Aran Sei

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

Credit: The Telegraph India

பாபர் மசூதி இருக்கின்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார். அங்கே ராமர் கோயில் இருந்தது. அதை இடித்துவிட்டு தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று இந்துத்துவ அமைப்புகள் ஒரு கருத்தை முன்வைத்த நிலையில் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு  ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வந்தது. அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் ஆகவே பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும் 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதற்குப் பிறகு, பாபர் மசூதியை இடித்தது  தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று 2020-ல் லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஞானவாபி மசூதியில் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க கால அவகாசம் வேண்டும் – நீதிமன்றத்தில் ஆய்வு குழு கோரிக்கை

இந்த இரண்டு தீர்ப்புகளும் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஒரு ஊட்டச்சத்தைக் கொடுத்தன என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த உற்சாகத்தில் அடுத்து எங்கள் குறி வாரணாசியில் இருக்கும் கியானவாபி மசூதியும் மதுராவில் இருக்கும் ஈத்கா பள்ளிவாசலும் தான் என்று அவர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள். அப்படி சொன்னதோடு மட்டுமில்லாமல் அதை செயல்படுத்தவும் செய்தார்கள்

கிருஷ்ணர் பிறந்த இடம் என்று நம்பப்படுகின்ற மதுராவில் கேசவதேவ் கோயிலை இடித்துவிட்டுதான் ஈத்கா பள்ளிவாசல் கட்டியதாக இந்துத்துவ அமைப்புகள் சொல்லி வருகிறார்கள். 1669 ஆம் ஆண்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின் பேரில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

ஆகவே, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட போன்று ஈத்கா பள்ளி இருக்கின்ற இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று உத்தரவிடக் கோரி ஒன்பது பேர் வழக்கு தொடுத்தார்கள் .

ஞானவாபி மசூதி: சிவலிங்கம் இருப்பதாக கூறி குளத்தை மூடுவது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் – அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம்

இந்த வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வழக்குகளை மதுரா நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்குகள் எல்லாவற்றையும் 4 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த வாரம் மதுரா நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்துத்துவ அமைப்புகள் குறிவைத்த மற்றொரு மசூதியான வாரணாசி கியானவாபி மசூதியில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது இப்பொழுது சர்ச்சையைக் கிளப்பியது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது.  இதற்குப் பக்கத்திலேயே கியானவாபி மசூதியும் காலம் காலமாக இருந்து வருகிறது.

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

2021ல் காசிவிஸ்வநாதர் கோவில் சார்பாக விஜய் சங்கர் என்பவர் உட்பட 5 பேர் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கில் கியானவாபி மசூதி இருக்கின்ற நிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறினார்கள். மதுராவில்  எப்படி கேசவ்தேவ் கோவிலை இடித்துவிட்டு இப்பள்ளியை கட்டுவதற்கு கோரினார்களோ அதேபோல் காசி விஸ்வநாதர் கோவிலுடைய ஒரு பக்கத்தை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்ட அவுரங்கசீப் உத்தரவிட்டிருந்தாரோ அதே போல கியானவாபி மசூதியை  கட்டுவதற்கும் அதே அவுரங்கசீப் உத்தரவிட்டார் என்கிற ஒரு வாதத்தை முன் வைத்தார்கள்.

இதைத் தொடர்ந்து 2021 ஏப்ரல் 8ஆம் தேதி இந்த மசூதியைச் ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திற்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 5 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. மசூதிக்கு உள்ளே வேறு எந்த மதத்தவருடைய தெய்வங்களோ அல்லது வழிபாட்டுத் தலமும் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்கும் அப்படி இருக்கும் நிலையில் அந்த கட்டமைப்பு அல்லது சிலையுடைய காலத்தையும் கண்டுபிடிப்பதுதான் அந்த குழு உடைய பணியாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்துக் கியான் வாப்பி மசூதி நிர்வாகம் சார்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது 1991 இல் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தைச் சுட்டிக்காட்டி சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு மசூதி நிர்வாகம் தடை கோரியது.

வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டத்தில், 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எல்லா மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களும் எப்படி இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் கொண்டு வரக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், வழிபாட்டுத் தலங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று யாரும் வழக்கு தொடர முடியாது என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த சமயம் பாபர் மசூதி தொடர்பாக ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்ததால் அந்த விவகாரத்திற்கும் மட்டும் இந்த சட்டத்தில் விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

கியானவாபி மசூதி நிர்வாகம் இந்த சட்டத்தைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து; அலகாபாத் உயர் நீதிமன்றம் சிவில் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால், கியானவாபி மசூதியில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடைய ஆய்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், வாரணாசியை சேர்ந்த லஷ்மி தேவி, சீதா சாஹூ, மஞ்சு வியாஸ், ரேகா பதக், டெல்லிய சேர்ந்த ராக்சி சிங் ஆகிய  ஐந்து பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கியானவாபி மசூதியின் வளாகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கிற ஒரு சுவற்றில் ஷிரிங்கர் கவுரி தேவி, விநாயகர், ஹனுமன் மற்றும் நந்தி உருவங்கள் இருப்பதாகவும் அதை தினமும் வழிபடுவதற்கு மசூதி நிர்வாகம் தடை ஏற்படுத்த கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்கள்.

அயோத்தியும் ஆம் ஆத்மியும்: கெஜ்ரிவாலும் இந்துத்துவாவும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிகுமார் திவாகர், மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கும் அதை வீடியோ எடுப்பதற்கும் உத்தரவிட்டார். மேலும், இந்தப் பணியைச் செய்வதற்காக வழக்கறிஞர் குமார் மிஸ்ரா என்பவரை குழுவின் ஆணையராக நியமித்தார்.

சிவில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் இந்த முறை சிவில் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து கமிஷனர் அஜய்குமார் மிஸ்ரா, மே மாதம் முதல் வாரத்தில் கியானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை செய்யத் தொடங்கினார். இந்த சமயத்தில் வழக்கு தொடுத்தவர்கள் அளித்த  அழுத்தத்தின் காரணமாக கமிஷனர் குமார் மிஸ்ரா ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று மசூதி நிர்வாகம் சார்பாக நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, மிஸ்ராவுக்கு பதிலாக வேறு ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையைச் சிவில் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துவிட்டார். அதற்குப் பதிலாக அஜய்குமார் மிஸ்ராவுக்கு உதவியாக விஷால் சிங், பிரதாப் சிங் ஆகிய மேலும் இரண்டு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்து உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

‘உங்கள் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடுங்கள்’ – சமூகச் செயற்பாட்டாளர் காஞ்சன் நானாவேரின் கடைசி நிமிடங்கள்

இதைத் தொடர்ந்து மீண்டும் ஆய்வுப் பணியும் அதை காணொளி எடுக்கிற பணியும் தொடர்ந்தது. வழக்கு தொடர்ந்த பெண்கள் கியானவாபி மசூதியுடைய மேற்குப் பகுதியில் இருக்கும் சுவற்றில் தான் தெய்வங்களுடைய உருவங்கள் இருப்பதாகவும் ஆகவே அதை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார்கள்.  இந்நிலையில் மேற்குப்பகுதி சுவர் பகுதியில் ஆய்வுகளை முடித்த வழக்கறிஞர் குழு மசூதிக்கு உள்ளேயும் ஆய்வு செய்ய வேண்டும் அதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டபோது மசூதி நிர்வாகம் தரப்பில் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மசூதிக்குள் ஆய்வு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று நிர்வாகம் கூறியதைத் தொடர்ந்து மீண்டும் இந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு வந்தது.  அந்த சமயம் மசூதி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் மசூதிக்கு உள்ளேயும் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து மசூதி நிர்வாகம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மே 13ஆம் தேதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய அமர்வில் மசூதி நிர்வாகம் சார்பாக முறையிடப்பட்டது.ஆய்வு  மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்குபற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய தலைமை நீதிபதி ரமணா உடனடியாக தடை விதிக்க முடியாது என்று கூறினார்.

அப்பொழுது, மசூதி நிர்வாகம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹூசேஃபா, மத வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு சட்டத்தைச் சுட்டிக்காட்டி வழிபாட்டுத் தலங்களை மாற்றக் கோரி வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்தார். இருந்தபோதும் தலைமை நீதிபதி ரமணா ஆய்வு செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.  மேலும் இந்த வழக்கை விரைவாக விசாரிப்பதாக உறுதியளித்தார்.

வழிபாட்டுத்தலங்களுடைய தற்போதைய நிலையை மாற்ற கோரி யாரும் வழக்கு தொடர முடியாது. மத வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் தெளிவாக கூறியிருந்த போதும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கியானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்கு தடை விதிக்க மறுத்தது.

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

மறுபுறம் சர்ச்சைக்குரிய சுவற்றை தாண்டி மசூதிக்குள் ஆய்வு செய்து அதை படம் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மசூதி நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையைச் சிவில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கறிஞர் குழு ஆணையர் ஒரு சார்புடன் செயல்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து மே 14, 15 ஆம் தேதிகளில் கியானவாபி மசூதிக்குள் கமிஷனர் வழக்கறிஞர்கள் குழு, காவல்துறையின் பலத்த பாதுகாப்போடு ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.  இந்த ஆய்வில் மசூதிக்கு கீழே இருந்த மூன்று அறைகள், மூன்று மாடங்கள் மற்றும் தொழுகைக்கு முன்னர் முகம், கை, கால்களைக் கழுவுகிற சிறிய தொட்டி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மசூதி தொட்டிக்குள் சிவலிங்கம் இருந்ததாக வழக்கு தொடர்ந்த பெண்கள் சார்பாக ஆய்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர் சுபாஷ் சவுதரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த தொட்டியை யாரும் பயன்படுத்தாத வகையில் அதற்குச் சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆய்வின் முடிவை குழு  ஆணையர் தான் நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என்கிற உத்தரவு இருக்கும்போது, தொட்டியில் சிவலிங்கம் இருந்தது என்று நீதிமன்றத்தின் குழுவில் இடம்பெற்ற ஒரு வழக்கறிஞர் எப்படி தனியாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார் என்பதும் அதை நீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொண்டது என்பதும் பெரிய கேள்வியாக இருக்கிறது.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

இந்நிலையில், மத வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டத்தை மீறிக் கியானவாபி மசூதியில் ஆய்வுகள் நடத்தப் பட்டதாக எம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.  இந்த சட்டத்தை மீறியவர்களுக்கு 3 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளது.

ஏற்கனவே பாபர் மசூதியை இழந்துள்ளோம் இனியொரு மசூதியை இழக்க மாட்டோம் என்றும் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

Gyanvapi Shivling Found – Justice Hari Paranthaman Interview | Varanasi Gyanvapi Masjid Issue

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்