Aran Sei

சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை  குழிதோண்டிப்  புதைத்துவிட்டது.

ஹிமான்ஷு குமாரும் மற்றவர்களும், சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பிறருக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிவில் உரிமைகள் தொடர்பான விஷயங்களில் நீதிமன்றத்தை அணுகத் துணியும் மனுதாரர்களை, குறிப்பாக அவர்கள் ஏழைகள் மற்றும்/அல்லது சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக  இருந்தால் அவர்களை குற்றவாளியாக்குவது தொடர்பாக வளர்ந்து வரும் சட்டத்திற்கு மற்றொரு குறிப்பிடத்தக்கச் சேர்ப்பு ஆகும். டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது விதியை-அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான நீதித்துறையின் உரிமையை – ‘அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மா’ என்று விவரித்தாலும், நமது நீதிபதிகள் இது நீதித்துறை நேரத்தை வீணடிப்பதாகக் கருதுவது அதிகரித்து வருகிறது.

இந்த வழக்கு, 2009 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் காவல்துறையால்  நடத்தப்பட்ட பசுமை வேட்டை எனப்படும் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய அத்துமீறல்கள் பற்றியது.  இன்னும் குறிப்பாக, இது இரண்டு நாட்களில் – 2009, செப்டம்பர் 17  ல் கச்சன்பள்ளி மற்றும் சிங்கன்மடுகுவிலும்,  மேலும் 2009, அக்டோபர் 1  அன்று கோம்பாட் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் (பெல்போச்சா, நுல்கடோங், சிந்தகுஃபா)- என்ன நடந்தது என்பது பற்றியது.

மக்களுக்கு வரி விதித்து பணக்காரர்களுக்கு வரியை தள்ளுபடி செய்கிறது ஒன்றிய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

செப்டம்பர் 17 அன்று சிங்கன்மடுகு மற்றும் கச்சன்பள்ளியில் நடந்த மோதல்களில் 24 கிளர்ச்சியாளர்களைக் கொன்றதாகவும், ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை முதலில் பத்திரிகைகளிடம் கூறியது. என்டிடிவியில் காவல்துறையினர் கொடுத்த புள்ளிவிவரம் ஏழு நக்சல் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 50 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியது.  30 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தி இந்துவிடம் காவல்துறை தெரிவித்தது. ஆனால் 2009, செப்டம்பர் 18  காவல்துறை பதிவு செய்த ஆரம்ப முதல் தகவல் அறிக்கை ஒரு மாவோயிஸ்ட்டும், 6 பாதுகாப்புப் பணியாளர்களும் மட்டுமே இறந்ததாக குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு, அக்டோபர் 1 ஆம் தேதி கோம்பாட்டில் நடந்த என்கவுன்டரைப் பற்றிய ஒரு முதல் தகவல் அறிக்கையை 2009, நவம்பர் 25  அன்று காவல்துறையினர் பதிவு செய்தனர்.   ஆனால் அதில் எந்த மரணத்தையும் குறிப்பிடவில்லை.

கிராம மக்கள் காவல்துறையின் கூற்றுகளை அந்த நேரத்தில் பத்திரிகைகளிடமும் –  பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மறுத்தனர். அவர்கள் , செப்டம்பர் 17 ஆம் தேதி கச்சன்பள்ளியில் ஐந்து அப்பாவி கிராம மக்களும், அக்டோபர் 1 ஆம் தேதி கோம்பாட்டில் ஒன்பது கிராம மக்களும்,  இடைப்பட்ட தேதிகளில் 7 பேரும், மேலும்,  செப்டம்பர் 17 அன்று கட்டபாட் மற்றும் பால்சல்மாவைச் சேர்ந்த ஆறு கிராமவாசிகளும் கொல்லப்பட்டதாகத் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர். ஆனால் தி இந்து,  அவர்களின் சடலங்கள் நக்சலைட்டுகளின் சடலங்களாகக் காட்டப்பட்டன  என செய்தி வெளியிட்டுள்ளது. மொத்தத்தில், 2009 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த பகுதியில் குறைந்தது 27 கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.

இதில் 19 மரணங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மேலும் ஹிமான்ஷு குமார் மற்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் 11 பேர் மனு தாக்கல் செய்தனர். 13 வது மனுதாரரான சோடி சம்போ, அக்டோபர் 1-ம் தேதி கோம்பாட்டில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர். ஹிமான்சு குமார், தண்டேவாடாவை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான, வனவாசி சேத்னா ஆசிரமம் மற்றும் மாவட்ட சட்ட உதவிக் குழுவில் ஈடுபட்டிருந்தார். நீதிப் பேராணை (ரிட்) மனுவில், சுதந்திரமான அமைப்பில் புலன் விசாரணைச் செய்யப்பட வேண்டும் என்றும் (முதலில் மத்திய புலனாய்வு குழுவாலும் பின்னர் திருத்தப்பட்டு சிறப்பு புலனாய்வு குழுவாலும் விசாரிக்கப்பட்டது)  மரணங்கள் மற்றும் வீடுகளை எரித்தல் மற்றும் சூறையாடுதல் ஆகியவற்றிற்காக கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அடிப்படையாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

2009, அக்டோபர் 27, அன்று நீதிப் பேராணை  மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு,  2010, ஜனவரி 8 ல் கோம்பாட்டைச் சேர்ந்த சோயம் ராமாவின் பெயரில் ஒன்றும், 2010, பிப்ரவரி 21 ல் கச்சன்பள்ளியைச் சேர்ந்த மாத்வி ஹத்மாவின் பெயரில் மற்றொன்றுமாக மேலும் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறை பதிவு செய்தது. அதில் 2009, அக்டோபர் 1  அன்று கோம்பாட்டில் ஏழு கிராம மக்களும், செப்டம்பர் 17 அன்று கச்சன்பள்ளியில் ஐந்து கிராம மக்களும் இறந்தனர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.  மேலும்  குற்றம் சாட்டப்பட்டவர்கள் ‘தலைமறைவான குற்றம் சாட்டப்பட்ட நக்சலைட்டுகள்’ என்றும் விவரிக்கப்பட்டு, அவர்களில் பலரின் பெயர்களும்  பட்டியலிடப்பட்டிருந்தன..

உச்ச நீதிமன்ற விசாரணைகளின் போது,  துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் அடைந்த மனுதாரர் எண்.13 சோடி சம்போ, மனுதாரர் எண்.1  உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 2010, ஜனவரி 2, அன்று பிற மனித உரிமை ஆர்வலர்களுடன் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு கொன்டா சல்வா ஜூடும் முகாமில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் சம்போவைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தும், அவ்வாறு செய்ய மனுதாரர் எண்.1 மற்றும் அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்ட அடுத்தடுத்த முயற்சிகள் சத்தீஸ்கர் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டன.  இந்த உண்மைகள் அனைத்தும் நீதிமன்றத்தின் முன் பிரமாணப் பத்திரங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டவை.

சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை  குழிதோண்டிப்  புதைத்துவிட்டது.

சம்போ கோண்டாவுக்கு மாற்றப்பட்ட பிறகு, சத்தீஸ்கர் காவல்துறை மற்ற 11 ஆதிவாசி மனுதாரர்களையும் அழைத்துச் சென்றது. 2010, பிப்ரவரி 8, அன்று, ஹிமான்ஷு குமார் இதைப் பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்தபோது, ​​நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தில்லி தீஸ் ஹசாரியில் உள்ள மாவட்ட நீதிபதி முன்பு மனுதாரர்களை வாதாட அனுமதித்து உத்தரவிட்டது. 2010, பிப்ரவரி 15, அன்று, ஆறு மனுதாரர்கள் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதி ஜிபி மிட்டல் முன் ஆஜரானார்கள். அவர்களில் ஒருவர், தான்  ஐந்து நாட்கள்  காவல்துறை காவலில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.  அதே நேரத்தில் சம்போ பயம் மற்றும் பதற்றத்தில் துடிக்கிறார் என்று நீதிபதி குறிப்பிட்டார். இயற்கை நீதியின் அடிப்படை விதிகளை மீறி பல நாட்களாக சத்தீஸ்கர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனுதாரர்கள், ‘படா சாப்’ முன் வாக்குமூலம் அளிக்குமாறு காவல்துறை கூறியதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். அவர்களின் அறிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.  காட்டில் இருந்து வந்த சீருடை அணிந்து ஆயுதமேந்தி வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தங்கள் உறவினர்களின் மரணம் ஏற்பட்டது.  ஆனால் அவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் கூறினர்.

இதற்கிடையில், 2010 ஜனவரி 28 அன்று உள்ளூர் சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை கொடுத்து, விசாரணை செய்து வந்த முதல் தகவல் அறிக்கைகளை மாநில குற்ற புலனாய்வுத் துறையிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள்’  ‘தலைமறைவான நக்சலைட்டுகளாகவே’  காட்டப்பட்டனர். 12 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

டீஸ் ஹசாரி ஆவணங்களின் நகல்கள் 2010 ஆம் ஆண்டிலேயே சத்தீஸ்கர் மாநில அரசுக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும்    வழங்கப்பட்பட்டு,  2017 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலம் இவற்றுக்கு பதிலளித்திருந்த போதிலும்,  இந்திய ஒன்றிய அரசு 2022 இல் திடீரென விழித்துக்கொண்டு,  அவற்றைத் தவறவிட்டுவிட்டதாகவும் மீண்டும் ஒரு நகலை அனுப்பவேண்டும் என்றும் கேட்டது.  விசாரணையின் போது மனுதாரர்கள் கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை என்று கூறியதை மேற்கோள் காட்டி,  ஒன்றிய அரசு அவர்கள் உச்ச நீதிமன்ற மனுவில் கூறியுள்ளபடி இறப்புக்கு பாதுகாப்புப் படையினர்தான் காரணம் கூற்று முற்றிலும்  தரைமட்டமாகிவிட்டது  என வாதிட்டது. ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, மனுதாரர் எண்.1 ஹிமான்ஷு குமார் பொய்யாக இந்தக் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்து, பாதுகாப்புப் படைகளை இழிவுபடுத்துவதற்காக ” பாமர,  படிப்பறிவில்லாத” பழங்குடியினரை பெருமளவு  தவறாக வழிக்காட்டியிருப்பதாகக் “கடுமையாக” வாதிட்டார்.

முல்கி மற்றும் முல்க்: தக்காணத்தில் உரிமைகள் எப்படி படிமமாயின?

2022, ஜூலை 14, தீர்ப்பில்,  நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் பர்திவாலா ஆகியோர்,  முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதைத் தாமதப்படுத்தியது காவல்துறை அல்ல என்ற  வாதத்தையும், மனுதாரர்கள் (2-13) ‘ திட்டமிட்டு நாடகமாடியிருக்கிறார்கள்’ (played truant) என்ற கூற்றுகள் உட்பட காவல்துறையின் பிற வாதங்களையும் முக மதிப்பில் ஏற்றுக்கொண்டனர்.   நுணுக்கமான காவல்துறை விசாரணைக்குப் பிறகு (தீர்ப்பின் பத்திகள் 55-57) மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதால்,  மனுதாரர்கள் தங்கள் சொந்த விசாரணைக்  அமைப்பை – குறிப்பாக மத்திய புலனாய்வு குழுவை – தேர்வு செய்ய முடியாது என்று வாதிடுவதற்கு உச்ச நீதிமன்றம் முன்மாதிரியை மேற்கோள் காட்டியது. 14 கிராமவாசிகள்  நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டனர் என்ற காவல்துறையின் இறுதிக் கூற்றையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

முரண்பாடுகள் குறித்து அமைதி

கொலையாளிகளை காவல்துறையினர் என்று கிராம மக்கள் அடையாளம் காணவில்லை என்றால், அவர்களை நக்சலைட்டுகள் என்றும் அடையாளம் காட்டவில்லை என்பது நீதிமன்றத்திற்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால், முதல் தகவல் அறிக்கை  மற்றும் குற்றப்பத்திரிகையில் எந்த அடிப்படையில் நக்சலைட்கள் எனப் பெயரிடப்பட்ட பலர் தலைமறைவான குற்றவாளிகளாகப் பட்டியலிடப்பட்டனர்? கொலையாளிகள் நக்சலைட்கள்  காவல்துறை சீருடையில் இருந்தனர் என்பதும்,  அவர்கள் பழங்குடியினரை தங்கள் இயக்கத்தில் சேர பயமுறுத்த விரும்பினர் என்பதும் பாதுகாப்பு அமைப்பினரால் பரப்பப்பட்ட கோட்பாடு.  அதையும்  கூட அவர்கள் ஒரு நிறுவப்பட்ட உண்மை என்று கூறவில்லை.   அதற்கு “வாய்ப்பு” இருப்பதாகவும், அதை “மறுக்க முடியாது” என்றும்தான் கூறியிருக்கிறார்கள்.  (தீர்ப்பின் பக்கம் 221/22 இல் மேற்கோள் காட்டப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்துறை அமைச்சகத்தின் திலீப் குமார் கோட்டியா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்). தற்செயலாக   நடைபெற்ற ஒரு ‘என்கவுன்டரில்’ மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது வீடுகள் எரிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறிய மூன்று தனிப்பட்ட விசாரணைகளில், அந்த நேரத்தில் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் யாரும் இல்லை என்பதும், கொல்லப்பட்டவர்கள் சாதாரண கிராமவாசிகள் என்பதும் பின்னர் கண்டறியப்பட்டது (தட்மெட்லா 2011 பற்றிய சிபிஐ அறிக்கை மற்றும் சர்கேகுடா மற்றும் எடெஸ்மெட்டா மீதான நீதிபதி அகர்வால் கமிஷன் விசாரணை அறிக்கை ).தங்கள் உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் வழக்கத்திற்கு மாறான துணிச்சல் காட்டிய கிராமவாசிகள் எப்படி நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை – நீதிபதிகள் ஏற்றுக்கொண்ட அரசின் கணக்கில் – வாசகர்கள் ஆச்சரியப்படலாம். இருப்பினும், எரியும் காடு என்ற எனது புத்தகத்தில் நான் விவரித்தபடி, சத்தீஸ்கர் காவல்துறையின் வரலாற்றில் இத்தகைய வியத்தகு அடையாள மாற்றங்கள் மிகவும் பொதுவானவை. மோதலில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்,   நக்சலைட் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் கொலைகள் பற்றி உறவினர்கள்  கேள்வி எழுப்பினால் (கோம்பேட் மற்றும் கச்சன்பள்ளி வழக்கு போன்றது), பின்னர் தலைமறைவான குற்றம் சாட்டப்பட்ட நக்சலைட்டுகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. நக்சலைட்டுகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிராமவாசிகள், முதல் சந்தர்ப்பத்தில் நக்சலைட்டுகளைக் குறை கூறி உடனடியாக இழப்பீடு பெறமுடியும் போது, ​​ அவர்கள் ஏன் இந்தச் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்பது நீதிபதிகள் கேட்காத கேள்வி.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

கச்சன்பள்ளி மற்றும் கோம்படில் நடந்த மரணங்கள் குறித்து காவல்துறை  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை உறுதி செய்ய ஏன் ஒரு பொதுநல மனு தேவைப்பட்டது என்று கேட்கவேண்டும் என்பது பற்றியும் கான்வில்கர் அமர்வு கவலைப்படவில்லை. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் முந்தைய அமர்வுகள் – 2007 முதல் – பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட அப்பாவி கிராமவாசிகளின் மரணங்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை அல்லது விசாரிக்கவில்லை என்று சத்தீஸ்கர் அரசை விமர்சித்தது (16.12.2008, 18.2.2010, 6.5.2010 அன்று  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு  மற்றும் 5.7.2011 இன் நீதிப் பேராணை 250/2007).அவர்களின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததற்கு  காவல்துறை ஆரம்ப பதிலில்,  அனைத்து புகார்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு “ஒரே வடிவத்தில், ஒரே முறையில் தட்டச்சு செய்யப்பட்டு வந்துள்ளது”,  இது மாவோயிஸ்டுகளால் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கலாம்  ஐயத்தை ஏற்படுத்துகிறது,” என்று கூறினர் . மனுதாரர் 1, ஹிமான்ஷு குமார், புகார்களை சேகரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியதாக  ஒப்புக்கொள்வதால், இந்த ஒற்றுமையின் உண்மையில் ஓரளவு மர்மம் இருக்க வாய்ப்புள்ளது. காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்திருந்து, அதனால் கிராமவாசிகள் வேதனையடையும் நிலை ஏற்பட்டிருந்தால், குற்றவியல் நடைமுறை சட்டம் 156 (3) இன் கீழ் உள்ளூர் நீதிமன்றங்களை அணுக இயலும் என்பது காவல்துறையின் வாதம். அப்படியானால், கண்காணிப்பாளர் விவரித்தது போல மிக எளிய பாமரர்களான பழங்குடி மக்கள் தாங்களாகவே நீதிபதியிடம் சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோருவார்கள் என காவல்துறையும் அரசாங்கமும் எப்படி எதிர்பார்க்க முடியும் என்பது வியப்பிற்குரியது.

காவல்துறையின் வாதத்தில் வேறு சில முரண்பாடுகளும் உள்ளன.  குடும்பத்தினர் கூறுவது போல, 2009, செப்டம்பர் 17  அன்று சல்பியை (உள்ளூர் மதுபானம்) கையில் எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிங்கன்மடுகுவைச் சேர்ந்த மத்வி தேவாவின் வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தவறுதலாக பாதுகாப்பு படையினரின் வழியில் சிக்கிக் கொண்டார். அச்சத்துடன் குழம்பி நின்றிருந்த அவர்  அங்கு கொல்லப்பட்டார்.  2010, பிப்ரவரி 4  இன் சத்தீஸ்கர் பிரமாணப் பத்திரம் அவரை கொல்லப்பட்ட ஒரு குடிமகன் என்றும் அவர் ஒரு நக்சலைட் என்றும் விவரிக்கிறது. ஒருபுறம் துப்பாக்கி  சூட்டிற்கிடையில் தவறுதலாக கொல்லப்பட்ட குடிமகன் என்றும், மறுபுறம் அவரை ஒரு நக்ஸலைட் என்றும் ஊசலாட்டத்துடன் கூறுகிறது. அதன் 12 ம் பக்கம் முதலாவது பத்தியில், ” நக்ஸலைட்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் ஒருவர் மாதவி தேவா என்று அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.  இரண்டு பக்கங்கள் கீழே, பக்.14, 7வது பத்தியில் “மாதவி தேவா சீருடை அணிந்த நக்சலைட் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. அவரது உடல் 17.09.09 அன்று சிங்கம்பலியில் நடந்தபோது அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது,”  என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

படுகொலை ‘தவறான பெயரா’?

2009, செப்டம்பர் 17  அன்று கச்சன்பள்ளியில் என்ன நடந்தது என்பதற்கான சமகால நேரில் கண்ட சாட்சிகளின் விவரம் 2010, மார்ச் இல் தி இந்துவில் வெளியிடப்பட்டது.பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சாட்சியமளித்த கச்சன்பள்ளியைச் சேர்ந்த  ஒருவர்,  “சீருடை அணிந்தவர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய சல்வா ஜூடும் உறுப்பினர்களின் ஒரு பெரிய குழு நடவடிக்கை நாளன்று    அதிகாலையில் தாக்குதல் நடத்துவதை நான் கண்டேன். அங்கிருந்த  அனைவரும் காடுகளுக்குள் ஓடினர்.   நாங்கள் திரும்பி வந்தபோது பல இறந்த உடல்களைப் பார்த்தோம். துதி முயே என்ற 70 வயது முதியவர் எனது வீட்டின் வாசலில் இறந்து கிடந்தார். அவரது இரண்டு மார்பகங்களும் கத்தியால் வெட்டப்பட்டிருந்தன. 65 வயதான மாதவி ஜோகா கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருந்தார். 30 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட மதகம் சுல்லா மற்றும் மாதவி ஹத்மா ஆகிய இருவரும் மடகம் சுல்லாஸ் வீட்டிற்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து கச்சன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவாசி முயா கூறுகையில், “நான் இந்த செய்தியை பலாச்சலத்தில் இருந்த போது கேட்டறிந்தேன். நான் வீட்டிற்கு வந்து பார்த்த போது என் வீட்டிற்கு வெளியே எனது தாத்தா  கோவாசி கங்காவின் இறந்த உடலைப் பார்த்தேன். அவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாக முயா கூறினார். கங்காவுக்கு வயது எழுபது,”  என்றார்.கோம்பாட் சம்பவம் அந்த நேரத்தில் இங்கிலாந்தின் சேனல் IV மற்றும் பைனான்சியல் டைம்ஸ், அல் ஜசீரா மற்றும் தி ஹிந்து போன்றவற்றால் பரவலாக அறிவிக்கப்பட்டது. எனது புத்தகமான தி பர்னிங் ஃபாரஸ்டில் பதிவுசெய்யப்பட்ட கோம்பாட்டில் இருந்து உயிர் பிழைத்தவர்களின் கூற்றுகள், 2009, அக்டோபர் 1  அதிகாலையில் பாதுகாப்புப் படைகள் கிராமத்தை எவ்வாறு அடைந்தன என்பதை விவரிக்கிறது:

“அவர்கள் காலை கடனை முடிக்கச் சென்ற ஒரு பெண்ணை கண்டனர். அவருடைய புடவையைப் பிடுங்கினர். அவர்களிடமிருத்து தப்பிச் சென்ற அந்தப் பெண் ஊரில் இருந் மற்றவர்களை எச்சரித்தார். பலரும் தப்பியோட முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் கண்ணில் கண்டவர்களை சுட்டுக் கொன்றனர்.  போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சோடி சம்போ என்ற பெண் காயமடைந்தார். அன்று காலை கோம்பாட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், அதில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 40 வயதான மத்வி பஜாரே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், படைகள் வந்தபோது அவரும் அவரது மனைவி சுப்பியும் ஓடவில்லை. இவரது மூத்த மகள் காட்டம் கன்னி தனது இரண்டு வயது மகன் சுரேஷுடன் வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த மற்ற இரண்டு உறுப்பினர்கள் பஜாரேவின் பத்து வயது மகள் பூமி மற்றும் அவரது எட்டு வயது சகோதரி முட்டி. அனைவரும் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டனர். பஜரே, சுப்பி, முட்டி ஆகிய மூவரையும் கொன்று, இலுப்பை மரத்திற்கு அருகில்  போட்டுவிட்டு சென்றனர். கன்னி வீட்டில் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். அவள் வெளியே இழுத்து வரப்பட்டு, கற்பழிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டாள். இந்நிலையில், அவரது குழந்தை சுரேஷின் கட்டை விரலையும் துண்டித்துவிட்டு, அழுது கொண்டிருந்த குழந்தையை இறந்த தாயின் மார்பில் வைத்துள்ளனர். அவனுடைய பத்து வயது அத்தை பூமி, சிறுவனை  எப்படியோ காப்பாற்றி மற்றவர்கள் மறைந்திருந்த காட்டுக்குள் ஓடினாள். மத்வி என்காவுடன் புதிதாக திருமணமான தம்பதிகள் – சோயம் சுப்பா மற்றும் சோயம் ஜோகி ஆகியோர் கொல்லப்பட்டனர்.  அவர்களுடைய வீடு உயரமான சோளத் தண்டுகளால் சூழப்பட்டிருந்தது.  அதனால்தான் அவர் படைகள் நெருங்கி வருவதைக் காணவும் இல்லை. தப்பி ஓடவும் இல்லை.   கொல்லப்பட்ட மற்ற இருவரும் பந்தர்பதருக்கு வந்திருந்த முச்சாகி ஹண்டா மற்றும் மட்கம் தேவா ஆகியோர் ஆகும்.  மதியம் கோம்பாட் துப்பாக்கிச் சூடு முடிந்ததும், சிறப்பு காவல் படையினர்  சிந்தகுஃபாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் 35 வயதான கொமரம் முட்டாவைக் கொன்றனர்.  அவர்கள் அவரை முதுகில் சுட்டுவிட்டு உடலை அங்கேயே விட்டுவிட்டனர்.

காவல்துறையின் கூற்றை  ஏற்கவும்,  மனுதாரர்களை புறக்கணிக்கவும் உச்சநீதிமன்றம் ஏன் தயாராக உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்றாக கௌதம் பாட்டியா, “இது  நீதிமன்றத்தை நிர்வாக நீதிமன்றமாக மாற்றுவது,” என சுட்டிக்காட்டுகிறார்.  இதில் காவல்துறை/அரசு பதிப்பு முதன்மை உண்மையாகக் கருதப்பட்டு பிணை சாத்தியமற்றதாகிவிடும்.ஆனால் இந்த தீர்ப்பு எவ்வாறு தொடங்குகிறது என்பதையும், ஜாகியா ஜாஃப்ரி தீர்ப்பில் பயன்படுத்தப்பட்ட சொற்களையும் நாம் பார்க்கலாம், அங்கு நீதிமன்றம் பல ஆண்டுகளாக நடத்திய அந்த வழக்கை மனுதாரர்களின் ‘அறிவு கூர்மை’ என்று குறிப்பிடுகிறது.

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

ஹிமான்ஷு குமார் அல்லது கோம்பாட் தீர்ப்பில், நீதிமன்றம் கொலைகளை ” படுகொலைகள் என்று சொல்லப்[படும்” மற்றும் “குரூரமான படுகொலைகள் என்று சொல்லப்[படும்” என்று குறிப்பிடுவதன் மூலம் தொடங்குகிறது. ஒரு கிராமத்தில் ஒரே நாளில் ஒன்பது பேர் (ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்) கொல்லப்பட்டு இரண்டு வயதுக் குழந்தைக்கு சில விரல்கள் வெட்டப்பட்டால், அது படுகொலையின் மணமும் குணமும் உடையது போல் தோற்றமளிக்கிறது. பணக்காரர்களும், செல்வந்தர்களும் வாழும் லுடியன்ஸால் வடிவமைக்கப்பட்ட தில்லியில் இது நடந்திருந்தால், அது நிச்சயமாக படுகொலையாகவே அறிவிக்கப்படும். சத்தீஸ்கர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ” இந்த “சொல்லப்[படும் படுகொலை   இந்த மாண்புமிகு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது”; மேலும் ‘படுகொலை என்பது தவறான பெயர்’ (28.4.2010 நாளைய அரசு வழக்கறிஞரின் உறுதிமொழி கடிதம் 28.5 மற்றும் 28.8). காவல்துறையினர் மீது குற்றம் சாட்டும் மனுதாரர்-உறவினர்களின் அறிக்கைகளை  “நம்ப வைப்பதற்காக” கூறப்பட்டவையாக அவை விளக்குகின்றன.இறுதியில் காவல்துறை கூறியது போல் கிராம மக்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர் என்றே வைத்துக் கொள்வோம். அது ஒரு பயங்கரமான படுகொலை இல்லையா? சத்தீஸ்கர் அரசின்  மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் குடிமக்களின் உயிரையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவே அரசால் ஊதியம் வழங்கப்படுகிறது. இறப்புகளைக் குறைத்து மதிப்பிடுவதை விட அவை குறித்து அவர்கள் கவலைப்பட வேண்டாமா? அல்லது இந்த மரணங்கள் முக்கியமற்றவையா?

மனுதாரர்களையே  குற்றவாளியாக்குதல்

மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், . ஹிமான்ஷு குமாருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்  விதித்ததுடன்,  பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக அவருக்கு எதிராக ஐபிசியின் 211வது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதித்தது. அது மட்டுமின்றி,  நிகழ்விடத்தில் ஒரு பரந்த “குற்றச் சதி அல்லது வேறு ஏதேனும் குற்றம்” இருக்கலாம் என்ற கருத்தை நீதிமன்றம் அனுமதித்ததுடன் அதனை ஊக்குவித்தது. அதே நேரத்தில்   ஒன்றிய அரசை விடுவித்தும்  உத்தரவிட்டுள்ளது.

“இடதுசாரி (நக்சல்) போராளிகளுக்கு எதிராக பாதுகாப்பு முகமைகள் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த மாண்புமிகு நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர் நீதிமன்றங்களில் பொய்யான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட சாட்சியங்களை முன்வைத்து, சதி, உறுதுணை மற்றும் மனுக்களை தாக்கல் செய்வதற்கு வசதியாக இருக்கும் தனிநபர்கள்/அமைப்புகளை அடையாளம் காண, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஆழமான விசாரணை நடத்த வேண்டும். (67b உடன் உச்சநீதிமன்ற தீர்ப்பின் 95ம் பத்தி).” சுருக்கமாக, நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது பாதுகாப்புப் படையினருக்கு எதிராக அதிகப்படியான மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் புகார்களை எவரேனும் தாக்கல் செய்வது ஐயத்திற்குரியது. சுக்மாவில் நக்சலைட்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு பின்னர் 121 ஆதிவாசிகள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்கள் குற்றமின்மையை நிரூபிக்க போராடுவது குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் நமக்குச் சொல்கிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியால் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர்  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே வாரத்தில், ஆதிவாசிகள் (மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானவர்கள்) நீதிமன்றத்தின் முன் அவர்களுடைய அடிப்படை உரிமைகளை வலியுறுத்துவது  குற்றமாகும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜக்கியா ஜாஃப்ரி மற்றும் ஹிமான்ஷு குமார் தீர்ப்புகள் எந்தவொரு குடிமகனும் தங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ அரசைக் கேள்வி கேட்க முடியும் என்ற  நமது அரசியலமைப்பின் முக்கிய அடிப்படைக் கற்களில் ஒன்றான அதிகாரப் பிரிவினையின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை மட்டுமல்ல, சகோதரத்துவக் கொள்கையையும் அழிக்கின்றன. 

www.thewire.in இணையதளத்தில் நந்தினி சுந்தர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்   

Kallakurichi Sakthi School Accused are being Protected – Advocate VCK Rajinikanth Interview | ADMK

சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை  குழிதோண்டிப்  புதைத்துவிட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்