நடைபெறவுள்ள ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் மோசடி நடப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமான முடிவுகள் வர, தேர்தல் கருவிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பல வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த பிறகு, பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களினால், தங்களுடைய தொகுதிகளோடு தொடர்பு கொள்ள விடாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்த கட்டுப்பாடுகளினால் ஆக்ரோஷமாகும் வேட்பாளர்களில் சிலர் தங்களுடைய பாதுகாப்பு விபரங்களை தெரிவிக்க மறுக்கின்றனர், தங்கள் உயிருக்கு ஆபத்து இருந்தாலும், பிரச்சாரம் செய்வதையே தேர்ந்தெடுக்கின்றனர்.
2019 ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, அங்கு நடக்கும் முதல் தேர்தல் இது. தேர்தல் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதை பார்த்தால், பாஜக ஜம்மு காஷ்மீர் தொடர்பாக வைத்திருக்கும் கொள்கைகளை எல்லாம் சோதித்து பார்க்கும் வாக்கெடுப்பாக இதை பயன்படுத்த முயற்சி செய்வதாக தெரிகிறது என்கின்றனர் சில அரசியல் ஆர்வலர்கள். இதற்கு இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டாவது அதிக போராளிகள் ஆள் சேர்ப்பு நடந்தது 2020ல் தான் என செய்திகள் சொல்கின்றன. பயங்கரவாதத்திற்கு காரணங்கள் என அரசால் சொல்லப்பட்ட, போராளிகளின் இறுதிச் சடங்குகள் நடப்பதற்கும், 4ஜி இணையத்திற்கு தடை போட்ட பின்பும் ஆட்சேர்ப்பு நடந்திருக்கிறது.
இந்த தேர்தல்கள் நவம்பர் 28 தொடங்கி எட்டு கட்டங்களாக நடத்தப்படும். முடிவுகள் டிசம்பர் 22 அன்று வெளியிடப்படும்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தாக்கத்தில் காஷ்மீர் இருக்கும் பொழுதில், மத்திய அரசு , 1989ன் ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் புது ஆட்சி அமைப்புகளான மாவட்ட வளர்ச்சி கவுன்சில்கள் அமைக்கும் பாதையை கடந்த மாதம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம், 1996 ஆம் ஆண்டின் பஞ்சாயத்தி ராஜ் விதிமுறைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்தது. இதனால், 73ஆம் அரசியலமைப்பு சட்டதிருத்தத்தை அமல் செய்து, தேர்ந்தெடுக்கப்படும் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களை நிறுவ வழி செய்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (பி.எ.ஜி.டி) என்ற பெயரில் ஒன்று கூடியிருக்கும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமையை குலைக்க, நரேந்திர மோடி அரசு செய்யும் வேலை இது என பிராந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
இந்த நடவடிக்கை, உயர் நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதன் வழியே குழப்பத்தை விதைத்து, எம்.எல்.ஏ-வின் பணியை குறைத்து, பெயரளவில் மட்டுமே ஜனநாயகத்தை நிலவவிடும் எண்ணத்தோடு மட்டுமே செயல்படுத்தப்பட்டது, ஏனென்றால், மக்கள் தங்கள் சட்டங்களை இயற்றும் திறன் அடியோடு அழிக்கப்பட்டிருக்கிறது என்கின்றன பிராந்திய கட்சிகள்.
மற்ற கட்சிகள், மாநில அவையில் பிரதிநிதிகள் இல்லாத போது, உள்ளூரில் இப்படியான பிரதிநிதிகள் உருவாக்கப்படுவதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்புகிறார்களே தவிர, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
280 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சீட்களுக்கான தேர்தலை தவிர, 13,000 பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள், மற்றும் பிற உள்ளூர் அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலின் முதல் கட்டத்தில் பள்ளத்தாக்கின் பத்து மாவட்டங்களை சேர்ந்த 167 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
இரண்டாவது கட்டத் தேர்தலுக்கு 227 வேட்பாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மூன்றாவது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பி.எ.ஜி.டியுடன் சீட்களை பகிர்வு செய்யும் ஏற்பாட்டை வைத்திருந்த காங்கிரஸ் பிறகு பின்வாங்கியது. பாஜகவின் தாக்குதலால் ஃபரூக் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ‘தேச விரோத’ நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
காவலில் இருக்கும் வேட்பாளர்கள்
“எங்களுடைய வேட்பாளர்கள் எல்லோரும் காவலில் இருக்கிறார்கள்” என்கிறார் நேஷனல் கான்ஃபெரென்ஸ் (என்.சி) கட்சியின் தலைவர் நசீர் அஸ்லாம் வானி. ஆனால், சஜாத் லோனெ தலைமையிலானா நேஷனஸ் கான்ஃபெரென்ஸ் கட்சி இதைப் போன்ற எந்த கட்டுப்பாடுகளும் தங்களுக்கு நேரவில்லை என்கிறார். “ஒரு வேளை நாங்கள் வட காஷ்மீரில் இருப்பதால் எங்களுக்கு இந்த மாதிரி கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்கப்படாமல் இருக்கலாம். தெற்கு காஷ்மீரில் தான் இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அத்னன் அஷ்ரஃப் மிர் தெரிவித்தார்.
மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் நேஷனல் கான்ஃபெரென்ஸ் எனும் இரண்டு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களோடு தி வயர் பேசியது. தங்களுடைய பிரச்சாரங்களை எல்லாம் இந்த கட்டுப்பாடுகள் தடுப்பதாகவே அவர்கள் சொல்கின்றனர்.
“நான் நவம்பர் 16 என்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு, மூன்று நாட்கள் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே கூட என்னை அனுமதிக்கவில்லை” என்கிறார் காஷ்மிரின் மையப்பகுதியில் இருக்கும் பீர்வா தொகுதியின் நேஷனல் கான்ஃபரென்ஸ் கட்சி வேட்பாளர். “ நாங்கள் சமூக வலைதளங்களில் நிறைய பேசிய பிறகு தான் இந்த கட்டுப்பாடுகளை நீக்கினார்கள்.
பல இடங்களுக்கு போக வேண்டிய பல வேட்பாளர்களுக்கு காவல்துறை ஒரே ஒரு வாகனத்தை கொடுக்கிறது. எங்கள் வாகனம் காலை 11 மணிக்கு வருகிறது, நாங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு சென்று தகவல் சொல்ல வேண்டும். எல்லாம் முடித்துவிட்டு எங்கள் தொகுதிக்கு போய் சேரும் போது, அங்கே பிரச்சாரம் செய்ய குறைவான நேரமே இருக்கிறது. இரண்டே இரண்டு காவல்துறை அதிகாரிகளோடு ஆபத்தான பகுதிகளுக்கு எல்லாம் நாங்கள் போக வேண்டியதாக இருக்கிறது. மாலை 3.30 -ற்கு என்னுடன் வரும் காவல்துறையினர் அவர்களுக்கு பயமாக இருப்பதாக சொன்னால், உடனேயே புறப்பட வேண்டும். இதற்கு நேர்மாறாக, என்னை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் நசீர் அஹமது கான், எந்த பாதுகாப்பும் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறார். இது நியாயமா?” எனக் கேட்கிறார்.
இந்த வருடம் ஜம்மு காஷ்மிரில் அரசியல்வாதிகள் மீது நிறைய தாக்குதல்களும் நடத்தப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில், போராளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால், பத்து அரசியல் ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதில் எட்டு பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். நக்ரோடாவின் எல்லைகளில் நடக்கவிருந்த ஜெய்ஷ்-இ-மொஹமது அமைப்பின் தாக்குதல் ஜம்மு காஷ்மீரின் தேர்தலை நடத்தவிடாமல் செய்யவே திட்டமிடப்பட்டதாக காவல்துறையினரால் கணிக்கப்படுகிறது. தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது தான் கட்டுப்பாடுகளுக்கு முதன்மை காரணம் என காவல்துறையினர் சொன்னாலும், வேட்பாளர்கள் இதில் மோசடி நடப்பதாக சொல்கின்றனர்.
“பி.எ.ஜி.டி வேட்பாளர்களோடு மட்டுமே இது நடக்கிறது” என்கிறார் காஜ் தொகுதியை சேர்ந்த என்.சியின் மற்றொரு வேட்பாளர். “காவல்துறையினர் அடிக்கடி ஒரு சுயாதீன வேட்பாளரை எங்கள் வாகனத்தில் ஏற்றுவதால் நான் காவல்துறையினரின் வண்டியில் செல்ல மறுத்தேன். இப்போது என்னுடைய காரில் தான் போகிறேன்.
என்னுடைய தொகுதி நான் இப்போது இருக்கும் ஸ்ரீநகரில் இருந்து 70-75 கி மீ தொலைவில் இருக்கிறது. நான் வேறு திசையில் 15 கி மீ சென்று காவல் நிலையத்தில் சொல்லிவிட்டு பிறகு தொகுதிக்கு போவது மேலும் தாமதமாக்குகிறது. பயணத்தில் மட்டும் நான்கு மணி நேரங்கள் வீணாகிறது. இந்த குறுகிய நேரத்தில் எப்படி பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்திக்க முடியும்? எல்லா வேட்பாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க முடியாது என்றால், எதற்காக தேர்தல் நடத்துகிறார்கள்?’ என கேள்வி கேட்கிறார்.
வாக்குகளை இழந்துவிடும் பயத்தில், பல வேட்பாளர்கள் பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதி வேண்டாம் என்று சொல்லிவிட்டு தங்களை அபாயத்தில் வைத்து பயணிக்கிறார்கள். அப்படியாவது, தங்கள் பிரச்சாரங்கள் முறையே முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
“எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று நான் ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தேன்” என்கிறார் பிடிபி வேட்பாளரான ராஜா அப்துல் வகீது, ஸோபியன் தொகுதி. “இந்த பாதுகாப்பு காவல், ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது, ஏனென்றால் இது எங்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி, எங்கள் பாதையில் தடைகளை வைக்கிறது. தெற்கு காஷ்மீரை சேர்ந்த பிடிபியின் வேட்பாளர்கள் பலர் ஷிர்மல் ஃபாரஸ்ட் காம்ப்ளெக்ஸிற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். எங்களுக்கு பிரச்சாரம் செய்ய 1.5 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் பாஜகவினருக்கோ அவ்வளவு சுதந்திரம் இருக்கிறது” என்கிறார்.
“இரண்டாம் கெல்லர் தொகுதியின் வேட்பாளரான ஜாவித் கத்ரியும், இரண்டாம் ஷோபியன் தொகுதியின் வேட்பாளர் மொஹமது யூனிஸும் சுதந்திரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கோ, நான்கு திசையில் போக வேண்டிய நான்கு வேட்பாளர்களுக்கு ஒரு வண்டி வழங்கப்படுகிறது. இது வெறும் நேர விரயம். பாஜகவிற்கு சாதகமான முடிவுகள் வர செய்யப்படும் வசதிகள்.
இதை தவிர்க்கவே நானும் என்னுடன் வேலை செய்யும் இன்னொருவரும் பாதுகாப்பு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருக்கிறோம். ஒரு ஆபத்தான சூழலில் எங்களை நிறுத்திக் கொள்கிறோம் என்பது தெரிகிறது. ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார்.
மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் ஷோபியனின் வாச்சி தொகுதியில் போட்டியிடும், பிடிபி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எய்ஜாஸ் மிர், தான் இன்னும் வேட்பு மனு தாக்கல் கூட செய்யவில்லை என்றாலும், தொகுதிக்கு செல்வதை காவல்துறையினர் கட்டுப்படுத்துவதாக சொல்கிறார். “எப்போதெல்லாம் நான் தொகுதிக்கு செல்ல முயற்சிக்கிறேனோ,அப்போதெல்லாம் ஒன்று ஷோபியனிலோ அல்லது புல்வாமாவிலோ தடுத்து நிறுத்துகிறார்கள்” என்கிறார்.
நவம்பர் 21 அன்று, பி.எ.ஜி.டி தலைவர் ஃபரூக் அப்துல்லா, மாநில தேர்தல் ஆணையர் கே கே ஷர்மாவிற்கு தேர்தலில் மோசடிகள் நடப்பதாக ஒரு கடிதத்தை எழுதினார். “நடக்கவிருக்கின்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்கள் குறித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
வினோதமான விஷயம் ஒன்று இங்கே நடக்கிறது.பி.எ.ஜி.டி வேட்பாளர்கள் எல்லாருமே பாதுகாப்பின் பெயரால் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. யாரிடம் இருந்து வாக்குகள் வாங்க வேண்டுமோ அவர்களிடம் இருந்து முற்றிலும் தொடர்பற்று இருக்கிறார்கள்” என எழுதியிருக்கிறார்.
திங்கட்கிழமை அன்று, அப்துல்லாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததை அங்கீகரித்த ஷர்மா, தேவையான துணைப்படைகள் வெளியில் இருந்து வந்திருக்கின்றன, நேர்மையான, விடுதலையான தேர்தல்கள் நடக்க பாதுகாப்பான சூழல் நிலவும் என்று தெரிவித்தார். மேலும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
“பிரச்சாரத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாததாக சொல்பவர்கள் நேரடியாக என்னிடம் சொல்லுங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் துணை கமிஷனர்கள் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர்களிடம் சொல்லுங்கள். எல்லா வேட்பாளர்களுக்கும் தங்களுடைய பிரச்சாரத்தை நடத்த பாதுகாப்பு வழங்கப்படும்” என்று சொல்லியிருக்கிறார். கடந்த வாரம், தேர்தல்கள் காரணமாக, 25,000 கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் ஜம்மு காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஏன் இந்த தேர்தல்கள் முக்கியமானவை?
இந்த தேர்தல்கள் ஜம்மு காஷ்மிரில் இருக்கும் அரசியல் அதிகாரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என அரசியல் நிபுணர்கள் சொல்கின்றனர். இதன் காரணமாகவே இந்த தேர்தல்களின் நம்பகத்தன்மையின் மீது ஏதாவது களங்கம் ஏற்பட்டால், அது பெரிய ஆபத்தில் முடியும் என்றும் சொல்கிறார்கள்.
“இந்த சமயத்தில் ஒரு மோசடியான தேர்தலை மோடி அரசாங்கத்தால் நடத்த முடியாது” என்கிறார் அப்சர்வர் ரிசர்ச் அறக்கட்டளையின் இணை ஆய்வாளர் காலித் ஷா. “1987ல் தேர்தல்களில் மோசடி நடந்த போது, பெரிய கலவரங்கள் நடந்தது. முறையே சிந்தித்து ஒரு நல்ல பாதுகாப்பு திட்டம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலிலும், முதலில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கைகள் வாங்கப்படுகின்றன. பாதுகாப்பு படைகளுக்கு மத்தியில் ஒற்றுமையான கருத்து இருக்கும் போது தான் தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கே நேர்மையான தேர்தல்கள் நடத்தப்படாமல் ஒன்றும் இல்லை. 2002 ஆம் ஆண்டின் தேர்தல் சுதந்திரமானவையாக இருந்தன, வன்முறைகள் நடந்த போதிலும் அதிகளவு வாக்குப்பதிவு ஆனது. அந்த வருடம் 600 கொலைகள் நடத்தப்பட்டன. அதனால், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எப்போதும் ஒரு தடையாக இருந்ததே இல்லை. காவல்துறையினர் வேட்பாளர்களின் பிரச்சாரங்களை தடை செய்வது கண்டனத்திற்குரியது” என்கிறார்.
ஜம்மு காஷ்மீர் அதிகாரத்துவத்தினர், அதிகாரத்தை பரவலாக்குவதை தடுப்பதாக அச்சம் இருப்பதாக சொல்லப்படுகிறது. “இந்த தேர்தல்களுக்கு பிறகு, அதிகாரத்தில் பெரிய மாற்றம் இருக்கும். அதிகாரத்துவத்தினரின் இயக்கம் கேள்வி கேட்கப்படும். ஜம்மு காஷ்மீரின் அதிகாரத்துவத்தினர் ஆளுங்கட்சியோடு சேர்ந்து செயல்படுகிறார்களா என சந்தேகம் இங்கிருக்கிறது” என்றும் ஷா தெரிவித்தார்.
திங்களன்று, ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி தவிந்தர் சிங் கைது தொடர்பாக பிடிபியின் செய்தித் தொடர்பாளர் வாகீத் உர் ரஹ்மான் பராவுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியபோது, அரசு நிறுவனங்களின் நிலைப்பாடு அப்பட்டமானது. பரா தேர்தல்களுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
சனிக்கிழமையன்று, முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி ஷோபியனில் ரம்பியாரா நல்லா எனும் பகுதியில் இருக்கும் ஒரு இடத்திற்கு சென்றதை காவல்துறை தடுத்து நிறுத்தினர். அந்த குறிப்பிட்ட பகுதியில், வெளியாட்கள் சட்ட விரோத ஒப்பந்தங்களை வைத்துக் கொண்டு, மணற்கொள்ளை நடத்துவதாக முஃப்தி கூறியிருந்தார். பாஜக தவிர மற்ற கட்சிகளை எல்லாம் பிரச்சாரம் செய்யவிடாமல், மற்ற கட்சிகளின் அரசியல் ஈடுபாட்டை மத்திய அரசு நாசம் செய்வதாக முஃப்தி குற்றம் சாட்டியிருந்தார்.
“எதிர்க்கட்சிகள் அவர்களுடைய அரசியலை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை தடுக்க, நிர்வாகங்கள் தங்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளையும் பயன்படுத்துகின்றன” என்கிறார், என்.சி கட்சியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஹஸ்னெயின் மசூடி. “ இந்த திட்டத்தைப் பார்த்தாலே பிற கட்சிகளுக்கு இதைப் பற்றி யோசிக்க, திட்டமிட மிகக் குறுகிய காலமே வழங்கப்படுவது தெரியும். இதைப் போன்ற விஷயங்களுக்கு ஆலோசனை நடக்கும் போது, தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடமும் பேச வேண்டும். அது நடக்கவில்லை” என்றார்.
எதிர் கூட்டணியின் உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணிப்பார்கள் என பாஜக எதிர்பார்த்திருக்கும், அது நடக்காத காரணத்தால் இப்போது இப்படி கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டிருக்கின்றனர் எனும் சந்தேகமும் இருக்கிறது. “நாங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறோம். வாக்காளர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்த தேர்தல்களில் போட்டியிருகிறோம்” என்கிறார் பிடிபி கட்சியின் செய்தி தொடர்பாளர் மோஹித் பான்.
பாஜக பிரச்சாரம்
பாஜகவின் வலிமையான தலைவர்களான ஷஹனவாஸ் ஹுசைன் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி போன்றோர் காஷ்மீரில் தீவிரமாக பிரச்சாரம் நடத்திக் கொண்டிருப்பதனாலேயே, பி.எ.ஜி.டி வேட்பாளர்கள் பாதுகாப்பு காவல்கள் குறித்து குற்றம் சாட்டுகின்றனர். தேர்தலுக்கு முன், ஸ்மிருதி இரானி காஷ்மீருக்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குஜ்ஜர் ஏற்கனவே காஷ்மீருக்கு போய்விட்டார், இன்னும் சில நாட்களில் பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார்.
பாஜக காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆயிரம் ட்விட்டர் கணக்குகளை தொடங்கியிருக்கிறது. “ பள்ளத்தாக்கின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சமூக வலைதள குழு இருக்கிறது, அதை பத்து பேர் பார்த்துக் கொள்கிறார்கள். பாஜகவின் தகவல்தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா, இங்கு நடக்கும் தேர்தல்களை மேற்பார்வை செய்கிறார். இதோடு, வாக்குச்சாவடி அளவில் தொடங்கி மாவட்ட அளவு வரை பல வாட்ஸப் குழுக்களும் இருக்கின்றன. இதனால் தான் காஷ்மீர் முழுக்க எங்கள் பிரச்சார வீடியோக்கள் வைரலாக இருக்கின்றன” என்கிறார் காஷ்மீர் பாஜக ஊடக மேலாளர் மன்சூர் பாட்.
பாஜக மற்ற கட்சிகளை போல அல்லாமல், சுதந்திரமாக பிரச்சாரம் செய்வதாக வந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாட், “ நாங்கள் ஒன்பது உறுப்பினர்களை வெவ்வேறு தாக்குதல்களுக்கு இழந்திருக்கிறோம். ஒரு தாக்குதலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். அப்புறம், பாஜக ஊழியர்களையும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் பாதுகாப்பு காவலில் வைத்தது. மூன்று மாதங்கள் எங்கள் உறுப்பினர்கள் எங்கும் போக முடியவில்லை. அது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை, அதை பாஜக உறுப்பினர்கள் பின்பற்றுகின்றனர். நவ்காம் தொகுதியை சேர்ந்த அன்வர் கானை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு தொழிலதிபர். அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவரும் காவலில் இருக்கிறார்” என்றார்.
காஷ்மீர் காவல்துறையின் ஐ.ஜி விஜய் குமாரை தி வயர் அழைத்த போது, பிஸியாக இருப்பதாகவும், நாளை பேசுவதாகவும் சொல்லி துண்டித்தார். அவர் இது குறித்து பேசினால் கட்டுரையில் சேர்க்கப்படும்.
(www.thewire.in இணையதளத்தில் ஷகிர் மிர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.