Aran Sei

போர் எதிர்ப்பு சமாதானமும், தேசங்களின் விடுதலையும், சோசலிசமும் – லெனின்

லெனின்

1917-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடந்த ரசியப் புரட்சிக்கு அடுத்த நாள் சோவியத்துகளின் இரண்டாவது அகில ரஷ்ய காங்கிரசில், போர் நிறுத்தம், சமாதானம் பற்றியும், தேசங்களின் சுயநிர்ணய உரிமை (விடுதலை) பற்றியும் லெனின் முன் வைத்த அறிக்கையை லெனினின் நினைவுநாளான ஜனவரி 21-ஐ ஒட்டி வெளியிடுகிறோம்.

ரசியாவின் பாட்டாளி வர்க்கப் புரட்சி 1914-ம் ஆண்டு முதல் நடந்து வந்த முதல் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் முதல் பாலஸ்தீனம், திபெத், உய்கூர், பாஸ்க், வட அயர்லாந்து வரை, இந்தியாவின் தேசிய இனங்களுக்கும் இன்றைக்கும் காலப்பொருத்தமான அறிக்கை இது.

சமாதானம் பற்றிய அரசாணை

க்டோபர் 24 – 25 புரட்சியால் உருவாக்கப்பட்டதும், தொழிலாளர்கள், படையாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்துகளை அடிப்படையாக்கியதுமான, தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கம், ஒரு நீதியான, ஜனநாயகமான சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கும்படி போரில் ஈடுபட்டுள்ள எல்லா மக்களையும் அவர்களது அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறது.

போரினால் வளமும் வலுவும் இழந்து, அலைக்கழிக்கப்பட்டும் துன்புற்றும் உள்ள போரிடும் நாடுகளின் மிகப்பெரும் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கத்தினரும் இதர உழைக்கும் மக்களும் ஒரு நீதியான, ஜனநாயக சமாதானத்திற்கு ஏங்கி நிற்கிறார்கள். ஜாரின் முடியரசு வீழ்த்தப்பட்டது முதல் ரஷ்யாவின் தொழிலாளர்களும் விவசாயிகளும் இத்தகைய ஒரு சமாதானம் வேண்டும் என்று மிகவும் திட்டவட்டமாயும் விடாப்பிடியாகவும் கோரி வந்திருக்கிறார்கள். இத்தகைய ஒரு சமாதானத்தை அரசாங்கம், பிரதேசக் கைப்பற்றல்கள் இல்லாத (அதாவது அன்னிய நிலங்களைப் பிடித்தடக்கல் இல்லாத, அன்னிய தேசங்களை வலுவந்தமாக இணைத்துக் கொள்வது இல்லாத ) இழப்பீட்டுத் தண்டத் தொகைகள் இல்லாத ஓர் உடனடி சமாதானம் என்றே பொருள் கொள்கிறது.

இந்த வகையான சமாதானத்தைப் போரிடும் நாடுகள் யாவும் உடனடியாகச் செய்து கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசாங்கம் முன்மொழிகிறது. இத்தகைய சமாதானத்தின் எல்லா நிபந்தனைகளையும், எல்லா நாடுகளின் எல்லா மக்களினங்களின் மக்கள் பிரதிநிதிகளின் அதிகார பூர்வமான சட்டமன்றங்கள் இறுதியாக உறுதி செய்வதை எதிர்நோக்கி, இப்போதே உறுதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கான தனது ஆயத்தத்தை அது வெளிப்படுத்துகிறது.

பொதுவாக ஜனநாயகவாதிகளின் குறிப்பாகத் தொழிலாளர் வர்க்கத்தின் நீதி உணர்வுக்கு ஏற்ப, அரசாங்கம் அன்னிய நாடுகள் கவர்ந்து கொள்ளப்படுவதையும் பிரதேசக் கைப்பற்றல்களையும் பின்வரும் பொருளில் கருதிப்பார்க்கிறது. அதாவது, சிறிய அல்லது பலவீனமான தேசம் ஒரு பெரிய வலிமை மிகுந்த அரசாக அந்தத் தேசத்தின் துல்லியமான தெளிவான சுயவிருப்பமான ஒப்புதலும் விருப்பமும் வெளியிடப்படாமலே கூட்டி இணைக்கப்படுகிறது. இத்தகைய நிர்ப்பந்தமான கூட்டிணைவு நடைபெற்ற காலம் பொருட்படுத்தப் படுவதில்லை. சம்பந்தப்பட்ட அரசுடன் வலுவந்தமாகக் கைப்பற்றிச் சேர்க்கப்பட்ட, அல்லது அதன் எல்லைகளுக்குள் வலுவந்தமாக வைத்திருக்கும் தேசத்தின் வளர்ச்சி அல்லது பின் தங்கிய நிலைமையும் பொருட்படுத்தப் படுவதில்லை. இந்த தேசம் ஐரோப்பாவில் இருக்கிறதா அல்லது தொலைவான கடல் கடந்த நாடுகளில் இருக்கிறதா என்பதும் பொருட்படுத்தப்படுவதில்லை.

ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைகளுக்குள் ஒரு தேசம் அது எதுவாயினும் சரி, அதன் வெளிப்படையான விருப்பத்துக்கு – இவ்விருப்பம் பத்திரிகைகள், பொதுக் கூட்டங்கள், கட்சிகளின் முடிவுகள், தேசிய ஒடுக்கு முறையை எதிர்த்த கண்டனங்கள் எழுச்சிகள் ஆகிய எந்த வழியில் வெளிப்படுத்தப்பட்ட போதிலும் சரி – நேர்மாறாக அதற்கு சுதந்திரமான ஓட்டு மூலம் தனது அரசுவடிவத்தைப் பற்றி முடிவு செய்வதற்கான உரிமை வழங்கப்படாவிட்டால் – இந்த ஓட்டு கூட்டி இணைக்கும் அல்லது பொதுவாக வல்லதான அரசின் துருப்புக்கள் முற்றாக வெளியேறிய பிறகு, நிர்ப்பந்தம் கிஞ்சிற்றும் கொண்டுவரப்படாத நிலையில் எடுக்கப் படும் – அத்தகைய கூட்டிணைவு பிரதேசக் கைப்பற்றல் ஆகும் அதாவது கவர்ந்து பற்றுதலும் வன்முறையும் ஆகும்.

அவை வென்று கைப்பற்றியுள்ள பலவீனமான மக்களினங்களை வல்லமையும் செல்வம் படைத்தவையுமான தேசங்கள் இடையே எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்ற பிரச்சினை மீது இந்தப் போரை நீட்டிப்பதானது மனித குலத்துக்கு எதிரான மாபெரும் குற்றம் என்று தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கம் கருதுகிறது. எனவே, எவ்விதமான விதிவிலக்கும் இன்றி எல்லா மக்களினங்களுக்கும் சம அளவில் நீதியானதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிபந்தனைகளின் மீது இந்தப் போரை நிறுத்தி உடனடியாக சமாதான நிபந்தனைகளில் கையொப்பம் இடுவதென்ற தனது வைராக்கியத்தை முழுப்பற்றுடன் அறிவிக்கிறது.

அதே சமயம் மேலே குறிப்பிடப்பட்ட சமாதான நிபந்தனைகளை ஓர் இறுதி எச்சரிக்கையாகக் கருதவில்லை என்று தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கம் தெரிவிக்கிறது. வேறு சொற்களில் கூறினால், இதர சமாதான நிபந்தனைகளைச் சிந்தித்துப் பார்க்கத் தயாராக உள்ளது. போரிடும் நாடுகள் எதுவும் அவற்றை சாத்தியமான அளவு விரைவில் வெளியிட வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்துகிறது. சமாதான நிபந்தனைகளில் அப்பட்டமான தெளிவும் எல்லாவிதமான ஐயப்பாடும் இரகசியமும் இல்லாத நிலையும் வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்துகிறது.

புதிய அரசாங்கம் இரகசிய அரசுறவுத் தந்திரத்தை ஒழித்துக் கட்டுகிறது. தன்னைப் பொருத்தவரை எல்லாப் பேச்சுவார்த்தைகளையும் எல்லா மக்களின் முன்பாகவும் முற்றிலும் வெளிப்படையாக நடத்துவது என்ற தனது உறுதியான உத்தேசத்தை வெளியிட்டுள்ளது. 1917 பிப்ரவரி முதல் அக்டோபர் 25 வரை நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் அரசாங்கம் உறுதி செய்த அல்லது செய்து முடித்த இரகசிய உடன்படிக்கைகளை உடனடியாகவும் முழுமையாகவும் வெளியிடும். அந்த இரகசிய உடன்படிக்கைகளில், பெரும்பாலும் ரஷ்யாவின் நிலப்பிரபுக்கள் முதலாளிகளுக்கு சாதகங்களையும் தனி உரிமைகளையும் பெற்றுத்தருவதையும், மகாரஷ்ய இனத்தவர்கள் புரிந்துள்ள பிரதேசக் கைப்பற்றல்களை அவர்கள் தம்மிடமே வைத்திருக்கவோ அல்லது விரிவுபடுத்தவோ செய்வதையும் நோக்கமாகக் கொண்ட அம்சங்கள் அடங்கி இருக்குமானால், அவை அனைத்தையும் நிபந்தனை இன்றியும் உடனடியாகவும் ரத்துச் செய்துவிடுவதாக தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கம் பிரகடனம் செய்கிறது.

சமாதானத்திற்காக வெளிப்படையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்படி எல்லா நாடுகளின் அரசாங்கங்களிடமும் மக்களிடமும் முன்மொழியும் நமது அரசாங்கம், தன்னைப் பொருத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தைகளை எழுத்து மூலமோ, தந்தி மூலமோ பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுக்கள் மூலமோ , அல்லது அத்தகைய பிரதிநிதிகளின் ஒரு மாநாட்டிலோ நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இத்தகைய பேச்சுவார்த்தைகளை எளிதாக நடத்துவதற்காக நமது அரசாங்கம் நடு நலைமை நாடுகளுக்கு அதிகாரபூர்வமான பிரதிநிதிகளை நியமனம் செய்கிறது.

எல்லாப் போரிடும் நாடுகளின் அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் ஓர் உடனடியான போர்நிறுத்தத்தை நமது அரசாங்கம் முன்வைக்கிறது. தன்னைப் பொருத்தவரை இந்தப் போர்நிறுத்தம் மூன்று மாதங்களுக்குக் குறைவானதாக இல்லாதபடிச் செய்து முடிக்க விரும்புகிறது. போரில் ஈடுபட்டோ அல்லது அதில் கலந்து கொள்ளும் கட்டாயத்துக்கு உள்ளாகியோ இருக்கும் எல்லா மக்கள் அல்லது தேசங்களின் பிரதிநிதிகள் எவ்வித விதிவிலக்கும் இன்றி கலந்து கொண்டு சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகளைப் நிறைவு செய்யவும், சமாதானத்திற்கான நிபந்தனைகளை இறுதியாக உறுதி செய்வதற்கு எல்லா நாடுகளின் மக்களின் பிரதிநிதிகளின் அதிகார பூர்வமான சட்டமன்றங்களைக் கூட்டுவதற்கும் அனுமதிக்கும் அளவுக்குப் போதுமான நீடித்த காலாவகாசத்திற்குப் போர்நிறுத்தம் இருக்க வேண்டும் என்று கருதுகிறது.

சமாதானத்திற்கான இந்த யோசனையைப் போரிடும் எல்லா நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் மக்களின் முன் வைக்கும் ரஷ்யாவின் இடைக்கால தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கம், மனித குலத்தின் மூன்று மிகவும் முன்னேறிய தேசங்களும் இன்றைய போரில் கலந்து கொண்டுள்ள ஆகப்பெரிய அரசுகளுமான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் வர்க்க உணர்வுடைய தொழிலாளர்களுக்கு விசேஷ வேண்டுகோள் விடுக்கிறது. இந்த நாடுகளின் தொழிலாளர்கள் முன்னேற்றம், சோசலிசம் என்ற லட்சியங்களுக்காக மாபெரும் பங்குப்பணி ஆற்றியிருக்கிறார்கள். இங்கிலாந்தின் சார்ட்டிஸ்டு இயக்கம், பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் நடத்தியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகள், இறுதியாக ஜெர்மனியின் சோஷலிஸ்டு – எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டம் மற்றும் உலகமுழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழக் கூடியதான வெகுமக்கள் பாட்டாளி வர்க்க அமைப்புகளை ஜெர்மனியில் நிறுவியது போன்ற பல மாபெரும் உதாரணங்களை அவர்கள் வழங்கியுள்ளனர். பாட்டாளி வர்க்க வீர சாதனைகளின் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உடைய படைப்பாற்றல் பணியின் இந்த உதாரணங்கள் யாவும் குறிப்பிடப்பட்ட நாடுகளின் தொழிலாளர்கள் போரின் பயங்கரத்தில் இருந்தும் அதன் பின்விளைவுகளில் இருந்தும் மனித குலத்தைக் காப்பது என்ற தம்முன் உள்ள கடமையினைப் புரிந்து கொள்வார்கள், இந்தத் தொழிலாளிகள் தமது சர்வாம்சமான, வைராக்கியமான, மிகவும் உயர் ஊக்கம் மிகுந்ததுமான செயல் மூலம், வெற்றிகரமான முறையில் சமாதானத்துக்கு வர நமக்கு உதவுவார்கள், அதே சமயம் உழைக்கும் சுரண்டப்படும் மக்கள் திரளை, எல்லா வடிவிலுமான அடிமைத் தனத்தில் இருந்தும் எல்லா வடிவிலுமான சுரண்டலில் இருந்தும் விடுவிப்பார்கள், என்பதற்கான ஒரு உறுதிமொழி ஆகும்.

அக்டோபர் 24 – 25 புரட்சியால் உருவாக்கப்பட்டதும் தொழிலாளர்கள், படையாளர்கள் மற்றும் விவசாயிகளின் சோவியத்துகளின் ஆதரவை அடிப்படையாக்கியதுமான தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கம் உடனே சமாதானத்திற்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும். நமது வேண்டுகோள் அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் ஒருங்கே விடுக்கப்பட வேண்டும். நாம் அரசாங்கங்களைப் புறக்கணிக்க முடியாது, காரணம் அவ்வாறு செய்வது சமாதானத்தைச் செய்து கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைத் தவக்கப்படுத்தும். ஒரு மக்கள் அரசாங்கம் அவ்வாறு செய்யக் கூடாது. அதே சமயம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்காமல் இருக்கும் உரிமை நமக்கு இல்லை. எல்லா இடங்களிலும் அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. எனவே போர் மற்றும் சமாதானம் என்ற பிரச்சினையில் தலையிடுவதற்கு நாம் மக்களுக்கு உதவ வேண்டும். பிரதேசக் கைப்பற்றல்கள், இழப்பீட்டுத் தண்டத் தொகைகள் இல்லாத ஒரு சமாதானத்திற்கான நமது வேலைத் திட்டம் முழுவதையும் நாம் நிச்சயம் எல்லா வழிகளிலும் வற்புறுத்துவோம். அதில் இருந்து நாம் பின்வாங்க மாட்டோம். ஆனால் அவர்களது நிபந்தனைகள் நம்முடையவற்றில் இருந்து வேறுபட்டவை, எனவே நம்முடன் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதில் பயன் இல்லை, என்று கூறுவதற்கு நமது எதிரிகளுக்குச் சந்தர்ப்பம் தர மாட்டோம். அந்தச் சாதகமான நிலைமை அவர்களுக்குக் கிடைக்காத படிச் செய்ய வேண்டும்.. நமது நிபந்தனைகளை ஓர் இறுதி எச்சரிக்கை என்ற வடிவில் முன்வைத்தல் கூடாது. எனவே, நாம் எந்த சமாதான நிபந்தனைகளையும் எல்லா யோசனைகளையும் ஆழ்ந்து கவனிக்க விரும்புகிறோம் என்ற அம்சம் இதிலடங்கும். நாம் அவற்றை ஆராய்ந்து பார்ப்போம். ஆனால் இதனால் அவற்றை அவசியம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. அவற்றை ஆராயும்படி அரசியல் நிர்ணய சபையிடம் சமர்ப்பிப்போம். என்ன சலுகைகள் அளிக்கப்படலாம் எவை அளிக்கப்படலாகாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு உண்டு. உதட்டளவில் சமாதானம், நீதி என்று பேசியும், உண்மையில் பிரதேசக் கைப்பற்றல் மற்றும் கொள்ளைக்காரப் போர்களைத் தொடுத்தும் வரும் அரசாங்கங்கள் கையாண்டு வரும் மோசடியை எதிர்த்து வருகிறோம். எந்த அரசாங்கமும் தான் நினைப்பதை எல்லாம் வெளியே சொல்லாது. ஆனால் நாம் இரகசிய அரசுறவுத் தந்திரத்தை எதிர்க்கிறோம், மக்கள் அனைவரும் முற்றாக நேரில் காணும் வகையில் பகிரங்கமாகச் செயல்படுவோம். இடர்ப்பாடுகளைக் கண்டு நாம் கண்ணை மூடிக் கொள்ளவில்லை, அவ்வாறு நாம் என்றுமே செய்தது கிடை யாது. மறுப்பதால் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. ஒரு தரப்பால் அதை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. நாம் மூன்று மாதங்களுக்கான போர் நிறுத்தத்தை முன்மொழிகிறோம். ஆனால் இதைவிடக் குறைந்த காலத்ததாயினும் அதை நிராகரிக்க மாட்டோம். சிறிது காலத்துக்கு என்றாலும் கூட, முற்றும் சோர்வடைந்த சேனை சற்றே ஓய்வு கொள்ளலாம். மேலும் நிபந்தனைகள் குறித்து விவாதிப்பதற்காக எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் தேசிய சட்டமன்றங்கள் கூட்டப்பட வேண்டும்.

உடனடியான ஒரு போர் நிறுத்தத்தைப் முன்வைப்பதில், நாம் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குப் பெரும்பணி ஆற்றியுள்ள நாடுகளின் வர்க்க உணர்வுடைய தொழிலாளர்களுக்கு வேண்டுதல் செய்கிறோம். சார்ட்டிஸ்டு இயக்கம் கண்ட பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். திரும்பத்திரும்ப நடை பெற்ற புரட்சி எழுச்சிகளில் தமது வர்க்க உணர்வின் வலிமையினை வெளிப்படுத்திய பிரான்சின் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். சோஷலிஸ்டு – எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, வலிமை மிகுந்த ஸ்தாபனங்களை நிறுவியுள்ள ஜெர்மனியின் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

மார்ச் 14-ம் தேதிய அறிக்கையில் நாம் வங்கி அதிபர்களை வீழ்த்த வேண்டும் என்று கோரினோம். ஆனால் நமது வங்கி அதிபர்களை வீழ்த்தாதது மட்டும் அல்ல, நாம் அவர்களுடன் கூட்டணி சேர்ந்தோம். இப்போது நாம் வங்கி அதிபர்களின் அரசாங்கத்தை வீழ்த்தியுள்ளோம்.

அரசாங்கங்களும் முதலாளி வர்க்கமும் தமது சக்திகளை ஒன்றிணைக்கச் சகல முயற்சியும் செய்து தொழிலாளர்கள், விவசாயிகளின் புரட்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க முயலும். ஆனால் மூன்றாண்டு காலப் போர் மக்கள் திரளுக்குப் போதிய படிப்பினை தந்தது. இதர நாடுகளில் இருக்கும் சோவியத் இயக்கம் மற்றும் கொலைகார வில்ஹெல்மின் ஜங்கர்களால் நசுக்கப்பட்ட ஜெர்மன் கடற்படையாளர் கலகம் அதற்கு நல்ல படிப்பினை. இறுதியாக நாம் ஆப்பிரிக்காவின் உள்பகுதிகளில் வாழவில்லை, மாறாக செய்திகள் விரைவில் பரவக் கூடிய ஐரோப்பாவில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தொழிலாளர்களின் இயக்கம் வெற்றி வாகை சூடும், அது சமாதானம் மற்றும் சோசலிசத்திற்கான பாதை சமைக்கும்.

(லெனின் தேர்வு நூல்கள், தொகுதி 7, பக்கம் 15 முதல் 22 வரை)

மாற்றிய சொற்களின் பட்டியல்

தொழிலாளி – தொழிலாளர்
பிரேரேபிக்க – முன்மொழிய
ஊர்ஜிதம் – உறுதி
பகிரங்கமாக – வெளிப்படையாக –
விஸ்தரிக்க – விரிவுபடுத்த –
பூர்த்தி – நிறைவு
உலகமுற்றும் – உலகமுழுவதும்
வெகுஜன – வெகுமக்கள்
பிரதிக்னை – உறுதிமொழி
சோஷலிசம் – சோசலிசம்

போர் எதிர்ப்பு சமாதானமும், தேசங்களின் விடுதலையும், சோசலிசமும்  – லெனின்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்