“யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?” அருந்ததிராயின் பிரபல வரி. மாதொருபாகன் நாவலின் மையப்போக்கு அப்படிப்பட்டதுதான். சொல்லப்படும் காட்சிகள், நாம் உருவாக்கி வைத்திருக்கிற, நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிற, மனித வாழ்வு குறித்த புரிதல்கள், அந்தப் புரிதலினுள் இயங்கிக் கொண்டிருக்கும் கடிவாளக் கட்டமைப்புகளைக் கேள்விக்கு உட்படுத்துவதாகவே உள்ளது. இதன் காரணமாய் நாவலின் மையத்தை உட்செறித்தல் என்பது சிரமமான காரியமாக இருக்கலாம்.
சோழர் காலத்து மக்களாட்சி – நினைவுபடுத்திய நரேந்திர மோடிக்கு நன்றி
“ஆட்டூர், திக்குத் தெரியாமல் போகும் அளவுக்குப் பெரிய ஊர் ஒன்றும் அல்ல. ஊர் என்னும் வளவிற்குள் இருபது வீடுகள். அதிலும் நான்கைந்து வீட்டார் காட்டுக்குள் குடியிருப்பார்கள். அதற்குப் பின்னால் ‘ஆள்க்கார வளவு’. அங்கே பத்து பதினைந்து குடும்பங்கள். இரண்டுக்கும் இடையே ஒரு காடு தூரம்.”
இந்தக் ‘கிராம பின்னணி’யில் பண்ணையார் சமூகச் சூழலோடு வாழும் பொன்னா, காளியின் குழந்தையில்லாத நிலையின் போக்குகள் நாவலின் மையம். நாவலின் பக்கங்களெல்லாம், திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கென ஒரு குழந்தை இல்லையே எனும் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். “குட்டி ஈனும் கிடாரியைப் பார்க்கும்பொழுது, இந்த வாயில்லா ஜீவன் வாங்கி வந்த வரம் நான் வாங்கலயே” இப்படியாய் எந்தப் பேச்சும் செயலும் குழந்தை இல்லை என்பதிலேயே முடியும்; பல நேரங்களில் கண்ணீருடன்.
இன உற்பத்திக்கான ஏதுவாகப் பெண் இருந்ததால், அவள் இன உற்பத்தியைப் பெருக்கும் அடையாளமாகப் பார்க்கப்பட்டாள். சமூக நிலையில் முதன்மை இடம் பெற்றதற்கான ஒரு காரணமாய் இது அமைந்தது. இந்த நிலை,
“மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இலமே தாம்வாழும் நாளே.” -புறம்.188
இந்த ‘வாய்ப்பாட்டிலிருந்து’,
“ஆளப்பாத்தா அழகுடா வேலயப் பாத்தா எழவுடா”
“வறடி பருப்பள்ளிக்கிட்டு ஓடி ஓடி குடுக்குறா, அவ கையில தொட்ட பருப்பு எங்கிருந்து மொளைக்கும்?” (நாவலிலிருந்து) இப்படியான தனிமனித தாக்குதலுக்குச் சமூகம் ‘முன்னேறி’ நகர்ந்திருக்கிறது.
குழந்தை பெறுதல், திருமண வாழ்வின் முழுமைத்தன்மையாக மாற்றப்பட்ட அதே வேளையில்தான் அப்படி இல்லாதநிலை பிறர் குற்றப்பத்திரிக்கை வாசிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்துவிடுகிறது. மனிதர்களின் வாழ்வு என்பது உடலியல் மற்றும் குடும்ப இணைப்போடு பார்க்கும்பொழுது பிறப்பு முதல் அடுத்தக்கட்டம் அடுத்து என்ற கடந்துபோகும் தன்மையுடையது. இதில் காதல், திருமணம் போன்ற நிகழ்வாகவே குழந்தை பெறுதல் என்ற ஒன்றைக் கருத முடியும். அது வாழ்க்கையில் ஒரு நிலை, வரம் அல்ல.
உணவு, பாலுறவு இரண்டுமே உயிர்களின் பொதுதேவை. பாலுறவு கொள்ளும் இருவரின் எதிர்பார்ப்புகள், ஈடுபாடு ஆகியவற்றால் இருவருக்குமான ஒரு முழுமை கிடைக்கிறது.
“முகத்தருகே முகம் போகும்போதே, இந்த முறை உருவாகுமா?” என்று மனம் யோசிக்கத்தொடங்கிவிடுகிறது. தன் பாலுறவு பற்றிய காளியின் வார்த்தைகள் இவை.
குழந்தை பெறுதலை மையமிட்ட பேச்சுகள், பாலுறவினை வெறுமனே இனப்பெருக்கத்திகான ஒரு இயந்திரச் செயலாக மாற்றிவிடுகிறது. பெண் என்பவள் இனப்பெருக்கக் கருவியாக மட்டுமே மாற்றப்படுகிறாள். ஆணுக்கு இன்னொரு தேர்ந்தெடுப்புக்கான உரிமை எளிமையாக வழங்கப்பட்டுவிடுகிறது.
குழந்தை பெறுவதற்கான சடங்குகள் பெண்ணைச் சுற்றியே அதிகளவு கட்டமைத்துவிடப்பட்டிருக்கிறது. இனவிருத்திக்கான முக்கியக் காரணி என்ற முனையில் அணுகப்பட்ட விதத்திலிருந்து என்ன சிக்கல் என்றே யோசிக்கமுடியாத அளவு மனிதர்கள் ‘பரிணாமவளர்ச்சி’ அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
குழந்தை பெற ஒரு வழியாகக் கரட்டூரில் ஒரு வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். திருமணமாகி குழந்தை பெற முடியாத பெண், இருபத்து இரண்டு நாள் நோம்பி விழாவிற்கு வரும் ஆணோடு பாலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதோடு அவர்களது தொடர்பு இல்லை. பிறக்கும் குழந்தை, அந்தப் பெண் அவளுடைய கணவனின் குழந்தையாக வளரும். நோம்பிற்கு வரும் அனைத்து ஆண்களும் சாமிகள். பிறக்கும் குழந்தையைச் ‘சாமிபுள்ள’ என்று அழைப்பது முறை.
இப்படியான ஒரு வழியை ஏற்றுக்கொள்ளும் பொன்னா. பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வலியின் முழுமை தெரியும். ‘தாய்மை’ என்ற பாடத்தில் விலக்கு இல்லை என்பது முக்கிய காரணம். ஊர் வழமையையும் பொன்னாவையும் ஒரு களங்கத்தன்மையோடு அணுகும் காளி. ஊர், வறடன் எனத் தன்னை அடையாளப்படுத்திவிடுமோ என்பது முதன்மை காரணம். இது சமூகம் கற்றுக்கொடுத்த கற்பித விளைவின் ஒரு பங்கு.
‘ஆம்பளப்புள்ள அழக்கூடாது’ என்று சொல்லி வளர்க்கும் விதம், தெரிந்த ஒன்றுதான். மனித இயல்பின் உணர்வு வெளிப்படுத்தல் மீதான மட்டுப்படுத்தலை இந்தக் கற்பிதம் உருவாக்குகிறது. மட்டுப்படுத்துதல், ஒரு வறட்டுத்தன்மையையும் கூடவே இதுதான் வீரம் இது ‘ஆண்மை’க்கானது என்ற ஒன்றையும் உற்பத்தி செய்கிறது. இந்த ‘ஆண்மை’க்கான அடையாளப்படுத்தலில் அதை நிரூபிக்கும் களங்களில் குழந்தை பெறுதல் அத்யாவசியமானதாக ஆக்கிவிடப்பட்டிருக்கிறது. ‘தாய்மை’யை உருவாக்கியது போல.
குழந்தையைப் பெறமுடியவில்லை எனும்போது அது ஒருவித பயத்தையும் மூர்க்கத்தனத்தையும் உருவாக்குகிறது. இதில் ஏற்கெனவே சொன்னதுபோல், ‘ஆளப்பாத்தா அழகுடா வேலயப் பாத்தா எழவுடா’ எனும் சமூகத்தின் ஊக்கசக்தி வேறு இருப்பதால், தன்மீது சந்தேகத்தை ஏற்படுத்தாது. ஒருவேளை ஏற்படும்போதும் அந்த மூர்க்கத்தனம் ‘தனக்கே உடைமை’ என நினைக்கும் மனைவியின் மீது திரும்பும். இதுவும் ‘ஆண்மை’. இல்லாத ஒன்றை உருவாக்கிக்கொண்ட திருப்தியில் அதை நம்பிக்கொண்டு பெருமைப்பட்டு வாழ்வதில் நமக்கு நிகர் நாம்.
இரண்டாவது, பெருநோம்பிசாமி ஆளுக்காரராக இருந்துவிடுவாரோ எனும் கோபம். இதற்கு விளக்கமே தேவையில்லை. சாதி, தூணிலும் உண்டு துரும்பிலும் உண்டு.
பொன்னா-காளியின் முடிவுகள் சரியா தவறா என்பதே பெரும் உரையாடலாய் நம்மிடையே நகர்கிறது.
போர் எதிர்ப்பு சமாதானமும், தேசங்களின் விடுதலையும், சோசலிசமும் – லெனின்
பொதுவாக ஆண் செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் என்பது அவரவரின் சுயகாரணம் பொருத்துக் குடும்ப அளவில் தேவையானதாகவும் அதற்குச் சமூக அளவிலான ஒத்திசைவும் அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது. அதாவது ‘சகஜம்’ எனும் மனோபாவம் ஒட்டிக்கொள்கிறது.
“எனக்கென்னமோ உங்களுக்குப் பொண்ணு பாக்றமாதிரி தெரியுது. ரண்டு கெழடும் சேந்து எம்பொழப்புல மண்ணள்ளி போட போவுதுங்க”. – பொன்னா.
பொன்னா, உனக்குப் புடிச்சிருந்தாதான் கட்டிக்குவேன். கவலபடாத”. – காளி.
இந்த உரையாடல் ஒரு முக்கிய உதாரணம். நகைச்சுவை என்ற அளவில் ஆணின் செய்கை( இரண்டாவது திருமணம் ) உள்ளாக்கப்படும்போது அல்லது கடந்து செல்லும்போது பெண்ணின் தேர்ந்தெடுப்பு என்பதில் நமக்குள்ள சிக்கல் என்ன? இந்த அளவுகோலில் மாதொருபாகன் என்பதை ‘சமம்’ விளக்கும் ஒன்றாய் விளங்கிக்கொள்ள முடியும்.
அடுத்ததாய், பொன்னா தன் முதல்காதலை விட்டுவிலகுதல். இதைச் சமூகச் சூழலோடு இணைத்துப் பார்க்க வேண்டும். யாரோ தீர்மானிக்கும் வரையறைகள் நம் வாழ்க்கையில் மூக்கு நுழைத்து நிற்கின்றன. நம்முடைய உணவு, இருப்பிடம் போன்ற பல இதில் அடங்கும். புறச்சூழல் தனிமனித வாழ்வின் முடிவுகளோடு இணைக்கப்பட்டுள்ளது; படுகிறது.
“ஒரு ஆளுக்காரனுக்கு முன்னால் கூட நமக்குக் கேவலந்தான்”. -‘ வளர்ந்த’ பொன்னா.
“ஆளுக்காரப்பையன் ஆக்குன சோத்தத் தின்னுட்டு நானும் மனுசன்னு நடக்குறானே”.
இப்படியான ஒரு புறச்சூழலில் வாழும் சமூகத்தில் காதலின் அடுத்தக்கட்டம் நமக்கு வெளிப்படையானவை. காதல், சாதி எனும் இருதுருவ சொற்களையும் இறுக்கிப் பிணைத்துக்கொண்டு வாழத்துடிக்கும் மனிதர்களிடம் தூக்கில் தொங்கும் பிணமாகவே காதல் மாட்டிக்கொள்ளும்.
குழந்தையை எடுத்து வளர்ப்பதிலும் அதே சாதிப்‘பெருமை’ நெருடல். இதையும் பூசிக்கொண்டு நிம்மதி வாழ்வைத் தேடுவது பொன்னா, காளிகளுக்குச் ‘சிரமந்தான்.’
புனித பிம்பங்களை உடைக்கும் கட்டியங்காரனின் வேலையைப் போன்றது நல்லையன் சித்திரிப்பு. அப்படியான ஒரு பகடி மனம் கேள்விகளைச் சமூகத்தின் மீது எளிமையாக எறிந்துவிடும்.
கோவாக்சினும், கோவிஷீல்டும் ஒரே மாதிரியான சிகிச்சையை அளிக்கின்றனவா?
‘முழுக் கற்பனை நாவலில்’ “பெண்ணைப் புரிந்து கொள்ள சிறு அசைவு போதும் ஆணுக்கு” என்ற இடத்தில், பொன்னாவின் சிந்தனையை ‘யூகிக்க முயன்றுள்ளார்’ பெருமாள்முருகன். பொன்னாவின் செயல் அர்த்தங்களை அவளே உணர்த்தமுடியும்.
சாதி, காதல், கலவி, நம்பிக்கைகள், புரிதல்கள் போன்றவை மனிதர்களிடம் பதிந்திருக்கும் விதத்தை அவர்களின் இயல்பு வாழ்க்கைக் காட்சிகளோடும் ஞாபங்கள் மூலமாக கதை நகர்த்தும் நனவோட்ட உத்தியிலும் வெளிப்படுத்துகிறது மாதொருபாகன். அந்த வெளிப்படுத்தல்களை நாம் வாசிக்கும்பொழுது அவற்றின்மேல் நமக்குள்ள சரிதவறுகளைக் கவனிக்க வைத்து நம்மை நமக்குள் விவாதம் கொள்ளச் செய்கின்றன. சரியா தவறா என யோசிக்க இடம் இருப்பவருக்கு இந்த விவாத வழி சுயபரிசீலனை சாத்தியப்படும் என்றே தோன்றுகிறது.
கட்டுரையாளர்
கோ.க. தேன்மொழி
(ஆசிரியர்: பெருமாள் முருகன், வெளியீடு : காலச்சுவடு)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.