Aran Sei

அழிவின் விளிம்பில் பிஎஸ்என்எல் – மக்களுக்கான நிறுவனம் மடியக் காரணம் என்ன?

ரு வருடத்திற்கு முன்பு, அமிஷ் குப்தா( பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) 2005ல் அவர் வீட்டில் கொடுத்திருந்த லேண்ட்லைன் ஃபோன் இணைப்பு பழுதானது. அது அடிக்கடி நடப்பது தான் என்பதனாலும், அவர் தன் செல்போனிலேயே பிறரை அழைத்து பேசுவதனாலும், அதை கண்டுகொள்ளவில்லை.

ஆனால், மே மாதம், லேண்டலைனுடன் இணைக்கப்பட்டிருந்த பிராட்பேண்ட் இண்டர்நெட் முடங்கத் தொடங்கிய போது, மஹாநகர் டெலிஃபோன் நிகாம் லிமிடெட் அதாவது எம்.டி.என்.எல்-லில் புகார் அளிக்க முடிவு செய்தார். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் கிளை நிறுவனமான எம்.டி.என்.எல் மும்பையிலும் தில்லியிலும் தொலைதொடர்பு சேவைகளை அளித்து வருகிறது.

மத்திய மும்பையை சேர்ந்த 64 வயதான பயண ஆலோசகரான குப்தா, “ நான் 10 அல்லது 15 முறைகள் புகாரளிக்க அழைத்தேன். ஆனால், யாரும் என்னுடைய இணைப்பை சரி செய்ய வரவில்லை” என அது குறித்து சொல்கிறார். வடாலாவில் இருக்கும் உள்ளூர் எம்.டி.என்.எல் அலுவலகத்திற்கு போனபோது, அங்கு பாதி அலுவகலம் காலியாக இருந்தது தெரியவந்தது. “அங்கே வேலையை செய்ய ஆட்களே இல்லை. என்னை ஒரு மேசையில் இருந்து இன்னொரு மேசைக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்” என்கிறார்.

பெருந்தொற்று காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டிருந்ததால், இண்டர்நெட் இல்லாமல் குப்தாவால் வேலையை தொடர முடியவில்லை. ஜூலை மாதம், எரிச்சலடைந்த குப்தா, ஒட்டுமொத்தமாக எம்.டி.என்.எல் இணைப்பையே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

“இந்த இணைப்பை துண்டிக்கும் வேலையே இரண்டு மாதங்களுக்கு மேலாக போய்க் கொண்டிருக்கிறது” எனும் குப்தா, “நான் வழக்கமாக எம்.டி.என்.எல் போன்ற அரசு நிறுவனங்களுக்கு தான் ஆதரவளிப்பேன். நான் அம்பானியின் ரசிகன் எல்லாம் இல்லை. ஆனாலும், ஜியோ லேண்ட்லைனையும் பிராட்பேண்டையும் வாங்க தள்ளப்பட்டிருக்கிறேன்” என்கிறார்.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியினுடையது. 4ஜி சேவைகளை குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்தி, தொலைதொடர்பு சந்தையில் தடுமாற்றத்தை உருவாக்கியதற்காக இந்நிறுனவம் சர்ச்சையில் சிக்கியது.

மும்பையின் தாதரில் இருக்கும் எம்.டி.என்.எல் ஊழியர்கள் சங்கத்திலோ, ஜியோ எனும் பெயரை சொன்னாலே சங்க உறுப்பினர்கள் ஆக்ரோஷமாகிறார்கள். “எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களின் அழிவை அரசாங்கம் அனுமதிக்க இது தான் காரணம். அவர்களுக்கு தனியார் நிறுவங்களுக்கு தான் ஆதரவளிக்க வேண்டும்” என எம்.டி.என்.எல்-ல் துணை மேலாளராக வேலை செய்த 58 வயதான சூர்யகாந்த் முத்ராஸ் கூறுகிறார்.

மொபைல் ஃபோன்கள் எல்லா இடங்களிலும் முளைக்கத் தொடங்கிய பிறகு, இந்தியாவில் லேண்ட்லைன் இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 2010 ஆம் ஆண்டில் தில்லியிலும், மும்பையிலும் 60 லட்சம் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் இருந்தனர், இப்போது வெறும் 27 லட்சம் பேர் தான் இருக்கின்றனர். இந்தியாவில், 2016 ஆம் ஆண்டு 2.4 கோடியாக இருந்த லேண்ட்லைன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2020 ஜூலை மாதம் 1.9 கோடியாக மாறியிருக்கிற்து. ஆனால், செல்ஃபோன்களின் வரவு மட்டுமே பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் சரிவதற்கு காரணம் அல்ல. வாடிக்கையாளர்கள் பலர் இந்நிறுவனங்களின் சேவை எவ்வளவு மோசமாக இருக்கிறது என பத்தாண்டுகளுக்கு மேலாக புகார் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

ஹரியானாவின் ஃபரிதாபாத்தை சேர்ந்த ஆசிரியர் மஞ்சுளா கோஸ்வாமி, தன்னுடைய பி.எஸ்.என்.எல் இணைப்பை 2009ல் துண்டித்தார். “நாங்கள் இணைப்பு வேலை செய்யவில்லை என புகார் அளிக்கும் போதெல்லாம், பி.எஸ்.என்.எல் எங்களுக்கு ஒழுங்காக பதில் அளிக்கவே இல்லை. அவர்களிடம் போதுமான ஊழியர்களும் இல்லை, இறுதியாக வெறுத்துப் போய் இணைப்பை துண்டித்தோம்” என்கிறார்.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு இந்த பிரச்சினைகள் குறித்து தெரிந்திருக்கிறது. அவர்கள், 2000-ங்களின் தொடக்கத்தில் இருந்து ஆட்குறைப்பு நடந்து வருவது தான் இதற்கு காரணம் என்கின்றனர்.

எம்.டி.என்.எல் மும்பையின் பிரிவு மேற்பார்வையாளரும், எம்.டி.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினருமான சந்தேஷ் ஷிர்கே, “ ஊழியர்கள் ஓய்வு பெற்று போயிருக்கிறார்கள்; ஆனால், பல வருடங்களாக புது ஊழியர்கள் யாரும் பணி அமர்த்தப்படவில்லை” என்கிறார். “2000 லேண்ட்லைன் ஃபோன்களுக்கு ஒரு டெக்னீசியன் எனும் விகிதத்தில் தான் இப்போது இருக்கிறோம்” என்கிறார் தேசிய தொலைதொடர்பு ஆப்ரேட்டர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவரான தாமஸ் ஜான்.

கடந்த வருடம் தொலைதொடர்பு துறை விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அறிவித்தவுடன், ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாகவே குறைந்தது. பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்-ஐ மறுசீரமைப்பு செய்ய ஒதுக்கப்பட்ட 70,000 கோடி ரூபாய் திட்டத்தில், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு 30,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட அதே நாளில், 50 முதல் 60 வயதுக்குள் இருக்கும் 92,300 பேர் விருப்ப ஓய்வு பெற்றார்கள். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்-ன் தேசிய அளவிலான ஊழியர்கள் எண்ணிக்கையை இது பாதியாக குறைத்தது. பத்து வருடங்களாக நஷ்டத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் இரண்டு நிறுவனங்களிலும் இருக்கும் ஊதியச் செலவுகளை குறைக்கவே இந்த விருப்ப ஓய்வு திட்டம் கொண்டு வரப்பட்டது. 2019 ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல் ரூபாய் 13,804 கோடி நஷ்டத்தை ஈட்டியிருக்கிறது. எம்.டி.என்.எல் ரூ 3,693 கோடி நஷ்டத்தை ஈட்டியிருக்கிறது.

ஊழியர்களும், சங்கங்களும், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள், உண்ணா விரதங்கள் நாடு முழுவதும் நடைபெற்றிருக்கின்றன. ஊழியர்கள் மறைமுகமாக விருப்ப ஓய்வு பெற தள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.

“நான் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தேன், ஆனால் என்னைப் போல பலருக்கு அது விருப்பமானதாக எல்லாம் இருக்கவில்லை” என்கிறார் முத்ராஸ். முப்பது வருடங்கள் இந்த வேலையில் இருந்த முத்ராஸ், ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்றிருக்கிறார். ஷிவ் சேனா கட்சியால் நடத்தப்படும், எம்.டி.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினரான முத்ராஸ், “நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கும்படியான சூழலை நிறுவனம் உருவாக்கியிருந்தது” என்று சொல்கிறார்.

முத்ராஸுக்கு, அவர் வேலை செய்த கடைசி மூன்று வருடங்களில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், இந்த திட்டத்தின் கீழ் ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன் 850 பேருக்கு விருப்ப ஓய்வுக்கு அளிக்க வேண்டும் என அவர்களுக்கு இலக்கு இருந்ததாக சொல்லப்பட்டதாம். “அந்த இலக்கு அடையப்படவில்லை என்றால், ஓய்வு பெற தகுதியான வயது 60ல் இருந்து 58-ற்கு குறைக்கப்படும் என்றும் சொன்னார்கள்” என்று கூறும் முத்ராஸ் தான் அவர் வீட்டில் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த ஒரே நபர். “இது அச்சுறுத்துவதாக இருந்தது” என்கிறார் அவர்.

விருப்ப ஓய்வு திட்டம் அமல் செய்யப்பட்டு, கோவிட்-19 லாக்டவுன் தொடங்கிய பிறகு, வாடிக்கையாளர்களின் லேண்ட்லைன் துண்டிப்பு படிவங்கள் அதிக அளவில் வருவதாக சொல்கிறார் பிரிவு மேற்பார்வையாளர் ஷிர்கே. கடந்த ஒன்பது மாதங்களில் வாடிக்கையாளர்களின் புகார்களும் அதிகரித்திருப்பதாக முத்ராஸ் சொல்கிறார். குப்தா போன்ற வாடிக்கையாளர்களின் புகார்களை எல்லாம் கேட்கும் பொறுப்பு முன்னர் முத்ராஸுக்கு இருந்ததால், மத்திய மும்பையில் பல வாடிக்கையாளர்கள் முத்ராஸுக்கு நண்பர்கள் ஆகிவிட்டனர். புகார்கள் எதாவது இருந்தால் நேரடியாக அவருடைய செல் நம்பருக்கே அழைப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. அவர் ஓய்வு பெற்ற பிறகும் கூட அழைப்புகள் வந்தபடியே இருந்ததாக சொல்கிறார்.

ஆட்குறைப்பு காரணமாகவே, லாக்டவுன் காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த போது எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல் முறையே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்கிறார்கள் தொழிற் சங்கங்கள். இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை குறித்தும், தொழிற் சங்கத் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்தும் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்-ன் தலைமை நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வருக்கு ஸ்க்ரால் கேள்விகள் அனுப்பியது; எந்த பதிலும் வரவில்லை.

அரசின் தொலைதொடர்பு நிறுவனங்கள் தள்ளாடுவதற்கு ஆட்குறைப்பு மட்டுமே காரணமில்லை என்கிறார்கள் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள். “எங்களுடைய பழைய காப்பர் கேபிள்கள் எல்லாம், ஃபைபர் கேபிள்களாக மாற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு நிறைய நாட்களாகவே தெரியும். ஆனால் அதற்காக பட்ஜெட் கொடுக்கப்படவில்லை” என்கிறார் ஷிர்கே.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்-ற்கு இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு, வாடிக்கையாளர்கள் எல்லாம் 2016லேயே 4ஜிக்கு மாறிய பிறகும், இவர்கள் 3ஜியிலேயே இருப்பது. “ எங்களுடைய தனியார் போட்டியாளர்கள் எல்லாருமே 4ஜி கொடுக்கும் போதும், நாங்கள் 4ஜி உரிமம் வாங்குவதற்கு அரசு அனுமதிப்பதில்லை. இதனால் தான் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. இதை விட வேகமான, மேம்பட்ட இணையத்தை தேர்வு செய்கிறார்கள். எனவே அவர்களை குற்றம் சொல்ல முடியாது” என்கிறார் தாமஸ்.

சீரமைப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 70,000 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட 24,000 கோடி ரூபாய் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்-ற்கு 4ஜி ஸ்பெக்ட்ரமை ஒதுக்குவதற்கே. ஹூவாய் மற்றும் ZTE நிறுவனங்களில் இருந்து 4ஜி கருவிகளை வாங்க ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் அதை ரத்து செய்யும் நிலைக்கு பி.எஸ்.என்.எல் தள்ளப்பட்டது.

ஜூன் மாதம் சீன ராணுவத்தால் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால், அரசு நிறுவனங்கள் எதுவும் சீன நிறுவனங்களோடு வணிகம் செய்ய தடை போடப்பட்டது. “ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு எந்த தடையும் போடப்படவில்லை. இது எப்படி நியாயம்?” எனக் கேட்கிறார் ஷிர்கே. ஒரு புது 4ஜி ஒப்பந்தம் வருவதற்குள், தனியார் நிறுவனங்கள் 5ஜிக்கு மாறிவிடும் என தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன.

பழைய சேவைகள், குறைவான ஊழியர்கள் ஆகியவை வாடிக்கையாளர் இழப்பிற்கும், பெரிய பண நஷ்டத்திற்கும் காரணமாக இருக்கும் என சங்கங்கள் சொல்கின்றன. “தனியார் நிறுவனங்கள் தொலைதொடர்பு துறையில் கால் ஊன்ற ஊக்குவிக்கும் அரசு, சொந்த நிறுவனங்களை தேங்க வைத்திருக்கிறது என்கிறார் தேசிய பி.எஸ்.என்.எல் தொழிலாளர்கள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் தினேஷ் மிஸ்ட்ரி.

தொலைதொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு இது தொடர்பாக ஈமெயில்கள் அனுப்பிய பிறகும், எந்த பதிலும் வரவில்லை. “ அரசு எடுத்திருக்கும் எல்லா முடிவும், எம்.டி.என்.எல் , பி.எஸ்.என்.எல்-ற்கு எதிராகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு பி.எஸ்.என்.எல் அழிவதை பார்க்க வேண்டும்” என்கிறார் எம்.டி.என்.எல் தொழிற் சங்கத் தலைவரும், ஷிவ் சேனாவின் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்விந்த் சாவந்த்.

(www.scroll.in இணையதளத்தில் ஆரேஃபா ஜோஹரி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

அழிவின் விளிம்பில் பிஎஸ்என்எல் – மக்களுக்கான நிறுவனம் மடியக் காரணம் என்ன?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்