Aran Sei

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

Image Credit : ndtv.com

ந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அந்நாட்டு இராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி (நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி, என்.எல்.டி) பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இந்த நிலையில் ’தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது, தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது, மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படும்’ என்று இராணுவம் அறிவித்துள்ளது. இந்த நெருக்கடி நிலை ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும். மியான்மரில் நிலவும் அசாத்தியமான நிலைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வருத்தம் தெரிவித்துள்ளன.

முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

 

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கவிழ்ப்பது இது முதல் முறையல்ல. 1948 ஆம் ஆண்டு, மியான்மர் சுதந்திரம் பெற்றதிலிருந்தே அந்நாடு, நீண்ட காலம் இராணுவ ஆட்சியின் கீழ் தான் இருந்து வந்தது. அந்த நாட்டின் முதல் அரசியல் படுகொலையே பர்மாவின் தந்தையென அழைக்கப்படும் ஆங் சாங் தான். அவரின் மகள் தான் ஆங் சாங் சூகி.

லண்டனில் வசித்து வந்த ஆங் சாங் சூகி, 1988-ம் ஆண்டு இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மருக்கு திரும்பினார். இராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மியான்மரில் ஜனநாயகம் மலர வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வந்தார். ஜனநாயகத்திற்காகப் போராடி வந்த ஆங் சாங் சூகிக்கு உலக நாடுகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தன.

இந்தியாவின் புதிய ஆளும் மேட்டுக்குடி – இன்னும் எதிர்ப்பை எதிர்கொள்ளும்

1990-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி பெரும்பான்மை இடங்களை வென்றது. இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்த மியான்மர் இராணுவம் ஆங் சாங் சூகியை வீட்டுக் காவலில் அடைத்தது. தற்போதும் அதே காட்சிகள் தான் மியான்மரில் அரங்கேறி வருகின்றன.

நீண்ட காலம் வீட்டுக் காவலிலிருந்து வந்த ஆங் சாங் சூகி 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஜனநாயகத்திற்காகப் போராடிய ஆங் சாங் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேற்குலக நாடுகளின் பல்வேறு கௌரவ பட்டங்களும் அவரை அலங்கரித்தன. சர்வாதிகார பூமியில் ஜனநாயகத்தை மலரச் செய்த நம்பிக்கை கீற்றாக மேற்குலகம் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. வீட்டுக் காவலிலிருந்து விடுதலையான பிறகு, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுக்கான ஏற்புரையை 2012-ம் ஆண்டு நார்வேயில் வழங்கினார்.

’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி

2015-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்று, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினார். மியான்மரின் அரசியலமைப்புச் சட்டம் ஆங் சாங் சூகியை தலைமை பொறுப்பில் அமர அனுமதிக்காது. இதனால் கைப்பாவையாக ஒருவரை அதிபராக நியமித்து அதிகாரத்தைத் தன்வசம் வைத்துக்கொண்டு, அரசுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வந்தார். ஆனால் ஆங் சாங் சூகியே இராணுவத்தின் கைப்பாவை தான் என்பதை அப்போது பலரும் உணர்ந்திருக்கவில்லை. இந்த ஆட்சி மாற்றமும் அலங்காரமானது தான்.

இராணுவத்திடமிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் ஆட்சி மாறியிருந்தாலும் அதிகாரம் அப்போதும் இராணுவத்திடம் தான் இருந்தது. பாதுகாப்பு, உள்ளிட்ட முக்கிய துறைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழே செயல்பட்டு வந்தன. மியான்மர் நாடாளுமன்றத்திலும் இராணுவத்திற்கு நிலையான பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. மியான்மர் இராணுவத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடிய ஆங் சாங் சூகி, அதே பௌத்த பேரினவாதத்தின் அடையாளாமாக மாறிப்போனார். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது மியான்மர் இராணுவம் நடத்திய இனப்படுகொலைக்கு மௌன சாட்சியாக மாறிப்போனார்.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்

மியான்மரில் வாழும் சிறுபான்மை இனக்குழு மக்கள் தான் ரோஹிங்கியர்கள். ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் மியான்மரைச் சேர்ந்தவர்கள் இல்லையென அந்நாட்டின் பௌத்த பேரினவாதிகளும், இராணுவமும் தொடர்ந்து கூறி வருகிறது. 1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம், அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது, அவர்களின் மொழிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. சொந்த நாட்டிற்குள்ளே இரண்டாம் தரக் குடிமக்களாக இராணுவத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வந்தனர். உயிர் தப்பிய சில ஆயிரம் மக்கள் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மியான்மர் இராணுவம் ரோஹிங்யாக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரப்படுத்தியது. ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். அங்குத் தற்போது 10 லட்சம் ரோஹிங்யாக்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் மியான்மர் திரும்புவது தற்போது வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ரோஹிங்யாக்கள் மீதான இனப்படுகொலையை அமைதியாக வேடிக்கை பார்த்தார் ஆங் சாங் சூகி, அவர்களின் அடையாளமான ரோஹிங்யா என்கிற வார்த்தையை உச்சரிப்பதைக் கூடத் தவிர்த்தார்.

’ஒருபக்கம் சுயசார்பு இந்தியா; மறுபக்கம் அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம்’ – பட்ஜெட் குறித்து முத்தரசன்

இராணுவம் அவருக்குக் கடிவாளம் விரித்திருக்கிறது, அதனை மீறி ஆங் சாங் சூகி செயல்பட முடியாது என அவரின் மௌனத்திற்கு காரணம் சொல்லப்பட்டது. இதனால், ஆங் சாங் சூகிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டது. இதற்கிடையே தான், ஆப்பிரிக்க நாடான காம்பியா, மியான்மர் ரோஹிங்யாக்கள் மீது இனப்படுகொலை நடத்துவதாகச் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இனப்படுகொலை தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கும் அரிதான வழக்குகளில் இதுவும் ஒன்று.

‘விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட்டில் வெட்டிச் சுருக்கப்படும் அவர்களுக்கான நிதி’ – கே.பாலகிருஷ்ணன்

மௌனம் கலைத்த ஆங் சாங் சூகி பேசத் தொடங்கினார். ஆனால் இம்முறை தன்னை இருபது ஆண்டுகள் சிறை வைத்த இராணுவத்திற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினார். மியான்மரில் ரோஹிங்யாக்கள் இனப்படுகொலையே நடைபெறவில்லையெனப் பேசத் தொடங்கினார். சர்வதேச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மியான்மர் இராணுவத்தின் குரலாகப் பேசத் தொடங்கினார். மியான்மரில் இனப்படுகொலையே நடைபெறவில்லையென மியான்மர் இராணுவமும் ஆங் சாங் சூகியும் வாதிட்டனர்.

ஆனால் இதனை மறுத்த சர்வதேச நீதிமன்றம், மியான்மரில் ரோஹிங்யாக்கள் மீது இனப்படுகொலை நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக்கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ரோஹிங்யாக்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என இடைக்கால தீர்ப்பளித்த நீதிமன்றம், இனப்படுகொலை குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மியான்மர் இராணுவ தளபதிகள் சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக் கூண்டில் முக்கிய குற்றவாளிகளாக நிற்கின்றனர். இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

அன்பிற்கான யுத்தம், போர்க்குணத்துடன் அழகாக வெல்லப்பட வேண்டும் – அருந்ததி ராய்

இதற்கிடையே தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பும் இராணுவப் புரட்சியும் நிகழ்ந்திருக்கிறது. எந்த இராணுவத்தைப் பாதுகாக்க சர்வதேச நீதிமன்றம்வரை ஆங் சாங் சூகி சென்றாரோ, அதே இராணுவம் தான் தற்போது அவரை மீண்டும் சிறை வைத்திருக்கிறது. மியான்மரில் மீண்டும் இயல்பு நிலை திரும்புமா என்பதற்கு தெளிவான பதில் இல்லை. அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மியான்மரில் நடக்கும் நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தாலும் சர்வதேச அளவில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகுவதற்கான சாத்தியங்கள் குறைவே. ஐ.நாவிலும் மியான்மருக்கு ஆதரவாகச் சீனாவும், ரஷ்யாவும் இருக்கும் என்கிற நம்பிக்கை இராணுவத்திற்கு உள்ளது. போராடிப் பெற்ற பெயரவிலான ஜனநாயகமும் மியான்மரில் மீண்டும் மலர்வது கேள்விக்குறியே.

(கட்டுரையாளர் : கவிதா, உதவிப் பேராசிரியர், இதழியல் துறை )

 

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்