ஊடகங்கள், தன்னைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு வருவது தொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் உமர் காலித் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஊடகங்கள் வெளியிடும் செய்தியால் ஒரு நபர் “நிரபராதி என்ற அனுமானம்” தகர்க்கப்பட்டு விடக்கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டார்.
உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி
இந்நிலையில், டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில், உமர் காலித் தாக்கல் செய்துள்ள மனுவில், டெல்லி கலவரத்தில் தொடர்பு இருப்பதாக, நான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், தான் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட ஆவணத்தில், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதையும், அந்த ஆவணத்தின் கீழ், “கையெழுத்திட மறுத்துவிட்டார்” என்று எழுதப்பட்டிருப்தையும் உமர் காலித் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இந்த ஆவணத்தின் அடிப்படையில், ஊடகங்களில் தன்னைக் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்படுவதால், அது நீதி விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உமர் காலித் தெரிவித்துள்ளார்.
‘சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தவிர வேறு சிக்கலைச் சந்திக்கவில்லை’ – உமர் காலித்
இந்த வழக்கில், டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ஒப்புதல் வாக்குமூலத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள், ஒருவேளை அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்திலும், அதன் அடிப்படையில் ஒருவரை தண்டிக்க முடியாது என்ற தகவலை, மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட செய்தி அறிக்கை ‘இஸ்லாமிய தீவிரவாதி மற்றும் இந்து விரோதியான, டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமர் காலித்’ என்று தொடங்குவதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி தினேஷ் குமார், ஒட்டுமொத்த டெல்லி கலவரமும், இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது என்பது போன்ற பிம்பத்தை, இந்த செய்தி ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
“பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறப்படும் நிலையில், அவர்கள் அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும் செயல்படாத பட்சத்தில், அநீதி நிகழும், அபாயம் உள்ளது. ‘ஊடகங்ளே நடத்தும் விசாரணை’ அப்படிப்பட்ட ஒரு அபாயம்தான்” என்றும் நீதிபதி தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில், இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, ஊடகங்கள் தங்களைத் தாங்களே ஒழுங்கு படுத்திக்கொள்வார்கள் என்று, தான் நம்புவதாக நீதிபதி தினேஷ் குமார் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னரே, காவல்துறை குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக உமர் காலித் தனது மனுவில், குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டெல்லி காவல்துறை, தாங்கள் எந்த தகவலையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.