Aran Sei

பிராமல் நிறுவனத்திற்கு வங்கிகளால் கொடுக்கப்பட்ட DHFL எனும் ஜாக்பாட் – அருண் கார்த்திக்

DHFL என்று அழைக்கப்படும் திவான் வீட்டு கடன் (Dewan Housing Finance Ltd) நிறுவனத்தை பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம்; ஐபில் விளம்பரங்களில் அந்த நிறுவனத்தின் பெயரை நாம் பார்த்திருக்க கூடும். இது ஒரு வங்கி போன்ற நிதி சேவைகள், முக்கியமாக வீட்டுக் கடன், வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்தும் சிறு வைப்பு நிதி முத்தலீட்டாளர்களிடம் இருந்தும் கடன் வாங்கி, அந்த பணத்தை வைத்து வீட்டு கடன் போன்ற கடன்கள் கொடுக்கும் நிறுவனம்.

பல தனியார் நிறுவனங்களில் சமீப காலங்களில் நடப்பது போல இந்த நிறுவனமும் கடன் வாங்கி அந்த கடனை கட்ட முடியாமல் திவால் ஆன நிறுவனம் என்று அறிவிக்க பட்டது. 2019 நவம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி இந்த நிறுவனத்தை திவாலான நிறுவனங்களுக்கான நடைமுறைக்கு (insolvency proceedings) அனுப்பியது. 2020 நிலவரப்படி இந்த நிறுவனம் வங்கிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் திருப்பி கொடுக்க வேண்டிய கடன் தொகை சுமார் ரூ. 91,000 கோடி.

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

இந்த திவால் நடைமுறை தொடங்கும் முன்பே, DHFL நிறுவனத்தின் தலைவர் கபில் வாத்வான் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பது என்ற பெயரில் நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழ தொடங்கி இருந்தது. இந்த குற்றசாட்டு எழுந்த பிறகு தான் DHFL-இன் இயக்குனர் குழுவை மாற்றிவிட்டு திவால் நாடைமுறையை தொடங்கியது ரிசர்வ் வங்கி. திவால் நடைமுறை தொடங்கிய பிறகு பல்வேறு நிறுவனங்கள் DHFL நிறுவனத்தை வாங்க முயற்சி செய்தன. ஜனவரி 2020-இல் பிராமல் நிறுவனம் ஏலத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பிராமல் நிறுவனம் கோரி இருந்த ஏலத்தொகை ரூ. 37,750 கோடி. இது DHFL நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்த மொத்த கடன் தொகையான ரூ. 91,000 கோடியில் 41% தான். மீதி தொகையான ரூ. 53,250 கோடி வங்கிகளுக்கும் DHFL-இன் வைப்பு நிதியில் முதலீடு செய்து இருந்தவர்களுக்கும் நட்டம். இந்த நட்டத்தை வணிக நாளேடுகள் ஆங்கிலத்தில் “banks had a hair cut of Rs. 53,250 crore” என்று சொல்கிறார்கள். தமிழில் “வங்கிகள் ரூ. 53,250 கோடிக்கு முடி வெட்டி கொண்டார்கள்” என்று சொன்னால் சரியாக இருக்காது, “ரூ. 53,250 கோடி மயிராய் போனது” என்று மொழிபெயர்ப்பு செய்தால் வேண்டுமானால் சரியாக இருக்கும்.  DHFL வாங்கி இருந்த மொத்த கடன் தொகையில் வங்கிகள் கொடுத்த கடன் சுமார் ரூ. 50,000 கோடி, LIC மற்றும் ஓய்வூதிய நிதியகங்கள் கொடுத்த கடன் சுமார் ரூ. 30,000 கோடி என்பது குறிப்பிடதக்கது.

இந்த திவால் நடைமுறை நடந்துகொண்டு இருக்கும்பொழுதே, நவம்பர் 2020-இல் தான் அணைத்து கடனையும் அடைத்துவிடுவதாக கூறினார் கபில் வாத்வான். ஆனால் இதை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை.

ஏலத்தில் வென்ற பிராமல் நிறுவனம் ரூ.37,750 கோடியை எப்படி கொடுக்க போகிறது என்று பார்ப்போம். ஆரம்பத்தில் பிராமல் நிறுவனம் கடன் கொடுத்த வங்கிகளுக்கு ரூ. 12,700 கோடி மட்டுமே கொடுக்கும். DHFL நிறுவனத்திடம் ஏற்கனவே சுமார் ரூ. 3,500 கோடி பணம் கையிருப்பு இருப்பதால், மீதி தொகையான சுமார் ரூ. 9,200 கோடியை மட்டுமே பிராமல் நிறுவனம் ஆரம்பத்தில் கட்ட வேண்டி இருக்கும். இந்த தொகையும் முழுவதுமாக பிராமல் நிறுவனத்தின் பணம் இல்லை, பார்க்ளேஸ் வங்கியும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியும் கொடுக்கும் கடனும் இந்த ரூ. 9,200 கோடியில் அடக்கம்.

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

ஏலம் போன தொகையான ரூ. 37,750 கோடியில் ரூ. 12,700 கோடியை DHFL நிறுவனத்திடம் ஏற்கனவே இருக்கும் பணத்தை வைத்தும் வங்கிகளிடம் கடன் வாங்கியும் கொடுக்கிறது பிராமல் நிறுவனம், மீதி தொகையான ரூ. 19,550 கோடியை எவ்வாறு கொடுக்கும்? இந்த ரூ. 19,550 கோடிக்கு வங்கிகளுக்கு கடன் பத்திரங்களை வழங்க போவதாக கூறியுள்ளது பிராமல். இந்த கடன் பத்திரங்கள் 10 ஆண்டு கால அவகாசமும் 6.75% வட்டி தரக்கூடியதும் ஆகும். அதாவது, இந்த கடன் பத்திரத்தை வைத்திருக்கும் வங்கிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு ரூ. 19,550 கோடிக்கு 6.75% வட்டி மட்டுமே கிடைக்கும், அதன் பின் அசல் தொகை கிடைக்கும். நிறுவனங்கள் கடன் பத்திரங்களை சந்தையில் விற்று பணம் திரட்டுவது என்பது சாதாரண விஷயமாக இருந்தாலும், பொதுவாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் கடன் திருப்பி செலுத்தும் திறனை பொறுத்து வட்டி விகிதம் மாறும். பிராமல் போன்ற நிறுவனம் 6.75% வட்டிக்கு சந்தையில் இருந்து பணம் திரட்டவே முடியாது, இன்னும் 3-3.5% அதிக வட்டி கொடுத்து இருந்தால் மட்டுமே பிராமலால் இது போன்ற தொகையை சந்தையில் திரட்டி இருக்க முடியும் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக அதிக வட்டி கொடுத்தாலும் வங்கிகள் இவ்வளவு பெரிய தொகையை ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் முதிலீடு செய்யாது என்பது வேறு விஷயம். ஆனால் 6.75% வட்டிக்கே அந்த கடன் பத்திரங்களை ஏலத்தொகையின் ஒரு பாகமாக பெற்றுக்கொள்ள வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதுவெல்லாம் மட்டுமல்ல இன்னும் கதை நீள்கிறது.

DHFL நிறுவனம் வீட்டு கடன் வழங்கும் வங்கி அல்லாத வணிக சேவை நிறுவனம் என்று பார்த்தோம். DHFL திவால் ஆக முக்கிய காரணம் DHFL நிறுவனத்தின் கபில் வாத்வான் DHFL மூலம் போலி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து முறைகேடு செய்ததும், DHFL முறையாக கொடுத்த வீட்டு கடன்கள் வராமல் போனதும் தான். DHFL நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட பொழுது அது மொத்தம் கொடுத்திருந்த கடன் ரூ. 90,000 கோடிக்கு மேல். இதில் DHFL-ஆல் வரகடனாக வகைப்படுத்தப்பட்ட கணக்குகளின் மொத்த தொகை ரூ. 38,100 கோடி. இது பிராமல் DHFL நிறுவனத்தை  ஏலத்தில் வாங்கிய தொகையான ரூ. 37,250 கோடியை விட அதிகம். இந்த கடன்கள் வராக்கடன் என்பதால் இதற்க்கு எந்த மதிப்பும் இல்லை என்றும், ஆதலால் இந்த வரகடனில் இருந்து வரும் வருமானத்தை DHFL-க்கு கடன் கொடுத்த வங்கிகளுடன் பகிர்ந்துகொள்ள தேவை இல்லை என்றும் தனது ஏல விண்ணப்பத்தில் கூறி இருந்தது பிராமல் நிறுவனம். விபரம் அறிந்தவர்கள் மொத்த தொகையான ரூ. 38,100 கோடியும் வராமல் போவதற்கு வாய்ப்பு இல்லை, இந்த வரா கடனில் குறைந்தது ரூ. 10,000 கோடியை வசூலிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.  பிராமல் சமர்ப்பித்த ஏல விண்ணப்பத்தில் வரா கடனான ரூ. 38,100 கோடிக்கும் எந்த மதிப்பும் இல்லை என்று கூறி இருந்தது. எந்த மதிப்பும் இல்லை அதனால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், அதில் வசூல் செய்யக்கூடிய தொகையையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள், என்று வங்கிகளுக்கு கொடுக்கவில்லை, மாறாக இந்த கடன்களுக்கு எந்த மதிப்பும் இல்லாததால் அதற்க்கு தனியாக விலை எதுவும் கொடுக்க தேவை இல்லை என்று கூறியது பிராமல். ஆக இதிலும் பிராமல் நிறுவனத்திற்கு இனாமாக குறைந்தது ரூ. 10,000 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.

இப்போது தான் கதையின் விறுவிறுப்பான பாகத்துக்கு வருகிறோம். DHFL நன்றாக செயல்பட்டு கொண்டு இருந்த பொழுது, நாராயணி முதலீடுகள் (Narayani Investments) என்ற நிறுவனத்திற்கு ரூ. 300 கோடி கடன் கொடுத்து இருந்தது. நாராயணி நிறுவனத்தை நடத்துபவர் (promoter) நிரா ராடியா. நிரா ராடியாவை நம்மில் சிலர் மறந்து இருக்கக் கூடும். 2G வழக்கு என்கிற ஊதிப்பெருக்கப்பட்ட பலூன் பிரபலமாக இருந்த காலத்தில் ராடியா நாடாக்கள் (Radia Tapes) என்கிற பதிவு செய்ய பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஆகி இருந்தது. அந்த நிரா ராடியாவின் நிறுவனம் தான் நாராயணி. இந்த நாராயணி நிறுவனமும் நிதி முறைகேட்டுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிட தக்கது. நாராயணி நிறுவனத்திடம் இருந்து கடன் வசூலிக்கும் வழக்கு மும்பையில் உள்ள NCLT (National  Company Law Tribunal) எனப்படும் தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

பிராமல் நிறுவனம் DHFL நிறுவனத்தை கைப்பற்றிய பிறகு நயதி ஹெல்த்கேர் (Nayati Healthcare) என்ற நிறுவனத்திடம் இருந்து கடனை வசூலிக்க வழக்கு ஒன்று தொடுத்துள்ளது. இந்த நயதி ஹெல்த்கேர் நிறுவனம் நிரா ராடியாவின் நிறுவனமான நாராயணி முதலீடுகள் (Narayani Investment) நிறுவனத்தின் துணை நிறுவனம் (subsidiary) ஆகும். அதாவது, நயதி ஹெல்த்கேர் நிறுவனத்தின் அணைத்து பங்குகளும் நாராயணி நிறுவனத்திடம் உள்ளன. பிராமல் எதற்கு DHFL நிறுவனத்தின் மூலம் நயதி ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு எதிராக கடன் வசூலிக்கும் வழக்கு தொடுக்க வேண்டும், DHFL எதாவது கடன் கொடுத்து அதை நயதி ஹெல்த்கேர் நிறுவனம் திருப்பி செலுத்தாமல் விட்டுவிட்டதா என்ற நமக்கு கேள்வி எழுந்தால் அது சரியான கேள்வியே.

விஷயம் என்னவென்றால் DHFL நிறுவனம் நாராயணி முதலீடுகள் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து இருந்தது போலவே எஸ் வங்கியும் (Yes Bank) நாராயணி முதலீடுகள் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து இருந்தது. எஸ் வங்கியின் கடனுக்கு அடமானமாக நயதி ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளை கொடுத்திருந்தது நாராயணி முதலீடுகள் நிறுவனம். நாராயணி முதலீடுகள் நிறுவனம் கடனை திரும்ப செலுத்தாததால் நாராயணி முதலீடுகள் நிறுவனத்திடம் இருந்த நயதி ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்தி கொண்டது எஸ் வங்கி.

DHFL மூலம் பிராமல் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கில் நாராயணி முதலீடுகள் நிறுவனத்திடம் இருந்த (பிறகு எஸ் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட) நயதி ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளில் தனக்கும் ஒரு பாகம் வேண்டும் என்று சொல்கிறது. அதாவது DHFL நிறுவனத்திடம் இருந்து வாங்கிய கடனை நாராயணி முதலீடுகள் நிறுவனம் திரும்ப செலுத்தாததால் நாராயணி நிறுவனத்தின் சொத்தான நயதி ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்குகளில் தனக்கு உரிமை உள்ளது என்று சொல்கிறது DHFL நிறுவனம்.

இதற்க்கு மேல் தான் பல வேடிக்கையான செய்திகளை பார்க்க போகிறோம். DHFL நிறுவனத்திற்கு கடன் கொடுத்து இருந்த பல வங்கிகளில் எஸ் வங்கியும் அடக்கம். DHFL நிறுவனத்துக்கு பல முறைகேடான வழிகளில் நிதி வழங்கியதால் தான் எஸ் வங்கி முடங்கியது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எஸ் வங்கி முடங்கிய பிறகு அதை பொது வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) கையகப்படுத்திக் கொண்டது. SBI கையகப்படுத்திய பிறகு தான் எஸ் வங்கி கொடுத்திருந்த வரா கடன்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டது. அப்படி தொடுக்கப்பட்ட வழக்கு தான் நாராயணி முதலீடுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு. DHFL நிறுவனத்திற்கு SBI வங்கி கொடுத்து இருந்த கடன் மட்டும் ரூ. 10,000 கோடிக்கு மேல்.

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

பிராமல் நிறுவனம் DHFL நிறுவனத்தை ஏலத்தில் வாங்கிய பொழுது DHFL கொடுத்து இருந்த கடன்களில் வராகடன்களான ரூ. 38,100 கோடியில் எந்த கடனும் திரும்ப வராது ஆகையால் அந்த வரா கடன்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொன்னது. அதே நேரத்தில், இந்த வரா கடனில் ஒன்றான  நாராயணி முதலீடுகள் நிறுவனத்திற்கு கொடுத்திருந்த கடனை வசூலிக்க வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் பிராமல் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் எஸ் வங்கி நாராயணி நிறுவனத்திடம் இருந்து வசூலித்து இருக்க கூடிய கடன் தொகை குறையும்.

மொத்தமாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், DHFL-இன் வராகடனான ரூ. 38,100 கோடி வராது அதனால் அதற்க்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொல்லி அதை தன்னிடமே வைத்துக்கொண்டதால் அந்த வரா கடன்களில் வசூல் ஆகும் அனைத்து நிதியும் பிராமல் நிறுவனத்திற்கு லாபம். வரா கடன்களுக்கு மதிப்பே இல்லை என்று சொன்னதால் அதில் இருந்து வரும் நிதியை ஞாயமாக வங்கிகளுக்கு சென்று இருக்க வேண்டும் ஆனால் வங்கிகள் அதை கேட்கவில்லை. அந்த வரா கடனை DHFL வசூலிப்பதால் எஸ் வங்கி போன்ற வங்கிகளுக்கு மற்றொரு புறத்தில் நட்டம் ஏற்படுகிறது.

வங்கிகளுக்கு இரண்டு இடங்களில் ஏற்படும் நட்டம் என்பது பிராமல் நிறுவனத்தின் இரண்டு இடங்களில் கிடைக்கும் லாபம் என்று புரிய ராக்கெட் விஞ்ஞானி மூளை தேவை இல்லை. இவ்வாறாக DHFL நிறுவனத்தை ஏலத்தின் மூலம் கைப்பற்றியதன் மூலம் DHFL நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு உதவி இருக்கிறது பிராமல் நிறுவனம். அதே சமயம் கடன் செலுத்த முடியாமல் முடங்கி இருந்த DHFL நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுத்து இருக்கிறது பிராமல். இதற்க்கு பிராமலுக்கு கிடைத்திருக்கும் சிறு வெகுமதி தான் DHFL-இன் ரூ. 38,100 கோடி வரா கடனும், பிராமல் நிறுவனத்திடம் இருந்து வங்கிகள் பெற்றுக்கொள்ளும் ரூ. 19,550 கோடிக்கான 6.75% வட்டி தரும் கடன் பத்திரங்களும்.

மோடி ஆட்சியில் மக்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் தேசத் துரோக சட்டம் – அபிஷேக் ஹரி

இந்த தொகைகள் எல்லாம் பெரிது பெரிதாக இருப்பதால் நமக்கு அவற்றை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, DHFL மொத்தமாக கடன் வாங்கி இருந்த தொகை ரூ. 91,000 கோடி. 2022-இல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெடில் 2022-23 ஆண்டுக்கு சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 86,200 கோடி. தமிழ் நாடு மின்சார வாரியம் வாங்கி இருக்கும் மொத்த கடன் ரூ. 1,24,000 கோடி. DHFL நிறுவனத்திற்கு கொடுத்த கடன் திரும்ப வராததால் வங்கிகளுக்கு ஏற்பட்ட நட்டம் ரூ. 53,250 கோடி. 2021-22 நிதியாண்டில் கோவிட் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு செலவு செய்த மொத்த தொகை ரூ. 45,000 கோடி. பிராமல் நிறுவனம் மொத்த ஏலத்தொகையில் ரூ. 19,550 கோடியை வங்கிகளுக்கு கடன் பத்திரமாக கொடுக்கிறது, அந்த கடன் பத்திரங்களுக்கு பிராமல் கொடுக்கும் வட்டி 6.75%. நிறுவனங்களை போல மாநில அரசுகளும் கடன் வாங்குகின்றன. இந்த கடன்களுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் வட்டி விகிதம் 7%-க்கு மேல். ஆக, மற்ற இடங்களில் நாம் போராடி பெரும் தொகையை தாராளமாக எந்த சத்தமும் இல்லாமல் இந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் தூக்கி கொடுக்கின்றன

பிராமல் நிறுவனத்தின் உரிமையாளர்களான பிராமல் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் பிராமலை முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி மணந்துள்ளார் என்பது கூடுதல் தகவல். அம்பானி சம்மந்தப்பட்டுள்ளதால் தான் பிராமல் நிறுவனத்திற்கு இதுபோன்று ஜாக்பாட் வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தோன்றினால் அது தேசத்திற்கு எதிரான சிந்தனை, அதை அப்படியே அழித்துவிடுங்கள்!

இது “Piramal-DHFL: A Twist in the Sale என்ற தலைப்பில் Moneylife இணையத்தளத்தில் வந்த ஆங்கில கட்டுரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை.

 

(கட்டுரையாளர் அருண் கார்த்திக்,  ஐஐடி கான்பூரில் எம்பிஏ படித்தவர். தற்போது ஒரு மேலாண்மை கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

பிராமல் நிறுவனத்திற்கு வங்கிகளால் கொடுக்கப்பட்ட DHFL எனும் ஜாக்பாட் – அருண் கார்த்திக்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்