வேளாண் சட்டங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்த தகவலை தர முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆர்டிஐ செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ், வேளாண் அவசர சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டங்கள் குறித்த தகவலை, விவசாய அமைச்சகத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார்.
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு யாரிடமும் கருத்து கேட்கவில்லை – ஆர்டிஐ மூலம் அம்பலம்
அதில், கருத்து கேட்பு நடத்தப்பட்ட நாள், நேரம், கலந்துகொண்டவர்களின் விபரம் ஆகியவை கேட்கப்பட்டுள்ளது. அதேபோல், இதுகுறித்து மாநிலங்கள் தரப்பில் அனுப்பப்பட்ட கருத்துகள் மற்றும் அதுதொடர்பான தகவல் பறிமாற்றங்கள் குறித்த விபரங்களையும் அஞ்சலி கேட்டுள்ளார்.
மத்திய தகவல் ஆணையத்தின் விதிகள் மற்றும் சட்டம் இயற்றுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய விதிகள் தொடர்பான கொள்கைகளின் படி, அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னர், அந்த வரைவுச் சட்டம் பொதுமக்களின் பார்வைக்கு 30 நாட்கள் வைக்கப்பட வேண்டும். இது தொடர்பான தகவலையும் மற்றொரு ஆர்டிஐ மூலம் அஞ்சலி தனியாக கேட்டுள்ளார்.
இந்த இரண்டு ஆர்டிஐ தகவல் கோரிக்கைகளும், மத்திய அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுக்கு மாற்றி, மாற்றி அனுப்பப்பட்டதாகவும், இரண்டு மத்திய தகவல் அலுவர்கள் இதை செய்ததாகவும் அஞ்சலி தி இந்து -விடம் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் பிரிவின், நிர்வாக பொறுப்பாளர் ஒருவர், அதுகுறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று அஞ்சலியிடம் தெரிவித்ததாக தி இந்து செய்தி கூறுகிறது.
இந்த செய்தியை, ஜனவரி 12ஆம் தேதி தி இந்து வெளியிட்டது. அன்றை தினம் விவசாய சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்னர் கருத்து கேட்கப்படவில்லை என்று கூறுவது, ‘தவறான தகவல்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றை தினம் (13.01.21) திடீரென்று, மத்திய விவசாயத்துறையின் தகவல் அலுவலரிடமிருந்து அஞ்சலி பரத்வாஜூக்கு மற்றொரு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “நீங்கள் கேட்டுள்ள தகவலை எதிர்த்து, பல்வேறு நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 8 (1) (b) அடிப்படையில், இந்த தருணத்தில் தகவலை கொடுப்பது சாத்தியமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஞ்சலி தி இந்து -விடம் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுகுறித்த தகவலை தரக்கூடாது என்று, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று கூறியுள்ள அஞ்சலி, அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும் தி இந்து -விடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.