வெள்ளம், கனமழை, புயல் என பல்வேறு பேரழிவுகள் பெரும்பாலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் தமிழகத்தை சிதைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ‘நிவார்’ புயல் தமிழகம் மற்றும் புதுவையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இச்செய்தி தமிழகம் மற்றும் புதுவை கடலோர மக்களை பீதியிலும் பெரும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு தங்களது மீட்புக் குழுக்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் தயார்நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்(IMD) அறிக்கை படி, நிலநடுக்கோடு இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மேலே சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுப்பெற்று வட இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று நவம்பர் 25-ம் தேதி மதியம் வட இலங்கை மற்றும் காரைக்கால், மாமல்லபுரம் கடற்கரை வழியாக கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பொறுத்தவரை இப்படிப்பட்ட புயல் எச்சரிக்கைகள் ஆச்சர்யமான ஒன்றல்ல. உலக வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான புயல்கள் அதுவும் அதிவேகத்துடன் கூடிய புயல்கள் உருவாகும் என 2018-ம் ஆண்டே சர்வதேச பருவநிலை ஆராய்ச்சி அமைப்புகள் மூலம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 122 புயல்கள் உருவாகி கரையை கடந்துள்ளன.
இதனால் பல பில்லியன் டாலர்கள் பொருட்சேதம் மற்றும் பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதில் குறிப்பாக இந்திய பெருங்கடலில் 2019-2020-ம் ஆண்டில் மட்டும் 11 புயல்கள் உருவாகியுள்ளன. இதில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவார்’ மற்றும் அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘காட்டி’ புயலும் அடங்கும்.
இப்படி ஒவ்வொரு முறையும் புயல் வரும்போதெல்லாம் காப்பாற்ற கடவுளையும், நிவாரணம் கேட்டு அரசையும் நாடும் நாம், இந்த புயல் உருவாக நாம்தான் காரணம் என்பதை உணர மறுக்கிறோம். இன்று நாம் சந்திக்கும் கனமழை, வெள்ளம், புயல், வறட்சி, காட்டுத் தீ, கடல்நீர் மட்ட உயர்வு என அனைத்திற்கும் மிக முக்கிய காரணம் உலக வெப்பமயமாதலே ஆகும். அதற்கு முழுக்காரணமும் மனிதர்களாகிய நாம் மட்டுமே. இதன் காரணமாகவே இன்று நாம் ‘நிவார்’ என்ற புயலை சந்திக்க இருக்கிறோம்.
இதனை புரிந்துகொள்ள முதலில் புவி எப்படி வெப்பமடைகிறது என்பதை சுருக்கமாக தெறிந்துகொள்வோம். பூமியில் நாம் அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் எரிபொருட்களான பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி என அனைத்துமே கரியமில வாயுக்களைத்தான் அதிக அளவில் வெளியிடுகின்றன. இந்த வாயுக்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு சென்றடைந்து பூமி திருப்பி வெளியிடும் வெப்ப ஆற்றலை வெளிமண்டலத்திற்கு போக விடாமல் தடுப்பதன் மூலமாக பூமி வெப்பமடைகிறது. ஆக, எந்த அளவு கரியமில வாயுக்கள் அளவு அதிகரிக்கிறதோ அதே அளவு பூமியும் வெப்பமடையும்.
இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயரும், அதிக நீர் ஆவியாகி கன மழை வெள்ளம் ஏற்படும், அதிக அதிவேக புயல்களும் உருவாகும். இதில் உலக வெப்பமயமாதலால் எப்படி புயல்கள் உருவாகின்றன என்பதை பார்க்கலாம்.
வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுக்கள் பூமி அனுப்பும் வெப்பத்தை தடுப்பதன் மூலம் பூமிக்கே அந்த வெப்பம் வந்தடைகிறது. இந்த வெப்பத்தை உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் கடல்நீர் அதிகமாக உட்கொள்கின்றத. இதனால் கடல்நீர் வெப்பம் அசாதாரண உயர்வை அடைந்து அதிக அளவு நீர் நீராவியாக மாறி சூடான நீராவியாக மேல்நோக்கி செல்கின்றது. இதே போன்றுதான் குளம், குட்டை, ஏரி என அனைத்திலுமே நீர் ஆவியாகி மேல்நோக்கி வளிமண்டலத்திற்கு சென்று பின் மேகங்களாக உருவெடுக்கின்றன.
இப்படி கடல்நீரின் பெரும்பகுதி ஆவியாகி அவை சுடான நீராவியாகி மேல்நோக்கி செல்வதால் அந்த குறிப்பிட்ட இடத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையை சமன் செய்ய அதனை சுற்றி இருக்கும் உயர் காற்றழுத்தப் பகுதி தாழ்வான காற்றழுத்தப் பகுதியை நோக்கி நகரும். இவ்வாறு நகர்ந்த பிறகு அங்குள்ள சூடான கடல்நீர் வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் அங்கோர் வெற்றிடத்தை உருவாக்கி காற்றழுத்த தாழ்வு நிலையை உருவாக்கும். இதனை சரிசெய்ய மீண்டும் உயர் காற்றழுத்தம் தாழ்வான காற்றழுத்த இடத்தை நோக்கி நகரும். நீராவி மேலே சென்று குளிரூட்டப்பட்டு மேகங்களாக மாறும். இப்படி காற்றழுத்தம் குறைதல் அதை சமநிலை படுத்த உயர் காற்றழுத்தம் நகருதல் நீராவி மேகங்களாக உருவெடுத்தல் என தொடர்ந்து ஒருவித சுழலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இந்த தாழ்வுநிலை கடல் நீர் வெப்பத்தை பொறுத்து புயலாக மாறி நிலப்பரப்பை வந்தடைந்து கரையைக்கடக்கிறது.
பொதுவாக ஒரு புயல் உருவாக பரந்து விரிந்த வெற்றிடமும் நீராவியும் வேண்டும். இதன் காரணமாகத்தான் புயல்கள் கடலில் மட்டுமே உருவாகின்றன, குளத்திலோ ஏரியிலோ உருவாவதில்லை. தற்போது நடக்கும் புவி வெப்ப உயர்வால் ‘நிவார்’ போன்ற பலநூறு புயல்களை நாம் கண்டிப்பாக சந்திப்போம்.
எனவே உலக வெப்பமயதலை கட்டுப்படுத்தாமல் நம்மால் புயலையும், கன மழையையும் கட்டுப்படுத்தவே முடியாது. அதற்கு முதலில் கரியமில வாயுக்களை வெளியிடும் அனைத்து தேவைகளையும் குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சூரிய மின்சக்தி, காற்றாலை, நீராற்றல் போன்ற நிலையான ஆற்றலுக்கு மாறி நிலக்கரி மற்றும் கரியமில வாயுக்களை வெளியிடும் அனைத்து எரிபொருளையும் கைவிட வேண்டும். இலையெனில் கரியமில வாயுக்கள் வளிமண்டலத்திற்கு போகமுடியாத தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.
அதே நேரத்தில் தனிமனிதராக நாம் நம் தேவைகளை அவசியத்திற்கு ஏற்ப குறைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நற்செயல்கள் மூலம் வருங்காலத்தை பருவநிலை மாற்ற போராபத்திலிருந்து கொஞ்சமாவது காப்பாற்றலாம்.
(கட்டுரையாளர் அருண்குமார் ஐயப்பன் ஒரு ஆராய்ச்சி மாணவர்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.