திரேந்திர கே ஜாவின் ‘காந்தியைக் கொன்றவர்: நாதுராம் கோட்சே மற்றும் அவரது “இந்தியா பற்றிய கருத்து”’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி. (அவருடைய அனுமதியுடன் இந்தப் பகுதி எடுக்கப்பட்டது)
[நாதுராம்] கோட்சே [வி.டி] சாவர்க்கரைச் சந்திக்கச் சென்றது பற்றியோ, அறிமுகச் சந்திப்பை யார் ஏற்பாடு செய்தார்கள் என்பது பற்றியோ குறிப்பிட்ட பதிவு எதுவும் இல்லை. கோட்சேவின் சகோதரர் கோபாலின் கூற்றுப்படி, 1929 இல் ரத்னகிரிக்கு சென்ற தருணத்தில் கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இடையே ஒரு அமைதியான தொடர்பு வளர்ந்ததாகத் தெரிகிறது.
“நாங்கள் முதன்முதலில் ரத்னகிரிக்கு வந்தபோது இப்போது நாங்கள் தங்கியிருந்த இடம்தான் சாவர்க்கர் தங்கியிருந்த இடம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதன்பிறகு அவர் அதே தெருவின் மறுமுனையில் உள்ள மற்றொரு வீட்டிற்கு மாறினார், ” என்று கோபால் விவரித்தார்.
கோட்சேவின் இளமைப் பருவத்தில் சாவர்க்கர் அவர் அறியாத நபராக இருந்தார். ஆனால் அவரது குடும்பம் ரத்னகிரிக்கு குடிபெயர்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சாவர்க்கருடனான அவரது முதல் சந்திப்பே, அவருக்கு சாவர்க்கர் ஒரு உத்வேகம் அளிப்பவராகத் தோன்றச் செய்தது. இருப்பினும், சாவர்க்கரை முழுமையாகப் பின்பற்றுபவராக கோட்சே மாறியதற்கான நம்பகமான சான்றுகளில் பெரும்பாலானவை 1930 இன் ஆரம்ப மாதங்களில் இருந்தே உள்ளன.
கோட்சே சாவர்க்கரை முதன்முதலில் சந்தித்தபோது அவருக்கு வயது பத்தொன்பது. அவர் ஒல்லியாக இருந்தாலும், அவரை விட உயரமான சாவர்க்கரை விட ஆரோக்கியமாக இருந்தார். அவரது நடத்தையில் கோட்சே கட்டுப்பாடானவராகவும் அமைதியாகவும் மரியாதைக்குரியவராகவும் இருந்தார். அந்தமானில் பத்தாண்டுகளைக் கழித்து விட்டுத் திரும்பிய சாவர்க்கரை அவர் ஒரு புரட்சியாளராக கண்டு மயங்கினார்.
கோட்சேவின் அரசியல் நம்பிக்கைகள் என்று ஏதேனும் இருந்திருப்பதாக கூறினால் அவை தெளிவற்றதாகவே இருந்தன. காங்கிரஸ் தலைமையிலான ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களில் அவர் பங்கேற்கத் தொடங்கியிருந்தாலும், அவற்றில் சிலவற்றில் உரையாற்றியிருந்தாலும் கூட, அவை அனைத்தும் காலனித்துவ ஆட்சிக்கு எதிரானதாகவே இருந்தன. அடிப்படையில் அவர் தனது சொந்த எதிர்காலத்தைப் பற்றி இன்னும் தீர்மானிக்காத ஒரு தனி நபராகவே இருந்தார். ஆயினும்கூட, அவர் இந்த அரசியல் நடவடிக்கைகளில் இருந்து உற்சாகமூட்டும் அவசரத்தை விரும்பியதுடன், சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் .தயாராக இருந்தார்.
கோட்சேவை சாவர்க்கரைப் பின்பற்றுபவராகவும், தீவிரமான இந்துத்துவாவாதியாகவும் மாற்றுவது சுமுகமாக நடைபெறவில்லை. ஆரம்பத்தில் அவரது சொந்த கேள்விகளுக்கு இந்து வகுப்புவாத தத்துவத்தின் இயற்கைக்கு மாறான விளக்கங்கள் சிறிதும் பதிலளிக்கவில்லை.
“பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற காந்தியின் அழைப்பின் பேரில், மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு மீண்டும் வருவதில்லை என்ற எனது முடிவைப் பற்றி நான் அவரிடம் தெரிவித்தபோது அவர் [சாவர்க்கர்] எரிச்சலடைந்ததாகத் தோன்றியது,” என்று கோட்சே பிற்காலத்தில் கூறினார். “இரண்டு அல்லது மூன்று முறை அவர் என் முடிவை மாற்றிக்கொள்ளும்படி என்னை வற்புறுத்த முயன்றார். என் படிப்பைத் தொடர்வது எவ்வளவு முக்கியம் என்றும் வலியுறுத்திக் கூறினார்.”
சாவர்க்கரின் ஆலோசனை ஒரு பெரியவரின் நல்ல அர்த்தமுள்ள அறிவுரையாகத் தோன்றலாம். ஆனால் அந்த நேரத்தில் இந்தியா அனுபவித்துக் கொண்டிருந்த பெரும் எழுச்சியிலிருந்து, தனது ஆதரவாளர்களை விலக்கி வைக்கும் அவரது ஆர்வத்தின் அடிப்படையில், அது அவ்வாறு பொருளுடையதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இதன் பிறகு கோட்சே தனது முடிவில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டார். இதன் மூலம் ஆங்கிலேயர் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் முகாமில் இருந்து கோட்சேவை வெளியேற்றுவதற்கான சாவர்க்கரின் முதல் வெளிப்படையான முயற்சியை கோட்சே முறியடித்தார்.
கோட்சேவின் ஆரம்ப எதிர்ப்பு, அவர் தொடக்கத்தில் தனது மனமாற்ற அனுபவத்தைப் பற்றி சுயநினைவுடன் இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் அது விரைவில் முறிந்தது. மகாராஷ்டிராவின் முன்னாள் பிராமண ஆட்சியாளர்களான பேஷ்வாக்களின் வரிசையின் உண்மையான தொடர்ச்சியாகப் பலரால், குறிப்பாக சித்பவன் பார்ப்பனர்களால், காணப்பட்ட ஒருவருடன் அவர் நெருக்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம்.
சாவர்க்கரைப் போலவே, கோட்சேவும் பேஷ்வாக்களின் வாரிசுகள் என்று தங்களைக் கருதிக் கொண்ட பார்ப்பனர்களின் இந்த உயரடுக்கு துணைக்குழுவிலிருந்து வந்தவர். அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்ட சாதிப் பிணைப்பு, அவரது பார்வையில், மற்ற இந்துக்களை விட அவருக்கு ஒரு குறிப்பிட்ட மேன்மையைக் கொடுத்ததாகத் தெரிகிறது..
பார்ப்பனர்கள் பாரம்பரியமாக அனுபவிக்கும் வழக்கமான புரோகித சலுகைகளைத் தவிர, போர்க்களத்தில் வீரத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகக் கூறும் இந்தியாவின் ஆரிய பார்ப்பன சமூகங்களில் சித்பவன்களும் ஒருவர். இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த அவர்கள், இந்தியாவில் முகலாயர் மற்றும் பதான் ஆட்சியாளர்களுக்கு எதிரான நீண்ட போராட்ட வரலாற்றையும் கொண்டிருந்தனர். இந்த உண்மை இப்போது இந்து தேசியவாதத்தின் தேவைகளின் அடிப்படையில் அவர்களின் வரலாற்றை மறுவிளக்கம் செய்ய வழிவகுத்தது; அவர்கள் தங்களை இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான இந்து எதிர்ப்பின் பாரம்பரியத்தை நிலைநிறுத்துபவர்களாக காட்டிக் கொண்டனர்.
எவ்வாறாயினும், சாவர்க்கர், இந்து மறுமலர்ச்சியில் ஆர்வமுள்ளவர்களிடம் பெருமை உணர்வைத் தூண்டுவது கோட்சேவுக்கு புதியதல்ல. பூனாவுடன் பரம்பரை தொடர்பு இருந்ததால், கோட்சே இந்த உணர்வை – தெளிவற்றதாக இருந்தாலும் – ஓரளவு அறிந்திருக்கலாம். பூனாவை பாரம்பரிய சித்பவன்கள் இந்து தேசிய மறுமலர்ச்சியாளர்களின் தளமாக கருதினர். பூனாவிற்கு அப்பால் உள்ள மலைகளில் தான் சிவாஜி பிறந்தார். அங்கு அவர் வாழ்ந்தார் மற்றும் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் படைகளுக்கு எதிராக தனது கொரில்லாத் தாக்குதலைத் தொடங்கினார்.
சிவாஜி போர்வீரர் சாதியைச் சேர்ந்த ஒரு மராத்தியர். ஆனால் அவரது வாரிசுகள், பிரதமர்கள் அல்லது பேஷ்வாக்கள் ஆகியோர் சித்பவன் பார்ப்பனர்கள். சிவாஜிக்குப் பிறகு வந்த பேஷ்வாக்களுக்கு, முகலாயர்கள், பதான்கள் ஆகியோரை ஆங்கிலேயர்கள் 1818 இல் கடைசியாக அடிபணியச் செய்யும் வரை அவர்களின் முக்கியமான மையமாக பூனா செயல்பட்டது.
பூனாவின் சித்பவன்கள், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய காங்கிரஸ் தலைவர் திலக் மற்றும் 1897 இல் பூனாவின் பிளேக் கமிஷனராக இருந்த டபிள்யூ. சி. ராண்டின் படுகொலையில் ஈடுபட்ட இந்தியப் புரட்சியாளர்களான சபேக்கர் சகோதரர்கள், தாமோதர் ஹரி சபேகர், பால்கிருஷ்ண ஹரி சபேகர் மற்றும் வாசுதேயோ ஹரி சபேகர் போன்றோரை உருவாக்கினர்.
கோட்சே ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவரது அறியப்பட்ட மூதாதையர்கள், சித்பவன் சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால், பூனாவுக்கு அருகிலுள்ள உக்சன் கிராமத்தில் புரோகித வகுப்பைச் சேர்ந்தவர்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அரபிக் கடல் கடற்கரையில் சாவித்திரி நதியின் சிற்றோடையால் உருவான பாறைக் கடற்கரையின் நிலமான ஹரிஹரேஷ்வரில் இருந்து அவர்கள் இந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்ததாக அவர்களுடைய குடும்ப பரம்பரைக் கதை கூறுகிறது. கோட்சே குலத்தைச் சேர்ந்த அனைத்து சித்பவன் பார்ப்பனர்களின் வம்சாவளிகளின் தொகுப்பான ‘கோட்சே குல்வரிதாண்ட்’ பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ராமச்சந்திர கோட்சேவிலிருந்து தொடங்கி, கோட்சேவின் தந்தையான விநாயகராவை, அவரது அறியப்பட்ட முன்னோர்களின் ஏணியில் எட்டாவதுI படியில் வைக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் பேஷ்வாக்களின் ஆட்சியின் போது உக்சன் கிராமத்தில் மற்ற சித்பவன் குடும்பங்களைப் போலவே ராமச்சந்திர கோட்சேவின் வழித்தோன்றல்களும் முக்கியத்துவம் பெற்று நில மானியங்களைப் பெற்றதைத் தவிர, இடைப்பட்ட தலைமுறைகளைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. விவசாய நிலங்கள் பரம்பரை பரம்பரையாகப் பிரிக்கப்பட்டதால், விநாயக்ராவின் தந்தை வாமன்ராவ், ஒரு சொற்ப நிலத்தைப் பெற்றார்.
வாமன்ராவ் தனது முன்னோர்களைப் போலவே விவசாயத்துடன் புரோகிதத் தொழிலையும் கலந்து செய்து வாழ்ந்தாலும், தனது மகன் நவீன கல்வியைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, அவர் தனது மகன் ஆரம்பக் கல்வியை முடித்தவுடன் பூனாவில் ஒரு இணை கல்வி நிறுவனத்தை நிறுவினார். குடும்பத்தில் மெட்ரிகுலேஷன் முடித்த முதல் உறுப்பினர் விநாயக்ராவ் ஆனார். அதன்பின், தபால் துறையில் அரசு வேலை கிடைத்தது. அவரது பணி மாற்றத்தக்கதாக இருந்ததால், விநாயக்ராவ் தனது மூதாதையர் கிராமத்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டார், இருப்பினும் அவருக்கு இன்னும் ஒரு சிறிய விவசாய நிலமும், அங்கு ஒரு விசாலமான வீடும் இருந்தது.
அந்த வயதில் சாவர்க்கரின் குழுவை ஏற்றுக்கொண்டு அதில் கோட்சே இணைவதற்கு, ஒரு உண்மையான சித்பவனின் இயல்பான (குடும்ப) பின்னணி போதுமானதாக இருந்தது. தனது கடந்த காலத்தைப் பற்றியும், சாதியைப் பற்றியும் அவருடைய கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், கோட்சே, இளம் வயதிலேயே, இரு உலகங்களிலும் சுதந்திரமாக நகர்ந்து, காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட தீவிர ஆங்கிலேயர் எதிர்ப்பு உணர்வுக்கும், உள் எதிரிகள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடுவதற்கு இந்துக்களை தயார்படுத்துவது என்ற பெயரில் சாவர்க்கரால் போதிக்கப்பட்ட காலனித்துவ ஆட்சியின் மீதான இணக்கமான அணுகுமுறைக்கும் இடையே ஊசலாடியதாகத் தெரிகிறது. இறுதியில், பிந்தையது வெற்றி பெற்றது. மேலும் கோட்சே, தனது சொந்த வழியில், தனது சாதிய சகோதரர்களிடையே அதிக ஆறுதலைக் காணத் தொடங்கினார் மற்றும் அவர்களின் மறுமலர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டார். அவர்கள் மதம் சார்ந்த அல்லது மத நம்பிக்கையற்ற, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவாக இருந்தனர். அவர்களின் சாதிப்பற்று மற்றும் சாவர்க்கரின் தலைமையின் மீது சார்ந்திருப்பது ஆகியவற்றின் மூலம் அவர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.
சுதந்திர இயக்கத்திலிருந்து கோட்சே விலகியதற்குக் காரணம், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கூறியது போல், ஒரு அரசாங்க ஊழியராக தனது மகன் அதிகாரிகளைத் தொந்தரவு செய்வதை விரும்பாத அவரது தந்தையின் பயத்தில் வேரூன்றி இருந்ததாகத் தெரிகிறது. “எனது செயல்பாடுகள் அவரது வேலையை பாதிக்கக்கூடும் என்று என் தந்தை அஞ்சினார். எனவே சட்டங்களை மீறும் எந்த இயக்கத்திலும் பங்கேற்க வேண்டாம் என்று அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்,” என்று கோட்சே கூறியுள்ளார்.சாவர்க்கரின் வற்புறுத்தல் அல்லது அவரது குடும்பத்தின் அழுத்தம் ஆகிய இரண்டு காரணிகளில் எது, தேசியவாத கிளர்ச்சியாளர்களுடனான தனது தொடர்பை கைவிடுவதற்கான கோட்சேயின் முடிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது பற்றி அறியப்பட்ட பதிவு எதுவும் இல்லை.
காங்கிரஸின் தலைமையிலான போராட்டக் கூட்டங்களில் கோட்சே பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து அவரது தந்தை தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் சாவர்க்கர் அவரை வேறு வழியில் அழைத்துச் செல்லும் வரை அவர் அவற்றை எப்போதும் புறக்கணித்தார் என்பது உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் சாவர்க்கரின் வழி எச்சரிக்கையாக இருந்தது. அவர் வலிமையுடன் பேசினார். ஆனால் எப்போதும் தனது உள் நோக்கத்தை வெளிப்படுத்துவதில் கவனமாக இருந்தார். அதற்குப் பதிலாக ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது சமரச உணர்வை மறைக்க நுட்பமாக வடிவமைக்கப்பட்ட தந்திரமான பேச்சுக்களில் ஈடுபட்டார். “பாரிஸ்டர் சாவர்க்கர் அரசியலை அரிதாகவே விவாதித்தார். ஏனெனில் அவர் சிறைவாசத்தின் போது அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்திருந்தார்” என்று கோட்சே விவரித்தார். இந்தத் தந்திரமான பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட வகையிலான, கணிசமான, வலுவான அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை ஒருவேளை அவர் அறிந்திருக்க முடியாது.
காந்தியால் ஏற்பட்ட கவலைகள் இந்த அரசியலின் அடையாளமாக இருந்தது. காந்தி, தான் பழமைவாதியும் இல்லை, முற்போக்குவாதியும் இல்லை என்பது போலவும், இரண்டின் பொதுவான சாராம்சத்தை ஒன்றாகக் கொண்டு வருவது போலவும் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால் அவர் பரிந்துரைத்த சமூக மாற்றங்களும், மக்களிடம் அவர் கோரிய அரசியல் செயல்பாடுகளும் மரபுவழி இந்துத்துவத்தை மிகவும் சீர்குலைப்பவை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை இந்தியாவின் கிராமங்களுக்கு எடுத்துச் சென்று, கீழ்நிலையிலிருந்த, பார்ப்பனர் அல்லாத மற்றும் விவசாய கலாச்சாரங்களை உண்மையான இந்து மதமாக வடிவமைத்தார். காந்தியின் இந்தச் செயல் தங்களின் கடந்தகால மேலாதிக்கத்தை புதுப்பிக்க கனவு கண்ட அந்த இந்து உயரடுக்குகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடி, பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலைக்குக் கொண்டுவர முயல்வதன் மூலம் காலனித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது முயற்சியும் கூட, அத்தகைய இந்துக்களால் ஆழ்ந்த கவலையுடன் பார்க்கப்பட்டது.
காந்தி, பார்ப்பன மேலாதிக்கத்தைத் தகர்க்க முயன்றாலும், தன்னை ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று சொல்லிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் அவர்களின் பாதுகாப்பின்மை உணர்வைப் பெருக்கியிருக்க வேண்டும்; அவர் தன்னை ஒரு சனாதனி, ஒரு மரபுவழி இந்து என்று அவர் உறுதியாக நம்பினார். காந்தியின் இந்த பார்வையை கிழித்தெறிவது சாவர்க்கரின் அரசியலின் ஒரு முக்கிய பகுதியாகும். அப்போதுதான் தனது அரசியலை வெற்றியடையச் செய்ய முடியும் என நினைத்திருக்க வேண்டும். சாவர்க்கருக்கு சில நன்மைகள் இருந்தன. பாரம்பரிய சமூக உயரடுக்கின் மேலாதிக்கத்தை மாற்றாமல் இந்துக்களின் பல்வேறு சாதிகளை ஒன்றிணைக்க, இஸ்லாமியர்களைஅவர்களின் நம்பிக்கை அடிப்படையிலான தேசியவாதத்தின் எதிரிகளாக முன்னிறுத்தி, அரசியலில் பார்ப்பன உயர்வின் மீதான அவரது ஆவேசத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு அவர் முன்வைத்த பார்வையை எளிதாக வெளிப்படுத்த முடிந்தது.
அதற்கான துல்லியமான வாய்ப்பாக, இந்து-இஸ்லாமியர் ஒற்றுமை மற்றும் சமூகத்தின் மையத்தில் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்றுவதன் மூலம் இந்து மதத்தை அரசியல் ரீதியாக மறுவரையறை செய்வதற்கான அவரது முயற்சிகள் மற்றும் இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் காந்தி விடுத்த அச்சுறுத்தல் இருந்தது. சித்பவன் பார்ப்பனர்களின் பிரிவினருக்கு, குறிப்பாக சமகால சமூக அரசியல் அமைப்பில் தங்களின் பாரம்பரிய சிறப்புரிமை நிலைக்கும் அவர்களின் உண்மையான நிலைக்கும் இடையே உள்ள இடைவெளியுடன் சமரசம் செய்ய முடியாதவர்களுக்கு இருந்த கவலை என்பதே அந்தக் காலத்தின் நிரந்தர உணர்ச்சியாக இருந்தது. அவர்கள் இழந்த பெருமையை மீட்டெடுக்க ஏங்கும்போது, காந்தியின் கவர்ச்சி அவர்களை ஈர்க்கவில்லை.
இந்த வெறுப்புக்கு ஒரு பார்ப்பனிய மற்றும் சாதியச் சுவையும் இருந்தது. காந்தி ஒரு பனியா என்ற வணிக மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் சாதியைச் சேர்ந்தவர் அத்துடன், பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த ஆனால் மகாராஷ்டிராவிலிருந்து தனித்துவமான ஒரு சமூகக் கலாச்சார மண்டலமாகவும், பாரம்பரியமாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகவும் இருந்த குஜராத்தைச் சேர்ந்த மகாராட்டிரர்களில் ஒரு பிரிவினர் எப்போதும் குஜராத்திகளைப் பற்றி ஒரு தனிப்பட்டப் பார்வை வைத்திருந்தனர். மேலும் பல பார்ப்பனர்கள் பனியாக்களை சூழ்ச்சிக் காரர்களாகக் கருதினர்.
www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.