Aran Sei

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

சாதியப்பாகுபாடு சென்னை ஐஐடி யில் பணியாற்றிய இணைப் பேராசிரியர் விபின் பத்வி விலகினார். பின்னர் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மீண்டும் சாதியப் பாடுபாடு அதிகமானதால்  தன்னுடைய இணைப் பேராசிரியர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ஐஐடியில் காட்டப்படும் சாதியப் பாகுபாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.  அவர் சாதியப்பாகுபாட்டிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் போது அரண்செய் இதழில் வெளியான நேர்காணல் இது.

தன்மீது சாதிய பாகுபாடு காட்டுவதால் ஐஐடி, சென்னையின் இணைப் பேராசிரியர் விபின் பி. வீட்டில் தனது பதவியை விட்டு விலகி உள்ளார்.  அவரது உறுதியான  சொற்களைக் கொண்ட பதவி விலகல் மின்னஞ்சல் கடிதத்தில் அவர்,” அரசியல் தொடர்பு மற்றும் பாலின வேறுபாடோ இன்றி, அதிகாரத்தில் இருக்கும், தனிநபர்களிடமிருந்து சாதிய பாகுபாடு வந்ததாக,” கூறி உள்ளார்.  இணையதளத்தில் பரவலாக சுற்றுக்கு விடப்பட்டுள்ள அவரது மின்னஞ்சல் கடிதத்தின் முக்கிய பகுதிகள், ஐஐடி சென்னையில் நிலவும் சாதிய பாகுபாடு பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சி இருக்கிறது. ஐஐடிக்களில் சாதிய வெறி வளர்ந்து வருவது குறித்து காலங்காலமாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. ஐஐடி கோரக்பூரின் வளாகம் முழுவதும் காணப்படும் பேராசிரியர் சீமா சிங்கின் சாதிய மற்றும் உடல்ரீதியான குறைபாடு உடையவர்கள் மீதான மோசமான கருத்துக்கள் முதல், ஆசிரியர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டை மீறுவது வரை யாவும் விபினின் மிகப் பெரிய பிரச்சினைகளின் அறிகுறி ஆகும். உண்மையில், ஐஐடி சென்னையில் 11 மாதங்களில் ஐந்து உயிரிழப்புகள் நடந்த போதே, 2019 ல் அந்த நிறுவனம் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் மற்றும் தேசிய பழங்குடியினருக்கான ஆணையம் ஆகியவற்றின் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சாதிய அடிப்படையிலான பாகுபாட்டினை எதிர்த்த கணிசமான சீற்றத்தை நாம் கேட்கும் வேளையில், ஆசிரியர்களும் அத்தகைய  தவறான நடவடிக்கைகளுக்கு விதிவிலக்கல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட தரவு, இந்தியாவில் உள்ள 23 ஐஐடிக்களில் 22 ல் “ஒன்றில் கூட பழங்குடி இனத்தவரைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆறு பேருக்கு மேல் இல்லை. அவற்றில் 18 நிறுவனங்களில் பத்து அல்லது அதற்கும் குறைவான பட்டியலின வகுப்பினரே ஆசிரியராக உள்ளனர். ஏழு ஐஐடிக்களில் பத்து அல்லது அதற்கும் குறைவான பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாகப் பணியில் உள்ளனர்,” என்பதை வெளிப்படுத்தி உள்ளது. இதற்கும் மேலாக, நியூஸ் லாண்டரியின் ஒரு கட்டுரை ஐஐடி கான்பூரின் இணைப் பேராசிரியர் சுப்ரமணியம் சாதரேலாவின் அனுபவத்தை மேற்கோள் காட்டி இருந்தது: … சதரேலா பணியில் சேர்ந்த உடனே, அவரது சக ஆசிரியர்கள் ‘தனது பணிநியமனம் “தவறானது” என்றும், இந்த நிறுவனத்தில் பணியாற்றத் தகுதியற்றவர்  ஏனெனில் அவருக்கு  ஆங்கிலம்  சரியாக பேச வரவில்லை என்றும்,  மனரீதியாக பொருத்தமற்றவர் என்றும் கூறினர்’ என்கிறார். சதரேலாவின் மீது ஆய்வின் போது கருத்துத் திருட்டு செய்ததாகவும் கூட  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருடைய ஆய்வுப் பட்டம் ரத்து செய்யப்படும் என்று அச்சுறுத்தலும் விடப்பட்டது. ஏறத்தாழ அதற்கு ஓராண்டிற்குப் பிறகு வளாகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடு  காட்டப்படுவதாக அவர் கூறினார்.”

தகுதி“யின் மீதான அதீத கவனம்

இந்தியா “தகுதியின்” மதிப்பின் மீது அதீத வெறிக் கொண்டிருப்பதால், சாதிய பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் செய்தியை கேட்க வேண்டியதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தகுதி பற்றிய வாதம் உண்மையில் பொருளுடையதா? கல்வி நிலையங்களில் சாதிய வெளிப்பாடு எவ்வாறு உள்ளது? உயர்சாதிக்காரர்களே முதன்மையாக ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் நீங்கள் எதிர்த்து நிற்பது என்ன பலனைத் தரும்? இது குறித்து விபினிடமிருந்து நேரடியாக கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐஐடி சென்னையில் தனது பயணத்தைப் பற்றியும், ‘ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய நிறுவனங்களில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் அவர் கூறினார்.

நான் முதலில் விபினைச் சந்திக்க முயற்சி செய்த போது, அவர் ஊடகங்களுடன் பேச விரும்பவில்லை என அவரது மாணவர் ஒருவர் தெரிவித்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு எனது  மின்னஞ்சலுக்கு அவர் அளித்த பதில் என்னை வியப்பிலாழ்த்தியது. நான் அவரிடம் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன என வினவினேன்.

  • “இப்போது, ஊடகங்கள் ஆர்வத்தை இழந்து விட்டதால் எனது ஆர்வம் அதிகரித்து விட்டது,” என்று கூறிச் சிரித்துக் கொண்ட அவர்,” ஏராளமான  செய்தித் தளங்களில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வரத் துவங்கின. ஆனால் வெறும் செய்தி துணுக்குகள் தருவதாக இருக்கக் கூடாது என்பதுதான்  நான் எண்ணியவற்றுள் ஒன்று. ஏனெனில் இது போன்ற விடயங்கள் மீது விரிவான முழுமையான கவனம் தேவைப்படுகிறது. ஒப்புக்கு எதிர்வினையாற்றுவது உதவாது. 20 ஊடகங்களில்  இரண்டு ஊடகங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினை குறித்து நீண்ட வடிவத்தில் எழுத வேண்டும் என கூறினர். நானும் ஊடகங்களில் பேசுவதற்கு முன் இந்தப் பிரச்சனையிலிருந்து என் மனம் சிறிது விலகி இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நான் 2-3 வாரங்கள் ஓய்வாக கொடைக்கானல் சென்றேன். இப்போது நான் எனக்கு நேர்ந்தவைக் குறித்து விவரமாகப் பேச விரும்புகிறேன்.

2018, ஜூலை மாதத்தில், ஐஐடி சென்னையில் உதவிப் பேராசிரியராக அதிகார பூர்வமாகப் பணியாற்றத் துவங்குவதற்கு முன்பே சாதி ரீதியான அனுபவங்கள் துவங்கி விட்டன, என்று அந்த நிறுவனத்தில் தனது துவக்கக் கால நாட்களை நினைவு கூர்கிறார் விபின்.

“முனைவர் பட்டம் பெற்றபின் நான் பல பல்கலைக்கழகங்களில், பல பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதில் ஐஐடி சென்னை என்னை நேர்காணலுக்கு அழைத்தது. எனது நேர்காணல் காலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை குறித்து புகார் கூற எதுவும் இல்லை. ஆனால் அன்று மாலை அதே பணியிடத்திற்கு விண்ணப்பித்த மற்றொருவருடன் நான்  அமர்ந்திருந்தேன்.  சிறிது நேரத்தில் ஒரு மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கினார். அவருக்கு 60-65 வயது இருக்கலாம். அவர் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர். அவரது பூணூல் அவருடைய சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அவர் விருந்தினர் வரவேற்பறையிலிருந்து ஒரு சாவியைப் பெற்றுக் கொண்டு அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் திரும்பிய அவர், வரவேற்பாளரைக் கோபமாகக் திட்டிக் கொண்டே  திரும்பி வந்தார்.  25-26 வயது மதிக்கத்தக்க அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என எனக்குத் தெரியவில்லை நடுநடுங்கிக் கொண்டிருந்தார்.”

  • “பிரச்சினை மிகச் சாதாரணமானது: யாரோ ஒருவர் எதேச்சையாக அவரிடம் சுத்தம் செய்யப்படாத அறையின் சாவிகளைக் கொடுத்து விட்டார்களாம். அவர் கூற வந்ததெல்லாம் அவருக்கு சுத்தம் செய்யப்பட்ட அறையின் சாவி தான் தேவை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதுதான். வரவேற்பாளர் தேவைக்கும் அதிகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அந்த மனிதரோ, “அந்த சாவியை என்னிடம் கொடுக்க உனக்கு எவ்வளவு துணிச்சல்?” என்று கத்திக் கொண்டே இருந்தார்.

“நீங்கள் அவரை திட்ட முடியாது,” என்று நான் இடைமறித்தேன். அவரிடம் பயணச் சாமான்கள் இருந்தன. விமானநிலையத்திலிருந்து வந்தவராக இருக்கலாம். இதையே வெளிநாட்டில் செய்திருந்தால், அமெரிக்கா என்று வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் காவலர்களை அழைத்திருப்பார்கள் என்பதை நான் சுட்டிக் காட்டினேன். அவர் மூர்க்கமான மனிதராக இருந்தார். மேலும் இதை தாங்கிக் கொள்ள முடியாமல்,  என்னை அடித்து விடுவது போல் என் தோளின் மீது கையை வைத்து,” நீ யார்?” என்று கேட்டார். அத்தகைய சலுகைகள் கொண்ட ஒரு மனிதன் ஐஐடியில் பெறக் கூடிய உரிமையைக் குறித்த தனது முதல் பார்வை இது என்று விபின் விளக்கினார். “அந்த வரவேற்பாளர்  இது குறித்து எதுவும் செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்தேன். அவர் ஒரு ஒப்பந்த ஊழியர். அவரது மேலாளர் ஒரு பார்ப்பனர். அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஒரு பார்ப்பனர். மேலும் இந்த வரவேற்பாளருக்கு ஒரு குடும்பம் உள்ளது.

அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் அவரது சாதியைக் கண்டுபிடிக்க அவரது கடைசிப் பெயரை வெளிப்படையாகக் கேட்ட நேரங்களும் இருந்தன என அவர் தெரிவிக்கிறார். ” சில நேரங்களில் அவர்கள் என் கடைசிப் பெயரை கேட்பதில் நான் ஆச்சரியப்படுவேன். சில சமயம் நான் சொல்ல மாட்டேன். அவர்கள் என்னிடம் வித்தியாசமாகக் கேட்பார்கள். ” நீங்கள் சைவ உணவு உண்பவரா? இது உங்கள் சாதியைக் கண்டுபிடிப்பதற்கான மறைமுகக் கேள்வி. நீங்கள் அங்குள்ள சில குறிப்பிட்ட பெண்கள் அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் மராத்தி பார்ப்பனரை திருமணம் செய்து கொள்வது பற்றிப் பேசுவதை  பொதுவாக கேட்கலாம். இதிலிருந்து சாதி குறித்த உரையாடல்கள்தான் வளாகத்தில் முக்கியமானதாக இருக்கும் என்பதை அறிய முடியும்.

ஒருவர் நினைப்பதற்கு மாறாக, சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டுவது குறித்தப் பிரச்சினையை சரிசெய்ய  அவர் கடிதம் எழுதுவது இது முதன்முறை அல்ல.”நான் அனுப்பிய மின்னஞ்சல்களுள் முதலாவதாக அனுப்பியது நான் ஐஐடி சென்னையில் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து அனுப்பியதுதான். அது  இயக்குநர், ஐஐடி மையக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 700-800 ஆசிரியர்களுக்கும் சுற்றுக்கு விடப்பட்டது. ஐஐடிக்களில் உள்ள தலைவர்கள் மற்றும் இயக்குநர்களின் சாதி கலவை விகிதம் குறித்து அதில் நான் கேட்டிருந்தேன். எனக்குத் தெரிந்த வரை, ஐஐடிக்கள் துவக்கப்பட்டக் காலத்திலிருந்தே அதன் இயக்குநர்கள் அனைவரும் பார்ப்பனர்களாகவே உள்ளனர். பெரும்பாலான துறைத் தவைவர்களிலும் அப்படித்தான் உள்ளது. நான் கேட்டதெல்லாம் ஒரு வரி மின்னஞ்சலில் சில தரவுகள்தான். திடீரென எனக்கு வரும் மின்னஞ்சல்கள் அதிகரித்தன. அவை விபின் பரிந்துரைக்கும் வழியில் சென்றால் இந்த நிறுவனம் அழிந்து விடும் என்று கூறின.  நான் எதுவுமே கூறவில்லை‌! அவர்கள் நான் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோருவதாக எண்ணி விட்டார்கள். நானாக எதுவும் கூறவில்லை. ஒருவர் தரவுகள் பொய்களைக் கூறுவதற்கான வழி என்றார். இவர்கள் எல்லாம் மிகவும் அறிவாளிகள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! ஐஐடியில் உள்ள அந்தப் பேராசிரியர்கள்  யாவரும் தொழில்நுட்ப பாடங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்கிறார்கள். இந்திய அரசாங்கத்தால் இயக்குநர்கள் பணியமர்த்தப்படுவது போல, துறைத் தலைவர்களை இயக்குநர்களை பணியமர்த்துவது போல, இன்னும் இது போல அடுத்தடுத்த நிலையிலும் நடப்பது போல பணியமர்த்தல் முறை இருக்க வேண்டும் என வலியுறுத்த முயன்றனர்.”

“இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், நான் ஒரு நீண்ட மின்னஞ்சலை அனுப்பினேன். அதில், அரசு நிறுவனங்களில் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்துவதற்கான ஊக்கம் சிறிதும் அல்லது அறவே இல்லை. நான் ஒரு நிலையான ஊதியத்தில் வேலை செய்பவனாக இருந்தால், தகுதியின் அடிப்படையில் என்னை பணியமர்த்தத் தேவை இல்லை. என்னை எனது சாதி முன்னுரிமை, எனது கருத்தியல், எனது பாலினம்  அல்லது எனது பகுதி அடிப்படையில் பணியமர்த்த முடியும். இதை விளக்கி எனது பொருளாதாரத்தில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டி எனது வாதத்தை நிறுவ நான் ஒரு விரிவான மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பினேன். நிறுவனங்கள் இது குறித்து காட்டும் ஊக்கமின்மையை அங்கீகரிக்க வேண்டும், சுய பிரதிபலிப்புடன், எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பணியமர்த்தப் படுகிறார்கள், பதவி உயர்வு பெறுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பாக நான் இந்தக் கடிதத்தை எழுதினேன். மீண்டும் இந்த மின்னஞ்சல் கடிதத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்கான முயற்சி கணிசமாக எடுக்கப்பட்டது.

சாதிய அத்துமீறல்களை சரிசெய்வதற்கான வழிமுறைகள் இல்லை

ஐஐடி சென்னையில் பரவலாக காணப்படும் சாதி வெறி பிரச்சனையை பலமுறை எழுப்பியுள்ள போதிலும், விளிம்பு நிலைப் பிரிவினருக்கு உண்மையிலேயே தங்கள் குறைகளைக் கேட்டு தீர்வு தருவதற்கான, ஒரு பாதுகாப்பான இடம் தரும் குறை தீர்க்கும் வழிமுறைகள் இருப்பதாக விபின் உணரவில்லை.

“நான் தற்போது நிறுவனத்தின் குறை தீர்க்கும் குழுவிடம் ஒரு புகாரைத் பதிவு செய்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு குழு இருப்பதையே நான் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் கழித்துத்தான் தெரிந்துக் கொண்டேன். நான் இப்போது செய்தது போலவே பிற்படுத்தோர் நல வாரியத்தில் அப்போது புகாரளிக்க எடுத்துக்கொண்ட எனது சொந்த முயற்சிகளால்தான் நான் இதைத் தெரிந்துக் கொண்டேன்.” என்றார்

“நீங்கள் இடர்படும்போது யாரை நீங்கள் அணுக வேண்டும் என்பது போன்ற செயல்முறைபற்றி கூற வேண்டும் என்ற பார்வையே இல்லை. பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து முறையிடுவதற்கான இடம் மட்டுமே ஓரளவு செயல்முறையில் உள்ளது. இதுகுறித்த ஒரு வகையான பயிற்சியும் கூட தர வேண்டும் என்ற இந்திய அரசு சட்டமும்  உள்ளது. அதன்படி நீங்கள் யாரிடம் முறையிடலாம், அதற்கான வழிமுறை என்ன என்பது பற்றி அறிந்துக் கொள்ளலாம். ஆனால் சாதியம் தொடர்பான கேள்விகளுக்கு அது போன்ற வழிமுறை எதுவும் இல்லை.”

“மீண்டும், இந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது அடுத்த விடயம். இயல்பாகவே இத்தகையப் பாதுகாப்பு உள்ளது என்பது கூட நமக்குத் தெரிவதில்லை. இதுதவிர, இந்த முறையீட்டுக் குழுக்களும் கூட பாதியைக் குறித்ததல்ல. விளிம்பு நிலை மக்கள் இந்த வளாகத்தில் பெறும் அனுபவங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு நான் எனது மின்னஞ்சல் கடிதத்தில் எழுதியிருப்பதை நீங்கள் காணலாம். பாலியல் ரீதியான புகார்களை கவனிக்க ஒரு தனிச்சிறப்பான குழு இருப்பது போலவே  பட்டியலின்/ பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு தனி விசாரணை அமைப்பும் இருக்க வேண்டும் என்பதே என் பரந்த கருத்து.”

சாதி அடிப்படையிலான சிறப்பு குறைதீர் குழுக்களின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் நாம் கேட்டபோது,” எல்லா சமூகங்களும் மாறுதலுக்குள்ளாகி வரும் சமூகங்கள்தான். நீங்கள் ஒரே ஆற்று நீரில் இரண்டு முறை கால் வைக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் சில சமூகங்கள் பிற சமூகங்களைச் காட்டிலும் மிக வேகமாக மாறிவிடும். சரியா? குறிப்பாக இந்திய சமுதாயம் ஒரு மாறிக்கொண்டிருக்கும் சமூதாயம். அடுத்த 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஏராளமான முதல் தலைமுறை பேராசிரியர்களையும், நீதிபதிகளையும், பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களையும், அரசு ஆலோசனை மன்றங்களையும்   பார்க்க முடியும். கடந்த 20 ஆண்டுகளில் முதல் தலைமுறை கல்லூரிக்குச் செல்வோரைப் பார்க்கிறோம். இப்போது அவர்கள் அவர்களுடைய பெற்றோர்களால் அணுகக்கூட முடியாத பணியிடங்களில்  பணியில் அமர அவர்கள் தயாராகி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் அந்த பணியிடங்களில் அமர்ந்து விட்டால், முன்அனுபவ அறிவு இல்லாத அவர்களால் இருக்கும் அமைப்பு முறை நெருக்கடிக்கு உள்ளாகும். ஏனெனில் அத்தகைய முன் அனுபவ அறிவை அடக்கப்பட்ட சமூகத்தினர் அவர்களுடைய பெற்றோர்களிடமிருந்தும், மூதாதையர்களிடமிருந்தும் பெற்றிருக்க வாய்ப்பில்லை.”

“இது விடயத்தில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டது: அவர்கள் பணியிடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் முழுமையான குறை தீர் மையங்களை வைத்துள்ளனர். ஏனெனில் அங்கு ஏராளமான வெளிநாட்டினர் இருக்கின்றனர். அவர்கள் அமைப்பு செயல்முறையில் மிகவும் வெளிப்படையாக உள்ளனர். இது போன்றதைத்தான் இந்தியாவிலும் நாம் செய்ய வேண்டும். அத்தகைய ஒரு முறையை வைத்துக் கொள்ளாததற்கு அறியாமையை மட்டுமே காரணமாக கூற முடியாது. ஏனெனில் தகவலை மறைப்பதும் ஒரு வகையில் சாதிய மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கான வழிமுறையாகும்.”

பாகுபாடுகளை உயர்த்திப் பிடிக்கும் ‘அதிகாரத்தில் உள்ளவர்களை’ சுட்டிக்காட்டுவதில் விபின் தயக்கம் காட்டுவதில்லை. “என்னுடைய பிரச்சனையில் முதன்மையாக நான்கு பேர் சம்பந்தப்பட்டிருந்தனர். அதன்பிறகு உண்மையில் சிலர் மதில் மேல் உட்கார்ந்துக் கொண்டுள்ளனர். யாரெல்லாம் அமைதியாக இருக்கிறார்களோ அவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்களே. அவர்கள் இருபக்கமும் சேர்ந்து விளையாட்டை விளையாட விரும்புகிறார்கள்” என்றார்.

மேலும்,”அந்த நான்கு பேரில்  ஒருவர் துறைத்தலைவராக உள்ள பேராசிரியர்.  அவர் தனது பி.எச்டியை ஐஐடி சென்னையில்தான் செய்தார். சென்னை ஐஐடியிலேயே அவருக்கு வேலை கிடைத்தது. அவர் இன்னும் மூண்றாண்டுகளில் ஓய்வு பெறப் போகிறார். அவர் இந்த அமைப்பு முறையில் நன்கு உட்பொதிந்துள்ள மிகவும் அதிகாரமிக்க மனிதர். மற்றவர்களில் இருவர் துறைத் தலைவர்கள் அதில் ஒருவர் நான் பணியில் சேரும் போதே தலைவராக இருந்தார். மற்றொருவர் தற்போது தலைவராகி உள்ளார். மற்றும் ஒருவர் கடந்த இருபது ஆண்டுகளாக இங்கே பணி புரிந்த ஒரு பேராசிரியர்.”

“இவர்கள்தான் ஒரு உதவிப் பேராசிரியருக்கு பதவி உயர்வு தரலாமா என்பதையும், இணைப் பேராசிரியருக்கு முழுமையான அதிகாரம் தரலாமா என்பது பற்றியும் முடிவு செய்வார்கள். வீடு ஒதுக்குவதிலிருந்து ஊதியம் வரை அனைத்தையும் யாருக்கு எதைத் தர வேண்டும் என்பதையும் அவர்களே வரையறுக்கின்றனர். வளாகத்தில் எந்தெந்த ஆசிரியரை அணுக முடியும் என்பதையும் அவர்களே உறுதி செய்வார்கள். ஒட்டுமொத்தமாக, அவர்கள்தான் நமது கல்வி மற்றும் பணிக்கால வாழ்க்கையில் தடைகளை  உருவாக்கும் திறன் உடையவர்கள்‌.”

அந்தத் தடைகள் என்னென்ன? “நான் பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் பொருளாதார வலைப்பின்னல் பகுப்பாய்வு குறித்து கற்பிக்க வேண்டும் எனக் கேட்டேன். அந்தப் பாடத்தின் உள்ளடக்கம் யாரையும் புண்படுத்தும் வகையில் இல்லை. உண்மையில், அது சிலருக்கு சலிப்புத் தருவதாகக் கூட இருக்கும். நான் இதைச் சுட்டிக்காட்டுவதற்கு காரணம் இந்த பிரச்சனை எழுந்ததற்கு பாடப்பிரிவு ஒரு காரணம் அல்ல என்பதால்தான்.  பாகுபாட்டின் பொருளாதாரம் பற்றிக் கற்பிப்பது போன்றது இல்லை இது. துறை ஆலோசனைக் குழு என்ற ஒரு சிறிய குழுதான் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. அது எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில், நான் தற்போது  தகுதிகாண் பருவத்தில் (probation) இருப்பதால் அந்தப் பாடத்தைக் கற்பிக்க இயலாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் அனைவரிடமும் சென்றது. அதில் ஒருவர், உயர்சாதிக்காரர் – பார்ப்பனர் அல்லர்- ‘அவரது நடத்தையை கண்காணிக்க வேண்டிய சமயம் இது’ எனக் கூறியிருந்தார்.”

ஒன்றிரண்டு இணைப் பேராசிரியர்கள் முதலாவது ஆண்டில் அவ்வாறு ஒரு புதிய பாடப்பிரிவை கற்பிப்பதைத் தடுக்கும் விதிமுறை எதுவும் இல்லை என்றும், அதுதவிர இதற்கு முன் சிலர் முதலாம் ஆண்டிலேயே இதை செய்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினர். ஆனால் துறையில் ஒருவருக்கொருவர் ஏற்கனவே நன்கு அறிந்த,  அவர்களுக்குள் முன்பின் உதவி செய்துக் கொள்பவர்களின் வலைப்பின்னல் இருந்தது. நான் இந்தத் துறைக்குள் எவரையும் தெரிந்துக் கொள்வதற்காக வரவில்லை. நான் எனது வேலையை செய்கிறேன். அதுவே போதுமானதாக இருக்க வேண்டும்.”

“நான் அவர்களிடம் எனது முதலாம் ஆண்டில் புதிய பாடத்தை எடுக்கக் கூடாது என்ற அவர்கள் முடிவை எழுத்துபூர்வமாகத்  தரக் கோரினேன். ஆனால் இது தன்னிச்சையான முடிவு என்பதால் அவ்வாறு தர மறுத்து விட்டனர். இங்கும் கூட தகுதி பற்றியக் கேள்வி  வருகிறது. இந்த அமைப்பில் தகுதியை தீர்மானிக்கும் புறநிலை நீதிபதி இல்லை. ஒவ்வொரு மட்டத்திலும் அதிக அளவில் தன்னிச்சை முறை உள்ளது. என்ன நடக்கிறது அல்லது யாரை அணுகுவது என்று தெரியாமல் நிலைகுலைந்து,  குழப்படைந்தேன். ஒரு “தகுதி வாய்ந்த நிறுவனம்” என்ற பெருமையைப் பற்றி மேலும் விளக்கும் விபின் பி. வீட்டில் ஐஐடி சென்னையை கையும் களவுமாக பிடித்ததாக தான் கருதும், ஒரு புதிய வியப்பிற்குரிய நிகழ்வு குறித்து பேசினார்.

“மாதங்கள் ஓடின. துறைத் தலைவராக உள்ள பேராசிரியர் பி.எச்டி நபர்களுக்கான தேர்வு நடைமுறையில் புதிய வியப்பிற்குரிய ஒன்றை செய்தார்.  பொருளாதாரத் துறைக்குள் நுழைபவர்களை, பொருளாதாரம், பொதுக் கொள்கையில் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் என்ற மூன்று பிரிவாகப் பிரித்தார். வழக்கமாக ஒரு நுழைவுத் தேர்வும், இரண்டு நேர்காணல்களும் நடைபெறும். ‘தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை’ பற்றிய நுழைவுத் தேர்விற்கு, பத்தாண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள துறைத் தலைவர், பேராசிரியர் கேள்விகளை எழுதுவது மற்றும் அவற்றைத் தரவரிசைப் படுத்துவதில் முனைந்திருந்தார்‌‌. பல ஆண்டுகளாக வேறு எந்தப் பேராசிரியரும் இந்தப் பணியைச் செய்ததில்லை. எந்தவித போதுமான சரிபார்ப்பும் இன்றியே மாணவர்கள் சேர்க்கையை நடத்தும் ஒரு பொது நிறுவனம் நம்மிடம் உள்ளது.

எனவே, “விபின் இந்தப் பிரச்சினையை எழுப்பி, மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையை நியாயமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் கொண்ட ஒரு நடைமுறைக்கான பல ஆலோசனைகளை  வழங்கினார். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கேள்விகளைத் தயாரிக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடாத ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அவற்றை தரவரிசைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மாணவர்களின் பெயர்களை பதிவு செய்யாமல் அவர்களுடைய வரிசை எண்ணை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூட அவர் பரிந்துரை செய்ததாகக் கூறுகிறார். இந்த நிறுவனம் எவ்வாறு மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்யும் நடைமுறையை இவ்வளவு நீண்ட காலமாக கடைபிடித்து வருகிறது? பெயர் ஒருவருக்கு  அவருடைய பாலினம், மதம் மற்றும் சாதியைக் கூறிவிடும். இது ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி உள்ள சார்புகளை மீறியவர்கள் எவரும் இல்லை. நானும் அதற்கு அப்பாற்பட்டவன் அல்ல. இன்னும் இதுவரை சாதிப்பாடு குறித்து ஒரு தெளிவான வழக்கை என்னால் கூற முடியவில்லை. ஆனால் அதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் உண்மையில் வருந்தினேன். 2020 ல் ஒரு புதிய நபர் துறையில் சேர்ந்தார். அவர் பார்பன சாதியைச் சேர்ந்தவர். அவர் முதலாம் ஆண்டில் இரண்டு புதிய பாடங்களை நடத்த அனுமதி கேட்டார்‌. இரண்டும் அனுமதிக்கப்பட்டது. இது நடக்கும் போது, நான் ,” பார்ப்பனர்களுக்கு என தனி விதிமுறைகள் உள்ளனவா?” என்று வெளிப்படையாகக் கேட்டேன்.

நான் புதிய பாடம் நடத்த அனுமதி கோரிய போது எனக்கு இடையூறு செய்து அந்த நான்கு பேரும் இப்போது இதுபற்றி எந்தப் பிரச்சனையையும் எழுப்பவில்லை. எனது நடத்தையை ‘கண்காணிக்க’ வேண்டும் என்று கூறியவரும் கூட இது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. நீங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் மிருகத்தனமானவர்கள், எனக்குத் தெரியவில்லை, சுற்றி வந்து மக்களை கடிப்போமா, அதனால்தான் எங்களை ‘கண்காணிக்க’ வேண்டிய அவசியம் ஏற்படுகிறதா? மேலும் நீங்கள் முன்னுரிமைப் பெற்ற சாதியாக இருந்தால், உங்கள் நடத்தை இயற்கையாகவே ஒழுக்கமானதாக இருக்குமா? நான் எனது பாடத்திற்காக வாதாடிய போது என்னை ஆதரித்த அதே இணைப் பேராசிரியர் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தார். ” நீங்கள் விபினை அவரது பாடத்தை  நடத்த அனுமதிக்கவில்லையே? என கேள்வி எழுப்பினார். ஆனால் அதனால் எதுவும் நடக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்தனர். நான் மிகவும் மனம் உடைந்து போனேன்.”

தகுதி என்பது ஐஐடியில் பொய்மையானது

மேலும், விளிம்புநிலை சமூகத்திலிருந்து வருபவர்களிடம் “தகுதி” பற்றித் தொடர்ந்து கேள்வி கேட்கும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ” இதுவும் கூட உங்கள் ஆய்வு மற்றும் பணி செய்யும்  வலிமையை உக்களிடமிருந்து எடுத்து விடுகிறது. நீங்கள் இதைப் போன்ற சவால்களை எதிர்கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் சில குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் நீங்கள் உங்கள் பணியில் முன்னேறும்போது நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அது மற்றவர்களிடமிருந்து பாலினம், மதம் மற்றும் சாதி அடிப்படையில் இருக்கலாம். நீங்கள் இத்தகைய இடங்களில் உங்கள் பணித்திறனை மட்டுமே வைத்து முன்னேற வேண்டும். நீங்கள் எதிரியை  வலுக்கட்டாயமாக எதிர்கொள்ளச் செய்யும் போது உங்கள் திறன் வேலையிலிருந்து பிரிக்கப்பட்டுவிடும். இதன் மூலம் அவர்கள் உங்கள் வேலை “போதுமான அளவு .”நன்றாக இல்லை” என்று கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்

“இங்கேதான் மீண்டும் தகுதி மற்றும் சாதி, தகுதி மற்றும் பாலினம் ஆகியவை பற்றிய கேள்வி உள்ளே வரும். அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒரு தரைவிரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு நூலை மட்டும் தனியாக மற்றவற்றிலிருந்து பிரித்து எடுத்து விட முடியாது. அது தரைவிரிப்புமுழுவதும் உள்ள மற்ற நூல்களையும் நகர்த்தும்.” இந்த அமைப்பு முறையை எதிர்த்து நிற்பவர்கள்  மறைமுகமாக தண்டிக்கப்படுவர் என்று அவர் கூறுகிறார். “சில இணைப் பேராசிரியர்கள் ஒரு பதவி உயர்வுக்காக படாதபாடு பட்டுள்ளனர். ஏனெனில் ஒரு முறை நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி விட்டால், நீங்கள் இந்த அமைப்பு முறையால் தண்டிக்கப்படுவீர்கள். ஏன் உங்களுக்குப்  பதவி உயர்வு தரப்படவில்லை என்பதற்கு எப்போதும் சில தன்னிச்சையான காரணங்களை கூறும் நபர்கள் இருக்கிறார்கள்.”

ஐஐடி களின் ‘தகுதி’ பற்றிய ஆர்வத்தையும், ஆசிரியர் பணியிடத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பாததை நியாயப்படுத்த அவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் கண்டு விபின் சிரிக்கிறார். வழக்கமாக, பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது குறைவாகப் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் சமூகத்தினர் ஒருவருக்கு இட ஒதுக்கீடு பற்றி நான் பேசும் போது அவர்கள் அதற்கு பதில் கூறும் பாணி,” ஓ, இவர்களுக்கு மேலும் கூடுதலாக ஆதரவு தர வேண்டி உள்ளது, உங்களுக்குத் தெரியுமா? என்று  ஏளனமாகக் கேட்பார்கள். இந்தக் கருத்தின் மீது பரிவு காட்டுபவர்கள் கூட, ‘அவர்கள் ‘தகுதி’ என்ற அடிப்படையில் பார்த்தால் அந்த அளவு சிறப்பாக இல்லை, அவர்களுக்கு நாம் ‘ஆதரவு’ கொடுத்தால் ஒருவேளை அவர்கள் சிறப்பாக செயல்படலாம்,’ என்றுதான் கூறுகிறார்கள். தற்சமயத்திற்கு, அவர்கள் அதனை இந்த வகுப்பினரின் நீண்ட கால “தகுதி” அடிப்படையிலான தேர்வுடன் ஒரு ‘சமரசம்’ என்பதாகவே இதனை நினைக்கிறார்கள். ஆனால் தற்போது தகுதி அடிப்படையில்தான் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று ஏன் ஊகிக்கிறீர்கள்?”

“நீங்களே பாருங்கள், ஐஐடியில் பேராசிரியராவதற்கோ, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராவதற்கோ நுழைவுத் தேர்வு இல்லை. உண்மையில், நீங்கள் பின்வாங்க முடியாத, ஒரு பரந்த அளவுகோலில் அடிப்படையிலான பல தொடர்ச்சியான நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. இந்திய சமூகத்தின் கடந்த ஆயிரமாண்டு அல்லது அதற்கும் மேலாக பார்த்தால், மக்கள்  சாதி, மதம், பாலினம் மற்றும் பிறவற்றின் மீது தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தவில்லை என ஊகிக்கக் காரணம் இல்லை. தகுதி என்பதே இல்லை! இதைத்தான் நான் எனது நீண்ட மின்னஞ்சலில் தெரிவித்திருந்தேன். ஆனால் அது எதிர்பார்த்த அளவு நன்றாகச் செல்லவில்லை.” ஐஐடி சென்னையில் தகுதி எந்த அளவு மதிப்பிழந்து விட்டது என்பதை அவர் விளக்குகிறார்:

அறிவியல் ஆய்வு இதழ்களில் பத்திரிகை வெளியீடுகள்தான் நாங்கள் புழங்கும் பகுதி. இந்த இதழ்கள் தரவரிசைப்படுத்தப்படும். அவ்வாறு தரவரிசைப் படுத்தும் முகமைகளில் ஒன்று ஆஸ்திரேலிய பிஸினஸ் டீன்ஸ் கவுன்சில் (ABDC) அவர்கள் A*, A, B, C, இன்னும் இதுபோன்று தரவரிசை படுத்துகிறார்கள். இந்த இதழ்களில் எனது நான்கு அல்லது ஐந்து வெளியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு A* தரவரிசையிலான இதழ்கள். ஆனால் எனக்கு செய்த நபர், பல பத்தாண்டுகளை  இங்கு செலவிட்ட போதிலும்,  அனைத்து  பி.எச்டி மாணவர்களைப் பெற்றிருக்கும் போதும், அனைத்து வளங்களும் அவரை நோக்கித் திருப்பி விடப்பட்டிருக்கும் போதிலும், ஒரே ஒரு A* வெளியீட்டை மட்டுமே வெளியிட்டுள்ளார். அந்த ஒரு வெளியீட்டிலும் கூட 21நபர்கள் இணை ஆசிரியர்களாக இருக்கிறார்கள். எனது வெளியீடுகளில் ஒன்று மற்றும் இருவருடனும், மற்றொன்று ஒரே ஒருவருடனும் இணைந்து எழுதியது. எனவே, வெற்றியைத் தகுதிதான் தீர்மானிக்கிறது என சிந்திப்பது பொய்மையாகும். “

 அவரது பதவி விலகல் கடிதத்திற்குப் பிறகு நிகழ்நிலை விவாதங்கள் தனக்கு ஆதரவாக இல்லாதது மட்டுமல்ல, பலரும் எதிர்த்துள்ளனர். அவரது குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் நம்புகிறார்கள். ட்விட்டரில் வந்துள்ள சில எதிர்கருத்துக்ளை அவர் வெளிப்படுத்தினார். எனது பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ‘ என்ன பாகுபாடு? அவர் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கையை சாதி ஒதுக்கீடு மூலம் பெற்றுள்ளார். அவரது நுழைவு விண்ணப்பப் படிவங்களுக்குக் கட்டணம் இல்லை. இட ஒதுக்கீட்டின்படிதான் அவர் வேலையும் பெற்றிருக்கிறார். இருப்பினும் அவர் இங்கே பொது மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றிற்கிடையில் எந்த வித பாகுபாட்டையும் காணவில்லை’ என்கிறார் அவர். இன்னொருவர், ‘இட ஒதுக்கீடு பெற்றுள்ள மாணவர்கள் தங்கள் சராசரி திறன்கள் மதிக்கப்பட வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள். ஒதுக்கீடு இல்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்காது. அவர் பதவி விலகுவது நல்லதுதான்.’  என்று கூறி இருந்தார். நான் போதுமான அளவு தகுதி உடையவன் அல்ல என்பதே பொதுவான கருத்து.”

“இது குறித்த உண்மை: எனது பட்டப்படிப்பு பொதுப் பிரிவில் பெற்றது. எனது முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் அயல்நாடுகளில் பெற்றது. நான் பொதுப்பிரிவில்தான் ஐஐடியில் பணியில் சேர்ந்தேன். நான் ஒருபோதும் எனது பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சான்றிதழைப் பயன்படுத்தியதில்லை. எனக்கு அரசியலமைப்புச் சட்டப்படி பாதுகாப்புத் தேவை என்பதால்தான்,  எனக்கெதிராக சாதி பாகுபாடு காட்டப்பட்ட போதுதான் நான் அந்தச் சான்றிதழையே  பெற்றேன்.”

இப்போது, ஐஐடிக்களில் இட ஒதுக்கீடு பின்பற்றுவதில்லை என்பதில்லை என நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த 50-60 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டை அவர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். பார்ப்பனர்களுக்கான இட ஒதுக்கீடு. அதுவும்கூட பெரும்பாலும் ஆண் பார்ப்பனர்களுக்கு மட்டும். மேலும் மிக அண்மையில் பெண்களுக்கும் தரப்பட்டது. ஆனால் மிக குறைந்த அளவில். ஆனால் அவர்கள் அமலாக்கிய இட ஒதுக்கீடு மிகப் பெரியது, சரியா?” நாம் இப்போது பேசுவது எதிர் இட ஒதுக்கீடு பற்றியது. நாம் இதை ஒழிக்க விரும்புகிறோம். நாம் உண்மையில் திறந்த, தகுதியுள்ள சமுதாயத்தை  விரும்புகிறோம். நான் இதை சொல்லவே கூடாது‌. இது கண்கூடு.”

ஒரு சார்பான அமைப்பு

ஆர்வமூட்டும் விதமாக, விபினின் பதவி விலகலுக்குப் பின், ஐஐடி சென்னை நிர்வாகம், பட்டியலின சாதியினர் தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்தருடன் ஒரு சந்திப்பை நடத்தியது‌.  தி இந்துவில் அது குறித்து வந்தக் கட்டுரையில் ஐஐடி சென்னை இயக்குநர் ” பாகுபாடு என்பதே இல்லை என அவரிடம் (அருண் ஹால்தரிடம்) உறுதி அளித்தார்,” என்று கூறியுள்ளது. நான் விபினிடம் இந்த முடிவு பற்றி அவரது கருத்து என்ன என்று கேட்டேன்.

“இதனைக் கேட்டதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் இது குறித்து பல கருத்துக்கள் உள்ளன. தமிழ் ஊடகங்கள் தேசிய பட்டியலின வகுப்பினர் ஆணையத்திடமிருந்தே ஒரு பொறுப்பான பதிலைப் பெறுவதற்காக அதன் துணைத்தலைவரிடம்,” சாதி பாகுபாடு காட்டுவதில்லை என்பதை நீங்கள் எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டபோது, அந்த மனிதர் அழுத்தம் திருத்தமாக, தான் நிர்வாகிகளிடம் கேட்டதாகவும், அவர்கள் அத்தகைய பாகுபாடு எதுவும் காட்டப்படுவதில்லை எனக் கூறியதாகவும்,” பதிலளித்தார்!” என்கிறது. அவர் சிரித்துக் கொண்டார்.

“சாதி பாகுபாடு கடைபிடிக்கப்படுவதில்லை எனில் ஏன் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன? என்பது அதில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. எடுத்துக்காட்டாக, எனதுத் துறையில், ஏறக்குறைய 36 ஆசிரியர்களில் எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒருவர்தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். நான் கூறுவது தவறாக இருக்கலாம். ஆனால் அந்த எண்ணிக்கை மிகப் பெரிய வித்தியாசத்துடன்தான் உள்ளது. நிச்சயமாக இது  வெறும் அளவீடு பற்றியது மட்டுமல்ல, ஒருவர் இந்த அமைப்பிற்குள் வந்தபின் அவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஆயினும் கூட இது முக்கியமான அளவீடு: ஏன் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை? இது குறித்து கேட்ட தமிழ் ஊடகங்களுக்கு அவர்கள் இதற்கான தகுதி உடையவர்கள் கிடைக்கவில்லை என ஐஐடி நிர்வாகம் முன்பு கூளியதையே கிளிப்பிள்ளைப் போல் கூறினர். எனக்குத் தெரியவில்லை; இது உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இதனை உண்மை என எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்? ”

ஐஐடி சென்னையில் சாதி பாகுபாடு நிலவுவது பற்றியும் அல்லது இந்த பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு தனிச் சிறப்பாக தகுதியின்மைதான் காரணம் என்பதற்கு எந்த ஒரு முடிவையும் அடைவதற்கு முன் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என விவரிக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை,  இயல்பாகவே தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு பக்கச் சார்பான நிறுவனத்துடன் ஒரு மணி நேரத்தில் உரையாடி ஒரு முடிவை அடைய முடியாது என்கிறார். தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் முழுமையான நோக்கம் பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான். அது வெறும் ஐஐடி நிர்வாகத்தை மட்டும் நம்புவது என்பதைவிட அதன் கருத்துக்கள் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அத்தகைய ஆய்வுகள் முழுமையான கண்டுபிடிப்பாக இருக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு குறைந்தது ஆறு மாதங்களோ அல்லது ஒரு ஆண்டோ கூடத்  தேவைப்படும். மேலும் அதற்கு மிகப்பெரிய அளவில் வளங்களை உட்செலுத்த வேண்டும். ஒரு சில மணி நேரங்களுக்குள் அந்த மனிதரால் இதை எப்படி “கண்டுபிடிக்க” முடிந்தது என கற்பனைக் கெட்டாத அளவு நான் குழம்பி விட்டேன்!”

“அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் வெளியிடப்படவில்லை. எனவே, மக்கள்தொகையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்களின் தற்போதைய  எண்ணிக்கையின்படி  அவர்களுக்குத் தற்போது தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை விட  மிக அதிக விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் தர வேண்டியிருக்கும். ஆகவே, இந்த இடங்களை நிரப்புவது பற்றிப் பேசும் போது நாம் விகாதாச்சார பிரதிநிதித்துவம் பற்றிப் பேசவில்லை. மிக குறைந்த அளவு பிரதிநிதித்துவப்படுத்தும் இடங்களைக்கூட நிரப்பவில்வை என்றுதான் கூறுகிறோம்,” என்று அவர் தெளிவு படுத்துகிறார்.

சாதிய ரீதியிலான பாகுபாட்டிலிருந்து சுதத்திரமாக உள்ளது என்று ஐஐடி சென்னை மற்றும் தேசிய பட்டியலின ஆணையம் எடுத்துள்ள முடிவு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில் விபினின் விவகாரத்தில் குறைகேட்பு குழு இன்னும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.

அண்மையில் ஐஐடி சென்னை டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு அளித்துள்ள பதிலில் அந்த நிறுவனம் எந்த வடிவிலான சாதி அல்லது மத அடிப்படையிலான பாகுபாட்டு நடப்பதையும் அனுமதிப்பதில்லை என்றும், முறையான குறை கேட்பு அமைப்பு முறைகள் உள்ளன என்றும் கூறி உள்ளது. இது விபின் கூறுவதற்கு முற்றிலும் முரணாக உள்ளது.

“எந்தவித சாதி பாகுபாடும் காட்டப்படுவதில்லை என நிர்வாகம் கூறும் அதே வேளையில் எனது வழக்கில் இன்னமும் விசாரணை நடந்து வருகிறது, இந்த புலனாய்வு எப்படி வெளிப்படையாக இருக்க முடியும்? அவர்கள் ஏற்கனவே முடிவை எடுத்து விட்டதாகத் தெரிகிறது! இங்கே மிக முக்கியமான பிரச்சனைகள் உள்ளன.”

நான் அவரிடம் இறுதியாக ஒரு கேள்வியைத் கேட்டேன். ” மாற்றத்திற்கான நம்பிக்கை உள்ளதா?”

ஒரு நபர், அரசாங்கம் அல்லது சித்தாந்தம் இதனை “சரி” செய்யப் போவதில்லை என்பதை புரிந்து கொள்வது அவசியம். நான் இது போன்ற பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தேன்.  என் வாழ்க்கை இப்படி இருந்ததில்லை. நான் இளங்கலை பட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்தப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றால் வாழ்க்கைப் பெரிதாக  இருக்கும் என்று கருதினேன். இதில் பெரும்பாலானவை உண்மையில் நடந்தேறின. ஆனால் வெளிப்படையாக கூறினால், நான் எண்ணிய அளவு வாழ்க்கை பெரிதாதானதாக அமையவில்லை, என்று வழக்கமாக நான் சிந்திப்பது உண்டு. இவையாவும் தொடர்ச்சியான ஒரு  செயல்முறை. எந்த அளவு நாம் அன்றாட நிகழ்வுகளைப் பார்க்கிறோமோ, எந்த அளவு சிறிய மட்டத்திலேயே பிரச்சனைகள் எழுப்புகிறோமோ, அந்த அளவு இந்த செயல்முறையில் வன்முறையில்லாத ஒரு சமூகமாக நாம் முன்னேற முடியும்.”

“இந்தியாவைப் பற்றி நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்று வலது இடது பற்றிய விவாதங்கள் யாவும் பொய்மையான முட்டாள்தனமானது. எல்லாம் கடைசியில் சாதியில் தான் வந்து நிற்கும். துறைத் தலைவராக ஒரு கம்யூனிச வாதியோ அல்லது ஆர்எஸ்எஸ் ஆதரவாளரோ இருந்தால், அவர் பார்ப்பனராகத்தான் இருப்பார். இது கவனிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், எதிரி குழுவுடன் மோதுவதற்கு அல்லது வன்முறையைத் தொடங்க அவர் யாராக இருந்தாலும் சரி, இந்தியாவில் அவர்கள்  பீரங்கிக்கு குண்டாக பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இறுதியாக உயர்மட்ட பதவி என வரும்போது, இந்த முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பதவிகள் என்று வரும்போது, ஒதுக்கப்பட்ட குழுக்கள் விட்டுவிடப் படுகின்றனர்.”

தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கு அரசிடம் எவ்வாறு எந்த ஊக்கமும் இல்லை என்பதை விபின் விளக்குகிறார். “மிகவும் நேர்மையாக, நான் ஏமாற்றம் தரும் பதிலையே உங்களுக்கு நான் தர இயலும். இட ஒதுக்கீட்டை மிகவும் தீவிரமாக பின்பற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பது நல்லது என நான் நினைக்கிறேன். இந்த நிறுவனத்தில் பட்டிடயலினத்தவர்/ பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடைந்த அனுபவங்களைப்பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியவற்றை உந்தித் தள்ளுவது நல்லது என்று நான் எண்ணுகிறேன். எஸ்.சி/ எஸ்‌ டி ஆணையம் மற்றும் ஓபிசி ஆணையத்தில் நிரந்தர பிரதிநிதித்துவம் இருப்பது நல்லது. இவை அனைத்தையும் செய்வது நல்லது.”

இருப்பினும்கூட, இறுதியாக, தகுதியின் அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்காக சிறிதளவு ஊக்கம் அரசாங்கத்திடம் உள்ளது. அதை மேலும் சிறப்பாகச் செய்ய நாம் அரசாங்கத்திற்கு சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டியது. இப்போது ஒவ்வொரு ஐஐடியையும் தனித்தனியாகப் பார்த்து கவனம் செலுத்த முடியாது. ஆனால், ஒட்டு மொத்த கல்வி முறையையும்  பார்க்க  வேண்டும். தற்போதுள்ள அரசு விதிமுறைகளின் படி, இலாபத்திற்காக ஒரு பல்கலைக்கழகத்தை அரசு துவங்க முடியாது. இந்த ஒரு விடயம் தான் சாதி ரீதியான முன்னுரிமை இன்றி தகுதி அடிப்படையில் சேர்க்கையை நடத்த மக்களை ஊக்குவிக்கிறது. பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், மேலும் அதிக சுதந்திரம் தரப்பட வேண்டும்.”

பல ஆண்டுகளாக, சோசலிசம் என்ற பெயரால் இதை செய்ய இயலவில்லை. இடதுசாரிகள் அமெரிக்கர்களை ஏகாதிபத்தியவாதிகளாகக் கருதுகிறன்றனர். இது உண்மையாக இருக்கலாம், ஆனால் நாம் (ஒதுக்கப்பட்ட சாதிகள்) பல்வேறு பிரச்சனைகளில் உள்ளோம். எங்களுக்கு, அமெரிக்கர்கள் எங்களுடன் நண்பராகளாக இருக்க முடியும்!  ஒரே தோலின் நிறமுடையவர்களை விட வெவ்வேறு நிறமுடையவர்கள் நம்முடன் நட்பாக இருப்பதை நம்மால் காண முடியும். மிக அண்மையில், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது, தேசியவாதம் என்ற பெயரால் நிராகரிக்கப்பட்டது. எனவே, இது ஆர்வமூட்டக் கூடியது. சித்தாந்தம் சோசலிசமாகவோ அல்லது தேசியமாகவோ எதுவாக இருந்தாலும் பெண்களும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் அவர்களுடைய இலட்சியங்களின் சுமைகளை சுமக்கிறார்கள். அதற்கான விலையை நாம் சுமக்கிறோம். இந்த கருத்தியல்களை முன்னெடுப்பதன் மூலம் பயன்பெறும் வர்கள் குளிர்சாதன அலுவலக அறையில் அமர்ந்துக் கொண்டிருக்கும் மேல்தட்டு வர்க்கக் குழுவினர்தான்‌.

www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

எழுதியவர்: மானஸி பன்ட்.

 

  

 

 

 

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்