Aran Sei

வெளிநாடுகளில் மதிப்பிழந்துள்ள இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் – ஆய்வு

டந்த பத்து வருடங்களில், குறிப்பாக 2014ல் இருந்து, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பிற நாட்டு நீதிமன்றங்கள் மேற்கோள் காட்டுவது குறைந்திருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.

43 நாடுகளின் நீதிமன்ற தீர்ப்புகள், அவற்றில் எந்த அளவில், என்ன வடிவில் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன என்பதை வைத்து வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆய்வாளர் மிதாலி குப்தா நடத்தியிருக்கும் இந்த ஆய்வில், சர்வதேச நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளில் இந்தியத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவது குறைந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

மித்தாலி குப்தா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த 2009-2014 வருடங்கள் மற்றும் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என இரண்டாகப் பிரித்து, இந்தியத் தீர்ப்புகள் பல்வேறு நாடுகளில் எப்படி மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன என ஆய்வு செய்திருக்கிறார்.

அரசாட்சிகளை வைத்து ஆய்வு பகுக்கப்பட காரணம், மத்திய அரசு நிறைய வழக்குகளில் ஈடுபடுவதே. மேலும், கொள்கைகள் தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகளையே பிற நாட்டு நீதிமன்றங்கள் குறித்துக் கொள்கின்றன. ஏனென்றால், தேசிய எல்லைகளைக் கடந்து இது போன்ற வழக்குகள் பொதுவானவையாக இருக்கின்றன.

சட்ட அமைப்புகளில் ஒற்றுமைகள் இருப்பதால், பெரும்பாலும் தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளே இந்தியத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டுகின்றன. அவற்றுள், பொதுவான சட்ட அமைப்பைப் பின்பற்றும் நாடுகளும் இருக்கின்றன என்கிறார் குப்தா. கடந்த பத்தாண்டுகளில் இந்திய உச்சநீதிமன்றத்திற்கு இருக்கும் சர்வேத மதிப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா எனும் நோக்கில்தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக குப்தா சொல்கிறார்.

2009-க்குப் பிறகு, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் 510 முறைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை முந்தைய வருடங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளாக இருந்தாலுமே, 128 தீர்ப்புகள் 2009 முதல் 2020 ஆண்டுகளில் வந்தவை.

குப்தா, இந்த 128 வழக்குகளை மேலும் பகுத்தாய்கிறார். இவற்றில் 100 தீர்ப்புகள் 2009 முதல் 2014 ஆண்டுகளில் வழங்கப்பட்டவையாகவும், வெறும் 28 தீர்ப்புகளே 2014-ற்குப் பிறகு வழங்கப்பட்டவையாகவும் இருக்கின்றன.

ஆய்விற்காக ஆராயப்பட்ட 43 நாடுகளில், வங்காளதேசமே பிற நாடுகளை விட இந்தியத் தீர்ப்புகளை அதிக முறைகள் மேற்கோள் காட்டுகிறது. நம் நீதி அமைப்பு போலவே இருக்கும், வங்களா தேசத்தின் உச்ச நீதிமன்றம், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை 2009ல் இருந்து 274 முறை மேற்கோள் காட்டியிருக்கிறது. இவற்றில் 157 மேற்கோள்கள் 2014 க்கு முன்னரும், மற்றவை அதற்குப் பிறகும் நடந்தவை.

57 மேற்கோள்கள் 2009-2014 வரை வழங்கப்பட்ட தீர்ப்புகளாகவும், 16 மேற்கோள்கள் 2015-க்குப் பிறகான வழக்கின் தீர்ப்புகளாகவும் இருக்கின்றன. 2015-ற்குப் பிறகு, மேற்கோள் காட்டுவதன் எண்ணிக்கை திடீரென வீழ்வதாக ஆய்வு சொல்கிறது.

இதுபோல, பாகிஸ்தான் 69 வழக்குகளில் இந்தியாவின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியிருக்கிறது. இதில், 34 வழக்குகளில் 2014-க்கு முன் வந்த தீர்ப்புகளையும், 35 வழக்குகளில் 2014-க்குப் பின் வந்த தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியிருக்கும் பிற நீதிமன்றங்கள் மலேசிய பெடரல் நீதிமன்றம், ஸ்ரீலங்காவின் உச்ச நீதிமன்றம் மற்றும் சீசெல்ஷின் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவையாகும். நேபாள் உச்ச நீதிமன்றமும், பூட்டான் உச்ச நீதிமன்றமும் அவர்கள் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் பதிவு செய்யாததால், அவர்கள் இந்தியத் தீர்ப்புகளை உதாரணமாக எடுத்துக்கொண்டார்களா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால், 2014-க்குப் பின்னரான காலத்தோடு ஒப்பிடும் போது, உச்ச நீதிமன்றம் 2009-2014 ஆண்டில்தான் சிறப்பாக இயங்கியதாகத் தெரியலாம்.

ஆனால், அப்படி எடுக்கும் முடிவு, இடையில் இருக்கும் இடைவெளியைக் கணக்கில் உதாசீனம் செய்ததாக இருக்கும் என்கிறார். உதாரணமாக, 2009 முதல் 2014 வரை வழங்கப்பட்ட தீர்ப்புகள் 2009 முதல் 2020 வரை மேற்கோளாகக் காட்டப்பட்டன. ஆனால், 2014 முதல் 2020 வரை வெளியான தீர்ப்புகள் அந்த ஆறு வருடங்களுக்குள் மட்டுமே மேற்கோள் காட்டப்பட முடியும்.

இந்த இடைவெளியை நிரப்ப, குப்தா, எத்தனை முறைகள் 2009 முதல் 2014 வரை மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன எனவும், 2014-ற்குப் பிறகான தீர்ப்புகளோடு ஒப்பிடும் போது, சராசரியாக எத்தனை வருடங்கள் கழித்து இவை பிற நாட்டினரால் மேற்கோள் காட்டப்பட்டன எனவும் பார்த்தார்.

முடிவில், 2009-2014 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தீர்ப்புகளில் 43 அதே காலத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன எனவும், 2015-2020 ஆண்டுகளில் வழங்கப்பட்டவற்றில் 28 தீர்ப்புகள் அதே வருடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன எனவும் தெரியவந்தது. இந்த வீழ்ச்சிக்கு அரசு மாற்றம், உலகம் முழுதும் நீதித்துறையின் செயல்பாட்டில் தாக்கத்தை உண்டாக்கியிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று போல பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார் குப்தா.

2020 க்கான தரவுகள் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் தொகுக்கப்பட்டதால், கூடுதலாக ஆறு தீர்ப்புகள் வருடத்தின் கடைசி நான்கு மாதங்களில் மேற்கோளாகச் சொல்லப்படலாம் என்று யூகிக்கிறார். இரண்டு காலங்களையும் முறையே ஒப்பிட்ட ஆய்வாக இருப்பதற்காக இந்தத் திருத்தம் செய்யப்பட்டது.

மேற்கோள்களையும், ஆராய்ச்சிகளையும், மேற்கோள்களுக்கான காரணங்களையும் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றாலும், இந்தத் தீர்ப்புகள் எதைப்பற்றியவை என்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை. இந்தியாவிற்கு அவை சாதகமானவையாக இருந்ததா இல்லையா என்பதை மட்டுமே அவர் குறித்து வைத்திருக்கிறார்.

வெளிநாடுகளில் மதிப்பிழந்துள்ள இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் – ஆய்வு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்