உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘காதல் ஜிகாத்’ -ல் ஈடுபடுபவர்கள் உயிரை விட தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கும் ஒரு சட்டத்தை முன்மொழிந்திருக்கிறார். அதில் அவர் “அப்பாவியான”, “ஏமாறும்” பெண்களை வலுக்கட்டாயமாக முஸ்லீம் ஆண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் மற்றும் அதற்காக வலுக்கட்டாயமாக மதம் மாற்றச் செய்வதும் நடப்பதாக கூறி உள்ளார். மேலும் அவர் பெண்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும், அவரவர் வலைப் பின்னலுக்குள்ளேயே இந்திய கலாச்சாரப்படி திருமணம் செய்து கொள்ளும் பெண்களை போற்றும் நடவடிக்கைகளையும் எடுப்பது அரசின் உரிமை எனவும் கூறியுள்ளார்.
அவ்வாறு அந்த நடவடிக்கையில் ஈடுபடும் பையன்கள் “ராம் நாம் சத்யா” ( இந்து மத இறுதி சடங்கில் கூறப்படும் மந்திரம்) யாத்திரைக்கு செல்ல வேண்டி இருக்கும் என அச்சுறுத்தலையும் கூட வெளியிட்டுள்ளார். உயிர் அச்சுறுத்தல் இல்லை எனினும், இதை ஒத்த சட்டத்தை கர்நாடகா, அரியானா, மத்திய பிரதேச அரசுகளும் கொண்டுவர எண்ணுகின்றன.
இந்த அழைப்பு, மத மோதல்களைத் தூண்டுவதாக மட்டுமின்றி ஆணவக்கொலைகளை ஊக்குவிப்பதாகவும் உள்ளது. ஒரு பெண் அவளது குடும்பத்தினர் அல்லது கிராமத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சாதி அல்லது மதத்தைச் சேர்ந்த ஆணை மணந்து கொண்டால் அவளை அல்லது அவர்களை கொலை செய்து விடுவது ஆணவக் கொலை எனப்படும். இதன்மூலம் தங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு பழிவாங்கி விட்டதாகவும், குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டதாகவும் நியாயம் கற்பித்துக் கொள்வர்.
இந்த இரண்டு பழக்கங்களுமே பெண்களுக்கு அரசியல் அமைப்புப்படி உறுதி செய்யப்பட்ட சமூக நீதிக்கான உரிமை, சுதந்திரமாக சிந்திப்பது, எண்ணங்களை வெளிப்படுத்துவது, நம்பிக்கைக் கொள்வது, விரும்பிய மதத்தை ஏற்று வழிபடுவது மற்றும் ஆண்-பெண் சமநிலை ஆகியவற்றை மறுப்பதாகும். பெண்கள் ‘ சுதந்திரமாக, முழு வாய்ப்புடன்’ தான் யாரை, எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யும் உரிமையை வலியுறுத்தும், ஐ.நா.வின் குழந்தைகள் உரிமைக்கான மாநாட்டில் (CRC) கையொப்பம் இட்டுள்ள இந்தியா, மேற்கூறிய செயல்களை செய்வது இதனை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
பெண்கள் இடைவிடாத கண்காணிப்பில் இருக்க வேண்டும்
இந்த ஆணவக்கொலைகளுக்கும், ‘காதல் ஜிகாத்’ திற்கும் நம்மிடமுள்ள ஆணாதிக்க பாலின நியதிகளே அடிப்படை. பெண்களும், இளம் பெண்களும் அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்க இயலாதவர்கள், மேலும் இடைவிடாத கண்காணிப்புத் தேவைப்படுபவர்கள் எனக் கருதப்படுகின்றனர். திருமணம் குடும்பங்களுக்கிடையான இணைப்பு எனப் பார்க்கப்படுகிறதே தவிர இரண்டு தனிநபர்களுக்கிடையேயான இணைவாக எனப் பார்ப்பதில்லை.
2015-16 ல் மக்கள் தொகை குழு (Population Council) எடுத்துள்ள தரவுகள் உத்தர பிரதேசத்தில் மட்டும் 40% பெண்களுக்கு தாங்கள் யாரை, எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவில் பங்கேற்பதில்லை. 51% பேர் தங்கள் பெற்றோரின் விருப்பத்தை மிக எளிதாக ஏற்றுக் கொள்பவர்களாக உள்ளனர். வழக்கமாக அவர்கள் ஒரு மணமகனின் படத்தைக் காட்டி,” அவன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன்” என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிதல் தங்கள் கடமை என நினைக்கிறார்கள். ஒரு சிலருக்கு மட்டும் திருமணத்திற்கு முன்பு மணமகனுடன் தொடர்பு கொள்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது. 8% பேரே தங்கள் சொந்த முடிவை எடுக்கிறார்கள். சுருங்கக் கூறின், உ.பி.யில் வெகு சிலரே அறிவார்ந்த முடிவுகளை எடுக்கின்றனர். இதனால் ஐந்தில் ஒருவர் (57%) தங்கள் கணவரை மணநாளில்தான் முதன்முதலாக சந்திக்கின்றனர்.
இது உத்தர பிரதேசத்துக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல. பிற மாநிலங்களிலும் இதே நிலைதான் பெரும்பாலும் உள்ளது. எடுத்துக்காட்டாக, சமீபத்தில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் 2006-07 ம் ஆண்டிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, ஆந்திரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மகாராட்டிரம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றிலும் இதே நிலைதான் உள்ளது.
இதற்கு பெண்கள் கூறும் காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானது குடும்பத்தின் ஆதரவை இழந்து விடுவோம் என்பதே. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெற்றோர்கள் அவர்களிடம் அவர்களது தேர்வு பற்றி கேட்கும் போது, பெண்கள் தங்கள் விருப்பத்தை சுதந்திரமாக தெரிவிப்பார்கள் என்ற உணர்வில் இருந்து கேட்பதில்லை. விருப்ப பூர்வமான ஏற்பு இருப்பது கடினமே.
எடுத்துக்காட்டாக, தங்கள் பெற்றோர்கள் தங்களிடம் அவர்கள் சம்மதத்தை கேட்கும் போது திருமண உறவு பற்றிய முடிவுகளில் அவர்களுடைய பங்கு பற்றியே கேட்கின்றனர். அதில்: “என்னிடம் எனது பெற்றோர்கள் நிச்சயம் செய்வதற்கு ஒருநாள் முன்புதான் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமா” எனக் கேட்டனர். “நான் அவர்களுடைய முடிவை ஏற்றுக் கொள்வதாகக் கூறிவிட்டேன். மேலும் எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நீங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என கூறிவிட்டேன்.”
பெற்றோர்கள் முடிவை மறுத்து, சுயமாக தங்கள் விருப்பப்படி கணவனைத் தேர்ந்தெடுத்தால் பிறந்த வீட்டின் ஆதரவை இழக்க நேரிடுவதை ஏற்றுக் கொண்டால்தான் முடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
மரபுவழியை மீறி, குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியாத சாதி, மதத்தைச் சேர்ந்த பையனை திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையானவை. கடலில் மிதக்கும் பெரிய பனிக்கட்டியின் நுனிதான் இந்த ‘காதல் ஜிகாத்’-ம் ஆணவக் கொலைகளும்.
குழந்தைகள் திருமணத் தடைச்சட்டம், குழந்தைகள் பாலியல் கொடுமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவையும் கூட சட்டப்படியான அச்சுறுத்தல்கள் தான். இவை, இளம் பெண்களும், ஆண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அழிப்பதாகவே உள்ளன. பீகாரில் உள்ள பாதுகாக்கப்பட்ட இல்லங்களில் உள்ளவர்களின் மக்கள் தொகை குழுவின் (Population Council of residents of protection homes) வெளியிடப்படாத ஒரு ஆய்வு அறிக்கை, இத்தகைய அச்சுறுத்தல்கள் இருப்பதையும், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தெளிவாகக் காட்டுகிறது.
பீகாரில்தான் இந்தியாவிலேயே குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பெண்கள் உண்மையான ஒப்புதலின்றியே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.
இந்த பாதுகாப்பு இல்லங்களில் உள்ள பெரும்பாலான இளம்பெண்களும், பிற பெண்களும் தங்களுக்கு விருப்பமில்லாத திருமணத்தை சட்டத்தின் உதவியால் முறியடித்தவர்கள். இதில் வயது குறைவானவர்களும், இளம் பெண்களும் அடங்குவர்.
ஒரு வயது குறைவான பெண், “அது ஒரு காதல் திருமணம். எனது பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் என்னை அந்த பையன் ஏமாற்றி, கடத்தி சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். எனக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அது எனது விருப்பமில்லாமலே நிச்சயிக்கப்பட்டது. அதனால் நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. நாங்கள் திட்டமிட்டு வெளியேறினோம். அவர்கள் (பெற்றோர்கள்) என்னை அச்சறுத்தவில்லை. ஆனால் அந்த பையனிடம், திருமணம் செய்து கொண்டால் கொன்று விடுவதாக அச்சுறுத்தி உள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
வயதான பெண்களின் நிலைமையும் வேறுபட்டதல்ல.
அந்த இல்லத்தில் இருந்த இன்னொரு பெண், ” நான் ஒரு பையனுடன் தொடர்ந்து பேசி வந்தேன். நான் எனது சகோதரனிடம் அந்தப் பையனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தேன். அது இந்து – முஸ்லீம் பிரச்சினை என்பதால் நடக்காது என்று அவன் கூறிவிட்டான். ஒரு நாள் அவர்கள் எனக்கு திருமணம் செய்ய திட்டமிடுவதை அறிந்தேன். எனவே என் தந்தையிடம் என் காதலைப் பற்றிக் கூறினேன். அவர் கோபப்பட்டார். நான் அந்தக் பையனிடம் இதைக் கூறினேன். அவன் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டான். எங்காவது என்னை கூட்டிக் கொண்டு போய் விடுமாறு கூறினேன். அதனை அவன் ஏற்றுக் கொண்டான். நாங்கள் வெளியேறி விட்டோம். பிறகு எனது கணவரின் சகோதரியிடமிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் என் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். எனது மாமனாரை கைது செய்துள்ளதாகவும் எனவே உடனே வருமாறும் கூறினார். நாங்கள் திரும்பிச் சென்றோம். என்னை பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி விட்டனர். எனது கணவர் சிறையில் இருக்கிறார்.” என்கிறார் கண்ணீருடன்.
ஒரு சில பெற்றோர்கள் பிற மத, சாதியைச் சேர்ந்த பையனாக இருந்தாலும் கூட தங்கள் பெண்ணின் விருப்பத்தை மதித்து ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்களது விகிதம் கண்டிப்பாக அதிகரித்து வருகிறது. ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு இல்லை. அவர்கள் ஆணவக் கொலை பற்றியும் நன்கு அறிந்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தாய் தனது தவறான புரிதல் களை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:
“ஒரு பெண் வெளியேறி, வேறு யாராவது ஒரு பையனுடன் திருமணம் செய்து கொண்டால் நாங்கள் அவமானத்தால் தலைகுனிய வேண்டும். எங்கள் சமுதாயத்தினர் அதைப்பற்றி தவறான விமர்சனங்களை வைப்பார்கள். அது எனக்கு பயமாக உள்ளது. எங்கள் பகுதியில் ஒரு பெண் அப்படி வெளியேறி திருமணம் செய்து கொண்டால் மீண்டும் வீட்டுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டாள். அவளை கொன்று விடுவார்கள். இது எங்கள் பகுதியில் நடக்கிறது. அதனால்தான் நாங்கள் பெண்களை வெளியே அனுப்புவதில்லை” என்கிறார்.
என்ன செய்யப் போகிறோம்?
தங்களிடம் உள்ள குறைந்த வாய்ப்புகளைக் கொண்டு பெண்களின் நிலையை உயர்த்துவதற்காகவும், அவர்களுக்கான அமைப்புகளை கட்டமைக்கவும், அவர்களுக்கு அவர்களது உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி எடுத்துக் கூறவும் பல திட்டங்கள் விரிவாக, நல்ல நோக்கத்துடன் போடப்பட்டுள்ளன. ஆனால் அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஒரு வலிமையான பெண்ணுக்கு, ஒரு வலிமையான, ஆதரவான சூழல் தேவை. அத்தகைய சூழலை உருவாக்குவதற்கான சரியான தருணம் இதுவே.
ஆதரவான சூழலை கட்டமைக்க பல்வேறு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டியது அவசியம். வீடுகளில், பெற்றோர்களை, பெண்கள் உரிமைகளைப் பற்றியும், பெண் குழந்தைகள் பள்ளி செல்வதில் உள்ள முன்வாய்ப்புகள் குறித்தும், திறன்களை பெறுதல் பற்றியும், அவர்களுக்குள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், எல்லாவற்றையும் விட பெண் குழந்தைகளின் மதிப்பு பற்றியும் உணர்வுடையவர்களாக இருக்கச் செய்ய வேண்டும்.
“பருவ மாறுபாடு வாழ்க்கைத் திறன் கல்வி” பையன்களுக்கு சென்று சேர வேண்டும். அவை வெறும் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேலை செய்வது மட்டுமல்ல, திருமண முடிவு உட்பட அவர்களின் சொந்த உரிமை பற்றியும் கூட உணரச் செய்ய வேண்டும்.
வீட்டிற்கு வெளியே, சமூகத் தலைவர்கள், ஆசிரியர்கள், உடல் நலம் தருபவர்கள் ஆகியோருக்கு, புதிய கருத்துக்கள், பால் அடிப்படையில் ஒவ்வொருவரது பங்கின் மதிப்பு பற்றிய தெளிவு மற்றும்பெண்ணுரிமையைப் பாதுகாப்பதில் அவர்களது பங்கு ஆகியன பற்றி வெளிப்படுத்த வேண்டும். அதற்கான தளம் இருந்தும் அவை போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை.
எடுத்துக்காட்டாக, முன்னணி சுகாதார பணியாளர்கள், ஆசிரியர்கள், பஞ்சாயத்துக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களிடம் நடத்தை மாறுதல் தொடர்புகள் (behavior change communication) ஒப்படைக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் அவர்கள் சேவையாற்றும் சமூகத்தின் மனித உரிமைகளை உறுதி செய்பவராக இருக்க வேண்டும்.
மனித உரிமைகள் மற்றும் உடல் நல உரிமை பற்றிய விவர தொகுப்புகள் உள்ளிட்ட பயிற்சிகள் முன்னணி மருத்துவ ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். விழுமியங்களை தெளிவுபடுத்துவதை முக்கிய கவனம் செலுத்தும் பல நிலை இளம் பருவ கல்வி திட்டங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு நடத்தை மாறுபாடு தொடர்பு, மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றம் பற்றி வலியுறுத்தும் பயிற்சிகள் தரப்பட வேண்டும். பல்வேறு துறைகளில் செயல்படும் பல திட்டங்களில் மதிப்பீடுகள் பற்றிய தெளிவு வலியுறுத்தப்பட்டாலும், அவை நடத்தை மாறுதலுக்கு எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பது தெளிவாக இல்லை.
நமது தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமும், நீதித்துறையிலும், குற்றவியல்
நீதி அமைப்பிலும் ஆணாதிக்க மனப்பான்மையை மாற்றுவது பெரும் சிக்கலாக உள்ளது.
தற்போது உத்தர பிரதேச முதல்வர் கொண்டு வர முயலும் சட்டம் இதற்கு சரியான சான்றாகும். பெண்களின் தாழ்வு மனப்பான்மை, ஏமாறும் தோற்றம், தங்கள் வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க இயலாமை ஆகியன பற்றிய தவறான புரிதல்கள் ஆழமாக வேரூன்றி உள்ளன. இந்திய தலைமை அரசு வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால் கூறுவது போல அவசர நடவடிக்கை தேவைப் படுகிறது. அவர் பெண்கள் உரிமைபற்றிய உணர்வற்ற போக்கினை சரிபடுத்த, நீதித்துறை அதிகாரிகளுக்கு பால் (ஆண்-பெண்) பற்றிய உணர்வூட்டல் தேசிய கட்டாயமாக உள்ளது என்கிறார். இந்தக் கட்டாயத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் அதனை நீதித்துறையைத் தாண்டி தேசிய ,மாநில, மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.
(www.thewire.in இணைய தளத்தில் ஷிரீன் ஜீஜீபாய் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.