Aran Sei

“என்னை அதானியின் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கேட்டபோது” – ராமச்சந்திர குஹா

ண்மையில்  ‘தி ஃபைனான்ஸியல் டைம்ஸ்’ வெளிவந்த ஒரு கட்டுரை, நரேந்திர மோடி, 2014ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்டுகள், சில மாதங்களில் ஒரு குஜராத் தொழிலதிபரின் எதிர்காலம் வியக்கத்தக்க வகையில் உயர்ந்ததைப் பற்றி மிக கவனமான விவரங்களையும், புறவய நிலைகளையும் கொண்டு எழுதப்பட்டிருந்தது. அதில் ஒரு பத்தி “திரு. மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், கு‌ஜராத்திலிருந்து புதுடெல்லிக்கு திரு.அதானியின் தனி விமானத்தில் சென்றார். இது இணையான அதிகாரத்திற்கான  வளர்ச்சியை அடையாளப்படுத்தும் நட்பின் வெளிப்படையான வடிவம். மோடி பிரதமர் அலுவலகத்திற்குள் வந்த உடன் அதானியின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு, அரசு ஒப்பந்தங்களைப் பெற்றதன் மூலமும், நாடு முழுவதும் மேற்கொண்ட உள்கட்டுமான திட்டங்கள் மூலமும்,  230% (26 பில்லியன் டாலர்) அதாவது 1,89,800கோடி (ஒரு டாலர் 73 இந்திய ரூபாய்க்கு சமம் எனில்) உயர்ந்தது.”

நான் மோடியை சந்தித்ததே இல்லை என்பதால், இந்த கட்டுரையைப் படித்ததும் எனது நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தேன். நான் விரும்பியிருந்தால் அதானியை சந்தித்திருக்கலாம். மேலும் அதானியோடு இணைந்து பணியாற்றி இருக்கலாம். இதன்  பின்னணி இதோ இப்படி தொடர்கிறது. செப்டம்பர் 2013 ல் நான் “காந்திக்கு முந்தைய இந்தியா” (Gandhi Before India) என்ற புத்தகத்தை வெளியிட்டேன். அது அன்றைய மன்னராட்சியின் கீழ்  இருந்த கத்தியவாரில், காந்தி வளர்ந்த விதம், லண்டனில் பெற்ற கல்வி மற்றும் வழக்கறிஞராக பணியாற்றியது, தென்னாப்பிரிக்காவில் ஒரு செயற்பாட்டாளராக இருந்தது ஆகியவை பற்றி எழுதி இருந்தேன். அதே வருடம் டிசம்பர் மாதம் மும்பையில் ஒரு இலக்கிய விழாவில் எனது புதிய புத்தகம் பற்றி உரையாற்றினேன். எனது உரை முடிந்ததும், ஒரு இளைஞர் என்னிடம் வந்து தன்னை ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர் என அறிமுகம் செய்து கொண்டார். அவர் சில முக்கிய விடயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினார். எனினும், நான் பெங்களூருக்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்க உடனடியாக விமான நிலையம் செல்ல வேண்டியிருந்தால், அவருடன் பேச நேரமில்லாததால், நான் அவரிடம் எனது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அவருக்கு என்ன பேச வேண்டுமோ அது எதுவாக இருந்தாலும் அதில் எழுதி அனுப்புமாறு கூறிவிட்டேன்.

சில நாட்கள் கழித்து அந்த இளைஞர் எனக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் அவர்,  தான் ஒரு ஆலோசனை தரும் நிறுவனத்தில் (Consultancy)  வேலை பார்ப்பதாகவும், தற்போது “அதானியின்  வாழ்க்கை வரலாறு” எழுதும் திட்டத்தினை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டிருப்பதாவும் எழுதி இருந்தார். மேலும் அவரது  நிறுவனம், “அதானியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது பற்றி ஆலோசித்து வருகிறது” எனக் கூறி இருந்தார்.

மேலும் “பலரும் அறிந்த ஒரு இலக்கிய முகவர், இந்த திட்டத்தை எடுத்துக்கொள்ள பல முன்னணி பதிப்பாளர்கள் மிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று கூறியதாக எழுதி இருந்தார்.

ஒரு ஆழமான செயல்திட்டம்

எனது தாளாளர் என்னிடம் வந்து அவரது நிறுவனமும், அதானி குழுமமும் “மிக உயர்ந்த தரத்திலான, ஆழமாக பணியாற்றக் கூடிய “குருவாகவும், ஆலோசகராகவும் ” செயல்படக் கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருப்பதாக” கூறினார். அவர்கள் எதிர்பார்க்கும் “குரு” , “ஆலோசகர்” நானாக இருக்க வேண்டும் என நம்பினார்.  எனவே எனது தாளாளர் அந்த நிறுவன பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பிற்கு இப்போது முன்மொழிவு செய்தார்.

நான் ஏற்கனவே குஜராத்திற்கு பலமுறை சென்றிருந்ததால் (மகாத்மா காந்தி பற்றிய ஆய்வுக்காக), கடந்த 2013 டிசம்பர் மாதம் கூட சென்றிருந்ததால், கௌதம் அதானி பற்றி ஓரளவு அறிந்திருந்தேன். அவரை 2001 லிருந்து முதலமைச்சராக உள்ள மோடியுடன்  நெருங்கிய தொடர்புடைய தொழிலதிபர் எனத் தெரியும். அப்போதும் கூட பலமுறை மோடி அதானியின் தனி விமானத்தில் சென்றிருக்கிறார். அகமதாபாத்தில் உள்ள என் நண்பர்கள், எவ்வாறு அதானி மீனவர்களை இடம்பெயரச் செய்தும், சதுப்பு நிலக்காடுகளை (mangrove forests)  அழித்தும், கடற்கரை ஓரங்களில் தனது திட்டங்களுக்கு மாநில அரசின் அதிவிரைவு ஒப்புதல்களைப் பெறுகிறார் என்பது பற்றிக் கூறியிருக்கிறார்கள்.

டிசம்பர் 2013 சமயத்தில், மோடி பிரதமராக வருவார் என மிகப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்ததும், இன்றுவரை கௌதம் அதானிக்கு மேலும் பல சலுகைகளைப் பெறும் வாய்ப்பு கொடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதை உணர்ந்து மேலும் செல்வாக்குள்ளவராக, முக்கியமானவராக வளர முடியும் என்பதால், தற்போது தன் வாழ்க்கைப் பற்றிய புத்தகம்,  யாருடைய எழுத்தில் (அல்லது இரவல் எழுத்தாளர்) இருக்க வேண்டும் என அவரது ஆலோசகர்கள் யோசிக்கும்போது,  இந்த காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என நினைத்தார்கள்.

அதானியின் வாழ்க்கைப் பற்றி எழுதுவதற்காக எனக்குத் தரப்படும் தரகுத் தொகை இதுவரை எந்த வழியிலும் நான் கோரப்படாததாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் நான் காந்தி பற்றி எழுதினேன், ஆங்கில மானுடவியலாளரும், இந்திய பழங்குடி மக்கள் குறித்த  மிக உயர்ந்த அதிகாரப் பூர்வமான மனிதருமான வேரியர் எல்வினின் (Verrier Elwin) வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளேன். இதனை மார்ச் 1999 ல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் (OUP)  ‘நாகரீகமானவர்கள் மீதான காட்டுமிராண்டித் தனம் (Savaging the Civilized)’ என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த புத்தகம் மதிப்புமிகு கருத்துரைகளைப் பெற்றதுடன் ஒரு திறமையாளனின் வேலைக்கானதாக ஓரளவு மிக அதிகமான பிரதிகள் விற்பனையாயின. புத்தகம் அச்சிடப்பட்டு வெளிவந்த ஒரு சில மாதங்களில், ஓரளவு தெரிந்த புது டெல்லியைச் சேர்ந்த  மூத்த, மதிப்பு மிக்க நூலகர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர், ” பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறீர்களா?” எனக் கேட்டார். வாஜ்பாய் குடும்பத்தினர் அதை எழுதுவதற்கான நபரைத் தேடுமாறு தன்னிடம் கூறியதாகவும், எனது எல்வினது புத்தகத்தை படித்ததும் என்னைப் பற்றி நினைத்ததாகவும், அவர் ஏற்கனவே ஆக்ஸ்போர்டு அச்சகத்துடன் பேசி விட்டதாகவும், அவர்கள் அதற்கு அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பதாகவும் கூறினார்.

அந்த நூலகர் பிரதமர் பற்றிய புத்தகத்தின் மீதான பொதுவான ஈர்ப்பு ஒருபுறம் இருக்க, எல்லா அரசுத் துறைகளும், துணைத் துறைகளும் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை வாங்குவார்கள் என்பதுடன், பல மாநில அரசுகளுக்காக இந்தியிலும் மொழி பெயர்க்கப்படும்.  மேலும் ஆர்எஸ்எஸ் சின் ஷாக்காக்கள் பிரதிகளை வாங்குவார்கள். இதனால் கிடைக்கும் வருவாய் கணிசமானதாக இருக்கும் என்றெல்லாம் கூறினார்.

ஆனால் எனக்கு இது எதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. பணத்துக்காக எழுதும் ஒரு இரவல் (commissioned) எழுத்தாளர்களால் சுதந்திரமாக, வெளிப்படையாக அதிகாரத்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கைப் பற்றி எழுத முடியாது. மற்றொருபுறம், வாஜ்பாய் இயல்பாகவே நல்ல அறிவாளியும், கவர்ச்சியானவராகவும் இருந்தாலும், காந்தியின் பன்முகத்தன்மை கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய இந்து மதத்திற்கு அடிப்படையிலேயே வேறுபட்ட இந்து பெரும்பான்மைவாதத்தை தாங்கிக் கொண்டிருக்கும் அவரது பாஜகவை நான் அதிதீவிரமாக வெறுத்தேன்.

எனக்கு அந்த நூலகரைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாததால், அவரிடம் வெளிப்படையாக எனது உணர்வுகளை கூறாமல், ஒரு சாதாரண நபர், ஒரு முன்னாள் கிறித்துவ சபை ஊழியர், தன்னார்வ மேதையாக மாறிய எல்வின் பற்றி எதையோ பேசி, நான் எல்வினைப் பற்றி எழுதி இருந்தாலும் கூட, நமது பிரதமரைப் போன்ற உயர்வான, மதிப்புமிக்க மனிதரைப்பற்றி எழுத தகுதியானவன் என என்னைக் கருதவில்லை என்று கூறினேன்.

மாபெரும் அதிரடி சலுகை

அடல் பிஹாரி வாஜ்பாய் பற்றி எழுதக் கேட்டதுதான் முதன் முறையாக என்னை இரவல் எழுத்தாளராக எழுதக் கேட்டது. இது கடைசியானதும் அல்ல. நான் கிரிக்கெட் விளையாட்டுப் பற்றி 2002 ல் ஒரு புத்தகம் வெளியிட்ட போது, இரண்டு கிரிக்கெட் வீரர்கள், ஒருவர் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார், இன்னொருவர் அண்மையில் ஓய்வு பெற்றார், அவர்களுடைய வாழ்க்கைக் கதையை எழுத அவர்களோடு ஒத்துழைக்க முடியுமா எனக் கேட்டனர். 2007ல் சுதந்திர இந்தியாவின் வரலாறு என்ற புத்தகத்தை வெளியிட்ட உடன், அண்மையில் காலமான ஒரு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியின் மகன் அவரது தந்தையைப் பற்றிய புத்தகம் எழுத உதவ முடியுமா எனக் கேட்டார். அதே சமயம் உயிரோடுள்ள ஒரு காங்கிரஸ் தலைவரும் அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதித் தருமாறு கேட்டார்.

போகிற போக்கில், இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர்களின் உதவியாளர்கள் தங்கள் வாழும் கதாநாயகரின் 80வது பிறந்த நாளை ஒட்டி அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதித் தரக் கோரினர். இதேபோல் இந்தியாவின் மதிக்கத்தக்க பொருளாதார நிபுணரும், நிர்வாகியுமான ஒருவரது குடும்பத்தினர், சமீபத்தில்  மறைந்து விட்ட தங்கள் தேசபக்தரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதித்தரக் கேட்டனர். பிரபலமான, அதிகாரம்மிக்க, அல்லது செல்வந்தர்களான பலரது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக ஏராளமான,  நான் கேட்காத தொகையும் கூட விலை பேசப்பட்டது.

நான் அவை அனைத்தையும் ( தரகுத் தொகையையும்) மறுத்து விட்டேன். சிலவற்றை ஏற்கனவே இருந்த எழுத்துப் பணிகளினால் மறுத்தேன்; மற்றவை  நான் அதற்கு தகுதியானவன் இல்லை என எனக்குத் தெரியும்; ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரின் தன்முனைப்பை (ego)  செய்தியாகத் தர எனக்கு விருப்பம் இல்லை; மேலும் ஒரு தனிச்சிறப்பான அறிவியலாளரின் ஆய்வு விருப்பங்கள் அல்லது அறிவு சாதனைகளை எழுதும் தகுதியோ, என் மீதான நம்பகத்தன்மையோ எனக்கு இல்லை.

எப்படி ஆகிலும், எனக்கு இந்த “இரவல்” (commissioned) அல்லது “அங்கீகரிக்கப்பட்ட” வாழ்க்கை வரலாறு என்ற கருத்தின் மீதே ஒரு நளினமான வெறுப்பு உள்ளது. நான் எனது உள்ளுணர்வின் தூண்டுதலாலும், அந்த மனிதரின் மீது எனக்குள்ள தனிப்பட்ட, சொந்த விருப்பத்தினாலும் மட்டுமே ஒருவருடைய  வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறேன். யாரோ ஒருவர் அபரிமிதமான பணத்தைக்  கொடுத்து என்னை எழுதச் சொன்னதற்காக நான் எழுதவில்லை.

எல்வின் என் வாழ்க்கையை மாற்றியவர். அதனால் அவரைப் பற்றி எழுதினேன். அவரது எழுத்துக்களைப் படிக்க நேர்ந்த போது நான் வித்தியாசமான பொருளாதார மாணவனாக இருந்தேன். அவரது புத்தகங்கள்தான்  நான் சமூகவியல் மற்றும் சமூக  வரலாறு பற்றி மேலும் ஆய்வு செய்ய  என்னைத் தூண்டியது. நான் காந்தியைப் பற்றி எழுதியதற்கு, அவரது வாழ்க்கை  மற்றும் மரபுவழி பண்பின் மீது உண்டான ஈர்ப்பே காரணம். பின்னர் ஒரு செயலாற்றும் வரலாற்றாளனாக, நான் காந்தியைப் பற்றிய ஏராளமான அரிய தகவல்கள் உலக முழுவதும் உள்ள ஆவண காப்பகங்களில் பரவிக் கிடப்பதைக் கண்டேன். இதுதான் அவருடைய வாழ்க்கை வரலாற்றின்  இரண்டு தொகுதிகள் எழுத என்னைத் தலைப்பட ஊக்குவித்தது.

2013, டிசம்பரில் கௌதம் அதானியின் வாழ்க்கை வரலாற்றை எழுத வாய்ப்பு மின்னஞ்சல் செய்தி மூலம் வந்த போது  அத்தகைய பணிகளை இயல்பாக தள்ளிவிடுபவனாக இருந்தேன். எனவே அந்த இளைஞனுக்கும் அவனது நிறுவனத்திற்கும் நான் காந்தி வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் தொகுதி எழுதும் வேலையில் ஈடுபட்டிருப்பதால்  அவர்களின் “அதானி செயல் திட்டத்திற்கு, குருவாகவும், ஆலோசகராகவும்” இருக்க இயலாது என பதில் அனுப்பி விட்டேன்.

இந்த மூல மறுப்புக்  கடிதத்தை எனது சில நண்பர்களுடன் பகிர்ந்து அத்துடன், “நான் அதை ஏற்றுக் கொள்வதற்கான காரணம் என ஒன்று இருக்குமானால் அது,  எனது நினைவு குறிப்புகளுக்கு “காந்தியிலிருந்து அதானி வரை:  ஒரு வாழ்க்கை வரலாறு எழுத்தாளரின் பயணம்” என தலைப்பிடுவதற்காக மட்டுமாகவே இருக்கும். எனது நண்பர் ஒருவர் ரத்தினச் சுருக்கமாக  அதைவிட மேலான தலைப்பு ஒன்றை அந்த புத்தகத்திற்கு, அந்த பார்வையை ஒட்டி பரிந்துரைத்திருந்தார் (ஆனால்  எழுதப்படாமலே போவது மகிழ்ச்சியாக இருக்கும்) : ” காந்திக்கு  பிறகு அதானி”

(www.scroll.in இணையதளத்தில் ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

“என்னை அதானியின் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கேட்டபோது” – ராமச்சந்திர குஹா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்