Aran Sei

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

ஞானத்தின் மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது.

– வேதாகமம்

“அரசுரிமையைத் துறந்த புத்தர் ஞானி இல்லையா” என்கிற ஐயம் எழாமலில்லை. தமிழக அரசியலில் தன் தனித்த அறிவாளுமையால்
வேர்விட்டுக் கிளைபரப்பி பெருமரமாக உருவெடுத்திருக்கும் தொல். திருமாவளவன் என்கிற அரசியல் தலைவரைக் குறித்துக் கொஞ்சமே கொஞ்சமேனும் பேச விழையும் இக்கட்டுரையில் மட்டும் ஞானம் என்பதை அறிவு என்று புரிந்து கொள்வோம். அது தான் அவரை அங்கனுரிலிருந்து பாராளுமன்றம் வரை அழைத்துச் சென்றிருக்கிறது.

மக்கள் கூட்டம் பொங்குகிறது. காற்றில் இரைச்சல் சத்தம். மழை வருவதற்கான அறிகுறிகள் வானில் வந்துவிட்டன. அவர் மாநாட்டுக் கூட்டத்து மேடையில் நடு நாயகமாக நிற்கிறார். அவர் நின்ற இடத்திலிருந்து ஒரு வலிய குரல் எழுகிறது.
“நீங்கள் இன்றிலிருந்து நரிக்குறவர்களல்ல, விடுதலைச் சிறுத்தைகள். குறவன் என்பது இழிச்சொல்லல்ல. அது தமிழறியாதவன் பாடு. குறவன் என்றால் தலைவன் என்று பொருள்”. மக்கள் கூக்குரலிட்டனர். அவர்களது கரகோஷங்கள் காற்றை நிரப்பியது. திருமாவளவனில் உள்ள “திரு” இன்னுமின்னும் பொலிவு கூடியது. அந்தக் கணத்தில் அவர் என் இதயத்தை மிச்சம் வைக்காமல் அள்ளிக் கொண்டார். ஐந்தரை அடி உயரம் கொண்ட அவர் நொடியில் நூற்றி இருபது அடியாக உயர்ந்தார்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

பேச்சு தான் அரசியலில் மூலதனம். பேசிப்பேசியே ஆட்சியைக் கைப்பற்றிய அரசியலாளர்கள் எண்ணிக்கையில் அதிகம். ஆதியிலே சொல் தான் இருந்தது. சொல் உள்ளவன் ஜெயிக்கக்கடவன். சொல்லே சகலமும். அதை அவர் அவ்வளவு லாவகமாக அரசியல் உரையில் கையாளுகிறார்.

“குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கிறான். சாதிக்கொரு குரங்கு தோன்றியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை” – என்கிற அவருடைய சொற்கள் மிக எளிமையாக சாதி ஒழிப்பைப் பேசி விடுகின்றது. அந்தச் சொற்கள் பென்னம் பெரிய சாதிக் கட்டுமானக் கருங்கற்கோட்டைச் சுவரிலும் ஒரு சிறிய பொத்தலைப் போட்டு விடுகிறது.

அப்படி அவர் போட்ட பல பொத்தல்களில் இந்தப் பொத்தல் எனக்கு மிகவும் பிடித்தமானது. தர்க்கப்பூர்வமானது. தமிழ்ப்பூர்வமானது.
சமூக வலைதளங்களில் பெண்களால் அதிகம் பகிரப்பட்டது.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

“ஆண்மை என்பது ஆளுமை என்ற சொல்லிலிருந்து வருகிறது. பெண்மை என்பது பேணுமை என்ற சொல்லிலிருந்து வருகிறது. பெண்ணுக்கும் ஆளும் திறம் உண்டு. ஆணுக்கும் பேணும் திறம் உண்டு. ஆண்மையோ பெண்மையோ அதை உறுப்போடு தொடர்புப்படுத்தி பார்க்கும் பார்வை தவறு. அது குணநலன் சார்ந்தது”

தமிழக அரசியலின் “திசைவழிப்போக்கை” தீர்மானம் செய்பவர்களில் முக்கியமானவர் திருமாவளவன் என்பதில் யாருக்கும் ஐயமில்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எனக்கு இதில் உவப்பாய் இருக்கிற விஷயம் வேறு.

“Pathway – திசைவழிப்போக்கு” என்ற வார்த்தைப் பிரயோகத்தை அவரால் தான் அறிந்து கொண்டேன் என்று “நீயா நானா” கோபிநாத் ஒரு காணொளியில் பேசியிருக்கிறார். இந்தத் “தமிழ்ப்புள்ளி” அதிமுக்கியமானது. ஒருவரின் ஆளுமையை வகுக்கக் கூடியது. இப்படி எப்போதும் ஒளிவிடும் புள்ளி தான் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் ஈர்க்கும் புள்ளியாக இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

இந்தத் தமிழ்ப்புள்ளி ஒரு புள்ளியில் திரிபடைந்து அரசியற் புள்ளியாக மாறுகிறது. ஒடுக்குமுறை எதிர்ப்புச் செயல்பாடாகவும்
பண்பாட்டுச் செயல்பாடாகவும் லட்சம் தொண்டர்களைத் தங்கள் பெயரைத் தமிழில் மாற்றும்படிச் செய்தார் என்கிற விஷயம் இன்றைய “ஹிந்தி மயமாக்கல்” சூழ்நிலையில் வெகுவாகப் பேசப்பட கொண்டாடப்பட வேண்டியது.

“இந்தியதேசியம் தான் சாதியைக் காப்பாற்றுகிறது. சாதி தான் இந்து மதத்தைக் காப்பாற்றுகிறது. சாதியற்றவர்கள் தமிழர்கள். சாதி ஒழிப்பிலிருந்தே தமிழ் தேசியம் உருவாகும் ” என்ற திருமாவளவனின் கருத்தை ஆழமாக யோசித்துப் பார்த்தபோது எனக்கு வேறொரு வினா தோன்றியது. “சாதி ஒழிப்பே இந்தியதேசியம்” என்று யாராவது பேசுகிறார்களா என்ன? இப்படி அவருடைய உரைகளிலிருந்து வினாக்களை வளர்த்து விவாதிக்கலாம். அதற்கு அவர் உரை வாய்ப்பளிக்கவே செய்கிறது.

சென்ற வருடம் திருமாவின் பிறந்தநாள் சமூக வலைத்தளங்களில்
வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டடது. அங்கு நான் கண்டது அவர் கொள்கை முரண்பாடு கொண்ட அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்படுகிறார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாழ்த்துக் காணொளியில் ஒரு சுவையான விஷயம் பகிரப்பட்டது. அவர் வாழ்த்தில் “தந்தைக்கு பெயர் சூட்டிய மகன் திருமா” என்று குறிப்பிட்டார்.

மேலும் அதை வெறும் பெயர் மாற்ற தமிழ் அரசியல் என்று மட்டும் நான் புரிந்து கொள்ளவில்லை. அது நெடுங்கொடிய வரலாற்றுடன் தொடர்புடையது.
முன்பெல்லாம் சொந்தமாய் ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். அப்படிப்பட்ட இடத்தில் தான் இன்று தொல்காப்பியனும் திருமாவளவனும் வருகிறார்கள்.

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

சாதி ஒழிப்பு குறித்து நாம் மூச்சுமுட்ட மைக் உடைய எவ்வளவு பேசினாலும் ஒரு பெரும் கூட்டத்திற்கு அதன் சாரம் கடத்தப்படவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. காந்தி தன் இறுதி காலத்தில் மதத்தின் சாதியின் மையப்புள்ளியை நேரில் சந்தித்து மாண்டார். “பெரும்பான்மைச் சாதிய சமூகத்தின் மனமாற்றம் தான் சாதி ஒழிப்பின் முதல் படி” என்பது காந்தியச் சிந்தனை.

அதைத் திருமாவளவன் அவரது வாழ்வனுபவத்தின் மூலம் கண்டுகொண்டார் என்று தோன்றும். அதனால் தான் அவர் இப்படிச் சொல்கிறார். அவர் அவருடைய சொற்களால் ஒளியைப் பாய்ச்சினார் என்றே சொல்வேன்.

“சாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் மட்டுமே சாத்தியம்”

“ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் வரியை தவறாகப் புரிந்து கொண்ட சகோதரர்கள் ஓய்வே இல்லாமல் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொண்டிருந்த காலம். எப்போதும் வன்முறை வெறியாட்டங்கள் நடக்கும் எளியோர் குடியிருப்புப் பகுதியில் நின்று திருமா இதைப் பேசுகிறார். 90களின் முற்பகுதி..

“சேரிகளை ஆயுதக்கிடங்காக மாற்றுங்கள். எல்லார் வீட்டிலும் திருப்பாச்சி அரிவாள் ஒன்று இருக்கட்டும். ஆதிக்க வெறியுடன் உள்ளே நுழைபவன் எவனாய் இருந்தாலும் வெளியே போகும் போது கை, கால் இல்லாமல் திரும்பட்டும். அந்த பயம் தான் நம் பாதுகாப்பு”

இப்படியான பேச்சுகள் அவர் உரையில் வெளிப்பட்ட காலத்தில், அவர் பேசியது அரசியல் மேடை இல்லை அது பெரும்பாலும் இரங்கற்கூட்டமாகத் தானிருந்திருக்கிறது. மேலும் அவர் அப்போது முனைவர் இல்லை, கட்சி துவங்கவில்லை, அவர் பெயர் கூட தொல். திருமாவளவன் இல்லை.

சமூகவலைதளங்களில் திரும்பத் திரும்ப “திருமாவின் அவதூறுப் பேச்சு” என்று தலைப்பிட்ட காணொளி பரப்பப்படுகிறது. அதைக் காணும் யாருக்கும் ஒரு வெறுப்பு உருவாவது இயல்பே.

“காதலித்த குற்றத்திற்காக ஒருவனை பிடித்து அடித்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று பேச வைத்து அதை வீடியோ எடுத்து அவன் தலையை வெட்டித் தண்டவாளத்தில் போட்டுவிட்டார்கள். கொலையுண்டவனின் இரங்கற்கூட்டத்தில் நின்று பேசிய பேச்சு அது. கொலைக்கு எதிராகப் பேசாதவர்கள் என் பேச்சுக்கு குறை சொல்வது நியாயமா”..? என்று இன்னொரு கூட்டத்தில் பேசினார் திருமா. அவருடைய கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை. எப்போதும் கலவரம் முடிந்த பின் வரும் போலீசாக நாம் ஒருபோதும் இருக்கக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

அடங்க மறு” – கொஞ்சம் பதற்றமுறச் செய்கிறது தான். அதன் அர்த்தத்தை நோக்குங்கள். “ஒத்துழையாதே” என்ற பொருளில் தான் தொனிக்கிறது. இன்று இத்தனை கனிந்திருக்கும் திருமா “ஒத்துழையாதே” என்று தான் சொல்வாரென்றே தோன்றுகிறது. ஆனாலும் “அடங்க மறு” என்பதில் இருக்கிற ஏதோ ஒன்று “ஒத்துழையாதே” என்பதில் இல்லை தானே.?

மகாகவி பாரதியின் மறைவின் போது அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படை என்று சொல்கிறார்கள். அப்போதெல்லாம் ஒரு எழுத்தாளனின் மறைவு இன்னொரு எழுத்தாளனுக்கு தெரிந்திருக்கவில்லை. அல்லது அதைக்குறித்து ஊடகங்களுக்கு கவலை இல்லை. இப்போது சமூக வலைதளங்களின் உதவியால் நிலைமை மாறி இருக்கிறது.

தமிழக அரசியல்வாதிகளில் திருமாவளவன் ஒருவரே நேரில் சென்று அசோகமித்திரனுக்கு அஞ்சலி செலுத்தியதாக அறிந்தபோது, அஞ்சலி செலுத்துவது ஒரு துக்க நிகழ்வாக இருக்கும்பட்சத்திலும் ஒரு இலக்கிய வாசகனாக நான் அவ்வளவு உவகையடைந்தேன்.

சமீபத்தில் கோவை ஞானி அவர்களின் மறைவிற்குக்கூட
தன்னுடைய அஞ்சலியை அறிக்கையாக பதிவு செய்திருந்தார். கவிஞர் நேசமித்திரனின் “துடிக்கூத்து” என்ற கவிதைத் தொகுப்புக்கான பாராட்டு அறிக்கையை வாசித்த போது தான் அப்படி ஒரு கவிஞர் இருக்கிறார் என்பதையே நான் தெரிந்து கொண்டேன். திருமாவளவன் என்பவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் அதற்கும் மேல் என்று புரிந்து கொண்ட தருணம் அது.

அரசியல் என்பதற்கு அப்பால் சென்று கலையின் முக்கியத்துவத்தை பண்பாட்டு முக்கியத்துவத்தை கண்டுகொள்ளும் அரசியல் ஆளுமையாய் இருப்பதாலேயே கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒருசேரக் கொண்டாடுகிறார்கள்.

திருமாவளவனை போஸ்டர் மூலமாகவோ பேனர் மூலமகாவோ அறிந்து வைத்திருக்கும் ஒருவர் “அமைப்பாய் திரள்வோம்” என்ற நூலை வாசிக்கையில் அதிர்ச்சிக்குள்ளாவார். அந்த நூலில் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல, அறிவில் விளைந்த செழுங்கனி. “அமைப்பாய் திரள்வோம்” என்ற நூலை வாசிக்கும் ஒரு இளைஞன் மனதில் அவர் என்றென்றைக்குமாக குடிபுகுந்து விடுவார். அந்த நூலில் உள்ள இந்த வரிகளில் புத்தர் மின்னினார்.

“பிறர்நலன் அல்லது பொதுநலன்களுக்கான புரிதலோடு தன்னையறிதலும் பிறரை அறிதலும் நிகழும்போது, பிறர்வலியையும் தன்வலியாய் உணர முடியும். இவ்வாறு உணரமுடியாதவர்களால் பிறரோடு இணைந்து தொடர்ந்து இயங்க முடியாது”.

காலத்தால் ஆறாத வடு: நாஜிக்கள் செய்த படுகொலையின் நினைவு நாள்

“அமைப்பாய் திரள்வோம்” என்ற அரசியல் நூல் செயற்களத்தைப் பற்றியது. அரசியற்களத்தில் எது சரி எது தவறென அவரே நேரடியாக மோதிக் கற்றுக்கொண்ட உண்மைகளை உள்ளடக்கியது. அரசியல் நோக்கி வரும் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.

அந்த அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டில் ஒரு சம்பவம். புத்தகத்தைப் பாராட்டிப் பேசிய தோழர்கள் “நாம் ஒரு பயத்தை உருவாக்க வேண்டும்” என்ற கருத்தை மீள மீள பதிவு செய்தனர். திருமா அதற்கு இப்படி விளக்கம் அளிக்கிறார். கனிந்த அரசியல்வாதியின் உரை,

“பயத்தினாலோ அச்சுறுத்தலினாலோ இங்கு எதையும் சாதிக்க முடியாது. ஒருவன் அதிகாரத்தில் இருக்கும்போது இன்னொருவனை அச்சுறுத்துவான். அதிகாரம் கை மாறும்போது அவனே அச்சுறுத்தப்படுவான். அச்சுறுத்தல் என்பது நிரந்தரம் அல்ல. எதிரிகளை Moral fearக்கு ஆட்படுத்துவோம். எதிரிகளையும் ஜனநாயகப் படுத்துவோம். அச்சுறுத்தலின் மூலம் ஒரு குழந்தையைக் கூட அடிபணிய வைக்க முடியாது”.

மொழி ஒரு தீக்குச்சி

கந்தகம் பரவிக்கிடக்கும் பூமியில்
சொல்லின் நீட்சியில்,
ஏற்றஇறக்கங்களில் பற்ற வைத்திட முடியும்.
கொளுத்திப் போட எல்லா நியாயங்களும்
இருந்தும், அழிப்பதற்காக அல்லாமல்,
நம்பிக்கையின் விளக்கை ஏற்றுவதற்காக
தீக்குச்சியை பத்திரப் படுத்துகிறானே ஒருவன்.
அவனே தலைவன்.

நான் இந்தக் கவிதையை திருமாவளவனுக்குச் சமர்ப்பிக்கிறேன். எழுதியவர் யாரென்று தெரியாது. இணையத்தில் பெயரில்லாமல் வந்தது. எழுதியது தமிழில். ஏதோ ஒரு தமிழர் என்று மட்டும் தெரிகிறது. ஆகையால் இந்த இடத்தில் இந்தக் கவிதை இன்னும் பொலிவு பெறுகிறது.

“விளிம்புநிலை என்றால் மையம் என்று ஒன்று இருக்கும். மையம் என்றால் அதிகாரத்துடன் தொடர்புடையது. அதிகாரத்துடன் தொடர்பற்றவர்கள் விளிம்பு நிலைச் சமூகம் ஆவார்கள். அதிகாரத்துடன் தொடர்பற்றவர்களில் உழைப்பால் சுரண்டப்படுபவர்களும் சாதியால் சுரண்டப்படுபவர்களும் பாலினத்தால் சுரண்டப்படும் பெண்களும் திருநங்கைகளும் அடக்கம். இந்த ரீதியில் என்னை ஒடுக்கப்பட்டோருக்கான தலைவன் என்று சொல்வதில் எனக்குப் பிரச்னை இல்லை. நான் ஒடுக்கப்பட்டோரின் தலைவன் தான்” என்று சொன்னவர் திருமாவளவன். தனித்தனியாக தீவு போல் வாழ்வதில் அர்த்தமில்லை. இணைப்பை உருவாக்க முயற்சிக்கும் முனைவர். திருமாவளவனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

கட்டுரையாளர்: எழுத்தாளர் மனோஜ் பாலசுப்பிரமணியன்

Dr Saravanan exposes Annamalai & BJP Divisive Politics | PTR vs Annamalai | Dr Saravanan Madurai Dmk

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்