Aran Sei

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?

முன்பு, பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 62 வயதான அரசியல்வாதியும், மகாராட்டிரா அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றிய  மாலிக், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து

தேசிய தொலைக்காட்சியின் ஒரு அன்றாட அங்கமாகிவிட்டார். ஜனவரியில் மாலிக்கின் மருமகனையும், அதைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானையும் அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு முகமை கைது செய்தது. இரண்டு வழக்குகளும் பொய்யானவை என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசு தன் பாதையை பின்பற்ற மறுப்பவர்களை  இழிவுபடுத்துவதற்காகவே இவ்வாறு  வழக்குகள் போடப்படுகின்றன  என்று மாலிக் குற்றம் சாட்டினார்.

ஏழு மாதங்களுக்குப் பிறகு, மே மாதம், ஆர்யன் கான் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கைவிட்டது. மாலிக் தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தாலும், அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில் நான்கு மாதங்களுக்கும் மேலாக, அவர் சிறையில் உள்ளார்.

LGBTQ சமூகத்தை மரியாதையாக அழைப்பதற்கான சொல்லகராதி – வெளியிட்ட தமிழ்நாடு அரசு

பிப்ரவரி 23 அன்று, நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமலாக்க இயக்குநரகம்,  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவரை கைது செய்தது. பணமோசடி என்பது குற்றச் செயல்களில் இருந்து பெறப்படும் கருப்புப் பணத்தை  சட்டரீதியான பணமாக மாற்றும் செயலாகும். ஒரு சர்வதேச கண்காணிப்புக் குழு  “குற்றவியல் வருமானத்தை அது சட்டவிரோதமாகத் தோன்றிய வழியை மறைப்பதற்கான” செயல்பாடு இது,” என்று விவரிக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சொத்து பணப் பரிமாற்றங்களுக்காக மாலிக் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால்  இந்த  பணப்பரிமாற்றங்களில் ஒன்று பணமோசடி சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது.  (மாலிக்கின் வழக்கறிஞர்கள் இந்தச் சட்டம் அவர் மீது முன்தேதியிட்டு பயன்படுத்தப்படுவதாக வாதிடுவதற்கு இது மட்டும் காரணம் அல்ல. இதைப் பற்றி மேலும் பின்னர் காண்போம்.)

இந்தியாவின் பணமோசடி சட்டத்தை முன்தேதியிட்டு பயன்படுத்துவதற்கான வசதி ஆகஸ்ட் 2019 இல் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசாங்கம் பண மசோதாக்கள் வடிவில் அறிமுகப்படுத்திய பல சட்டத் திருத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.  இதன் மூலம்  மாநிலங்களவையின் ஆய்வைத் தவிர்த்து விட்டது.  ஏனெனில் அங்கு      ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சி  உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இஸ்ரேல் ஏன் பாலஸ்தீனியர்களை மிகவும் வெறுக்கிறது? – ஊடகவியலாளர் மர்வான் பிஷாரா

கடுமையான நிதிக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகத்தின் திறனை வலுப்படுத்த இந்தத் திருத்தங்கள் அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், பயங்கரவாதச் சட்டங்களை விடக் கடுமையான விதிகளைக் கொண்ட ஒரு சட்டத்தை அவர்கள் உருவாக்கிவிட்டதாக அதன் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அசாதாரண அதிகாரங்களுடன் ஆயுதம் ஏந்திய, அமலாக்கத்துறை அரசின் அரசியல் எதிரிகளின் பின்னால் செல்ல அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.   மோடி அரசாங்கத்தின் கைக்கோடரியாக இந்தச் சட்டம் மாறிவிட்டதாக  அவர்கள் கருதுகின்றனர்.

இந்த சர்ச்சைகள் உச்ச நீதிமன்றத்தில் மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தன.  மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சட்டத்தின் பல்வேறு விதிகளை எதிர்த்த 100 க்கும் மேற்பட்ட மனுக்களை, 23 நாட்களுக்கு மேல்  விசாரித்தது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இந்திய ஜனநாயகத்தில் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சோதனைகள், கைப்பற்றுதல், வழக்குகள் அதிகரிப்பு

பணமோசடி சட்டத்தைப் பயன்படுத்தி மோடி அரசு தன்னை வலுவேற்றிக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாதது. மார்ச் மாதம் மக்களவையில் நிதியமைச்சகம் முன்வைத்தத் தரவுகள்,  2004 க்கும் 2014க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில், பணமோசடி வழக்குகளை விசாரிப்பதில் அமலாக்க இயக்குனரகம் 112 சோதனைகளை நடத்தியதாகக் காட்டுகிறது. அடுத்த எட்டு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 26 மடங்கு அதிகரித்து 2,974  சோதனைகளாக இருந்தது. இதைப்போலவே,  காவல்துறை குற்றப்பத்திரிகையைத் தயாரிப்பது போன்று, அமலாக்க இயக்குனரகம் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தொகுத்து தரும் அமலாக்கத் துறை வழக்கு தகவல் அறிக்கையை (ECIR )  நீதிமன்றத்தில் வைத்து சுமத்தப்படும் வழக்குகளின் எண்ணிக்கை,  2014க்கு முந்தைய ஆண்டுகளில் 104 ஆக இருந்தது.   பின்னர் அது 839 ஆக ஏறக்குறைய எட்டு மடங்கு உயர்ந்துள்ளது.  2004 க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் 5,346 கோடியாக இருந்த அமலாக்க இயக்குனரகத்தால் இணைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 2014 க்கும் 2022 க்கும் இடையில் 95,432 கோடியாக உயர்ந்துள்ளது.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

உயர்நீதிமன்றத்தில் மோடி அரசு அளித்த தரவுகள் இதே போக்குகளை வெளிப்படுத்துகின்றன. பணமோசடி தடுப்புச் சட்டம் 2005-ல் அமலுக்கு வந்ததில் இருந்து அதன் கீழ் பதியப்பட்ட 4,700 வழக்குகளில் கிட்டத்தட்ட பாதி அல்லது 2,186 வழக்குகள் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.2019 திருத்தங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை துரிதப்படுத்தியதாகத் தெரிகிறது. ஏப்ரல் 2020 மற்றும் மார்ச் 2021 க்கு இடையில், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இந்தியா பல மாதங்கள்  முடக்கப்பட்டிருந்த நிலையில்,  இந்த சட்டத்தின் கீழ் 981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து இது மிக உயர்ந்ததாகும்.  பணமோசடி வழக்குகளில் தண்டனை விகிதம் மோசமாக உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளில், வெறும் 23 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் .

இலக்குகள் யார்?

பணமோசடி சட்டம் பல நிறுவனங்கள், உரிமைக் குழுக்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது செயல்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள்  அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பணமோசடி வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். முக்கியமாக, இந்த அரசியல்வாதிகள் பாஜகவை அதிக அளவில் எதிர்க்கும் போது விசாரணைகள் அடிக்கடி நடந்துள்ளன.2014 முதல் அமலாக்க இயக்குநரகத்தால்  அழைப்பாணைகள், சோதனைகள், வழக்குகள் அல்லது கைதுகளுக்கு ஆளான  எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பகுதி பட்டியல்  கீழே தரப்பட்டுள்ளது.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

அண்மையில், இது மகாராட்டிரத்தில் நிரூபிக்கப்பட்டது. ஜூன் மாதம், சிவசேனாவிற்குள் ஒரு வியப்பிற்குரிய   கிளர்ச்சி வெடித்தது.   சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு குழுவினர் முதல்வர் உத்தவ் தாக்கரேவை விட்டு வெளியேறி பாஜகவுக்கு ஆதரவை அறிவித்தனர். நெருக்கடியின் உச்சக்கட்டத்தில்,  தாக்கரேவின் முக்கிய ஆதரவாளரான,  மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்தை அமலாக்க இயக்குநரகம் அழைத்தது.

பிப்ரவரியில், மகாராட்டிர அரசாங்கத்தை கவிழ்க்க உதவாவிட்டால், அமலாக்கத்துறை   நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாக மாநிலங்களவை  சபாநாயகருக்கு ராவத் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். “என்னைத் தவிர மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சரவையில் உள்ள இரண்டு மூத்த அமைச்சர்களுக்கும், மகாராட்டிரத்தில் உள்ள இரண்டு மூத்த தலைவர்களும் பணமோசடி  சட்டத்தின் கீழ் கம்பிகளுக்குப் பின்னால் அனுப்பப்படுவார்கள் என்று எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.அதற்குள், மாநில அரசாங்கத்தின் அரசியல் கட்சிகளில், குறைந்தது 15 தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள்  பணமோசடி சட்டத்தின்  கீழ் விசாரிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபரில், பாஜகவில் இணைந்த ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்,  தனக்கு எதிராக “எந்த விசாரணையும்” இருக்காது என்பதால், தான் இப்போது அயர்ந்து தூங்குவதாக” அறிவித்தார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “அமலாக்கத்துறை என் பின்னால் வராது,  ஏனெனில் இப்போது நான் பாஜகவில் இருக்கிறேன்,”  என்று கிண்டல் செய்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி – ஒன்றிய அரசின் திட்டம் தேச பக்தியா? வியாபாரமா?

ராவத் மாநிலங்களவைத்  தலைவருக்கு எழுதிய கடிதத்தில்,  ஏற்கனவே தன்னுடன் தொடர்புடையவர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.  அது 28 பேரை தவறான முறையில் சிறைக்குள் தள்ளியுள்ளது. ” அன்றாடம், அமலாக்கத்துறை மற்றும் பிற முகமைகள் இவர்களை அழைத்து,  எனக்கு எதிராக தங்கள் அறிக்கைகளை வழங்காவிட்டால்,  சிறை மற்றும் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வது  போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டனர்,”  என அவர் கூறுகிறார்.  அவர் கடிதத்தை வெளியிட்ட உடனேயே, அவருடன் தொடர்புடைய  கட்டிடம் கட்டுபவருக்குச் சொந்தமான நிலத்தை  மட்டுமின்றி, அவரது மனைவிக்கு சொந்தமான வீட்டு மனை ஒன்றையும்  அமலாக்கத்துறை  கையகப்படுத்தி உள்ளது.பிப்ரவரி கடிதத்தில் “ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் மோசமான நோக்கத்துடன் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது,” என்று ராவுத் கூறினார். ஜூன் மாதத்திற்குள் மகாராட்டிர அரசு கவிழ்ந்தது.அடுத்த அரசாங்கம் அமலாக்கத்துறை அரசாங்கமாக இருக்கும் என்று நகைச்சுவைகள் பரப்பப்பட்ட நிலையில், பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கட்சி மாறிய சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்து, “ஆம், இது ஏக்நாத்-தேவேந்திராவின் அமலாக்கத்துறை  அரசாங்கம்தான்” என்று பதிலடி கொடுத்தார்.எதிர்க்கட்சிகள்  ஆட்சி நடத்தும் மாநிலங்களின் அரசியல் நெருக்கடியில் அமலாக்கத்துறை தரை இறங்கும் முதல் மாநிலம் மகாராட்டிரம் அல்ல.

ஜூலை 2020 இல், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின்   துணை முதல்வர் சச்சின் பைலட், காங்கிரஸில் உள்ள தனது சக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  பாஜகவில் சேர லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து,  சச்சின் பைலட்டுடன் 18  சட்டமன்ற உறுப்பினர்கள்  முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

இந்த நாடகத்திற்கு மத்தியில், ஜூலை 22 அன்று, ஜோத்பூரில் உள்ள முதலமைச்சரின் சகோதரரான அக்ராசைன் கெலாட்டின் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தியது. அண்டை  மாநிலமான குஜராத்தில் உள்ள சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜூலை 19 அன்று தாக்கல் செய்த குற்றவியல்   புகாரின் அடிப்படையில், பத்தாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட உரங்களை ஏற்றுமதி செய்ததில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் மற்றும் சுங்கவரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. தற்செயலாக, சபாநாயகரால் 20 அதிருப்தி  சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அதே நாளில் புகார் அளிக்கப்பட்டது.   “அமலாக்கத்துறையை   ஏவிவிட விரும்பியதால் தான் இந்த வழக்கைத் தோண்டி எடுத்துள்ளனர்,” என்று அக்ரசைன் கெலாட்டின் வழக்கறிஞர் மகேஷ் கெலாட் கூறினார்.

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

பிப்ரவரியில், பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மேம்பாலத்தில் சிக்கிக் கொண்ட நிகழ்வு நடந்தது.  இதனால், அப்போது முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி மீது  மோடி கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு,  அமலாக்கத்துறை சில ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றை கையில் எடுத்தது.  அது 2018 இல் பஞ்சாப் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் அகழ்வு வழக்கு ஆகும்.  இதில் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹனியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஆனால் அசல் முதல் தகவல் அறிக்கையில்  ஹனியின் பெயரே இல்லை.

எதிர்க்கட்சிகள் சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் அமலாக்கத்துறை  விசாரணைகளின் நேரம் இரகசியமாக  இருக்கும் அதே வேளையில்,  பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதுபோன்ற ஒன்று இல்லாததைக் கவனிக்காமல் இருப்பது கடினம்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் பல கோடி ரூபாய் சாரதா போன்சி ஊழல் வழக்கு இதற்கு மிகவும் வெளிப்படையான எடுத்துக்காட்டு. சாரதா குழுமத்தின் நிறுவனரும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியுமான சுதீப்தா சென், மத்திய புலனாய்வு பிரிவுக்கு எழுதிய கடிதத்தில், சர்மாவுக்கு லஞ்சம் கொடுத்ததாகக்  கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்  மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த அமலாக்கத்துறை,  பாஜகவில் சேர்ந்து  விட்டதால், சர்மாவுக்கு அழைப்பாணைக் கூட  அனுப்பவில்லை. அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி ரினிகி பிஸ்வா சர்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் பாஜகவில் சேர்ந்த பிறகு மேற்கொண்டு விசாரணை  எதுவும் நடக்கவே இல்லை.

“இந்தியா பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் என  மாநில வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது,” என்று கபில் சிபல் கூறுகிறார்.  வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சரும், இப்போது  மாநிலங்களவையில் சுயேச்சை உறுப்பினராகவும்  உள்ள கபில் சிபல், “ஒட்டு மொத்தமாக பார்த்தால், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும், பாஜகவைச் சேர்ந்த எந்தத் தலைவரும், எந்தத் தனி நபரும் பணமோசடி குற்றத்தைச் செய்ததில்லை.  ஆனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில்  அனைத்து முக்கியத் தலைவர்களும் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை,” என்கிறார்.

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

Scroll.in இந்த குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்விகளை அமலாக்கத்துறை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியது. நினைவூட்டல்கள் இருந்தும், வெளியீட்டு நேரம் வரை பதில் வரவில்லை.அமலாக்கத்துறை ஒருபக்கச்சார்பான நடவடிக்கை எடுப்பதாகக் கூறும்  எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை எளிதில் தீர்க்க  அரசு ஒரு இரகசிய ஆவணத்தை பகிரங்கப்படுத்தினால் போதும்.ஆகஸ்ட் 2021 இல், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான தாமதமான விசாரணைகள் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவிய வழக்கறிஞர் அல்லது நீதிமன்ற நடுநிலை ஆலோசகரிடம்  பணமோசடி குற்றச்சாட்டுகளுக்காக தற்போது விசாரிக்கப்பட்டு வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட 122 பிரதிநிதிகளின் பட்டியலை அமலாக்கத்துறை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. Scroll.in தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விவரங்களைக் கோரியது.  ஆனால் அமலாக்கத்துறை  அவற்றைப் பகிர மறுத்துவிட்டது. நீதிமன்ற நடுநிலை ஆலோசகரும் அதனைத் தர மறுத்துவிட்டார்.இருப்பினும், பட்டியலை   பெற்றதாகக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, அதில் இருந்து எடுக்கப்பட்ட 52 பெயர்களைக் கொண்ட ஒரு  பட்டியலை வெளியிட்டது. அதில் கிட்டத்தட்ட அனைவரும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, வங்காள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மிதுன் சக்ரவர்த்தி ஆகிய மூவர் மட்டுமே பாஜக தலைவர்கள்.

திரிணாமுல் காங்கிரஸில் இருந்தபோது, ​​அதிகாரி மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை விசாரணைக்கு நிறுவனம் அழைத்திருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில்,  அதிகாரி  பாஜகவில் இணைந்த பிறகு, அவர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்த நாரதா வழக்கில், அந்த நிறுவனம், அரசு தரப்பு புகாரை பதிவு செய்தது.  இது, அரசுத் தரப்பு புகாரில் இடம்பெற்றுள்ள மற்ற திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதே ஆதாரங்களுடன் (ஒரு ஸ்டிங் வீடியோ) அதே குற்றச்சாட்டுகளை (லஞ்சம் வாங்குவது) அதிகாரியும் எதிர்கொண்ட போதிலும்,  அரசு தரப்பு புகாரில் அவர் பெயரை குறிப்பிடப்படவே இல்லை.

பல பணமோசடி தடுப்புச் சட்ட வழக்குகளை தீர்ப்பளித்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பணமோசடி சட்டம் “உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க ஒரு புரட்சிகரமான செயல்” என்றார். “ஆனால் அது இப்போது அரசியல் கணக்கைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக மாறிவிட்டது,” என்று அவர் கூறினார். “நீங்கள் மிகவும் கண்டிப்பானவராக இருந்தால், அனைவருக்கும் ஒரே மாதிரியான தரங்களைப் பயன்படுத்துங்கள். அது நடக்கிறதா?” என்று கேட்கிறார்  அவர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

சட்டத்தின் எதிர்காலம் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான மாநாடு நடந்து பத்தாண்டிற்குப் பிறகு, 1999 ஆம் ஆண்டில் பணமோசடியைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்தியா முதலில் உருவாக்கியது. 2002 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் முன்னுரை, உண்மையில், ஐ.நா. மாநாட்டையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களிலிருந்து உருவாக்கப்படும் நிதியை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்ட பிற சர்வதேச முயற்சிகளையும் குறிக்கிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் சில விதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான அமித் தேசாய் கூறுகையில், “அசல் சட்டமியற்றும் நோக்கம் போதைப்பொருளுடன் தொடங்கியது. “நாடுகளில் போதைப்பொருள் வர்த்தகத்தை தடை செய்வது மட்டுமல்லாமல், இதுபோன்ற குற்றச் செயல்களின் உயிர்நாடியையும் தடை செய்யவேண்டும் என்பது சர்வதேச சிந்தனையாக இருந்தது.” என்றார்.

எனவே, பணமோசடி சட்டங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் “நிதிச் சந்தையில் அதிகப்படியான வட்டிக்காக விரைவாக மாற்றப்படும்  பணத்தைத்( Hot Money) அதாவது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற  கூட்டமைப்புகளால் உருவாக்கப்பட்ட சட்டவிரோத நிதியை  தடைசெய்ய” அறிமுகப்படுத்தப்பட்டன. “இதுபோன்ற ஊகப்  பணத்தை ஒரு நாட்டிலிருந்து திடீரென வெளியேற்ற முடியும். எந்த நாடும் அத்தகைய பணத்தை விரும்பாது,” என்று தேசாய் கூறினார்.பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது 2002ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் அதன் அசல் வடிவில், ஆறு  பிரிவுகளின் கீழ் சுமார் 40 குற்றங்களில் இருந்து உருவாக்கப்பட்ட “குற்ற வழியிலான வருமானத்தை” குறுகிய அளவில் குறிவைத்தது. அதில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதங்கள், விபச்சாரம், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், ஊழல் மற்றும் அரசுக்கு எதிராக  போர் நடத்துதல் தொடர்பான இந்த ” அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்கள்” (அவை சட்டத்துடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ளதால்) அல்லது “முன்கூட்டிய குற்றங்கள்” (பெரிய குற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குற்றங்கள்) போன்றவையும் அடங்கும்.

“ஆனால் 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது மேற்கொண்ட திருத்தங்கள் சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தின. இப்போது 30 பிரிவுகளின் கீழ் கிட்டத்தட்ட 140 திட்டமிடப்பட்ட குற்றங்கள் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் – பதிப்புரிமை மீறல்கள் அல்லது திருட்டு மென்பொருளைப் பயன்படுத்துவது போன்ற சிறிய குற்றங்களும் இதில் சேர்க்கப்பட்டன.  சாதாரணமாக  இந்த குற்றங்களுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும், ஆனால்  இப்போது  பணமோசடி குற்றச்சாட்டுகளுடன் இணைக்கப்பட்டால், ஒரு நபர் பல ஆண்டுகள், இல்லாவிட்டாலும் சில  மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்  என்று தேசாய் கூறினார்.” ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கூட்டமைப்புகள் கள்ள நோட்டுகள் மூலம் மூலம் பணம் சம்பாதிப்பதால் பதிப்புரிமைச் சட்டம்  இதில் சேர்க்கப்பட்டுள்ளது” என்று கூறும் தேசாய், இந்த சட்டத்தை வழக்கமான குற்றம் செய்பவர்களுக்கு  அன்றி தனிப்பட்ட வழக்குகளுக்கும் நீட்டிப்பது  சட்டத்தின் உண்மையான நோக்கத்திற்கு எதிரானதாகும் என்றும், பணமோசடித் தடுப்புச் சட்டம்  ஏற்கனவே உள்ள சட்டங்கள் மூலமே விசாரிக்கப்பட்டு தண்டனை தரக்கூடிய அளவில் உள்ள மேற்கூறிய குற்றங்களுக்கானது அல்ல,”  என்றும் கூறுகிறார்.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்தும் முடிவு பின்னர் காங்கிரஸை வேட்டையாட பயன்படுத்தப்பட்டது. 2019 இல், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது கண்காணிப்பின் கீழ் பணமோசடி சட்டத்தில் சேர்த்த ஒரு குற்றத்திற்காக 106 நாட்கள் சிறையில் இருந்தார்.

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

இந்த சட்டத்தின்  கீழ் சேர்க்கப்பட்ட குற்றங்களின் பட்டியலின் விரிவாக்கம், மிகவும் ஆபத்தான வகையில்  இச்சட்டத்தின்  தன்னிச்சையான நடவடிக்கையின் போக்கை அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில்  அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பணமோசடி சட்டத்தை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற வாதத்தை பின்னோக்கி இழுக்க முயற்சிப்பது போல்,   கடந்த ஐந்து ஆண்டுகளில் “2,086 வழக்குகள்” மட்டுமே இச்சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன  என்றும், 33 லட்சம்  முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே முன்னனுமான குற்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன  என்றும் வாதிட்டார்.

ஒரு ஏமாற்றியத் தொகை பண மோசடி குற்றமாக ஐயுறுவதற்கும் மற்றொரு தொகை அவ்வாறு கருதப்படாமல் விட்டு விடும் வகையிலும் அமலாக்கத்துறை எவ்வித நியாயமும் இன்றி வழக்குகளை தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான் இதிலுள்ள சுருக்கமான பிரச்சினை என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சட்டத்தை கொடூரமாக்கியது எது?

இந்தச் சட்டத்தில் காங்கிரஸ் அரசு செய்த திருத்தங்கள் அதன் வரம்பை விரிவாக்கியது. ஆனால் பாஜக அரசு செய்த திருத்தங்கள்  அதனை மேலும் கொடூரமாக்கிவிட்டன. உண்மையாக சட்டம் எப்போதும் கடுமையாகவே இருந்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புக்  கூறுகளுடன் இருக்கும் சாதாரண சட்டங்களைப் போலல்லாமல், பணமோசடிச் சட்டம், அதன் தொடக்கத்திலிருந்தே, அமலாக்கத் துறை  அதிகாரிகளுக்கு அசாதாரண அதிகாரங்களை வழங்குகிறது.  பொதுவாக காவல்துறையினர் யாரையாவது விசாரணைக்கு அழைக்கும் போது, ​​அவர்கள் சந்தேக நபராக கருதப்படுகிறார்களா அல்லது சாட்சியாக கருதப்படுகிறார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும். அமலாக்கத் துறை  அத்தகைய எந்த ஒரு வெளிப்பாட்டையும் செய்யத் தேவையில்லை.  “நான் ஒரு முன்கூட்டிய குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக வைத்துக்கொள்வோம், அவர்கள் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மாட்டார்கள் என்று என்னை அழைக்கலாம்.  எனது அறிக்கையைப் பதிவுசெய்து பின்னர் அதை எனக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.” என்று கபில் சிபில் விளக்கினார்.ஒரு காவல்துறை அதிகாரியிடம் ஒருவர் கொடுக்கும் ஒரு வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது.  அதாவது, நீதிமன்றத்தில் சுய குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக அதை பயன்படுத்த முடியாது. ஆனால் பணமோசடிச் சட்டத்தின் கீழ் அத்தகைய பாதுகாப்பு எதுவும் இல்லை.  உண்மையில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் அறிக்கையை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரே சட்டம் இதுதான். அமலாக்கத் துறையிடம் உண்மையை வெளிப்படுத்தாதது கூட தண்டனைக்கு வழிவகுக்கும்.அமலாக்கத் துறை  மீது நீதிபதிகளின் மேற்பார்வை இல்லை. பொதுவாக  ஒவ்வொரு  காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையையும்  நீதிபதிக்கு அனுப்ப வேண்டும்.  மேலும்  அதன் நகல் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அமலாக்கத் துறை வழக்கு தகவல் அறிக்கை (ECIR )  நகலை அமலாக்கத் துறை வழங்க வேண்டியதில்லை. கைது செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் அமலாக்கத் துறை  வழக்குப் புகார் அல்லது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி கூட தெரியாது. “முதல் 60 நாட்களில், ஒரு பார்வையற்றவனாக சீட்டுக்கட்டில் உள்ள சீட்டுக்களை கையில் வைத்துக் கொண்டு விளையாடுவது போல் இருப்பேன், ” என்று பல பணமோசடிச் சட்ட வழக்குகளைக் கையாளும் ஒரு வழக்கறிஞர் கூறினார். அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை  கைது செய்த போது இதுதான் நடந்தது.ஜெயின் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கின் அடிப்படையில் ஜெயின் மே மாதம் முகமையால் கைது செய்யப்பட்டார்.  இருப்பினும், அவருக்கு எதிராக பண மோசடி வழக்கு எதுவும் இல்லையென்றும், தொடர்ச்சியான நிலப்பரிமாற்றத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி உண்மையான குற்றம் நடந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு முந்தியவை என்றும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.

ஜெயினை அமலாக்கத் துறையின் காவலில் வைத்து விசாரித்த சிறப்பு மத்திய புலனாய்வு  செயலகத்தின் நீதிமன்றம்,  விசாரணையின் போது ஒரு வழக்கறிஞர் வர அனுமதித்தது. இருப்பினும், செயலகம்  விசாரணை நீதிமன்றத்தின் சலுகையை எதிர்த்ததுடன் ஜெயின் தொழில்நுட்ப ரீதியாக குற்றம் சாட்டப்படவில்லை என்பதால் ஒரு வழக்கறிஞரின் இருப்பு தேவையில்லை என்று வாதிட்டது.முதலில் நடவடிக்கை தொடங்கப்பட்டதன் அடிப்படையில் அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கையை முகமை பகிர்ந்து கொள்ளாது என்பதால், ஜெயினின் வழக்கறிஞர்கள் அதை எதிர்த்துப் போராடுவதற்கு மிகக் குறைவான விவரங்களையே பதிவு செய்ய இயலும்.  அமலாக்கத் துறையின் வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன்,  உண்மையில் ஜெயின் மீது எந்த வழக்குப் புகாரும் இல்லை என்றும் குறிப்பிட்டது. வழக்கை நன்கு அறிந்த ஒரு வழக்கறிஞர் கூறியது போல், ” இது அபத்தமானது மற்றும் மனச்சிதைவு நோய் (ஸ்கிசோஃப்ரினிக்).” ஏனெனில்,  முகமை, கைது செய்யப்பட்ட பிறகு 60 நாட்கள் பின்னரே ஒரு வழக்குத் தொடர புகாரைப் பதிவு செய்யலாம்.  அவ்வாறு பதிவு செய்த புகாரையே அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கையை சட்டப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது  என சட்டம் கூறுகிறது.  இது பிணை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. “ அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கை இல்லாமல்,  நான் எந்த அடிப்படையில் பிணை கோர முடியும்? எனக்கு எதிராக என்ன இருக்கிறது என்றே எனக்குத் தெரியாதே,” என்று கேட்கிறார் சிபல்.

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்

ஏற்கனவே,  பண மோசடி தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் பிணை விதிகள், உச்ச நீதிமன்றத்திலேயே நடக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவை தொடர்பான பிணை விடுதலை விதிகளை விட மிகவும் கடுமையானவை. உபாவின் (UAPA) கீழ், ஒரு நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ” முகமதிப்பில் உண்மை” என்று கருதினால், நீதிபதிகள் பிணை வழங்க முடியாது.  பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அந்த நபர் “குற்றத்தை செய்திருக்க மாட்டார்”  என்றும்,  பிணையில் இருக்கும் போது எந்த குற்றத்தையும் செய்ய மாட்டார் என்றும் நீதிபதிகள் திருப்தியடைந்தால் மட்டுமே பிணை பெற முடியும். பண மோசடி தடுப்புச் சட்டவழக்குகளில் பிணை வழங்கும்போது இது கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது.

இந்த அசாதாரண விதிகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் மூலம்  சட்டவிரோத பணம் உருவாவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற சட்டத்தின் அசல் நோக்கத்திலிருந்து உருவானவை என்று தேசாய் விளக்கினார். அந்த சூழலில், “பிணை, சொத்துக்களை இணைத்தல், ஆதாரங்களை ஊகித்தல், அறிக்கையை ஏற்றுக்கொள்வது போன்ற சில விதிகளை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்,” என்றார். ஆனால் சட்டத்தின் நோக்கம் சிறிய குற்றங்களுக்கு நீட்டிக்கப்பட்ட பிறகு, இந்த விதிகள் வெளிப்படையான சமச்சீரற்ற தன்மைக்கு இட்டுச் செல்கின்றன. பிணை பெறக்கூடிய முன்கணிப்புக் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பணமோசடி சட்டத்தின் கீழ் பிணை மறுக்கப்படலாம்.

பிணை வாய்ப்பை எதிர்க்கும் இச்சட்டத்தின் 45-வது பிரிவை எதிர்த்து   2017 ல் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்தது. ஆனால் நரேந்திர மோடி அரசு சட்டத்தை திருத்தி அந்தச்  சட்டத்தின் ஒரு பிரிவை சட்டத்தின் ஒரு பகுதியாக மீட்டெடுத்தது. “அரசாங்கம் எந்த விவாதமும் இன்றி இந்த பண மசோதாவைக் கொண்டு வந்து பிரிவைத் திருத்தியது,” என்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார். “இப்போது, ​​ அந்த நபர் நிரபராதியாக இருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையாக இருக்கும்போது, ​​ ஒரு நீதிபதியாக, விசாரணை கட்டத்தில் நான் எப்படி ஒருவருக்கு பிணை வழங்க முடியும்?  அப்படியானால் விசாரணையின் அவசியம் என்ன?” என்று அவர் வினவுகிறார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இழப்பது தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமல்ல. அமலாக்கத்துறை  அவர்களின் சொத்துக்களை இணைக்க முடியும்.  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே  ஒரு விசாரணை தொடங்கும். இதற்கு நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை.  பொதுவாக ஓய்வு பெற்ற அதிகாரியின் தலைமையில் இருக்கும் தீர்ப்பு வழங்கும் அதிகாரிக்கு  மூடிய உறையில் அறிக்கை அனுப்பினால் போதும். “தீர்ப்பு ஆணையம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  அனைத்தும் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்றன,” என்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார்.

அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட 1,518 தற்காலிக இணைப்பு உத்தரவுகளில் 2.1% மட்டுமே அதன் தொடக்கத்தில் இருந்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைக் கோரிக்கை வெளிப்படுத்தியுள்ளது.  “இதன் மூலம் நீங்கள் உண்மையில் ஒருவருக்கு பொருளாதார மரணத்தை கொடுக்க முடியும்.  நீங்கள் அவர்களை சிறையில் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அவர்களின் சொத்துக்கள் மற்றும் கணக்குகள் அனைத்தையும் இணைக்கிறீர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்?” என்று ஒரு வழக்கறிஞர் கேட்கிறார்.

எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? – மு. அப்துல்லா

2019 திருத்தங்களால் என்ன மாறிவிட்டது ?

2019 திருத்தங்கள் அமலாக்கத்துறையை மேலும் வலிமையாக்கியுள்ளன.முதலில், முன்னனுமான குற்றத்திற்காக நீதிமன்றத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னரே, அமலாக்க இயக்குனரகம் அதன் நிதி அம்சங்கள் குறித்து விசாரணையைத் தொடங்க முடியும் என்று சட்டம் கட்டாயப்படுத்தியது.

2009 இல் ஒரு திருத்தம், தூண்டுதல் குற்றத்தின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே,  அமலாக்க இயக்குனரகம்  மூலம் சோதனை இடுவதையும், பறிமுதல்களையும் அனுமதிக்கும் வகையில் இதை மாற்றியது. 2019 இல், இந்தத் தேவையும் நீக்கப்பட்டது.

இப்போது ” காவல்துறை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாவிட்டாலும் அமலாக்கத்துறை  அதிகாரிகள் சோதனைகள் மற்றும் பறிமுதல்களை நடத்தலாம்”. இதன் பொருள் என்னவென்றால், முன்னனுமான குற்றத்தை – பதிப்புரிமை மீறல் என்று வைத்துக்கொள்வோம் – காவல்துறை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பே, அமலாக்கத்துறை ஒரு தனிநபரின் சொத்துகளைத் தேடி கைப்பற்றலாம், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்,” என வழக்கறிஞரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான  அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

“பணமோசடி தடுப்புச் சட்டத்தின் மைய நோக்கம் அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றம் மற்றும் குற்றத்தின் வருமானம் என்பதுதான்,” என்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகிறார். “நீங்கள் முதலில் குற்றத்தின் வருவாயைக் கண்டறிய வேண்டும், அதன் பின்னரே நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.  ஆனால் அது இப்போது கைவிடப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

வியக்கத்தக்க வகையில், 2019 ஆம் ஆண்டு திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில்,  அட்டவணைப்படுத்தப்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் உண்மையில் முதல் தகவல் அறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறை  நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. தனது பாதுகாப்பில், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை என்று அமலாக்கத்துறை வலியுறுத்துகிறது.  ஏனெனில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இதே  வழக்கில் வருமான வரித் துறையின் குற்றப்பத்திரிகையை எடுத்துக்கொண்டது. குற்றப்பத்திரிகையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி (குற்றச் சதி) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவை பயன்படுத்தப்பட்டன.  இவை இரண்டும்  அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்கள் என்ற அடிப்படையில்  பணமோசடிச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஒருவரை விசாரிக்க  அனுமதிக்கப்படுகிறது.

2019 இல் செய்யப்பட்ட மற்றொரு திருத்தம், அமலாக்கத்துறை சட்டத்தை பின்னோக்கிப் பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.அசல் சட்டத்தின் பிரிவு 3, “குற்றத்தின் வருவாயுடன் தொடர்புடைய எந்தவொரு செயல்முறை அல்லது செயலிலும் ஈடுபட்டு, அதை கறைபடியாத சொத்தாகக் காட்டினால், அவர் பணமோசடி குற்றத்தில் குற்றவாளியாவார்” என்று கூறியது. சட்டவிரோதச் செல்வம் சட்டபூர்வமானது என்று முன்னிறுத்துவது அல்லது கூறுவது குற்றத்தின் அவசியமான பகுதியாகும். 2013 இல் ஒரு திருத்தம், குற்றத்தின் வருவாயுடன் தொடர்புடைய செயல்பாடு “மறைத்தல், உடைமை, கையகப்படுத்துதல் அல்லது பயன்படுத்துதல் மற்றும் அதை கறைபடியாத சொத்தாக முன்னிறுத்துதல் அல்லது கோருதல்” ஆகியவற்றை உள்ளடக்கியது. எவ்வாறாயினும், 2019 திருத்தம் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரிவு 3 இல் சேர்க்கப்பட்ட விளக்கத்தின் மூலம், “மற்றும்” என்பது திறம்பட “அல்லது” என மாற்றப்பட்டது.

இதன் பொருள், குற்றத்தின் வருமானத்தை வைத்திருப்பது இப்போது பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும். மேலும், 2019 ஆம் ஆண்டு திருத்தம், உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பில் அரசாங்கம் கூறியது போல, பணமோசடி குற்றத்தை “எந்த நேரத்தில் முன்னனுமான குற்றம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல், தொடரும் குற்றமாக” மாற்றியுள்ளது.பணமோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமலாக்கத்துறை  பல  பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கி செல்ல முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். “நீங்கள் 1947க்கு கூட திரும்பிச் செல்லலாம்” என்று சிபல் கூறுகிறார்.

சட்டத்தின் பின்னோக்கிப் பயன்பாடு தர்க்கத்தை மீறுகிறது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். “நான் 2007 இல் செய்தது குற்றமாக இல்லாவிட்டால் [பணமோசடி அட்டவணையின் கீழ்], அதற்காக 2020 இல் எப்படி என்னை விசாரிக்க முடியும்?”  என பணமோசடி சட்ட வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் கேட்டார்.

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

பின்னோக்கி நடவடிக்கை   

இதைத்தான் அக்ரசைன் கெலாட்டின் வழக்கறிஞரும் வாதிட்டார்.2007 மற்றும் 2009 க்கு இடையில் பொதுவான விவசாய உரமான பொட்டாசியம் குளோரைடை ஏற்றுமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, 2013 ஆம் ஆண்டு காண்ட்லா சுங்க ஆணையரால் தொடங்கப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் மீதான அமலாக்கத்துறை   சோதனைகளில் உச்சக்கட்ட குற்றச்சாட்டுகள் முதலில் வெளிவந்தன.

கண்ட்லா சுங்க ஆணையரால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று அக்ராசைன் கெலாட்டுக்கு சொந்தமான அனுபம் கிரிஷி ஆகும். அனுபம் க்ரிஷிக்கு எதிரான குற்றச்சாட்டு (கெலாட் இதை மறுக்கிறார்)    பொட்டாசியம் குளோரைடை இந்தியாவிற்கு வெளியே கடத்திய ஒரு நிறுவனத்திற்கு விற்றவர்களில் இதுவும் இருந்தது, அதை அந்த நிறுவனம் மற்றொரு தயாரிப்பாக உருமறைப்பு செய்தது.2018 இல், குஜராத் உயர் நீதிமன்றம் அசல் சுங்கத் தண்டனையை ரத்து செய்து, இந்த விவகாரத்தில் புதிதாக தீர்ப்பளிக்க உத்தரவிட்டது. ஆனால் ஜூலை 2020 இல் முந்த்ரா துறைமுகத்தில்.புதிய சுங்க விசாரணை துவங்கப்பட்டது.

அனுபம் க்ரிஷிக்கு எதிரான ஆரம்ப அபராதம் முறையற்ற முறையில் பொருட்களை ஏற்றுமதி செய்ததற்காக விதிக்கப்பட்ட நிலையில், முந்த்ரா சுங்க கண்காணிப்பாளர் சுங்கச் சட்டத்தின் பிரிவு 132 மற்றும் 135 இன் கீழ் தவறான அறிவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகளுடன் இந்திய தண்டனைச் சட்டம் 120-B படி குற்றவியல் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டையும் சேர்த்து சுமத்தினார். ஆரம்பக் குற்றமானது பணமோசடி குற்றச்சாட்டுகளை ஈர்க்கவில்லை என்றாலும், சுங்கச் சட்டத்தின் பிரிவு 132 மற்றும் IPC இன் 120-B ஆகியவை அதனைச்  செய்கின்றன. 2015 ஆம் ஆண்டுதான்   பணமோசடி சட்டத்தின் கீழ் 132வது பிரிவு அட்டவணைப்படுத்தப்பட்ட  குற்றமாக மாற்றப்பட்டது.

2007 மற்றும் 2009 க்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றம் என்பதால், பிரிவு 132 இன் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது பின்னோக்கிய நடவடிக்கைக்கு சமம் என்று மகேஷ் கெலாட் வாதிட்டார். “இது குற்றவியல் சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரானது,” என்று அவர் கூறினார்.

ஒரு வித்தியாசமான வழக்கு

பின்னோக்கி நடவடிக்கை என்ற வாள் நவாப் மாலிக் மீதும் தொங்குகிறது.  போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடனான அரசியல் சண்டையின் போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதலில் எழுந்தன.

“மிஸ்டர் நவாப் மாலிக். மும்பை கொலையாளிகளுடன் நீங்கள் ஏன் வியாபாரம் செய்தீர்கள்? என்று  நவம்பர் 9 அன்று ஃபட்னாவிஸ் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குர்லா புறநகரில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை குண்டர்களிடம் இருந்து மாலிக்கின் நிறுவனம் வாங்கியதாக குற்றம் சாட்டினார்.

தொற்று நோய் காலத்தில் அநீதியாக நடத்தப்படும் முறைசாரா தொழிலாளர்கள் – சிவராமன்

நான்கு மாதங்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கையில் இறங்கியது. உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரின் புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 3ம் தேதி முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. தாவூத் இப்ராஹிம் தனது கூட்டாளிகள் மூலம் டி-கம்பெனி என்ற சர்வதேச தீவிரவாத வலையமைப்பை நடத்தி வருவதாக மத்திய அரசுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி-கம்பெனி “இந்திய மக்களிடையே பயங்கரவாதத்தைத் தாக்குவதற்கு” ஒரு சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது மற்றும் “வன்முறையைத் தூண்டும் மற்றும் தூண்டும் சம்பவங்களைத் தூண்டுவதற்கு” திட்டமிட்டுள்ளது. இவை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பி, உபாவின் பல்வேறு பிரிவுகளுடன், இது தேசிய புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட வேண்டும் என்று அது கூறியது.தப்பியோடிய தாவூத் இப்ராகிம், ஹாஜி அனீஸ், ஷகீல் ஷேக், ஜாவேத் படேல், இப்ராகிம் மேனன் ஆகிய 5 பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இருந்தன.

பதினொரு நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு முதல் தகவல் அறிக்கை அடிப்படையில்  அமலாக்க இயக்குனரகம், அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது.  இது  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் “முதன்மையாக” பணமோசடி குற்றமாக “செய்யப்பட்டதாகத் தெரிகிறது” என்று கூறியது. இந்த வழக்குடன் 2017 முதல் விசாரித்து வரும் மும்பை நிழல் உலகத்துடன் தொடர்புடைய மற்ற இரண்டு அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைகளையும் அது இணைத்தது.

பிப்ரவரி 23 அன்று, அமலாக்க இயக்குனரகம்  இந்த வழக்கில் ஒருவரை கைது செய்தது – ஒரு உண்மையில் குண்டர் கும்பலை சேர்ந்தவரை அல்ல, அதற்குப் பதிலாக முந்தைய குற்றப் பதிவுகள் ஏதுமில்லாத, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த மாலிக்கை  கைது செய்தது. மாலிக்கிடம் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சொலிடஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், நவம்பரில் பாஜக தலைவர் பட்னாவிஸ் ட்வீட் செய்த, குர்லாவில் உள்ள  அதே மூன்று ஏக்கர் சொத்து,  அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சொலிடஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவை  குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இந்த சொத்து மும்பை விமான நிலையத்தின் தென்கிழக்குப் பகுதியில், ஓடுபாதையின் அருகில் உள்ளது. அவ்வப்போது புறப்படும் விமானங்களின் காதைக் துளைக்கும் கர்ஜனை, வளாகத்திற்குள் கொட்டகைகளில் வைக்கப்பட்டுள்ள பட்டறைகளில் கார்கள் பழுதுபார்க்கும்  சத்தத்தையும் மீறி எழுந்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் கொட்டகைகள், மறுபுறம் அடுக்குமாடி குடியிருப்பு, பின்புறம் ஒரு ஏழைகள் வாழும் பகுதி ஆகியவற்றுடன் அந்த நிலத்தின்  முன்பகுதியில் கடைகள் வரிசையாக உள்ளன.

அழகர் கள்ளழகராக மாறியது எதனால்? – சூர்யா சேவியர்

தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கருடன் சேர்ந்து அதன் அசல் உரிமையாளர்களான முனிரா எஸ் பிளம்பர் மற்றும் அவரது தாயார் மரியம் கோவாலா ஆகியோரிடமிருந்து சொத்துக்களை அபகரிக்க மாலிக் சதி செய்ததாக அமலாக்கத் துறை  கூறுகிறது.மார்ச் 1999 இல், பார்கரின் ஓட்டுநர் என்று அமலாக்கத் துறை  குற்றம் சாட்டிய சலீம் படேல் என்பவரை தனது அங்கீகாரம் பெற்ற நபராக  பிளம்பர் நியமித்தார். (பார்க்கர், படேல் இருவரும் இறந்துவிட்டனர்.) அமலாக்கத் துறைக்கு அளித்த அறிக்கையில், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரத்தை தான் பட்டேலுக்கு வழங்கியதாக பிளம்பர் கூறுகிறார். அவருக்குத் தெரியாமல், படேல் அங்கீகார அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாலிக்கின் குடும்பம் ஏப்ரல் 2003 இல் எடுத்துக்கொண்ட  சொலிடஸ் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திற்கு விற்றார்.   இது கொட்டகைகளின் மீது குத்தகை உரிமையைக் கொண்டிருந்தது.

மாலிக்கின் வழக்கறிஞர்கள் அவரது குடும்பத்தினர் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. அவர்கள் குற்றவாளிகள் அல்ல. – அவர்கள் ” வெறும் நிலத்தை வாங்கியவர்கள் மட்டுமே ” என்று வாதிட்டனர். “அவர் கையொப்பமிட்ட அங்கீகார அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி,  பிளம்பரை ஏமாற்றி,  படேல் செய்த மோசடிக்கு மாலிக்கை பலியாக்கலாமா?  மாலிக் குற்றத்தில் ஒரு தரப்பினர் அல்ல,”  என அவர்கள் வாதிட்டனர். தவிர, இந்தப் பரிமாற்றத்தைக் கையாண்ட  மாலிக்கின் சகோதரர்   இப்போது இறந்துவிட்டார்.  2019 இல்  ஆறு மாத காலத்தைத் தவிர, அவர் சாலிடஸ் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் இயக்குநராகக் கூட இல்லை.

மனித உரிமைகளை நிலைநாட்ட தவறினால்? – அண்ணல் அம்பேத்கரின் மகத் குள போராட்ட உரை

பணமோசடிச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு அங்கீகார அதிகாரம் கையொப்பமிடப்பட் டுள்ளது என்றும்,  முதல் பணப்பரிமாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2003 ம் ஆண்டு செய்யப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.  பணமோசடிச் சட்டம்  செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு 2005 இல் மற்றொரு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.  மாலிக்கின் வழக்கறிஞர்கள் 2005 இல் நடைமுறையில் இருந்த வரையறையின் கீழ்,  குற்ற வருமானத்தை வைத்திருப்பது பணமோசடிக்கு சமமானதல்ல என்று சுட்டிக்காட்டினர்.மாலிக்கின் வழக்கறிஞர்கள் அவருக்கு எதிரான அமலாக்கத் துறையின்  வழக்கு பணமோசடிச் சட்டத்தை  முந்தைய தேதியில் அதாவது சட்டமே இல்லாத காலத்தில் செயல்படுத்துவதற்கு சமம் என்று வாதிட்டனர். மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்றம், அவரது இடைக்கால பிணை   மனுவை விசாரித்தபோது, ​​​​கேள்வியை பொறுத்து முடிவு செய்ய வேண்டாம் என்று கூறியதுடன், பிரிவு 3 திருத்தங்களின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை அந்த நீதிமன்றத்தில்  கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்றும் கூறியது. “எனவே, இந்த கட்டத்தில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது என்று நாங்கள் முதன்மையாக உணர்கிறோம்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டத்தின் வலை மிகவும் அகலமாக வீசப்பட்டதா மற்றும்  அமலாக்கத் துறையின் அதிகாரங்கள் ஜனநாயகத்திற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டதா என்பதை இப்போது அந்த வழக்கின் தீர்ப்பு தீர்மானிக்கும்.

www.the scroll.in இணையதளத்தில் சுப்ரியா சர்மா  மற்றும் அருணாப் சைகியா ஆகியோர்  எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

Kallakurichi Sakthi School Ravikumar & Shanthi sons are about to get investigated – Deva’s Update 13

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் மோடி அரசு – நடப்பது என்ன?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்