புதுக்கோட்டை அருகே தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலம் கலந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மீதும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மீதும் வன்கொடுமை வழக்கு பதிய வலியுறுத்தி புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து தில்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் புதுக்கோட்டை சாதிவெறியர்களின் உருவபொம்மையையும், சாதிய சனாதன தர்மத்தின் உருவபொம்மையையும் எரித்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து போராடும் மாணவர்கள் பேசியபோது, “குடிக்கும் நீரில் மலத்தை கலப்பது என்பது மனிதக்குலத்துக்கே விரோதமான, அநாகரிகத்தின் உச்சமான, அருவருக்கத்தக்க செயல். இந்த சாதிவெறி சனாதன செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். இதை செய்த சாதிவெறியர்கள் மீது தமிழக அரசு மிகத் தீவிரமான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் குற்றம் வெளியே தெரிந்து 10 நாட்கள் கடந்த பின்பும் கைது நடவடிக்கை கூட இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். தங்கள் கடமையை செய்யத் தவறியிருக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகிய இருவர் மீதும் தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்பதை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஒருவரை கொலை செய்தால் கூட அவர் அங்கேயே இறந்துவிடுவார். ஆனால் தாங்கள் குடித்த நீரில் மலம் கலக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது ஒட்டுமொத்த ஊரே எவ்வளவு மோசமான உளவியல் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பார்கள்? இது கொலை செய்யும் குற்றத்தை விட மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கை ஆகும்.
இந்த குற்றத்தை அறிந்து அவ்வூருக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே தலித் மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று ஆதிக்கச் சாதிப் பெண் சாமியாடியதையும், இரட்டைக் குவளை முறையை ஆதிக்க சாதியினர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதையும் பார்க்கும்போது, தலித் மக்கள் அங்கு அனுபவிக்கும் தீண்டாமையின் உக்கிரத்தை உணரலாம். இதை முகாந்திரமாக வைத்து மலம் கலந்த சாதிவெறிச் செயல் மீதான காத்திரமான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் முன்னெடுத்திருக்க வேண்டும்.
தலித் மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றது, தீண்டாமை கடைப்பிடித்த இருவர் மீது வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறோம். அதேநேரம், குடிநீரில் மலம் கலந்த குற்றத்திற்காக இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். குற்றம் வெளியே தெரிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் கூட இன்னும் கூட ஒருவர் கூட கைது செய்யப்படாதது சாதிவெறியர்களுக்கு தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது. இதனையடுத்து சுற்றுவட்டாரங்களில் தலித் மக்கள் மீதான குற்றங்களும் பாகுபாடுகளும் அதிகரித்திருப்பதையும் அறிய முடிகிறது.
கவிதா ராமு, வந்திதா பாண்டே இருவர் வீடுகளில் குடிநீரில் தவறுதலாக சாக்கடை கலந்தால் கூட இவ்வாறு தான் 10 நாட்கள் விசாரித்துக் கொண்டிருப்பார்களா? சாதிவெறியர்களுக்கு எதிரான சரியான நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறி சாதிக்கொடுமைகளுக்கு துணை போயிருக்கும் இவ்விரு அதிகாரிகள் மீதும் தமிழக அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்.
நடப்பது சமூகநீதி அரசு என்று பறைசாற்றிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? மிருகத்தனத்தை விட மோசமான இச்செயலைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் இருப்பது ஏன்? துறைசார்ந்த அமைச்சர் ஏன் இன்றுவரை இறையூர் சென்று மக்களை சந்திக்கவில்லை?
இவை அனைத்தும் அரசின் மெத்தனப்போக்கு மட்டுமல்ல, இந்த சாதியக் கொடூரத்தை இழைத்த சாதிவெறியர்களுக்கு நிகரான மற்றுமொரு சாதிய நடவடிக்கையுமாகும்.
சாதி மனிதனை சாக்கடையாக்கும் என்றார் தந்தை பெரியார். ஒட்டுமொத்த ஒரு ஊரில் வாயில் மலத்தை கரைத்து ஊற்றியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள். பாதிக்கப்பட்ட ஊரில் உள்ள அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளின் இடத்தில் தங்கள் வீட்டுக் குழந்தைகள் இருந்திருந்தால் அப்போது அரசும் அதிகார வர்க்கமும் இப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? இல்லை அவர்களின் மனங்களும் சாக்கடையாகி விட்டதா?
தமிழ்நாட்டின் மீது விழுந்துள்ள இந்த வரலாற்றுக் கறையை கொஞ்சமாவது துடைக்க வேண்டுமென்றால் சாதிவெறியர்களை கடுமையான முறையில் தண்டிப்பதில் தான் இருக்கிறதே ஒழிய இதை மூடி மறைப்பதில் இல்லை என்பதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கட்டுரையாளர்: தமிழ் நாசர், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்
மீண்டும் ஊளையிடும் போர்டுதாஸ் | ஆட்டை அடிச்சா குள்ளநரி அலறுது | Aransei Roast | maridhas | Annamalai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.