Aran Sei

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்

ற்போது நூபுர் ஷர்மாவும் ஜிண்டாலும் நபிகள் நாயகத்துக்கு எதிராகப் பேசிய பேச்சுக்கு சர்வதேச கண்டனங்கள் எழுந்ததை ஒட்டி நாடு முழுக்க இஸ்லாமியரின் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இதைப் பற்றி இரண்டு விதமான பார்வைகள் உண்டு:

ஒன்று, அவர்கள் அமைதியாகப் போய் விட வேண்டும், தம் மதத்தின் பெயரால் அவர்கள் போராடுவது அவர்களை அவ்வாறு பாஜகவால் அடையாளப்படுத்தப்பட்டு இந்துக்கள் மத்தியில் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட காரணமாகி விடும் என்பது.  இது ஒரு காந்திய பார்வை. காந்தி எப்போதுமே ஒடுக்கப்பட்ட மத்திய சாதியினர் பிராமணர்களுக்கு எதிராகவோ, தீண்டத்தகாதோராக அறியப்பட்டோர் மத்திய சாதிகளுக்கும் பிராமணர்களுக்கும் எதிராகப் போராடுவதை ஏற்கவில்லை. நான் மேலே சொன்ன காரணம் தான் – மேல்சாதியினரைக் கோபித்துக் கொண்டு அவர்களால் வாழ முடியாது என அவர் நம்பினார். அப்படி வாழ அவர்கள் முயன்றால் அது கிராமிய வாழ்க்கை முறையையும் இந்து மதத்தின் சனாதன கட்டமைப்பையும் உடைத்து விடுமென அவர் அஞ்சினார். அதனால் அமைதியாக செல்லும் படி தாழ்த்தப்பட்டோரை ‘அறிவுறுத்திய’ காந்தி ‘மேல்சாதியினர்’ தாமாக திருந்த வேண்டும் எனக் கூறினார். அது மட்டுமல்ல, இஸ்லாமியரோ கிறித்துவரோ தமது மத அடையாளத்தை தீவிரமாக முன்னெடுப்பதையும் அவர் ஏற்கவில்லை. அவரது சீடரான இந்து ஒருவர் கிறுத்துவ வெள்ளைக்கார பெண்ணை மணமுடித்த போது அவர் அவர்களது குழந்தைகள் இந்து முறைப்படி தான் வளர்க்கப்பட வேண்டும் என்று ‘அறிவுரைத்து’ விட்டு அதற்குக் காரணமாக இந்தியர் ஒருவர் கிறித்துவராகவோ இஸ்லாமியராகவோ இருந்தாலும் தன் உணர்ச்சியளவில் அவர் இந்துவாக மட்டுமே இருக்க முடியும், இந்தியனும் இந்துவும் ஒன்று என்கிறார். இதனாலே இந்து மதத்தைத் தவிர இங்கு வேறெந்த மத அடையாளமும் முன்னெடுக்கப்படுவது சமுதாய ஒற்றுமைக்கு நல்லதல்ல என்று அவர் நம்பினார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

இப்போது இஸ்லாமியர் போராட்டங்களில் தம்மை இஸ்லாமியராக அடையாளப்படுத்தலாகாது என்று கோருகிறவர்கள் இந்து மத பதாகைகளின் கீழ் (வினாயகரை, காளியை அந்த காலத்தில் சுதந்திர போராட்டத்தின் போது பயன்படுத்தினார்கள்; இன்றும் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பு கோயிலுக்குப் போய் இதைச் செய்கிறார்கள்) அரசியல் இயக்கம் ஒன்று திரள்வதையோ, இந்து மதப் பண்டிகைகளின் பெயரில் பெரும் திரள் ஒருங்கிணைக்கப்படுவதையோ சமூகத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகக் கருதுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். அது ஏன் சிறுபான்மையினர் மட்டும் தமது மத அடையாளத்தை ஜேப்புக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், இந்துக்கள் எப்போதும் தமது மத அடையாளங்களை பிரகடனப்படுத்தலாம் எனும் வாதம்? இதன் பொருள் இந்நாடு மதசார்பற்றது என்று கூறப்பட்டாலும், இது அடிப்படையில் கிறுத்துவ, இஸ்லாமிய மதசார்பற்றதாக இருக்க வேண்டுமே ஒழிய இந்து மத சார்பற்றதாக அல்ல என்பதே.

சட்டப்படி இந்த போராட்டங்களை மதத்தின் பெயரால் நடத்துவதில் தவறில்லை எனும் போது வேறெங்கே குற்றம் வந்து விடக் கூடும்?

இரண்டாவதாக, இந்தப் போராட்டங்களை வைத்து இஸ்லாமியர் இந்து மதத்துக்கு விரோதமாகத் திரள்வதாக பாஜக கட்டமைத்து விடும் எனும் எச்சரிக்கை. ஆனால் மத நம்பிக்கை உள்ள எந்த இந்துவும் அப்படி நினைக்க வாய்ப்பில்லையே! மத துவேசம் கொண்டோரின் நிலைமை வேறு. அவர்களுக்கு சிறுபான்மையினரின் ‘அமைதியான இருப்பு’ கூட உறுத்திக் கொண்டும், கோபத்தைக் கிளப்பிக் கொண்டும் தான் இருக்கும்.

#Sadhguru_not_welcome – இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு

எனக்கு இதைப் பற்றி ஒரு மாற்றுப்பார்வை உள்ளது: தேர்தல் அரசியலில் பெரும்பான்மையாக உள்ள இந்து வாக்குகளைப் பெற்றே தாம் ஆட்சிக்கு வர முடியும் என நம்புவோரே இப்பிரச்சனையில் ‘இந்துக்களை பகைக்காமல்’ இஸ்லாமியர் சமாளிக்க வேண்டும் என கோருகிறார்கள்.

இந்துத்துவ வெறுப்பரசியலின் இந்த அலையை சிறுபான்மையினர் அமைதியாகக் கடந்து விட முடியும் என இஸ்லாமியரில் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள். நான் கர்நாடகத்தில் கவனித்த வரையில் நிலைமை இது தான். இங்குள்ள இஸ்லாமியர் அமைதியாகக் கடந்து செல்லவே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் அச்சம். கடுமையான அச்சம். எதிர்த்துப் பேசினால் நம்மை அரசு தன் அத்தனை படைகளையும் ஏவி தம்மைத் தீர்த்துக் கட்டி விடுவார்களோ எனும் அச்சம். ஆனால் இப்படி அஞ்சுவது எதிர்த்துப் பேசுவதை விட ஆபத்தானது என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒரு உதாரணமாக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்துக்கு செல்வோம். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருகிறார். சிறுக சிறுக யூதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து இரண்டாம் தர குடிமக்களாக்கி இறுதியில் அவர்களை வதை மற்றும் கொலை முகாம்களுக்கு அனுப்பியது வரை இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை நடக்கிறது. இதில் கவனிக்கத்தக்க விசயம் என்னவெனில் ஒட்டுமொத்த ஜெர்மானியர்களும் ஹிட்லரை ஆதரிக்கவில்லை. ஆனால் ஹிட்லரை எதிர்த்தவர்களை ஒடுக்கினார்கள், அவர்களுடைய குரல்களை ஊமையாக்கினார்கள். ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசியல் அமைப்புகளும் ஹிட்லருக்கு துணை போயினர். இப்போது ஹிட்லருக்கு ஆதரவாக பெரும் அலையொன்று இருப்பதாக ஒரு பொய்யான சித்திரம் தோன்றியது. இதே நேரத்தில் யூதர்கள் தாம் அடிப்படைகளை உரிமைகளை இழந்து வதைமுகாம்களில் விஷக்காற்றை உறிஞ்சி கொல்லப்படும்போது கூட ஹிட்லரின் பாசிசத்தை எதிர்க்கவில்லை. மாறாக அவர்கள் இந்த உண்மையை எதிர்கொள்ளாமல் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லையென ஒரு கற்பனை உலகில் வாழ்ந்தார்கள். தமது பணத்தாலும் நடவடிக்கையாலும் தாம் தப்பித்து விடலாம் என நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கை விரைவில் பொய்த்தது. பெரும்பணக்கார யூதர்கள் கூட ஏழையாக்கப்பட்டு வதைமுகாம்களில் கூலி வேலை செய்ய்ய நேர்ந்தது. அவர்கள் தமது பிள்ளைகளையும் மனைவியரையும் பிரிந்து இறுதியில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். அப்போது தான் தமது ‘அமைதியின்’ விளைவு தான் இதுவென அவர்களுக்குப் புரிந்திருக்கக்கூடும். ஹானா ஆரிண்ட் எனும் தத்துவவாதி இதைப் பற்றி ஆய்வு செய்து “இருண்ட காலத்து மனிதர்கள்” (Men in Dark Times) எனும் நூலை எழுதியுள்ளார். இதில் அவர் ஒரு முக்கியமான கருத்துருவை முன்வைக்கிறார்:

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

ஒரு இனக்குழுவோ மதக்குழுவோ கடும் தாக்குதலுக்கு ஒடுக்குமுறைக்கு ஆளாகும் போது அது மனதளவில் இரண்டாகப் பிளந்து போவார்கள்; அவர்களுடைய ஒரு பாதி மனம் தாம் பாதிக்கப்படுவோரில் இருந்து வேறானோர் என போலியாக நம்பும்; அதாவது தாம் மற்றமை அல்ல என நினைக்கும். இன்னொரு மனம் தப்பிக்க வழிதேடிக் கொண்டிருக்கும் என்கிறார். சொல்லப் போனால் தம்மை ஹிட்லரின் ஆதரவைப் பெற்றவர்கள் என்று கூட இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமது யூத அடையாளத்தில் இருந்து இவர்கள் அந்நியப்படுவார்கள் என்கிறார் ஆரிண்ட். இதை அவர் “உள் குடிபெயர்வு” (inner immigration) என்கிறார். ஜெர்மனியில் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் சுலபத்தில் கொல்லப்பட்டதற்கு இந்த உள் குடிபெயர்வும் ஒரு முக்கிய காரணமாகும். அதாவது எந்த அடையாளத்தின் பெயரில் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்களோ அந்த அடையாளத்தை கழற்றி விட்டுவிட்டு அதில் இருந்து அந்நியப்படுவதே தீர்வு என நீங்கள் நினைத்தால் அது உங்களை அழிப்பதை சுலபமாக்குமே அன்றி காப்பாற்றாது.

இதனால் தான், கடவுளையும் மதத்தையும் ஏற்காத நான், மதத்தின் பெயரிலான இஸ்லாமியர் மேற்கொள்ளும் போராட்டங்களை ஆதரிக்கிறேன். ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்கிறேன். ஊடகங்களில் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் அவர்கள் தமது வலியை பதிவு பண்ண வேண்டும். இதுவரை எங்குமே ஒரு இஸ்லாமியர் கூட “நாங்கள் செய்த தவறு என்ன?” எனக் கேட்டு நான் பார்க்கவில்லை. போராடாத வரையில் இஸ்லாமியரின் அழிவு நெருங்கி வருவதே நடக்கும். அவர்கள் சீக்கியர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் வெல்லுவார் என்றே நான் நம்புகிறேன். அப்போது அவர் மீண்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவார். தடுப்பு முகாம்கள் முழுமூச்சில் செயல்பட்டு சிறுபான்மையினர் அங்கு கூட்டம் கூட்டமாக அடைக்கப்படுவர். ஆனால் இஸ்லாமியர் தொடர்ந்து போராடும் பட்சத்தில், அது உலக அரங்கின் பார்வைக்கு வரும், அப்போது இந்த கொடுமைகளை இழைக்க பாஜக நிச்சயமாகத் தயங்கும்.

ஆகையால் போராடுங்கள். உங்கள் வசம் நியாயம் உள்ள போது எல்லாருமே உங்களை ஆதரிப்பார்கள். இந்த அரசுக்கு வாக்களிக்கும் இந்துக்கள் ஒரு இந்துமத பெருமித உணர்வின் பெயரிலும் எதிர்க்கட்சி செத்துக் கிடப்பதைக் கண்டுமே வாக்களிக்கிறார்கள், சிறுபான்மையினரை அழிப்பதற்காக அல்ல. ஆகையால் போராடுங்கள். உங்களுக்குள் நீங்களே ‘அகதி’ ஆகி விடாதீர்கள். போராடுங்கள்!

கட்டுரையாளர்: ஆர். அபிலாஷ், எழுத்தாளர், பேராசிரியர் (ஆங்கிலத் துறை)

‘கால்கள்’ நாவலுக்காக சாகித்திய அகாடமி வழங்கும் 2014-ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற்றவர்

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா?  – ஆர். அபிலாஷ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்