மோடி அரசு சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை நிறைவேற்றியுள்ள நிலையில், முக்கிய பயிர்களான நெல், சோளம், தினை, துவரம் பருப்பு ஆகியவை நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என முழங்கும் போதே நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டடுள்ளது. அதுவும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் மட்டும் என பதிலளிக்கிறார்கள் விவசாயிகள்.
அரசு தரப்பு தரவுகளும் விவசாயிகளின் கருத்தே சரியென கூறுகின்றன. மத்திய அரசு கொள்முதல் செய்த மொத்த நெல்லில் 90% பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களிலிருந்து மட்டுமே கொள்முதலாகி உள்ளது. அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், விலை குறைந்து, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையை (கு. ஆ. வி.- MSP) விடக் குறைவான விலைக்கே விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் கு.ஆ.வி யையும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் உற்பத்தி விலையையும் ஒப்பிட்டால் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. மத்திய அரசின் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களும் நடப்பு சம்பா பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள கு.ஆ. வி. போதுமானதாக இல்லை என்றும்,அந்தந்த மாநிலங்களின் உற்பத்தி நிலைக்கேற்ப கு.ஆ.வி. யை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரி, ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளன.
‘தி வயருக்கு’ கிடைத்த அரசு தகவல்படி ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராட்டிரம், கர்நாடகம், பீகார், ஆந்திர பிரதேசம், மற்றும் ஒடிசா மாநிலங்கள் சம்பா பயிருக்கான ஆதார விலையை எதிர்த்துள்ளன. நெல், சோளம், தினை, கேழ்வரகு, மக்காச் சோளம், துவரம்பருப்பு, கொண்டைக் கடலை, உளுந்து, நிலக்கடலை, சூரியகாந்தி, சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி ஆகியவற்றிற்கான ஒன்றிய அரசின் விலையில் மாற்றம் வேண்டும் எனக் கோரியுள்ளன.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒவ்வொரு மாநிலமும் கு.ஆ.வி.யை உற்பத்தி செலவின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு இவை அத்துனையையும் நிராகரித்து விட்டது. ‘தி வயருக்கு’ கிடைத்த ஆவணங்கள் படி இரண்டிற்குமிடையே குவின்டாலுக்கு(100 கிலோ) 7,800 ரூபாய் வரை வேறுபாடு உள்ளதாகத் தெரிகிறது. இதனால் விவசாயிகள் தற்போதைய கு.ஆ வி. படியே குவின்டாலுக்கு 7,800 ரூபாய் வரை நட்டமடைவார்கள் என்பது கண்கூடு.
ஜார்க்கண்ட்
கொரோனா தொற்று காரணமாக விலையை உயர்த்தி கொடுத்தால்தான் விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகிறார். மாநில வேளாண் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசின் விலைக்கும் மாநில அரசு முன்மொழிந்துள்ள விலைக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி உள்ளார். மத்திய அரசு நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ 1,868 என நிர்ணயித்திருக்க மாநில அரசு 2,784 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளது. இதேபோல் மக்காச்சோளத்திற்கு மாநில அரசு 3,526 ரூபாய் கேட்டிருக்க மத்திய அரசு1,676ரூபாய் குறைவாக 1,850 ரூபாய்கள் தான் கொடுத்துள்ளது. ஆனால் கேழ்வரகு, துவரம்பருப்பு, உளுந்து, கொண்டைக்கடலை ஆகியவற்றிற்கு மாநில அரசு கேட்டதை விட அதிகமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. நிலக்கடலைக்கு 7,594 க்கு எதிராக 5,275 ரூபாய்களும், சோயாபீன்ஸுக்கு 9,037ம், சூரியகாந்திக்கு 11,331 ரூபாய்களும் வேண்டும் என்று மாநில அரசு கோரியது. ஆனால் மத்திய அரசு சோயாவுக்கு 5,157ரூபாய் குறைத்து 3,880 ரூபாய்களாகவும், சூரியகாந்திக்கு ரூ. 5,446 குறைத்து 5,885 ரூபாய்களாகவும் விலையை நிர்ணயித்து உள்ளது. “மாநிலத்தில் 70% பேர் விவசாயத்தையே நம்பி இருப்பதால் விலையை அதிகப்படுத்தி தரவேண்டும். தொடர் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் வாங்கிய விவசாயிகள் அதை திருப்பி செலுத்த இயலாமல் தவிக்கிறார்கள்.” என மாநில அமைச்சர் சித்திகி கடிதம் எழுதி உள்ளார்.
எனினும் மத்திய அரசு மாநில அரசின் கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்து விட்டது.
ராஜஸ்தான்
பாலைவனப் பகுதியாக இருப்பதால் மற்ற மாநிலங்களை விட விவசாயப் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. எனவே குறுவை சாகுபடிக்கான கு.ஆ.வி. யை கூட்டித் தர வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு கோரி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 48.6% தினையையும், 58.9% கொண்டைக் கடலையையும் சோயா, மக்காச்சோளம் போன்றவற்றை கணிசமாகவும் உற்பத்தி செய்கிறது. தினைக்கு மாநில அரசு 2,210 கேட்க மத்திய அரசு 2,150, மக்காச்சோளத்திற்கு ரூ 3,200 கேட்டதற்கு 1,850 ம் கொடுத்துள்ளது. இதே போல் சோயாவுக்கு 320 ரூபாயும், கொண்டை கடலைக்கு ரூ. 1,274 குறைவாக விலை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.
மாநில அரசின் கோரிக்கையை அப்படியே நிராகரித்து விட்டது மத்திய அரசு.
மகாராட்டிரம்
ஆவணங்கள் படி மாநில அரசு கேட்டதை விட சராசரியாக 53% குறைவாகவே கு.ஆ.வி யை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. நெல்லுக்கு 3,968 க்கு 1,868 என விலை குறித்துள்ளது. இது 53% குறைவாகும். இதேபோல் சோளத்திற்கு 30%, தினைக்கு 49%, மக்காச்சோளத்திற்கு 14%, கொண்டைக்கடலைக்கு 31%, உளுந்திற்கு 33%, நிலக்கடலைக்கு 45%, பருத்திக்கு 29% குறைவாக விலையை குறித்துள்ளது மத்திய அரசு.
மாநில வேளாண் செயலாளர் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மிக அதிக மழை பொழிவு காரணமாக உற்பத்தி செலவும் அதிகமாக இருப்பதால் விவசாய பொருட்கள் உற்பத்தி விலை மற்றும் விற்பனை விலைக்கான குழு(CACP) பரிந்துரை செய்துள்ள விலை மாநில அரசின் விவசாய பொருட்கள் விலைக் குழுவின் விலையை விட மிகக் குறைவாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.
சிஏசிபி தான் ஒவ்வொரு ஆண்டும் பருவகால பயிர்களுக்கு, அனைத்து மாநிலங்களுக்கும் கு.ப.ஆ. விலையை நிர்ணயிக்கும். இந்த ஆண்டு சம்பா பயிருக்கான அறிக்கையில், மகாராட்டிர மாநிலத்திலிருந்து வேளாண் பொருட்கள் உற்பத்திச் செலவு குறித்த அறிக்கையே வரவில்லை என கூறியுள்ளது. ஆனால் தற்போது அனுப்பியுள்ள கடிதத்துடன், மார்ச் 13, 2020ல் சிஏசிபிக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் இணைத்து அனுப்பி அதன் முகத்தில் கரி பூசினார் மாநில வேளாண் செயலாளர். அந்த இணைப்பு கடிதத்தில் சம்பா பயிர்களுக்கான உற்பத்தி செலவுகள், மாநில அரசு கோரும் கு.ஆ.வி. ஆகியவை விவரமாகக் தரப்பட்டுள்ளன.
எனினும் மத்திய அரசு, மாநில அரசின் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்து விட்டது.
கர்நாடகம்
பாஜக ஆளும் கர்நாடக மாநில அரசின் வேளாண் துறை, மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலைகள் மாநிலத்தின் உற்பத்தி செலவுகளை விட மிகக் குறைவாக இருப்பதாக கடிதம் எழுதி உள்ளது.
“ஒவ்வொரு ஆண்டும் சிஏசிபி அறிவிக்கும் விலையில் உள்ள இடைவெளி கூடிக் கொண்டே செல்வதை மாநில அரசு சுட்டிக்காட்டிக் கொண்டே வருகிறது. விவசாயிகள் விலையை உயர்த்தித் தர பல கோரிக்கைகளை வைத்து வந்தனர். ஆனால் மத்திய அரசு அதை கண்டு கொள்ளாததால் இப்போது விலை வேறுபாடு ஒன்றாக கூடிவிட்டது.” என்கிறது மாநில அரசின் வேளாண் ஆணையர் கடிதம்.
நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.2,272 கேட்ட மாநில அரசுக்கு மத்திய அரசு குறித்துள்ளதோ 1,868 தான். உளுந்திற்கு மட்டுமே மாநில அரசு கேட்டதை விட 7,881 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளது. இதேபோல் மக்காச்சோளத்திற்கு ரூ.2,854 ம், சோளத்திற்கு ரூ. 2,031ம், கேழ்வரகிற்கு ரூ. 2,403 ம், குறைவாக கொடுத்துள்ளது. கர்நாடக அரசு விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுப்படி ஆகக்கூடிய வகையில், உற்பத்தி செலவுடன் 75% (உற்பத்தி செலவு+75/100 உ.செ.) கூட்டி கு.ஆ.வி. நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளது. இத்துடன் மேலாண்மை செலவுகள், சந்தைப் படுத்தல் செலவுகள் மற்றும் காப்பீட்டுச் செலவுகளையும் சேர்க்க வேண்டும் என கோரியுள்ளது கர்நாடக அரசு.
மத்திய அரசு இவற்றை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி விட்டது.
பீகார்
பாஜக கூட்டணி அரசான நிதிஷ்குமார் அரசு மத்திய அரசின் விலையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, விலையை உயர்த்தித் தர வேண்டும் என கேட்டுள்ளது. மே 22 ம் தேதி மாநில வேளாண் செயலாளர் சரவணகுமார் எழுதியுள்ள கடிதத்தில் மாநிலத்தின் உற்பத்தி செலவுகளை கணக்கில் கொண்டு நெல்லின் விலையை ரூ. 2,532 என்றும் மக்காச்சோளத்தின் விலையை ரூ.2,526 என்றும் உயர்த்திக் தரக் கேட்டுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு நெல்லுக்கு 1,868 ம், மக்காச்சோளத்திற்கு ரூ.1,850ம் மட்டுமே நிர்ணயித்துள்ளது. இது கேட்ட விலையை விட மிகக் குறைவாகும்.
“பீகார் நெல் மற்றும் மக்காச்சோளம் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் போதிய சந்தை உள்கட்டுமான வசதிகள், சேமிப்புக் கிடங்குகள், கொள்முதல் வசதிகள் இல்லாததால் விவசாயிகள் முறையான லாபம் பெற முடிவதில்லை.” என நிதீஷ் குமார் கூறுகிறார்.
சரியான கொள்முதல் அமைப்பு இல்லை என்பதை பீகார் அரசு ஒப்புக் கொள்வது இதுவே முதன்முறை. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல், கிடைக்கும் விலைக்கு விற்று வருகிறார்கள். பீகாரின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப் படுகின்றன. இதனால் உற்பத்தி குறைவதுடன், உற்பத்தி செலவும் கூடி விடுகிறது.
பீகார் அரசு தனது கடிதத்தில், “பீகாரின் வேளாண் உற்பத்தி அமைப்பு பெருமளவில், மனித வேலை, தென்மேற்கு பருவக்காற்று மழையின் நிலையற்றத் தன்மை, வட பீகாரில் தொடர்ந்து வரும் வெள்ளம், தெற்கு பீகாரில் நீண்ட கால மழைப்பொழிவு, சிறு,பெரு விவசாயிகளுக்கிடையிலான அதிகரித்த வேறுபாடு, குறைந்த அளவே நவீன தொழில் நுட்பங்களை கையாள்வது, இதற்கெல்லாம் மேலாக விவசாயிகளின் மோசமான சமூக, பொருளாதார நிலை ஆகியவற்றையே சார்ந்துள்ளது.” என விளக்கி உள்ளது.
ஆனால் இதே எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை மத்திய அரசு.
ஆந்திர பிரதேசம்
மற்ற மாநிலங்களப் போலவே ஆந்திரப்பிரதேச அரசும் கு.ஆ. வி.யை உயர்த்திக் தர வேண்டும் என கேட்டுள்ளது. அது C2 வை விட A2+ FL என்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரி உள்ளது.
2020, மே மாதம் எழுதியுள்ள கடிதத்தில் மாநில வேளாண் செயலாளர் அருண்குமார் , “வேளாண் இடுபொருள்களின் விலை கூடி வருவதும், வேளாண் கூலி அதிகரித்து வருவதும் உற்பத்திச் செலவை கூட்டிவிட்டன. பிற துறைகளை ஒப்பிடும் போது வேளாண் துறை மிக குறைவான வருமானத்தையே தருகிறது. மேலும் இயற்கை சீற்றங்களும் அறுவடையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கு.ஆ.வி. யை A2 (உற்பத்தி செலவு+நிலவாடகை)+ குடும்ப உழைப்புக் கூலி என்பதை அடிப்படையாகக் கொண்டே ஒன்றிய அரசு நிர்ணயிக்கிறது. மாநில அரசு கோருவது போல் C2+50% என்ற அடிப்படையில் அல்ல.” எனக் கூறியுள்ளார்.
எனினும் C2 விலையை விட குறைவான (A2+FL) + 50 என்ற அடிப்படையிலேயே விலைகளை மத்திய அரசு குறித்துள்ளது.
ஒடிசா
ஆந்திர பிரதேசம் போலவே C2 உற்பத்தி செலவின் அடிப்படையில் விலையை கணக்கிட ஒடிசா அரசு கேட்கிறது.
பிற தானியங்களுக்கு அதிகமான விலையை மத்திய அரசு கொடுத்துள்ள போதும் ஒடிசாவில் மிக அதிகமாக உற்பத்தி ஆகும் நெல்லுக்கு குறைவாகவே கணக்கிட்டுள்ளது “மிக அதிக அளவு நெல்லை உற்பத்தி செய்யும் ஒடிசா, சிறந்த விரிவான கொள்முதல் வசதிகளை கொண்டுள்ளது. ஆனால் விலையை மிக குறைந்த அளவே உயர்த்தி உள்ளது வேளாண் மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது” என மாநில வேளாண் செயலாளர் மனமத்குமார் பாணி தன் கடிதத்தில் எழுதி உள்ளார். ஒடிசா நெல்லுக்கு ரூ 2,930 வேண்டும் என கேட்டுள்ளது. ஒன்றிய அரசோ ரூ.1,868 தான் கொடுத்துள்ளது.” மேலும், இந்நிலையில் நேரடி கள மதிப்பீட்டின் அடிப்படையில் உற்பத்தி செலவுகள் கணக்கிடப்பட்டு மாநில சட்டப் பேரவையில் நெல்லுக்கு ரூ 2,930 கு.ஆ. வி. தேவை என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என கடிதம் கூறுகிறது.
எனினும், இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
மத்திய அரசு கு.ஆ.வி.யை எப்படி கணக்கிடுகிறது?
சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் அவர்களது அடிப்படை C2 விலையில் 1.5 மடங்கு பெற வேண்டும். இதில் உரம், தண்ணீர், விதை, குடும்ப உழைப்பு, நிலவாடகை, வட்டி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.
எனினும், மத்திய அரசு A2+FL ல் 1.5 மடங்கை கணக்கிடுகிறது. இதில் மேற்கூறிய யாவும் சேர்க்கப்பட்டிருந்தாலும், சொந்த நிலத்திற்கான நில வாடகையும், வட்டியும் சேர்க்கப்படவில்லை இது C2வை விட மிகக் குறைவாக உள்ளது. அனைத்து மாநில உற்பத்தி செலவுகளின் சராசரியையே ஒன்றிய அரசு நிர்ணயிக்கிறது.
இதனால் சில மாநில விவசாயிகள் ஓரளவு நியாயமான நிலையம் பெற்றாலும் பெரும்பான்மையான மாநில விவசாயிகள் உற்பத்திச் செலவை விட மிகக் குறைவான விலையையே பெறுகின்றனர்.
(www.thewire.in இணையதளத்தில் நவ்ஷான் ரெஹ்மான் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.