Aran Sei

ஆர்எஸ்எஸ் “விஷ்வ குரு” – இந்தியாவுக்கும் உலகத்துக்கும் என்ன கதி? : ஏ ஜி நூரானி

Image credit : thewire.in

டால்ஃப் ஹிட்லரின் “எனது போராட்டம் (Mein Kampf)” என்ற நூலை புறக்கணித்தற்கான விலையை உலகம் கொடுத்தது. அவர் தன் தரப்பில் எதையும் மறைக்கவில்லை. அவரது நிகழ்ச்சி நிரலும், அதனை இயக்கிய நோக்கமும் வெளிப்படையாக பேசப்பட்டன.

டெல்லியிலும் ரோமிலும் உள்ள ஆவணக் காப்பகங்களில் நடத்திய மிகப்பெரிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்திய தேசியவாதத்திற்கும், நாஜி – பாசிசத்திற்கும் இடையேயா நிலவிய உறவும், ஆர்எஸ்எஸ், வினாயக தாமோதர் சாவர்க்கர் ஆகியோருக்கு நாஜி-பாசிச கருத்துக்களின் மீது இருந்த ஈர்ப்பும், அவர்களுக்கிடையிலான இணைப்பும், தொடர்பும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஷ்வகுரு (உலகின் ஆசிரியர்) என்ற ஆர்எஸ்எஸின் கருத்து புதிதாக முளைத்தது இல்லை. முட்டாள்தனமான வரலாற்றின் அடிப்படையில் விளைந்த வெற்று பெருமையும் அல்ல.

பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், தனது “சிந்தனைகளின் கொத்து” (Bunch of Thoughts) என்ற நூலில், “கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே எங்கள் கரங்கள் ஒரு புறம் அமெரிக்கா வரையிலும் மறுபுறம் சீனா, ஜப்பான், கம்போடியா, மலேயா, சியாம், இந்தோனேசியா, அனைத்து தெற்காசிய நாடுகள் வரை மட்டுமல்ல வடக்கே மங்கோலியா, சைபீரியா ஆகிய நாடுகள் வரை நீண்டிருந்தன.”

இந்தத் தெற்காசிய பகுதிகளில் 1,400 ஆண்டுகளாக நமது வலிமை மிக்க பேரரசு தொடர்ந்து இருந்தது. சைலேந்திர பேரரசு மட்டுமே, சீன விரிவாக்கத்திற்கு எதிராக வலிமை வாய்ந்த அரணாக 700 ஆண்டுகள் செழித்திருந்தது,” என்று எழுதி உள்ளார்.

அவரது சிஷ்யப் பிள்ளையும், ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அமைப்பான விஸ்வ இந்து பரிசத்தைச் சேர்ந்தவருமான ப்ரவீன் தொகாடியா தனது கற்பனையை தறி கெட்டு பறக்க விட்டார். “ஒரு காலத்தில் உலகம் முழுவதும் இந்துக்கள்தான் இருந்தனர். 700 கோடி இந்துக்கள் இருந்தனர். இப்போது வெறும் 100 கோடி பேர்தான் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

பின்னர் அவர் விஎச்பியின் அகில உலக செயல்தலைவர் ஆனார். இத்தகைய நபர்கள் வேதகாலத்தில் வாழ்ந்து கொண்டு அந்த யுகத்தின் “சாதனைகள்” பற்றி கனவு காண்கிறார்கள்.

2015, ஜனவரி 5-ம் தேதியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை:

“மகரிஷி பரத்வாஜின் வய்மானிக சாஸ்திரம் பறக்கும் விமானத்தை கண்ணுக்குத் தெரியாததாக மாற்றக்கூடிய வேதியியல் முறையை கூறுகிறது; மனித நகல் எடுத்தலின் (குளோனிங்) முதல் சான்று நூறு கவுரவர்கள்; பசுவின் மூத்திரம் புற்று நோயைக் குணமாக்கும்….” – 1991-ல் உருவாக்கப்பட்ட சங் பரிவாருடன் இணைந்த அறிவியல் அமைப்பான விஞ்ஞான பாரதி, வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய குழந்தைகளுக்கு நாட்டின் செழுமையான அறிவியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நன்கு அறிமுகப்படுத்த தன்னை விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

“இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிய விஜய் பி. பாட்கரைத் தலைவராகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, புகழ்பெற்ற அறிவியலாளர்களான ஜி. மாதவன் நாயர், அணில் ககோட்கர் ஆகியோரைப் புரவலர்களாக கொண்டுள்ளது.

“சுதேசி அறிவியலை” மேம்படுத்துவதையும், பாரம்பரிய மற்றும் நவீன அறிவியலையும், அதேபோல் இயற்கை மற்றும் ஆன்மீக அறிவியலையும் ஒன்றாகப் பின்னிக் கொடுப்பதுதான் தனது உருவாக்க நோக்கம் என்று விஞ்ஞான பாரதி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது.

“வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் உள்ளவை இந்தியா மிகப்பெரும் பாய்ச்சலில் முன்னேற உதவும். அரசு அதனடிப்படையில் ஆராய்ச்சியை வளர்க்க வேண்டும்,” என்கிறார் விஞ்ஞான பாரதியைச் சேர்ந்த சோம்தேவ். விஞ்ஞான பாரதி வளைகுடா பகுதியில் விரிவடைய விரும்பும் அதே நேரம், விஎச்பி நாட்டுப் பசுக்களை பாதுகாக்கவும், வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க அரசின் மீது அழுத்தம் கொடுக்கிறது….

“வேளாண் அமைச்சகம் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டது. நாட்டு பசு இனங்களைக் காப்பாற்றவும், வளர்க்கவும் ரூ 500 கோடி ஒதுக்கி உள்ளது. 378 கோடி ரூபாய்க்கான செயல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 123 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் வழங்கப்படும். மதுராவிலும் தென் இந்தியாவிலும் இரண்டு இனப்பெருக்க மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது [2014 ம் ஆண்டு இறுதியில்].”

பிரதமர் மோடி மும்பையில் புதிதாக புனரமைக்கப்பட்ட ஒரு மருத்துவமனையைத் திறந்து வைத்து பேசிய போது , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அந்த காலத்திலேயே இருந்ததில் சந்தேகம் இல்லை எனக் கூறியது வியப்பிற்குரியதல்ல.

முதலில் இந்து உலக ஒழுங்கைக் குறிக்க “ஜகத்குரு” என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்து மதத்தின் நான்கு முதன்மை மடங்களின் தலைவர்களான சங்கராச்சாரியார்களும் ஜகத்குரு என்று அழைக்கப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தியாவிற்கு விஷ்வகுரு என்ற பெயரை ஆர்எஸ்எஸ் சூட்டியது.

சமீபத்தில் , “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசியம்” (1939), “சிந்தனைகளின் கொத்து”(1966) ஆகிய கோல்வால்கரின் இரண்டு புத்தகங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என்று துண்டித்துக் கொள்வதற்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இந்த முயற்சி மோசடியானது மட்டுமின்றி பயனற்றதும் ஆகும். ஏனெனில், 1978-ல் அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜேந்திர சிங்-ம் முன்னாள் தலைவர் தியோரஸின் சகோதரரான பரூவா தியோரஸும் கொடுத்த விண்ணப்ப எண் 17-ன் படி, அந்த இரு புத்தகங்களையும் ஆர்எஸ்எஸ் பயபக்தியுடன்  அங்கீகரித்துள்ளது. அதன் 17-ம் பத்தியில் அந்த இரண்டு புத்தகங்களையும் அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

அவர்கள் வரலாற்றை பைத்தியக்காரத்தனமாக மறு கட்டமைப்பு செய்வது மீது நமது கவனத்தை செலுத்தும் போது, நாம் ஆர்எஸ்எஸ்-ன் விஷ்வகுரு என்ற கருத்தின் அரசியல் தாக்கங்களின் மீதான கவனத்தை குறைத்து விடக் கூடாது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக வின் முன்னாள் கட்சித் தலைவரும், ஆர்எஸ்எஸின் தீவிர உறுப்பினருமான அமித்ஷா இந்த அரசியல் பற்றிக் கூறிய வெளிப்படையான, குழப்பமில்லாத தெளிவற்ற‌ அறிக்கை நம்மிடம் உள்ளது.

2016, மார்ச் 5-ம் தேதி, “பாரத் மாதாவை விஷ்வ குரு என்ற நிலைக்கு உயர்த்த வேண்டுமானால்…. இந்த நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது ஆகும்,” என்று அவர் கூறியுள்ளார்.

Image credit : thewire.in
அமித் ஷா, மோடி – Image credit : thewire.in

இதுவே விஷ்வகுரு என்ற முழக்கத்தின் உண்மையான அடிப்படையையும், நாட்டின் மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் விளக்குகிறது. அரசியல் எதிர்ப்பை அழிப்பது; எதிர்ப்புகளை அடக்குவது; மதச்சார்பின்மையை நிராகரிப்பது; இராணுவ வலிமை பெறுவது; உலகத்தை வெளிநாட்டு ஆர்எஸ்எஸ்-ன் புதிய இந்திய கிளையாக ஏற்கச் செய்வது, பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகளுடன் கரம் கோர்ப்பது என்ற ஒரு நீண்ட கால அரசியல் திட்டத்தை இது உள்ளடக்குகிறது.

சுருக்கமாக கூறுவதெனில், இதன் அடிப்படை உள்நாட்டில் இந்துத்துவாவின் வெற்றியும் உலக அளவில் அது ஏற்றுக் கொள்ளப்படுதலும் ஆகும்.

இந்துத்துவாவின் மறுபாதி

உண்மையில் நடைமுறைக்கு ஒவ்வாத இந்த கற்பனைக் கனவு நனவாகாது என்பது ஒரு புறம் இருந்தாலும், நமது நாட்டுக்கு இது ஏற்படுத்தும் ஆபத்து கவலைக்குரியது. இதன் நீட்சியே தெற்காசியாவின் மீதான ஆதிக்கம். விஷ்வகுரு என்பது இந்துத்துவாவின் மறுபாதி ஆகும்.

Image credit : thewire.in
சாவார்க்கர் – Image credit : thewire.in

சாவர்க்கரின் “இந்துத்துவா (1923)” என்ற கட்டுரை இந்த நச்சுக் கருவை விரிவாக விளக்குகிறது. அது விஷ்வகுரு என்பதற்கான விதைகளை விதைத்தது. அவரது வாரிசுகள் அதற்கு நீரூற்றி அது செழித்து வளர்வதை உறுதி செய்து கொண்டனர்.

ஆனால் சாவர்க்கர், “உலக மக்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்த அவர்களது முன்னோர்களிடமிருந்து தங்கள் கடமைகளை கற்றுக் கொள்ளட்டும்,” என்று உறுதியாகக் கூறினார். புத்தர் மீதும் புத்த மதத்தின் மீதும் தனது மரியாதையை வலியுறுத்துவதற்கு அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்கிறார். ஆனால், இந்தியாவில் அது பரவியதைப் பற்றிய அவரது புலம்பல்களும், அதன் விளைவுகள் குறித்த ஆழ்ந்த வருத்தமும் மறைக்கப்படவில்லை.

மற்ற ஆர்எஸ்எஸ் தலைவர்களைப் போலவே புத்தமத எழுச்சிக்கு முந்தைய காலமே சாவர்க்கரை உற்சாகப்பபடுத்துகிறது. “வேத தர்மங்களை போற்றுவோம்”, “மீண்டும் வேதங்களை நோக்கி!” ஆகிய தேசியவாத குரல்கள் மேலும் மேலும் உரக்க ஒலிக்கின்றன. ஏனெனில் இது ஒரு அத்தியாவசியமான அரசியல் தேவை.”

மிகவும் உண்மை- இந்துத்துவா என்பது ஒரு அரசியல் பிரகடனம். இந்த அரசியல் அவசியம்தான் இந்தியாவில் புத்தமதம் நிராகரிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.

உண்மையை வெளிப்படுத்தும் இந்த சிறு பகுதியை படியுங்கள்: “வெறுப்பு பிரிக்கவும் செய்கிறது, ஒன்றிணைக்கவும் செய்கிறது.” சாவர்க்கரைப் போலவே ஆர்எஸ்எஸும் வெறுப்பை உமிழ்ந்து, அதன் மூலம் இந்துக்களை ஒன்று படுத்தவும், அவர்களை பிற இந்தியர்களிடமிருந்து, குறிப்பாக கோல்வால்கரின் சிந்தனைகளின் கொத்தில் (அத்தியாயம் 9) மூன்று “உள்நாட்டு அச்சுறுத்தல்கள்” என்று பட்டியலிட்டிருக்கும் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோரிடமிருந்து பிரிக்கவும் செய்கிறது.

Image credit : thewire.in
கோல்வால்கர் – Image credit : thewire.in

கோல்வால்கர் இந்தக் கருத்தை எடுத்துக் கொண்டு, “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசியம்” என்ற நூலில் அதை விளக்குகிறார். வெறுப்பு நிரம்பிய அவரது ஆழமான விளக்கம் இவ்வாறு முடிகிறது:

“இனத்தின் ஆன்மா நம்மை அழைக்கிறது. அஞ்ஞான இருளில் மூழ்கியுள்ள அதன் குழந்தைகளுக்கு அழியாத ஆன்மீக மகிமையுடன் ஒளியூட்டப்பட்ட நேசத்திற்குரிய இலட்சியப் பாதையைள்ள அது காட்டுகிறது. நாம் நமது உண்மையான தேசியத்துக்காக எழுச்சி அடைவோம். இன-உணர்வின் வழிநடத்துதலைப் பின்பற்றுவோம். “கடலில் தொடங்கி கடல் வரை, எல்லா நாடுகளிலும் ஒரே தேசம்’ ,’ ஒரு புகழ்பெற்ற அற்புதமான, தீங்கற்ற அமைதியையும், செல்வத்தையும் உலகமெங்கும் கொட்டுகிற இந்து தேசம்’ என்ற வேத கால தீர்க்கதரிசிகளின் அறைகூவலால் வானை நிறைப்போம்”

மிகையான கூற்றுகள்

“நமது உலகப் பணி” என்று தொடங்குகிறது சிந்தனைகளின் கொத்து (அத்தியாயம் 1). அவர் எழுதியது, மோடியும் குழுவினரும் கூறி வரும் கடந்த கால சாதனைகள் பற்றிய மிகையான கூற்றுகளை விளக்குகிறது.

“இந்த நிலத்தில் மட்டும்தான் மனித இயற்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க, பண்டைய காலத்திலிருந்தே, தலைமுறை தலைமுறையாக சிந்தனையாளர்களும், தத்துவியலாளர்களும், தீர்க்கதரிசிகளும், முனிவர்களும் தோன்றி, ஆன்மீக உலகில் ஆழ மூழ்கி, மகத்தான ஒன்றுபடுத்தும் கொள்கையை நனவாக்கும் அறிவியலை கண்டுபிடித்து, முழுமையாக்கினர். ஒட்டு மொத்த தேசத்தின் பல நூற்றாண்டுகால தவமும், தியாகமும், அனுபவமும் வற்றாத இந்த அறிவின் நீரூற்றாக இருந்து உலகத்தின் ஆன்மீகத் தாகத்தை தீர்க்கிறது.

“இது காடுகளில் தங்கள் தவச்சாலைகளில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு சில சிந்தனையாளர்களின் அறிவுசார் ஊகங்களின் அளவில் மட்டுப்படுத்தப்பட்ட வெறும் வறண்ட அறிவு அல்ல. சிந்தனையாளர்கள், அதிகாரிகள், வணிகர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள் தத்துவவாதிகள் உள்ளிட்ட நமது முன்னோர்கள் அனைவரையும் செலுத்திய சிந்தனையாக இருந்தது. அவர்கள் தூர தேசங்களுக்கு உலக சகோதரத்துவத்தை எடுத்துச் செல்ல வழி காட்டுவதாக இருந்தது.

“அவர்கள் எங்கெல்லாம் நுழைந்தார்களோ அங்கெல்லாம் உள்ளூர் மக்களுக்கு வாழ்க்கையின் ஆன்மீக, கலாச்சார விழுமியங்களையும், பொருள் வளத்திற்கான அறிவியலையும் கற்றுக் கொடுத்தனர். மேலும் அவர்களின் கருணைமிகு ஆட்சியின் தேசங்களின் நாடுகளின் ஒருபடித்தான சகோதரத்துவத்தை கட்டி எழுப்பினர். வலிமையான, தன்னம்பிக்கைமிக்க, சுய ஒளிவிடும் நமது இந்து சமூகம் அந்தத் தொலைதூரங்கள் வரை பரவிய ஆன்மீகப் பேரரசை ஒன்றிணைக்கும் ஆதார மையத்தைக் கொடுத்தது.

அமெரிக்கா மீதான மோகம்

துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அணிசேரா கொள்கையை நிராகரித்து அமெரிக்காவுடனான கூட்டணியை ஆதரித்தது. அதே சமயம், “கம்யூனிஸ்ட்” சீனா மீதான வெறுப்பை மறைக்கவில்லை.

சர்வதேச ஆதிக்கத்துக்கான நாட்டம் இந்தியாவில் வெறுப்பின் அடிப்படையில் பிளவுபடுத்துவதோடு இணைந்துள்ளது. “உண்மையில், நாம் நம் தாயின் கருப்பையில் இருந்து வெளிவரும் முன்பே இந்துக்கள் தான். எனவே நாம் இந்துக்களாகவே பிறந்தோம். மற்றவர்களைப் பற்றி கூற வேண்டுமானால், அவர்கள் பெயரிடப்படாத சாதாரண மனிதர்களாக இந்த உலகத்தில் பிறந்துள்ளார்கள். பின்னர், சுன்னத் செய்வதன் மூலமோ அல்லது ஞானஸ்நானம் பெறுவதன் மூலமோ முஸ்லீம்களாகவும் கிறித்துவர்களாகவும் ஆகின்றனர்.”

ஆகவே நமது சமூகத்தில் ஒற்றுமையையும் ஆன்மீக அடையாளத்தையும் வலுப்படுத்துவது நமக்கு பிறவிக் கடமை ஆகும். அந்த பிறவிக் கடமையை, அது குறைபாடுள்ளதாகத் தோன்றினாலும் கூட விட்டுவிடக் கூடாது. எனவே, தறபோது நமது உயிரணுக்களை அரிக்கும் பிரிவினையையும் வேறுபாடுகளையும் நீக்குவதும், நமது சமூகத்தை மீண்டும் ஒன்றுபட்ட இணக்கமான முழுமையான சமூகமாக உருவாக்க வேண்டியதும் நமது மேன்மையான கடமையாகும்.”

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மூலம் அல்ல, உலகிற்கு கற்றுத்தரப் போகும் விஷ்வ குருவாக இந்தியாவில் இந்துத்துவாவை சுமத்துவதன் மூலம்.

காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் வெறுப்பு மறைக்கப்படவில்லை. “நமது தலைவர்கள் ‘இந்து-முஸ்லீம் ஒற்றுமை’ முழக்கங்களை எழுப்புகிறார்கள். அதன் குறுக்கே நிற்கும் எதனையும் ஒதுக்கி விட வேண்டும் என்று அறிவிக்கிறார்கள். அவர்களால் முஸ்லீம்களிடம் பிரிவினைவாதத்தை மறக்க வேண்டும் எனக் கூற முடியாததால், தங்கள் பிரசங்கங்களை அமைதியான இந்துக்களிடம் நடத்துகிறார்கள். அவர்களின் முதல் போதனை, நமது தேசியத்தை இந்து என அழைக்கக் கூடாது என்பது, அதற்கும் மேலாக நமது நிலத்தை அதன்
பாரம்பரிய பெயரான இந்துஸ்தான் என அழைக்கக்கூடாது, ஏனெனில் அது முஸ்லீம்களை புண்படுத்தும். எனவே, ஆங்கிலேயர்கள் கொடுத்த ‘இந்தியா’ என்ற பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் புதிதாக உருவாகிய நாடு ‘இந்திய நாடு’ என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்துவை ‘இந்தியன்’ என பெயரை மாற்றிக் கொள்ளக் கூறுகிறார்கள்….”

“வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்துவை முட்டாள் என்றும், அவனுக்கு ஆன்மா இல்லை என்றும், தனது தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் சொந்தக் காலில் நின்று போராடும் திறனற்றவன் என்றும், இவை எல்லாவற்றையும் முஸ்லீம் இரத்தம் என்ற வடிவத்தின் மூலமே இந்துவுக்கு செலுத்த முடியும் என்றும் கூறுகின்றனர். என்ன ஒரு அவமானம்! நமக்குள் இருக்கும் புராதனமான அழியாத தன்னம்பிக்கையை அழித்து விட, மக்களின் வாழ்க்கை மூச்சாக உள்ள தன்னம்பிக்கையையும் தற்சார்பின் ஆன்மாவையும் நாசமாக்க நமது சொந்தக் தலைவர்களே முன்வருவது என்ன ஒரு கெடு வாய்ப்பு?

‘இந்து-முஸ்லீம் ஒற்றுமை’ இல்லாமல் சுயராஜ்ஜியம் இல்லை என்று அறிவித்தவர்கள் நமது சமூகத்திற்கு மிகப் பெரிய தேசத் துரோகம் இழைத்துள்ளனர். சிறந்த வரலாற்றாளர் ஜாதுநாத் சர்கார் கூறியபடி ‘இந்துக்கள் அழிவின்மைக்கான அமுதத்தை குடித்திருக்கிறார்கள்’ என்பதை உலகுக்கு நிரூபித்த சிவாஜியை உருவாக்கிய சமூகத்திற்கு ஆண்மையின்மையை போதிப்பதும் இந்த மகத்தான, வீரியமிக்க சமூகத்தின் தன்னம்பிக்கையையும், பெருமையான உள்ளுணர்வையும் உடைப்பதும் என்ற அப்பட்டமான காட்டிக் கொடுத்தலுக்கு இணையான செயல் உலக வரலாற்றிலேயே இல்லை.”

தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டு, அதற்கு விஷ்வகுரு என்ற முழக்கத்தின் மூலம் ஒத்தடம் கொடுக்கிறார்கள்.

விஷ்வகுரு என்பதற்கான பரப்புரை

Image credit : thewire.in
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – Image credit : thewire.in

விஷ்வகுரு என்பதற்கான பரப்புரை வீரியமாக தொடர்ந்தது. சுதந்திரத்திற்குப் பின் மேலும் முடுக்கி விடப்பட்டு, 2021 ஜனவரி வரை இன்னும் தொடர்கிறது. இது ஒரு அதிசயத்தக்கத் தொடர்ச்சி சாதனை. அண்மை ஆண்டுகளின் இந்தக் கருப்பொருள் தொடர்பான ரத்தினங்களைக் கவனியுங்கள்:

 1. 1997-ம் ஆண்டு நாக்பூரில், விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் ஊழியர்களிடையே அதன் தலைவர் ராஜேந்திர சிங் உரை ஆற்றினார். அப்போது அவர், “மீண்டும் பாரதத்தை விஷ்வகுருவாக உருவாக்கும் கனவை நனவாக்க லட்சக்கணக்கானவர்கள் தங்கள் சொந்த இன்பங்களையும், வேலையையும் இழக்கவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர்.. சுவாமி விவேகானந்தர், சாவர்க்கர், ஹெக்டேவார், சுபாஷ் சந்திர போஸ், அரபிந்தோ கோஷ் போன்ற மிகப் பெரிய மனிதர்கள் இந்தக் கனவைக் கண்டனர். இதனை நனவாக்க அற்புதமான பணிகளையும் ஆற்றியுள்ளார்கள். நமது சகோதரர்கள் எல்லோரும் இந்த முடிவடையாத வேலையை முடிக்க உறுதி கொள்வதுடன், இந்த புனிதக் கனவை நனவாக்குவதுதான் நமது வாழ்க்கை மதிப்புடையதாகும் என அங்கீகரித்து, அந்த இலக்கை நோக்கி வேலை செய்தால் நம்மால் தாய்நாட்டின் தற்போதைய மனச் சோர்வு நிலையை மாற்ற முடியும். அத்துடன், ஓரிரு ஆண்டுகளில் நம்பிக்கையும், உறுதி மொழியும் நிறைந்த சூழலை உருவாக்க முடியும்” (ஆர்கனைசர்,1997, அக்டோபர், 26).
 2. பைடூலில் நடந்த இந்து சம்மேளன் கூட்டத்தில் பேசிய மோகன் பக்வத், ஒட்டு மொத்த உலகமும் இந்திய விஷ்வ குருவாக உருவாவதை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. அந்தத் திசையில் வேலை செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். உலகம் முழுவதும் பொருளாதார போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், மதத்தின் பெயரால், பிரிவுகளின் பெயரால் ஏராளமான இரத்தம் சிந்தப்பட்டு விட்ட நிலையில், பாரதம் விஷ்வகுரு பாத்திரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது, ஏனெனில் இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உலகம் பாரதத்தை எதிர்பார்க்கிறது. (2017, பிப்ரவரி 19, ஆர்கனைசர்).
 3. 2020, டிசம்பர் 20-ம் நாளைய ஆர்கனைசர் இதழில் ‘உலக சூழலில் இந்தியாவின் பங்கு’ என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியது வெளியானது. அதில் அவர், “நாம் விடுதலை அடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே உலகம் இந்தியாவின் பங்களிப்பிற்காக காத்திருந்தது, ஆனால் இந்தத் தருணமும் தனக்கே உரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இப்போது நாம் விழித்துக் கொண்டு விட்டோம். சுதந்திரம் அடைந்த பிறகும் நாம் இது போன்ற வகையிலான சிந்தனையை செய்ததில்லை. உலகின் வாழ்வில், புதிதாக சுதந்திரம் அடைந்த புதிய இந்தியா எந்த இடத்தை வகிக்க வேண்டும் என்பது பற்றிய பார்வை கொண்ட ஆவணத்தை நாம் தயாரிக்கவில்லை. அறிவுசார் தளத்தில் இது குறித்த விவாதங்கள் கூட நடத்தப்படவில்லை. ஏனெனில் நாம் இன்னும் வளரும் நாடாக இருப்பதால் நம்மால் என்ன செய்ய முடியும் என அப்போது நினைத்தோம்.
  ஆனால் இன்று அந்த நம்பிக்கை நம்மிடம் விழிப்புற்று விட்டது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது என்கிறார் சுவாமி விவேகானந்தர். ரோம் நகரின் குறிக்கோள் முழு உலகத்திற்கும் தன் இராணுவவாதத்தை ஒரு முன்மாதிரியாக வைப்பது. அதனை அது செய்து முடித்தது. அதன் இருப்பின் தேவை முடிந்து விட்டதால் ரோமும் முடிந்தது என்று அவர் கூறினார்.
  இப்படித்தான் தேசங்கள் வடிவெடுக்கின்றன. இந்தப் படைப்பின் வாழ்க்கையைத் தொடர, அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கம்தான் அவர்களுடைய நோக்கமும். அதில் அவர்கள் வெற்றி பெற்று, சென்று விடுவார்கள்.
  ஆனால், “இந்தியாவின் குறிக்கோள் உலகிற்கு எப்போதும் தேவை.. அவ்வப்போது இந்தியா தன்னை உயர்த்திக் கொண்டு உலகிற்கு இடமளித்துள்ளது. நேரம் வந்து விட்டது; இப்போது இந்தியா விழித்தெழ வேண்டும்.” என்று விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். ” இந்தியா தனது உருவத்தையும், கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு, அவை உலக உருவமாக இருப்பதால்: இந்த முழு கற்பனையையும் எடுத்துக் கொண்டு, நமது வாழ்க்கை நிமிர்ந்து நிற்கிறது, ஒவ்வொரு நாடும் அதனதன் அடையாளம் மற்றும் பன்முகத்தன்மைக்கு வாய்ப்பைப் பெற்றுள்ளது. நாம் அனைவரையும் ஒரு அமைப்பு முறையின் கீழ் கொண்டு வர முயற்சிக்க மாட்டோம்….. ” வருங்கால உலகில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. ஏனெனில் உலகத்தில் புதிய சக்திகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அதிகாரம் அவர்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தருவதுடன், இந்தியா மட்டுமே ஒரே சக்தி என அவர்களுக்கு உறுதி அளிக்கிறது. இந்தியா முன்வந்து அவர்களுக்கு தலைமை தாங்கினால் அது நமக்கு நல்லது.
  எனவே, இந்த நம்பிக்கையை பொருள் உள்ளதாக ஆக்குவதற்கும், உலகிற்கு ஒரு நிலையான வரையறையைக் கொடுப்பதற்கும் நாம் ஒரு சிவ தவத்தை மேற்கொள்ள வேண்டும்.”
  இந்த இதழில் ஸ்ரீதர் பிரபு என்பவர் எழுதிய “தடுப்பூசியும் விஷ்வகுருவும்” என்ற ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
 4. 2021, ஜனவரி 24 தேதியிட்ட ஆர்கனைசரின் சமீபத்திய இதழை படிப்பது தனி அனுபவமாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள “பன்னாட்டு கலாச்சார ஆய்வு மையத்தின்” தலைவர் எனப்படும் சேகர் பட்டேல் எழுதியுள்ள ஒரு கட்டுரை, ஒரு புறம் “மதங்களுக்கு இடையேயான” திருமணங்களை கண்டிக்கிறது. மறுபுறம் “தர்மத்தின் அடிப்படையிலான உலக ஒழுங்கின் விடியலுக்கு” ஏங்குகிறது.
  விடா முயற்சியுடன் குப்பைகளை மறு சுழற்சி செய்து சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதில் எழுத்தாளரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை அந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.
  இதழின் 28 ம் பக்கத்தில் அவர் இவ்வாறு முடிக்கிறார் : ” பிளவுபடுத்துவதுநாடுகளை அழிக்கும் ஒரு நோய். அதன் முன்னோர்களின் ஞானத்தையும், அறிவார்ந்த தீர்க்கதரிசிகளையும் கொண்டு இந்தியாவை கட்டி எழுப்ப முடியும். மேலும் சமூக, அரசியல் தொழில்நுட்ப சீர்குலைவுகளால் ஏற்படுவதாக தோன்றும் குழப்பத்திற்கு சமுதாய ஒற்றுமையை ஒரு மருந்தாகப் பயன்படுத்தி உலகத்தை மேலும் ஒரு நல்ல இடத்தை நோக்கி வழிநடத்தலாம்.
  அனைவருடைய நல்வாழ்வைக் கருவாகக் கொண்ட கீழிருந்து மேலாகக் கட்டப்பட்ட உலக ஒழுங்கு என்பதே அனைத்து உயிரினங்களின் விருப்பங்களுக்கும் மிகவும் நியாயமானதாகவும், இணக்கமானதாகவும் இருக்கும்.”

2012, அக்டோபர் 3-ம் தேதி புது தில்லியில் ஆற்றிய உரையில் மோகன் பக்வத் விஷ்வகுரு தொடர்பான பரப்புரையின் அடிப்படையாக அமையும் சாரத்தை, “இந்தியா உலகத்தை வழி நடத்த வேண்டும்” என்று சுருக்கமாக குறிப்பிடுகிறார்.

2021, ஜனவரி 21-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி “இந்தியா தனது செல்வாக்கை” உலகம் முழுவதும் பரப்புவதற்கான சரியான நேரம் வந்து விட்டது,” என்று கூறினார்.

www.thewire.in இணையதளத்தில் ஏ.ஜி.நூரானி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

ஆர்எஸ்எஸ் “விஷ்வ குரு” – இந்தியாவுக்கும் உலகத்துக்கும் என்ன கதி? : ஏ ஜி நூரானி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்