2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதியப் பாகுபாடுகள் குறித்த விவாதத்தை உண்டு பண்ணியது. சாதி, மதத்தின் காரணமாக ஒடுக்குமுறைக்கு ஆளாவது தொடர்கிறது. ரோகித் வெமுலா தலித் இல்லை என்று ஆளும் தரப்பு கூறியது. ரோகித்தின் மரணத்திற்கு வலதுசாரி மாணவர் அமைப்புகள்தான் காரணம் என்றும் கூறப்பட்டது. ரோகித் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றார்.
காரல் சாகனைப் போன்று எழுத்தாளனாக வேண்டிய ரோகித்தை சாதிய சமூகம்தான் கொன்றுள்ளது. காதலித்ததற்காக கொல்லப்பட்டார் தர்மபுரி, நாயக்கன்கொட்டாய் இளவரசன். அவரின் மரணம் குறித்து அவரது தாய் கூறும்போது ”என் வயித்தல பொறக்காம வேற சாதி வயித்துல பொறந்திருந்தா எம் புள்ள உசுரோட இருந்திருப்பான்” என்றார். அதுதான் ரோகித்துக்கும் பொருந்தும். தற்போது ரோகித் அதிகாரத்திற்கு எதிரான குறியீடாக மாறியுள்ளார்.
2014-2020 வரை ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார். ஆய்வாளர் ரோகித் வெமுலாவை நினைவுகூர்வது சாதி, மத ஒடுக்குமுறைக்கு எதிராக நம்மை தயார் படுத்த உதவும்.
தற்கொலைக்கு முன் ரோகித் வெமுலா எழுதியக் கடிதம்
காலை வணக்கம்.
இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள். என்னைப் பரிபூரணமாக நேசித்தீர்கள். என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது.
என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். கார்ல் சாகன் போல் ஓர் அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலைக் கடிதம் மட்டும்தான்.
அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப் பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன்.
நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பைப் பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.
ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் வாக்காளனாக, சில நேரங்களில் வெறும் எண்ணிக்கையாக, சில நேரங்களில் பொருட்களாகக் கூட அடையாளம் காணப்படுகிறான். ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.
சில நட்சத்திரத்துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.
இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசிக் கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவரசமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.
சிலருக்கு வாழ்க்கை வெறும் சாபவடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு என்பது உயிர் பறிக்கும் ஒரு விபத்து. எனது பால்யப் பருவத் தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).
இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை, என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர் கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.
இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படபோவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதைச் செய்யமுடியும். எனது கல்வி உதவித் தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தரவேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தைத் திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதைக் கொடுத்து விடுங்கள்.
எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே, அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”
உங்கள் அறையை நான் என் சாவுக்காகப் பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் என்னைப் பொறுத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.
இறுதியாக இதைச் சொல்கிறேன்… ஜெய் பீம்
கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் பாரதி ஆனந்த்
நன்றி: ambedkar.in
செய்தி: சந்துரு மாயவன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.