Aran Sei

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ராஜசேகர் என்ற அப்புவை (பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்) ஜூன் 11ஆம் தேதி இரவு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவலர்கள், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதே உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

மர்மமான முறையில் உயிரிழந்த ராஜசேகரின் உடலை வாங்க மறுத்த அவரது குடும்பத்தினர், காவல்நிலையத்தில் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். அதற்கு சான்றாக இறந்த பின்பு அவரது தலையிலும் உடம்பிலும் கடுமையாக அடித்துத் தாக்கப்பட்டதற்கான இரத்த காயங்கள் இருப்பதாகவும் கை கால் எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ராஜசேகர் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகவும் அவருக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லையென்றும் காவல்துறையினரின் வாதத்தை மறுத்தனர்.

இஸ்லாமிய விசாரணை கைதி ஜிஷானின் காவல் மரணம்: இயற்கையான முறையில் காவல் மரணங்கள் நிகழ்வதாக பொய்ச் சொல்லும் காவல்துறை

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து காவலர்களை இடைநீக்கம் செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. என்னதான் இந்த காவல் மரண சம்பவத்தில் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுப்பதுபோல் தெரிந்தாலும், கடந்த இரண்டு மாதத்தில் நடந்த மூன்றாவது காவல் நிலைய சித்திரவதை மரணமாக இது உள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் விக்னேஷ், சுரேஷ் என்ற 25 வயது நிரம்பிய பட்டியல் சமூகத்து இளைஞர்களை, வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் இருவரையும் முதலில் நடுரோட்டில் வைத்து அவர்கள் நடக்க முடியாத அளவுக்கு அடித்து, பிறகு காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றும் கடுமையாக அடித்து துன்புறுத்தியதில் விக்னேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சுரேஷ் பலத்த படுகாயம் அடைந்தார்.

விக்னேஷின் உடலில் 13 இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. மேலும் சம்மந்தப்பட்ட காவலர்கள் விக்னேஷின் குடும்பத்தினரை கடுமையாக மிரட்டியும், பணம் கொடுத்தும் இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்தது தெரியவந்தது.

காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்

அதே ஏப்ரல் மாத இறுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்று அடுத்த நாளே அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த விவகாரத்திலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணியை விடுவிக்க காவல்துறையினர் கையூட்டாக லஞ்சம் கேட்டதாகவும், அதை கொடுக்க மறுத்ததன் விளைவாகவே அவர் கடுமையாக தாக்கப்பட்டு  உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் சித்ரவதை மரணம் தமிழகத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கும் சம்பவமாக அமைந்தது. அக்கொடூர காவல் வன்முறையின் தாக்கம் சமூகத்திலும் மக்கள் மத்தியிலும் இன்னும் குறையாமல் இருந்தாலும், தொடர்ச்சியாக எளிய மக்கள் மீது பொது இடங்களிலும் காவல்நிலையத்திலும் காவல்துறையினர் நிகழ்த்தும் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் காவல் சித்திரவதைகளும் அதன் உச்சபட்சமாக காவல் நிலைய மரணங்களும் தொடர்கதையாகியே வருகின்றன.

குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை மட்டும் 10 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக காவல் சித்ரவதைக்கு எதிராக இயங்கிவரும் அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி டிபேன் தகவல் வெளியிட்டுள்ளார். இது ஆட்சிகள் மாறினாலும் யார் புதிதாக ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையின் செயல்பாடுகளில், அதாவது சாதாரண மக்கள் மீது காவல்துறை செலுத்தும் கட்டற்ற வன்முறையில் எந்த மாற்றமும் நிகழாது என்பதைத்தான் உறுதிப்படுத்துவதாகிறது.

தமிழகத்தில் காவல்துறை தொடர்புடைய இரண்டு மரணங்கள் – என்ன செய்கிறார் டிஜிபி சைலேந்திர பாபு?

காவல் மரணங்கள் தொடர்பான சில தரவுகள்:

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கைப்படி,

● இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு முதல் 2020 வரை – கிட்டத்தட்ட 1888 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக குறிப்பிடுகிறது.

● இதில் 893 மரணங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 358 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 26 காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனைப் பெற்றுள்ளனர்.

● தமிழ்நாட்டில் அதே 2000 முதல் 2020 வரையான காலக்கட்டத்தில் – சுமார் 120க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளன. மேலும் கடந்த பத்தாண்டுகளில் அதிக காவல் மரணங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது இடமாக தமிழ்நாடு உள்ளது.

● ஆனால் இன்றுவரை ஒரு காவலர்கூட குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறவில்லை. விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட பெண் விசாரணை கைதிகளை காவல்நிலையத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வுகள்கூட அரங்கேறியிருந்தாலும் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. மிகவும் சொற்ப அளவில்தான் காவல் மரணங்களில் காவலர்கள் மீது குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் 157 காவல் நிலைய மரணங்கள் – குஜராத் அரசு தகவல்

மேலே குறிப்பிட்ட தரவுகள் யாவும் மனித உரிமைகள் அமைப்புகள், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களின் விளைவாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட காவல் மரணங்கள் தொடர்பானவை மட்டுமே. வெளிச்சத்துக்கு வராத எண்ணற்ற அப்பாவி மக்களின் அழுகுரல்களும் துன்புறுத்தல்களும் வலிகளின் ஓலங்களும் இன்னும் வெளிவராமல் இருக்கின்றன.

உதாரணமாக நேசனல் கேம்பயன் அகென்ஸ்ட் டார்ச்சர் (NCAT) என்ற அமைப்பு நடத்திய ஆய்வொன்றில் 2019 ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் தினசரி சராசரியாக 5 காவல் மரணங்கள் நடந்ததாக குறிப்பிடுகிறது. NCAT ஆல் ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள், இந்தியாவில் குற்றவியல் புள்ளிவிவரங்களில் காட்டப்பட்டுள்ளதை விட நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறுகின்றன. அவை நாட்டில் 20 வருட காலப்பகுதியில் நிகழ்ந்ததாக கூறும் அரசின் குற்றவியல் தரவுகளைவிட அதிக மரணங்கள் 2019 என்ற ஒரு ஆண்டில் மட்டும் நடந்திருப்பதாக அதன் அறிக்கை தெரிவிக்கிறது.

உ.பி: ‘கலவரத்தில் ஈடுபட்டதற்கான பரிசு’ என்று குறிப்பிட்டு இஸ்லாமியர்களை காவல்துறையினர் தாக்கும் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த பாஜக எம்.எல்.ஏ

அதிகரிக்கும் காவல் மரணங்களுக்கான காரணங்கள் என்ன? :

இத்தகைய காவல்நிலைய மரணங்கள் பெரும்பாலும், ஒரு நபர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதற்கும் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுத்தப்படுவதற்கும் இடையிலான இடைப்பட்ட காலத்தில்தான் நிகழ்கின்றன. பொதுவாக விசாரணைக்காக கைதாகி காவல்நிலையம் அழைத்துவரும் நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என விதியிருந்தாலும் அவை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதே இல்லை.

மேலும் “ஒருவரை எதற்காகக் கைது செய்கிறோம், எங்கே கொண்டு செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். எந்த நேரத்தில் கைது நடந்தது என்பதைக் குறிப்பிட்டு மெமோ கொடுக்க வேண்டும். கைது நடக்கும் இடத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையெழுத்து பெறவேண்டும்” என்று கொடூரமான காவல் சித்திரவதை மற்றும் காவல் மரணங்களுக்கு எதிரான டீ.கே.பாசு வழக்கில் 1997 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 11 வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இவற்றில் எது தவறினாலும் அந்த காவல் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடியும். ஆனால் காவல்துறையினர் சட்டரீதியான இப்பரிந்துரைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு எதையுமே கடைப்பிடிக்காமல் இருப்பதாகவே அன்றாட நிகழ்வுகளும் அதிகரித்துவரும் காவல்நிலைய சித்ரவதை மரணங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

மேலும் காவல்துறை வன்முறைக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படும் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக (சாதி-வர்க்க) நிலையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 1996 முதல் 2018 வரை ஏற்பட்ட காவல் மரணங்களில் 71.58% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அடித்தட்டு விளிம்புநிலை மக்கள்.

சென்னை: நகை திருட்டு வழக்கில் விசாரணைக் கைதி லாக்கப் மரணம் – காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் நடந்த 10 காவல் மரணங்களில் 6 பேர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் இஸ்லாமியர். ஆக காவல்துறை வன்முறைக்கும் சித்ரவதைக்கும் உள்ளாகி காவலில் இறப்பவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் ஏழை அடித்தட்டு பிரிவைச் சார்ந்த பட்டியல் சாதியினராகவும் பட்டியல் பழங்குடியினராகவும் இஸ்லாமிய மதச்சிறுபான்மையினராகவுமே இருப்பது தற்செயலாக நடப்பது கிடையாது.

சமூகத்தால் அனைத்து வகையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மிகவும் புறக்கணிப்பட்ட மக்களான இவர்கள்மீது அரசின் அனுமதியுடன் காவல்துறை செலுத்தும் கட்டமைப்பு ரீதியான முறையான நிறுவன மயமாக்கப்பட்ட வன்முறையின் வெளிப்பாடாகவே இக்காவல் சித்திரவதை மரணங்களை அணுகமுடியும்.

பொதுவாக விசாரணைக்காக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்படும் கைதிகளை விசாரிக்கும் பொருட்டு, காவல்துறை உபயோகிக்கும் முதல் கருவியாகவும் எழுதப்படாத உலகளாவிய உத்தியாகவும் வன்முறையும் தரக்குறைவான கடுஞ்சொற்களுமே இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. காவல்நிலையத்தில் சட்டத்தை அமல்படுத்துவதாக கூறப்படும் காவல்துறைக்கும் சட்டத்தை மீறி குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் சாமானியர்க்கும் இடையிலான முதல் தொடர்பே “வன்முறை என்னும் மொழியாக” இருப்பதே காவல் சித்ரவதை மரணங்கள் நடப்பதற்கான தொடக்கப்புள்ளியாக அமைகிறது.

காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு – மே பதினேழு இயக்கம் வலியுறுத்தல்

இதற்கு காவல்துறையினர் மத்தியில் அவர்கள் மக்களுக்கு ஊழியம் செய்யவே பணி செய்கிறோம் என்கிற சிந்தனைமுறை கற்பிக்கப்படாமல், அவர்களுக்கு சமூக ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க சமூகத்தை கட்டுப்படுத்துவதே காவல்துறையின் தலையாய கடமை ஏன கற்பிக்கப்படுவதும், மேலும் அவர்களுக்குள் தாங்கள் மக்களைவிட மேலானவர்கள், தம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற ஆதிக்க மனநிலை உளவியல் ரீதியாக ஊடுருவி இருப்பதும், நடைமுறை யதார்த்தத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் சமூக அந்தஸ்தும் இத்தகைய வன்முறையை அவர்கள் பிரயோகிக்க அடிப்படை மைய காரணமாக அமைகிறது.

மேலும் காவல்துறையை மட்டும் இத்தகைய கொடூரங்களுக்கு பொறுப்பாக்கி விடுவது மற்ற அதிகார வர்க்கங்களுக்கு இதில் இருக்கும் பங்கை குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும். ஏனெனில் இவ்வன்முறையை நேரடியாக நிகழ்த்துவது காவல்துறையாக இருப்பினும், இதை அவர்கள் தனித்தே நிகழ்த்துவதில்லை. அவர்களுடன் அரசு, நீதித்துறை, அரசியல் வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம், ஆதிக்கச் சாதிகளின் பிரதிநிதிகள், உள்ளூர் ஆதிக்க சக்திகள் என மிகப்பெரியளவில் பரந்துபட்ட ஆளும் வர்க்க கூட்டு(nexus) இதில் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதிகார வர்க்கமும் ஒன்றுசேர்ந்து கைக்கோர்த்து நிற்பதன் வாயிலாகவே, எளிய மக்கள் மீதான காவல் லாக்அப் வன்முறைகளும் பொதுமக்கள் மீதான மோசமான அடக்குமுறைகளும் தொடர்ந்து சாத்தியப்படுகின்றன.

காவல்துறையின் சட்டவிரோதமான பொறுப்பற்ற தன்மை மற்றும் அதிகார வர்க்கத்தின் பலமான கூட்டு என இவையாவும் ஒருபுறமிருக்க, காவல்நிலைய சித்ரவதையால் பலியானவர்களுக்கு, இறந்த பின்பும் நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதைத்தான் தரவுகளில் முன்பு பார்த்தோம்.

‘பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்’ – உயர் நீதிமன்ற மதுரை கிளை

நிகழ்த்தப்படும் போலீஸ் காவல் மரணங்களில் பாதிக்கும் மேல் தற்கொலை அல்லது உடல்நலக்குறைவால் ஏற்பட்ட இயற்கை மரணம் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தை மிரட்டியும் சம்பவத்தை மூடிமறைக்க பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பணம் கொடுத்தும் முடித்துவைக்கப்படுவதாக NCAT ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மீதிபாதி மரணங்களிலும் பெரும்பாலும் சந்தேக மரணம் என்றுதான் முதலில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. பின்பு மக்கள் போராட்டம், மனித உரிமை அமைப்புகள், அரசியல் இயக்கங்களின் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக மிக மிகச் சொற்பமான எண்ணிக்கையில்தான் கொலை வழக்காக பதிவு செய்யப்படுகிறது.

மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படுகிறது (அதிலும் தமிழ்நாட்டில் இதுவரை ஒருவர்கூட அவ்வாறு தண்டிக்கப்படவில்லை என நினைவுகூர்க). மற்ற பதியப்படும் பெரும்பாலான வழக்குகளில், காவல் சித்ரவதை மரணத்தில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட காவலர்கள் குற்றவியல் தண்டனையிலிருந்து பெரும்பாலும் தப்பித்துக்கொள்கின்றனர். துறைரீதியாக அவர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனையாக ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் வேறு பிரிவுக்கு பணிமாற்றம் பெறுவது அல்லது இடைநீக்கம் அல்லது காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் என்றளவிலேயே நின்றுவிடுகிறது.

அவையும் பெரும்பாலும் காவலர்கள் (Constable), தலைமைக் காவலர்கள் (Head Constable), ஊர் காவல்படையினர் என அதிகாரம் குறைந்த மிகவும் கீழ்மட்ட காவலர்கள் மீதுதான் வழக்குப்பதிவோ ஒழுங்கு நடவடிக்கையோ பாய்கிறது. எப்போதாவது தான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீதும் (S.I), ஆய்வாளர் (Inspector) மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதைத்தாண்டி காவல்துறை உயர்மட்ட அளவிலும் சரி, சித்ரவதை மரணத்தில் துணைபோயிருக்கும் பட்சத்தில் அரசு மருத்துவர், சிறைத்துறை அதிகாரி, மாவட்ட குற்றவியல் நடுவர் (Magistrate) ஆகியோருக்கு எதிராகவும் சரி, அமைப்பும் நீதி பரிபாலன முறையும் எப்போதும் செல்லவே மறுக்கிறது.

கடந்த ஐந்து மாதங்களில் 1,067 பேர் காவலில் மரணமடைந்துள்ளனர் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல்

இன்னும் சொல்லப்போனால் அதிகார மையத்தில் பங்கு வகிக்கும் இவர்களை பாதுகாக்கவே அரசாங்கமும் அமைப்பும் முயல்கிறது. நடவடிக்கைக்கு உள்ளான சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் தங்களது அரசியல் தொடர்புகள், சாதி பின்புலம் ஆகியற்றைக் கொண்டு சிறிது காலத்தில் மீண்டும் அதே பணிக்கு திரும்பிவிடுகின்றனர்.

கொடூரமான குற்றத்தை செய்திருந்தாலும் எளிதாக தப்பிவிடலாம் என்கிற இத்தகைய தண்டனையின்மைதான் (Impunity) அவர்களை மேலும் மேலும் எளிய மக்கள் மீது வன்முறையை செலுத்த தூண்டுவதாக அமைகிறது. இவ்வாறாக ஒட்டுமொத்த அமைப்பும் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு தம்மை தாமே சரிசெய்துகொண்டே, வன்முறைக்கு உள்ளாகும் சாமானியர்களுக்கு எதிராகவே என்றும் நீடிக்கிறது.

காவல் மரணங்களில் பொதுச் சமூகம் மற்றும் ஊடகங்களின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. உதாரணத்திற்கு ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் வன்முறை வழக்கை எடுத்துக்கொண்டால், அவர்கள் இருவரும் கோவிட் விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பது போக, வேறெந்த சட்டத்துக்கு புறம்பான குற்றத்திலும் ஈடுபடவில்லை என்கிற கோணத்தில்தான் பொதுச் சமூகத்தின் கூட்டு மனசாட்சியும் ஊடகங்களின் வெளிச்சமும் முழுமையாக குவிக்கப்பட்டு அக்கொடூர சம்பவத்துக்கு எதிரான பார்வையை ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் விதைத்து அனைவரையும் ஓரணியில் திரட்டி நாட்டையே உலுக்கியது.

ஒருவேளை அவர்கள் ‘அப்பாவிகளாக’ இல்லாமல், ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அந்தளவிற்கு பொதுச் சமூகம் மற்றும் ஊடகங்களின் நிபந்தனையற்ற ஆதரவு அவர்களுக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்ட காவல் லாக்அப் மரணங்களும் (அரசின் தரவுகளின்படி) எண்ணற்ற மனித உரிமை மீறல்களும் நடக்கும் மாநிலத்தில், எத்தனை முறை அம்மாதிரியான அறச்சீற்றத்தை பொதுச் சமூகத்தின் மத்தியிலிருந்தும் ஊடகங்களின் வாயிலாகவும் தமிழகம் கண்டிருக்கும்?

லாக் அப் மரணங்களில் 70 சதவீதம் விளிம்புநிலை மக்களே – மனித உரிமை அமைப்பு

காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் ஒருவர் மிக மோசமான குற்றமே செய்திருந்தாலும், சட்டத்துக்கு புறம்பாக அவரை அடித்துத் துன்புறுத்தும் போதும், என்கவுண்டர் என்கிற பெயரில் காவல்துறையே கொலையை தண்டனையாக வழங்கும்போதும், சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களின் கைகால்களை உடைத்து கழிவறையில் வழுக்கி விழுந்ததாக மாவுக்கட்டு போட்டு அனுப்பும்போதும், இது அப்பட்டமான காவல்துறையின் மனித உரிமை அத்துமீறல்கள் என தெரிந்தும் இவற்றுக்கு எதிராக சிறிதும் குரல் கொடுக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது மட்டுமே பொதுச் சமூகத்தின் வாடிக்கையாகிவிட்டது.

ஊடகங்களும் அரசியல் காரணங்களுக்காகவும், இத்தகைய செய்திகளில் ‘நியூஸ் வேல்யூ’ இருக்காது என்கிற வணிக நலன் சார்ந்த காரணத்திற்காகவும் இவற்றைப் பற்றி எந்த கேள்வியும் எழுப்பாமல், எப்போதாவது சமூகத்தில் தாக்கத்தை உண்டாக்கி பேசுபொருளாகும் சம்பவத்திற்கு மட்டும் குரல் கொடுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்புநிலையையே எடுக்கின்றன.

மேலும் இவற்றில் திரைப்படங்கள் ஏற்படுத்தும் கருத்துருவாக்கம் குறித்து விவாதிப்பதும் அவசியமாகிறது. ஒருபுறம் விசாரணை, கர்ணன், ஜெய் பீம் மாதிரியான படங்கள் காவல்நிலைய வன்முறை குறித்த உண்மைக்கு நெருக்கமான உரையாடல்களை மேற்கொண்டாலும், மறுபுறம் உச்சபட்ச நட்சத்திரங்களின் நடிப்பில் விக்ரம், பீஸ்ட், வலிமை, தர்பார் போன்ற படங்கள் வெளியாகி மீண்டும் மீண்டும் காவல்துறையினர் (/அரச உளவாளிகள்) சாமானியர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையை சர்வசாதாரணமாக்குவதோடு மட்டுமின்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கொஞ்சமும் பொறுப்போ குற்றவுணர்வோ கொள்ளாமல், காவல்துறையின் வீரதீர செயல்கள் என அவற்றை நியாயப்படுத்தும் நோக்குடன் புகழ்வதும் காவல் வன்முறையைக் கொண்டாடுவதும் மிகவும் ஆபத்தான போக்காகும்.

சாத்தான்குளம் கொலை வழக்கு: ‘என்னை தவிர மற்ற 8 பேருமே கொலை செய்தனர்’ – நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம்

மேலும் உன்னிப்பாக கவனித்தால், எப்போதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் மோசமான சம்பவம் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அந்த அவப்பெயரை சரிசெய்யும் பொருட்டு, காவல்துறையினர் பொதுமக்களுக்கு செய்த உதவிகள், நற்செயல்கள் என பல ட்ரெண்ட்ங் செய்திகள் அடுத்தடுத்து வரிசை கட்டி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி பழைய அவல சம்பவத்தை இருட்டடிப்புச் செய்து மக்கள் மத்தியில் இழந்த பெயரை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும். இதில் பிரதான வெகுஜன ஊடகங்கள் மக்கள் மனதில் செய்யும் கருத்துருவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

காவல்நிலைய வன்முறையை கட்டுப்படுத்துவது எப்படி?

காவல் சித்ரவதை மரணங்களையும் துன்புறுத்தல்களையும் மட்டுமல்லாது பொதுவாக காவல்துறை மக்கள் மீது செலுத்தும் வன்முறையை குறைக்க, காவல்துறை என்ற கட்டமைப்பில் அமைப்பு ரீதியாகவே முழுமையான மாற்றமும் சீர்திருத்தமும் ஏற்படுத்துவது இன்றியமையாதது. அதன் ஆரம்பப் புள்ளி 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிற்போக்கான பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட “குற்றவியல் நீதி அமைப்புமுறை (Criminal Justice System)”யை இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றார்போல மனித மாண்புகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் மாற்றியமைத்து ஜனநாயகமயப்படுத்துவதில் இருந்து காவல்துறை சீர்திருத்தம் தொடங்கப்பட வேண்டும்.

1860 இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களின் ஏகாதிபத்திய நலன்களுக்காகவும் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் கொண்டுவரப்பட்ட காலனிய அமைப்பு முறையை, அப்படியே சுதந்திரத்திற்கு பிறகான இந்திய ஆட்சியாளர்கள் இரவல் வாங்கி அதை இன்றளவும் நவீன இந்தியாவில் கடைப்பிடித்துக்கொண்டிருப்பது எத்தகைய மேசமான அவலநிலை என்பதை ஆட்சியாளர்களும் நீதிமன்றமும் உணரவேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் ஒரு சாத்தான்குளம் நிகழ்வா? – மணிகண்டனுக்கு நடந்தது என்ன?

இதன் பொருட்டே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட கருப்பு சட்டங்களான தேசத் துரோக சட்டங்கள் இன்றளவில் நடைமுறையில் இருந்து கொண்டு (கடந்த மே மாதம்தான் உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது) மாற்றுக்கருத்து உடையவர்களின் குரல்வளையை நசுக்கிக்கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரத்தை கணிசமாக குறைத்து, பொதுமக்களுக்கான அவர்களின் பொறுப்புக்கூறலை (accountability) அதிகரிக்கவேண்டும்.

இந்தியச் சட்ட ஆணையம் 2017 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் வழிகாட்டுதலின் பேரில், காவல் சித்ரவதை தடுப்பு மசோதா (Prevention of Custodial Torture bill) என்ற பரிந்துரை அறிக்கையை வெளியிட்டு, இதை நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றத்திலும் தாக்கல் செய்து, காவல் மரணங்களுக்கு எதிராக உறுதியான சட்டம் இயற்ற ஒன்றிய அரசையும் ஒவ்வொரு மாநில் அரசுகளையும் கேட்டுக்கொண்டது.

80 பக்க அறிக்கைக்கொண்ட அதில் பல்வேறு சிறப்பான பரிந்துரைகளை முன்வைத்தது. உதாரணத்திற்கு ஒரு நபர் காவல்துறையின் காவலிலிருந்த காலக்கட்டத்தில் மரணம் அல்லது படுகாயம் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் இருந்தால், அந்தக் காலகட்டத்தில் அந்த நபரின் காவலிலிருந்த காவல்துறை அதிகாரியால்தான் மரணம் அல்லது காயம் ஏற்பட்டது என்று நீதிமன்றம் ஊகிக்கலாம்.

சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பிணை மறுத்த நீதிமன்றம்

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு பற்றி குறிப்பிடுகையில், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் மன வேதனை உட்பட, தனிப்பட்ட வழக்கின் தன்மை, நோக்கம் மற்றும் காயத்தின் விதம் போன்ற பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு நீதிமன்றங்கள் “நியாயமான இழப்பீடு” குறித்து முடிவு செய்யவேண்டும். மேலும் சித்ரவதைக்கு உள்ளானவரின் சமூக பொருளாதார நிலையை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வழிசெய்யவேண்டும் என்கிறது.

காவல்நிலையத்தில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, காயங்கள் இருப்பின் அது கொலை வழக்காகப் பதிவு செய்யப்படவேண்டும் என்றும், காவல் சித்ரவதையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கவும் பரிந்துரைக்கிறது.

மேலும் பாதிக்கப்பட்டவர் பட்டியல் சாதி/ பழங்குடியின வகுப்பை சேர்ந்தவராக இருப்பின் கொலை வழக்குடன் சேர்த்து எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் 5 வருடங்கள் ஆன பின்பும் இந்த அறிக்கை சட்டமாக நாடாளுமன்றத்திலும் மற்றும் தமிழகம் உட்பட எந்த மாநில சட்டமன்றத்திலும் தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பாக மக்களவையில் ஒருமுறை பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் “மேற்கத்திய மனித உரிமைகள் இந்தியாவிற்குப் பொருந்தாது என்றும், எனவே இந்த காவல் சித்ரவதைக்கு எதிரான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு மசோதாவாக தாக்கல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

சாத்தான்குளம் படுகொலையின் ஓராண்டு நினைவு – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் அறிக்கை

இதுதவிர நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல்களை சரிபார்க்க அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2020ஆம் ஆண்டே தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக காவலர்களின் தனிப்பட்ட அறையைத் தவிர, விசாரணை கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம் உட்பட காவல்நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், விசாரிக்கும் அறையிலும் கேமராக்கள் இருக்கவேண்டும், இரவு நேரமும் செயல்படும் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டும் அடங்கிய கேமராக்கள் மட்டுமே நிறுவவேண்டும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஓராண்டு வரை சேமிக்க வேண்டும் என 10 முக்கிய வழிகாட்டுதல் இடம்பெற்றன.

ஆனால் பெரும்பாலான காவல் நிலையங்களில் இன்னும் ஒரு சிசிடிவி கேமரா கூட நிறுவப்படவில்லை மற்றும் செயல்படவில்லை. ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் வாயிலாக தெருக்களிலும் பொது இடங்களிலும் மக்களைக் கண்காணிக்கும் அதே வேளையில், தங்களைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவைப் பின்பற்ற காவல்துறையினர் தயங்குகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், காவல்நிலைய மரணங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 1967 அறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவை முதல் இன்று ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை வரை காவல்துறையை முதலமைச்சர்களே எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துவந்துள்ளனர். எனவே ஒவ்வொரு காவல் சித்ரவதை மரணங்கள் நிகழும்போதும் அதற்கு தார்மீக பொறுப்பு அத்துறை சார்ந்த மந்திரியான முதலமைச்சரையே சாரும்.

மாணவர் அப்துல் ரஹீமை சித்தரவதை செய்த போலீஸார் – கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றுவதுதான் தண்டனையா?

விக்னேஷ் மரணத்தின் போது சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “தமிழ்நாட்டில் காவல் மரணம் நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோல் எந்த காவல் மரணமும் நடக்காது” என உறுதியளித்தார். ஆனால் அவர் பேசி இரண்டு மாதங்களுக்குள் இரண்டு சித்ரவதை மரணங்கள் நடந்துவிட்டன. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க தமிழக அரசு, முன்பு குறிப்பிட்ட தேசிய சட்ட ஆணையம் பரிந்துரை செய்ததுபோல் “காவல்நிலைய சித்ரவதைக்கு எதிராக பிரத்தியேகமாகச் சிறப்புச் சட்டம் ஒன்றும் இயற்ற வேண்டும்”.

ஜெய் பீம்’ படத்தைப் பார்த்து வருத்தப்பட்டு மிசா காலத்தில் தான் பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பதிவு செய்த முதலமைச்சர், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் இனியும் இதுபோன்ற காவல் நிலைய சித்ரவதை மரணங்கள் நிகழாமல் இருக்கவும், எளிய மக்கள்மீது காவல்துறையினரின் அடக்குமுறை நிகழாத வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இறுதியாக சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்கிறது ஜனநாயகம். அவ்வாறு அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சட்டம் என்று இருக்கும்போது, காவல்துறை மட்டும் எவ்வாறு அச்சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க முடியும்? சட்டங்களை கடுமையாக்குவதன் மூலமும் தண்டனைகளை அதிகப்படுத்துவதன் மூலமும் குற்றங்கள் குறையும் என்பது ஆளும் வர்க்கம் மக்கள் மத்தியில் முன்வைக்கும் கருத்துருவாக்கமாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இது காவல்துறைக்கு மட்டும் ஏன் எப்போதும் பொறுத்தாமல் போகிறது?

கட்டுரையாளர் – நவநீத கண்ணன், மருத்துவ மாணவர்

Agnipath க்கு எதிரா போராடுவரங்க மேல Bulldozer பாயுமா?

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்