நவம்பர் 28 ஆம் தேதி, ‘லவ் ஜிஹாத்’தை தடுக்க உத்திர பிரதேச அரசாங்கம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ‘லவ் ஜிஹாத்’ என்பது, ‘இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை மயக்கி , திருமணம் செய்துகொள்ள மதம் மாற்றுகிறார்கள்’ எனும் வலது சாரிகளின் கற்பனை கதை. கட்டாய மத மாற்றங்களை தண்டிக்கும் இந்த புதிய சட்டம், ஒரு நபர் மதம் மாற வேண்டுமென்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று சொல்கிறது.
உத்திர பிரதேசத்தில் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி, உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டுமே, ‘லவ் ஜிஹாத்’தின் பேரில் அநியாய கைதுகள் நடந்து கொண்டிருக்கவில்லை. கடந்த வாரம், மத்திய பிரதேச மாநிலம் இதைப் போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. மேலும், பாஜக தலைமையிலான மற்ற மூன்று மாநிலங்கள் கர்நாடகா, ஹரியானா மற்றும் அஸ்ஸாம், இதைப் போன்ற சட்டங்களை நிறைவேற்றவிருப்பதாக அறிவித்துள்ளன.
ஏறத்தாழ பத்தாண்டுகளாக, இந்துத்துவா அமைப்புகள் ‘லவ் ஜிஹாத்’ சர்ச்சையை வைத்து, கட்டாய மதமாற்றத்திற்கு எந்த சாட்சியும் இல்லாத போதிலும், மத-கலப்பு திருமணம் செய்த தம்பதியினர் மற்றும் இஸ்லாமிய ஆண்களை குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கிறது. மதக்கலப்பு திருமணங்களுக்கு தடைகளை உருவாக்கும் வகையில் சட்டங்களை கொண்டு வர வேண்டும் என வலது சாரியினர் கோருவது, இந்துத்துவாவின் ‘பொது சிவில் சட்டம் வேண்டும்’ எனும் கோரிக்கையோடு முரண்படுகிறது.
சிறையிலும் மனுநீதி : சாதிரீதியாக வேலைப் பிரிவினை – புலிட்சர் மையம் அறிக்கை
பொது சிவில் சட்டம் என்றால், இந்தியர்களின் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் தத்தெடுத்தலுக்கு, ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு சட்டம் என்றில்லாமல், அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்பதே. பொது சிவில் சட்டம், திருமணத்திலும், விவாகரத்திலும் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகவும், ஆணாதிக்க சட்டங்களினால் சொத்துரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகவும் இருக்கும் என அதை பரிந்துரை செய்பவர்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாக, பொது சிவில் சட்டம் வேண்டுமென இந்துத்துவா குழுக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றன. அதை நடைமுறைபடுத்துவது தான், 2014 ஆம் ஆண்டு தேர்தல்களில் பாஜகவின் முக்கியமான மூன்று வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, ஆயோத்தியாவில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது என மற்ற இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ‘லவ் ஜிஹாத்’ சட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளில் மறுபடியும் பொது சிவில் சட்டம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தங்களுடைய குடும்ப சட்டங்களை பாதுகாக்க நினைக்கும் சிறுபான்மை மத குழுக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் மட்டுமல்ல, மதச்சார்பற்ற அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் கூட பேசப்படாத பல்வேறு காரணங்களுக்காக பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றனர்.
1956 ஆம் ஆண்டில், பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்பது நெறிமுறை கொள்கையாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. ஆனால், பொது சிவில் சட்டம் என்பது எப்போதுமே அரசியல் சர்ச்சைக்குள்ளாகும் விஷயமாக இருந்ததனால், அது இயற்றப்படவோ, நடைமுறைபடுத்தப்படவோ இல்லை.
இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? – சாய்நாத்
இந்து குடும்ப சட்டங்கள், இஸ்லாமிய குடும்ப சட்டங்கள் மற்றும் பிற குடும்ப சட்டங்கள் கொடுக்காத உரிமையை பொது சிவில் சட்டம் கொடுக்குமென, 1990 வரை பெண்கள் அமைப்புகள் நம்பினார்கள். உதாரணமாக, 1995 ஆம் ஆண்டு, பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான லாப நோக்கமற்ற அமைப்பு, “பாலின நீதிக்கான தொலைநோக்கு பார்வை” எனும் ஆவணத்தில் தங்களுடைய சொந்த சிவில் சட்டங்களை பதிப்பிட்டது.
இந்த ஆவணம் எந்த அரசு அமைப்பிற்கும் சமர்பிக்கப்படவில்லை. ஆனாலும், இதில், திருமணம், விவாகரத்து தொடர்பான உரிமைகள் மற்றும் சொத்துரிமை குறித்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இஸ்லாமிய குடும்பச்சட்டத்தை போலவே, திருமணத்தை சடங்காக பார்க்காமல், ஒப்பந்தமாக மட்டுமே பார்ப்பதாக, மேற்சொன்ன ஆவணத்தின் சிவில் சட்டங்கள் இருந்தன. அதில், எதிர்பாலீர்ப்பு-உறவுகள் அல்லாத பிற உறவுகளுக்கும், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதற்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், திருமண சொத்திற்கு சம பங்கு உரிமையும், இருபாலினருக்கும் சமபங்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
கடந்த இருபது ஆண்டுகளில், பெண்கள் குழுக்கள் பலவும் பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அச்சட்டத்தை நிராகரிக்கின்றனர்.
சர்வாதிகாரமாகிறதா இந்திய அரசு? – அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு
“ஆணாதிக்க, இஸ்லாம்-விரோத, பயங்கரவாத சித்தாந்தங்களோடு இருக்கும் இந்துத்துவா வலது சாரி, பொது சிவில் சட்டம் வேண்டுமென கோரிக்கையை நிறுவியுள்ளது” என்கிறார் சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் லாப நோக்கமற்ற அமைப்பான, பேபாக் கலெக்டிவின் நிறுவனர் ஹசீனா கான். “இஸ்லாமிய குடும்பச்சட்டத்தின் பல பிரிவுகளுக்கு நாங்கள் எதிராகவே இருக்கிறோம். ஆனால், ஒரு இந்துத்துவா அரசிடம் இருந்து வரும் பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது” என்று அவர் கூறுகிறார்.
இது தான் பொது சிவில் சட்டம் குறித்த மைய கருத்து. பொது சிவில் சட்டத்தின் மையத்தில் பாலின நீதி இருந்தாலும் கூட, இந்துத்துவா குழுக்கள் பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்களை அடிக்கும் ஆயுதமாக மாற்றியுள்ளனர்.
இஸ்லாமிய குடும்பச்சட்டத்தின் பாகங்களாக இருக்கும் முத்தலாக் மற்றும் பலதார மணம் தலைப்புச் செய்திகளில் வரும் போதெல்லாம், பொது சிவில் சட்டம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது என்கிறார் கான். 2017 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் முத்தலாக், சட்டவிரோதமானது என்று கூறிய பிறகு, பாஜக அரசு முத்தலாக் வகை விவாகரத்தை குற்றமாக்குவதற்கு ஒரு சட்டத்தை இயற்றியது. இதனால் தான் பொது சிவில் சட்டம் அபாயகரமானதாக இருக்கும் என இஸ்லாமிய குழுக்கள் கருதுகின்றனர்.
“இதுதான் வலது சாரிகளின் நோக்கம். இஸ்லாமியர்களை குறி வைப்பதற்கு, அத்தனையையும் குற்றமாக்குவது” என்கிறார் கான். “பெண்ணுரிமை பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடந்தால், அது இந்துத்துவா குழுக்களுக்கு தீவனம் ஆகுமென்பதால், இஸ்லாமை சேர்ந்த ஆண்கள் அது குறித்து பேசுவதில்லை. இதனால், பெண்களுக்கு தான் இரட்டிப்பு சுமை” என்கிறார்.
பொது சிவில் சட்டம் அபாயகரமானதாக இருக்கும் என பெண்கள் அமைப்புகள் நினைப்பதற்கு மற்றொரு காரணம், பொது சிவில் சட்டம் வேண்டும் என கோரிக்கை வைப்பவர்கள், இதுவரை அச்சட்டத்திற்கான மாதிரி வரைவை கூட கண்ணில் காட்டியதில்லை என்பது தான். அத்தனை தனிச்சட்டங்களில் இருக்கும் பாலின-நீதி நடவடிக்கைகளை எல்லாம் அத்தனை பேருக்குமானதாக மாற்றுமா? அல்லது பெரும்பான்மை இந்து அணுகுமுறையில், சிறுபான்மை இனங்களின் குடும்பச்சட்டங்கள் நீக்கப்படுமா?
“எதைப் போன்ற சட்டங்கள் அவர்கள் மனதில் இருக்கின்றன என்பது குறித்து வலது சாரியினர் பேசுவதில்லை” என்கிறார் வரலாற்றியலாளர் தனிகா சர்கார். “அவர்கள் இஸ்லாம் ஆண்கள் மீதும், இஸ்லாமிய பெண்கள் மீதும் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், இந்து குடும்பச்சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர அனுமதிப்பார்களா? பொதுவாகவே இந்து சமூகம் சீர்திருத்தத்திற்கு எதிராகவே உள்ளது.” என்கிறார்.
பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான அமைப்பை சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளர் சயானிகா ஷா, இந்துக்கள் தங்கள் தனிச்சட்டங்களை விட்டுக் கொடுக்க தயாராக இருந்தால் மட்டுமே, பொது சிவில் சட்டம் கிடைக்கும் என்று சொல்கிறார்.
“இந்து சிவில் சட்டங்களுக்கு கீழ் இருக்கும் இந்து கூட்டுக் குடும்பம் எனும் அமைப்பை நீக்க வேண்டும், அதுதான் இந்து குடும்ப சொத்திற்கு அதிக பாதுகாப்பு அளிக்கிறது” என்கிறார் ஷா. மேலும், அவர், (பொது சிவில் சட்டத்தையொத்து இருக்கும்) வேறுபட்ட மதங்களை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சிறப்பு திருமணச் சட்டத்திலும் கூட இந்து சொத்துரிமை சட்டங்கள் இருக்கின்றன என்கிறார்.
“பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்று வலது சாரியினருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். இப்போதும் கூட பல இந்து சமூகங்களுக்குள், யார் யாரை திருமணம் செய்து கொள்ளலாம், எது ஒரு திருமண சடங்கென கருதப்படும் என்பதெல்லாம் வழக்கமான சட்டங்களால் பாதுகாக்கப்பட்டே வருகிறது” என்று சொல்கிறார்.
பல பழங்குடி சமூகங்களுக்கு இந்த சட்டம் வழங்கும் பாதுகாப்பை குறித்து தான், ஷா இப்படி சொல்கிறார். இந்தியாவில், கோவாவில் மட்டும் அனைத்து மதத்தினருக்குமென பொது சிவில் சட்டம் என ஒன்று இருக்கிறது; ஆனால் அதுவும் ஒருசேர நடைமுறைபடுத்தப்படவில்லை.
இந்த பன்மைத்தன்மைகள் காரணமாகவே, எல்லோருக்கும் பொதுவான பொதுச்சட்டம் வேண்டுமென கேட்காமல், ஏற்கனவே இருக்கும் குடும்பச்சட்டங்களை சீர்திருத்தி, அவற்றை பாலின- சமத்துவத்திற்கு ஏற்றவையாக மாற்ற வேண்டும் என பல பெண்கள் அமைப்புகள் கேட்கின்றன.
மும்பையை சேர்ந்த பெண்ணிய வழக்கறிஞரான ஃப்ளாவியா ஏக்னஸ், “வலது சாரியினர் ஒரே கோரிக்கையை பலமுறை வைத்தபடி இருக்கின்றனர். ஆனால், பொது சிவில் சட்டத்திற்கான அவசியமே இங்கே இல்லை” என்று சொல்கிறார்.
(www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.