Aran Sei

ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை – இஸ்ரேலைப் பழிவாங்குமா ஈரான்?

ரானின் முக்கிய அணு விஞ்ஞானியும், இஸ்லாமியப் புரட்சிகர இராணுவத்தின் ஜெனரலுமான மொஹ்சென் ஃபக்ரிஸாதே வெள்ளியன்று டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டது மேற்கு ஆசியாவில் புது பிரச்சினையைத் தொடங்கியிருக்கிறது.

புரட்சிகர இராணுவத்தின் ‘குட்ஸ்’ படையைத் தலைமை தாங்கி வந்த ஜெனரல் கசீம் சுலைமானி இந்த வருடம் கொல்லப்பட்டதற்குப் பிறகு, இப்போது மீண்டும் ஈரான் அரசின் முக்கியமான ஆளுமை ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

பக்ரிஸாதே, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு 1990களிலும், 2000-ன் தொடக்கத்திலும் தலைமை தாங்கியவர். இரானின் அணு சக்தித்துறையிலும், பாதுகாப்பு அமைச்சகத்திலும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர் என்கின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். டெஹ்ரானுக்குக் கிழக்கே 65 கிமீ தொலைவில் இருக்கும் அப்சர்ட் எனும் நகருக்கு ஃபக்ரிஸாதே காரில் சென்றுகொண்டிருந்த போது துப்பாக்கிகளோடு வந்தவர்கள் அவரைச் சுட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஈரானின் அரசியலில் ஒரு முக்கியமான மாற்றம் நடக்கவிருக்கும் வேளையில், இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவையும் ஈரானையும் போர் முனை வரை கொண்டு சென்ற டொனால்டு ட்ரம்பின் “அதிகபட்ச அழுத்தம்” (maximum pressure) எனும் கொள்கை முடிவுக்கு வரும் நிலையில், ஜோ பைடன் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குவார் என நம்பப்பட்டிருந்தது.

2015ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, ஈரான் குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அளவு கடந்து குவித்து வைத்திருக்கிறது. சர்வதேச அணுசக்தி அமைப்பு, நவம்பர் 2 நிலவரப்படி 202.8 கிலோ யுரேனியம் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதித்திருக்கும் வேளையில், ஈரான் 2,442.9 கிலோ யுரேனியத்தைச் சேமித்து வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

கூட்டு விரிவான செயல் திட்டம் [Joint Comprehensive Plan of Action (JCPOA)] எனும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை 2018 ஆம் ஆண்டு பிற நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் ட்ரம்ப் நீக்கிய பிறகுதான் ஒப்பந்தத்தை ஈரான் மீறத் தொடங்கியது. பேரம் பேசுவதற்கோ வேறு சூழ்ச்சிக்காகவோ, அணு சக்தி திட்டங்களை ஈரான், அடி மேல் அடி வைத்து வளர்த்துக்கொண்டிருக்கும் போது ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டது, ஈரானை தடுமாறச் செய்யும்.

கொன்றது யார்?

ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவெத் சரீஃப், இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பங்கு இருப்பதற்கான அறிகுறிகள் நிறைய இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியது என அமெரிக்க உளவுத்துறை சொல்வதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. கடந்த பத்து வருடங்களில் குறைந்த பட்சமாக ஆறு ஈரானிய விஞ்ஞானிகள் [மசூத் அலி-மொஹமதி, மஜித் ஷஹ்ரியாரி, ஃபெரேதுன் அப்பாஸி-தவனி, தரியோஷ் ரேஷாய், மொஸ்தஃபா அஹ்மதி ரோஷன் மற்றும் ஃபக்ரிஸாதே] துப்பாக்கிச் சூட்டாலும், குண்டு வெடிப்பாலும் கொல்லப்பட்டதில் இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஃபக்ரிஸாதேவின் புகைப்படத்தைக் காண்பித்து, “ஃபக்ரிஸாதேவின் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லியிருந்தார்.

ஜனவரி 20 ஆம் தேதி, அலுவலகத்தை விட்டு விலக இருப்பதால், அதற்கு முன் ஈரான் மீது (வெடிகுண்டு) தாக்குதல் நடத்த வேண்டும் என டொனால்டு ட்ரம்ப் யோசனைகள் கேட்டதாகக் கூறப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ட்ரம்பின் உதவியாளர்கள், ஆலோசகர்கள் ட்ரம்பைத் தடுத்திருக்கிறார்கள் என்கிறது நியூயார்க் டைம்ஸ். அதன் பிறகு, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ, இஸ்ரேலுக்குப் பயணித்து நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

பாம்பியோவும், இஸ்ரேல் பிரதமரும், சவுதி அரேபியாவில் நவீனப் பெருநகராகக் கட்டப்படும் நியோமிற்குப் பயணித்து இளவரசர் மொஹமது பின் சல்மானுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றனர். சவுதி அரேபியாவும் இஸ்ரேல் தலைவர்களும் நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது இதுவே முதல் முறை. ஈரான் தன்னுடைய அணு சக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதை நிறுத்தவே இஸ்ரேலும், சவுதி அரேபியாவும், ட்ரம்பும் முயற்சிப்பார்கள் என்பது ரகசியம் அல்ல. அணு சக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது ஈரான் மீதிருக்கும் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து, ஈரான் வலிமையாக உதவும். நியோமில் தலைவர்கள் சந்தித்துக்கொண்ட போது, ஏதோ ஒன்றுக்குத் திட்டம் போடப்படுவதாகச் சந்தேகங்கள் எழுந்த நிலையில் இப்போது ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டிருக்கிறார்.

பதிலடி

இதற்கு “இடி போல” பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருக்கிறது. பழி வாங்க வேண்டும் என நாட்டில் போராட்டங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இஸ்ரேலைத் தாக்குவதற்கு ஈரானிடம் குறைவான வசதியே இருக்கிறது. ஹிஸ்புல்லா எனும் லெபனான் ஆயுதக்குழு மற்றும் அரசியல் கட்சி, தெற்கு லெபனானில் தனக்கிருக்கும் முகாம்களை வைத்து வட இஸ்ரேலைத் தாக்கி ஈரானுக்கு உதவத் தயாராக இருந்தால் மட்டுமே ஈரானால் பதிலடி கொடுக்க முடியும்.

2019 ஆம் ஆண்டு, ட்ரம்ப் பொருளாதாரத் தடைகளை விதித்ததும், ஈரான் செய்தது போலவே, வளைகுடாவில் இருக்கும் சன்னி முடியாட்சி நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் மீதும் ஹார்முஸ் ஜலசந்தியில் இருக்கும் எண்ணெய் டேங்கர்கள் மீதும் தாக்குதல் நடத்த ஈரானால் முடியும். ஆனால், சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் போரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க முகாம்களைத் தாக்கக் குறி வைத்ததை மட்டும்தான் ஈரான் செய்தது; அதுவும், தன்னுடைய இராணுவ வீரர்களைக் காத்துக்கொள்ள அமெரிக்காவிற்குப் பல முறை எச்சரிக்கைகள் கொடுத்த பிறகுதான் செய்தது.

ஈரானின் குழப்பம்

இப்போது ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பழி வாங்க வேண்டுமென்றால், ஈரான் என்ன செய்யும் என்பதுதான் கேள்வி. ஏற்கனவே வீழ்ந்திருந்த பொருளாதார நிலையை மேலும் மோசமாக்க ட்ரம்ப் பொருளாதாரத் தடை விதித்ததாலும், இஸ்ரேலின் ரகசிய மற்றும் வெளிப்படையான தாக்குதல் நடவடிக்கைகள் ஈரானின் பாதுகாப்பு எந்திரங்களின் சக்தியைக் கேள்விக்குள்ளாக்கியதாலும், பிராந்திய மாற்றங்கள் புதிய புவிசார் அரசியல் பிரச்சினைகளை உண்டாக்கியதாலும், ஈரான் அதீத அழுத்தத்தில் இருக்கிறது. சுலைமானி கொல்லப்பட்ட போது நாட்டிற்குத் திட்டங்கள் வகுக்கும் ஒரு முக்கியமான ஆளுமையை ஈரான் இழந்தது. ஒரு விநோதமான வெடிப்பு, நாதன்ஸில் இருக்கும் அணுசக்தி மையத்தின் மையவிலக்கு அரங்கைச் சேதமாக்கியது.

சிரியாவில், இஸ்ரேலிய ஜெட்கள் ஈரானிய சொத்துகளையும் போராளிகளையும் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தது. சிரியாவின் வான்வெளியைக் கட்டுப்படுத்தும் ஈரானின் நட்பு நாடான ரஷ்யாவின் அதிபர் புதினோ, அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது, ஒரு முக்கிய விஞ்ஞானி கொல்லப்பட்டிருக்கிறார்.

ஈரான் பெரிய குழப்பத்தில் இருக்கிறது. இப்போது ஈரான் பதிலடி கொடுக்கவில்லை என்றால், அரசின் முக்கியத் தலைவர்களைப் பாதுகாப்பது குறித்தும், “தீவிரவாதிகள்” என ஈரான் சொல்பவர்களின் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் நாட்டிற்கு உள்ளும், புறமும் கேள்விகள் கேட்கப்படும். பதிலுக்குப் பெரிய தாக்குதல் நடத்தினால், இருக்கும் பிரச்சினை பூதாகரமாகி, இஸ்ரேலும் அமெரிக்காவும் இராணுவத் தாக்குதல் நடத்த இடம் வழங்கியதாக ஆகும். பைடன் மீண்டும் அமெரிக்காவை அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைப்பதற்கான பாதை தடுக்கப்படும்.

(தி இந்து இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை – இஸ்ரேலைப் பழிவாங்குமா ஈரான்?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்