Aran Sei

குணால் கம்ரா முதல் பாமரன் வரை – வெறுப்பு அரசியலும் சிரிப்பின் வலிமையும்

நீங்கள் சிரிப்பை எந்த அளவு வரையறைக்குள் அடக்க முயற்சிக்கிறீர்களோ அந்த அளவு அது வரையறையை மீறும். ஆனால் இந்த அடங்காத “ஏதோ” ஒன்றுதான் முதல் பக்கக் கேலிச் சித்திரத்திலிருந்து நையாண்டித்தனமான வாசகர் பக்கம் வரை, அன்றாடச் சாதாரண புளித்துப் போன இதழியலில், பலவழிகளிலும், எழுத்தாளர்/படைப்பாளிக்கும் வாசிப்பவர்/ பார்ப்பவருக்கும் இடையே உடனடி வாய்மொழி பாலத்தையும் காட்சிப் பாலத்தையும் உருவாக்குவதாகப் பல ஆண்டுகளாக உள்ளது.

சிரிப்பு காற்றைப் போல இலேசானதாக இருக்கலாம். ஆனால், அது ஊடகத்துறையில் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத விலைமதிப்பற்ற ஊற்றுக்கண் ஆகும்.

ஒரு தொல்லை தரும் கொசுவை, பெரிய அகன்ற கொசு மட்டையைக் கொண்டு அடித்து, சாம்பலாக்கி, அழித்து, அதற்கும் மேலே,  அதன் நிலைகுலையச் செய்யும் ரீங்காரத்தை அடக்க, அனைத்துச் சன்னல்களையும் மூடி விடுவது போல, ஆள்பவர்கள் சிரிப்பை அழித்து ஒழித்து விடுவதை உள்ளுணர்வாக முயற்சிக்கிறார்கள்.

பலஆண்டுகளுக்கு முன்பு [நெருக்கடி நிலை காலத்தில்], நெருக்கடி நிலை அறிவித்த உடன் பத்திரிகைகளில் காணாமல் போனவற்றில் முதன்மையானது முதல் பக்கக் கேலிச் சித்திரம்.

தி இந்து பத்திரிகையின் “வாசகர்களின் ஆசிரியர்” ஏ.எஸ் பன்னீர்செல்வம் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் விவேகமான கேலிச் சித்திர நிபுணர் அபு ஆபிரகாம் அப்போதைய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லாவுக்கு அளித்த பதிலை நினைவுகூர்ந்தார். சுக்லா, “வதந்தி (rumour) பரவுவதைத் தடுத்து நிறுத்த” தணிக்கை முறை வேண்டும்” என வாதிட்டார். அதற்கு அபு ஆபிரகாம், “நகைச்சுவை (humour) பரவுவதை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?” எனப் பதில் கொடுத்தார்.

மிகவும் சரிதான். சிரிப்பு நம்மை ஆட்கொள்ளும் குறுகிய காலத்தை ஏன் மறுக்க வேண்டும்?

யாரை வேண்டுமானாலும் அர்பன் நக்சல், தேசத் துரோகி, பிரிவினைவாதி என்று கூறி அவரை அமைதியான சமூகத்திலிருந்து பிரித்துக் காலவரையின்றிச் சிறையில் தள்ளி விடும் இன்றைய காலத்தில், நகைச்சுவை பரவுவதைத் தடுக்கப் பலர் முனைந்திருப்பது முகத்தில் அறையும் உண்மை.

“ஆபாசமானவை” என அவர் குறிப்பிட்ட மேடை நகைச்சுவையாளர் குணால் கம்ராவின்  ட்விட்டர் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ட்விட்டர் நிறுவனத்தைக் கண்டிக்கும் மீனாட்சி லேக்கியின் பாராளுமன்றவாத அகம்பாவப் பேச்சு முழுவீச்சில் இருந்தது. (“நவம்பர் 19 அன்று, பாராளுமன்றக் குழு, குணால் கம்ராவின் “ஆபாச” ட்விட்டர் பதிவுகள் தொடர்பாகக் குறித்து ட்விட்டர் நிறுவனத்தைக் கேள்விகளால் துருவி எடுத்தது”)

உச்சநீதிமன்றம், சில குறிப்பிட்ட வழக்குகளை மட்டும் விசாரணைக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை கொடுப்பதில் உள்ள பொது ஒழுக்க மீறல் குறித்த ட்வீட்டுகள் எப்படி பொது நலக் கொள்கைகளை மீறுகின்றன என்றும் அல்லது ஒரு குறிப்பிட்ட நீதிபதி கொடுத்த, குறிப்பிட்ட தீர்ப்பு குறித்து போடப்படும் ட்விட்டர் பதிவுகள் உச்சநீதிமன்றத்தின் பெருமையை எவ்வாறு சீர்குலைக்கும் என்றும் நாம் கேட்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் ஒரு பகுதியாக உள்ள நீதிபதிகள் எடுக்கும் முடிவுகளை,  உச்சநீதிமன்றம் என்ற நிறுவனத்திலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். இந்த இணைப்புதான் அடிக்கடி “நீதிமன்ற அவமதிப்பு ” என்ற உரத்த கூச்சலுக்கு வழி வகுக்கிறது. சமீபத்தில்தான்,  தலைமை நீதிபதி பற்றிய தனது விமர்சனம் `தனது தகுதியான கருத்து’ என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

“இத்தகைய கருத்துகளின் வெளிப்பாடுகள், எவ்வளவு வெளிப்படையாக இருந்தாலும், எவ்வளவு ஏற்றுக்கொள்ள இயலாததாக இருந்தாலும் அல்லது சிலருக்கு எதிராக எவ்வளவு ஜீரணிக்க முடியாததாக இருந்தாலும் அவை நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.” என்று அவர் கூறியுள்ளார்.

இதே கருத்தை, உலக அளவில் பல நீதிமன்றத் தீர்ப்புகள் கூறி உள்ளன.

“அமெரிக்க நகைச்சுவை நடிகர்கள் நீதிபதிகளை எப்படி கேலி செய்கிறார்கள் என்பதை அறிந்தால் அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் அதிர்ச்சியாகி விடுவார்” என்று பிரிட்டனைச் சேர்ந்த ‘ப்ரைவேட் ஐ’ என்ற நையாண்டி பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. தன்னுடன் தொடர்புடைய ஒரு தீர்ப்பைப் பற்றி “அது நீதி என்றால், நான் ஒரு வாழைப்பழம்.” என்று கருத்து தெரிவித்திருந்தது.

நையாண்டி உடை உடுத்தி வந்தாலும், அது கடுப்பேற்றும் நடத்தையாகப் பலருக்குத் தோன்றினாலும், கம்ராவின் வாதத்தின் கருவில் உள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது.

உண்மைகள் தாமே பேசுகின்றன : அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனுக்களின் முடிவில்லாத வரிசையைத் தாண்டிக் குதித்து முன் கொண்டு வரப்பட்டு மற்றவர்களைவிட அதிக சமமானவன் என்ற அவரது சிறப்பு நிலையை அடையாளம் காட்டியது. இது இந்தியாவின் முன்னணி மேடை நகைச்சுவை நடிகரின் கவனத்தை ஈர்க்கக் கூடாது எனில் வேறு எது ஈர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் குணால் கம்ராவை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் சுற்றுப்புறத்தைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு நையாண்டிக்காரர் என்ற வகையில் அவர் எல்லைகளைத் தொடர்ந்து மீறுவதன் மூலம் எல்லைகளின் வரம்பைச் சோதிக்கிறார்.

யாரெல்லாம் உரிமைகளை, வளங்களை, சமூக, பொருளாதார நிலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், யாரெல்லாம் இவற்றைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானிக்கும் அதிகார அமைப்புகளை எதிர் கொள்ளும் போது, நகைச்சுவையானது சிறிது நேரத்துக்கு ஆனாலும் அதே அமைப்புகளைத் தகர்த்து விடும் எதிர் அதிகாரத்தைக் கொண்டு வருகிறது.

அந்த நொடிப் பொழுதில், நமது சிரிப்பு அதிகாரத்தில் இருப்பவர்களுடன் ஒரு சமத்துவத்தைக் கொண்டு வருகிறது. அத்தகைய சமத்துவம் தினசரி வாழ்வில் இருப்பதில்லை.

‘நாம் அவர்களைப் போன்றவர்கள் இல்லை, இந்த நாட்டின் குடிமக்களான நாம், அவர்களைத் தடுத்து நிறுத்த முடியா விட்டாலும் அவர்கள் மீது தீர்ப்பு சொல்ல முடியும்’ என்பதற்கான அடையாளமாக நமது சிரிப்பு உள்ளது. இதனால்தான் அதிகாரம் அற்றவர்களின் சிரிப்பு, அதிகாரத்தில் உள்ளவர்களின், பெரும்பாலும் பெரும்பான்மைவாத ஏளனச் சிரிப்பை விட  தெளிவாக வேறுபட்டதாகவே எப்போதும் இருக்கும்.

இத்தகைய, வெளித்தோற்றத்தில் முக்கியத்துவம் இல்லாத பேச்சு செயல்களின் மீதுதான்  மேற்கோள் மேற்கோளாக, நிகழ்வு நிகழ்வாக, ஊடகச் சுதந்திரங்களின் மாளிகை கட்டப்பட்டுள்ளது. இதற்கு, டெம்பிள் மேன் பிரபுவும் இன்னும் இருவரும் ‘ ஸ்பை கேட்சர்’ வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றிய, ‘தி டெய்லி மிரர்’ பத்திரிகையின் கருத்துக்கு டெம்பிள்மேன் பிரபுவின் எதிர்வினை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

அந்தப் பத்திரிகை அந்த மூன்று பேரின் புகைப்படங்களையும் தலைகீழாக வெளியிட்டு, ‘கிழட்டு முட்டாள்களே’ எனத் தலைப்புடன் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை டெம்பிள்மேன் மறுத்ததாகக் கூறப்படுகிறது. தான் வயதானவன்தான் என்றும், தான் முட்டாள் என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது, தன்னைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை என்றும் அவர்  கூறிவிட்டார்.

இந்தியாவிலும் கூட,கருத்துகளை வெளியிடும் சுதந்திரத்திற்கான விளக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் போதுமான வெளியைத் தாராளமாகக் கொடுத்ததற்கான நிகழ்வுகள் உள்ளன. இதைப்பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். தி வயரில் வந்த “OTT தளங்கள் மீதான நன்னடத்தைக் கண்காணிப்பு இந்தியத் தணிக்கைத் துறை யுகத்தின் சமீபத்திய காட்சி” என்ற கட்டுரையில் (நவம்பர் 20) நீதிபதி முகமது இதயத்துல்லா அவர்கள் வேறொரு சமயத்தில் கொடுத்த தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அதில், “நமது தணிக்கையாளர்களுக்கு ஒரு தரத்தை நிர்ணயிக்கும் போது, சுதந்திரத்திற்கு ஆதரவாக நிற்கப் போதுமான வாய்ப்பு தரும் வகையில் அந்தத் தரம் இருக்க வேண்டும். வாழ்க்கையையும் சமூகத்தையும் அவற்றின் நல்லவற்றுடன் குறைபாடுகளையும் சேர்த்து விளக்கும் படைப்புத்திறன் மிக்கக் கலைகளுக்கு மிக விரிவான இடத்தைக் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.” என்று நீதிபதி இதயத்துல்லா கூறியுள்ளார். எல்லைக் கோட்டை  மீறுவதாகத் தோன்றும் நையாண்டி ட்விட்டர் பதிவுகளுக்கும் இது கண்டிப்பாக பொருந்தும்.

கம்ராவின் ட்வீட்களைப் பற்றிய லேக்கியின் பார்வைக்கு மீண்டும் வந்தால், ஊடகச் சுதந்திரம் தொடர்பான அரசின் எதிர்வினை, தொடர்ந்து ஒரு சார்பாகவே உள்ளது. ஹத்ராசில் தலித் இனப் பெண், கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதற்குப் பிந்தைய பற்றிய அவரது பேட்டியை உள்ளடக்கிய, வேண்டுமென்றே கத்தரித்து வெளியிடப்பட்ட (“ஹத்ராசில் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகவில்லை எனக் கூறும் காணொலி பற்றிப் பாஜகவின் ஐ.டி பிரிவு அமித் மாளவியா ட்விட்டர் பதிவு- அக்டோபர் 4”) காணொலியைப் பாஜகவின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மாள்வியா ட்வீட் செய்த போது, அதை வெளியிட அனுமதித்த ட்விட்டரின் ‘அவமானகரமான செயல் பற்றி’ மீனாட்சி லேக்கி வாயே திறக்கவில்லை.

அல்லது மோடி அரசு சுதர்சன் தொலைக்காட்சிக்கு “கருத்துகளை வெளியிடும் சுதந்திரத்தை” அளிக்க எப்படி விரும்பியது என்பதைக் கவனியுங்கள். அது ‘UPSC ஜிகாத் தொடரின்’ நான்கு பகுதிகளை முன்னதாக அனுமதித்தது, தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட பின்பே அது தொடர்பாகச் சரியான உத்தரவுகளைப் பிறப்பித்தது.

பிறகு, அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட போது மூத்த பாஜக தலைவர்கள் மறைமுகமான, உறுதியான ஆதரவு தெரிவித்தனர்.

தனது காவல் துறையைத் தனது மாநிலத்திற்கு வெளியே அனுப்பி அங்குள்ள செய்தியாளர்களைக் கைது செய்ய அனுப்பி வைத்த உ.பி.முதல்வர் ஆதித்ய நாத், “கோஸ்வாமின் கைது மக்களாட்சியின் நான்காவது தூணின் மீதான தாக்குதல்” என முழங்கினார்.

தனது சித்தாந்தத்தின் நீட்சியாக இருந்தால் மட்டுமே தற்போதைய ஆளும் அரசு கருத்து சுதந்திரத்தை வரவேற்கிறது என்ற முடிவையே மேற்கூறிய நிகழ்வுகள் நமக்குத் தருகின்றன.

கொரோனா பற்றிய ஊடகச் செய்திகளில் பெரிய இடைவெளி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஒற்றுமை அமைப்பின் (MWSN) அறிக்கை, (“தற்கால இந்தியாவின் மிகப் பெரும் மனித வெளியேற்றத்தின் மக்கள் மற்றும் இறையாண்மைக் கதைகள் -நவம்பர் 2020”) கொரோனா நெருக்கடியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவு குறித்து ஊடகங்கள் மேற்கொண்ட கவனம் பற்றிச் சில மதிப்புமிக்கப் பார்வைகளைத் தருகிறது‌. எடுத்துக்காட்டாக அது, அரசு இதனை ஒரு “போர்” எனக் காட்ட விரும்பியது. ஊடகங்கள் அந்தக் கதைக்கு ஒத்து ஊதின”  என்கிற பார்வையை முன்வைக்கிறது.

அந்த அறிக்கையில் ஊடகங்கள் காணத் தவறிவிட்டதாக மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது, நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் நடத்திய போராட்டங்களைப் பற்றி முழுமையாகச் செய்தி வெளியிடவில்லை என்பதையே. MWSN  அறிக்கை அந்தப் போராட்டங்களின் விரிவான தொகுப்பைக் கொண்டிருக்கிறது.

” எங்களுக்கு இருந்த குறைந்த திறனில், இத்தகைய  லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கூலி, உணவு, சொந்த ஊர்களுக்குத் திரும்புவது, தங்குமிட வசதி போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நடத்திய,158 போராட்டங்களின் வரைபடத்தை உருவாக்கினோம். அவர்கள் எதிர்ப்புகள் குறித்த விவரங்கள் மிகக் குறைவாகவே செய்திகளாயின. அவை, எதிர்ப்பின் ஒரு வடிவம் என்று பிரதிநிதித்துவப்படுத்தப்படாமல்,’ சச்சரவுகள்’, ‘இடையூறுகள்’, ‘சிறிய சண்டைகள்’, ‘குழப்பங்கள்’, ‘திடீர் கிளர்ச்சி’ என்றெல்லாம்தான் காட்டப்பட்டன.

மேலும், “கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்கள் என்று காட்ட எள்முனையளவும் கவனம் செலுத்தவில்லை. எதிர்பாராத விதமாக, அந்தப் பொது முடக்கத்தின் போது விரிவான போக்குவரத்து வசதிகளுக்காகவும் அல்லது அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் நாடு முழுவதும் நடந்த அந்தத் தொடர்ப் போராட்டங்களின் மூலமாக ஆயிரக்கணக்கானவர்கள் எழுப்பிய குரல்கள் அவர்கள் காதுகளில் விழவே இல்லை.” என்று அது குற்றம் சாட்டுகிறது.

ஊடகங்களின் வாய்வீச்சுக்களும், அவை வெளியிட்ட செய்திகளும் பெரும்பாலும் “துன்பம்” என்பதாகவும், அதனை பொதுமக்கள் மனிதாபிமானத்துடன் அணுகுவதே தேவை என்கிற ரீதியிலான பார்வையையுமே கொண்டிருந்தன. புலம்பெயர்ந்த தொழிலாளருக்கான ஒரு உரிமை அடிப்படையிலான கட்டமைப்பு உருவாவதற்கான வாய்ப்பு, முன்கூட்டியே இவ்வாறு மறுக்கப்பட்டுவிட்டது.

டிஜிட்டல் துறையும் “ஒழுங்கு முறைகளும்”

மோடி அரசு டிஜிட்டல் ஊடகங்களை “ஒழுங்கு படுத்த” என எடுக்கும் நடவடிக்கைகள், இணையத்தில் இதழியலுக்குச் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்திலானவை என்று அரசு கூறுவதைப் பற்றி டிஜிட்டல் அமைப்பான ‘Digipub Foundation அறிக்கை கூறுவது கவனிக்கத்தக்கது.

(“நடுவண் அரசின் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களை “முடக்கும்”- Digipub- Nov., 17)  அது, அனைத்துப் பங்குதாரர்களுடன், குறிப்பாக டிஜிட்டல் ஊடகத்தை மட்டுமே கையாளும் நிறுவனங்களுடன் ஒரு “விரிவான ஆலோசனை” தேவை எனக் கேட்கிறது. மேலும் தகவல் ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் ஒரு கருத்துக் கேட்பை நடத்த வேண்டும். அரசு “கொள்கைகளை அவசரகதியில் நிறைவேற்றித் தள்ளுவதை” விட்டுவிட வேண்டும் ஏனென்றால் அது நாட்டு மக்களின் தகவல் அறியும் உரிமையை அழித்துவிடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு அரசு என்ன பதில் தரும்?

எல்லைக் கோடு

ஒழுங்குமுறையைப் பற்றிப் பேசும் போது, வலைப்பதிவரும் ஊடகவியலாளருமான சஞ்சுக்தா பாசு, ஏப்ரல் 6, 2018 ல் ” ராகுலின் பூதப்படை” (Rahul’s Troll Army) என்ற நிகழ்ச்சியில் “டைம்ஸ் நவ்” தன்மீது நடத்திய மலிவான தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அதன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அந்நிகழ்ச்சியில் ” இந்து வெறுப்பாளர்”, என்றும் “மோசமான பூதம்” என்றும் அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதி பெறுவதுதான் பிரச்சனையே. புகார்தாரர் ஏப்ரல் 24-ம் தேதியே சட்டப்படியான தாக்கீதை ஊடகத்திற்கு அனுப்பிவிட்டார். அதற்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை‌.

ஒரு ஆண்டு கழித்து செய்தி வெளியீட்டுத் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (NBSA) டைம்ஸ் நவ் ஊடகத்தின் உரிமையாளரான பென்னட் கோல்மான் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், புகார்தாரரை அவதூறு செய்யும் வகையில் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளதாகத் தங்களுக்கு ஒரு புகார்கடிதம் வந்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி, “அவதூறுக்கான சாத்தியக் கூறுள்ள பொருளை ஒலிபரப்புவது குறித்த வழிகாட்டுதல்களை – அடிப்படை வழிகாட்டுதல் எண் 5, 8 மற்றும் பிற – மீறியிருப்பதாக” புகார் கூறி உள்ளதாகவும், அதற்காக அந்த ஊடகம் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரியிருப்பதாகவும்  எழுதப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு நீண்ட அமைதி நிலவியது. இவற்றை எல்லாம் குறித்து ‘ தி வயர்’ செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்குப் பின் இந்த விவகாரத்தைக் கிளறி எடுத்து, மேல் நடவடிக்கை எடுக்க  என்பிஎஸ்ஏ விற்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கிடையில் சஞ்சுக்தா பாசு, சுதர்சன் தொலைக்காட்சியுடனான இந்த விவகாரம் குறித்துத் தலைமை நீதிமன்றத்தில் தலையீட்டு விண்ணப்பத்தைப் (Intervention Application) பதிவு செய்தார். அதில் குறைகளைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள என்பிஎஸ்ஏ வின் செயலற்ற தன்மையையும், அவர்களது தீர்ப்பு வழங்கும் செயல்முறை உள்ளார்ந்த பலவீனத்தைக் கொண்டதாக இருப்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினார். இது நவம்பர் 23 அன்று நடந்தது.

நவம்பர் 25 ல் கடைசியாக, என்பிஎஸ்ஏ ‘டைம்ஸ் நவ்’ நிறுவனம் மன்னிப்பைத் தனது தொலைக்காட்சியில் வெளிப்படையாக ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான வாசகத்தையும் கூட அதுவே அனுப்பியது:

“நாங்கள், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், 6.4.2018 அன்று இரவு 8:00 மணிக்கு  ஒளிபரப்பான இந்தியா அப் ஃபரன்ட் (India Upfront) நிகழ்ச்சி மற்றும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பான ” தி நியூஸ் ஹவர் டிபேட்” (The News Hour Debate) நிகழ்ச்சிகளில், திருமதி சஞ்சுக்தா பாசுவின் கருத்துகளை எடுத்துக்கொள்ளவில்லை. அதன்மூலம் செய்தி வெளியிடுவதில் பின்பற்றப்பட வேண்டிய பாகுபாடற்ற, சார்பற்ற தன்மையையும் மற்றும் நடுநிலையையும் நேர்மையையும் உறுதி செய்கின்ற நிலைகளையும் மீறியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். திருமதி சஞ்சுக்தா பாசுவை அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல என்பதை நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம்” என அதில் கூறப்பட்டிருந்தது.

கடைசியில், டைம்ஸ் நவ் மன்னிப்பை வெளியிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சஞ்சுக்தா பாசு வெளியிட்ட அறிகையில், என்பிஎஸ்ஏ ‘டைம்ஸ் நவ்’ மீதான எனது நீண்டநாளைய புகார் மீது எனக்குச் சார்பான தீர்ப்பை அவசரமாக வெளியிட்டுள்ளது.” என்று ஏமாற்றத்துடன் கூடிய நகைப்புடன் குறிப்பிட்டிருந்தார்.

தனது தலையீட்டு விண்ணப்பத்தைத் திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்றார் அவர். ஏனெனில், “ஒழுங்குபடுத்த வேண்டியவர்களின் செயலாற்றல் தன்மையும், உள்ளுறைந்திருக்கும் பலவீனமும் இன்னும் அப்படியே உள்ளது‌ …. போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. மேம்பட்ட ஊடகங்களுக்காகவும், சுயேச்சையான ஒழுங்குபடுத்தும் அமைப்புக்காகவுமான போராட்டம் தொடரும்.”

-தி வயர் ஆசிரியர்

தி வயர் செய்தித் தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

குணால் கம்ரா முதல் பாமரன் வரை – வெறுப்பு அரசியலும் சிரிப்பின் வலிமையும்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்