Aran Sei

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

மிழகத்தில் நூற்றுக்கணக்கான சைவ, வைணவத் திருத்தலங்கள் உள்ளன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திவ்ய தேசங்கள் 108. அதில் வடநாட்டில் 12, திருநாட்டில் 1 நீங்கலாக தமிழகத்தில் மட்டும் சோழநாட்டில் 40, பாண்டியநாட்டில் 18, சேரநாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டைநாட்டில் 22 என மொத்தம் 95 வைணவப் பெருங்கோவில்கள் அமைந்துள்ளன.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய சைவ நாயன்மார்களால் அருளிச்செய்யப்பெற்ற திருப்பதிகங்கள் கிடைத்துள்ள. 275 சிவத்தலங்களில் ஈழநாடு 2, துளுவநாடு 1, வடநாடு 5 நீங்கலாக, சோழநாட்டில் 191, பாண்டியநாட்டில் 14, சேரநாட்டில் 1, கொங்குநாட்டில் 7, நடுநாட்டில் 22, தொண்டைநாட்டில் 32 என 267 சைவப்பெருங்கோவில்கள் தமிழகத்தில் உள்ளன.

சைவ,வைணவக் கோவிகள் பல இருந்தாலும், சைவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிதம்பரம் கோவிலும், வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஸ்ரீரங்கம் கோவிலுமே முக்கியக் கோவில்களாகக் கருதுகிறார்கள்.

வரலாறு அறிவோம்: தேரிக்காட்டு கருப்பட்டி ரயில் – சூர்யா சேவியர்

தமிழகத்தில் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி.600-63க கட்டிய குடவரைக் கோவில்கள்,நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி.630-660) கட்டிய மாமல்லபுரத்துத் தேர்க்கோவில்கள்,இராசசிம்ம பல்லவன் (கி.பி.685-705) கட்டிய காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோவில், இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி.705-710) கட்டிய வைகுண்டப் பெருமாள் கோவில் ஆகியவையும், இராஜராஜசோழன் (கி.பி.985-1014) கட்டிய தஞ்சைப்பெரியகோவிலும், ராஜேந்திரச்சோழன் (1012-1044) எழுப்பிய கங்கைகொண்ட சோழபுரம் கோவில், முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070-1122)கட்டிய மன்னார்குடி இராஜகோபாலசாமி கோவில்,இரண்டாம் இராஜராஜன் (கி.பி.1146-1173)கட்டிய தாராசுரம் கோவில், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1226) கட்டிய திரிபுவன வீரேச்சுரம் நடுக்கநதீர்த்தநாதர் கோவில், பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-1463)கட்டிய தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் ஆகியவை கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவில்களாகும்.

இதேபோல் ஒரு குறிப்பிட்ட மன்னனால், ஒரு குறிப்பட்ட காலத்தில் பிரம்மாண்டமாய் கட்டப்பட்ட கோவில் அல்ல சிதம்பரம் நடராஜர் கோவில். தில்லை எனும் ஒருவகை அடர்ந்த மரங்கள் கொண்ட வனமாக ஆதிகாலத்தில் இப்பகுதி இருந்ததால் “தில்லைஸ்தலம்”எனப்பெயர் வந்தது. கோவில் வந்த கதை இதுதான்.

காதலர் தின வரலாறு – சூர்யா சேவியர்

புராணக்கதையின்படி சிம்மவர்மன் எனும் கவுடநாட்டு மன்னன் பெருவியாதியால் பீடிக்கப்பட்டதால், முடி சூட்டிக்கொள்ள மறுத்துவிட்டு, காடாக இருந்த சிதம்பரத்திற்கு வந்தானாம். அவனை வியாக்கியபாத முனிவர் அங்குள்ள சிவகங்கைக்குளத்தில் நீராடச்செய்து நோயைப் போக்கினாராம். குளத்தில் நீராடி எழுந்த பொழுது நடராஜர் அவன் கண்முன் தோன்றினாராம்.சிம்மவர்மன் என்ற தன்பெயரை இரண்யவர்மன் என்று மாற்றிக்கொண்டு நடராஜருக்கு அங்கு கோவில் கட்டினாராம்.கங்கைக் கரையிலிருந்து மூவாயிரம் தீட்சிதர்களை அழைத்து வந்து குடியமர்த்தினாராம்.

நடராஜர் வீற்றிருக்கும் சந்நிதி சிறியதாக இருந்ததால்”சிற்றம்பலம்” எனப்பெயர் பெற்றது. இங்கு வைணவக்கடவுளான பெருமாளுக்கும் ஒரு கோவில் உண்டு.அதற்கு “சித்திரக்கூடம்”எனப் பெயர். இந்தக்கோவில் வளாகத்தில் எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப்பல்லவ மன்னனே பெருமாள் கோவிலைக் கட்டியவன்.

பிற மதங்களை எதிர்ப்பதன் வழியே இந்துக்களை ஒருங்கிணைப்பது தான் தேசியமா? தேசியத்தின் வரலாறு என்ன? – சூர்யா சேவியர்

12 ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு கோபம் வந்தது. நடராஜர் வளாகத்தில் பெருமாள் கோவிலா? பெருமாள் வீற்றிருந்த சித்திரக்கூடத்தை அழித்து, கோவிந்தராஜப்பெருமாள் சிலையைக் கடலில் வீசினான்.(தசாவதாரம் படத்தின் முதல் காட்சி ஞாபகம் வருகிறதா?).

கதை இப்படி சொல்லப்பட்டாலும், வரலாற்றின்படி தமிழகத்தில் கி.பி.7ம் நூற்றாண்டில் பக்திஇயக்கம் பரவிய காலத்தில் சொக்கசீயன் எனும் மன்னனால் தென்புற வாசலைக்கொண்டு முதலில் சிறிதாகக் கட்டப்பட்டதே இந்தக்கோவில்.

கி.பி.12 ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கச்சோழனால் கிழக்குக்கோபுரம் கட்டப்பட்டது. கி.பி.1251-1268ல் சடாவர்ம முதலாம் சுந்தரனால் மேற்குக்கோபுரம் கட்டப்பட்டது. கி.பி.16ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் வடக்குவாசல் கோபுரம் கட்டப்பட்டது. இந்தக்கோபுரம் கடல் மட்டத்திலிருந்து 160 அடி உயரம் கொண்டது.

பல்வேறு அரசர்களால் பல்வேறு காலங்களில் பெரிதாக்கப்பட்டது. சைவ, வைணவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பாதிப்பை இக் கோவிலின் மீது ஏற்படுத்தினார்கள். இது உருவான நாள் முதல், இன்று வரை சர்ச்சைகளுக்குள் சிக்கியே வந்துள்ளது.

தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்

12ம் நூற்றாண்டில் கடலில் தூக்கிப்போட்ட கோவிந்தராஜப் பெருமாளை 16ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுததேவ மகாராயர்மீண்டும் கோவிலில் “புனப் பிரதிஷ்டை”செய்துள்ளார்.

பெருமாளை மீண்டும் உள்ளே வைக்கக்கூடாது என்று சொல்லி,தீட்சிதர்கள் பலர் கோவில் கோபுரத்தின் ஏறி,கீழே குதித்து தற்கொலை செய்துள்ளனர். சைவ,வைணவ மன்னர்களின் மேலாதிக்கத்தால் இந்தக்கோவில் படாதபாடு பட்டுள்ளது. அதன் பிறகே அந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர “அரியும்,சிவனும் ஒண்ணு-அறியாதவன் வாயில மண்ணு” என்று கூறத் தொடங்கினார்கள்.

தற்போது நடராஜருக்கும், பெருமாளுக்கும் பிரச்சனை இல்லை. நந்தனுக்கும்,நந்தனின் வாரிசுகளுக்கும் தான்.

“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்

வாயில் குமின் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல்

மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்

பாகோவில்கள் பெற்றால்

மனித்த பிறவியும் வேண்டுவதே

இந்த மாநிலத்தே”

தில்லை நடராஜரின் திருக்கோலத்தைக்கண்ட திருநாவுக்கரசர் “இந்த அற்புதக் கோலத்தை காண மீண்டும், மீண்டும் நான் பிறவி எடுக்கவேண்டும். பிறவி வேண்டாம் என்று மறுக்கும் பேர்க்கும் மீண்டும் பிறவி ஆசையை உருவாக்கும் திருக்கோலம் இது என்கிறார். இந்த திருக்கோலத்தைக் காண்பதற்கு தான் நந்தனும் புறப்பட்டார்.

மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

சிதம்பரத்திற்கு அருகே கொள்ளிடம் நதிக்கரையில் உள்ள கிராமம் மேற்கானாட்டு ஆதனூர். நந்தன் பிறந்த ஊர் தான். இன்றும் அதே பெயரில் தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த நந்தனுக்கு சிதம்பரம் சென்று தில்லை நடராசரை தரிசிக்க ஆசை. தில்லைக்கு நாளை போவேன், நாளை போவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால் ” திருநாளைப் போவார்” என பெயரும் வந்தது. தில்லை செல்லும் நாளும் வந்தது.

ஆதனூரிலிருந்து சிதம்பரம் வந்த நந்தன் கோவிலுக்குள் செல்லாமல் நகரையே சுற்றி வருகிறார். ஏனெனில் தீண்டாமை தீ எரித்துவிடும் என தெரியும். நந்தன் கனவிலே நடராசர் வந்து “இப்பிறவி போய் நீங்க எரியிடை நீ மூழ்கி, முப்புரி நூல் மார்பருடன் முன் அணைவாய்” என்றாராம். அந்தணர்கள் கனவிலும் நடராசர் தோன்றி நந்தனுக்குச் சொன்னதை அமல்படுத்தச் சொன்னாராம்.

தீக்குளித்த நந்தன் புனித வடிவம் கொண்ட முனிவராக தீயிலிருந்து வெளிவந்து, பூணூல் அணிந்து, கோவிலுக்குள் புகுந்து, ஜோதியோடு ஐக்கியமாகிவிட்டார். மேற்கூறிய செய்திகள் யாவும் சேக்கிழாரின் பெரிய புராணம் தரும் செய்தி. பெரிய புராணம் பாடப்பெற்றது சிதம்பரம் நடராசர் கோவிலில் தான். இராமாயணத்தில் சம்புகன், மகாபாரதத்தில் ஏகலைவன் என்ற வரிசையில் பெரிய புராணத்தில் நந்தன் வருகிறார்.

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

சிதம்பரம் கோவிலில் நான்கு திசைகளிலும் நான்கு வாசல் உண்டு. இதில் தென்புற வாசல் இன்று வரை மூடியே இருக்கிறது. கொள்ளிடம் நதிக்கரையின் பூர்வகுடி மக்கள் இன்றளவும் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்விகள் ஏராளம். நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி தென்புற வாசலை இன்று வரை மூடி வைத்திருக்கிறீர்களே? இது நியாயமா?அதை உடனே திறக்க வேண்டும். பெரிய புராணத்தில் சொல்லப்படும் நந்தன் கதையானது சைவத்தின் பெருமையை விட சாதியத்தின் கோர முகத்தை காட்டுகிறதே ஏன்?

ஒடுக்கப்பட்ட சமூகத்தார் கோவிலுக்குள் நுழைந்தால் தீ வைத்துக் கொளுத்தப்படுவார்கள் என்ற எச்சரிக்கை தான் பெரியபுராணம் விடுக்கும் செய்தியா? ஆண்டைகளுக்கு எதிராக ஸ்பார்டகஸ் திரண்டு எழுந்தான். ஆனால் காவிரிக்கரை ஆண்டைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் நந்தன் போராடினார் என்பதன் அடையாளமா?

நந்தனுக்கு கோவில்கட்டி மகாத்மா காந்தி சிதம்பரம் வந்து திறந்து வைத்தது அதனால் தானா? கோவிலின் தென்புற வாசல் வெளியே ஓமக்குளம் என்று இருக்கிறதே? நந்தனை உயிரோடு கட்டிவைத்து ஹோமம் வளர்த்து கொன்றதன் அடையாளமா? இந்தக் கேள்விகள் இன்றுவரை கொள்ளிடத்தில் மோதி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

நந்தனின் வாரிசுகள் இன்றுவரை இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தமிழக சமூகநீதியின் தலைமகன் தந்தை பெரியார் 1929 செப்டம்பர் 29 அன்று திருச்சியில் பேசியதை இங்கு நினைவு படுத்தலாம். “நந்தனுக்கு மோட்சம் கொடுத்ததாகவும், பாணனை ஆழ்வாராக்கியதாகவும் கூறும் புராணங்களைக் குற்றம் கூறாதீர்கள் என்கிறார்கள். வாஸ்தவம் தான்…இதோ வாயைப் பொத்திக் கொண்டோம். நந்தனுக்கு மோட்சம் கொடுத்தது உண்மையானால், அந்த நந்தனின் பேரனை ஏன் உள்ளே விடவும் கூடாது என்கிறார்கள்?

பாணனை ஆழ்வாராக்கியது வாஸ்தவமானால் பாணனின் பேரன் கோவிலுக்குள் போவதை ஏன் தடுக்கிறார்கள்?  நந்தனுக்கு ஒரு கல்லும், பாணனுக்கு ஒரு கல்லும் நட்டு, அவற்றின் பெயரால் பொங்கல் படைத்து,அபிசேகம் செய்து,காசு சம்பாதிக்கப் பிரயத்தனப்படுகிறார்களே ஒழிய, அவர்கள் பெயரைச் சொல்லி வேறு என்ன செய்கிறார்கள்? நந்தன் போன போது, நாம் ஏன் போக கூடாது என்றால், நீங்கள் சொல்லும் நந்தன் வேறு நபர் என்று சொல்லி,அந்த நந்தன் உள்ளே வருவதற்கு முன் நெருப்பில் குளித்து வந்தான். நீங்களும் அப்படி வாருங்கள் என்கிறார்கள்.

நூர்ந்தும் அவியா ஒளி – தோழர் ப. ஜீவானந்தம்

நாம் உள்ளே போக வேண்டுமானால் நெருப்பில் குளித்து சாம்பலாக வேண்டும். அதற்கு மேல்தான் போக முடியும்” என்று தந்தை பெரியார் கேள்வி எழுப்பினார். நம் நாட்டில் சகோதர உணர்வு, தர்ம உணர்வு இன்னும் எஞ்சியிருக்கிறதா? இப்போது இருப்பது எல்லாம் தீண்டாமை தான். இந்த மானக்கேடான பழக்க வழக்கங்களையெல்லாம் உதைத்து விரட்டுங்கள். இந்த தீண்டாமை தடைகளை தகர்த்தெறிய நான் விரும்புகிறேன். அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டுவோம். அவர்கள் ஏற்றம் காண வேண்டும். இல்லாவிடில் இந்தியா முன்னேறவே முடியாது என்று பேசியவர் வேறு யாருமல்ல. சுவாமி விவேகானந்தர் தான். தீண்டாமை, வறுமை, அறியாமை, ஆதிக்கவெறி, சுரண்டல் போன்ற பல நோய்களால் அல்லலுறும் ஆரோக்கியமற்ற சமூகத்தின் மறுபெயர் தான் நந்தன்.

ஆறுமுகச்சாமி ஓதுவார்- ஜெயசீலா லட்சுமி.

இங்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது.  தென்னாடுடைய சிவனே போற்றி என்பார்கள். அப்படி என்றால் வடநாட்டு சிவன்? ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? தென்னாட்டு சிவன்தான் அசல். வடநாட்டு சிவன் அப்படியல்ல. ஏனெனில் வடநாட்டு சிவன் ருத்திரனாக மட்டுமே பாவிக்கப்படுகிறார். இது இங்குள்ள சைவமரபு.

தென்னாட்டின் முக்கிய சிவன் கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. வடநாட்டில் அப்படி அல்ல.தென்னாட்டில் கோவில் கருவறையில் லிங்கத்தை தொட்டு வழிபட உரிமையில்லை. வடநாட்டில் சிவனை தொட்டு வழிபடலாம். காசியில் உள்ள சிவன் கோவில் உட்பட. அதற்கு அங்கு தீண்டாமை இல்லை என்று அர்த்தமல்ல.சிவனே அங்கு தீண்டத்தகாதவர் தான்.

ஏனெனில் படைப்புத்தொழிலை பிரம்மாவும்,காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக கூறுவது வடநாட்டு மரபு.

பாலஸ்தீன, இஸ்ரேல் யுத்தமும் அதன் பின்னணியும் – சூர்யா சேவியர்

தென்னாட்டில் எல்லாத் தொழிலையும்(முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல்,காத்தல்,அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார். அது மறைத்தல்,அருளல். எனவே தென்னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவதுதான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம்.நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டும் தான்.பொதிகை மலையை பார்த்தபடி சிதம்பரத்தில் நடராசன் ஆடுவதாக ஐதீகம். எனவே தென்னாடுடைய சிவனே போற்றி!

தென்னாடுடைய சிவனுக்கு தமிழில் வழிபாடு நடத்துவதே இங்குள்ள மரபு. சமஸ்கிருதம் வடநாட்டு ருத்ரனுக்குத் தான்.

சிதம்பர ரகசியம் என்பார்கள். சிதம்பர ரகசியம் என்றால் என்ன?

சிதம்பரம் என்ற சொல்லுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த விளக்கம் THE ATMOSPHERE OF WISDOM.தமிழில் பிரபஞ்ச உண்மை என்று கொள்ளலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் 39 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் அடையாளம் தான் சிதம்பரம் கோவில் லிங்கம். ஆனால் இங்கு உண்மையில் லிங்கம் இல்லை.

சிற்றம்பலத்தின் வலதுபக்கம் ஒரு ஒரு சிறுவாசல் உள்ளது.இதில் உள்ள திரையை அகற்றி ஆராத்தி காட்டுவார்கள். திரை அகலும்போது லிங்கமோ அல்லது வேறு எந்த உருவமோ இருக்காது. தங்க வில்வமாலை ஒன்று மட்டும் தொங்குவதைக் காணலாம்.

திரைமறைவில் இல்லாத லிங்கத்தை இருப்பதுபோல் நினைத்து வழிபடுவதுதான் சிதம்பர ரகசியம். பிரபஞ்சத்தில் இறைவன் நிறைந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டு வழிபடுவது தான் சிதம்பர ரகசியம்.

15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்திரநல்லூர் நங்கை என்ற ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட பாய்ச்சலூர் பதிகம் எனும் நூல் எழுப்பும் கேள்வி முக்கியமானது.

“பூணூல் பூணூல் என்கிறீர்களே சிலந்தி பின்னும் நூலைப் போல ஒரு நூலை பூணூலால் பின்ன முடியுமா? பிறகென்ன பூணூல் பெருமை பேசுகிறீர்கள்”?

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்