Aran Sei

திஷா ரவியின் துணிவு இந்தியாவின் மனசாட்சியை உலுக்கட்டும் – அபூர்வானந்த்

Image Credit : thewire.in

“விவசாயிகளின் போராட்டத்தை உலக அளவில் உயர்த்திப் பிடிப்பது தேசத்துரோகம் எனில் இருப்பதையே நான் விரும்புகிறேன்”

இது இந்த நூற்றாண்டில் ஒரு இந்தியர் பேசிய மிக வலிமை வாய்ந்த வாசகங்களில் ஒன்றாகும். இது வலுவானது, துணிவானது, நேர்மையானது. ஒரு 22 வயது பெண்ணிடமிருந்து இது வந்தது மேலும் உற்சாகம் தருவதாகவும் மனதை கவருவதாகவும் உள்ளது.

‘எமர்ஜென்சியை நோக்கி செல்கிறோம்’ – திஷா ரவிக்கு ஆதரவாக விவசாயிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்

தேசத்துரோகம் என்ற குற்றச்சாட்டு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவருக்கு அவரது வழக்கறிஞர்கள் கண்டிப்பாக எடுத்துக் கூறியிருப்பார்கள். தேசத்துரோகமாகக் கருதப்படும் செயல்களில் ஈடுபடுவதற்கான அறிகுறி தெரிந்தால் கூட அது உங்கள் வாழ்க்கைக்கு ஆபத்தாகி விடும். என்றென்றைக்குமாக இல்லாவிட்டாலும் கூட குறைந்தது வேதனையான நீண்ட காலத்திற்கு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆகி விடும்.

இந்த அறிவுடன், கர்நாடகாவைச் சேர்ந்த அந்த இளம்பெண், அனைத்து இந்தியர்களின் தோழர், ஒரு உண்மையான உலகக் குடிமகள் (அவரது சொற்கள் இன்றைய சூழலுக்கு ஏற்றதாக இருப்பதால் நாடுகளின் எல்லைகளைக் கடந்தத) இத்தகைய அறிக்கையை கொடுக்க முடிவு செய்திருப்பது, இந்தியாவின் மொழியை முடமாக்கி இருக்கும் அச்சத்தை விடுவிப்பதாகும். இந்தியாவின் மொழி, அதிகாரம் மிக்கவர்களின் கொடுமையாலும் பொய்மையாலும் கறை படிந்து துருப்பிடித்துப் போயுள்ளது.

ஒரு வழக்கறிஞர், எளிய உண்மையின் வலிமை மூலம் இவற்றை எல்லாம் எதிர்கொள்வதை பார்ப்பது புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.

திஷா ரவிக்கும் அவரது வழக்கறிஞர் சித்தார்த் அகர்வாலுக்கும் நாம் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். வழக்காடும் செயலில் உண்மையின் தாக்கத்தை கொண்டு வந்ததற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவிக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால் பிரதிநிதித்துவப்படுத்தும் திஷா ரவியின் வாதங்களையும், கூற்றுக்களையும் படிக்கும் போது என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளியது. இலக்கியத்தின் ஆசிரியராகவும், மாணவனாகவும் அதை உயிர்-கொடுப்பதாகக் கண்டேன். ஒரு உரைமொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

விடயங்களுக்கு பெயரிட்டு அழைப்பது மொழியின் வேலை என்று ரால்ஃப் ஃபாக்ஸ் சொல்லி உள்ளார். சொற்கள் மரணமடைவது குளிரால் அல்ல, அச்சத்தால் என கவிஞர் கேதார் நாத் எச்சரித்துள்ளார். மொழியை அச்சத்திலிருந்து விடுதலை செய்வதே நமது காலத்தில் ஒருவர் செய்யும் மிகப்பெரும் சாதனை ஆகும்.

தீஷா ரவி மழுப்பவில்லை, சாக்கு போக்கு சொல்லவில்லை, சுற்றி வளைத்துப் பேசவில்லை. இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டுவதிலும், விழிப்புணர்வை உருவாக்குவதிலும் தான் பங்கு வகித்ததை அவர் ஒப்புக் கொள்கிறார்.

அது ஒரு குற்றமா? அது இந்தியாவிற்கு எதிரானதா? விவசாயிகள் பொது வெளியில் போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு ஆதரவு திரட்டுவது எவ்வாறு இந்தியாவுக்கு எதிரான செயலாக மாறும்?

‘சதி’ என்றால் என்ன?

ஒரு “தகவல் தொகுப்பு (டூல்கிட்)” வேறு வார்த்தைகளில் கூறினால், போராடும் விவசாயிகளின் பிரச்சனை குறித்து உலக கவனத்தை ஈர்ப்பதற்கான வழிகளை உள்ளடக்கிய ஒரு ஆவணம், எவ்வாறு “சதி”யாக மாறுகிறது? விவசாயச் சட்டங்களுக்கு எதிராக இணையவழி தாக்குதல் தொடுக்க அழைப்பது எப்படி வன்முறைத் தாக்குதல் தொடுக்க அழைப்பதாக கருதப்படுகிறது?

அவரது வழக்கறிஞர் வாதிட்டபடி: “‘டூல்கிட்’ இணையவழி தாக்குதல் பற்றி பேசுகிறது. வளைகுடா தாக்குதல்கள் பற்றி அல்ல. தூதரகங்கள் மீது நேரடியாக தாக்குதல் தொடுப்பது பற்றி அல்ல, அம்பானி, அதானியின் அலுவலகங்களை தாக்குவது பற்றி அல்ல, கல்வீச்சு நடத்துவதை குறித்து அல்ல. இவை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் உணர்வைத் தெரிவிக்கும் கருவிகள் ஆகும்.”

திஷாரவி அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள விவசாயச் சட்டங்களை எதிர்த்த அமைதிவழிப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இருந்ததை ஒப்புக் கொள்கிறார். ஆனால் அது தேசத்துரோகமா?

Image Credit : scroll.in
“எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்” பிரச்சாரத்தில் தீஷா ரவி – Image Credit : scroll.in

“நான் அமைதியாகக் போராடியது குற்றம் என்றால், நான் குற்றவாளிதான்! இந்த அமைதிவழி போராட்டத்தை விளம்பரப்படுத்தியது குற்றம் என்றால் நான் குற்றவாளிதான்! இதுதான் அளவுகோல் என்றால் நான் குற்றவாளிதான்!” என்று கூறி இருக்கிறார் திஷா ரவி.

சித்தார்த் அகர்வாலும் முன் இறங்கி அடித்து ஆடியிருக்கிறார்:

“ஐயா, ஒரு பேரணி ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது என்று நான் கூறினால், தயவு செய்து அந்தப் பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் கூறினால், இன்று அது என்னைத் தேசத் துரோகி ஆக்கிவிடுமா?”

டெல்லி காவல்துறையினரின் குற்றச்சாட்டுகளின் அபத்தத்தை திஷா குறிப்பிட்டுக் காட்டி உள்ளார்: எடுத்துக்காட்டாக, “நான் யோகாவை விட குங்ஃபூவை விரும்புகிறேன் என்றால் நான் சீன உளவாளி ஆகிவிடுவேனா? இதை நான் சொல்லவில்லை. இது அவர்களுடைய முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. நாம் மாறுபட்ட கருத்துடையவர்களுக்கான வெளியை நாம் சுருக்குகிறோம்”

இந்த சிந்தனைத் தெளிவு இருப்பதைத்தான் நாம் விரும்புகிறோம்.

பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொடர்களை பார்ப்பதையும் அல்லது ஃபவாத் கானின் விசிறியாக இருப்பதும் ஒருவரை பாகிஸ்தானின் ஒற்றன் ஆக்கிவிடுமா என்று நாம் கேட்கலாம்.

அமுல்யா லியோனா, ‘பாரத் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை சேர்க்காமல் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழங்குவது தேசத்துரோக செயலாகுமா? எனது நாடு இல்லாத வேறு ஒரு நாடு நீண்ட நாள் வாழ வேண்டும் என நான் விரும்பக் கூடாதா?

பருவநிலை மாற்றம் குறித்த தனது அறிவின் அடிப்படையிலும், ஆய்வுகள் அடிப்படையிலும் அரசு செய்திருக்கும் நகர்வு விவசாய சமூகத்திற்கு மட்டுமல்ல நாடு முழுவதிற்கும் கேடு விளைவிக்கும் என்ற நம்பிக்கையின் படி அதனை எதிர்ப்பதற்கான உரிமையை திஷா ரவி கோருகிறார்.

இந்த உண்மையான நோக்கம் குறித்து உண்மையாக இருப்பதற்கான துணிச்சலை திரட்டிக் கொள்ளும் வகையில் இந்த இளம் பெண் டெல்லி காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது என்பதையும், அது வெளிபபடையாக, பொதுவெளியில் நடந்து வருகிறது என்பதையும் திஷா சுட்டிக் காட்டுகிறார். குடியரசு நாள் பேரணி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அதன் அனுமதியுடன் தான் நடந்தது.

நடந்த வன்முறை நிகழ்வுகள் குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை 149 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர், தேவைப்பட்டால் மேலும் பலர் விசாரிக்கப்படலாம்.

ஆனால் அந்த வன்முறைக்கு ‘டூல்கிட்’ எப்படி பொறுப்பாக முடியும்? டூல்கிட்டின் பொருளடக்கத்திற்கும், ஜனவரி 26 வன்முறைக்கும் நேரடி தொடர்பிற்கான ஏதேனும் சாட்சிகள் உள்ளனவா அல்லது இது வெறும் ஊகமா? என சரியாகவே அரசிடம் நீதிமன்றம் மீண்டும் மீண்டும் கேட்டது.

வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், “ஒருவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றால் அவரை சதித்திட்டம் தீட்டியதாகப் பதிவு செய்து விடலாம்” என்று கூறி இறுக்கமான, பதட்டமான விவாதத்தின் போது ஒரு இறுக்கத்தை தளர்த்தும் தருணத்தை உருவாக்கினார். இது தற்போதைய நாட்டு நடப்பாக உள்ளது.

திஷா ரவி தனது வழக்கறிஞர் மூலம் செய்தது, டெல்லி காவல்துறை, இந்தியாவின் பெயரைக் கெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை உருவாக்கவும் சதி திட்டம் தீட்டியதாக கூறப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டில் சிக்கவைக்கப்பட்டுள்ள சிஏஏ எதிர்ப்புப் போராளிகளுக்கு வலு சேர்க்க வேண்டும்.

தனக்கு விவசாயப் சட்டங்களை எதிர்க்க உரிமை உண்டு என்கிறார் திஷா. தேவங்கனா கலீதா, இஷ்ரத் ஜஹான், குல்ஃபிஷா ஃபாத்திமா, நடாஷா நார்வால், சஃபூரா ஜர்கர் ஆகியோருக்கு சிஏஏ வை எதிர்த்துப் போராட உரிமை உள்ளது.

இவற்றையெல்லாம் தேசத்துரோகச் செயல்களாக நீதிமன்றங்கள் நினைத்தால், திகார், மன்டோலி அல்லது தலேஜா சிறைகளுக்கு வெளியே நாம் அனைவரும் சுவாசிக்கும் போலியான சுதந்திரக் காற்றை விட அவர்கள் அந்தச் சிறைச்சாலை காற்றையே சுவாசிக்க விரும்புவார்கள்.

அன்று காலையில் நீதிபதி தர்மேந்திர ரானாவின் முன்பு நடந்த வாதங்களுக்குப் பின் நான் திஷா ரவியின் துணிவான எதிர்வாதம் தலைப்புச் செய்திகளாக இருக்கும் என்ற நம்பிக்கையில் செய்தித்தாள்களைத் திறந்தேன். ஆனால் அவ்வாறு இருக்கவில்லை.

அந்த உரையின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு செய்தியாக்கப்பட்டிருந்தது. நமது சமூகத்தின் ஆதிக்க பிரிவினர், தனது இளைய தலைமுறையின் அறைகூவலுக்கு பதில் கூற இன்னும் தயாராகவில்லை என்பதையே அது காட்டுகிறது.

அந்த வாக்கியம் காற்றில் தொங்கிக் கொண்டுள்ளது. அது இந்த நாட்டின் நீதியின் மனசாட்சிக்கு விடப்பட்டிருக்கும் சவால். அது எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என பார்ப்போம். அல்லது உண்மையான அதன் இளைஞர்களின் பார்வையில் தன்னை மரியாதைக்குரியதாகவும், மதிப்பிற்குரியதாகவும் அது நிரூபித்துக் கொள்ளுமா என பார்ப்போம்.

www.thewire.in இணையதளத்தில் அபூர்வானந்த் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

திஷா ரவியின் துணிவு இந்தியாவின் மனசாட்சியை உலுக்கட்டும் – அபூர்வானந்த்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்