Aran Sei

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

Image Credit : scroll.in

ரேந்திர மோடியின் புதிய இந்தியாவில், நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால் காலணி விற்றதற்காகவோ, போராட்டத்தில் பங்கு கொண்டதற்காகவோ, ஒரு இந்து பெண்ணுடன் பேசியதற்காகவோ அல்லது உடன் நடந்து சென்றதற்காகவோ, மாடுகளை ஏற்றிய வண்டியை ஓட்டி வந்ததற்காகவோ, ஒரு நகைச்சுவையை கூறியதற்காகவோ, அல்லது இவற்றை எல்லாம் செய்யாமல் இருந்ததற்காகவோ கூட நீங்கள் கைது செய்யப்படலாம். ஒரு வேளை நீங்கள் ஒரு முஸ்லீமாக தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருந்திருந்தால், அரசியலமைப்பு சட்டமெல்லாம் பொருளற்றதாகி, சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைத்து உங்களை சிறையில் தள்ளலாம்.

எத்தகைய குற்றம் என்பது பொருத்தமற்றது. நீங்களே பாதிக்கப்பட்டவராகக் கூட இருக்கலாம். நீங்கள் குற்றமற்றவராகக்கூட இருக்கலாம். ஆனால் அது ஒரு பொருட்டல்ல. இதுதான் இந்திய முஸ்லீம்களைப் பொறுத்தவரை தொடர்ந்து அதிகரித்து வரும் உண்மை.

மேடை நகைச்சுவையாளர் முனாவர் ஃபரூக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். குற்றமே செய்யாமல் 23 நாட்களாக சிறையில் இருக்கிறார். இந்தூரில் அவரது நிகழ்ச்சியில் இந்து கடவுள்களைப் பற்றி நகைச்சுவை “கூறப்போகிறார்” என்று கூறி, இந்து பாதுகாப்பு சங்கத்தினர் அதனை சீர்குலைத்தனர். குண்டர்களை கைது செய்வதற்குப் பதிலாக காவல்துறை கண்காணிப்பாளர் “எச்சரிக்கையாகவும், விழிப்புடனும்” இருந்ததற்காக அவர்களை பாராட்டி விட்டு ஃபரூக்கியைக் கைது செய்தார்.

உத்தர பிரதேசத்தின் குலோதி நகரில் பஜ்ரங் தள் குண்டர்களால் அச்சுறுத்தப்பட்ட ஏழை காலணி வியாபாரி நசீரை எடுத்துக் கொள்வோம். “தாக்கூர்” என்று முத்திரை குத்தப்பட்ட காலணிகளை விற்பனை செய்தாராம். அது முதலமைச்சரின் சாதிப் பெயரும் அவர்களது உயர்சாதி இந்து உணர்வுகளை புண்படுத்தியதும் ஆகுமாம். அவர்கள் கைது செய்யப்படவில்லை, ஆனால் நசீர் கைது செய்யப்பட்டார். ஆனால் நல்வாய்ப்பாக அவர் இரண்டு நாளில் விடுவிக்கப்பட்டு விட்டார். “பகைமையைத் தூண்டியதற்காக” அவர் மீது போடப்பட்ட வழக்குத் தொடர்ந்து நடக்கிறது..

கெடுவாய்ப்பு பிடித்த பிஜ்னோரைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞரை நினைத்துப் பாருங்கள். அவரது இந்து நண்பர் வீட்டுக்குச் செல்லும் போது உடன் சென்றதற்காக ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். தற்போது 42 நாட்களாக சிறையில் இருக்கிறார். அவருடைய பிணை மனு மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. பிணையில் விடுவிப்பதற்கான அடிப்படை இல்லை என்கிறார் நீதிபதி. மத மாற்றம் என்ற வெற்று காரணத்தை பயன்படுத்தி வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே திருமணத்தை தடை செய்யும், அத்தகைய காதலை குற்றச் செயலாக்கும் உத்தர பிரதேச அரசின் புதிய சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தத்தளிக்கும் அரசுக் கட்டமைப்பு

மோடி ஆட்சியின் கீழ் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி மெதுவாக சிதைவடைந்து வருவது குறித்து கட்டுக்கட்டாக எழுதியாயிற்று. இந்தியாவில் சட்டத்தின் பிடிப்பும், நிர்வாகமும் எப்போதுமே பலவீனமானவை என்பதில் சந்தேகமில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லான்ட் ப்ரிச்செட், “இந்திய அரசு தோல்வியுற்றது அல்ல, தத்தளிப்பது” என்று கூறியிருந்தார். ஆனால் சட்டமும் நிர்வாகமும் வெளிப்படையாக புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக ஒரு நிறுவன ரீதியான, சமூக ஒத்த கருத்து இருந்தது.

அந்தக் கட்டமைப்பை சிதைப்பதில் நிறுவனங்கள் செயல்துடிப்பாக பங்கேற்பதால் இன்று அந்த ஒத்தக் கருத்து சிதைந்து வருகிறது. யாராவது மோடியையோ, பாஜகவையோ விமர்சனம் செய்தால் கூட துன்புறுத்தலுக்கு ஆளாகித் தண்டிக்கப்படும் அளவுக்கு அரசியலமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும் புறக்கணிப்பது தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

முஸ்லீம்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு, சட்டத்தின் ஆட்சி பொதுவாக உதிர்ந்து போய்க் கொண்டிருப்பதன் மூலம் பலரும் விளக்கம் அளிக்கின்றனர். ஆனால், மேற்சொன்ன விளக்கத்தின்படி, ஒவ்வொரு எதிர்ப்பாளரும் இலக்குதான். அதுதான் உண்மையும் கூட. இருப்பினும், முஸ்லீம்கள் மட்டுமே குறி வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்தாலும் நம்மில் மிகச்சிலரே அதை ஒத்துக் கொள்கிறோம்.

Image Credit : scroll.in
உத்தர பிரதேசம் ஹாப்பூரில் பசுவை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரை போலீசின் முன்னிலையில் அடித்து இழுத்துச் செல்லும் கும்பல் (2018) – Image Credit : scroll.in

முஸ்லீம்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதை இந்துத்துவா சமூகச் சூழல் ஒத்துக் கொள்வதில்லை. அதன் எதிர்வினைகள் மிகவும் சிறுபிள்ளைத்தனமானவை. ஏனெனில் அது பாதுகாப்பின்மை, தர்க்கமின்மை, வெறுப்பு ஆகியவற்றில் வேரூன்றி உள்ளது: படையெடுப்பாளர்கள் இந்துக்களை ஒடுக்கியதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? காஷ்மீர் பண்டிட்களை நடத்திய விதத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி என்ன சொல்கிறீர்கள்? இவையெல்லாம் எடுபடா விட்டால், பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள் என்கிறார்கள்.

இந்து சமூகம் தீவிரமயமாக்கப்படுவது இரண்டு மட்டங்களில் தெளிவாக தெரிகிறது. முதலாவதாக குடும்பங்களுக்குள்ளேயும், தனிப்பட்ட பேச்சுக்களிலும் வெளிப்படுவது. இரண்டாவதாக, இந்தியாவை ஆளும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், பிற அதிகார வர்க்கத்தினரின் அறிவிப்புகளில், இஸ்லாமிய வெறுப்பை அதிகாரபூர்வமாக்குவதில் அது பிரதிபலிக்கிறது.

வாட்ஸ்அப் அறிவை இயல்பானதாக்குவது

எல்லோருமே தீவிரமயமாக்கப்படுவதில்லை. உண்மையில், பெரும்பான்மையினர் அவ்வாறு செய்யப்படுவதில்லை என நான் வாதிடுவேன். இந்து சமூகம் சிக்கலானது, மோடி பல சாதிகளையும், பிரிவுகளையும் ஒன்றிணைத்திருந்தாலும், அந்த ஒன்றிணைப்பு நீடிக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. தற்போது, மதவெறியை நியாயப்படுத்துபவர்களின் செயல்பாடுகளும் இஸ்லாமிய வெறுப்பை சரி என்று சொல்பவர்களின் செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. அவை இந்தியாவின் பொது விவாதங்களில் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தை பெறுகின்றன.

இந்த இந்து பெருந்திரள் தீவிரமயமாக்கலின் காரணமாகவே, நிர்வாகப் பேரழிவுகளையும், எதேச்சதிகார நடவடிக்கைகளையும், வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியையும் மீறி மோடியின் பிரபலம் நீடிக்கிறது . பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்குப் பின்னர் தங்கள் புகழ்பெற்ற பண்டைய பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பொற்காலம் கிடைத்துள்ளது எனவும் சலுகை காட்டப்பட்டு வந்த முஸ்லீம்களுக்கு அவர்களுடைய இடம் எது என்று காண்பிக்கப்படுவதாகவும் இந்துக்கள் நம்பும் வரை மோடியின் ஆதிக்கம் நீடித்து இருக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை தருவதும், உத்தர பிரதேச அரசு ஒரு வங்கிக் கணக்கைத் துவங்கி, அதன் ஊழியர்களை “தாமாக முன்வந்து” ராமர் கோவில் கட்ட நன்கொடை அளிக்குமாறு வற்புறுத்துவதும் இயல்பானவை எண்ணும் அளவுக்கு வாட்ஸ்அப் அறிவு ஆழமாக பதிந்துள்ளது.

அரசாங்கம், நீதித்துறை, கும்பல்கள், ஊடகங்கள் ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம் தீவிரமயமாக்கல் வளர்ந்து வருகிறது.

படுகொலை செய்தல், அடித்தல், கொலை செய்தல் என்ற விளிம்புகளில் துவங்கிய வெறுப்புக் குற்றங்களின் துளிகள் இப்போது வெள்ளமாகப் பாய்ந்தோடுகிறது. அவை தலைப்புச் செய்திகளிலிருந்து மெல்ல நழுவி அடிக் குறிப்பாக மாறி விட்டன. இந்துக்களின் மோசமான உணர்வுகளை தட்டி எழுப்புகிறது. பெரும்பாலான குற்றவாளிகள் பாஜக அமைச்சர்களின் உதவியுடன் சட்டத்திலிருந்து தப்பி விடுகின்றனர். வெறுப்பு இயல்பாக்கப்படுவது ஒப்புதலுடன் நடைபெறுவதை இது குறிக்கிறது.

இந்து ஆண்கள் ஒரு போதும் செய்யாத வகையில் தங்கள் மனைவிகளை கைவிட்டுவிடும் முஸ்லீம் ஆண்களை கிரிமினல்கள் ஆக்கும் வகையில் முஸ்லீம் விவாகரத்து சட்டங்களைத் திருத்தி இஸ்லாமிய வெறுப்பு உணர்வுகளை அரசு தூண்டி விட்டது. பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையிலான காதல் தொடர்பானதும் உணவுப் பழக்கம் தொடர்பானதுமான புதிய சட்டங்களும் அவற்றுக்கான விளக்கங்களும் நீதிமன்றங்களால் அனுமதிக்கப்படுகின்றன, காவல் துறையால் ஆவலோடு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

Image Credit : scroll.in
அயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் நரேந்திர மோடி – Image Credit : scroll.in

இன்று, உத்தர்காண்ட், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் அரசுகள், இந்துக்களுடன் காதல் கொண்டதற்காகவே முஸ்லீம்களை கைது செய்யலாம். பிற பாஜக ஆளும் மாநிலங்களும் இதனை அமல்படுத்த உள்ளன. பசுவதை தடுப்புச் சட்டங்கள் குறித்து சுதந்திரம் பெற்றதிலிருந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களிலும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மிகவும் கொடூரமாக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டங்கள் குறைந்தது பத்து மாநிலங்களில் இந்து ‘கும்பல் நீதியின்’ பாத்திரத்தை நிறுவனமயமாக்கியுள்ளன. சமீபத்தில் பசுவதை சட்டத்தை மேலும் கடுமையாக்கிய கர்நாடகாவில் யார் வேண்டுமானாலும் ‘கும்பல் நீதியாளராக’ இருக்க முடியும். ஒரு கால்நடை மருத்துவர் வெறும் சந்தேகத்தின் பேரிலேயே ஒரு வீட்டை சோதனையிட்டு, அங்குள்ள கருவிகளையோ, மாடுகளையோ கைப்பற்றலாம்.

இந்து மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது, முஸ்லீம்களின் பொருளாதார வாய்ப்புகளை மட்டுப்படுத்துவது, இதுதான் இனி புதிய நிலைமை என்ற செய்தியை முஸ்லீம்களுக்கு தருவது, ஆகியவை இந்த புதிய சட்டங்களின் நோக்கங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒன்று நீங்கள் அப்பாவியாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு உடந்தையாக இருக்க வேண்டும். இது போன்ற சட்டங்கள் மீதான விமர்சனங்கள் மிகவும் மென்மையானதாக, அமைதியானதாக அல்லது இல்லாமலே கூட இருக்கின்றன. இந்து தீவிரமயமாக்கலுக்கு எதிர்கட்சிகளின் பதில், எதிர்ப்பு அல்ல மாறாக “மென்மையான” இந்துத்துவா என்று அழைக்கப்படும் வடிவத்தில் அதனை தழுவிக் கொள்வதாக உள்ளது.

உண்மையில் பெருந்திரள் தீவிரமயமாக்கல் என்பது இந்தியாவிற்கு மட்டுமே உரிய தனித்துவமான நிகழ்வு அல்ல. உண்மையைத் தாண்டிய, இனக்குழுவாக்கப்பட்ட, மின்னணு மயமாக்கப்பட்ட புதிய உலகத்தை அடையாளப்படுத்தும் தன்மையாக இது உள்ளது. இதை பயன்படுத்தி டொனால்ட் டிரம்ப் 7 கோடி மக்களை தனக்கு வாக்களிக்கச் செய்தார், இராணுவத்தையும் போலீசையும் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சிலரை அரசின் அதிகார அமைப்பை தாக்கும்படி தூண்டினார். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் சமூகம் தீவிரமயமாக்கப்படுவதிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டன. இப்போதைக்கு ட்ரம்ப் போய் விட்டார்‌.

இரத்த நாளங்களில் ஆழமாக

இந்தியாவில் பெரும்பான்மையின் தீவிரமயமாக்கல், அதன் நிறுவனங்களின் இரத்த நாளங்களில் ஊடுருவியுள்ளது என்ற விதத்தில் அது அமெரிக்காவிலிருந்து வேறுபட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்து கும்பல்நீதியினரின் கருத்தாகவும், முழக்கமாகவும் இருந்தவற்றையே இன்று நிர்வாகத்துறையினரும், நீதித்துறையினரும், அரசியல்வாதிகளும் எதிரொலிக்கின்றனர். இந்து தீவிரமயமாக்கல் வளர்ந்து வருவதும், நேற்றைய அட்டூழியங்கள் இன்றைக்கு இயல்பானவையாகவும் இருப்பதால் இந்திய முஸ்லீம்கள் தங்கள் வாழ்வு முன்பு எப்போதும் இருந்ததை விடவும் கடினமாகி விடுவதை காண்பார்கள்.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, புதிய இந்தியாவில் மிகவும் கவலைக்குரிய வகையில் உருவாகி வளர்ந்து வரும் இந்து ராஷ்டிரம் என்ற பொதுவாகிவிட்ட வேதனையைக் காட்டும் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்: தனது இந்து பெண் தோழியுடன் நடந்து செல்லும் ஒரு அப்பாவி முஸ்லீம் இளைஞனை காவி உடை உடுத்திய ஒரு இந்து பூசாரி, அவரை அறைந்து, திட்டி, எட்டி உதைக்கிறார்.

அடிகள் அதிகமாகும் போது பார்வையாளர்கள் அந்த இளைஞன் ஒரு இதய நோயாளி என்பதால் தாக்குதலை நிறுத்துமாறு பூசாரியிடம் கூறுகிறார்கள். இத்தகைய வன்முறையில் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்ட பிற பார்வையாளர்களிலிருந்து மாறுபட்ட வகையில் கருணையாளர்கள் இவர்கள்.

தன்னைத் தாக்கியவரின் கால்களைப் பிடித்து அந்த இளைஞன் தன்னை மன்னித்து விடுமாறு மன்றாடுகிறான். “தா***** , ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல் “அம்மாவை**”***, ராமனுக்கு மகிமை என்று சொல்,” எனக் கத்துகிறார் அந்த பூசாரி.

scroll.in இணையதளத்தில் வெளியான சமர் ஹலர்ங்கர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்