Aran Sei

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

2018 ஆம் ஆண்டு முதல், இந்த வலைப்பதிவு இந்தியத் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களின் மரபுகளை மதிப்பிட்டுள்ளது   இவர்களில் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரஞ்சன் கோகோய் ஆகிய முந்தைய இருவர் பற்றி எழுத செய்திகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இந்த தலைமை நீதிபதிகள் (சில) முக்கியமான அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் உயர் அரசியல் ஆதாயம்  தொடர்பான  வழக்குகளை விசாரிக்க ” நீதிபதிகளை ஒதுக்குவதில் தனித்திறன் பெற்றவர்களாக (மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டராக) ” தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தினர். இந்த வழக்குகளின் முடிவுகள் விமர்சிக்கப்பட்டன.  ஆனால் குறைந்தபட்சம் வழக்குகள் இருந்தன.  முடிவுகள் இருந்தன.

தலைமை நீதிபதி பாப்டேயைப் பொறுத்தவரை – கடைசி ஆனால் ஒரு தலைமை நீதிபதி என்ற வகையில் நிலைமை வேறுபட்டது.  அவர் ஓய்வு பெற்ற போது நான் எழுதியது போல்,  அவரது 17 மாத நீண்ட பதவிக்காலத்தில், துல்லியமாக அரசியலமைப்பு  முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஒரு தீர்ப்புக் கூட வழங்கவில்லை. ஆயினும்கூட,  நீதிமன்றத்தின் தற்போதைய நிலையைப் பராமரிப்பது அரசியல் நிர்வாகத்திற்கு நேரடியாகப் பலனளிக்கும் என்பதால்,  இது மிகவும் தொடர்ச்சியான பதவிக்காலமாக இருந்தது.  மேலும் தலைமை நீதிபதி பாப்டே தீர்ப்புகளை வழங்காவிட்டாலும், அவர் அரசியல் நிர்வாகத்திற்கு ஆதரவாக பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தார்.

பாப்டேவின் பதவிக்காலமும் பல்வேறு அமர்வுகளுக்கு வழக்குகளை தன்னிச்சையாக ஒதுக்கும் போக்கின் தொடர்ச்சியாக இருந்தது.  இது வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் பற்றி வரும்போது உச்ச நீதிமன்றத்தை “இரட்டை நாக்கில்” பேச வழிவகுத்தது.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

பாப்டேவிற்குப் பிறகு 2021, ஏப்ரல் 24  அன்று  பதவியேற்ற  தலைமை நீதிபதி  ரமணா 2002, ஆகஸ்ட் 24 ல் ஓய்வு பெற்றார்.  அவருடைய 16 மாத பதவிக் காலத்தை நாம் திரும்பிப் பார்க்கும்போது, ​​வெளிவரும் படம் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்துடன்  அவரது முன்னோடியின் படத்தைப் போன்றதுதான். அதாவது,  போப்டே போலல்லாமல் – உண்மையில், அவருக்கு முந்தைய தலைமை நீதிபதி கோகோய் போலல்லாமல்  அவர்களுக்கு ஒரு பழக்கமாக இருந்த ஒரு பக்கச்சார்பான மற்றும் விரிவான, பாகுபாடான, அரசு சார்பான செயல்களில் தலைமை நீதிபதி ரமணா  ஈடுபடவில்லை.

விழுமியங்களைப் மதிப்பவர்களுக்கு  இது முக்கியமானது  என்பதில்  ஐயத்திற்கு இடமில்லை.  இருப்பினும்  நீங்கள் சொல்லாட்சியைக் களைந்துவிட்டு  எனது பதிவில் கவனம் செலுத்தினால் ரமணாவுக்கும் அவரது உடனடி முன்னோடிக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்ப்பது எளிதாகிவிடும்.

நீதித்துறை ஏய்ப்பு மற்றும் அமைதியின் ஓசை

தலைமை நீதிபதி ரமணாவின் 16 மாத பதவிக்காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அமைதியின் ஓசை. 2021 ஏப்ரலில் அவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது,  ​​பின்வரும் முக்கியமான அரசியலமைப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தன:

  • 2017, செப்டம்பர் முதல் நிலுவையிலிருக்கும் தேர்தல் பத்திரங்களின் (அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற, அநாமதேய நிறுவன நிதியுதவியை அனுமதிக்கும்) அரசியலமைப்புச்  சட்ட வழக்கு.
  • 2019, ஆகஸ்ட் 6 முதல் நிலுவையிலிருக்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதையும், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டு ஒன்றிய பகுதிகளாகப் பிரிப்பதையும் எதிர்த்த அரசியலமைப்பு சட்ட வழக்கு
  • 2019, ஜனவரி 10 முதல் நிலுவையிலிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இடஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்த அரசியலமைப்பு  வழக்கு.
  • 2019, ஜூலை முதல் நிலுவையிலிருக்கும்  பின்னர் கொண்டுவரப்பட்ட ஆதார் திருத்தச் சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்பு  வழக்கு.
  • 2019, நவம்பர் 13 முதல் நிலுவையிலிருக்கும் நிதி மசோதாக்கள் மீதான நீதித்துறை மறுஆய்வு.
  •  2019, டிசம்பர்  முதல் நிலுவையிலிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்பு  வழக்கு.

தலைமை நீதிபதி ரமணாவின் பதவிக் காலத்தில்  இந்த வழக்குகளில் ஒன்று கூட முடிவு செய்யப்படவில்லை. உண்மையில், அவை அவர் பதவி ஏற்பதற்கு 16 மாதங்கள் முன்பிருந்தே நிலுவையில் இருந்தன.  சரியாக சொல்வதானால் போப்டேவைப் போலவே   ரமணாவின் பதவிக்காலம் குறிப்பிடத்தக்க ஒரு அரசியலமைப்புத் தீர்வையும் காணவில்லை (இறுதி வாரத்தில் வழங்கப்பட்ட பினாமி சட்டத் தீர்ப்பைத் தவிர). இவ்வாறு முடிவெடுக்காதது ஏன் முக்கியம் வாய்ந்தது?  ஏனெனில் இந்த எல்லா நிகழ்வுகளிலும் (சிஏஏ வழக்கு தவிர)  நேரடியாக அரசியல் நிர்வாகத்திற்கு அது பயனளிக்கிறது. இதைத்தான் நான் “நீதித்துறை ஏய்ப்பு” என்கிறேன்.

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?

“… ஒரு வழக்கை நிலுவையில் வைத்திருப்பதன் மூலமும், தீர்ப்பை தாமதப்படுத்துவதன் மூலமும், ஒரு தரப்பினருக்கு (பெரும்பாலும், வலுவான நிலையில் உள்ள கட்சி, அதாவது அரசாங்கதிற்கு) ஆதரவாக நீதிமன்றம் திறம்பட முடிவெடுப்பதை,”  நீதித்துறை ஏய்ப்பு என வரையறுக்கலாம்.

நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் தொடர்ந்து தீர்ப்பளிக்க மறுப்பதில் நீதித்துறை ஏய்ப்பு மிகவும் அப்பட்டமாகத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் அரங்கில்  பெருந்தொகையான பணம் கொட்டப்படுகிறது.  ஒப்பீட்டளவில் அதில் மிகப்பெரும் பகுதி தொகை ஆளும் கட்சிக்குச் செல்கிறது.  காரணம் இது, கட்டமைப்பு ரீதியாக, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் தரவை ஆளும் அரசு அணுக முடியும். ஆனால் அதே சமயம் அத்தகைய வசதி எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதாகும்.  இது தேர்தல் களத்தை – ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளை – அப்பட்டமாக சிதைப்பதாகும்.  இச்சூழ்நிலையில்  அரசியலமைப்பு நடுவராக இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் பங்கு மிகவும் அவசியமானதாக உள்ளது.  குறிப்பாக அரசியல் ஆதாயம் அதிகமாக இருக்கும் நிலையில்,  நீதித்துறை ஏய்ப்பு  அரசியல் நிர்வாகத்திற்கு மிக அதிக அளவில் நன்மை பயக்கிறது. எனவே இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் தொடர்ந்து மறுத்ததன் பொருள் என்ன என்பதை வாசகர்கள் தாங்களாகவே தீர்மானிக்கலாம்.  இதன் பொருள்  தலைமை நீதிபதி ரமணா இப்போது தனது மூன்று முன்னோடிகளைப் பின்பற்றும் ஒரு பாரம்பரியத்தைத் தொடர்ந்திருக்கிறார் என்பதே ஆகும்.

சட்டப்பிரிவு 370 வழக்கிலும் மற்றும் ஆதார் வழக்ககிலும் நீதித்துறை ஏய்ப்பின் விளைவுகள் கூடுதலாகவும்,  தெளிவாகவும்  காணப்படுகின்றன. நீதிமன்றத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மை “பாமர மக்களிடையே” ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது.  இது  நீதிமன்ற தீர்ப்பு பயனற்றது   என்பதை இறுதியில் உண்மையில் மாற்ற முடியாததாகிவிடும். இதை மனதில் வைத்துதான்  சைமன் மற்றும் கார்ஃபுங்கல் ஆகியோர்,  சந்தேகத்திற்கு இடமின்றி, “அமைதி புற்றுநோயைப் போல வளர்கிறது” என்று சரியாகக் குறிப்பிட்டனர்.

முழுமையானப் புரிதலுக்காக,  மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி வழக்கை சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுவது இங்கே முக்கியமானது. அங்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாள்சண்டை வீரரைவிட விரைவாக வேகத்தையும் திசையையும் மாற்றியது: ஜூன் மாதம், அரசியல் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, ​​ஒரு உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு  இந்த வழக்கை விரைவாக விசாரித்து, இடைக்கால உத்தரவின் மூலம் பத்தாவது அட்டவணையை திறம்பட நிறுத்தி வைத்தது.  பின்னர் இரண்டாவது இடைக்கால உத்தரவின் மூலம் 24 மணி நேரத்திற்குள் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை கட்டாயப்படுத்தியது.  முதல் உத்தரவின் மூலம் தகுதி நீக்க அச்சுறுத்தலுக்கு உள்ளான  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிவாளம் போடப்பட்டது.

இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனியர்களை மிகவும் வெறுக்கிறது? – ஊடகவியலாளர் மர்வான் பிஷாரா

எதிர்பார்த்தபடி அரசாங்கம் கவிழ்ந்தது. புதிய அரசு வந்து, நீதிமன்ற விடுமுறைகள் முடிவடைந்தவுடன், இந்த விவகாரம் தலைமை நீதிபதி முன் வந்தது. இந்த கட்டத்தில், நீதிமன்றம் முன்பு காட்டிய அனைத்து அவசரங்களும் ஒரு கனவு போல மறைந்துவிட்டன. தலைமை நீதிபதி அந்த வழக்கை விசாரிக்க விருப்பம் காட்டவில்லை. அதை அரசியலமைப்பு அமர்விற்கு (பல மாத காலதாமதம் உத்தரவாதம் என்பதால்) பரிந்துரைக்க வகை செய்தார்.  அதே நேரத்தில் இடைக்கால உத்தரவின் விளைவுகள் – அதாவது, அரசாங்கத்தில் ஒரு மொத்த மாற்றம் – தொடர்ந்தது.  மேலும் மேலும் ஒவ்வொரு நாளிலும் நிலைநிறுத்திக் கொண்டது.

இதன் விளைவாக, இடைக்கால உத்தரவுகள்,  அவற்றின் அனைத்து பெரிய விளைவுகளுடன் – அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் – இறுதியானது போல் தெரிகிறது.

பெகாசஸ் வழக்கு

பெகாசஸ் உளவு ஊழல் 2021, ஜூலையில் வெடித்தது. அதன்பிறகு, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. பெகாசஸ் வழக்கு மட்டுமே தலைமை நீதிபதி ரமணா தானே கையாண்ட முக்கியமான அரசியல் சாசன வழக்கு.  அதன் விதி பலவற்றைக் கற்றுக்  கொடுப்பதாக  இருந்தது.

ஒரு முன்னெச்சரிக்கையுடன் ஆரம்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க மறுத்திருக்கலாம். இந்த வழக்கு அரசியல்  குட்டைக்குச் சொந்தமானது அல்லது கண்காணிப்பு பற்றிய கேள்வி தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை எழுப்புவதால் அது தானாகவே நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே சென்று  விட்டது என  கூறியிருக்கலாம். (உண்மையில், இது  அவ்வாறு  அமைய அரசு வழக்கறிஞரால் கடுமையாக வாதிடப்பட்டது). நீதிமன்றம் அதைச் செய்திருந்தால், இந்த விவகாரம் நீதித்துறை தலையீடு இல்லாமல் பொது வெளியில் (அது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி )  நடந்திருக்கும்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

நீதிமன்றம் அதைச் செய்யவில்லை. “தேசிய பாதுகாப்பு” என்பது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பறிக்கத் தூண்டக்கூடிய ஒரு குழப்பம் அல்ல என்று  தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தினார். ஆனால் இங்கே பிரச்சினை இதுதான்: நீதிமன்றம் வழக்கை எடுக்க ஒப்புக்கொண்டவுடன், அதன் அதிகார வரம்பு சரியாக செயல்படுத்தப்பட்டதாகக் கூறியது.  நீதிமன்றம் தன் வேலையைச் செய்ய வேண்டிய,  அரச தண்டனையின்மைக்கு எதிராக குடிமக்களின் உரிமைகளை நியாயப்படுத்த வேண்டிய ஒரு பெரிய சுமை தனக்கு உள்ளது  எனக் கூறிவிட்டது.

ஏனென்றால், இந்த வழக்கின் முடிவு இப்போது,  வெகுமக்கள் கண்காணிப்புக்கான பொறுப்புக்கூறலில் இருந்து அரசை பாதுகாக்கும் மற்றும்  நீதித்துறை மதிப்பீட்டுடன் அரசின் பொறுப்புக் கூறுதலைக் கோரும் எந்த முயற்சியையையும் திறம்பட குழிதோண்டி புதைத்துவிடும் நீதித்துறையின் தீர்ப்பிற்குட்பட்டது.

கெடுவாய்ப்பாக, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, அரசை பொறுப்பேற்க செய்ய முற்றிலுமாகத் தவறிவிட்டது. 2021 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் பல விசாரணைகளின் போது, ​​பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை – பிரமாணப் பத்திரம் உட்பட – நீதிமன்றத்தில் தெரிவிக்க அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது தேசிய பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பக்கூடிய குறிப்பிட்ட விவரங்களைப் பற்றிய கேள்வி அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். அப்போது நான் எழுதியது போல், இது ஒரு நேரடியான “ஆம்” அல்லது “இல்லை” என்று கேட்கும் உரிமைக்கு உட்பட்டது. உண்மையில், அந்த அடிப்படை உண்மை இல்லாமல் (இது நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை), மேற்கொண்டு எதுவும் தொடர முடியாது.

இருப்பினும், இரண்டரை மாதங்களாக, ரமணா தலைமையிலான அமர்வு எந்த ஒரு தொடர் உத்தரவும் பிறப்பிக்க மறுத்தது.  உண்மையில், தொடர்ச்சியான உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்த அதே நேரத்தில் இந்தப் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக  மேற்கு வங்க மாநிலத்தால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்  அமைக்கப்பட்ட  ஒரு குழுவை அது செயல்படுவதிலிருந்தும் தடுத்து நிறுத்தியது.

மாநில அரசு நியமித்த விசாரணைக் குழு வெகுமக்கள் கண்காணிப்பின் கீழ் வழக்கை ஆய்வு செய்வதில் என்ன தீங்கு  இருக்க முடியும் என்பது நமக்குத் தெரியவில்லை.  ஆனால் இது பெருகிய முறையில் வளர்ந்து வரும் ஒரு நிகழ்வின் மற்றொரு எடுத்துக்காட்டு: உயர் அரசியல் ஆதாயம் (அந்நிய நிதியளிப்பு (ஒழுங்குபடுத்தும்) திருத்தச் சட்டம் – எஃப்சிஆர்ஏ) விவகாரம்  மற்றொரு சமீபத்திய எடுத்துக்காட்டு) தொடர்பான பிரச்சினைகளுக்கு வரும்போது, ​​​​ எந்தவொரு  நிறுவப்பட்ட அதிகாரத்தையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் வெறுக்கிறது. இதில் அதற்கு எந்த கருத்தும் இல்லை. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெருமை வாய்ந்த  வரலாறு நீதிமன்றத்திற்கு இருந்தால் இதை இதற்குப் பின்னும் நியாயப்படுத்தலாம்.  ஆனால், அது அரசைப் பாதுகாப்பதில் ஒரு பெருமை வாய்ந்த  வரலாற்றை உடையதாக இருந்தால்,  அது ஒரு பிரச்சனையாக மாறும்.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

மேலும் பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் இந்தப்  பிரச்சனையை ஆராய தனது சொந்த “குழுவை” நியமித்தது.  விசாரணையில் மேலும் பல மாதங்களை எடுத்துக் கொண்ட  இந்தக் குழு  இறுதியில்  தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெறுவதற்கு  முந்திய நாளில் – 2022, ஆகஸ்ட் 25 ல் – அறிக்கையை  நீதிமன்றத்தில் கொடுத்தது.தலைமை நீதிபதி வெளிப்படுத்த மறுத்ததால், அறிக்கை என்ன சொல்கிறது  என்பது நமக்குத் தெரியவில்லை. ஐந்து கைப்பேசிகளில் குழு  கண்டறிந்த உளவுப் பொருள் பெகாசஸ்  உளவுப் பொருள் என்பதை காட்டுவதற்கு “முடிவான ஆதாரம் இல்லை” என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அறிக்கை பொதுவில் இல்லாததால்,  குழுவின் “முடிவான ஆதாரம் இல்லை” என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு கணினி குற்றப் பாதுகாப்பு நிபுணர்கள் பயன்படுத்தும் முறைகளை ஆய்வு செய்ய இயலவில்லை.

அக்குழுவிற்கு அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்பதும் – நீதிமன்றத்தில் கூறப்பட்டதால் – எங்களுக்கும் தெரியும். இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?  மறைமுகமாக  எதுவுமில்லை. ஏனென்றால், கண்காணிப்பு மற்றும் தனியுரிமை குறித்து,  குழுவின் தலைவரான நீதிபதியால் செய்யப்பட்ட பரிந்துரைகளின் தொகுப்பை நிகழ்நிலையில் பதிவேற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டார். இந்த பரிந்துரைகளுக்கு, அவை ஆக்கிரமித்துள்ள எண்ணியல் உலகில் மதிப்பில்லை என்பதை அனுபவம் நமக்குச் சொல்கிறது.

பெகாசஸ் வழக்கை தலைமை நீதிபதி ரமணா கையாண்ட விதம், தனி நபருக்கும் அரசுக்கும் இடையிலான உறவையும், அரசின் தண்டனையின்மைக்கு எதிராக தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதிமன்றத்திற்கும் இருக்கும் பங்கையும் தலைகீழாக மாற்றிவிட்டது. அடிப்படை உரிமைகள் என்று ஏதாவது இருந்தால், அவர்கள் அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதாக நம்புவதற்கு காரணமுள்ள தனிநபர்கள் அதைக் கேள்வி கேட்கவும்,  அவர்கள் கண்காணிக்கப்பட்ட அடிப்படையைக் கேள்வி கேட்கவும்,  தீர்வுகளைத் தேடவும் உரிமை உண்டு.  பெகாசஸ் வழக்கில்,  நீதிமன்றத்தின் நடத்தை எந்தக் கட்டத்திலும் அரசு எந்தக் காரணத்திற்கும் பொறுப்பேற்கவில்லை என்பதை உறுதி செய்தது.  நீதிமன்றத்தின் முன் அல்ல, குழுவின் முன் அல்ல, அத்துடன் (உண்மையில்), அறிக்கையை பகிரங்கப்படுத்த மறுத்ததன் மூலம்,  அந்தக் குழு அதன் “உறுதியான ஆதாரம் இல்லை” என்ற தீர்மானத்திற்கு வந்ததன் அடிப்படையில், குடிமகன் கேள்வி கேட்கும் நிலையில் கூட இல்லை என்பதை உறுதிப்படுத்தி அறிக்கையை “முத்திரையிட்டு” மூடிவிட்டது. பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் இதைத்தான் ‘பூசிமெழுகுதல்’ என்பார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

இலவசத் திட்டங்கள்பற்றிய விசித்திரமான சர்ச்சை 

தேர்தல் பத்திர வழக்கை அவர் விசாரிக்க மறுத்ததால், தலைமை நீதிபதி ரமணா தேர்தல் விவகாரங்களில் அக்கறை காட்டவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். அவரது பதவிக்காலத்தின் கடைசி மாதத்தில், அவர் திடீரென – மற்றும் விவரிக்க முடியாத வகையில் – தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல் கட்சிகள் “இலவசத் திட்டங்களை ” அறிவிப்பதை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் நீதிமன்றத்தை கேட்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.இந்த ‘இலவசத்  திட்ட’  வழக்கு பல மணிநேரம் நீதிமன்ற நேரத்தை எடுத்துக் கொண்டது (தேர்தல் பத்திரங்கள் வழக்கை நீதிமன்றம் ஒருபோதும் விசாரிக்க வேண்டியிருக்கவில்லை   என்பதை கவனத்தில் கொள்வோம்) மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை “லஞ்சம்” என்று ‘நீதிமன்ற நடுநிலை ஆலோசகர்’ அல்லது அரசு வழக்கறிஞர்  வாதாடி, ஒரு அரசியல் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறிப்பிட்ட வரியை ஒழிப்பதாக வாக்குறுதி அளிப்பது அனுமதிக்கப்படாது என்பதை சுட்டிக்காட்ட வழி செய்வது. போன்ற சில உண்மையான வியக்கத்தக்க காட்சிகளை காண வைத்தது.

நான் வேறொரு இடத்தில் எழுதியதைப் போல, ‘இலவசத் திட்டங்கள்’ குறித்த  விவாதம் ஒரு விவாதம் கூட அல்ல (ஏனெனில் அதற்கு  பொருத்தமான  வரையறை இல்லை) மற்றும் குறைந்தபட்சம், தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ள விவாதம் அல்ல. உண்மையில், இந்த விஷயத்தை ஆராய ஒரு ‘குழு’ அமைக்க பலமுறை முன்மொழிந்த பிறகு இதனை மற்றொரு அமர்விற்கு அனுப்பியதன் மூலம்.  தனது இறுதி வாரத்தில்  ரமணா அவர்களே அதைக் கைகழுவினார்.

இருப்பினும், ‘இலவசத் திட்டங்கள்’  விவாதத்தின் பிரச்சினை அவ்வளவு பெரிதாகி விடவில்லை.  இறுதியாக,  நீதிமன்றம் எதையும் ‘செய்யவில்லை’.  பல நாட்களுக்கு, நீதிமன்றத்தின் தலையீடு பொது விவாதமாக (தொலைக்காட்சி அலைவரிசைகள் முக்கிய நேர  ‘விவாதம்’ செய்தன) மாற்றிய அதே நேரத்தில் அரசியல் நிர்வாகத் தலைமையும் இதையே சொல்லிக் கொண்டிருந்தது.

இதனுடன், இன்னும் இரண்டு முக்கியமான  கருத்துக்களைச் சேர்க்க வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தில் ‘இலவசத் திட்டங்கள்’  மீதான விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்த பொதுநல மனு, ஆளும் கட்சித் தலைவரால் தாக்கல் செய்யப்பட்டது.  அத்துடன் நீதிமன்றத்தில், அரசாங்கத்தின் சட்ட அதிகாரி –  அரசு வழக்கறிஞர் – ‘இலவசத் திட்டங்களைத்’  தடை செய்வதற்கான வழியைக் கண்டறிய நீதிமன்றத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.எனவே, நீங்கள் ஒரு வெளிப்புற பார்வையாளராக இருந்தால்,  நீங்கள் இதைப் பார்ப்பீர்கள்:•அரசியல் நிர்வாகத்தின் தலைவர் ஒரு பொது உரையில் ‘இலவசத் திட்டங்களை’  விமர்சிக்கிறார்.

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

• எங்கும் இல்லாமல், உச்ச நீதிமன்றம் திடீரென ‘இலவசத் திட்டங்கள்’  தொடர்பான வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறது.  அதை “மிகவும் தீவிரமான பிரச்சினை” என்று திரும்பத் திரும்ப அழைக்கிறது.

• ‘இலவசத் திட்டங்கள்’ வழக்கு ஆளுங்கட்சியின் தலைவரால் தாக்கல் செய்யப்படுகிறது.

.• விசாரணையில், அரசு வழக்கறிஞரும்,  நீதிமன்றமும் இந்தப் பிரச்சினை எவ்வளவு ‘தீவிரமானது’ என்பது குறித்தும், ‘இலவசத் திட்டங்களை’ கைவிட வேண்டும் என்பது குறித்தும் முற்றிலும்  ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒரு வெளிப்புற பார்வையாளராக   இதிலிருந்து என்ன முடிவுக்கு வருவீர்கள்?   நீதிமன்றமும் நிர்வாகமும் அடியொற்றி அணிவகுத்துச் செல்கின்றன  என்றும்  நீதிமன்றம் நீதித்துறை மதிப்புரையை வழங்கியுள்ளது என்றும்,  அவ்வாறு செய்யப்படவில்லையெனில் முற்றிலும் ஒரு பாகுபாடான அரசியல் பிரச்சாரமாக இது இருந்திருக்கும் என்று நீங்கள் முடிவு செய்ய மாட்டீர்களா?  நான்  இந்த நடத்தையைத்தான் “நிர்வாக (த்தின்) நீதிமன்றம்” என்று அழைக்கத் தோன்றியது என்று நீங்கள் நினைக்க மாட்டீர்களா?

உண்மையில், ரமணா, ‘இலவசத் திட்டங்களை’ ஒழுங்குபடுத்துவதில் உள்ள திடீர் ஆவேசத்தை நீங்கள் நினைவுகூறும்போது – மேலும் இதை மீண்டும் வலியுறுத்தியதற்கு மன்னிக்கவும் – அவர் பதவியேற்ற நாளில் இருந்து அவரது நீதிமன்றத்தில் அரசியல் கட்சி நிதியுதவி தொடர்பான உண்மையான பிரச்சினை நிலுவையில் இருந்தது.  ஆயினும்கூட, தேர்தல் பத்திரங்கள் வழக்கை விசாரித்து முடிவெடுப்பதற்குப் பதிலாக,  தலைமை நீதிபதி ஒரு தனிப்பட்ட வழக்கில் பல மணிநேரம் நீதித்துறை நேரத்தைச் செலவிட்டார் என்பது  – நாம் மிகவும் தொண்டுள்ளம் கொண்டவராக இருந்தால் – ஒரு பிரச்சினை அல்ல.  அவ்வாறு இல்லையென்றால்,   இது நிர்வாக(த்தின்) நீதிமன்றத்தின் மற்றொரு நிகழ்வு.

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

மாஸ்டர்  ஆஃப் தி ரோஸ்டர். 

ஒரு தலைமை நீதிபதி, அவரது பதவிக் காலத்தில், குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு முடிவுகளை பகுப்பாய்வு செய்யாமல் விட்டுவிடுகின்ற சூழ்நிலைகளில், அவருடைய பதவிக்காலத்தில் தீர்ப்புகள் இருந்ததா என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது முக்கியமானது, ஏனெனில், இந்த வலைப்பதிவில் நாம் முன்பு விவாதித்தது போல,  தலைமை நீதிபதியாக பல்வேறு  அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்க (மற்றும் மறு ஒதுக்கீடு – master of the roster) தலைமை நீதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், எப்போதும் 25 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இருப்பார்கள் என்பது உண்மைதான். நீதித்துறை சித்தாந்தம் உள்ளது என்பதும் ஒரு உண்மை. பின்வருவது என்னவென்றால்,  தலைமை நீதிபதியின் வழக்கு ஒதுக்கீடு அதிகாரம், விளைவுகளை பாதிக்கும் ஒரு அற்பமான சக்தியைக் கொண்டுள்ளது   என்பதுதான்.

இரண்டு கருத்துக்களை தெளிவாக கூறுகிறேன். முதலாவதாக,  இது “மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டரின்” அதிகாரங்களைப் பாதுகாப்பதற்கானப் பதிவு அல்ல. ஆனால்  இந்த அதிகாரங்களை புனிதப்படுத்திய தீர்ப்புகளை இந்த வலைப்பதிவு மீண்டும் மீண்டும் விமர்சித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஒரு குறிப்பிட்ட நெருக்கடியின் காரணமாக இந்தத் தீர்ப்புகள் எழுந்தன.  அங்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அதிகாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.  மேலும் அவரது பதில், அமர்வு ஒதுக்கீடுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தரப்பட்டவை.

நான் முன்பு  கூறியபடி, உச்ச நீதிமன்றம் போன்ற பல குரல் நீதிமன்றத்தில், தன்னிச்சையான ஒதுக்கீடு அல்லது பணி  மூப்பிற்கேற்ப அமைக்கப்படும் ஒரு நிரந்தர அரசியலமைப்பு அமர்வு மட்டுமே நியாயமான அமைப்பாக இருக்க முடியும். ஆனால்,  இதுதான் இப்போது நம்மிடம் உள்ள அமைப்பு  என்று அது கூறியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதற்கு தலைமை நீதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது. வழக்குகளை மறு ஒதுக்கீடு செய்வதற்கான முழு அதிகாரமும் இதில் அடங்கும் (உண்மையில், இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு அதிகாரம்). மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக,  தலைமை நீதிபதி  இந்த முடிவுகளின் மீது அதிகாரமும், செல்வாக்கும் செலுத்த முடியும்  என்பதே இதன் பொருள். அதனால் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை  தேர்வு செய்வது ஆய்விற்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

இது  தொடர்பான இரண்டாவது கருத்து: தலைமை நீதிபதி நம்பகமான நிர்வாக சார்பு நீதிபதிகளை நியமித்து நிர்வாக சார்பு   தீர்ப்புகளை பெறும் செயல்களுக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக்  கொள்ளும் சூழ்நிலையில், தலைமை நீதிபதி மற்றும் தனிப்பட்ட நீதிபதிகளுக்கு இடையே சில கூட்டுச்சதி உள்ளது என்பது வாதம் அல்ல.  மாறாக, ‘மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர்’ என்று தலைமை நீதிபதிக்கு  அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,  தானே அனைத்து தீர்ப்புகளையும் எழுதுவதற்குப் பதிலாக, பிற நீதிபதிகள் தீர்ப்பு தரும் போது அவர்கள் தரும் தீர்ப்புகளுக்கு மட்டுமே அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது போலவே, தலைமை நீதிபதி தனது பதவிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த  தீர்ப்புகளுக்கும் ஓரளவாவது பொறுப்பேற்கிறாரா இல்லையா என்பதே வாதம்.  ஒரு தலைமை நீதிபதி அரசியலமைப்புத் தீர்ப்புகளை எழுத வேண்டாம் எனத் முடிவு  செய்தால் – அது குறிப்பாக உண்மையாகிறது – அதற்குப் பதிலாக – அவரது பதவிக்காலத்தில் மற்றவர்கள் அதிக சுமையை ஏற்றுக் கொள்கிறார்கள் (நிச்சயமாக, தலைமை நீதிபதி குறிப்பிட்ட வழக்குகளை அவரது சகாக்களுக்கு விட்டுவிடுவதில் எந்தத் தவறும் இல்லை – ஆனால் அதற்காக வழக்குகளையும், நீதிபதிகளையும் தேர்வு செய்யும் முறை மாறுவதுதான் விவாதத்திற்குரியது).

அப்படியானால், தலைமை நீதிபதி ரமணா பதவியில் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தின்  ஒட்டுமொத்த சாதனை என்ன?  நீதியரசர் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முகமது ஜுபைரின் வழக்கில் வழங்கிய வலுவான பிணை விடுதலை உத்தரவு  சிவில் உரிமைகளுக்கான ஒரு மதிப்புமிக்க உத்தரவு என்பதை நியாயமாக ஒப்புக் கொள்ள வேண்டும்.  பீமா கோரேகான் வழக்கில் சுதா பரத்வாஜுக்கு வழங்கப்பட்ட இயல்பான உபா (யூஏபிஏ) பிணை விடுதலை உத்தரவில் தலையிட நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. ஒருவேளை அவை உச்ச நீதிமன்றத்தின் வேறு அமர்வுகளுக்குச் சென்றிருந்தால்,  இரண்டு வழக்குகளிலும் வேறுபட்ட தீர்ப்புகளை  ஒருவர் மிக எளிதாக கற்பனை செய்து பார்க்க முடியும். எனவே, இதற்கு முன்பு இதுபோன்ற வழக்குகளில் நேர்மறையான, சுதந்திரத்திற்கு ஆதரவான உத்தரவுகளை வழங்கிய வரலாற்றைக் கொண்ட அமர்வுகளுக்கு இந்த சிவில் உரிமைகள் வழக்குகளை ஒதுக்கியதற்காக, தலைமை நீதிபதிக்கு – மாஸ்டர் ஆஃப் ரோஸ்டருக்கு – நாம் கடன்பட்டிருக்கிறோம்.

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

எவ்வாறாயினும், அரசியலமைப்புத்  தொடர்பான வழக்குகளில்  நீதிமன்றத்தின் சாதனையை நாம் கருத்தில் கொள்ளும்போது, ​​ நமக்கு கிடைக்கும் படம் முன்பு இருந்ததைப் போலவே இருண்டதாகவே உள்ளது.   ரமணா பதவியில் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இரண்டு முக்கியமான தீர்ப்புகள் அந்நிய நிதியளிப்பு (ஒழுங்கு) சட்டத் (FCRA) தீர்ப்பு மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) தீர்ப்பு ஆகும்.  இவை இரண்டும் நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வுகளால் வழங்கப்பட்டன. நான் நீதிபதி கான்வில்கரின் பதிவை ஆராய்ந்து பார்த்தேன்.  அவர் ஒரு நிறுவனத்தின் செயல் அதிகாரியை விட அதிக நிர்வாக மனப்பான்மை கொண்ட நீதிபதி  என்பதை அறிந்துக் கொண்டேன்.  இந்த இடுகையில், முக்கியமான சிவில் உரிமைகள் பிரச்சினைகளில், இந்த இரண்டு தீர்ப்புகளும் ஒரு நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் மிகவும் அதிக அரசு சார்பான தீர்ப்புகள் என்று சொன்னால் போதுமானது.இந்த வழக்குகள் நீதிபதி கான்வில்கருக்கு தலைமை நீதிபதி ரமணாவால் ஒதுக்கப்படவில்லை . அவருக்கு முந்தைய தலைமை நீதிபதிகளால் ஒதுக்கப்பட்டவை என்பதும், அதனால் நீதிபதி ரமணாவுக்கு இவற்றில் நேரடி பொறுப்பு இல்லை என்பதும் ஒப்புக்   கொள்ளத்தக்கது.  ஆனால் ரமணா வழக்குகளை ஒதுக்குவதற்கும் மறு  ஒதுக்கீடு செய்யவதற்கும் முழுமையான அதிகாரம் பெற்ற பிறகே  அந்த வழக்குகள் அவரது கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட்டன என்பதை புறக்கணித்துவிட முடியாது.

அரைக்கிணறு தாண்டிய தேசத்துரோக வழக்கு

இறுதியாக,  மறு அறிவிப்பு வரும் வரை  நாட்டில் தேசத்துரோக வழக்குகள் விசாரணை நிறுத்தப்படுவதாக  ரமணா அமர்வு  வழங்கிய இடைக்கால உத்தரவை ஒருவர் சுட்டிக்காட்டலாம்.  தன் சொந்த உரிமையில், நாட்டில் தேசத்துரோக வழக்கு விசாரணை தடுத்து நிறுத்தபட்டுள்ளதா? என்பது சிறிது சந்தேகத்திற்குரியது எனினும் அது  ஒரு வகையில் சிறந்ததுதான். ஆனால் இங்கே மீண்டும்,  சூழல் முக்கியமானது.

கேள்விக்குரிய வழக்கு தேசத்துரோகத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்தது. தேசத்துரோகம் இன்னும்  ஏதேனும் நோக்கத்திற்கு உதவுகிறதா என்பதை ஆராய ஒரு குழுவை அமைப்பதாகக் கூறி அரசாங்கம் காலங்கடந்த முயற்சித்தது. இதற்கு, ஒரே ஒரு பொருத்தமான நீதித்துறை பதில் மட்டுமே இருக்க முடியும். அது அரசாங்கத்திடம் நாகரீகமாக,  ஆனால் உறுதியாக,  அரசு அதன் குழுவை அமைப்பது அதன் முழு சுதந்திரம் என்றும், ஆனால் நீதிமன்றம் விசாரிக்கும் அரசியலமைப்பு வழக்கில் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறியிருக்க வேண்டும்.  ஆனால்  தலைமை நீதிபதி ரமணா அமர்வு அதைச் செய்யவில்லை.  மாறாக, இடைக்கால உத்தரவை நிறைவேற்ற அரசாங்கத்தின் வாக்குமூலத்தைப் பயன்படுத்தியது. இதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, அனைவரையும் கட்டுப்படுத்தும் இறுதி முடிவான ஒரு தீர்ப்பைப் போலல்லாமல்,  ஒரு இடைக்கால உத்தரவை எந்த நேரத்திலும், எந்த ஒரு  அமர்வு முன் சென்றாலும் ரத்து செய்து விட முடியும். இரண்டாவதாக – நான் இந்தப் பதிவில் சற்று விரிவாகச் சுட்டிக் காட்டியது போல – அரசாங்கத்தின் வசம் உள்ள குற்றவியல் சட்டத்தின் பரந்த அளவிலான விதிகள் அதன் விமர்சகர்களை துன்புறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் கொடுக்கப்பட்டவை.  உபா இதற்கு சற்றும் குறைந்ததல்ல.

தேசத்துரோகக்  குற்றத்தின் மீதான எந்தவொரு நீதித்துறை உத்தரவும், அது பேச்சு சுதந்திரத்தின் மீது நிறுவப்பட்ட அரசியலமைப்பு கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்தும் வலுவான காரணங்கள் மற்றும் உரிமைகளை அரசு கட்டுப்படுத்தக்கூடிய வரம்புகளுடன் இல்லாவிட்டால்,  வெறும் குறியீட்டு மதிப்புடையதாக இருப்பதே சிறந்தது.  அவ்வாறு இல்லாவிட்டால் கூறப்படும் காரணங்கள் அரசியலமைப்பு தரநிலைக்கேற்ப மற்ற,  மிகவும் கடுமையான விதிகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்படலாம். ஒரு இடைக்கால உத்தரவு, வரையறையின்படி, அதில் எதையும் செய்யத் தவறிவிட்டது. இதனால்தான் இதனை, சிறந்த முறையில்  பாதி கிணறு தாண்டிய வேலை என்று கூறுகிறோம்.  ஆம், மறு அறிவிப்பு வரும் வரை, தேசத்துரோக குற்றத்திற்காக மக்கள் மீது வழக்குத் தொடர முடியாது.  அது ஒரு நல்ல விஷயம். ஆனால், நாம் பலமுறை பார்த்தது போல், அரசு உங்களை விசாரணையின்றி பல ஆண்டுகளாக சிறையில் வைத்திருக்க விரும்பினால், அதற்கு தேசத்துரோகச் சட்டம் தேவையில்லை.

தேசத்துரோகத்திற்கான அரசியலமைப்பு  சட்ட வழக்குகளை ரமணா எடுத்துக் கொண்டபோது, ​​ அந்த பிரச்சனைகளில் சிலவற்றை தீர்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  இருப்பினும், வருந்தத்தக்க வகையில், அவர் இறுதியாக நிறைவேற்றிய இடைக்கால உத்தரவு அவ்வாறு எதையும் செய்யவில்லை..

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டது ஏன்? – பாஜக ஆடும் அரசியல் விளையாட்டு

முடிவுரை

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பது எளிதல்ல. அதுவும் அறுதிப் பெரும்பான்மை அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பது எளிதல்ல.   அரசியலமைப்பின் அணுகுமுறை இங்கிலாந்து மட்டைப்பந்து வீரர் டக்ளஸ் ஜார்டின் உடலை குறிபார்த்து (குச்சியை குறி பார்த்து அல்ல) பந்து வீசிய ‘பாடி லைன் கிரிக்கெட்’   தொடருக்கான அணுகுமுறையைப் போன்றது: விதிகளை அவற்றின் முழுமையான முறிவு புள்ளிவரை நீட்டி,  அவற்றின் தாக்குதலிலிருந்து நீங்கள் எந்த அளவு தப்பிக்க நடுவர் அனுமதிப்பார் என்பதை பாருங்கள் என்பது போன்றதுதான்.

இது போன்ற சமயங்களில் விமர்சகர்கள் நீதிமன்றத்தின் மீதான எதிர்பார்ப்புகளைக்  கூர்தீட்டிக் கொள்வது நியாயமானது.  மேலும் – குறைந்த அரசியல் மூலதனம் கொண்ட அரசியல் நடிகராக – நீதிமன்றம் தனக்கென ஒரு இடத்தைப் பெற பேரம் பேச வேண்டும்.   மேலும் அந்த பேரத்தில் ஓரளவு சமரசம் இருப்பது பாராட்டுக்கு உரியது.

ஆனால் நீதிமன்றம் இருக்கும் கடினமான நிலையைக் கண்டு ஒருவர் அனுதாபப்பட  வேண்டும் என்றாலும்,  நீதிமன்றம் அதற்காக முயற்சியே  செய்யவில்லை என்று தோன்றும்போது ஏமாற்றமாகவே உள்ளது. அவரது முன்னோடிகளைப் போலவே,  தலைமை நீதிபதி ரமணாவின் உறுதியான அரசியல் சாசன வழக்குகளைத் தவிர்க்கும் உறுதியானது, பத்து அடி நீள பாறைக் கம்பு மூலம் நீதித்துறை எச்சரிக்கையிலிருந்து நீதித்துறை கோழைத்தனம் வரை  நீளும்  கோட்டை தாண்டுவது போன்றது. குறைந்தபட்சம் அரசை பொறுப்புக் கூறலுக்கு உள்ளாக்க  முயற்சிப்பது என்ற ஒரு நீதிமன்றத்தின் அடிப்படை வேலையைக் கூட செய்ய மறுப்பதை மன்னிக்கவே முடியாது. இதைத்தவிர வேறு எதற்காக உச்ச நீதிமன்றத்தை முதலிடத்தில் வைத்திருக்கிறோம்?ஆனால் பெகாசஸ் வழக்கு மற்றும் ‘இலவசத் திட்டங்கள் ‘ வழக்கு (வெவ்வேறு சூழல்களில்) காட்டுவது போல், கவலைக்குரியது உரிமைகளைப் பாதுகாக்க இயலாமை மட்டுமல்ல,  இது நிர்வாகத்துடன் அடியொற்றிச் செல்லும், அதன் கேடயமாகவும் வாளாகவும் செயல்படும் நிர்வாக(த்தின்) நீதிமன்றத்தின் உருவாக்கம் ஆகும்.  .பெகாசஸில்,  விசாரணையின் முதல் நாளிலேயே, “ஆம் அல்லது இல்லை” என்ற கேள்வியைக் கேட்க மறுத்ததிலிருந்து,  இப்போது, அது தொழில்நுட்ப குழு அறிக்கையை வெளியிட மறுத்தது வரை நீதிமன்றமானது அரசாங்கத்தை பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகச் செயல்பட்டது – ‘இலவசத் திட்டங்கள்’ வழக்கில்,  அரசியல் நிர்வாகிகள் எங்கும் இல்லாத ஒரு விவாதத்தை பெருக்கி, நீதித்துறை சரிபார்ப்பை வழங்கிய வகையில்  நீதிமன்றம் வாளாகச் செயல்பட்டது.

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

நிர்வாக(த்தின்) நீதிமன்றம் என்ற போக்கு தலைமை நீதிபதி ரமணாவிலிருந்து தொடங்கவில்லை. மேலும் – குறைந்தபட்சம் – அது அவரால் மோசமாகிவிடவில்லை என்பதற்காக அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். அவரது முன்னோடிகளின் பதவிக்காலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இல்லாத ஒளிப்புள்ளிகளுக்காகவும் நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்.  இதற்கு பினாமி சட்டத் தீர்ப்பு,  நீதிபதி கான்வில்கரின் பண மோசடித் தடுப்புச் சட்டத்  தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் முடிவு (வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இருந்தாலும்), தேசத்துரோக  வழக்குகள் விசாரணை மீதான இடைக்கால உத்தரவு மற்றும் முகமது சுபைரின் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு ஆதரவான அமர்வு ஒன்றுக்கு ஒதுக்கியது  ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால் நாளின் முடிவில்,  நீதிமன்றத்தை அவர் பதவியேற்றபோது இருந்ததை விட சிறப்பாக்கி விட்டு வெளியேறுகிறாரா என்று  நாம் நேர்மையாக நம்மை நாமே கேட்டுக்கொண்டால், பதில் “இல்லை” என்றே கூற வேண்டியதிருக்கும். நிர்வாக நீதிமன்றம் மற்றும் நிர்வாகத்தின் நீதிமன்றத்தை நோக்கிய உச்ச நீதிமன்றத்தின் நகர்வு தலைகீழாகவோ  மாறவோ அல்லது  தடுத்து நிறுத்தப்படவோ இல்லை.  ஆனால்  ஓரளவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது  என்பதே ஒரு நல்ல செய்திதான்.தலைமை நீதிபதி ரமணாவின் பதவிக்காலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ள நிலையில்,  அவரது வாரிசுகள் உச்ச நீதிமன்றத்தை எந்த திசையில் கொண்டு செல்வார்கள் என்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்.

 www.thewire.in இணையதளத்தில்  கெளதம் பாட்டியா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்