மார்ச் 18, 2020 அன்று – இலங்கையில் கொரோனா-19 இன் முதல் உள்ளூர் தொற்று பதிவாகி ஒரு வாரத்திற்குப் பிறகு – அரசாங்கம் கொரோனா-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தை (NOCPCO) அமைத்து. அதன் தலைவராக ஒரு இராணுவ அதிகாரியை நியமித்தது. அவர் ஏதோவொரு அதிகாரியல்ல; முன்னாள் தளபதி சவேந்திர சில்வா. இவர் முப்படைகளின் தற்காலிக தலைமைத் தளபதியாகவும் படைக் கமாண்டராகவும் இருந்தவர். 2019 நவம்பரில் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை பதினொன்றாவது அரசாங்கப் பதவிக்கு நியமிக்கப்பட்ட பதினோராவது நபரும் ஆவார்.
சில்வாவின் நியமனமானது தேசத்தின் கொரோனா எதிர்வினைக்கு இராணுவமயமாக்குவதற்கான விருப்பத்தை அடையாளம் என்பதைச் சுட்டிக் காட்டியது. கோத்தபயவின் சொந்த இராணுவப் பின்னணி மற்றும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தொழில்நுட்ப மற்றும் இராணுவப் பாணி நிர்வாகத்திற்கான அவரது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறிய நிலையில் இது ஆச்சரியமளிக்கவில்லை. இராணுவ ஒழுக்கத்தை அமல்படுத்தும் ஒரு வலிமையான நபரின் இவ்வாக்குறுதியானது தேர்தல் ஒப்புதலின் முத்திரையைப் பெற்றது. குறிப்பாக இது கூட்டணி அரசாங்கத்திற்கும் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கும் ஒரு மாற்று மருந்தாக மாற்றப்பட்டது.
தொற்றுநோயின் ஆரம்ப நாட்கள் அதிகரித்த மையமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட நிர்வாகத்தைக் கண்டன. இது இராணுவத்திற்கு கட்டமைப்பு ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் தொற்றுநோய்க்கான எதிர்வினையை ஒருங்கிணைக்கவும் குடிமைப்பணி அரசு அதிகாரிகளை அகற்றுவதற்கான கதவுகளைத் திறந்தது. முதல் அலையின்போது தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அரசாங்கத்தின் திறன் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரால் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதுவே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷவுக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தது. இராணுவமயமாக்கப்பட்ட நிர்வாகத்தின் அச்சில் இன்னும் கூடுதலான மையப்படுத்ததுலுக்கான ஒப்புதல் என விளக்கப்பட்டது. சில வாரங்களுக்குள் அரசாங்கம் 20 வது சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது, இது 2015-19 கூட்டணி அரசாங்கத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்ட அதிகார அத்துமீறல் தடுப்புபிரிவுகளை திரும்பப் பெறும் அதிகாரம் வழங்கப்படுவதாகும். 20 வது சட்டத் திருத்தம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பலப்படுத்தியது; அதற்கு சட்டப்படியான பாதுகாப்பை வழங்கியது; சுதந்திரமான நிறுவனங்களை பலவீனப்படுத்தியது. துறைமுக நகர மசோதாவை பாராளுமன்றம் மூலம் துவம்சமாக நிறைவேற்றியது என்பது மற்றொரு மாற்றம்.
சர்வதேச வெளிப்படைத்தன்மையின்(Transparency International) துணை நிர்வாக இயக்குநரும் இலங்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளப் பிரதிநிதியுமான ஷங்கித குணரத்ன இந்த சட்ட மசோதா வெள்ளிக்கிழமையன்று – வார இறுதி மற்றும் தொடர்ச்சியான பொது விடுமுறை நாட்களுக்கு முன்னர் – அறிமுகப்படுத்தப்பட்டதாக என்னிடம் கூறினார். அதாவது நீதிமன்றத்தில் இதை குடிமக்கள் எதிர்ப்பதற்கு ஒரு நாள் மட்டுமே வழங்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தை ஒட்டியமைந்துள்ள கடலிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட நிலத்தில் சீனர்களுடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் சர்வதேச நிதி மாவட்டத்திற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதற்காகவே இந்த சட்ட மசோதா அமைந்துள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பல நாடுகள் கொரோனாவைத் தடுப்பதற்காகப் தமது இராணுவங்களைப் பயன்படுத்தியுள்ளன என்பது உறுதி. ஏனெனில் ஆயுதப்படைகளுக்கு முன்னேற்பாட்டு அனுபவமும் பரந்த வளங்களும் உள்ளன. உதாரணமாக, சீனா 10,000 இராணுவ வீரர்களை ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் பிரான்ஸ் மீள்தன்மை நடவடிக்கையை(Operation Resilience) நடத்தியது. தென் கொரியாவும் தனது ராணுவத்தைத் திரட்டியது. தேசிய இராணுவ எதிர்வினைகள் மூன்று வகைகளாக உள்ளன: குறைந்தபட்ச தொழில்நுட்ப ஆதரவு, குடிமை-இராணுவ கலப்பு எதிர்வினை மற்றும் இராணுவத் தலைமையிலான எதிர்வினை. இலங்கையின் கொரோனா எதிர்வினையோ மூன்றாவது வகையைச் சேர்ந்தது. நாடு வலுவான பொது சுகாதாரத் துறையைக் கொண்டிருப்பதால் இது மிகவும் புதிராக உள்ளது. பொதுவாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், நிதியளிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகள், மந்தநிலையை நீக்க இராணுவத்தையே நம்பியுள்ளன.
தொற்றுநோய் எதிர்வினையின் இராணுவமயமாக்கலின் மற்றொரு விளைவு ஜனாதிபதி பணிக்குழுக்களை நிறுவுவதாகும். ஏப்ரல் 2020 இல் “தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதை இயக்கவும் ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் ஒட்டுமொத்த சமூக வாழ்வின் வாழ்வாதாரத்திற்காகவும் கண்காணிக்கவும்” என்றுதெளிவற்ற வார்த்தைகளைக் கொண்ட பொருளில் பணிக்குழு நிறுவப்பட்டது. ஜூன் மாதத்தில் மேலும் இரண்டு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன: “பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், நல்லொழுக்கம் மற்றும் சட்டப்பூர்வமான சமூகத்தை” கட்டியெழுப்ப ஒரு பணிக்குழுவும் “கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிக்கவுமான” பணிக்குழு இன்னொன்று ஆகும். தற்போது பணியில் உள்ள இராணுவ அதிகாரிகளும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுமே இம்மூன்று குழுக்களில் பணிபுரிந்தனர். மேலும், தமிழ் மற்றும் சைவநெறி வரலாற்றை அழிக்கும் அதே வேளையில் தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பது என்ற சாக்குப்போக்கின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிலத்தை அபகரிப்பதற்கான நகர்வே என்று தொல்லியல் பணிக்குழு பற்றி வியாக்கியானம் செய்யப்பட்டது.
டெல்லி: ஜேஎன்யுவில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்க 5 கோடி நிதி வழங்கிய தமிழக அரசு
உண்மையில், இலங்கையின் கொரோனா எதிர்வினையானது தொற்றை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம்(NOCPCO) மற்றும் ‘சமுதாய வாழ்க்கை'(Community Life) பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை இரண்டும் போர்க்குற்றவாளிகள் என்று கூறப்படும் ஊழியர்களால் நிரப்பப்பட்டது. முன்னாள் தளபதி சவேந்திர சில்வா 2009 -இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்காக அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டார். அதே நேரத்தில் அதிரடிப்படையானது ஜனாதிபதி கோத்தபயவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது . இவர் போர்குற்றங்கள் நிகழ்ந்தது பற்றி அறிந்தவர். அது மாத்திரமன்றி இலங்கையின் இராணுவமானது அரசாங்கத்தின் கொரோனா எதிர்வினையில் முக்கிய பங்கு வகித்து தொடர்புத் தடமறிதல், கண்காணிப்பு, தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை உருவாக்குதல் மற்றும் நடத்துதல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை விநியோகித்தலை வழிநடத்தியது. முக்கிய குடிமைப் பணியிடங்கள் காலியாக விடப்பட்டன. உதாரணமாக, தொற்றுநோய் பரவி பல வாரங்களாக இலங்கையில் சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர்களுக்கான தலைமை இல்லை. ஏனையவை சுகாதார அமைப்பின் செயலாளர் மற்றும் பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் தலைமை உட்பட சேவையில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற இராணுவத்தினரால் நிரப்பப்பட்டன.
கூடுதலாக, கொரோனா தொடர்பான பிரச்சினைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க பல நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 2020 டிசம்பரில் நியமிக்கப்பட்ட ஒருவர் கட்டாய தகனங்களை செய்ய பரிந்துரைத்தார். இது முஸ்லீம் சமூகத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அறிவியல் தகுதி இல்லாவிட்டாலும் மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுக்கு மாறாக சவ அடக்கம் செய்வது முடக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகுதான் உள்நாட்டு மற்றும் சர்வதேச குழுக்களின் விமர்சனத்திற்குப் பிறகு விதிமுறைகள் திருத்தப்பட்டன. தீவிர தேசியவாத பௌத்தர்களால் சமூகத்திற்கு எதிரான 2014 கலவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவது தொற்றுநோய்க்கு முந்தியது ஆகும். தொற்றுநோயானது முஸ்லிம் சமூகத்தை மேலும் களங்கப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு சாக்குப்போக்கைக் கொடுத்தது.
பொது சுகாதாரத்தை விட இராணுவத்திற்கான முன்னுரிமை என்பது தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் பிரதிபலிக்கிறது. 2020 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) சுகாதாரத் துறைக்கு 235 பில்லியன் இலங்கை ரூபாய் (அரசாங்கச் செலவில் 6.34%, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3%) ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு துறைக்கோ 348 பில்லியன் இலங்கை ரூபாய் (செலவில் 9.2%, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.98%) ஒதுக்கப்பட்டது. காலி முகத்திடலில் போராட்டக்காரர்களுடன் நான் நடத்திய உரையாடல்களில் இராணுவம் மற்றும் பாதுகாப்புச் செலவினங்களின் பங்கு என்ற தலைப்பு அரிதாகவே வெளிப்பட்டது. கொழும்பில் நான் சந்தித்த வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தமிழர் ஒருவர் இலங்கை சமூகத்தில் இராணுவத்தின் பங்கைப் பற்றி “யாரும்” பேசவில்லை என்றார்; சர்வதேச வீரர்களோ அல்லது எதிர்ப்பாளர்களோ கூட பேசவில்லை. “இலங்கையில் 300,000 நிலையான இராணுவம் உள்ளது, இது உக்ரைன் இராணுவத்தை விட பெரியது” என்று பெயர் கூறவிரும்பா நிலையில் அவர் கூறினார்.
கொரோனா எதிர்வினையின் இராணுவமயமாக்கல் மற்றும் முதல் அலையைக் கட்டுப்படுத்துவதில் அதன் வெளிப்படையான வெற்றி, கட்டுப்பாடுகளற்று அதிகாரக் குவிப்பிலான “நேரடி” நிர்வாகத்தை வழங்குவதாக வலுவான கோத்தபய ராஜபக்ஷவின் வாக்குறுதி ஆகியன அரசாங்கம் முடிவெடுத்தலில் மேலும் மையப்படுத்துவதற்கு துணிவை அளித்தது. அது நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான ‘பில்லி சூன்ய பொருளாதார வல்லுநர்கள்’ கொண்ட சதிக்காரக் குழுவை நம்பியிருந்தது. இதன் விளைவாக திவால் நிலைக்கு வழிவகுத்த தொடர்ச்சியான முடிவுகளினால் அரசாங்கம் வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கும் உணவு, எரிபொருள் மற்றும் உரத்தை இறக்குமதி செய்வதற்கும் பணம் இல்லாமல் போய்விட்டது. இதன் விளைவு என்னவென்றால் கோத்தபயவின் ஆட்சிக்கு தேர்தல் பெரும்பான்மையை வழங்கியதோடு இராணுவமயமாக்கப்பட்ட ஆட்சியின் வாக்குறுதியால் ஈர்க்கப்பட்ட மக்கள். இப்போது ஆட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியானது இலங்கையை அதன் சுதந்திர வரலாறு முழுவதிலும் ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ள இந்தப் போக்குகளின் ஒரு பகுதியே. இவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
தமிழாக்கம்: தேவராஜன்.
*துஷார் தாரா– பத்திரிகையாளர் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களை எழுதும் ஆராய்ச்சியாளர்.
குறிப்பு: கொரோனா -19க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் குறித்த கட்டுரைகளின் தொடரில் இது இரண்டாவது கட்டுரையாகும். அங்குள்ள நிகழ்வுகளை நேரடியாகப் பகிர்ந்தளிக்க இலங்கைக்கு பத்திரிகையாளர் துஷார் தாரா வந்திருந்தார் .
Bharat Jodo yatra will begin the end of Fascist BJP Regime – Sasikanth Senthil | Rahul Gandhi | Deva
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.