பிரதமர் தனது பதவி அல்லது அலுவலகத்தின் அடிப்படையில் பல மத, கலாச்சார, நிதி தொடர்பான அறக்கட்டளைகளின் தலைவராக இருக்கிறார். எனினும், அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இத தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று பதில் கூறியுள்ளது.
இந்தத் தகவலை திரட்டி தர மறுப்பதற்கான காரணமாக, பிரதமர் அலுவலகம், ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 7(9) ஐ சுட்டிக்காட்டி உள்ளது. இந்தப் பிரிவு “அரசு நிறுவனம் தனது வளங்களை சமச்சீரற்ற முறையில் திருப்பி விடுவதாகவோ, அல்லது அல்லது ஆவணத்தின் பாதுகாப்புக்கும் பராமரிப்பிற்கும் தீங்கு விளைவிப்பதாகவோ அமையும் கேள்விகளுக்கு எந்தவித தகவல்களையும் தருவதிலிருந்து விலக்கு” அளிக்கிறது.
தன்னிடம் தயாராக இருக்க வேண்டிய ஒரு சிறு தகவலை தர மறுப்பதற்கு, பிரதமர் அலுவலகம், ஆர்டிஐ யின் இந்தப் பிரிவைச் சுட்டிக்காட்டுவது விந்தையாக உள்ளது. மத்திய அல்லது மாநில அரசுகளால் வழங்கப்பட வேண்டிய தகவல் தொடர்பான விண்ணப்பங்களில் 70% தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவின் கீழ் உள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சோம்நாத் கோவில் அறக்கட்டளை சமீபத்தில் மோடியை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அரியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹேமந்த் குமார் ஜனவரி 19-ம் தேதி, தனது பதவி அல்லது அலுவலகத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமை வகிக்கும் அனைத்து அறக்கட்டளைகளின் (பொது அல்லது தனியார்) பெயர்களை தருமாறு ஒரு இணையவழி விண்ணப்பத்தை ஆர்டிஐயில் பதிவு செய்திருந்தார்.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலின் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மோடியை அடுத்தத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியான அடுத்த நாளே தான் ஆர்டிஐ யில் விண்ணப்பம் பதிவு செய்தாகக் கூறுகிறார் ஹேமந்த் குமார்.
“இதை ஏற்றுக் கொண்ட பிரதமர், அறக்கட்டளையுடன் சேர்ந்து உள்கட்டமைப்பையும், தங்குமிட வசதிகளையும், ஏற்பாடுகளையும், பொழுது போக்கு வசதிகளையும் மேலும் மேம்படுத்தவும், நாட்டின் மகத்தான பாரம்பரியத்துடன் யாத்ரீகர்களின் தொடர்பை வலுவாக நிறுவ அறக்கட்டளை உதவும் என நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்,” என்று கூறும் அவர், “முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட இந்த அறக்கட்டளைக்கு தலைமை வகித்துள்ளார்,” என்று தெரிவிக்கிறார்.
பிரதமர் தனது அதிகார பூர்வ தகுதியில் எத்தனை அறக்கட்டளைகளுக்குத் தலைமை வகிக்கிறார் என அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இது தூண்டியதாக ஹேமந்த் குமார் கூறுகிறார்.
எனினும், பிப்ரவரி 15-ம் தேதியிட்ட பிரதமர் அலுவலகத்தின், மத்திய பொது தகவல் அதிகாரி (CPIO) அனுப்பிய இந்த பதிலைக் கண்டு வியப்பும், ஆச்சரியமும் அடைந்ததாகக் கூறுகிறார், ஹேமந்த் குமார்.
“இந்த மனு தொடர்பாக கிடைக்கக் கூடிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவை இந்த அலுவலகத்தில் தொகுக்கப்பட்ட வடிவத்தில் பராமரிக்கப்படவில்லை.” என்றும், “அவற்றை பல்வேறு துறைகள்/ கோப்புகளிலிருந்து சேகரிப்பதும், தொகுப்பதும், அலுவலகத்தின் வளங்களை அதன் இயல்பான செயல்பாடுகளை திறம்பட நிறைவேற்றுவதை பாதிக்கும் வகையில் திருப்பி விடும்” என்றும், “அது 2005 ம் ஆண்டு ஆர்டிஐ சட்டப்பிரிவு 7(9) ன் கீழுள்ள விதிகளுக்கு விரோதமானது” என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது.
‘பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறக்கட்டளைகளுக்கே தலைமை வகிப்பார். அந்த விவரங்கள் எளிதில் கிடைக்கும்.’
இந்திய பிரதமராக மோடி தலைமை தாங்கும் அறக்கட்டளைகளின் பெயர்களை தொகுப்பது எவ்வாறு பிரதமர் அலுவலக வளங்களை பாதகமாக திருப்பி விடுவதாக அமையும் என வியப்புத் தெரிவிக்கிறார் ஹேமந்த் குமார். பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களை தொகுக்க வேண்டிய பணி இமாலய பணியாக இருக்கும் அளவிலான எண்ணிக்கையில் அறக்கட்டளைகளுக்கு பிரதமர் தலைமை தாங்குவது சாத்தியமில்லை என்று அவர் கூறுகிறார்.
இதற்கும் மேலாக, இந்த பதில் முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவில்லை. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாகும். அப்போதுதான் தனக்கு அளிக்கப்பட்ட பதில் திருப்தி அளிக்காத போது அவர் மேல் முறையீடு செய்ய முடியும்.
பிரதமர் பிஎம் கேர்ஸ் நிதிக்கு பொறுப்பான அறக்கட்டளைக்கும் தலைமை வகிக்கிறார்.
சோம்நாத் கோயில் அறக்கட்டளையை தவிர பிரதமர் தலைமை தாங்கும் வேறு சில அறக்கட்டளைகளும் இருக்கின்றன. அது பற்றிய விவரங்கள் பொது தளத்தில் உள்ளன. அதில் ஒரு அறக்கட்டளை பிஎம் கேர்ஸ் நிதியை மேலாண்மை செய்கிறது.
கொரோனா நெருக்கடிக்கு நடுவில் இந்த பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணம் (PM-CARES) என்ற பொது அறக்கட்டளை துவக்கப்பட்டது. இந்த நிதி அமைக்கப்பட்டதன் நோக்கம், “கொரோனா போன்ற எந்த ஒரு அவசர காலத்தில் அல்லது பேரிடர் காலத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நிதி ஒன்றின் தேவையை மனதில் கொண்டே இது உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றது.
பிரதமர் பதவியில் இருப்பவர் இதன் தலைவராகவும் பதவியிலிருக்கும் பாதுகாப்பு அமைச்சரும் நிதி அமைச்சரும் இதன் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள்.
பிஎம்ஐ கேர்ஸ்-ஐ கண்டனம் செய்த எதிர்க்கட்சிகள்
பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையை அமைத்த விதம் எதிர்கட்சிகளின் ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி என்ற ஒன்று இருக்கும் போது புதிய ஒரு அறக்கட்டளையின் தேவை குறித்து அவை கேள்வி எழுப்பின.
அந்த நிதியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி இதன் அறங்காவலர் குழுத்தலைவருக்கு (பிரதமர்) மூன்று அறங்காவலர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இந்த நிதியம் முழுவதும் தனிநபர்கள்/ அமைப்புகளின் நன்கொடைகளையே கொண்டிருக்கும். அரசிடமிருந்து எந்த நிதி ஆதரவும் பெறாது.
- இந்த நிதியம் 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ் 100% வரிவிலக்கு பெறுவதற்கான தகுதி உடையது.
- இதற்கு தரப்படும் நன்கொடைகள் 2013 நிறுவன சட்டங்களின்படி கார்பரேட் சமூக பொறுப்பு (CSR) செலவினமாக கருதத் தகுதி உடையவை.
- இதற்கு வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளைப் பெற தனி வங்கிக் கணக்கும் துவக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை, அமிர்தசரஸ் போன்ற சில கலாச்சார அறக்கட்டளைகளுக்கும் தலைமை வகிக்கிறார்.
இந்த அறக்கட்டளை அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் நினைவிடமான ஒரு பொது பூங்காவை பராமரித்து வருகிறது. இது 1919 ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாபி புத்தாண்டை கொண்டாட கூடியிருந்த நிராயுதபாணியான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்களை ஆங்கிலப் படை படுகொலை செய்ததை நினைவு கூறும் வகையில் 1951-ம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் இருக்கும் அதே வேளையில், கலாச்சாரத்துறை அமைச்சரும், மக்களவை எதிர்கட்சித் தலைவரும், பஞ்சாப் ஆளுநரும் பஞ்சாப் மாநில முதல்வரும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
www.thewire.in இணைய தளத்தில் கவுரவ் விவேக் பட்நாகர் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.