‘சூட்டபிள் பாய்’ எனும் நெட்ஃப்ளிக்ஸ் தொடருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த பிறகு, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர், “நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கின்றன என்று தெரியவந்தது” என்றார்.
இந்தக் காட்சித் தொடரில் என்ன இருந்தது?
காதலர்கள் இரண்டு பேர் இந்து கோவில் போல தெரியும் ஒன்றில் முத்தமிடுகின்றனர்; அந்த இளம் பெண் ஒரு இந்து, அந்த இளம் ஆண் ஒரு முஸ்லீம்.
இதற்க எதிராக போடப்படும் கூச்சல் மத்திய பிரதேசத்திலும், உத்தர பிரதேசத்திலும் கொண்டு வரப்படுகின்ற ‘லவ் ஜிகாத்’ சட்டங்களோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.
கீழ்கண்ட விஷயங்களை நாம் உறுதியாக சொல்ல முடியும் :
- ஒரு பாஜக மாணவர் தலைவர் நெட்ஃப்ளிக்ஸில் ஆங்கில தொடர் ஒன்றை பார்த்தார். அதில் சில காட்சிகள் புண்படுத்துவதாக உள்ளன என்று தன்னுடைய முக்கியமான மாணவர் சங்க வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நெட்ஃப்ளிக்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்தார்.
- ரேவாவிலும், மத்திய பிரதேசத்திலும் கணிசமான அளவு நடைபெறும் பாலியல் வன்கொடுமை, திருட்டு, கொலை வழக்குகளை எல்லாம் தீர்க்கும் கடமைகளுக்கு மத்தியிலும், இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை விசாரித்து, அறிக்கை கொடுக்க ரேவா காவல்துறை கண்காணிப்பாளர் நேரத்தை ஒதுக்கிக் கொண்டார்.
- இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா, விவசாய நெருக்கடிக்கும், கடுமையான பெருந்தொற்றுக்கும் மத்தியில், இந்த “முக்கியமான” பிரச்சினையில் தலையிட்டு அதில் கருத்து சொல்ல நேரத்தையும் உத்வேகத்தையும் உண்டாக்கிக் கொண்டார்.
புண்படுத்தப்பட்டது யார்?
சம்பந்தப்பட்ட பிரச்சினை இரண்டு பகுதிகளாக இருக்கிறது.
- ஒரு வயதுக்கு வந்த ஆணும், பெணும் ஒரு கோவில் வளாகத்தில் பரஸ்பர விருப்பத்தோடு முத்தமிடுகிறார்கள்
- அந்தப் பெண் ஒரு இந்து, ஆண் ஒரு முஸ்லீம்.
கணப்பொழுதில் கடந்து போகும் அந்த முத்தக்காட்சி (இது இன்னமும் 1950களின் இந்தியா தான் என்பதால் அது ஒரு நீண்ட முத்தக்காட்சி அல்ல) ஒரு குறிப்பிட்ட மதத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
அதாவது, மக்கள் குழுவோ, ஒரு குறிப்பிட்ட நபரோ புண்படுத்தப்படவில்லை, ஒரு மதத்திற்கு இங்கு மனித உருவம் வழங்கப்படுகிறது. மனிதர்களுக்கு இருப்பது போல இந்த மதத்திற்கும் உணர்வுகள் இருக்குமாம்.
எந்த இந்து அல்லாத நபரும் புண்படுத்தப்படாததால், சொல்லப்படுவது ‘இந்து’ மதமாக இருக்கலாம். இரண்டு நடிகர்கள் ஒரு தொலைக்காட்சி தொடரில் சில நொடிகள் முத்தமிடுவது, உலகிலேயே மிக பழைமையான, பரவலான நம்பிக்கை அமைப்புகளை கொண்ட, வேற்றுமைகள் நிறைந்த ஒரு மதத்தை காயப்படுத்தியிருக்கிறது என்று நாம் நம்ப வேண்டுமாம். இல்லை இல்லை, 30 நொடிகள் வரும் அந்த முத்தக்காட்சி மதத்தை இன்னமும் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கிறது, மதம் நிலைகுலைகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
சல்மான் ருஷ்டியின் ஆங்கில நாவல் ‘தி சைத்தானிக் வெர்சஸ்’, எம்.எஃப்.ஹுசைனின் பெண் தெய்வங்களின் ஓவியங்கள், தஸ்லிமா நஸ்ரினின் வங்காள நாவலான ‘லஜ்ஜா’, வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்’ போன்ற படைப்புகளுக்கு காட்டப்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் கணக்கில் வைத்து பார்க்கும் போது, ஒரு கேள்வி எழுகிறது : புண்படுத்தும் படைப்பு என்று முத்திரை குத்தப்படும் இந்தப் படங்களை, ஓவியங்களை, புத்தகங்களை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள், படித்திருப்பார்கள்?
அரசியல் அல்லது மத-அரசியல் தலைவர்கள் பெருந்திரளான மக்கள் சார்பாக, ஒரு படைப்பிற்கு மத காரணங்களுக்காக கண்டனம் தெரிவிக்கும் போது, அவர்களுடைய ஆபத்தான நேர்மையின்மையின் முதல் அடையாளமாக இருப்பது இதுவே : அவர்கள் ஆக்ரோஷமாக கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால், எத்தனை இஸ்லாமியர்களுக்கு சல்மான் ருஷ்டியின் நாவல் அல்லது தஸ்லிமா நஸ்ரினின் நாவல் பற்றி தெரிய வந்திருக்கும்? எத்தனை இந்துக்கள் அஹமதாபாத்தில் இருக்கும் ஒரு சிறிய கலைக்கூடத்திற்கு மாடர்ன் ஆர்ட் பார்க்க சென்றிருப்பார்கள்? அல்லது வரலாறு குறித்த பெரிய ஆய்வு புத்தகத்தை படித்திருப்பார்கள்? இதைப் போல ரேவாவில் இருக்கும் எத்தனை பேர் “சூட்டபிள் பாய்” போன்ற ஒரு ஆங்கிலத் தொடரை பார்த்திருப்பார்கள்?
இலக்கியம் வாசித்து, மாடர்ன் – ஆர்ட் ரசிக்கும் அளவு அறிவார்ந்த பொது மக்கள் கூட்டத்தில் எத்தனை பேர் சட்டத்தை மீறி வன்முறையில் ஈடுபடும் அளவு புண்படுத்தப்பட்டிருப்பார்கள்? சல்மான் ருஷ்டிக்கு எதிராக கொமேனி ஃபத்வா அறிவித்த இரானில் , குறைந்த எண்ணிக்கை மக்களே ஆங்கிலம் வாசிப்பவர்கள்; இந்தியா போன்றதொரு நாட்டில் வெகு சில மக்களே ஆங்கிலம் வாசிப்பவர்கள், அதைவிடவும் குறைவான எண்ணிக்கையில் தான் கலைக்கூடங்களுக்கு போகும் மக்கள் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் போது ஒரு பிரச்சினையை ஏன் பூதாகரமாக்கி உலகிற்கு ஒலிபரப்ப வேண்டும்?
இதற்க வெளிப்படையான விடை : அரசியல் லாபத்திற்காக என்பதுதான்.
ஒரு புத்தகத்தை கூட திறந்திருக்காத, ஒரு மாடர்ன் ஆர்ட் கூட பார்த்திருக்காத பொதுமக்கள் மத்தியில் சீற்றத்தை உண்டாக்கவே அது செய்யப்படுகிறது.
‘இப்படி ஒரு புத்தகம்/ஓவியம்/திரைப்படம்/நாடகம் உங்கள் பொன்னான நம்பிக்கைகளை தாக்குகிறது’ என கூச்சலிட்டு அது செய்யப்படுகிறது. அந்த அரசியல்வாதியோ, ஆபத்தான முல்லாவோ, போலி-சாதுவோ மக்களை ஒன்று திரட்டிய பிறகு, அந்தச் சீற்றத்தை பயன்படுத்தி இன்னம் அதிக அதிகாரத்தை பிடிக்கிறார். குறிப்பிட்ட படைப்பை புறக்கணித்து விடும் வாய்ப்பு இருந்தாலும், அந்த படைப்பை அதன் துறையில் இருந்து எடுத்து அரசியல் கால்பந்தாக பயன்படுத்துகிறார்.
அதனால் என்ன?
இந்த மக்கள் பற்றிய கணக்குகளை எல்லாம் ஒரு முக்கியமான கேள்வி புறம் தள்ளுகிறது. அந்தக் கேள்வி : அதனால் என்ன?
யாரோ ஒருவர் உங்கள் மதத்தையோ, உங்கள் தீர்க்கதரிசியையோ அவமரியாதை செய்தால் தான் என்ன? உங்கள் புனித உருவங்கள் ஒன்றின் உடலை கேலிச்சித்திரமாகவோ, நிர்வாணமாகவோ வரைந்தால் தான் என்ன?
அதுவும் பாலுணர்வு புனிதக் கலைகளிலும், கவிதையிலும், இலக்கியத்திலும் கொண்டாடப்பட்டிருக்கும் ஒரு கலாச்சாரத்தில் அப்படி வரைவதனால் என்ன பிரச்சினை? உங்கள் நாகரீகம் குறித்து வெளியாகியிருக்கும் ஒரு வரலாற்று புத்தகத்தை நீங்கள் தவறென நினைத்தால் தான் என்ன? ஒரு இஸ்லாமிய ஆணும் இந்து பெண்ணும் விருப்பத்தோடு முத்தமிட்டால் தான் என்ன?
ஒரு புத்தகத்திற்கோ, ஒரு ஓவியத்திற்கோ கத்தியும், துப்பாக்கியும், வெடிகுண்டும், கலவரங்களும் ஒரு போதும் பதிலாகாது என நம்பும் ஆயிரக்கணக்கானோருக்கு : நாம் செய்ய வேண்டியது தெளிவானது. இந்த சகிப்பின்மை எப்படி ஆபத்தானது என்பதையும், எப்படி இது ஒரு கலாச்சாரத்தை குறித்ததோ உணர்வுகளை புண்படுத்துவது குறித்ததோ இல்லை என்பதையும், அதிகாரத்திற்கும் லாபத்திற்கும் வேண்டி, பிற்போக்கான அறிவை மறுப்பவர்கள் செய்யும் அற்பமான வேலை என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
– ருச்சிர் ஜோஷி
thehindu.com தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.