Aran Sei

நரேந்திர மோடி அரசு அரசியல்சாசன தினத்தை கொண்டாடுவது நகை முரண் – எஸ்.என்.சாஹூ

ரசியல்சாசனத்தின் மீது அனைத்து முனைகளிலும் தாக்குதல் தொடுத்தபடியே இருக்கும் நரேந்திரமோடியின் அரசாங்கம் 2015ல் அறிவித்த அரசியல்சாசன நாளை கொண்டாடுவது உண்மையிலேயே நகைமுரண்தான். .

இந்திய அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியிருக்கிற உரிமைகளை, குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்கள் சுயமரியாதையோடு வாழும் உரிமைகளை, நீர்த்துப் போகச் செய்யும் கொள்கை மற்றும் சட்டங்கள் தொடர்பாக மாற்று கருத்தை முன்வைப்பவர்களை,  எதிர்ப்பவர்களை மூர்க்கமாக ஒடுக்கும் நடவடிக்கைகளில் தென்படும் அபாயகரமான முன்னேற்றம் அச்சுறுத்துவதாக இருக்கிறது.

பெரும்பான்மைவாதத்தின் மூலம் சமூகத்தை துருவங்களால பிரித்து, பெரும்பான்மைவாத திருவுருக்களையும், உணர்வுகளையும் கட்டமைக்கும் நடவடிக்கைகள்,  ’இந்து ராஜ்யம் எதார்த்தமானால் பெரும் கேடாக முடியும்’ என்று அம்பேட்கர் விடுத்திருந்த எச்சரிக்கையை நினைவுப்படுத்துவதாகவே இருக்கின்றன. அந்த வகையில், அவர் இந்து ராஷ்டிரத்தை எதிர்த்து, வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.

இந்து முஸ்லீம் உறவை சிதைப்பது

1949 நவம்பர் 26 அன்று, இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் வரலாற்று மற்றும் புரட்சிகர முக்கியத்துவத்தை நினைவுப்படுத்துகையில், முஸ்லீம்களுக்கு எதிராக போரை, பிரிட்டிஷாருக்கு எதிரான போராக வியாக்யானப்படுத்தி பேசிய தலைவர்களின் ஆபத்தான கருத்தாடல்களை குறிப்பிட்டு அம்பேட்கர் விடுத்த எச்சரிக்கைகள் நினைவுக்கூறப்படுகின்றன. 1946 டிசம்பர் 17 அன்று, ஜவஹர்லால் நேரு அரசியலமைப்பு அவையில் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானத்தில் அம்பேட்கர் பேசியவைதான் அவை.

அதில் அவர் உறுதியான மொழியிலேயே எச்சரித்தார், “போர் மூளுவதற்கான காரணம் நாம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினையோடு தொடர்புடையதாக இருந்தால், அது பிரிட்டிஷாருக்கு எதிரானதாக இருக்காது, மாறாக அது முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கும்.”

தன்னுடைய உரையில் பதட்டத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்திய அவர், “இஸ்லாமியர்கள் அடிபணிந்து விடக்கூடும் என்று கருதி, இந்து முஸ்லீம் பிரச்சினையை, போரின் மூலம் வன்முறைப் பாதையில் தீர்க்கும் திட்டத்தை எவரேனும் நெஞ்சில் சுமந்து திரிவார்களானால், அவர்களின் நாடு இஸ்லாமியர்கள் மீது ஒரு படையெடுப்பை நிகழ்த்தி கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்என்றார்.

பிரிவினை காலத்தை நினைவுப்படுத்துவதும், முஸ்லீம்களை அந்நியமாக்குவதும்

2014ம் ஆண்டு முதலே, இஸ்லாமியர்களை அந்நியர்களாக சித்தரித்து, மதங்கடந்த ஒற்றுமையை சிதைக்க, நச்சை பரப்பும், சமூகத்தில் வேறுபாட்டை ஊக்குவிக்கும் எண்ணற்ற முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்காக அவர்களில் பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  தோற்றம், உடுப்பு போன்றவற்றிற்காக  அவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது மட்டுமில்லாமல், பிற மத நம்பிக்கையாளர்கள் மீது இஸ்லாமியர்களை ஒற்றை தாடி மற்றும் தோற்றத்தில்  இருக்கிறார்கள் என்பதற்காக வன்முறைகள் ஏவப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் எல்லைகள் வழியாக சட்டவிரோத குடியேறுபவர்களை குறிக்க ’கரையான்’ என்ற சொல்லை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியதென்பது, உட்பொருளில் நம் நாட்டு இஸ்லாமியர்களையும் சுட்டுவதற்காகவும் இருந்தது.

வெவ்வேறு மதத்தவர்கள் குறிப்பாக இந்து, முஸ்லீம் சமூகங்களுக்கிடையே நிகழும் காதலை குற்றமாக்கி, லவ் ஜிஹாத் என்ற சொற்பிரயோகத்தை வலிந்து திணிக்கும் நஞ்சை கக்கும் நடவடிக்கைகள், குடிமக்களின் வாழும் உரிமை மற்றும் சுதந்திரத்தை பறிப்பவை என்ற வகையில் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலும் கூட.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் சமவாய்ப்புள்ள குடிமக்கள் இல்லை என்ற உணர்வை தரும் தொடர் முயற்சி என்பது போரன்றி வேறில்லை. அம்பேட்கரின் சொற்களில் சொல்வதானால், “ திட்டமிட்டு அவர்களை அடிமைப்படுத்துவது” என்றாகிறது.

அவ்வாறான அணுகுமுறைதான், “இஸ்லாமியர்களை திருமணம் செய்யும் இந்து பெண்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறினால், ஆண்கள் உயிரிழக்க நேரிடும்” என்ற யோகி ஆதித்யநாத்தின் அச்சுறுத்தும் அறிக்கையில்  வெளிப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, “தங்களுடைய அடையாளத்தை மறைத்து எங்கள் சகோதரிகளின் மானத்தோடு விளையாடும் நபர்கள், தங்கள் வழியை மாற்றிக் கொள்ளவில்லையென்றால், ராம் நாம் சத்ய (மரண ஊர்வலகத்தில் எழுப்பப்படும் முழக்கம்) பயணம் தொடங்கிவிடும்”

பிரிவினைக்கு முந்தைய 1946களில் அம்பேட்கர் முன் அனுமானித்து எச்சரித்த போரின் வெளிப்பாடுதான் இந்த கொலை மிரட்டல். இந்திய அரசியல்  சாசனத்தை  ஏற்றுக் கொண்டு 71 ஆண்டுகள் கழித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் வெறுப்பு தோய்ந்த சொற்கள், அரசியல்சாசனத்தை வடிவமைக்கும்  சாகசமான பணியில் அரசியல்சாசன அவை ஈடுபட்டிருந்த  காலக்கட்டத்தை நினைவூட்டுபவையாக இருந்தன. இன்னும் சொல்லப் போனால், மகாத்மா காந்தி அவர்கள் மதவாதத்திற்கெதிரான ஒரு மருந்தாக அரசியல் சாசன உருவாக்கத்தை பார்த்தார்

மதம் மீறிய திருமணங்களையும், காதலையும் குற்றமாக்கும் நோக்கம் கொண்ட சட்டவிரோத மதமாற்ற தடை  சட்டம் 2020, என்ற கொடூரமான சட்டம் அரசியல்சாசன நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் பிரகடனப் படுத்தப்படுகிறது. இது, வாழும் உரிமை மற்றும் சுதந்திர உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டப்பிரிவு 21ன் மீதான நேரடி  தாக்குதலாகும். இதேபோன்றே, பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வருவோம் என்று அறிவித்திருக்கின்றன.

இதேபோன்று கொடூரமான ஒன்றுதான், இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட மாணவர்கள் குடிமைப்பணிகளுக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதை ‘யூபிஎஸ்சி ஜிஹாத்’ என்று வியாக்யானம் செய்த தொலைக்காட்சியின் செயல். நீதிமன்றங்கள் நல்வாய்ப்பாக, அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்திருந்தாலும், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எவ்வித தடையும் விதிக்கவில்லை.

பழிவாங்குவதற்கான அறைகூவல்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கை  கொண்ட மக்கள், உத்திரபிரதேசம் உட்பட நாடு தழுவிய அளவில்  போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வினோதமானது என்னவென்றால், போராட்டக்காரர்களை பழிவாங்கும் யோகியின் உத்திரவாதம்தான். அரசியல்சாசனம் உறுதி அளித்திருக்கிற உரிமைகளை பயன்படுத்தி போராடும் மக்களுக்கு எதிரான இந்த அறைகூவல் என்பது, மக்கள் மீதும், அரசியல் சாசனத்தின் மீதும் போர் தொடுப்பத்திற்கு  நிகரானது.

1946 அரசியல் சாசன அவையில் ”இந்த நாட்டின் அரசியல் பிரச்சினைகளை தீர்ர்க்க ஒருவர் போரை ஒரு கருவியாக சிந்திப்பார் என்பதை நினைத்து திகைப்பாய் இருக்கிறது ”  என்று தன்னுடைய கலக்கத்தை வெளிப்படுத்தினார்.

அதே அம்பேத்கர், 2020ம் ஆண்டில், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும், அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்களுக்கு எதிராகவும் சட்டரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்பொறுப்புகளில் வீற்றிருக்கும் தலைவர்கள், போர் தொடுப்பதன் மூலம் அரசியல் சாசனத்திற்கெதிராக போர் தொடுப்பதை கண்ணுற்று இன்னும் அதிகமாகவே திகைத்து போயிருப்பார்.

வன்முறையை பயன்படுத்துவதை கண்டிப்பது

அமெரிக்காவின் போர்க்குணம் கொண்ட காலனிகளை வன்முறையின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை தவிர்க்க கோரிய எட்மண்ட் பர்க்கை அம்பேத்கர் மேற்கோள் காட்டியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பர்க் கூறுகிறார் ”பலப்பிரயோகம் மட்டுமே செய்வதென்பது தற்காலிகமானதுதான். அது தற்காலிகமாக அழுந்தியிருக்கலாம், ஆனால், மீண்டும் அழுத்தி வைக்க வேண்டிய தேவையை அது நீக்கிவிடுவதில்லை. கைபற்ற வேண்டிய தேவை இருக்கிற நாடு ஆளப்படவில்லை என்று பொருள்”

மேலும் அவர் தொடர்கிறார், “ என்னுடைய அடுத்த ஆட்சேபனை என்பது அதன் நிச்சயமற்ற தன்மைதான். சமரச தோல்வியை சரிகட்ட உங்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லை என்றாலோ,  பலமிருந்தும் பலப்பிரயோகம் தோல்வியடைந்து, சமரசத்திற்கான கதவுகளை முற்றாக அடைக்கப்பட்டிருந்தாலோ, நீங்கள் வெற்றியடையவில்லை என்று பொருள். சில வேளைகளில் பலமும், அதிகாரமும் அன்பினால் விலை பேசத்தக்கவை. ஆனால், அவை ஒருபோதும் தோற்கடிப்பட்ட வன்முறை முயற்சிகளால் கைகூடாது”

அதிகாரத்தை பற்றிய அம்பேட்கர் சித்தர் வாக்கு

சமகாலத்தில், நாட்டை அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆள்வதற்கு தேர்தல் மூலம் உரிமை பெற்றவர்கள் தீவிரவாத பெரும்பான்மைவாத்தை  பின்பற்றும் சூழலில், 1946ம் ஆண்டு அரசியல் சாசன அவையில் அம்பேட்கர் பர்க்கை மேற்கோள் காண்பித்தது சால பொருத்தமாயிருக்கிறது.

ப்ர்க்கை மேலும் மேற்கோள் காண்பித்த அம்பேத்கர், “ அதிகாரத்தை வழங்குவது எளிது, அறிவை வழங்குவது கடினம்”. ஆகையால், அம்பேட்கர் அரசியல் சாசன அவைக்கு இறையாண்மையுள்ள அதிகாரமானது அறிவுக்கூர்மையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நினைவூட்டினார்.

மேலும், “ அந்த அடிப்படையில் நாட்டின் பல்வேறு பிரிவினரையும் நாம் ஒன்றாக அழைத்து செல்ல முடியும். அஃதல்லாமல், மாற்று வழிகள் இல்லை.” என்றார்.

அரசியல்சாசனத்தின் அடிப்படையில் நாட்டை ஆள்வதற்கு தேர்தலின் மூலம் உரிமை பெற்றவர்கள் தங்களிடம்”தங்களின் பெரும்பான்மைவாதம் அறிவோடு கூடிய அதிகாரப்பயன்பாட்டோடு பொருந்துகிறதா?” என்று அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்களை பிறரென அணுகும் பலப்பிரயோக போக்கு சட்டவிரோதமானது மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பிரிவினரையும் தங்களோடு இணைத்து அழைத்து செல்வதற்கு ஒரு போதும் உதவாது.  அதிகாரத்தோடு, ஆட்சிக்கான ஞானத்தை இணைக்க  கோரும் அம்பேத்கரின் சித்தர் வகைபட்ட ஆலோசனையானது அரசியல் சாசனத்தை உயர்த்தி பிடித்து, யாரையும் மதம் அல்லது அடையாளத்தில் காரணமாக பழிவாங்குவதை தடுப்பதை நோக்கமாக கொண்டது.

21ம் நூற்றாண்டின் இந்தியாவின் அதிகாரமானது, லவ் ஜிஹாத் உள்ளிட்ட பிளவுவாத கண்ணோட்டம் கொண்ட திட்டங்களை அடையாளங்கண்டு ஒதுக்கி வைக்கும் அம்பேட்கரின் இந்த வழிகாட்டுதலை அடிப்படையாக கொள்ளட்டும். அதுதான், இந்தியா என்ற கண்ணோட்டத்தையும் பாதுகாக்கும், அரசியல் சாசனத்திற்கு உரிய மரியாதையை செலுத்தும்.

(www.thewire.in இணையதளத்தில் எஸ்.என்.சாஹூ எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

நரேந்திர மோடி அரசு அரசியல்சாசன தினத்தை கொண்டாடுவது நகை முரண் – எஸ்.என்.சாஹூ

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்