Aran Sei

“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்

த்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை குறைத்துள்ளதாக கூறுகின்றார். பல்வேறு மோதல்கள் (Encounter) குறித்து என்ஐஏ நடத்தி வரும் விசாரணை தாமதப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

கேள்வி : சத்தீஸ்கரில் எந்த அளவு இடது சாரி தீவிரவாதம் விரிவடைந்திருக்கிறது?

சத்தீஸ்கர் பிரதேசத்தின் பாதி, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நக்சலிசத்திற்கு தீர்வாக உருவாக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்லாகவே இருக்கின்றன. இந்த மாதிரி திட்டங்களால், பல பழங்குடியின மக்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். பாதுகாப்புப் படைகளுக்கும், நக்சல்களுக்கும் இடையே மாட்டிக் கொண்டு, எந்தக் காரணமுமே இல்லாமல் துன்புறுத்தப்பட்டார்கள்.இதன் காரணமான மக்களின் கோபம், கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெளிப்பட்டன. மக்களின் நம்பிக்கையை வெல்லும் வரை, இந்தப் போரை வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டோம். 1,700 விவசாயிகளுக்கு 40 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தோம். 5,000 ஹெக்டேர் நிலத்திற்குத் தனி உரிமைகளையும், சமூக உரிமைகளையும் கொடுத்தோம். வெறும் கணக்கு வழக்குக்காக மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

முக்கிய நக்சல் தலைவர்கள் எல்லாம், ஒன்று கொல்லப்பட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டார்கள். 2017-18 ஆண்டில், 350 நக்சல்கள் சரணடைந்தார்கள். இந்த ஆண்டு 302 நக்சல்கள் சரணடைந்திருக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்க முயற்சிக்கிறோம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, பாதுகாப்புப் படைகளுக்காக மட்டுமல்ல, உள்ளூர் மக்கள் பயணிக்க சந்தைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்ல சாலைகள் அமைக்க வேண்டும் என சொன்னேன். துப்பாக்கி முனையில் இதற்கு ஒரு தீர்வைக் காண முடியாது; இது ஒரு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினை.

கேள்வி : 2018-ம் ஆண்டு, இடது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் இருந்து மூன்று மாவட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.  இன்னும் கூடுதலான மாவட்டங்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட இருக்கின்றனவா?

மத்திய அரசு, சத்தீஸ்கருக்கு வழங்கும் நிதியின் பெரும்பகுதியை இப்போது கொடுப்பதில்லை. இது குறித்து உள்துறை அமைச்சருக்கு எழுதியிருக்கிறோம். முன்னர் 60:40 (மத்திய : மாநில) எனும் விகிதத்தில் சாலைகள் அமைக்க எங்களுக்கு நிதி கிடைத்தது. இந்தியாவில் 110 முன்னுதாரண மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டதில் 10 மாவட்டங்கள் சட்டீஸ்கரில் இருந்தவை. ஒன்பது மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தவை, ஆனால் சுகாதார துறையோ, கல்வித் துறையோ அதற்கென தனியே நிதி ஒதுக்கப்படவில்லை. இது போன்ற தடைகள் எல்லாம் இருந்தும், பிஜாபூர் மாவட்டம் நன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

கேள்வி : இன்னமும், அரசு நிர்வாகத்துக்கு வெளிய ஒரு பெரிய பகுதி இருக்கிறதே?

அபுஜ்மாத் பகுதி மகாராஷ்டிரா மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்திலும் இருக்கும் பகுதி. பீஜாபுர் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்களை எல்லாம் நம்மால் அடைய முடிவதில்லை, அதனால், இயற்கையாகவே அங்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாது. கட்டமைக்கப்பட்ட ஸ்டீல் பாலங்கள் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் இது போன்ற பாலங்கள் கட்டப்படும் என்றால், ஏன் இங்கே அதை செய்யக்கூடாது? நிறைய ராணுவ வீரர்கள் சாலை கட்டுமானத்திற்குப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போது உயிரிழக்கிறார்கள். ஆந்திரபிரதேசத்தின் எல்லையைத் தொடும் இடங்களில் எங்களுக்கு முகாம்கள் எதுவும் இல்லை. சமீபத்தில்தான் மத்திய படைகளின் ஐந்து பாட்டாலியன்களுக்கு முகாம் அமைக்க அனுமதி கிடைத்தது. இப்போது இருக்கும் ஐம்பது கிமீ இடைவெளியை 5-10 கிமீ இடைவெளியாக மாற்றும்படி முகாம்கள் அமைக்கப்படும்.

கேள்வி : தேசிய புலனாய்வு அமைப்பும், மகாராஷ்டிரா காவல்துறையும் 2018 பீமா கோரேகான் வழக்கில் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட சில செயற்பாட்டாளர்களைக் கைது செய்திருக்கின்றன. சுதா பரத்வாஜ் கடந்த சில வருடங்களாகச் சத்தீஸ்கரில் இயங்கிக் கொண்டிருந்தவர். இந்த வழக்கில் அவருடைய பங்கு என்னவாக இருக்கும் என சத்தீஸ்கர் காவல்துறை கணிக்கிறது?

‘அர்பன் நக்சல்’ எனும் வார்த்தை அர்த்தமில்லாமல் பயன்படுத்தப்படுகிறது, அர்பன் நக்சல் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடிகிறது, இது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஆனால், நகரங்களில் வாழ்ந்து கொண்டு, நக்சல்களுக்கு பணமும் ஆயுதமும் கொடுக்கும் உண்மையான அர்பன் நக்சல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது சத்தீஸ்கர் அரசுதான். கான்கெர் மாவட்டத்தில் இருக்கும் லேண்ட்மார்க் எஞ்சினியரிங் நிறுவனத்தின் பெயரை குறிக்க விரும்புகிறேன்; இவர்களுக்குப் பிலாஸ்பூரிலும் அலுவலகங்கள் இருக்கின்றன. நிறுவனர் விஷால் ஜெயின். ராஜ்நந்த்காவுனில் இருக்கும் ருத்ரான்ஷ் கட்டுமான நிறுவனம், அதன் நிறுவனர்கள் அஜய் ஜெயின் மற்றும் ஊழியர் கோமல் வர்மா, இவர்கள் எல்லோரும் தொடர்ந்து நக்சல்களுக்கு ஆயுதங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அவர்களைக் கைது செய்தோம், அவர்களுடைய இணையத்தை உடைத்தோம். வெடிகளும், காலணிகளும், பச்சை சீருடைகளும், வாக்கி-டாக்கிகளும், மின் வயர்களும் விநியோகித்துக் கொண்டிருந்த சிலரைக் கைது செய்தோம். கடந்த ஆறு மாதங்களில் இந்தக் கைதுகள் எல்லாம் நடந்தன. டெல்லியில் இருந்து ஆட்கள் இங்கே வந்து, ஐந்தாறு வருடங்களில் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். இந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாம் ஒப்பந்த வேலைகள் எடுத்து, நக்சல்களுக்குப் பணத்தை கொடுத்தார்கள். அவர்கள் தான் உண்மையில் அர்பன் நக்சல்கள். அவர்களுக்கு தான் மேலிடம் வரை தொடர்புகள் இருந்தன.

எங்களுக்கு சுதா பரத்வாஜை தெரியும், என்னுடைய தொகுதியிலும் அவர் வேலை செய்தார். அவர் வழக்கறிஞராக வேலை செய்ததை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு நக்சல்களுடன் தொடர்பிருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால், ஒரு வேளை அவருக்கு எதிராக ரகசிய தகவல்கள் எதாவது வந்திருக்கலாம். ஆனால், எங்களிடம் அப்படியான தகவல்கள் இல்லை.

கேள்வி : அவர்களுக்கு இரண்டு வருடங்களாக ஜாமின் அளிக்கப்படாமல் இருக்கிறதே…?

இந்தக் கேள்வியை மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும். 2013 ஜிராம் கதி வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பிற்குக் கொடுக்கப்பட்டது. அவர்களால் எந்த சாட்சியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் அதை இப்போது விசாரிக்க கேட்கிறோம், ஆனால், அதை மத்திய அரசு தர மறுக்கிறார்கள். நாங்கள் முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம். நீதிமன்றத்திற்குக் கூட போனோம். 2019 பொதுத் தேர்தல்களின் போது ஒரு பாஜக எம்.எல்.ஏ கொலை செய்யப்பட்டார், அது தொடர்பான விசாரணையை நாங்கள் முடித்து விட்டோம். திடீரென, மத்திய அரசு புலனாய்வு அமைப்பு விசாரணை ஒன்றை அறிவித்தார்கள். எல்லா ஆவணங்களையும் புலனாய்வு அமைப்பு எடுத்துக்கொண்டு போனது. நாங்கள் மத்திய அரசுக்கு அனுமதி தரவில்லை. தேசியப் புலனாய்வு அமைப்பு இடையிட்டு, வழக்குத் தொடர்பான மொத்த விவரங்களையும் அவர்களுக்குத் தர வேண்டும் என்றது. யாரை காப்பாற்ற பார்க்கிறார்கள் இவர்கள்?

கேள்வி : தேசிய புலனாய்வு அமைப்பு யாரைக் காப்பாற்ற முயற்சிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

2019 ஆகஸ்ட் மாதம் விக்யான் பவனில் நடந்த முதலமைச்சர்கள் கூட்டட்த்தில் இந்தப் பிரச்சினை குறித்து பேசினோம். உங்களால் எதுவும் பண்ண முடியாதென்றால் விசாரணையை எங்களுக்குக் கொடுங்கள் என்றோம். இப்போது புலனாய்வு அமைப்பிடம் என்ன இருக்கிறது? இது ஒரு திட்டமிட்ட சதி என்பதை அவர்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. வித்யா சரண் சுக்லா, மகேந்திரா கர்மா போன்றோர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நக்சல்கள் பெயர்களை எல்லாம் கேட்டு கொலை செய்ய மாட்டார்கள்; அத்தனை வாகனங்களையும் வெடி வைத்து தகர்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுவார்கள். ஆனால், இந்த வழக்கில் பெயர்களை கேட்ட பிறகு தான் சுட்டார்கள். இது சதி இல்லையா? இதை ஏன் என்.ஐ.ஏவின் விசாரணையில் எழுதவில்லை?

மாநில காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் நக்சல் தலைவர்கள் பெயர் எல்லாம் இருந்தது. ஆனால், புலனாய்வு துறையின் விசாரணையில் இந்த பெயர்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. தாஜ் ஹோட்டல் 2011-ல் தகர்க்கப்பட்ட போது, பாகிஸ்தானில் உட்கார்ந்திருந்த தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படவில்லையா? ஆந்திர சிறையில் இருக்கும் குட்ஸா உஸெண்டியின் (2014 ஜனவரியில் சரணடைந்த மாவோயிஸ்ட் தலைவர்) வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என புலனாய்வு துறையின் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், ஏன் புலனாய்வு துறை அதை செய்யவில்லை? யாரை பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள்? இது 2020. இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது 2013-ம் ஆண்டில். நிச்சயமாக எதையோ மறைக்கிறீர்கள்.

கேள்வி : நீங்கள் சொல்லும் பெரிய தலைவர்கள் யார் ?

கணபதி – மூத்த மாவோயிஸ்ட் தலைவர்- ஏன் அவருடைய பெயர் நீக்கப்பட்டது. நக்சல்களை வழிநடத்திச் சென்றது அவர் தான், ஏன் குட்ஸா உசெண்டியை புலனாய்வு அமைப்பு கேள்வி கேட்கவில்லை?

கேள்வி : கணபதி எங்கே இருக்கிறார்?

நாங்கள் அவரைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஆப்ரேஷன்கள் எல்லாம் நடத்துவதில்லை. எந்த அமைப்போ, காவல்துறையோ அவரை இன்னும் பிடிக்கவில்லை. மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஒடிசா எல்லைகளில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால், அவர் கைது செய்யப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி : கணபதியின் சமீபத்திய புகைப்படம் காவல்துறையிடம் இல்லாதது உளவுத்துறையின் தோல்வி தானே?

ஆமாம். நீங்கள் சொல்வது சரி. ஒரு புகைப்படத்தை தவிர எங்களிடம் வேறு புகைப்படங்கள் எதுவும் இல்லை. இது பாதுகாப்பு அமைப்புகளுக்கும் உளவுத்துறைகளுக்கும் சவாலாக இருக்கிறது.

கேள்வி : பெகஸஸ் விசாரணைக்கு என்ன ஆனது?

நாங்கள் விசாரித்தோம். என்.எஸ்.ஓ எனும் இஸ்ரேயிலை சேர்ந்த நிறுவனத்தால் இங்கே எந்த அதிகாரிகள் முன்னும் எந்த செய்முறையும் நடக்கவில்லை என்று தெரிந்தது. எந்த சாட்சியங்களுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

கேள்வி : மத்திய அரசின் சட்டங்களை மறுக்கும் ஒரு சட்டத்தை உங்கள் அரசு கொண்டு வந்தது. ஆனால், பஞ்சாபில் நடப்பது போல விவசாயிகள் போராட்டங்கள் எதுவும் சத்தீஸ்கரில் நடக்கவில்லை.

சத்தீஸ்கர் பிரதானமாக ஒரு விவசாய மாநிலம். எங்கள் மக்கள்தொகையில் 80% விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். இந்த சட்டம் அவர்கள் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும். முதலில், எந்த விவசாயிகள் அமைப்போ, எந்த அரசியல் கட்சியோ இப்படி ஒரு சட்டம் வேண்டுமென கேட்கவில்லை. இது விவசாயிகளை மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட சட்டம் இல்லை. இது முதலாளிகளுக்கு உதவும் சட்டம். இப்போது இருக்கும் கொள்முதல் மற்றும் விவசாய உற்பத்தி முறைகளை எல்லாம் ஒரு தனி நபர் தவிர்த்து விட்டு வேறு வழியில் செல்ல இது அனுமதிக்கிறது. அவர்களுக்கு ஆதரவளித்த அகாலி தள் உறுப்பினரும், அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டு, கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நாடு முழுதும் சிட் ஃபண்டு நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது போல ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களில் சில சத்தீஸ்கருக்கு வந்தார்கள்; முந்தைய முதலமைச்சர் சில அலுவலகங்களை திறந்தும் வைத்தார்; ஆனால் இப்போது வெறும் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள்.

தொடக்கத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளை எல்லாம் கொடுத்து, தனி நபர்கள் விவசாயிகளை ஏமாற்றிவிட முடியும். பிறகு, ஒப்பந்த விவசாயம், விவசாயி தன்னுடைய வயலிலேயே வெறும் ஊழியராக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளும். நீங்கள் நீதிமன்றங்களுக்கு ஓடிக் கொண்டே இருக்கலாம். ஆனால், நம்முடைய நீதி அமைப்புகள் எப்படியானவை என்று உங்களுக்கு தெரியும். இந்தச் சட்டங்கள் நுகர்வோருக்கு எதிரானவையாகவும் இருக்கின்றன. நுகர்வோருக்கு பெரும் இழப்பு ஏற்படும். கிடங்குகளில் உற்பத்தியை வைப்பதற்கான உச்சவரம்பையும் மத்திய சட்டங்கள் நீக்குகின்றன. பெரிய முதலாளிகள் விவசாயிகளிடம் விலை குறைவாக உற்பத்தியை வாங்கிவிட்டு, ஒரு லட்சம் டன்கள் அல்லது பத்து லட்சம் டன்கள் வரை குவித்து வைப்பார்கள். வெங்காய விலை எண்பது ரூபாய்க்கு சென்ற போதே, இதன் தாக்கத்தை நாம் பார்த்தோம். தமிழ்நாட்டில் 150 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்கப்பட்டதாக சொல்கிறார்கள். போர்க் காலத்திலும் வறட்சி காலத்திலும் தாம் அரசு சீர் செய்ய முடியும். அல்லது சில்லறை விலைகளில் 100% கூட்ட வேண்டியதாக இருக்கும். அதுவும் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு தான்.

விவசாயிகளின் போராட்டங்கள் பற்றி பேசும் போது, சட்டீஸ்கர் விவசாயிகள் வழக்கமாகவே ஆக்ரோஷமாக எதிர்ப்பைக்காட்ட இறங்க மாட்டார்கள். மேலும், தங்கள் உரிமைகளை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் விவசாயிகளிடம் இருந்து 16 லட்சம் கையொப்பங்களை வாங்கியிருக்கிறோம்.

கேள்வி : பீகார் சட்டசபை தேர்தலுக்கு நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள், ஆனால் தேர்தல் முடிவுகளோ கட்சிக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. காங்கிரஸ் எப்படி வழி மாறி போனது என நினைக்கிறீர்கள்?

எதாவது ஒன்று தவறாக நடந்திருக்கும், இல்லையென்றால் நாங்கள் தோல்வி அடைந்திருக்க மாட்டோம். தேஜஸ்வி ஜி குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார். தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கு எதிராகவும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழகள் கொடுக்கப்படாதது குறித்து குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அங்கே யாரும் வெற்றி பெறவும் இல்லை, யாரும் தோற்கவும் இல்லை. ஒரு அணி 125 சீட்கள் வென்றது; எதிர்க்கூட்டணி 110 சீட்கள் வென்றது. தோற்ற வேட்பாளர்கள் தள்ளினால், நீங்கள் அரசாங்கத்தில் இருக்கலாம்.

கேள்வி : ஆனால், தேர்தல் ஆணையம் குற்றாச்சாட்டுக்களை எல்லாம் மறுத்து, வீடியோ பதிவுகள் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்பதை காட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறதே.

தேஜஸ்விஜி இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டாரா? தேர்தல் ஆணையத்தின் பதில் அவருக்கு திருப்திகரமாக இருந்ததா? இல்லையென்றால், குற்றச்சாட்டுக்கள் அப்படியே தான் இருக்கும்.

கேள்வி : எதிர்க்கட்சி நீதிமன்றத்திற்கு போக வேண்டும் என்கிறீர்களா?

நீதிமன்றத்திற்கு போகலாம், ஆனால், அதற்கு நிறைய நேரம் ஆகும். என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துவிட்டது, ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. களத்தில் இருந்த மனநிலை தேர்தல் முடிவுகளில் இல்லை.

கேள்வி : உங்கள் சக-பணியாளரும், மூத்த தலைவருமான கபில் சிபல் உங்கள் கட்சியில் தலைவர்கள் மனம் திறந்து பேச எந்த அமைப்புகளும் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

கொரோனா காலத்தில் , வீடியோ கான்ஃபரன்சிங் வழியே நிறைய சந்திப்புகள் நடந்தன; காங்கிரஸ் செயற்குழு கூட்டமும் நடந்தது. எங்கள் எல்லோருக்குமே எங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு மூத்த தலைவர் இப்படி பேசக் கூடாது. எல்லா மாதங்களும் சந்திப்புகள் நடந்தன.

கேள்வி : தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல காங்கிரஸின் ஏற்ற அமைப்பு இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்?

உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியும் ஒரே ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் மட்டுமே. மற்ற கட்சிகளில் இது நடக்காது. கட்சியின் அரசியலமைப்பு கூட இல்லாத கட்சிகளில் எப்படி உங்கள் கருத்துக்களை சொல்ல முடியும்? எல்லோருக்குமே அவர்களுடைய கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது; சிலர் ஊடகம் வழியே பேச நினைப்பது துரதிர்ஷ்டவசமானது.

கேள்வி : உங்கள் கட்சிக்கென முழு நேர தலைவர் இல்லை. ராகுல் காந்தி திரும்பி வர வேண்டும் என நினைக்கிறீர்களா அல்லது அந்த குடும்பத்தை சாராத ஒரு நபரை கட்சி தேர்ந்தெடுக்க வேண்டுமா?

கட்சியின் பிரச்சினைகள் கட்சி குழுக்கள் மத்தியில் தான் பேசப்பட வேண்டும் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இருந்தாலும், ராகுல் காந்தி நாட்டையும், நாட்டுமக்களையும் புரிந்து கொள்வதனாலும், எங்கள் ஊழியர்களின் தேவைகளை புரிந்து கொள்வதனாலும், அவர் கட்சித் தலைவர் ஆவதற்கு தகுதியானவர் என்றே நான் நினைக்கிறேன். தலைவர் பதவிக்கு தகுதியானவர் இவரைவிட வேறு யாரும் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

(தி இந்து -வுக்காக பூபேஷ் பாகலுடன் விஜய்தா சிங், சந்தீப் புகான் நடத்திய உரையாடலின் மொழியாக்கம்)

“நக்சலைட்டுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்” – சத்தீஸ்கர் முதல்வர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்