1926, ஜனவரி 18 ஆம் தேதி, ‘போர்க்கப்பல் போட்டம்கின்’ மாஸ்கோவில் திரையிடப்பட்டது:
1958 ஆம் ஆண்டு, பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற உலகக் திரைப்பட விழாவில், திரைப்பட விமர்சகர்களின் கருத்தின்படி, போர்க்கப்பல் போட்டம்கின் மற்றும் கோல்டு ரஷ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரலாற்றிலேயே மிகச் சிறந்த திரைப்படங்கள் என மதிப்பிட்டது. வழக்கமான திரைப்படங்கள் உருவாகி 30 ஆண்டுகள் கடந்த பின்பும் பேசா/ ஊமைத் திரைப்பட யுகத்தின் இரு செம்மையானத் திரைப்படங்களும் திரைப்பட ஆர்வலர்களின் நினைவிலும், இதயத்திலும் இன்னும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் போட்டம்கின்னுக்கும் கோல்டு ரஷ்க்கும் இடையே வேறு சில குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளும் உள்ளன. இரண்டு திரைப்படங்களும் 1925 ல் தயாரிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக ஆறுமாத இடைவெளியில் வெளியாகின. இரண்டுமே இளம் இயக்குநர்களின் படைப்புகள். கோல்ட் ரஷ் திரைப்படத்தை சார்லி சாப்ளின் தயாரிக்கும் போது அவருக்கு வயது 36. ஒல்லியான உடல்வாகு கொண்ட செர்கேய் ஐசென்ஸ்டீன் போட்டம்கின்னைத் இயக்கிய போது அவருக்கு வயது 27. சாப்ளின், ஐசென்ஸ்டீனை பெரிதும் பாராட்டிய அதே வேளையில் ஐசென்ஸ்டீன் நாடோடியை (The tramp, என்ற சார்லி சாப்ளினின் படம்) மிகவும் நேசித்தார்.
ஆனால் ஒற்றுமை பற்றிய பேச்சை இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், நீங்கள் சிந்திக்க முடியாத அளவு, பல வழிகளில், ஒன்றுபோல் ஒன்று இல்லை. மனநிலையில், கதை எவ்வாறு இயங்குகிறது என்பதில், எந்த வகையான கதையைச் சுற்றி வருகிறது என்பதில், கதாபாத்திரங்களின் ஆளுமையை கையாள்வதில் மற்றும் திரைப்பட மரபுவழக்குகளில் வேறுபட்டிருந்தன. அலாஸ்கா காட்டுப்பகுதியில் வாழும் மக்களின் தங்கத்தின் வருங்காலத்தைப் பற்றிய குழப்பத்தைக் கூறும் சாப்ளின் கதை, கிளர்ச்சி போர்க்கப்பலின் விவரித்தலுக்கு நேர் எதிரானது. கோல்ட் ரஷ், மகிழ்விப்பதை முதன்மையாகக் கொண்டிருக்கையில், போட்டம்கின் கிளர்ச்சியை கருவாகக் கொண்டிருந்தது.
1905 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியின் 20 ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட ஒரு திரைப்படத்தை இயக்க ஐசென்ஸ்டீன் நியமிக்கப்பட்டார். கோல்ட் ரஷ், அடக்க முடியாத, ஒப்பிட முடியாத நாடோடியைச் சுற்றி இருந்ததைப் போல அன்றி, போட்டம்கின்னில் ஒரு கதாநாயகனோ, வில்லனோ இல்லை. இது விடயத்தில் பதிலளிக்க வரும் ஒரு கதாபாத்திரம் கதாநாயகன் என்ற விளக்கத்திற்கு மிக நெருக்கமாக வரும், எதிர்ப்பாளர் மாலுமி வகுலின்சுக் கூட படம் துவங்கிய 15 நிமிடங்களில் இறந்துவிடுகிறார். பார்வையாளர்களின் கண்கள் சில கணங்கள் இங்கே ஒருவர் மீதும், அங்கே ஒருவர் மீதும் நிலைக்கின்றன. ஆனால் போட்டம்கின்னில் தனிப்பட்ட கதாபாத்திரங்களின் படைப்புடனான நமது சந்திப்பு இவ்வளவுதான்.
ஐசென்ஸ்டீன் 20 ம் நூற்றாண்டின் வரலாற்றில் ஒரு மகத்தான காலத்தின் சாரத்தையும், அதன் நெறிமுறைகளையும், மனநிலையையும் படம்பிடிக்க முயன்றார். மேலும் நிகழ்வுகளின் பின்னணியில் தனிநபரின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு அது பரப்பரப்பான காலத்தின் ஆன்மாவில் உள்ளுறைந்துள்ளது என இயக்குனர் கண்டார். போட்டம்கின்னில் புரட்சி ஒன்றுதான் படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. அதன் விரிந்த படக்காட்சியில் வரும் பிற கூறுகளான மாலுமிகள், கப்பல் அதிகாரிகள், ஒடெஸா துறைமுகம், சாதாரண ஒடெசான்கள், ஜார் மன்னனின் படைவீரர்கள், கப்பலின் துப்பாக்கி கோபுரம், மற்றும் கப்பல் ஆகியவை அனைத்தும் புரட்சியின் ஆற்றல்மிக்க உறவுகளாகவே காட்டப்படுகின்றன. உண்மையில், கப்பலின் முகப்பில் மோதும் கடல் அலைகளும், கப்பலின் புகைப் போக்கியிலிருந்து பேரலையாய் எழும் புகையும் கூட, பின் தொடர்ந்து வரப்போகும் கடுமையான எதிர் நடவடிக்கையைப் எதிர்பார்ப்பது போல, இரவு வானம் முழுவதும் அச்சுறுத்தும் புயல் மேகங்களாக பரவுகின்றன. வரலாற்றின் இந்த மகத்தான நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் காலமாற்றத்தை அவசியமாக பிரதிபலிப்பவர்களாக இருக்கிறார்கள். அதுவே அவர்களின் அவசியமான செயல்பாடாகவும் குறிக்கப்படுகிறது: அவர்களை முழமையாக்கப்பட்ட கதாபாத்திரங்களாகக் காண்பதை நிறுத்தி விடுகிறது. இருப்பினும், திரையில் அவர்கள் இருப்பதன் அசாதாரண காட்சிப் படுத்தல் காரணமாகவே படம் பார்த்து முடித்த பிறகும் பார்வையாளர்களோடு சில முகங்கள் தங்கி விடுகின்றன. ஆனால் அந்த அதிர்ச்சியூட்டும் முகங்கள் பற்றி பிறகு நிறைய வருகிறது.
சோவியத் அரசின், கலாச்சாரத்திற்கான மக்கள் ஆணையத்திற்கு தலைமை வகித்த, அனடோலி லூனா சார்ஸ்கிதான், 1905 புரட்சியை நினைவு கூறும் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அந்தப் பணி அரசுக்கு சொந்தமான மோஸ் ஃபிலிம் (ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, பழைமையான ரஷ்ய திரைப்பட ஸ்டுடியோ) வசம் ஒப்படைக்கப்பட்டது. 1925, மார்ச்சில் மோஸ்ஃபிலிம், நன்கு அறியப்பட்ட காட்சியாளரான நினா அகட்ஜனோவாவுடன் திரைக்கதையை எழுதுவதற்கான ஒப்பந்தத்தை செய்தது. ஸ்ட்ரைக் (Strike) என்ற முழு நீளத் திரைப்படத்தை இயக்கிய உற்சாகத்தில் இருந்த ஐசென்ஸ்டீன் இதற்கும் இயக்குநராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இரஷ்ய – ஜப்பானிய போர், இரத்த ஞாயிறு படுகொலை, 1905 ம் ஆண்டின் மாபெரும் பொது வேலை நிறுத்தம், எதிர்புரட்சி வன்முறைகள், ரஷ்ய பேரரசின் கருங்கடல் கப்பற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல் இளவரசி போட்டம்கின்னில் 1905 ஜூன் மாதம் நடைபெற்ற கலகம், ஆகிய எட்டு வெவ்வேறான நிகழ்வுகளை இணைத்து ஒரு காவிய அளவிலான திரைக்கதையைத் தயாரித்தார். அதன்பிறகு உடனடியாக ஐசென்ஸ்டீன் படப்பிடிப்பைத் தொடங்கினார். ஆனால், அரசு குறித்த, டிசம்பர் மாதத்திற்குள் இதனை முடிப்பது அதீத ஆவல் என விரைவில் அறிந்து கொண்டார். அதனால் அவர் போட்டம்கின் பகுதியை மட்டும் படமாக்க முடிவு செய்தார்.
இதற்காக அவர் அகட்ஜனோவாவின் திரைக்கதையிலிருந்து 40 பகுதிகளை (frames) மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள பகுதிகளுக்கு அவரே திரைக்கதை வசனத்தை எழுதினார்/உருவாக்கினார். அதில் பல வசனங்கள் படப்பிடிப்பின் போதே எழுதப்பட்டவை. ஒடெஸா துறைமுக நகரத்தில் பொருத்தமான போர்க்கப்பல்கள் அங்கே இருந்ததால் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. (உண்மையான போட்டம்கின் கப்பல் அப்போது பிரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. எனவே வேறு பல கப்பல்களும் பயன்படுத்தப்பட்டன. இருப்பில் இருந்த போட்டம்கின் கப்பலின் பாகங்களும் கொண்டு வரப்பட்டு கடலில் போர்க்கப்பல் இருந்த காட்சிகள் எடுக்கப்பட்டன). ஒடெஸா அந்த சமயத்தில் படப்பிடிப்பிற்கு சிறந்த வசதிகளை செய்து கொடுத்ததும் கூடுதல் நன்மையை தந்தது. ஐசென்ஸ்டீன் தனது கதைக்கு செம்மையான ஐந்து நாடக செயல் கட்டமைப்பைத் தேர்ந்தெடுத்தார்.(வெளிப்பாடு, எழுச்சி செயல், திருப்புமுனை, வீழ்ச்சி செயல், கதை சொல்லும் பாடம்) இந்த ஒவ்வொரு கட்டமைப்புச் செயலும் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டது: ‘மனிதர்களும் புழுக்களும்’; ‘கப்பல் மேல்தள நாடகம்’; ‘இறந்தவர்களிடமிருந்து ஒரு அழைப்பு’; ‘ஒடெஸ்ஸா படிகள்; ‘படைப்பிரிவுகள் சந்திப்பு’; இவையாவும் மேற்கூறிய வழக்கமான ஐந்து நாடக செயல் கட்டமைப்பிற்கு ஒத்திசைவாக இருந்தன. ஒவ்வொரு செயலும் எதிர்ப்பார்ப்புடன் அடுத்த செயலுக்குள் நுழைகின்றன.
`முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்
போர்க்கப்பல் போட்டம்கின் 1925, டிசம்பர் 21 ஆம் நாள், மாஸ்கோவில் உள்ள போல்ஷாய் திரையரங்கில் புரட்சியின் ஆண்டு நிறைவு விழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. அதன் முறையான வெளியீடும், மாஸ்கோவிலேயே 1926 ம் ஆண்டு, ஜனவரி 18ம் நாள் நடைபெற்றது. இதில் ஒரு துணிச்சலான கலைப் பொருளைக் காட்ட ஐசென்ஸ்டீன் நினைந்திருந்தார். போட்டம்கின் மீது கிளர்ச்சியாளர்கள் உயர்த்தும் செங்கொடியை வெள்ளைக் கொடி வைத்து படமெடுக்க வேண்டியதாக இருந்தது. ஏனெனில் அப்போதிருந்த கருப்பு வெள்ளை திரைப்படத்தில் சிவப்பு நிறம் கருப்பாகத் தெரிந்தது. ஐசென்ஸ்டீன் இந்த குறையை தனது அறிவுகூர்மையால் மாற்றி அமைத்தார்: வெள்ளைக் கொடி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகளில் தன் கைகளால் கொடிக்கு சிவப்பு வண்ணம் பூசினார். பார்வையாளர்களிடம் இது மின்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்யப் புரட்சி இன்னும் முழுமையாக தன் வெற்றிக் கட்டத்தை விட்டுத் திரும்பாத நிலையில், செங்கொடி ரஷ்யர்களின் கண்களுக்கு ஆப்பிளாகவே தெரிந்தது.
ஆனால் போட்டம்கின் மாறுபட்ட விநியோக வரலாற்றைக் கொண்டது. விவரிக்க முடியாத படி, சோவ்கினோ(SOVKINO- சோவியத் ஒன்றியத்தின் மத்திய திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக அமைப்பு) வெளி நாடுகளுக்கு இல்லாவிட்டாலும் கூட, உள்நாட்டிலேயே கூட முழுவதும் இந்த திரைப்படத்தை விநியோகிக்கத் தயக்கம் காட்டியது. போட்டம்கின் முதல் திரைப்படக் காட்சியில், 1905 ம் ஆண்டின் ட்ராட்ஸ்கியின் வாசகங்களுடன் திரையிடப்பட்டது. அது:
கலகத்தில் ஆன்மா இந்த நிலத்தைத் துடைத்து விட்டது. எண்ணற்ற இதயங்களில் ஒரு மிகப்பெரிய, மர்மமான செயல்முறை நடந்து கொண்டிருந்தது: தனிமனித ஆளுமை மக்கள் கூட்டத்தில் கரைந்து போனது, மக்கள் கூட்டமே புரட்சிகர உந்துதலில் கரைந்து போனது.”
இது இதற்குமுன் வெளிப்படுத்தப்படாத மேற்கோளாகவே இருந்தது. ட்ராஸ்கியின் பெயர் படத்தில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. எனினும் இந்த வரிகள் அவற்றின் தோற்றத்தைத் தேடாமல் ரஷ்ய பார்வையாளர்களுக்கு மிகவும் தெரிந்த வாசகமாக மாறிவிட்டது. (1925 ல் ஸ்டாலின் அனைத்து அதிகாரங்களையும் சேர்த்துக் கொண்டு, ட்ராஸ்கியை திரும்பி வரவே முடியாத, இடைவிடாத அரசியல் வனவாழ்விற்குள் தள்ளிவிட்டார்). சோவ்கினோவின் உற்சாகமின்மைக்கு இதுவும் ஒரு காரணமோ? அது போல்தான் இருந்தது. ஏனெனில் சில ஆண்டுகளுக்குப் பிறகு, போட்டம்கின் ட்ராஸ்கியின் முகவுரையை லெனினின் புரட்சி நாட்களின் கீழ்க்கண்ட வாசகங்களால் இடமாற்றம் செய்தது.( இம்முறை அதை கூறியவர் பெயர் முறையாக கூறப்பட்டது)
புரட்சி வரலாற்றில் அறியப்பட்ட அனைத்து போர்களிலும், இது ஒன்றே முறையான, நியாயமான, சரியான, உண்மையிலேயே மிகப்பெரிய போராகும்… ரஷ்யாவில் இந்த போர் அறிவிக்கப்பட்டு வெல்லப்பட்டுவிட்டது.
இறுதியில், கவிஞர் மாயாகோவஸ்கியின் (மற்றும் வேறு சிலரின்) அடுத்தடுத்த தலையீட்டால் சோவ்கினோ, அதனை மேலும் மாற்றுவதை நிறுத்த வேண்டியதாயிற்று. அந்த திரைப்படம் பெர்லினுக்கு அனுப்பப்பட்டது. அது உடனடி வெற்றியைப் பெற்றது. (நம்பமுடியாத வகையில், சோவ்கினோ அப்போது வரை தன்னிடம் இருந்த அந்த ஒரே பதிப்பை (print) கொடுத்துவிட்டது.)
குதிரைவால் : ‘மேஜிக்கல் ரியலிசம்’ மூலம் அரசியல் பேசியுள்ளோம் – மனோஜ் லியோனல் ஜாசன்
உண்மையில் இந்த வெற்றிக்குப் பிறகுதான் போட்டம்கின் மீண்டும் ரஷ்ய பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டது. ஆனால் நடிகர்களின் சில காட்சிகள் விலக்கப்பட்டன. சில இடை செருகல்கள் -அல்லது அச்சிடப்பட்ட அட்டைகள் காட்சிகளுக்கிடையே செருகப்பட்டன. நடிகர்களின் உணர்ச்சிமிகு வசனங்களை மட்டுப்படுத்த, இடைப்பட்ட காட்சிகள் கைவிடப்பட்டன அல்லது மாற்றம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட நாடுகளில் எல்லாம் அந்தந்த நாடுகள், மிகவும் வெளிப்படையானவை என்றும், மிகவும் மோசமானவை என்றும் தோன்றும் காட்சிகளை வெட்டியும், மாற்றியும் வெளியிட்டன. சில பதிப்புகளில் ஐசென்ஸ்டீனே சில காட்சிகளை மாற்றவும், திருத்தவும் அங்கீகாரம் கொடுத்தார்.
முதன் முதலாக ஜெர்மனி வழியாகத்தான் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்திற்கும் இது சென்று சேர்ந்தது. ஏற்கனவே ஜெர்மனியின் வெய்மர் குடியரசு, தாராளமாகத் தணிக்கை செய்துதான் அவற்றை அனுப்பியது, என்ற போதிலும் அது அந்த நாடுகள் மேலும் வெட்டுவதைத் தடுக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜெர்மனி வழியாக மீண்டும் சோவியத்துக்கு வந்த பதிப்புதான், நம்ப முடியாத அளவு, எதிர்கால பயன்பாட்டிற்கான அதிகாரபூர்வ பதிப்பாக மாறியது. தற்போது போட்டம்கினின் குறைந்தது ஏழு பதிப்புகள் சுற்றில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2004 ல் ரஷ்யா அந்த திரைப்படத்தை மீட்டெடுத்தது. இதுவே இன்றுள்ள உண்மையான பதிப்பாக நம்பப்படுகிறது. இதில் மீண்டும் லெனினின் வாசககங்கள், ட்ராட்ஸ்கியின் வாசகங்களுக்கு வழிவிட்டன. உலகில் இதைப்போல இவ்வளவு அதிகமான இணையான வாழ்க்கையை அனுபவித்த பெருமை கொண்ட திரைப்படம் வேறு எங்கும் இருக்குமா என்பது ஐயமே. தணிக்கைகளால் தூண்டப்பட்ட அதன் துயரங்களை மேலும் அதிகரிக்க போட்டம்கின் இன்றும் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பிரான்சிலும் , ஸ்டாலின் கால ரஷ்யாவிலும் கூட தடை செய்யப்பட்டிருந்தது. இங்கிலாந்தில் அந்த நாட்டில் வெளியிடப்பட்ட எந்தத் திரைப்படத்திற்கும் இல்லாத வகையில், மிக அதிக ஆண்டுகள் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இறுதியில் 1954 ல் தடை நீக்கப்பட்டபோது, இங்கிலாந்து தணிக்கைக் துறை அதற்கு அங்கீகரிக்கப்படாத’ X’ மதிப்பீட்டை வழங்கியது. அது 1987 வரை நீடித்தது. படத்தின் எந்தப் பண்பை எடை போட்டு பல்வேறு நாடுகளின் தணிக்கைத் துறைகள் தங்கள் முடிவுகளை அறிவித்தன எனக் கூறுவது கடினம்: அதன் தடையற்ற அரசியல் செய்தி, அல்லது பரவலான வன்முறை உணர்வு, (போட்டம்கின்னில் கிராஃபிக்ஸஸை விட வன்முறை அடிக்கடி வருகிறது என்றாலும், ஆனால் எதுவும் அதீத வன்முறையாக இல்லை) ஆனால் பல்வேறு நாடுகளிலும் இருந்த பலதரப்பட்ட தணிக்கையாளர் களின் (அவர்களது அரசியல் எஜமானர்களின்) உழைப்பு, போர்க்கப்பல் போட்டம்கின் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் பரப்பரப்பானதாக மாறுவதைத் தடுக்க முடியவில்லை. மிகவும் மழுங்கடிக்கப்பட்ட பதிப்பு கூட பார்வையாளர்களின் உற்சாகத்தை குறைக்க போதுமானதாக இல்லை.
1926 ஜூனில் பெர்லினில் இதனை திரையிட டக்ளஸ் ஃபோர்பேங்ஸ் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். அவர்தான் போட்டம்கின் அமெரிக்கா செல்வதற்கு கருவியாகச் செயல்பட்டார். பின்னர், 1926ல் நியூயார்க் மற்றும் பல இடங்களில் திரைப்பட கலைஞர்களுக்காக பல தனிப்பட்ட காட்சிகளுக்கு அவர் ஏற்பாடுகள் செய்தார். 13 ஆண்டுகள் சிறப்பாக ஓடிய ‘கான் வித் தி வின்ட் (Gone with the wind)’ திரைப்படத்தைத் தயாரித்த செல்ஸ்னிக், “இதுவரை யாரும் செய்யாத மகத்தான படங்களில் ஒன்று,” என போட்டம்கின் திரைப்படத்தை பாராட்டினார். ஒரு சில கலைக்குழுவினர் ஒரு ரூபனையோ அல்லது ஒரு ரஃபேலையோ படித்துக் கொண்டிருந்த போது, அவர் தன்னுடன் எம்ஜிஎம் ஸ்டுடியோவில் பணியாற்றும் சக நண்பர்களை போட்டம்கினை ஆய்வு செய்ய வலியுறுத்தினார். கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், “திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதற்கு, போட்டம்கின் பாடமாக இருக்கும்,” என்று கூறியது. தேசிய சீராய்வு வாரியம் அதனை “அந்த ஆண்டின் தலைசிறந்தத் திரைப்படம்” என்று கூறியது. ஜெர்மனியின் புகழ்பெற்ற நாடக இயக்குநர் மேக்ஸ் ரைன்ஹார்ட்((Max Reinharte), “போட்டம்கினை பார்த்த பிறகு, நாடகம் திரைப்படங்களுக்கு வழிவிட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றார். முன்னணி ஜெர்மானிய செய்தித்தாள், பெர்லினர் டேக்ப்ளாட் (BerlinerTageblatt), “உலகம் முழுவதிலும் மிக சக்திவாய்ந்த, கலைத்திறமிக்க திரைப்படத்தை ஐசென்ஸ்டீன் உருவாக்கி உள்ளார்,” என்று எழுதியது.
சூரரைப் போற்று : படத்தில் நேர்மை இல்லை – ராஜ சங்கீதன் விமர்சனம்
போட்டம்கின்னை ரசிப்பவர் என்று கருத முடியாத ஒருவரான, ஹிட்லரின் பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ், இந்தத் திரைப்படத்தை மிகைப்படுத்திப் பாராட்டினார்: “திரைப்படத்துறையில், சமன்செய்ய முடியாத மகத்தானத் திரைப்படம்” என்றார். அவர் ஜெர்மன் திரைப்பட தயாரிப்பாளர்களை போட்டம்கின்னை உண்மைக் கலையின் மாதிரியாகப் பயன்படுத்த வேண்டும், “என அறிவுறுத்தியது, நாஜி திரைப்படத்துறை ஒரு நாள் “தேசிய சோசலிச போட்டம்கினை உருவாக்கும்” என்ற அவரது அன்பான நம்பிக்ககையை வெளிப்படுத்தியது. பொதுவாக அமைதியான/ மந்தமான ஐசென்ஸ்டீன் கோபமுற்று கோயபல்சுக்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதினார்: “உண்மையும் தேசிய சோசலிசமும் ஒன்றசேர முடியாதவை ((T) ruth and National Socialism cannot be reconciled). உண்மைக்காக நிற்பவர்கள், தேசிய சோசலிசத்தின் வரிசையில் வந்து நிற்க மாட்டார்கள். எவன் ஒருவன் உண்மைக்காக இருக்கிறானோ அவன் உங்களுக்கு எதிராகத்தான் இருப்பான்! … எப்படி இருந்தாலும், வாழ்க்கையைப் பற்றிப் பேச உங்களுக்கு எப்படி துணிவு வருகிறது..? படுகொலை செய்யும் கோடரியையும், எந்திரத் துப்பாக்கிகளையும் ஏந்தி, உங்கள் நாட்டில் உள்ள எல்லா நல்லவற்றிற்கும், மரணத்தையும், நாடுகடத்தலையும் கொண்டு வருபவர்களே நீங்கள்தான்” என்று எழுதினார்.
ஆனால் கேள்வி மிக முக்கியமானது: கம்யூனிச பரப்புரை (agitprop) போலவே, கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படம் எங்கிருந்து அதன் அசாதாரண இடத்தைப் பெறுகிறது? ஐசென்ஸ்டீனிலிருந்து மிகவும் மாறுபட்ட மனப்பான்மைகளைக் கொண்ட சாப்ளினும், பில்லி வைல்டரும், தங்களுக்கு மிகவும் பிடித்தப் படமாக போட்டம்கினை தனிமைப்படுத்திக் கூறுவது ஏன்? உலகத் திரைப்படங்களில் இதன் காட்சிகளும், ஒலியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது ஏன்? போட்டம்கின் தூண்டிய சமூக மாற்றம் கசப்பாகி மூன்று பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
ஐசென்ஸ்டீனின் கலை, உயர்த்திப் பிடிக்கும் புரட்சி சிக்கலில் உள்ளது. பிறகு எப்படி இவை எல்லாம் அந்த திரைப்படத்தின் மகத்தான வலிமையை குறைக்க எதுவும் செய்ய முடியவில்லை?
இதற்கான பதில் வெகு தூரத்தில் இல்லை. அதன் உடனடி சூழலை கழித்து விட்டுப் பார்த்தால், போட்டம்கின் அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான மனிதனின் போராட்டத்தின் உலகளாவிய கதையைச் சொல்கிறது. சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளுக்கான மனிதகுலத்தின் உள்ளார்ந்த பசியுடன், சிரமமின்றி இணைகிறது. எனவே, கதை எவ்வளவுதான் அரசியல் ஊட்டப்பட்டிருந்தாலும், அந்த அரசியல் வட்டத்திற்குள் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. மேலும், எல்லா மாபெரும் கலைகளும் செய்வது போல, பார்வையாளர்களின் உணர்ச்சிகளையும், வேட்கைகளையும் வேகப்படுத்துகிறது.
அடுத்து, ஐசன்ஸ்டீன், திரைப்பட அழகியலில் தனது ஒப்பில்லா திறமை, படப்பிடிப்பில் தீவிரமான புதுமைகள், காட்சிகளின் கலவை, எல்லாவற்றிற்கும் மேலாக, காட்சிகளை விரைவாக வெட்டி, ஒட்டி தொகுப்பாக்கும் (editing) ‘மோன்டேஜ்’ (montage) முறை ஆகியவற்றைச் சாதித்தார்.
மோன்டேஜ் பல நோக்கங்களை நிறைவேற்றியது: இது வெவ்வேறு படங்களின் எதிர்முனை, வெவ்வேறு கண்ணோட்டங்கள், வெவ்வேறு படப்பிடிப்பு கோணங்கள் ஆகியவற்றின் மூலம் பதட்டம் மற்றும் வேகத்தை கட்டமைக்க உதவியது; மேலும் இது பல மாறுபட்ட காட்சிகளில் நேரத்தை கையாளவும், விரிவுபடுத்தவும் ஐசென்ஸ்டீனை அனுமதித்தது. அடையாளச் சின்னமாகக் திகழும் (iconic) ‘ஒடெஸ்ஸா படிகள்’ பகுதியில், ஐசென்ஸ்டீனின் கூர்மையான கவன குவிப்பு எங்கும் காணக் கிடைக்காதது. இதுவே திரையுலக வரலாற்றில் எடுக்கப்பட்ட, மிக அதிகமாக அனைவரையும் வசப்படுத்திய (மிகவும் அதிகமாக நகலெடுக்கப்பட்டதும் கூட) காட்சித் தொகுப்பாகவும் இருக்கக் கூடும்.
பல வேறுபட்ட நிகழ்வுகள் ஒரே நேரத்தில் அந்தக் காட்சித் தொகுப்பில் நடக்கின்றன. ஆனால் அவை தனித்தனிச் சட்டகங்களில், மீண்டும் மீண்டும் காட்டப்படுவதால் பார்வையாளர்களின் கால உணர்வு கணிசமாக நீட்டிக்கப்படுகிறது: அந்த கொடூரமான சோகம் நீண்ட நேரம் நடப்பதாகத் தோன்றுகிறது. மிக வேகமாக அடிக்கடி, காட்சிகளுக்கிடையே வெட்டுவது, மீண்டும் பார்வையாளர்களை திகிலூட்டும் காட்சிகளின் வெள்ளத்தில் மூழ்கச் செய்து விடுகிறது. அந்த பிரம்மாண்டமான படிகளின் மேற்புறத்தில் இருக்கும் போராளிகளுக்கும், படிகளின் கீழ் புறத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கசாக்குகளுக்குமிடையே சிக்கியிருக்கும் ஒடெஸான்கள் பீதியில் உறைந்துள்ளனர், அவர்களின் திகில் உணர்வு பார்வையாளர்களுடன் வலிமையாகத் தொடர்புகொள்கிறது. சில முகங்களும், அவற்றை முன்னிலைப் படுத்தும் காட்சிகளும் ஒருவரின் நினைவில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன: காலில் மிதிபட்டுக் கிடக்கும் குழந்தை, காயமடைந்த தன் மகனை விட்டு விடுமாறு படைவீரர்களிடம் கெஞ்சும் தாய்; படிக்கட்டில் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே அபாயகரமாக உருண்டோடும் குழந்தையுடன் கூடிய வண்டி(pram), தன் கண்கண்ணாடி வழியே சுடப்பட்டு விட்டதால் அலறும் பெண்; கூடிநிற்கும் படைவீரர்கள்; அனைத்தும் தனித்தனி உடல்களாக காட்டப்படவில்லை, தவிர்க்க முடியாத இயக்கத்தில் கோடுகளும், நிழல்களும் கொண்ட கிராஃபிக்ஸ்களாகக் காட்டப்படுகிறது…. ஐசென்ஸ்டீன் ஒரு முறை,” நான் உணர்ச்சியற்ற கண்களால் பார்க்க வேண்டிய படங்களை உருவாக்கவில்லை. நான் மக்களின் மூக்கின் மேல் கடுமையாகத் தாக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.
வெளியாகி 95 ஆண்டுகளுக்குப் பின்னும், போர்க்கப்பல் போட்டம்கின் பார்வையாளர்கள், மூக்கில் குத்து வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒருசில புகார்களே வருகின்றன.
(www.thewire.in இணையதளத்தில் அஞ்சன் பாசு எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)
—
அன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்துபிரச்சனைகளுக்கும் பின்னாள் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.