முன்னாள் மத்திய அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் பிரியா ரமணி, தன்னைப்போலவே பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களின் வெற்றியாகவே இதை கருதுவதாக தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு, பணியிடத்தில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவிக்கும் மீடூ (#MeToo) இயக்கம், சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியராக பணியாற்றி முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக, பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தனக்கு நேர்ந்ததை விரிவாக எழுதிய பிரியா ரமணி, அதை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். அதைத்தொடர்ந்து, மேலும் பல பெண்கள், எம்.ஜே.அக்பருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பிரியா ரமணியின் குற்றச்சாட்டை மறுத்த எம்.ஜே.அக்பர், அது தன்னுடைய நன்மதிப்பபை கெடுப்பதாக கூறி, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவருக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
பிரியா ரமணியின் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று எம்.ஜே.அக்பர் குறிப்பிட்ட நிலையில், தன் குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தை முன்வைத்த பிரியா ரமணி, தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துவதற்கே அக்பர் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் “பெண்கள் தங்களுடைய பிரச்சனையை அவர்கள் விரும்பிய எந்த ஒரு தளத்திலும், எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் வெளியிடும் உரிமை அவர்களுக்கு உள்ளது” என்று கூறி அக்பரின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (பிப்ரவரி 17) உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம் “நான் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றவன்” என்று எம்.ஜே.அக்பர் முன்வைத்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தி இந்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தி இந்து-விடம் பேசியுள்ள பிரியா ரமணி, “இந்த வழக்கு என்னைப்பற்றியது அல்ல, பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களைப் பற்றியது. நீங்கள் கூறிய உண்மை, சட்டத்தின் முன்பு நிரூபிக்கப்படும்போது, அது மிகப்பெரிய ஆனந்தம். இது, மீடூ (#MeToo) இயகத்தின்போது, தங்கள் குரலை வெளிப்படுத்தி அனைத்து பெண்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி.” என்று கூறியுள்ளார்.
இந்த வெற்றி, பணியிடத்தில் பாலியல் தொலைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் தங்கள் பிரச்சனையை வெளிக்கொண்டு வரும் தைரியத்தை அவர்களுக்கு அளிக்கும் என்றும் பிரியா ரமணி கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.