Article 14 இணையதளத்தில் வந்த கட்டுரையின் மொழியாக்கம்
26 ஆகஸ்ட் 2022-ல் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29 சொற்பொழிவுகளை தனது பதிவிக்காலத்தில் வழங்கியுள்ளார். ஆயினும், எங்கள் பகுப்பாய்வு கண்டறிந்தபடி, இதுவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளிலும், ‘அரசியலமைப்பு அமர்வின்’ பரந்த மேலாய்வு தேவைப்படும் 53 வழக்குகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை: முன்னாள் தலைமை நீதிபதிகள் செய்ததைப்போல, அனைத்து வழக்குகளும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களுடன் நாங்கள் நடத்திய உரையாடல்களில் இருந்துஏமாற்றம் மற்றும் நம்பிக்கை குறைவு எனும் இரண்டு உணர்ச்சிகள் வெளிப்பட்டன –
“சட்டமன்ற மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் மீதான நீதிமுறை மேலாய்வு (Judicial Review) என்பது அரசியலமைப்பு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அது இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று நான் கூறுவேன். எனது தாழ்மையான பார்வையில், நீதிமுறை மேலாய்வு இல்லாதிருந்தால், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்திருக்கும்.” என்று தலைமை நீதிபதி என் வி ரமணா 23 ஜூலை 2022 அன்று, இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த 16 மாதத்தில் ஆற்றிய குறைந்தது 29 சொற்பொழிவுகளில் ஒன்றின் போது இதைத் தெரிவித்தார்.
ஆயினும், தலைமை நீதிபதியாக ரமணா இருந்த காலத்தில், அரசியலமைப்பு அமர்வு தேவைப்படும் 53 வழக்குகளில் நீதிமுறை மேலாய்வு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்டதே அரசியலமைப்பு அமர்வு ஆகும்; மேலும், அரசியலமைப்பு அமர்வு தேவைப்படாத ஆனால் பரவலான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளிலும் நீதிமுறை மேலாய்வு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தவில்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த ராணுவமயமான இலங்கை – மக்கள் கிளர்ந்தெழுந்தது எவ்வாறு?
அவருக்கு முன்பிருந்தவர்கள் போலவே, ரமணாவின் நீதிமன்றத்திலும் மேற்குறிப்பிட்ட 53 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதேபோல், நாங்கள் ஆய்வுக்குட்படுத்திய மற்ற வழக்குகளிலும் வெளிப்பட்டது சிறிய முன்னேற்றம் அல்லது முன்னேற்றமின்மையே. நிலுவையிலுள்ள இவ்வழக்குகளில், நாங்கள் ஆறு வழக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். ஜம்மு காஷ்மீர் சரத்து 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு (1115 நாட்களாக நிலுவையிலுள்ளது)
– வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாலும் சந்தேகத்திற்குரிய அரசியல் நன்கொடைகளை ஊக்குவிப்பதாலும் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு (1816 நாட்களாக நிலுவையிலுள்ளது)
– அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு (159 நாட்களாக நிலுவையிலுள்ளது)
– சாதிய அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு (1323 நாட்களாக நிலுவையிலுள்ளது)
– கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதற்கான கருவி என்று பரவலாக விமர்சிக்கப்பட்ட உபா (UAPA), 1967 சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு (1105 நாட்களாக நிலுவையிலுள்ளது)
– மூன்று அண்டை நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு மட்டும் விரைவான குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு (987 நாட்களாக நிலுவையிலுள்ளது)
‘மாஸ்டர் ஆப் ரோஸ்டர்’ (Master of Roster) என்ற அந்தஸ்தில் உள்ள தலைமை நீதிபதி, அரசியலமைப்பு அமர்வு உட்பட பல அமர்வுகளை அமைக்கவும், அவர்கள் எந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யவும், குறிப்பிட்ட அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்கவும் அதிகாரம் பெற்றவர். நிபுணர்களின் கருத்துப்படி, வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படாத போது அதன் பொறுப்பு தலைமை நீதிபதியிடமே உள்ளது.
ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு அமர்வை ஒரேயொரு முறை தான் தலைமை நீதிபதி ரமணா அமைத்துள்ளார். அந்த அமர்வு செப்டம்பர் 2021-ல் க்யுரேட்டிவ் மனு (ஒரு தீர்ப்பை மேலாய்வு செய்வதற்கான இறுதி நிலை) ஒன்றை விசாரித்தது. அக்க்யுரேட்டிவ் மனு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமான குஜராத் உர்ஜா விகாஸ் நிகம் லிமிடெட்-க்கும் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவர் (முன்ட்ரா) லிமிடெட்-க்கும் இடையிலுள்ள ஒப்பந்த கடமைகள் பற்றிய சர்ச்சையில் தொடர்புடையது. இந்த வழக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2022-ல் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசத்தில் முடிந்தது.
22 ஆகஸ்ட் 2022-ல், ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, 2018-ல் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தடைந்த வழக்கு ஒன்றினை விசாரிக்க ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைத்துள்ளதாக ரமணா கூறினார். அவ்வழக்கு, தேசிய தலைநகரிலுள்ள ஆட்சி பணிகளை (administrative services) கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி அரசாங்கத்திற்க்கும் ஒன்றிய அரசாங்கத்திற்க்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் சம்பந்தப்பட்டது. இன்னும் விசாரணை தொடங்கவில்லை.
உயர் நீதித்துறையில் தலைமை நீதிபதி ரமணா தீர்வு காண தவறவிட்ட பிற பிரச்சனைகளும் உள்ளன – சீர்திருத்தங்களுக்கான நீண்டகால கோரிக்கைகள், உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியும் அமைப்பில் (Collegium System) வெளிப்படைத்தன்மை; வழக்குகளை பட்டியலிடுவதில் வெளிப்படைத்தன்மை, நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்புதல்; மற்றும் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதர்க்கான அளவுகோல்களை நிர்ணயித்தல் போன்றவை.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடுத்து, பல மாதங்களாகவும் வருடங்களாகவும் விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் மனுதாரர்களிடமும், உச்சநீதிமன்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர்களுடனும் சரத்து 14 பேசியது. அவ்வுரையாடல்களில் இருந்து ஏமாற்றம் மற்றும் நம்பிக்கையின்மை. வெளிப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் சரத்து 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: 1115 நாட்களாக நிலுவையிலுள்ளது
ஒரு மாநிலத்தை ஒன்றிய பிரதேசமாக தரமிறக்கியது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். மேலும், கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல் இல்லாமல் சரத்து 370 திருத்தப்பட்டிருக்க முடியாது. அந்த ஒப்புதலை ஒன்றிய அரசு நியமித்த ஆளுநர் வழங்கினார்.
வழக்கின் பெயர்: மனோகர் லால் சர்மா எதிர் இந்திய ஒன்றியம் (Manohar Lal Sharma vs Union of India)
கடைசியாக விசாரித்தவர்கள்: தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி எஸ் கே கவுல், நீதிபதி ஆர் சுபாஷ் ரெட்டி, நீதிபதி பி ஆர் காவை, நீதிபதி சூர்ய காண்ட்
முதல் விசாரணை தேதி: 16 ஆகஸ்ட் 2019
கடைசி விசாரணை தேதி: 2 மார்ச் 2020 (30 மாதங்களுக்கு முன்பு)
விசாரணைகள்: 11
வழக்கை விசாரிப்பதற்கு பட்டியலிட கடைசி கோரிக்கை: 25 ஏப்ரல் 2022-ல் தலைமை நீதிபதி ரமணா முன்பு
[ரமணாவின்] பதில்: “நான் பார்க்கிறேன்” (Let me see)
“சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இருக்கும் பெரும் சவால்களில் ஒன்று எதுவென்றால், அனைவருக்கும் விரைவான மற்றும் மலிவு விலையில் நீதியை வழங்குவதற்கான நீதி அமைப்பின் இயலாமை ஆகும்.” – தலைமை நீதிபதி ரமணா, ஸ்ரீநகர், 14 மே 2022 ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6, 2019 தேதிகளன்று பிறப்பிக்கப்பட்ட இரண்டு குடியரசு தலைவரின் உத்தரவுகளை (இங்கு மற்றும் இங்கு) எதிர்த்தும் அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு ஒன்றிய பிரதேசமாக பிரித்த ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019-ஐ எதிர்த்தும் ஏறத்தாழ 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இரண்டு உத்தரவுகளும், சட்டமும் அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என அவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டதே அந்த மனுக்கள்.
இரண்டரை வருடங்களுக்கும் மேலாக அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில், அரசியலமைப்பு அமர்வை நீதிபதியாக தலைமை தாங்கியது தலைமை நீதிபதி ரமணா தான். கடைசியாக 2 மார்ச் 2020-ல் அவ்வழக்கை விசாரித்த அரசியலமைப்பு அமர்வு, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றவேண்டி சில மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது.
விசாரணைகள் விரைவாக மீண்டும் தொடங்க ஒரு தேதியை குறிப்பிட மனுதாரர்கள் கேட்டபோது, சபரிமலை வழக்கு விசாரணை தொடர்பான அட்டவணையை பொறுத்தே தேதி முடிவு செய்யப்படும் என்று அந்த அமர்வு கூறியது. சபரிமலை வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு, மத சுதந்திரத்தின் வரம்பு தொடர்பான கேள்விகளை ஏழு நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது. இந்த விசாரணை நடக்கவேயில்லை.
அவ்வழக்கை ஏப்ரல் 2022-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தலைமை நீதிபதி ரமணாவின் அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. அவருடைய பதில்: “பார்க்கலாம்” (We’ll See)
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை மீண்டும் அமைக்க வேண்டுமென்றும், நீதிமன்ற “விடுமுறைக்கு பிறகு” விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் ரமணா கூறினார். 10 ஜூலையில் விடுமுறை முடிந்தது, ஆனால் அவ்வழக்கு விசாரணை பட்டியலில் இடம் பெறவேயில்லை.
“உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நமது நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பல சொற்பொழிவுகளை ஆற்றும் போக்கு உள்ளது” என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், இவ்வழக்கின் ஒரு மனுதாரருமான அட்னன் அஷ்ரப் மிர், சரத்து 14 இடம் கூறினார். “ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என்று வரும்போது, அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளோடு பொருந்துவதில்லை.”
நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை
“உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்காதது குறித்து நான் தனிப்பட்ட முறையில் சில ஏமாற்றங்களை உணர்கிறேன்,” என்றார் மிர். “இவ்வழக்கை விசாரிப்பதற்கு நீதிபதிகள் முனைப்பு காட்டவேண்டும் அல்லது மூன்று வருடங்கள் கடந்தும் இந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்க முடியாததற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.”
சாதக நிலை தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே அதிகரித்து வருவதாக மிர் கூறினார். “இது ஆபத்தானது” என்று அவர் கூறினார். “ஜம்மு காஷ்மீரில் நடந்தது மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமும் கூட. மற்ற இடங்களிலும் அவ்வாறு நடக்கலாம்.”
அரசியலமைப்பு அமர்வு விசாரணையின் ஆரம்ப காலத்தில், வழக்கு தொடரப்பட்டபோது களத்தில் என்ன நிலை இருந்ததோ அதுவே தொடரவேண்டும் என்பதை இடைக்கால உத்தரவாக மனுதாரர்கள் பெற முயன்றனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போது களத்திலுள்ள நிலைமை மாறினால் தொடரப்பட்ட வழக்கு பொருத்தமற்றதாக ஆகிவிடும் என்று அஞ்சினர். இவ்வாதத்தை அமர்வு நிராகரித்தது. சட்டம் ஏற்படுத்திய விளைவுகளை நீதிமன்றத்தால் எப்போதும் மாற்றியமைக்க முடியும் என்று நீதிபதி காவை கூறினார்.
“சட்டத்தின் விளைவுகளை களத்தில் செயல்படுத்திய பிறகு, அவற்றை மாற்றியமைப்பது கடினம்” என்றார் மிர். “வசிப்பிட மசோதா, வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களில் நடந்து கொண்டுள்ளவற்றை மாற்றியமைக்க முடியாது. நீதிமன்றம் கொஞ்சம் அவசரம் காட்ட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், வெளியாள் பார்வையின்-படி ஒரு பாரபட்சம் இருப்பதாக தெரிகிறது.”
தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: 1816 நாட்களாக நிலுவையிலுள்ளது
தேர்தல் பாத்திரங்கள் திட்டம் வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் நிதியுதவிகளை அனுமதிப்பதாகவும், அது தேர்தல் ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்க கூடிய திட்டம் என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அத்திட்டம் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டதால் அது நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவின் ஆய்விலிருந்து தப்பித்தது.
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?
வழக்கின் பெயர்: ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் எதிர் இந்திய ஒன்றியம் (Association for Democratic Reforms vs Union of India) கடைசியாக விசாரித்தவர்கள்: முன்னாள் தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே, நீதிபதி ஏ எஸ் போபன்னா, நீதிபதி வி ராமசுப்ரமணியம்
முதல் விசாரணை தேதி: 5 ஏப்ரல் 2019
கடைசி விசாரணை தேதி: 29 மார்ச் 2020 (30 மாதங்களுக்கு முன்பு)
விசாரணைகள்: 8
வழக்கை விசாரிப்பதற்கு பட்டியலிட கடைசி கோரிக்கை: 25 ஏப்ரல் 2022-ல் தலைமை நீதிபதி ரமணா முன்பு
[ரமணாவின்] பதில்: [விசாரணைக்கு] “எடுத்துக்கொள்வேன்” (Will take it up)
“குடிமக்கள் ‘சட்டத்தின் ஆட்சியை’ பற்றி அறிந்திருப்பதன் மூலமும், அவர்களின் அன்றாட நடத்தையில் அதைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவைப்படும்போது நீதியை வலியுறுத்துவதன் மூலமும் அதை வலுப்படுத்த முடியும்.” – தலைமை நீதிபதி ரமணா, பி டி தேசாய் நினைவுச் சொற்பொழிவு, 30 ஜூன் 2021, 2 ஜனவரி 2018-ல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திர திட்டமானது அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவரின் அடையாளத்தை மறைக்க உதவுவதால், கணக்கில் காட்டப்படாத நிதியை நன்கொடையாக அளிப்பதற்கு பெருநிறுவனங்களை அனுமதிப்பதால், மேலும், தவறாக பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டதால் அத்திட்டத்தை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு தொடுத்தனர்.
நவம்பர் 2019-ல் வெளியான புலனாய்வு ஊடக அறிக்கையானது, இந்திய தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் எவ்வாறு தேர்தல் பத்திர திட்டத்தை “தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளை” உண்டாக்குவதற்காக, “தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதற்காக” மற்றும் “பணமோசடியை ஊக்குவிப்பதற்காக” எதிர்த்தனர் என்பதை வெளிப்படுத்தியது. இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திர திட்டத்தை “நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மையை பொறுத்தவரை ஒரு பிற்போக்கு நடவடிக்கை” என்று விவரித்ததுடன், அதனை திரும்ப பெற வலியுறுத்தியது.
இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனியர்களை மிகவும் வெறுக்கிறது? – ஊடகவியலாளர் மர்வான் பிஷாரா
இடைக்கால நடவடிக்கையாக தேர்தல் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் விடுத்த கோரிக்கையினை இரண்டு முறை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது – ஏப்ரல் 2019-ல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஒருமுறை நிராகரித்தது, மற்றும், மார்ச் 2021-ல் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு இரண்டாவது முறை நிராகரித்தது.
“இதன் விளைவு என்னவென்றால் அத்திட்டம் இன்னும் தொடர்கிறது – கணக்கில் காட்டாத, மூல ஆதாரம் தெரியாத (அரசாங்கத்தை தவிர) பணத்தினால் அரசியல் கட்சிகள் நன்மைகள் பெறுகின்றனர். அதிலும் ஆளும்கட்சிக்கே மிகையான பணம் செல்லுகிறது” என்று ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கத்தின் நிறுவன உறுப்பினரும், மூன்று மனுதாரர்களில் ஒருவருமான ஜெகதீப சொக்கார் சரத்து 14-இடம் கூறினார்.
5 ஏப்ரல் 2022-ல் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இவ்வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி ரமணாவின் அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார். அவர் மேற்கு வங்காளத்திலிருந்து ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டினார், அங்கு கல்கத்தாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் கலால் ரெய்டுகளை (Excise Raids) நிறுத்தும் நம்பிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 40 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது.
“இது ஜனநாயகத்தை சிதைக்கிறது” என்று பூஷன் ரமணாவிடம் கூறினார். வழக்கு விசாரணை தாமதமானதற்கு கொரோனா பரவலின் மீது குற்றம் சாட்டியதுடன், அவர்கள் வழக்கை விசாரணைக்கு “எடுத்துக்கொள்வதாக” (take it up) உறுதியளித்தார். ரமணா வாக்குறுதி அளித்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் எந்த விசாரணையும் நடக்கவில்லை.
“குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு முறை வழக்கினை விசாரணைக்காக பட்டியலிட முயற்சித்தோம், ஆனால் பலனளிக்கவில்லை” என்றார் சொக்கார். “ஏப்ரல் 2019-ல், இந்த வழக்கு நாட்டின் ‘தேர்தல் நடைமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும் பிரச்சனைகளை எழுப்புகிறது’ என்று உச்சநீதிமன்றம் கூறியது. எனவே நான் கேட்டேன், இந்த முக்கிய பிரச்சனைகளுக்கு அவசர விசாரணை தேவையில்லையா? என்று. எனக்கு வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருப்போம்.”
உபா (UAPA), 1967 சட்டம் அரசியலமைப்பிற்கு புறம்பாக இருப்பதாக அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: 1105 நாட்களாக நிலுவையிலுள்ளது இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு சட்டமான உபா (UAPA)-வின் சட்ட பிரிவுகள் தெளிவற்றதாகவும், பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகவும், நீதியறிவிற்கு பொருந்தாதவகையில் அரசாங்கத்திற்கு பரந்த அதிகாரங்களை கொடுப்பதாகவும் உள்ளதென மனுதாரர்கள் வாதிடுகிறார்கள்.
வழக்கின் பெயர்: சஜல் அவஸ்தி எதிர் இந்திய ஒன்றியம் (Sajal Awasthi vs Union of India)
கடைசியாக விசாரித்தவர்கள்: முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அசோக் பூஷன்
முதல் விசாரணை தேதி: 9 செப்டம்பர் 2019
கடைசி விசாரணை தேதி: முதல் விசாரணை தவிர்த்து வேறு எந்த விசாரணையும் நடக்கவில்லை (35 மாதங்களுக்கு முன்பு)
விசாரணைகள்: 1
வழக்கை விசாரிப்பதற்கு பட்டியலிட கடைசி கோரிக்கை: தெரியவில்லை
பதில்: தெரியவில்லை
“உலகக் குடிமக்களாகிய நாம் அனைவரும், நமது முன்னோர்கள் போராடிப் பெற்று தந்த சுதந்திரம், விடுதலை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், மேலும் மேம்படுத்தவும் அயராது உழைக்க வேண்டியது அவசியமானது.” – தலைமை நீதிபதி ரமணா, பிலடெல்பியா, அமெரிக்கா, 26 ஜூன் 2022
உபா (UAPA)-வின் பல சட்ட பிரிவுகள் அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளதென அதனை எதிர்த்து பல மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அச்சட்டப்பிரிகள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் சுமையை (burden of proof) குற்றம் சாட்டப்பட்டவர் மீதே சுமத்துகிறது, மற்றும் அரசியலமைப்பு சரத்துகளை மீறுவதாக இருக்கிறது. அவற்றை சரத்து 14 ஆவணப்படுத்தியுள்ளது (இங்கு, இங்கு மற்றும் இங்கு).
சஜல் அவஸ்தி, மற்றும் சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்கான சங்கம் 2019-ல் தொடுத்த பிரதான வழக்கு, “தீவிரவாத செயல்” என்னும் வரையறையை விரிவுபடுத்தியதுடன், விசாரணை அல்லது ஆதாரம் எதுவுமின்றி யாரைவேண்டுமாலும் ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்த அரசாங்கத்திற்கு அதிகாரமளிக்கும் உபா (UAPA) சட்டத்தின் 2019 சட்டதிருத்தங்கள் அரசியலமைப்பு சரத்து 19 (1)(a)-வில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பேச்சுரிமையை மீறுகிறதா என்று தீர்மானிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.
ஒன்றிய அரசை பதிலளிக்குமாறு, அப்போதிருந்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நோட்டீஸ் பிறப்பித்தார். ஆனால் விசாரணை நடக்கவில்லை. ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், பல ஊடகவியலார்களும் சிவில் சமூகத்தினரும் “கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதற்க்கு” “வெளிப்படையாக தன்னிச்சையான” அதிகாரங்களை அரசுக்கு அளிக்கும் உபா சட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நவம்பர் 2021-ல் அவ்வாறான ஒரு வழக்கு தலைமை நீதிபதி ரமணாவின் அமர்வு முன்பு வந்தது, அதில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதே தவிர விசாரணை நடைபெறவில்லை.
உச்சநீதிமன்றமானது உபா (UAPA) சட்டம் அரசியலமைப்பை மீறுகிறதா என்று தீர்மானிப்பதை விடுத்து, பிணை விசாரணையின் போது உபா (UAPA) சட்டதின் கீழ் ஒருவரை குற்றம் சுமத்த அரசிற்கு இருக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்திய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைத்தது.
15 ஜூன் 2021-அன்று பிறப்பித்த பிணை உத்தரவில் டெல்லி உயர்நீதிமன்றம் உபா (UAPA) சட்டதிலுள்ள ‘தீவிரவாத செயலுக்கான’ வரையறை தெளிவற்ற முறையில் இருப்பதாக கூறியது, மேலும் “வழக்கமான குற்றங்கள் எவ்வளவு அதிர்ச்சியளிக்கும் வகையிலும் கொடூரமானவையாக இருந்தாலும் அவை உபா (UAPA) சட்டத்தின் கீழ் வராது”என்று தீர்ப்பளித்தது. மூன்று நாட்களுக்கு பின்னர் 18 ஜூன் 2021-அன்று, குறிப்பிட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை “சட்ட முன்மாதிரியாக (legal precedent) கருதக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உபா (UAPA) சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்காமல் இருப்பது “ஆச்சிரியமாக” இருக்கிறது என்று உபா (UAPA) சட்டதின் கீழ் குற்றம் சுமத்த பட்ட ஊடகவியலாளரும் இவ்வழக்கின் ஒரு மனுதாரருமான ஷ்யாம் மீரா சிங் கூறினார்.
“எனினும் இது முழுவதுமாக எதிர்பார்க்காத ஒன்று இல்லை” என்று சிங் சரத்து 14-இடம் கூறினார். “இவ்வழக்குகளில் எவ்வித முன்னேற்றமுமில்லை, மேலும் என்மீது உபா (UAPA) சட்டதின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இன்னும் உள்ளது.”
“என்னால் வெளிநாடு செல்லமுடியாது, மற்றும் அரசாங்க வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாது-எனக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற விருப்பமேதுமில்லை” என்று சிங் கூறினார். “அவ்வப்போது சிறு சிறு கருணைகள் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமாக எனக்கு நீதித்துறை மீது அதிக நம்பிக்கை இல்லை. ஒட்டுமொத்த நீதித்துறையும் சமரசத்திற்கு உள்ளாகியுள்ளது, கீழமை நீதிமன்றங்கள் இன்னும் அதிகமாக சமரசத்திற்கு உள்ளாகியுள்ளது”.
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு: 1323 நாட்களாக நிலுவையிலுள்ளது
தலித், பழங்குடி அல்லது பிற்படுத்தப்பட்ட-சாதி நிலை மற்றும் பிற சமூக காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமான அரசு வேலைகள் மற்றும் கல்விக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்
வழக்கின் பெயர்: சமத்துவத்திற்கான இளைஞர்கள் எதிர் இந்திய ஒன்றியம் (Youth for Equality vs Union of India)
கடைசியாக விசாரித்தவர்கள்: முன்னாள் தலைமை நீதிபதி போப்டே, நீதிபதி சுபாஷ் ரெட்டி, நீதிபதி காவை
முதல் விசாரணை தேதி: 12 மார்ச் 2019
கடைசி விசாரணை தேதி: 5 ஆகஸ்ட் 2020 (24 மாதங்களுக்கு முன்பு)
விசாரணைகள்: 6
வழக்கை விசாரிப்பதற்கு பட்டியலிட கடைசி கோரிக்கை: தெரியவில்லை
பதில்: தெரியவில்லை
“நான் இடஒதுக்கீட்டின் வலுவான ஆதரவாளன். திறமைகளை வளப்படுத்த, சட்டக் கல்வியில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நான் வலுவாக முன்மொழிகிறேன்.” – தலைமை நீதிபதி ரமணா, புது டெல்லி, 10 மார்ச் 2022.
9 ஜனவரி 2019-அன்று 103-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அத்திருத்த சட்டமானது அரசியலமைப்பு சரத்துகள் 15 மற்றும் 16-ஐ திருத்தியது. மேலும், உயர் கல்வி சேர்க்கைகளிலும் அரசாங்க வேலைகளிலும் பொருளாதாரம் அல்லது குடும்ப வருமானம் அடிப்படையில் 10% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசிற்கு அதிகாரமளித்தது.
நவம்பர் 1992-அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடஒதுக்கீட்டிற்கான 50% உச்சவரம்பை மீறுவதற்காகவும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதியினரை பொருளாதார இடஒதுக்கீட்டிலிருந்து விலக்குவதற்காகவும் 103-வது திருத்த சட்டத்தை எதிர்த்து இருபதுக்கும் மேலான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
5 நாட்கள் நடந்த வாதங்களுக்கு பிறகு 5 ஆகஸ்ட் 2020 அன்று, தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க முடிவு செய்தது. அதன்பிறகு இதுவரை விசாரணை நடக்கவேயில்லை.
தலைமை நீதிபதி ரமணாவின் பதவிக்காலத்தில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
“தற்போது நிலைமைகள் எவ்வாறு உள்ளதோ அதுவே இறுதியில் முடிவாக மாற நீங்கள் அனுமதிக்கிறீர்கள்” என்று இவ்வழக்கின் மனுவில் தொடர்பில்லாத டெல்லி உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் சரத்து 14-இடம் கூறினார். “எனவே ,நேரம் செல்வதால், இறுதியில் இது ஒரு “பெயிட் அக்கம்ப்ளீ” (fait accompli), அதாவது ஒரு விஷயம் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையானது வெறும் கல்விசார் செயல்பாடாக மாறிவிடுகிறது”.
குடியுரிமை திருத்த சட்டம் 2019: 987 நாட்களாக நிலுவையில் உள்ளது
2019-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமானது மதத்தின் அடிப்படையிலான பாகுபாட்டினை கொண்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சரத்து 21-ல் அங்கீகரிக்கப்பட்ட வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகவும், எனவே அது அரசியலமைப்பிற்கு புறம்பானது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?
வழக்கின் பெயர்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எதிர் இந்திய ஒன்றியம் (Indian Union Muslim League vs Union of India)
கடைசியாக விசாரித்தவர்கள்: முன்னாள் தலைமை நீதிபதி போப்டே, நீதிபதி காவை, நீதிபதி சூர்ய காண்ட்
முதல் விசாரணை தேதி: 18 டிசம்பர் 2019
கடைசி விசாரணை தேதி: 22 ஜனவரி 2020 (31 மாதங்களுக்கு முன்பு)
விசாரணைகள்: 2
வழக்கை விசாரிப்பதற்கு பட்டியலிட கடைசி கோரிக்கை: தெரியவில்லை
பதில்: தெரியவில்லை
“படித்த இளைஞர்கள் சமூக யதார்த்தத்திலிருந்து விலகி இருக்க முடியாது. உங்களுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது… நீங்கள் தலைவர்களாக உருவாக வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக, அரசியல் பிரக்ஞையும் நன்கறிந்த விவாதங்களும் தேசத்தை நமது அரசியலமைப்பு எதிர்நோக்கும் புகழ்பெற்ற எதிர்காலத்துக்கு அழைத்து செல்லும்.” – தலைமை நீதிபதி ரமணா, தேசிய சட்ட பல்கலைக்கழகம், டெல்லி, 9 டிசம்பர் 2021.
குடியுரிமை திருத்த சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் டிசம்பர் 2019-ல் இயற்றியது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விரைவான குடியுரிமையை இச்சட்டம் வழங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. அரசு இன்னும் விதிகளை வகுக்காததால், அந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளதென, அதனை எதிர்த்து 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம் மக்களை பாகுபாடு காட்டி விலக்குவதாக, குடிமக்கள் அல்லாதவர் உட்பட அனைவருக்கும் சரத்து 14-ல் அங்கீரிக்கப்பட்டுள்ள சமத்துவத்தை மீறுவதாக அம்மனுக்கள் முதன்மையாக வாதிடுகின்றனர்.
தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வானது 18 டிசம்பர் 2019-அன்றும் 22 ஜனவரி 2020-அன்றும் என இரண்டு முறை விசாரணை மேற்கொண்டது. மேலும், அத்திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது. அவ்வழக்கின் மீதான கடைசி விசாரணை 22 ஜனவரி 2020-ல் நடைப்பெற்றது. அதன்பிறகு விசாரணை நடைபெறவேயில்லை.
20 மே 2020-அன்று அசாம் மாநிலத்தில் மட்டும் அத்திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வேறொரு மனுவை தலைமை நீதிபதி போப்டே-வின் அமர்வு விசாரித்தது. அந்த அமர்வு அச்சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது, மேலும், ஒன்றிய அரசாங்கத்திற்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது.
“இந்தச் சட்டத்தின் மீது ஒட்டுமொத்த நாடும் பெரிய எண்ணிக்கையில் கூட்டாக அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது; அப்படிப்பட்ட வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணை தேவை இல்லையா?” என்று இத்திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த குழுக்களின் ஒன்றான வெறுப்புக்கு எதிராக ஒன்றுப்பட்டுளோம்-இன் நிறுவன உறுப்பினர் பனோஜ்யோட்சனா லாஹிரி சரத்து 14-இடம் கூறினார். “குடிமக்கள் வேறு எப்படி தெளிவான வார்த்தைகளில் பேச வேண்டும்?”
“தலைமை நீதிபதி ரமணா தனது முற்போக்கு பக்கத்தை தனது உரைகளில் மட்டுமல்லாமல், தீர்ப்புகள் மூலமாகவும் தனது சொந்த இடத்தில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.” என்றார் லாஹிரி.
பொது நலன் சார்ந்த பிற வழக்குகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன
சில சமயங்களில் வழக்கறிஞர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், தலைமை நீதிபதி ரமணா தீண்டாத வழக்குகளும் உள்ளன.
மிக சமீபத்தில், ஊடகவியலாளர்கள் மீதும் மற்ற குடிமக்கள் மீதும் உளவு பார்ப்பதற்கு இஸ்ரேலிய உளவு மென்பொருளான (spyware) பெகாசஸ்-ஐ (Pegasus) ஒன்றிய அரசு பிரயோகித்ததா என்று கண்டுபிடிப்பதற்கும், மேலும் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா என்று ஆராய்வதற்கும் நீதி விசாரணை வேண்டி ஊடகவியலார்களும் சிவில் சமூகத்தினரும் தொடுத்த பெகாசஸ் வழக்கினை தலைமை நீதிபதி ரமணா விசாரணைக்காக பட்டியலிடவில்லை.
22 ஜூலை 2021-லிருந்து நிலுவையிலுள்ள 11 மனுக்களும் 12 ஆகஸ்ட் 2022-அன்று விசாரணைக்காக பட்டியலிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது செப்டம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது, ரமணாவின் ஓய்விற்கு பிறகு. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான தொழில்நுட்பக் குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 2-ஆம் தேதியன்று, கர்நாடக மாநில அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்து பிறப்பித்த உத்தரவை அனுமதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டி கோரிக்கை வைத்தார் ஒரு வழக்கறிஞர். நீதிபதிகளில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று ரமணா கூறினார். எந்த தேதியும் கொடுக்கவில்லை. இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 159 நாட்கள் ஆகிவிட்டது.
ஏப்ரல் மற்றும் ஜூலையில், ஹிஜாப் வழக்கினை அவசர விசாரணைக்கு பட்டியலிட வேண்டி குறைந்தபட்சம் இரண்டு கோரிக்கைகள் (இங்கு மற்றும் இங்கு) தலைமை நீதிபதியின் அமர்வு முன்பு வைக்கப்பட்டது. விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி ரமணா உறுதியளித்தார். ஏப்ரல் 26 அன்று “இரண்டு நாட்கள் காத்திருங்கள்” என்று அவர் கூறினார். ஜூலை 13-அன்று “அடுத்த வாரம் வரை காத்திருங்கள்” என்று கூறினார். இதுவரை அவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்
சாதாரண நடைமுறையில் சிறப்பு விடுப்பு மனுக்கள் (Special Leave Petitions, அதாவது ஒரு நீதிமன்றம்/தீர்ப்பாயம் அளித்த உத்தரவினை எதிர்த்த மேல்முறையீடு), மனு நம்பர் ஆகிய பிறகு 5-6 நாட்களுக்குள் முதல் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுவிடும்” என்று ஹிஜாப் வழக்கின் வழக்கறிஞர் பாவ்சியா ஷகீல் கூறினார். “எங்கள் வழக்கில் மாதங்கள் ஆகிவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தயங்குவதையே இது காட்டுகிறது.”
“Republished with permission from Article 14, A website focused on issues related to research and reportage on the rule of law in India.”
மூலம்: சவுரவ் தாஸ், https://article-14.com/
மொழியாக்கம்: பீம்ராஜ் (Translated by Bhimraj M, PhD Student, Faculty of Legal Studies, South Asian University (estd. by SAARC Nations).
BharatJodoYatra I மோடிக்கு ஜால்ரா தட்டும் நடுநிலை சங்கிகள் I SangaTamizhan Interview I Rahul Gandhi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.