கையில் தேசியக் கொடியுடன்,” தேசத்துரோகிகளை சுட்டுக் தள்ளுங்கள்”, “காலிஸ்தானிகளை விரட்டி அடியுங்கள்”, “டெல்லி காவல் துறையே அவர்களை அடியுங்கள். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்” என்று முழங்கியபடி, சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் ஒரு வன்முறை கும்பல் அதிரடியாகப் புகுந்தது. அந்த கும்பல் கூடாரங்களை நாசம் செய்ததாகவும், பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும், அங்கு விவசாயிகள் நடத்திக் கொண்டிருந்த சமூக சமையல் கூடத்தை நாசப்படுத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வன்முறை மோதல்களும் கல்வீச்சும் நடைபெற்றது. பெரும்பாலான மைய நீரோட்ட ஊடகங்கள் இவர்களை செங்கோட்டையில் தேசியக்கொடியை நீக்கிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றியதால் (இது பல உண்மை அறியும் குழுக்களால் மறுக்கப்பட்டது) கோபமுற்ற “உள்ளூர்வாசிகள்” என்று அழைத்தன.
சிங்கு எல்லை போராட்டக் களத்தில் ஆயுதத் தாக்குதல்கள் பற்றிய செய்தி பரவிய போது, சுயேச்சையான செய்தியாளர்கள் பாஜக ஆதரவாளர்கள் உள்ளூர்வாசிகள் போல மாறு வேடமிட்டிருந்ததை விரைவாக சுட்டிக்காட்டினர். பல உண்மையான உள்ளூர்வாசிகளும் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியதாக களச் செய்திகள் தெரிவித்தன. அரசு ஊடகங்களில் பெரும்பாலானவை இந்த உள்ளூர்வாசிகள் முதலில் விவசாயிகளால் தாக்கப்பட்டதாகக் கூறி வந்த வேளையில், அந்தக் கூற்றுகள் தவறானவை என்பதை பல காணொளிகள் காட்டின.
ஆல்ட் நியூஸ்-ம் சுயேச்சை செய்தியாளர் மன்தீப் புனியாவும் அமன் தாபாஸ், கிருஷ்ணன் தாபாஸ் என்ற இருவரும் பாஜக வுடன் தொடர்புள்ளவர்கள் என்று அத்தகைய இருவரை அடையாளம் காட்டினார். புனியா டெல்லி காவல்துறையின் பாத்திரம் பற்றியும் கேள்வி எழுப்பினார். பின்னர், காவல்துறையினரை கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். நான்கு நாட்கள் காவலுக்குப்பின் அவர் விடுதலைச் செய்யப்பட்டார்.
“உள்ளூர்வாசிகள்” என்று கூறப்பட்ட மேலும் பலரது பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான இணைப்புகளை தி வயரின் புலனாய்வு நிறுவி உள்ளது.
உள்ளூர் பாஜக தலைவர்கள் மட்டுமின்றி இந்து தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் சிங்கு எல்லையில் இருந்தனர். இந்த எதிர்ப்பாளர்கள் எவரும் உள்ளூர்வாசிகள் இல்லை என்பதோடு, அமைதி வழியில் நடைபெறும் போராட்டங்களை வன்முறையால் கலைக்கும் முயற்சியில் இவர்கள் இறங்குவது இது முதல்முறையும் அல்ல என்பதை தி வயர் கண்டறிந்தது.
கடந்த ஆண்டு, இவர்களில் சிலரை ஷாஹீன்பாக் போராட்டத்தின் போதும், பின்னர் மிகப் பெரிய அளவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வடகிழக்கு டெல்லி கலவரத்திலும் பார்க்க முடிந்தது. இந்த முறை அதே எதிர்ப்பாளர்கள் குழுவினர் விவசாயிகளின் முற்றுகையை அகற்ற விரும்பினார்கள்.
“உள்ளூர்வாசிகளாக” ஆள்மாறாட்டம் செய்யும் இந்த எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானோர் டெல்லியில் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளான இந்து சேனா, இந்து இராணுவம், இந்துப் படை, சுதர்சன் வாகினி போன்ற தீவிர வலதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்.
விஷ்ணு குப்தா
மோதல்களுக்குப் பிறகு, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி அழைப்பு விடுக்கும் விஷ்ணு குப்தாவின் சமூக வலைதள அழைப்புகளை பலர் பகிர்ந்தனர். அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி செய்திகளில் இடம் பிடிக்கும் இந்து சேனா என்ற குழுவின் தலைவன்தான் இந்த விஷ்ணு குப்தா.
ஜேஎன்யூ-வில் கட்டண உயர்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களை “ஜிகாதிகள்” என்றும் “தீவிரவாதிகள்” என்றும் முத்திரை குத்தி, இந்த இந்து சேனா அமைப்பு, வளாகத்திற்கு வெளியே சுவரொட்டிகளை ஒட்டியது.
ஷாஹீன்பாக் போராட்டத்தின் போது சாலை அடைப்பை எதிர்த்து வன்முறை நடக்கும் என இந்து சேனா மிரட்டியது.
இந்த முறை, தேசத்துரோகிகளிடமிருந்தும் காலிஸ்தானிகளிடமிருந்தும் சாலைகளை விடுவிக்கத் தன் ஆதரவாளர்களுக்கு கால கெடுவுடன் கூடிய அழைப்பை விடுத்தான் விஷ்ணு குப்தா.
சஞ்சீவ் பட்டி
ஜனவரி 30 அன்று காவி நிற மஃப்ளர் அணிந்த ஒரு மனிதன் காசிப்பூர் எல்லைக்கு அருகே ஒரு கும்பலுக்கு தலைமை தாங்கி நடத்திச் சென்றான்.
“டெல்லி போலீஸ்! அவர்களை அடியுங்கள், நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்.” “காலிஸ்தானி தரகர்களே எச்சரிக்கை. எங்கள் எல்லைகளை காலி செய்யுங்கள்” என்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
அந்த மனிதன், பாஜகவின் ஆதரவாளரும், முன்னாள் பாஜக இளைஞரணி தலைவனும், தற்போது இந்து தேசியவாத அமைப்பான இந்து இராணுவம் என்ற அமைப்பை நிறுவியவனுமான சஞ்சீவ் பட்டி என்பதை தி வயர் கண்டுபிடித்தது.
கடந்த காலத்தில் லவ் ஜிகாத் போன்ற பல இந்துத்துவா போராட்டங்களை நடத்திய விஷ்ணு பட்டி, பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். அண்மையில் சாந்தினி சௌக்கில் அரசு ஒரு அனுமன் கோவிலை இடித்ததை எதிர்த்த போராட்டம் மூலம் தலைப்புச் செய்திகளில் இவன் இடம் பெற்றான்.
ஆர்ப்பாட்டத்திலிருந்து இவனது நேரடி காணொளி பேஸ்புக்கில் 12,000 முறை பகிரப்பட்டது. யூத் மீடியா டிவி எனும் வலதுசாரி யூடியூப் சேனலில் இவன் விவசாயிகள் போராட்டத்தை எதிர்த்து தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிட்டான். தீவிர வலதுசாரியான கபர் இந்தியா காணொளிகளிலும் இவன் வந்துள்ளான்.
“எங்கள் சாலையின் மீது அமர உங்களுக்கு அருகதை இல்லை. இந்த பயங்கரவாதிகள் சாலைகளை விட்டு அகல வேண்டும். இல்லை எனில் எங்கள் வாட்களை அவர்கள் அடிப்புறத்தில் செருகுவோம்” என்று காசிப்பூரில் போராடும் விவசாயிகளை துரத்தி அடிக்க முயற்சித்த சஞ்சீவ் பட்டியும் அவரது ஆதரவாளர்களும் மிரட்டினர்.
ஜனவரி 28 அன்று காசிப்பூர் போராட்டக் களத்தில் இருந்து பல நேரடி பேஸ்புக் காணொளிகளை பட்டி பதிவேற்றினான். அவன் தனது ஆதரவாளர்களிடம் அங்கே வந்து சாலைகளை “விடுவிக்குமாறு” கேட்டுக் கொண்டான். விவசாயிகளின் மேடைக்கு அருகில் எடுத்த ஒரு காணொளியில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டான்.
“போலி விவசாயிகளுடன்” அவர்களுக்கு புரிய வைக்கும் மொழியில் பேசப் போவதாக சவால் விட்டான். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள, வன்முறையை தூண்டும் இந்த காணொலிகளில் காவல்துறையினர் பின்னால் நிற்பதை காண முடிகிறது. இந்தக் காணொலிகள் பல நூற்றுக்கணக்கான முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்னும் நிகழ்நிலையில் உள்ளன.
எங்கும் இருக்கும் சிவப்பு ஜாக்கெட் நபர்
காசிப்பூர் எல்லையிலிருந்து எடுக்கப்பட்ட காணொளியில் சஞ்சீவ் பட்டிக்கு அருகில் தாடி வைத்த சிவப்பு மேலாடை (jacket) அணிந்துள்ள ஒரு ஆளை பார்க்க முடிகிறது. டெல்லியில் நடைபெறும் அனைத்து இந்துத்துவா போராட்டங்களிலும் வழக்கமான நபராக இந்த நபர் இருக்கிறான். தி வயர் நடத்திய புலனாய்வில் இவன் டெல்லி கலவரத்தின் போது மௌஜ்பூரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வலதுசாரி சேனல்கள் இவரை மௌஜ்பூரைச் சேர்ந்த உள்ளூர்காரராக கூறின.
மற்றொரு காணொளியில், ஒருவாரத்திற்குப்பின் இந்த சிவப்பு ஜாக்கெட் நபர் ஜந்தர் மந்தரில் ராகினி திவாரியும், சுரேஷ் சாவன்கேவும் நடத்திய போராட்டத்தில் தோன்றுகிறான். இந்தியா கேட்டில் நடந்த எதிர்ப்புப் போராட்டத்தில “ஜிகாதிக்களுக்கு” எதிரான முழு பொருளாதார தடைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவன் தன்னை கிரேட்டர் நோய்டா பகுதியைச் சேர்ந்தவராகக் கூறிக் கொள்கிறான். அவன் மௌஜ்பூரில் இந்துக்களுக்கு” விழிப்புணர்வு ஊட்டுவது” பற்றியும் முஸ்லீம்களுக்குப் பாடம் புகட்டுவது பற்றியும் பேசுகிறான். இந்த பொருளாதார தடை காணொளியில் உள்ள பலரும் (வினோத் ஆசாத்) விவசாயிகள் போராட்டக் களத்தை எதிர்த்த போராட்டத்திலும் தோன்றுகின்றனர்.
தீபக் சிங்
தன் காரில் அமர்ந்து கொண்டு ஒரு காணொளியை தயாரித்த தீபக் சிங், ‘சிங்கு எல்லையை விடுவிக்குமாறு மதவீரர்களளுக்கு அறைகூவல் விடுக்கிறான்.” இந்தத் துரோகிகள் குழப்பத்தை உருவாக்கும் போது நாம் கோழையாக இருக்கிறோம் என்பதுதான் எங்கள் பிரச்சினை. நான் இன்னும் 30 நிமிடங்களில் அங்கு சென்று விடுவேன். இன்று தேசபக்தர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். டெல்லி வெடிகுண்டு மலைமேல் உட்கார்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி கலவரத்தில் செய்தது போல அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நிலைமையை தூண்டலாம். இப்போது இந்த துரோகத் தீப்பொறியை அடக்காவிட்டால் அது நமது நகரத்தை எரித்து விடும்,” என்று அதில் கூறினான் தீபக்.
அவனது சமூக வலைதளத்திலும், பேஸ்புக்கிலும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான செய்திகளும், பரப்புரைகளுமே நிரம்பி உள்ளன. இப்போது சீக்கியர்களுக்கு எதிரான பரப்புரைகள் உள்ளன. ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தீபக், வினோத் ஆசாத், ராகினி திவாரி மற்றும் பல இந்துத்துவா தலைவர்களும் “லேண்ட் ஜிகாத் திற்கு” எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினார்கள்.
வினோத் ஆசாத்
வினோத் ஆசாத் என்றழைக்கப்படும் வினோத் சர்மா, டெல்லியைச் சேர்ந்த சுதர்சன் வாகினி அமைப்பின் உள்ளூர் தலைவன். வினோத், சிங்கு எல்லையை காலி செய்ய எதிர்ப்பாளர்களை அணிதிரட்டினான். அவனது பேஸ்புக்கில் சிங்கு எல்லையில் உள்ள ஆதரவாளர்களின் நேரடி காணொளிகளும், படங்களும் இருக்கின்றன. ஒரு வலையொளி சேனல் இவனையும் இவனது ஆதரவாளர்களையும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக திரண்ட “அருகில் உள்ள 40 கிராமங்களிலிருந்து வந்த கிராமவாசிகள்” என்று கூறுகிறது.
அந்த காணொளியில் கோபமாக உள்ள எதிர்ப்பாளர்கள் விவசாயிகளை அவதூறாகப் பேசுவதைக் காண முடிகிறது
காவல்துறையின் முன்பே வினோத் அவனது ஆதரவாளர்களுடன் தடுப்புகளைத் தாண்டி முழக்கமிட்டு செல்வதை காணொளி காட்டுகிறது. வினோத் இரண்டு நாட்களாக இந்துத்துவா ஆதரவாளர்களை சிங்கு எல்லையில் திரட்டிக் கொண்டிருந்தான். இதனை அவன் தோன்றும் சமூக வலைதள அழைப்புகள் மூலமும் வலையொளி காணொளிகளின் மூலமும் உறுதி செய்ய முடியும்.
மற்றவர்களைப் போலவே, இவனையும் ராகினி திவாரி, சுதர்சன் டிவி ஆசிரியர் சுரேஷ் சாவன்கே (ஐஏஎஸ் சேர்க்கை பற்றிய வகுப்பு வாத தொடர் மூலம் பிரபலம் ஆனவர்) ஆகியோருடன் பல காணொளிகளில் பார்க்க முடியும்.
நவம்பர் 1 ம் தேதி, சாவன்கேவும், ராகினி திவாரியும் இந்தியா கேட் அருகில் லவ் ஜிகாதிற்கு எதிராக ஒரு எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதில் முஸ்லீம்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையை நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஹரீஷ் காஷ்யப், சனாதனி சோனு
வினோத்தின் உதவியாளர் சனாதனி சோனு என்பவனும் சிங்கு எல்லையில் இருந்தான். ஹரீஷ் நேரடி காணொளிகளை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளான். “உள்ளூர்வாசி” போல அவன் பேட்டியும் தருகிறான். சிங்கு எல்லையில் போராட்டக்காரர்களை கும்பல் ஒன்று அடிக்கும் காணொளி ஒன்றில் ஹரீஷ் ஒரு போராட்டக்காரரை அடிப்பதையும் (5:20 விருந்து 5:40 வரை) விவசாயிகளை நோக்கி கற்களை வீசி எறிவதையும் பார்க்கலாம். இந்த காணொளியை கபர் இந்தியா சேனல் பதிவேற்றி உள்ளது.
வன்முறைக்கு முன் கும்பலை வழிநடத்துபவர்களிடம் நெறியாளர் பேட்டி எடுத்துள்ளார். வன்முறையின் போது, அதன் செய்தியாளர் விவசாயிகளை தொடர்ந்து “நீதிக்கான சீக்கியர்கள்” அமைப்பால் தூண்டி விடப்பட்ட காலிஸ்தானிகள் என்றே கூறுகிறார். மற்றொரு யூடியூப் சேனல் வினோத்தையும் சோனுவையும் உள்ளூர்வாசிகள் என்றும், கிராமத்தவர்கள் என்றும் கூறுகிறது. சிங்குவில் இருந்து தனது பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் “காலிஸ்தானிகளை” வேரோடு பிடுங்கி பஞ்சாபிற்கு திருப்பி விரட்ட வேண்டும் என்று சோனு அழைப்பதைக் காணலாம். கடந்த வாரம் சோனு பாஜக தலைவர் தேஜஸ்வி சூரியாவுடன் இருக்கும் தனது படங்களை பதிவிட்டுள்ளான்.
“சாமானிய மனிதனின்” ஆத்திரம்
பல வைரல் காணொளிகளில் இடம் பெற்றுள்ள ஒரு இளைஞன், உள்ளூர்வாசி போல் நடித்துக் கொண்டே, நாவன்மையுடன் எதிர்ப்பாளர்களைத் தாக்கி அவர்கள் மீது வன்முறையை ஏவிவிடும் வகையில் கருத்துக்களை வெளியிடுகிறான். அவர் 2019-20-ல் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தாலும், முஸ்லீம்களாலும் பாதிக்கப்பட்ட “டெல்லி உள்ளூர்வாசி”. இப்போது சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளால் பாதிக்கப்பட்ட கிராமவாசியாக அறிவிக்கப்படுகிறான்.
மற்றொரு காணொளியில், பாஜகவின் டெல்லி தேர்தல் பரப்புரையின் போது, பாஜக ஆதரவாளர்கள் குழுவுடன், தலையில் பாஜக தொப்பி அணிந்துக் கொண்டு, தீவிரமாக முழக்கமிடும் அவரை அடையாளம் காண முடிகிறது. பல நூற்றுக்கணக்கானவர்களில் அவன் ஒருவன்.
“உண்மையான பீகார் விவசாயி” உள்ளிட்ட பிற நடிகர்கள்
டிசம்பர் 7-ம் தேதி கபர் இந்தியா சேனலில் ஒருவருடைய பேச்சு ட்விட்டரில் வைரலாகப் பரவியது. அது “எக்ஸ்செக்குலர்” என்ற பாஜகவின் செல்வாக்குள்ள கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டது. இது பிரதமர் நரேந்திர மோடியால் பின்தொடரப்படுவதாகும்.
சுதிர் பாண்டே என்றழைக்கப்படும் இந்த “உண்மையான பீகார் விவசாயி” தற்செயலாக சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தீவிர விசிறி என்பதுடன் ஹத்ராஸ் விவகாரத்தை “அரசியலாக்குபவர்கள்” மீது கோபம் அடைபவராகவும் உள்ளான். சில புகைப்படங்களில் அவனை பாஜக தலைவர் கபில் மிஸ்ரா வுடனும் பாஜக வின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா வுடனும் காணலாம். இந்த வைரல் காணொளிகளில் வழக்கமாக வரும் பலரும் மோடியை ஆதரிப்பவர்கள், அவரை விமர்சிப்பவர்களை அவமானப்படுத்துபவர்கள், சிலசமயம் வன்முறை அச்சுறுத்தல் விடுப்பவர்கள்.
அவர்கள் “கோபமடைந்த உள்ளூர்வாசிகளாக” சாயம் பூசப்படுபவர்கள். அவர்களது அன்றாட வாழ்க்கை அரசு எதிர்ப்புப் போராட்டங்களால் அதிருப்தியில் உள்ளது. இந்த கதாபாத்திரங்கள் அவர்களுடைய பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதில்லை. மாறாக முஸ்லீம் சகோதரி, தேசியவாத மௌல்வி, உண்மையான விவசாயி, உண்மையான புலம் பெயர்ந்தவர், கொடுமைப்படுத்தும்பட்ட வாக்காளர், “உள்ளூர்வாசி” என்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
www.thewire.in இணையதளத்தில் அலிஷான் ஜஃப்ரி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.