Aran Sei

இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி

Credit : https://www.dtnext.in/

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக சமூகத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு திமுக கலை இலக்கியம் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி மா உமாபதி அரண்செய்க்கு அனுப்பிய பதில்கள்

இந்தி எதிர்ப்பு ஏன்?

மன்னிக்கவும். தமிழ்நாட்டில் யாரும் இந்தியை எதிர்க்கவில்லை இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தி மொழி இந்தியாவில் உள்ள மற்ற மொழிகள் போல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்காள மொழிகளைப் போன்று, இந்தியும் எங்களுக்கு ஒரு சகோதர மொழிதான். நாங்கள் அதை எதிர்க்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்தியை எதிர்ப்பது என்றா்ல இந்தித் திரைப்படங்களை எதிர்த்தோமா? இந்திப் பாடல்களை, இசையை வெறுத்தோமா? இந்தி பேசும் மக்களை வெறுத்தோமா? ஏன்… இந்தி பிரச்சார சபையை எதிர்க்கிறோமா? இன்னும், இந்தி கற்றுத் தரும் CBSE பள்ளிகளை எதிர்க்கிறோமா? இல்லை.

ஆனால் இந்தியைக் கட்டாயம் படித்தாக வேண்டும். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி. “இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல.” “இந்திய ஒன்றிய அரசுப் பணிகளுக்கு செல்ல கட்டாயம் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.” இந்தி தெரியாதவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்காது” என்னும் போக்கினைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்தி கற்றுக் கொண்டால் என்ன குறைந்து விடும்? கூடுதலாக ஒரு மொழி கற்றுக் கொள்வது நல்லதுதானே?

முதலில் இந்தி என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அசாம் முதல் ராஜஸ்தான் வரை உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான். கூடுதலாக அதற்கு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை. மக்கள் வரிப்பணத்தில் ஒரு மொழிக்கு மட்டும் தனிச்சலுகை காட்டுவது முறையல்ல; சரியில்லை, நியாயமில்லை.

இந்தியைபரப்ப சிறப்பு கவனம் செலுத்துவதும், சிறப்பு சலுகைகள் வழங்குவதும், சிறப்பு நிதி ஒதுக்குவதும் என்ன நியாயம்? எல்லா மொழிகளுக்கும் – சம வாய்ப்பும் சம தகுதியும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இந்தி – இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி – ஆதலால் இந்திக்கு கூடுதல் சலுகை வழங்கினால் என்ன தவறு?

இந்தி பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது என்பதே கட்டுக்கதை. பீகாரில் பேசப்படும் போஜ்புரி, மைதிலி மொழிகளையும், ராஜஸ்தானில் பேசும் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி மொழிகளையும், மத்திய பிரதேசத்தில் பேசப்படும் மால்வி, நிமதி, அவதி மொழிகளையும், ஹரியானாவில் பேசப்படும் ஹரியாணி மொழியையும் காஷ்மீரத்தில் உள்ள காஷ்மீரி, லடாகி மொழிகளையும், சத்தீஸ்கரில் உள்ள சத்தீஸ்கரி, கோர்பா மொழிகள் என அனைத்து மொழிகளையும் விழுங்கி ஜீரணித்து விட்டு அம்மக்களை இந்தி பேசுவோராகக் கணக்கெடுத்து சொல்லப்படுகின்ற போலிப் பெரும்பான்மை அது.

அது மட்டுமல்ல எல்லாவற்றையும் பெரும்பான்மை கொண்டு தீர்மானிக்க முடியாது. பெரும்பான்மையைக் கொண்டு தீர்மானிப்பது என்றால், புலி இந்தியாவின் தேசிய விலங்காக இருக்க முடியாது. எலிதான் இருக்க முடியாது. அதுதானே எண்ணிக்கையில் அதிகம். இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் இருக்க முடியாது. காக்கைதானே தேசியப் பறவையாக இருக்க முடியும்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை – ஒற்றுமையை மனதில் கொண்டு இந்தி கற்கக் கூடாதா?

இந்தியா என்பது ஒரே நாடு அல்ல. அது பல்வேறு மொழிகளையும் கலாச்சாரங்களையும் கொண்ட பல்வேறு நாடுகள், பல்வேறு சமஸ்தானங்களின் இணைந்த ஒன்றியம். It is an union of states. அந்தந்த நாடுகள், அந்தந்த மொழிகள், அந்தந்த கலைகள், கலாச்சாரங்கள் பேணிப் பாதுகாப்பதுதான் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வழியே தவிர, ஒரு மொழியை மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தச் சொல்வது ஒற்றுமையை சிதைக்குமே தவிர இணைக்காது.

இந்தி படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமே! அதற்காகவாவது இந்தியைப் படிக்கக் கூடாதா?

இன்றைய அளவில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதனை சந்து முனையில் நின்று சிந்து பாடுகின்ற யாரோ ஒரு அனாமதேயம் கூறியதல்ல. இந்தியாவில் வெற்றிகண்ட தலைசிறந்த தொழில் முனைவோராகக் கருதப்படும் திரு. சுரேஷ் சம்பந்தன் கூறுகிறார்.

இந்தியை தாய்மொழியாகக் கொண்டு இந்தி படித்தவர்கள் எல்லாம் வேலைவாய்ப்பு தேடி தமிழகத்திற்கு படையெடுக்கிறார்களே தவிர, வடநாடு – இந்தி படித்து வருகின்ற தென்னாட்டவருக்கு வேலை வாய்ப்பு தருகின்ற நிலையில் இல்லை. இந்தி படித்தவர்கள் வட இந்தியாவில் பிழைக்க முடியாமல் தமிழ்நாட்டில் வந்து பானி பூரியும் சோன்பப்டியும், பான் மசாலாவும் விற்றுப் பிழைக்கின்றனர். கைவிரல்களில் பத்து இருபது பூட்டுகளை மாட்டிக் கொண்டு பூட்டு வணிகம் செய்கின்றனர். சைக்கிள்களின் ஜமக்காளங்களை, போர்வைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்கின்றனர். தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில்களில், ஈரோடு, திருப்பூரில் விசைத்தறி, பனியன் தொழிற்சாலைகளில் பல்லாயிரம் வடநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வட இந்தியாவில் இவ்வாறு நமது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு தருகின்ற சூழ்நிலை எதுவுமே இல்லை.

இந்தி தெரியாததால் நமது வேலைவாய்ப்பு எதுவும் கெட்டுப் போகவில்லை. இதனை கொரோனா காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய வட மாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கையையும் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய நமது தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.

அவ்வளவு ஏன்? பள்ளிகளில் இந்தி கற்காத அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும், சிவனும், சதாசிவமும் இந்தியாவின் ஆகப்பெரிய பொறுப்புகளான குடியரசு தலைவர், விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிகளுக்கு செல்ல முடிந்ததே. இந்தி தெரியவில்லை என்று யாருக்கு என்ன குறைபாடு நேர்ந்து விட்டது?

இந்தியில் கவனத்தை சிதற விடாமல் ஆங்கிலத்தை சரியாகக் கற்றுக் கொண்ட காரணத்தால்தான் இன்று தமிழர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் வல்லுநர்களாக உலகமெங்கும் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர். இந்தி படிக்காததால் எதுவும் குறைந்து விடவில்லை.

அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்கிறீர்கள்? இந்திய மொழியான இந்தியை மறுக்கிறீர்களே! சரிதானா?

இந்தி நம்மை ஆதிக்கம் செய்யும் மொழி. மேலும், அதனைக் கற்பதால் அறிவியலில், பொறியியலில் மருத்துவத் துறைகளில் மேம்பட வழியே இல்லை. வடநாடு வேலை நிமித்தம் யார் செல்கிறார்களோ அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மொழி. தேவைப்படுகிறவர்கள் நான்கு வாரத்தில் இந்தியைக் கற்றுக் கொள்ள முடியும்.

பொள்ளாச்சி உமாபதி
பொள்ளாச்சி மா உமாபதி

மாறாக ஆங்கிலம் – நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் – பிரிட்டிஷ்காரர்கள் மொழி மட்டுமல்ல. அது அமெரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பிய கண்டங்கள் என உலக நாடுகள் முழுவதும் பேசி பயன்படுத்தப்படும் உலக பொது மொழி. இதுவரையில் ஆங்கிலத்தைப் புறக்கணித்த சீனாவும் ஜப்பானும் ஜெர்மனியும் பிரான்சும் இன்று உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் கற்கத் தொடங்கி விட்டன். ஆங்கிலம் ஒரு அறிவியல் மொழி, மருத்துவம், பொறியியல், விண்வெளி, தகவல் தொடர்புத் துறையில் வேலை வாழ்ப்புகளையும் துறை சார்ந்த அறிவியல் நூல்களையும் வாரி வழங்குவது ஆங்கிலம். உலக மொழி இலக்கிய நூல்களனைத்தும் இன்று ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் ஆங்கிலம் மூலம் அவற்றை அறிய முடியும்.

ஆக மேற்கூறிய அனைத்துக் காரணங்களுக்காகவும்தான் தமிழ்நாட்டு மக்கள் 1938 தொடங்கி இன்று வரை தந்தை பெரியார், தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தரம் பாரதியார், உறந்தை உமாமகேசுவரனார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் எதிர்த்து வருகிறோம்.

தாலமுத்து நடராசனில் தொடங்கி, கீழப் பழுவூர் சின்னச்சானி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், கோவை தொண்டாமுத்தூர் தண்டபாணி, நரசிபுரம் பால சுப்பிரமணியம், மாணவர் சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட பலரும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். தமிழ்நாடெங்கும் பல இடங்களில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய பின்னரும் இன்னமும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்னும் கந்தக வெடிமருந்து நீர்த்துப் போகாமல் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இந்தி வேண்டுமா? இந்தியா வேண்டுமா? இந்திதான் வேண்டுமென்றால் இந்தியாவை மறந்துவிட வேண்டி இருக்கும். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழிதான் என்றா்ல அசோகச் சக்கரத்தின் ஆரக்கால்கள் பிய்த்து எறியப்படும். 22 மொழிகளும் தேசிய மொழிகளாக மட்டுமல்லாது ஆட்சி மொழிகளாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதுதான் இந்திய ஒற்றுமைக்கான வழி.

– பொள்ளாச்சி மா உமாபதி
மாநிலச் செயலாளர்
திமுக கலை இலக்கியம் பகுத்தறிவுப் பேரவை

இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா?  – பொள்ளாச்சி மா உமாபதி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்