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல்களில் எம்.வி.எ கூட்டணி தொடருமா?

ஆமாம். இந்த தேர்தலில் நாங்கள் கூட்டணியாகவே போட்டியிடுகிறோம். 2019 தேர்தல்களுக்கு பிறகு நாங்கள் வெற்றிகரமாக இந்த கூட்டணியை அமைத்தோம். இன்று ஒன்றாக நிற்கின்றோம். மாநகராட்சி தேர்தல்களில் எம்.வி.எ எனும் கூட்டணியாகவே போட்டியிடுவோம்.

மும்பை மாநகராட்சியில் சிவ சேனாவை வீழ்த்த பாஜக திட்டமிட தொடங்கிவிட்டது. நீங்கள் எப்படி தயாராகிறீர்கள்?

பாஜக மீண்டும் காலூன்றி நிற்பதற்கு மும்பையை வென்றே ஆக வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறது போல தெரிகிறது. எத்தனை மாநிலங்களை வென்றாலும், மும்பையை வெல்ல வேண்டும் எனும் பேராசை இருந்து கொண்டே தான் இருக்கும். மும்பையை வெல்ல முடியாதது அவர்களுக்கு வேதனையாகவே இருக்கும். போன முறை முயற்சித்து பார்த்தார்கள். இந்த முறை நாங்கள் மூன்று பேர் (எம்.வி.எ கூட்டணி) இருக்கிறோம். மும்பை சிவ சேனாவோடு இருக்கிறது, அப்படியே தான் இருக்கும்.

ஒரு வருடத்திற்கு முன் நீங்கள் பதவியேற்ற போது மத்திய அரசிடம் இருந்து சிக்கல்கள் வரும் என எதிர்பார்த்தீர்களா? மாநில அரசு இயங்குவதற்கு தடையாக மத்திய அமைப்புகள் ஏதாவது செய்கின்றனவா?

ஒரு ஜனநாயக குடியரசில் இப்படி ஒரு கேள்வி இருக்கலாமா? பிரதமர் உட்பட, நாங்கள் எல்லோரும், ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டு தான் பதவியேற்றிருக்கிறோம். நம் மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. எந்த அரசியல் கட்சி ஆள்கிறது என்பதை வைத்து எப்படி அவற்றை பிரித்து பார்க்கிறோம்? வக்கிரமான செயல்பாடுகள் தான் நம்முடைய பிரச்சினை. அதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. எங்களுடைய பதில் நாகரீகமானதாகவே இருக்கும்.இதை நான் மிகத் தெளிவாக சொல்கிறேன். நாகரீகம் , வக்கிரம் எனும் இரண்டு பக்கங்களுக்கு மத்தியில் ஒரு பிரச்சினை இருக்கும் போது, எப்போதுமே நாகரீகம் தான் வென்றிருக்கிறது என்பதை வரலாறு நமக்கு காண்பித்திருக்கிறது.

மாநில அமைச்சரவை சமர்பித்த 12 கவுன்சில் உறுப்பினர்களின் பட்டியலை மஹாராஷ்டிரா ஆளுநர் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? அவரிடம் பேசினீர்களா?

மாநில அமைச்சரவையாக நாங்கள் அவருக்கு பட்டியலை அனுப்பியிருக்கிறோம். அது குறித்த எந்த தகவலையும் அதற்கு பிறகு நான் கேட்கவில்லை. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆளுநரின் உரிமைகள், மாண்பு மற்றும் நோக்கம் தான் இங்கே இருக்கும் மூன்று முக்கியமான விஷயங்கள்.

உங்களுடைய அரசு இரண்டு மாதங்களில் வீழ்ந்துவிடும் என பாஜக எம்.எல்.ஏக்கள் சொல்கின்றனர். உங்கள் அரசு ஆபத்தில் இருக்கிறதா?

பாஜக தங்கள் கூட்டத்தை ஒன்றாக வைத்துக் கொள்ள இதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நம்பிக்கையில் தான் பாஜக எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள். வேறொரு காரணமும் இல்லை.

உங்கள் ஆட்சிக்காலத்தில் 70% கோவிட்-19 தாக்கம் இருந்திருக்கிறது. அதனால் நடைமுறைபடுத்த முடியாத திட்டங்கள் ஏதேனும் வைத்திருந்தீர்களா?

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பெருந்தொற்று காரணமாக நடத்தமுடியவில்லை. முழு கவனமும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மீது தான் இருந்தது, உடனடியாக மீட்பு வேலைகளில் ஈடுபட வேண்டியதாக இருந்தது. சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், மருத்துவமனைகளின் இப்போதைய நிலையை முன்னேற்ற வேண்டும், மருந்துகள் விநியோகம் நடப்பதை உறுதி செய்ய வேண்டும், நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். இது அடுத்த பட்ஜெட் தொடரில் சேர்க்கப்படும் என்றாலும் இவற்றில் பெரும்பாலான திட்டங்களை நடைமுறைபடுத்த தொடங்கிவிட்டோம்.

உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை வைத்து எதிர்க்கட்சி உங்களை குறி வைத்திருக்கிறது. உங்கள் கட்சி சலுகைகள் தருவதாக சொல்லியிருந்தது ஆனால் அது நிறைவேற்றப்படவில்லையே?

சிவ சேனா அறிக்கையில் மின் கட்டணத்தில் சலுகைகள் கொடுக்கப்படும் என்று இருந்தது. அது தேர்தல் வாக்குறுதி. நிறைவேற்றப்படும். மாநிலத்தின் வளங்களை பாதிக்கும்படி கோவிட் சூழல் இப்படி ஆகும் என நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஒன்றை உறுதியாக சொல்கிறேன் “அச்சே தின்” வேடிக்கை போன்றதல்ல எங்களுடைய வாக்குறுதி. கொரொனா வைரஸ் தாக்கவில்லை என்றால் சலுகைகளை அளித்திருப்போம். விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்திருக்கிறோம். ‘சிவ் போஜன்’ திட்டத்தின் கீழ் உணவு வழங்கினோம். மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை என்ன நிலையில் இருக்கிறது? அது எப்போது முடிவுக்கு வரும்?

இந்த பிரச்சினையை பெரிய நீதிபதிகளின் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை விரைவாக விசாரிக்க முறையீடு செய்து கொண்டிருக்கிறோம். அதன் பிறகு, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மராத்தா இட ஒதுக்கீடு மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கும் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் நிலுவையில் தான் இருக்கின்றன. நாங்கள் நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்குறோம், ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

பாஜக “நாகரீகம் இருக்க வேண்டிய இடத்தில் வக்கிரத்தை” வைத்திருக்கிறது – உத்தவ் தாக்ரே

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்