Aran Sei

நாகாலாந்து – கைநழுவிப் போகும் அமைதி உடன்படிக்கை, தீர்வு என்ன?

Image Credit : thehindu.com

1980 களில் நான் வடக்கு மணிப்பூரில் உள்ள சேனாபதி என்ற சிறிய நகரத்தில் வளர்ந்தேன். தேசிய நெடுஞ்சாலை 39 க்கு இணையாக (இப்போது நெடுஞ்சாலை 2 என மாற்றப் பட்டுள்ளது), பரபரப்பான கடைகள் நிறைந்த 200 மீட்டர் (கெஜம்) நீளமான வீதிதான் அதை நகரமாக காட்டியது. ஆனால் சேனாபதியின் வேடம் மாறியது. 1983 ல் அது மாவட்டத் தலைநகரமாகக் கூட ஆக்கப்பட்டது.

அதன்பிறகு மாற்றங்கள் வேகமாக நடந்தன. திரும்பிப் பார்க்கும் போது, எனது மாமா சந்தா செலுத்தி பெறும் இதழ்களின் பக்கங்களைப் புரட்டுவது போல வாழ்க்கை இருந்தது. தொலைதூர நகரத்திலிருந்து அந்த இதழ்கள் வந்ததால், அதன் செய்திகள் எங்களை வந்தடையும் போது மிகவும் பழைய செய்திகளாக இருந்தன. ஆனால் அவற்றை அவர் மிகவும் மகிழ்ச்சியோடு அனுபவித்து படிப்பார்.

உகாண்டாவில் இடிஅமீன் விந்தையையும், கம்போடியாவின் போல்பாட்டின் இழிபுகழும், அவர்களது கதைகள் முந்தைய பத்தாண்டுகளுடையதாக இருந்த போதும், ஊடகங்களைக் கவர்ந்தன. மோனாலிசா போன்ற கட்டாயப் புன்னகையுடன் இருந்த பாகிஸ்தான் அதிபர் ஜியா-வுல்-ஹக்கின் படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்த இதழ் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

ஒரு நாள் அனைத்து உலக செய்திகளும் பரபரப்பான இந்திராகாந்தியின் படுகொலைப் பற்றியே பேசின. நான் டெல்லி கலவரம் பற்றிய செய்திகளுக்காக நிரவினேன். ஆனால் அத்தகைய செய்திகள் எனக்கு வெகு தூரத்தில் இருப்பதாக தெரிந்தது- மத்திய அரசு எங்களுக்கு வெகுதூரத்தில் தானே இருக்கிறது.

சொந்த மாநிலத்தில், கடுமையான யதார்த்தங்கள் இயல்பான வாழ்க்கையை நிலைதடுமாறச் செய்யத் துவங்கின. நாகா தலைமறைவு படைகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான மோதலின் நீண்ட நிழல் பொது மக்களை வாழ்க்கையின் விளிம்பில் நிறுத்தி விட்டது. நாங்கள் அந்த நழுவிப் போகும் அமைதிக்காகக் காத்திருக்கையில், அந்த நிழல் இன்று வரை தொடர்ந்து எங்களைத் துரத்தி வருகிறது.

அமைதியின்மையும், அமைதியும் நிரம்பிய கட்டங்கள் நிரம்பிய எங்கள் வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம் அனைத்தையும் அசைத்துவிடும். என்னை ஆழமாக பாதித்த, நான் நேரில் கண்டு அனுபவித்த
ஒரு நிகழ்வுதான் ஒய்நாம் நிகழ்வு அல்லது இழிபுகழ் வாய்ந்த “நீலப்பறவை நடவடிக்கை (Operation Bluebird)”.

இராணுவ பற்றிய அச்சம்

1987, ஜூலை 9-ம் நாள் நாகா சோசலிச கவுன்சில் (NSCN) இராணுவத்தின் ஒய்நாம் மலை முகாமைத் தாக்கியதில் இழந்த ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் மீட்பதற்காக இந்திய இராணுவத்தின் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவு நீலப்றவை நடவடிக்கையை எடுத்தது. அது பொது மக்களை தாக்குதலின் இலக்காக்கிய போது மோசமான திருப்பத்தை அடைந்தது.

அடுத்த மூன்று மாதங்கள், ஒய்நாமைச் சுற்றியுள்ள 30 கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், அரசியல்வாதிகளும் கூட மக்களை சந்திக்கத் தடை விதிக்கப்பட்டது. தேவாலயங்களும், சமூகக் கூடங்களும் தற்காலிக விசாரணை முகாம்களாகின. ஆண்கள் விசாரிக்கப்பட்டனர், சித்ரவதைகளும், பாலியல் வன்கொடுமைகளும், நடந்ததாகக் கூறப்படுகிறது. அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த “படைவீரர்கள்” என்ற ஒற்றைச் சொல்லே போதுமானதாக இருக்கும் அளவு இராணுவ பயம் இருந்தது. உண்மையில், இன்றும் கூட குழந்தைகளை அமைதிப்படுத்த ” படைவீரர்கள் வருகிறார்கள்” என்ற வார்த்தை போதுமானதாக உள்ளது.

1980, 90 களில் நடந்த நிகழ்வுகள் இராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள, மிகக் குறிப்பாக 1958-ம் ஆண்டின் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அளித்துள்ள சட்டப் பாதுகாப்பு குறித்து என்னுள் தீவிரமான கேள்விகள் எழுந்தன. அந்தச் சட்டம் கைது ஆணை இல்லாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்ய அவர்களுக்கு உரிமை வழங்குகிறது, அவர்களால் நேர்ந்த இறப்புகளுக்கும், காயங்களுக்கும் அவர்கள் விளக்கம் தரத் தேவையில்லை; அவர்கள் முரட்டுத்தனமாக வலிமையைப் செலுத்தலாம்.

இதில் முரண்பாடு என்னவென்றால், அவர்கள் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவே இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்குக் கிடைக்காதது பாதுகாப்புதான். இராணுவ அணிவகுப்பும், சீறிப்பாய்ந்த வாகனங்களும் எழுப்பிய மாபெரும் புழுதி என் சொந்த கிராமத்தின் யதார்த்தங்களைத்தான் மேலும் மேலும் சிதைத்தன. என் முதல் நாவலான ‘புழுதிகள் அடங்கக் காத்திருக்கிறேன் (பேசும் புலி 2020)’ ல் நான் இந்த ஆண்டுகளை சித்தரிக்க முயற்சித்தேன்.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம்தான் கிளர்ச்சியின் துவக்க ஆண்டுகளில் மிக் கரிய நிழலாக இருந்தது. 1960-ல் சோசலிசத் தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணன், ஆங்கிலேயக் தூதர் மைக்கேல் ஸ்காட்டு ஆகியோர் முதல் அமைதி உடன்படிக்கை ஏற்பட இடையீட்டாளர்களாக இருந்தனர். ஜெயபிரகாஷ் நாராயணன் அரசு நாகா பிரச்சனையை கையாள்வதை “இந்தியாவின் வியட்நாம்” எனக் குறிப்பிட்டார். நாகா மக்களை இரக்கமற்று நடத்துவதையும், அவர்கள் மீதான பரந்த அளவிலான மனித உரிமை மீறல்களையும் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஒட்டு மொத்த கிராமமும் தீக்கிரையாக்கப்பட்ட கோரமான காட்சிகளும், தங்கள் சொந்த நிலத்திலேயே பாதுகாப்பு தேடிய அவலமும், இடைவிடாத தொடர் மழையில் காடுகளில் வாழ வேண்டி வந்ததன் வலியும், தங்கள் அன்பு சொந்தங்கள் தங்கள் கண்முன்னே இறந்ததால் ஏற்பட்ட மன அதிர்ச்சியும், பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமலே போய்விட்டன. ஆனால் அந்த அனுபவங்கள் மக்களின் நினைவுகளில் வாழ்கின்றன. இந்தக்கால தலைமுறையினர் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுக்குள்ளேயே இருக்கும் எதிரி

கெடுவாய்ப்பாக மக்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக மாறியதால் நாகா போராட்டம் ஒரு மோசமான திருப்பத்தை சந்தித்தது. போராட்டப் பாதையில் இடையே வந்த கருத்தியல் வேறுபாடுகள் தேசியவாத தலைமறைவு குழுக்களிடையே குறுங்குழுவாதத்திற்கு வழிவகுத்தன. பிளவுபட்ட குழுக்களுக்கிடையிலான மோதல்கள் அதிக இரத்தத்தைச் சிந்தச் செய்ததுடன், மேலும் அதிர்ச்சிகளையும் கொண்டு வந்தன. இதனால் மீண்டும் மக்கள் துன்பத்தைச் சுமந்தனர்.

போராட்டத்தின் துவக்க ஆண்டுகளில் எதிரி வெளியிலிருந்தான். இயக்கத்தின் நடுவழியில் உள்ளுக்குள் வளர்ந்த எதிரி மிக பயங்கரமாக, பெரிதாக வளர்ந்தான்.இன்று, நீடித்து வரும் இந்த மோதல்கள் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக மாறி உள்ளன. அது மிகப்பெரிய மனித பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் பெரிதாக பேசப்பட்ட, “கிழக்கை நோக்கிய கொள்கை” அதன் தொடர்ச்சியாக “கிழக்கில் செயல்படும் கொள்கை” ஆகியவை மூலமாக மத்திய அரசு வடகிழக்கு இந்தியாவுக்கான தனது திட்டங்களை புகுத்துகிறது. அத்தகைய அரசியல் தீர்வு அற்ற பொருளாதார அறிவிப்புகள் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அடங்கிய புதிய குழுக்களை மட்டுமே வளப்படுத்தின. அரசியல் தீர்வு காண மிகப்பெரும் தடையாக இருப்பது இராணுவ சிறப்பு அதிகார சட்டம். மக்கள் மனதில் அரசியல் அநீதி இழைக்கப்படும் உணர்வு நீடிக்கும் வரை ஆறுதலும், அமைதியும் தொலை தூரக் கனவாகவே இருக்கும்.

இந்த அடிப்படையில்தான் ஒரு ” கௌரவமான தீர்வை” அடைவதற்கான முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருவதாக நான் நம்புகிறேன். 2015 ல், நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (NSCN) உடனான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட போது, அது நாகா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் என உயர்ந்த எதிர்பார்ப்பு இருந்தது. “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி உடன்பாடு” என்று கூறப்பட்ட அதில் கையெழுத்திட்டவுடன் மோடியும், என்எஸ்சிஎன் தலைவர் துங்கலெங் முய்வாவும் சிரித்த முகத்துடன் கூடிய புகைப்படங்கள் ஊடகங்களில் காட்டப்பட்டன. அரசு தரப்பு செய்தி அறிக்கை ” நாட்டின் மிகப் பழமையான கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டு வரும்” என நம்புவதாக தெரிவித்தது. வடகிழக்கில் அமைதி என்பது நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் பங்கு இல்லாமல் வராது என்பதை அரசு புரிந்து கொண்டதன் விளைவுதான் 2015 உடன்பாடு. 1997-ல் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதி முடிவுதான் இந்த உடன்பாடு.

ஆனால் இப்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அமைதி எப்போதும் போலவே நழுவிப் போய்க் கொண்டே இருக்கிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் முரண்பட்டு நிற்பதால் உண்மையில், 2015-ம் ஆண்டு உடன்பாடு முறிவடையும் நிலையில் உள்ளது.

தவறவிடப்பட்ட பல காலக் கெடுக்களுக்குப் பின் நாங்கள் மீண்டும் ஒரு காலக் கெடுவிற்கு காத்திருக்கிறோம். பலரது மனதிலும் மீண்டும் எழும் கேள்வி, உண்மையில் இந்த உடன்பாடு தெற்காசியாவின் மிகப்பழமையான கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருமா? அல்லது அது காலத்தின் சோதனையில் தோல்வியுறும் மற்றுமொரு உடன்பாடாக இருக்குமா? என்பதுதான். பல பத்தாண்டுகளாக இது போன்ற உடன்படிக்கைகள் எத்தனையோ தூசி படிந்து கொண்டிருக்கத்தான் செய்கின்றன.

இறுதித் தீர்வு

எப்போதும் இது போல் ஒரு அசைவற்ற தேக்க நிலை வரும்போது, இறுதித் தீர்வுக்காக நீண்ட காலமாகக் காத்துக் கொண்டிருக்கும் முதிய தலைமுறையினருக்காக நான் வருந்துவேன். நான் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவன். நானும் “கௌரவமான தீர்வுக்காக” காத்திருக்கிறேன். மிக அதிகமான உயிர்கள் இழுக்கப்பட்டுவிட்டன. மிக அதிகமான இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. இன்னும் எத்தனை காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்?

நாகா மக்களிடையே அமைதிக்கான ஒரு தொடர்ந்த ஏக்கம் உள்ளது. குடிமை அமைப்புகளும், தேவாலயங்களும் நாகா குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தத் தீவிரமான ஈடுபாடு காட்டி வருகின்றன. ஆனால் காயங்கள் மிகவும் ஆழமானவை. ஆறுவதற்கு சிறிது காலம் ஆகும்.

நாகா நல்லிணக்க மன்றத்தின் தோற்றம், மன்னிப்பு மற்றும் “பொது நம்பிக்கைக்கான ஒரு பயணம்” என்ற பதாகையின் கீழ் நாகா குழுக்களிடையேயான ஒற்றுமைக்கான அதன் அழைப்பு ஆகியவை ஒரு சாதகமான அறிகுறியாகும். “இனியும் இரத்தம் சிந்த வேண்டாம்” என பரப்புரை செய்து வரும் நாகா தாய்மார்களின் சங்கம் நாகா மக்களிடையே அமைதிக்காக பேசி வருகிறது. இதுபோன்ற அமைப்புகள்தான் உண்மையாக “அமைதி உருவாக்குபவர்கள்.”

தி இந்து இணையதளத்தில் Veio Pou எழுதியூள்ள கட்டுரையின் மொழியாக்கம்.

நாகாலாந்து – கைநழுவிப் போகும் அமைதி உடன்படிக்கை, தீர்வு என்ன?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்