மனிதர்கள் சார்ந்த வாழ்க்கை முறைகளில் பனை, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி, ஒரு காலத்தில் இவைதான் இந்தப் பகுதிகளின் ஜீவாதாரம். பதனீரும், நுங்கும் பண்டமாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தேரிக்காடுகளை இணைத்து ஒரு ரயில் ஓடிய வரலாறை அறிவீர்களா?
70 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடியது அந்த தேரிக்காட்டு கருப்பட்டி ரயில்.1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன.
சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ‘பாரி அன் கோ’ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. அந்த ஆலையின் சரக்குப் போக்குவரத்துக்காக ‘குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே’ (கே.எல்.ஆர்) என்ற பெயரில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கும், குலசேகரன்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனித்தனியாக சுமார் 46 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது. இந்த தேரிக்காட்டு ரயில் பயணம், அந்த கிராமங்களில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்க ஆரம்பித்தது.
தேரிகாட்டின் பதனி வாசம் கமகமன்னு இருக்கும். பொழுது விடிவதற்குள் பதனியை பாரிக்காரன் வைத்திருக்கும் தொட்டியில் மக்கள் அளந்து ஊற்றவிடுவார்கள். தேரிக்காட்டு பதினியைக் கொண்டு போவதற்கு திசையன்விளையில் இருந்து குலசேகரப்பட்டினம் வரைக்கும் குழாய் பதிக்கப்பட்டிருந்தது. குழாயில் பதினியை ஊற்றி விட்டால் சீனி ஆலைக்குப் போய் சேர்ந்துவிடும்.
பதனீரும், கருப்பட்டியுமே தேரிக்காட்டு ரயிலின் ஆரம்பகாலத் தேடல். ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்தியதின் பேரில், பின்பு பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு அடி அகலம் கொண்ட இந்த ரயில்பாதையில் திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, உடன்குடி ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் இருந்தன.
குலசேகரன்பட்டினத்தில் இருந்த சிறிய ஆலையில் பதநீர் காய்ச்சப்பட்டு, திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல், ‘பானி’ எனப்படும் களி போன்ற பதநிலையில்தான் ரயில்களில் அவை பெரிய ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை சீனியாக மாற்ற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
தெற்கு ரயில்வேயின் வரைபடத்தில் தேரிக்காடுகள் இடம் பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த ரயிலின் முடிவும் சோகம் நிரம்பியதுதான். 1930களில் சீனி ஆலைக்குச் சென்ற பதநீரில் சிலர் குளத்து நீரையும் கலந்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆலைக்கு சென்ற பதனீரில் மீன்கள் செத்து மிதந்ததில் பாரி நிறுவனத்தார் கோபம் ஆகியிருக்கின்றனர். சுதந்திரப் போர் மேகங்கள் இந்தியாவைச் சூழ்ந்திருக்க, இரண்டாம் உலகப் போர் உலகைச் சூழ்ந்திருக்க, தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 1940ம் ஆண்டு இந்த ரயில் சேவையை பாரி நிறுவனத்தார் படிப்படியாக நிறுத்திவிட்டனர்.
வர்த்தக வளம்கொழித்த திசையன்விளை வாரச்சந்தை அக்காலத்தில் திருவிழா போல் நடக்குமாம். வாரச் சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கு ‘சிறப்பு ரயில்’ கூட இயக்கப்பட்டுள்ளது.
காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?
திசையன்விளை- திருச்செந்தூர் இடையே மூன்று மணிநேரப் பயணத்துக்குக் கட்டணம், 13 அணாவாக (78 பைசா) இருந்தது. இதே கால கட்டத்தில் திருநெல்வேலியிருந்து திருச்செந்தூருக்கு தென் இந்திய ரயில்வே நிறுவனம் மீட்டர்கேஜ் ரயில்களை இயக்கியதும் குறிப்பிடத்தக்கது.
பாரி நிறுவனம் ரயிலை நிறுத்தினாலும், பயணிகளுக்கான ரயில் சேவையை தொடர்ந்து நடத்த ஆள் தேடியது. நெல்லை மாவட்ட நிர்வாகம் ரயில் சேவையை வாங்க முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்துக்கு வங்கிகளும் கடன் கொடுத்து உதவுவதாக வாக்குறுதி அளித்தன. இருப்பினும் இத்திட்டம் கைகூடவில்லை.
29 ஏக்கர் 71 சென்டில் அமைக்கப்பட்டிருந்த குலசேகரப்பட்டினம் சீனி ஆலையும் மூடப்பட்டது. ரயில் தடமும் மறைந்து விட்டது. அந்த தண்டவாளங்கள் இன்றும் பல வீடுகளில் உத்திரங்களாகவும், கதவு நிலைகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்த ரயிலின் நினைவாக, குலசேகரன்பட்டினம் பி.எஸ்.எம் நடுநிலைப் பள்ளியில் இன்றும் தண்டவாளத் துண்டு ஒன்றை பாதுகாத்து வருகின்றனர்.
தேரிக்காட்டு கருப்பட்டி ரயில்கள் 30 முதல் 40 குதிரை சக்தி கொண்ட நிலக்கரி எஞ்சின்களில் இயங்கின. அப்போது பயன்படுத்தப்பட்ட நிலக்கரி துண்டுகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை குலசேகரப்பட்டினம் கடற்கரையில் கிடந்துள்ளன.தேரிக்காட்டு ரயிலின் டிக்கெட்டுகள் சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள பாரி நிறுவனத் தலைமையகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது
வரலாறு என்பதும் இறந்தவனுக்கும், இருப்பவனுக்கும், இனி பிறப்பவனுக்குமான வாழ்க்கை ஒப்பந்தம் தான். ஒப்பந்தங்கள் அறுபடாத தண்டவாளங்களை அமைப்போம். அதில் கருப்பட்டி ரயிலின் சத்தங்கள் நமக்கு வரலாறை என்றென்றும் சொல்லிக் கொண்டிருக்கும்.
கட்டுரையாளர்: சூர்யா சேவியர், அரசியல் செயற்பாட்டாளர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.